பாவண்ணன்
திருவனந்தபுரத்தில் அலுவல் தொடர்பான ஒரு பயிற்சிக்காகத் தங்கியிருந்தபோதுதான் நாகர்கோயிலுக்குச் சென்று சுந்தர ராமசாமியை முதன்முதலாகப் பார்த்தேன். அந்தச் சந்திப்பின் நினைவுகள் இன்னும் என் மனத்தில் புத்தம்புதுசாக இடம்பெற்றிருக்கின்றன. திருவனந்தபுரத்தை அடைந்ததுமே வரவிருந்த ஞாயிறு அன்று சந்திப்பதற்காக வரலாமா என்று கேட்டு எழுதியிருந்தேன். கடிதம் எழுதிய நான்காம் நாள் கட்டாயமாகக் கிளம்பி வருமாறு எனக்குப் பதில் கிடைத்தது. பதில் கிடைத்த மறுநாளே ஞாயிறு பிறந்துவிடக்கூடாதா என்ற எண்ணம் நெஞ்சில் சிறகடித்தது.
அவரைச் சந்தித்தும் என்னென்ன பேசவேண்டும் என்று அசைபோடத் தொடங்கினேன். ஏதோ ஒரு பேச்சுப்போட்டிக்குத் தயார்செய்வதைப்போல என் மனம் ஒவ்வொரு விஷயத்தையும் தயார்செய்யத் தொடங்கியது. அவருடைய கதைகளையும் நாவல்களையும் படித்து மகிழ்ந்த எண்ணற்ற வாசகர்களுள் நானும் ஒருவன். நான் முதலாவதாக படிக்கநேர்ந்த அவருடைய படைப்பிலிருந்துதான் பேச்சைத் தொடங்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். அக்கதையைப் படித்துக்கொண்டிருந்த பொழுதைப்பற்றிய சித்திரம் கூட ஞாபகத்தில் அழுத்தமாகப் பதிந்திருந்தது. பொழுது சாயத்தொடங்கும் நேரம் அது. ஒரு வேப்பமரத்தடியில் உட்கார்ந்தபடிதான் அக்கதையைப் படித்தேன். அருகில் எந்த நடமாட்டமும் இல்லை. அருகிலிருந்த இலுப்பைமரங்களிலும் நாவல்மரங்களிலும் அடைந்திருந்த பறவைகளின் குரல் மட்டுமே ஒலித்தபடி இருந்தது. வேகவேகமாக ஓடிமறைந்த வில்வண்டிக் காளைகளின் கழுத்துச்சலங்கையின் ஓசையின் மிச்சம் காதுகளில் ஒலித்தபடி இருந்தது. தொலைவில் ஒரு மாட்டுவண்டியில் நான்குபேர் செம்மண் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சூழல்கூட அக்கதையை நான் மிகவும் விரும்புவதற்குக் காரணமாக இருந்தது.
அன்று நான் படித்த சிறுகதையின் தலைப்பு “ஒன்றும் புரியவில்லை”. படித்த கணத்திலேயே மனத்தில் தனித்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. கதையில் இடம்பெறும் வண்டிப்பயணத்தை மீண்டும்மீண்டும் மனத்தில் நானே நிகழ்த்திப் பார்த்தேன். அந்தக் கதைக்குப் பிறகு நான் படித்த கதை “வாழ்வும் வசந்தமும்”. மனத்தின் நுட்பங்களை கதையினு¡டாகக் கண்டறிய சுந்தர ராமசாமி நிகழ்த்துகிற பயணம் எனக்கு மிகவும் உவப்பானதாக இருந்தது. அதற்கப்புறம் தேடித்தேடிப் படித்த அவருடைய சிறுகதைகள் அவர்மீது நான் கொண்டிருந்த மதிப்பை அதிகரிக்கச் செய்தபடியே இருந்தன. தொடர்ந்து படித்துமுடித்த புளிய மரத்தின் கதை நாவலும் ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலும் நம் காலத்தில் வாழக்கூடிய மிகப்பெரிய கலைஞராக அவரை எண்ணத் து¡ண்டியது.
