தோழர் யேசுவுடன் பேசாது திருமபிய இரவு

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

சந்துஸ்


மந்தையைப் பிரிந்த
ஆட்டுக்குட்டிகளாய்
மேகங்கள் அலையும் வானம்,
மனுகுமாரர்களின் மரணச் செய்தியை
என்றேனும் உரைத்ததுண்டா?

‘மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு,
பேச ஒரு காலமுண்டு”

என்ற வார்த்தைகள்
கல்வாரியின் பாறைகளில் பட்டு
ஓடைகளில் விழுந்து கலகலத்தாலும்
வருத்தப்பட்டு பிரயாசப் படுகிறவள்(ன்)
காதுகளை எட்டிடவில்லை

வட்டிக்iடைக் காரர்களை ஓட அடித்து விரட்டிய
என் புரட்சித் தோழர் யேசுவே!
ஓரு வட்டிக்கடைக்காரன் வீட்டிற்கு
வட்டி கட்டச் சென்ற எனக்கு
உமக்கு ஒரு ஒளிவிழாவை அவன் எடுப்பதாக
ஓரு நற்செய்தியை தந்தபோது
அவன் வீட்டுச்சுவரில் சிலுவையில் தொங்கிய
உமது கைகளின் ஆணிகள் இன்னுமிறுகி இரத்தம் சிந்த
பார்க்கச் சகியாது முகட்டைப் பார்த்தேன்.
சிந்திய குருதியைக் கிண்ணத்திலு}ற்றி
அவன் கைகள் தருகின்றன
தொண்டையில் ஊற்றி உம்முகம் பராது அகல்கிறேன்.
என் கடைக்கண்ணில்
எதையோ சொல்ல முயன்றீர்.

மக்தலோனாவின் விழிகளில் உயிர்த்தெழுந்த
என் பிரிய தோழரே

கைளைச்சிறிய முள்ளிலும்
கால்களைப் பெரிய முள்ளிலுமாய் அறையப்பட்ட
கடிகாரச் சிலுவையில்
தினமும் தொங்குமென்னை
மீட்புக்கான உமது கெஞ்சல் என்ன செய்யும்?

உம்முடன் பேசாமல்
திரும்பி வந்த இரவின் நினைவு,
‘கோல்கோத்தா´மலைகளில்
உம் நெற்றியை கிழித்த
முள்.

அது கீறி வழியும் இரத்தத்தை
வட்டிக்காரர்கள்
உமக்கான விழாக்களில்
விற்றுக் கொண்டிருக்க,
உமது உயிர்த்தெழலைக் காண்பதற்காய்
பகலிலும் விரியும் இருள் வெளியில்
மக்தலேனாவின் விழிகளைத் தேடுகின்றேன்.

(ஈஸ்டர் காலமோன்றில் நினைத்தது)

சந்துஸ் 2005

Series Navigation

சந்துஸ்

சந்துஸ்