அனைவரும் பின்பற்றத்தக்க ஒரு படிமமாக ஜே.ஜே. மனத்தில் விழுந்திருந்தான். எவ்விஷயத்திலும் கிஞ்சித்தும் சமரசமற்ற அவன் நிலைபாடு என்னை மிகவும் கவர்ந்திழுத்தது. காதல், பெற்றோர் உறவு, நண்பர்கள் உறவு, இலக்கியம், சமூக வாழ்வு எதிலும் சமரசமற்ற அந்த நிலை ஒவ்வொரு மனிதனும் அடையவேண்டிய இலக்கு என்பதான எண்ணம் வலிமையாக நெஞ்சில் விழுந்திருந்தது. அந்த நிலைபாடுகளால் உருவாகிற கசப்புகளை விழுங்கியபடி சற்றும் துவளாமல் எதிர்த்து நிற்கிற ஜே.ஜே.யின் மனஉறுதி எல்லாரிடமும் அமையவேண்டும் என்னும் ஆசை மேலோங்கியிருந்தது. என் அலுவல்சார்ந்து நான் மேற்கொண்டிருந்த சமரசமற்ற நிலைபாடுகளால் நான் அடையநேர்ந்த சங்கடங்களும் கவலைகளும் என்னை ஜே.ஜே.யை நெருக்கமாக உணரவைத்தன.
பேசவேண்டிய சங்கதிகளை கிட்டத்தட்ட ஒரு நாடக ஒத்திகையைப்போல நிகழ்த்திப் பார்த்தபடி பொழுதுகளைக் கழித்தேன். சனிக்கிழமை இரவில் கிட்டத்தட்ட அரைத்து¡க்க நிலையில் எண்ணற்ற கனவுகள் கண்டு பதற்றத்தோடு பலமுறை விழித்தெழுந்து தண்ணீர் பருகினேன். என் மனநிலை எனக்குச் சற்றே கூச்சத்தைத் தந்தது.
ஞாயிறு காலை எழுந்ததும் நாகர்கோயிலுக்கு வண்டியேறினேன். நான்கைந்து கிலோமீட்டர் தொலைவைக் கடந்ததுமே திருவனந்தபுரத்தின் நகரக்கோலம் மறைந்து தோட்டங்களும் சோலைகளும் கால்வாய்களும் தோப்புகளும் மிகுந்த ஒரு கிராமத்துத் தோற்றத்தைப் பார்த்தேன். எந்தப் பக்கம் திரும்பினாலும் பசுமை. உயர்ந்த தென்னைகள். சலசலத்தபடி ஓடும் வாய்க்கால். அந்த அழகான சூழல் என் மனத்தில் படிந்திருந்த பதற்றத்தை வெகுவாகக் குறைத்தது. திசைமாறி அக்காட்சிகளில் லயிக்கத் தொடங்கினேன். இரண்டுமணி நேரப் பயணம் கழிந்ததே தெரியவில்லை.
வடசேரி பேருந்து நிலையத்தில் இறங்கியதும் ஆர்.வி.புரம் செல்லும் பாதையைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். “ஆட்டோவில போயிரலாம் வாங்க சார். பத்து ரூபாதான்” என்று அழைத்த குரல்களுக்குச் செவிசாய்க்காமல் ஆவலோடு நடக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட கால்மணிநேரம் வேடிக்கை பார்த்தபடி நடந்தபிறகு சாலை இரண்டாகப் பிரியும் புள்ளியில் சந்தேகத்துடன் தயங்கி நின்றுவிட்டேன். யாரையாவது கேட்கலாம் என்று ஒருகணம் தயங்கினேன். ஆர்.வி.புரம் என்று நான் கேட்டுமுடிக்கும் முன்னரே சைக்கிளில் வேகமாகச் சென்றுகொண்டிருந்த ஒரு கல்லு¡ரி மாணவன் இடதுபக்கமாகக் கையைக் காட்டிவிட்டுப் போனான். சந்தேகத்தை முற்றிலுமாகத் தீர்த்துக்கொள்வதற்காக இன்னொருவரின் வருகையை எதிர்பார்த்துக் கேட்டேன். அவர் வலதுபக்கம் கையைக் காட்டிவிட்டுப் போனார். என் குழப்பம் இருமடங்காகிவிட நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். என் பார்வையில் ஒரு அஞ்சலகம் தென்பட்டது. நேராக அங்கே சென்று அங்கிருந்த தொலைபேசியில் அவர் கடிதத்தில் குறித்திருந்த எண்ணைச் சுழற்றினேன். இரண்டு முறை எழுந்த மணியோசைக்குப் பிறகு தொலைபேசி எடுக்கப்பட்டது. சுந்தர ராமசாமியே பேசினார். நான் என்னைப்பற்றிய விவரத்தைச் சொல்லி வழிதெரியாமல் தடுமாறியிருப்பதையும் சொன்னேன். “நீங்க இருக்கற இடத்திலேருந்து ரொம்ப சுளுவா வீட்டுக்கு வந்திரலாம்” என்று தொடங்கி நான் திரும்பவேண்டிய திருப்பங்கள்பற்றிய குறிப்புகளையும் ஒவ்வொரு இடத்திலும் பார்க்கக் கிடைக்கிற அடையாளங்களையும் அழகாகச் சொன்னார். “கிருஷ்ணர் பொம்ம வச்ச வீடு. பாத்ததுமே கண்டுபிடிச்சிரலாம் வாங்க” என்று சொல்லிமுடித்தார்.
அவருடைய குறிப்புகளைப் பின்பற்றி மிகஎளிதாக வீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். வாசல் கதவைத் திறந்து வீட்டு முகப்பைச் சென்று சேர்வதற்குள் அவர் இறங்கிவந்துவிட்டார். “வாங்க வாங்க உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கேன்” என்று நேராக என்னை நோக்கி வந்தார். வணங்குவதற்காகக் குவித்த கைகளைத் தொட்டுத் தாழ்த்தி புன்னகையோடு தோளில் தட்டிக்கொடுத்தார். கூச்சத்தோடு அவரை நான் வைத்தகண் வாங்காமல் பார்த்தபடி இருந்தேன். சற்றே அடர்ந்த புருவமும் அழுத்தமான மூக்கும் சதுரமுகமும் செதுக்கியெடுக்கப்பட்ட கச்சிதமான முகத்தின் வடிவத்தை ஞாபகப்படுத்தின. “எத்தன மணிக்கு பஸ் கெடைச்சிது? செளகரியமா உக்காந்துட்டு வந்திங்களா? வழியெல்லாம் அழகா இருக்குமே, வேடிக்கை பாத்திங்களா?” என்று கேள்விகளை அடுக்கியபடி என்னை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார். அங்கிருந்தபடியே உள்ளறையைப் பார்த்து “கமலா கமலா” என்று தன் மனைவியை அழைத்தார். “யாரு வந்திருக்கா பாரு” என்று பிரியத்தோடு அறிவித்தார். அவர் வந்து நின்ற கையோடு “யாரு தெரியுமா, பாவண்ணன்” என்று அறிமுகப்படுத்தினார். “இவரு எழுத்துகள படிச்சிருக்கேனே, நல்லாத் தெரியும்” என்றார் அம்மையார். அவர் அத்தோடு நிற்கவில்லை. ஒருவித குது¡கலத்தோடு அருகில் காணப்பட்ட எல்லாரையும் அழைத்து ஒவ்வொருவருக்கும் அறிமுகப்படுத்தினார். அன்று காலைதான் அவர்கள் அனைவரும் சென்னையிலிருந்து திரும்பியிருந்தார்கள். இரண்டுநாட்கள் முன்புதான் சென்னையில் அவருடைய மகன் கண்ணனுடைய திருமணம் முடிந்திருந்தது. விருந்தாளிகளால் வீடு நிரம்பி வழிந்திருந்தது. திருமணத்துக்குச் செல்லமுடியாத பலரும் நேரில் சந்தித்து வாழ்த்த வந்திருந்தார்கள். அவர்களிடமும் என் அறிமுகப்படலம் தொடர்ந்தது. தன் மகன் கண்ணனையும் மருமகளையும் மகளையும் அழைத்து அறிமுகப்படுத்தினார். அதற்குள் சூடான காப்பியும் இனிப்புத்தட்டும் வந்தது. நான் காப்பியைமட்டும் எடுத்துக்கொண்டேன்.
“இனிப்பு எடுத்துக்கங்களேன்” என்றார் சு.ரா.
“வேணாங்க. இனிப்பு மேல அவ்வளவா விருப்பமில்ல.”
“ஆச்சரியமா இருக்கே. குறிப்பிடும்படியா ஏதாவது காரணம் இருக்கா?” ஆவலோடு கேட்டார் அவர். நான் அவர் கண்களையே பார்த்தேன். சொல்லத் தயக்கமாக இருந்தது. ஆனாலும் பகிர்ந்துகொள்ளத் து¡ண்டியது அவர் பார்வை.
“சின்ன வயசுல என் வாழ்க்கையில இனிப்புக்கெல்லாம் எடமில்ல சார். சாப்பாட்டுக்கே தாளம் போடற நெலையில இனிப்புமேல எப்படி சார் ஆச வரும். தேன்மிட்டாய் கேள்விப்பட்டிருக்கிங்களா? தேன் கலர்ல இருக்கும். மேல சக்கர தூவி உருண்டையா இருக்கும். மூணுபைசாவுக்கு ஒன்னு கெடைக்கும். எப்பவாவது அஞ்சுபைசா கெடைச்சா ஒரு மைசூர்பாக்கு வாங்குவம். காலேஜ் படிக்கறதுக்கு ஊரவிட்டு கெளம்பறவரிக்கும் அதுதான் நான் சாப்ட்ட இனிப்புகள். அதுக்கப்புறம் இனிப்புமேல ஆசயே போயிடுச்சி. ”
அதிர்ச்சியில் அவர் முகம் ஒருகணம் வாடி மீண்டும் சுடர்விட்டது. தொடர்ந்து “காலேஜ் எங்க படிச்சிங்க?” என்று கேட்டார். அதைத் தொடர்ந்து அவர் என் இளமைக்காலத்தைப்பற்றியும் எழுத்து முயற்சிகளைப்பற்றியம் விசாரித்தார். அவருடைய ஒவ்வொரு கேள்விக்கும் பொறுப்பாக பதில்சொல்லிக்கொண்டிருந்தேன் நான். இடையிடையே வரும் உறவினர்களை வரவேற்றுப் பேசி உள்ளே அனுப்புவதும் புறப்படும் உறவினர்களை வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு வருவதும் நிகழ்ந்தது. ஏறத்தாழ உணவு இடைவேளை வரைக்கும் இப்படித்தான் உரையாடல் விட்டுவிட்டுத் தொடர்ந்தது.
கமலா அவர்கள் எங்கள் இருவருக்கும் ஒன்றாகவே பரிமாறினார்கள். சுவரில் தொங்கிக்கொண்டிருந்த வான்கோ ஓவியத்தையும் வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்ட அவருடைய படங்களையும் மாறிமாறிப் பார்த்தபடி சாப்பிட்டேன். உரையாடல் ஒருகணம் பெங்களூரில் வசிக்கக்கூடிய திருமதி. சரஸ்வதி ராம்னாத் அவர்களைப்பற்றித் திரும்பியது. எங்கள் சந்திப்புகளைப்பற்றியும் அவர்களுடைய சமீபத்திய மொழிபெயர்ப்பைப்பற்றியும் நான் உற்சாகத்தோடு சொன்னேன்.
வெளியே திண்ணையில் காற்றாட வந்து உட்கார்ந்தோம். அந்த அகலமான திண்ணை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவருக்குத் திடீரென கிருஷ்ணன் நம்பியின் ஞாபகம் வந்துவிட்டது. “நானும் நம்பியும் இப்படித்தான் மணிக்கணக்குல பேசிட்டே இருப்போம். என்னவோ தெரியல, உங்களப் பாத்ததும் நம்பி ஞாபகம் வருது. நீங்க நம்பியோட கதைகள படிச்சிருக்கேளா” என்றார். படித்திருப்பதன் அடையாளமாகத் தலையாட்டினேன் நான். “படிக்கணும், படிக்கணும், அவன அவசியமா படிக்கணும்” என்று தனக்குத்தானே சொல்வதைப்போல சொல்லிக்கொண்டார்.
“உங்களுக்கு அவனுடைய எந்தக் கதை ரொம்பப் புடிக்கும்?” என்று கேட்டார்.
“மருமகள் வாக்கு” என்றேன் நான். அதற்குக் காரணத்தையும் சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மறுபடியும் எழுந்து தோளைத் தட்டிக்கொடுத்தார். பக்கத்திலிருந்த சில பத்திரிகைகளை எடுத்துக் கொடுத்து “பொரட்டிகிட்டே இருங்க. கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு வந்துடறேன். ராத்திரியெல்லாம் பயணம் செஞ்சதுல, ஒடம்பெல்லாம் விண்விண்ணுங்கறது” என்றார். அனுமதி கேட்பதைப்போல அவர் என்னிடம் பேசியது எனக்கு கூச்சத்தைக் கொடுத்தது. சட்டென எழுந்துவிட்டேன். “தாராளமா போய் ஓய்வெடுத்துட்டு வாங்க சார். ஒன்னும் அவசரமில்ல. நான் இங்கயே படிச்சிட்டிருக்கேன்” என்று அனுப்பிவைத்தேன்.
மணி நான்கடிக்கும் வேளையில் சு.ரா. வெளியே வந்தார். காலையில் பார்த்ததைவிட மேலும் புத்துணர்ச்சியோடு காணப்பட்டார். “வாங்க” என்ற அழைத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றார். காப்பித் தம்ளர்கள் அங்கேயே வந்தன. பருகிய பின்னர் கட்டிலில் தலையணைகளை அடுக்கி அவற்றின்மீது சாய்ந்துகொண்டார் அவர். அவருக்கு எதிரில் நாற்காலியில் உட்கார்ந்தேன் நான். அவர் சமீபத்தில் படித்து ரசித்திருந்த சில சிறுகதைகளைப்பற்றிச் சொல்லத் தொடங்கினார். மிகமுக்கியமான கருத்தை அறிய விரும்புகிறவரைப்போல ஒவ்வொரு கட்டத்திலும் நிறுத்தி என் எண்ணங்களையும் தெரிவிக்கும்படி து¡ண்டியபடி தொடர்ந்து பேசினார்.
திடீரென அவர் பேச்சு டால்ஸ்டாய்பற்றியதாக மாறியது. “அவருடைய எழுத்துகள நீங்க படிச்சிருக்கிங்களா?” என்று கேட்டார்.
“படிச்சிருக்கேன்.”
“என்னென்ன படிச்சிருக்கேள்.”
“புத்துயிர்ப்பு, அன்னா கரினினா, போரும் அமைதியும்.”
“தமிழ்லயே படிச்சிங்களா? ஆங்கிலத்தில படிச்சிங்களா?”
“தமிழ்லயேதான் படிச்சேன். ”
“டால்ஸ்டாயப் படிக்கணும்னு யாரு உங்களுக்குச் சொன்னாங்க?”
“நானாதான் தேடிப் பாத்து படிச்சேன். டால்ஸ்டாயுடைய சிறுவர்களுக்கான கதைகள்தான் முதல்ல படிச்சேன். ரொம்ப புடிச்சிருந்தது. திரும்பத்திரும்ப படிச்சிட்டே இருந்தேன். ஒருநாள் எங்க ஊருல உருளயன்பேட்ட போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல ஒரு புத்தகக்கண்காட்சி நடந்திச்சி. அங்க டால்ஸ்டாய் படத்தபோட்டு புத்துயிர்ப்பு வித்தாங்க. அஞ்சி ரூபாயோ ஆறு ரூபாயோ அப்ப வெலை. உடனே வாங்கிட்டுப் போயி படிச்சேன். அதுக்கப்புறம் தற்செயலா ஒரு நூலகத்துல அன்னா கரினினாவப் பாத்து எடுத்தும்போயி படிச்சேன். போரும் அமைதியும்கூட அப்படித்தான் படிச்சேன்.”
“எனக்கு எங்க மாமாதான் அன்னா கரினினாவ கொண்டுவந்து கொடுத்தார். அவரும் நானும் இந்த நாவலப்பத்தி மாறிமாறி சலிக்காம மணிக்கணக்குல பேசிக்குவோம். இது மிகப்பெரிய காவியம்னு நாங்க அப்ப நெனைச்சிட்டிருந்தோம். எங்க அப்பாவுக்கு டால்ஸ்டாயக் கண்டாவே புடிக்காது. என்னடா கத இது, நடத்த கெட்டவ கத. அதப் போயி அந்த வெளிநாட்டு பெரிய மனுஷன் எழுதியிருக்கான்னா வேலையே இல்லாம நீங்கள்ளாம் வரிஞ்சிகட்டி அதப் படிக்கறேள்னு வசவுமழயா பொழிஞ்சிட்டே இருப்பாரு. எங்க அப்பாவுக்குப் புடிக்காத புத்தகங்கறதாலேயே எனக்கு இந்தப் புத்தகத்துமேல பிரியம் அதிகமாயிடுச்சி.”
அவர் லேசாகச் சிரித்தார். டால்ஸ்டாயிடமிருந்து பேச்சு வேறுபக்கம் திரும்பியது. திடீரென “கேரளத்துல கோயில பாத்திருக்கிங்களா?” என்று கேட்டார். நான் இல்லை என்பதன் அடையாளமாகத் தலையை ஆட்டினேன்.
அங்க கோயில்ல ஒரு பக்கமா கதக்களி நடந்துட்டிருக்கும். உண்மையான கதக்களி நிகழ்ச்சியா இல்லன்னாலும் ஒரு பயிற்சி ஆட்டமாவது நடக்கும். மேளச்சத்தம், சலங்கச் சத்தம், பாட்டுச் சத்தம்னு அந்தப் பக்கமே ரொம்ப சத்தமா இருக்கும். பத்து நு¡று பேரு கும்பலா அங்க நின்னு வேடிக்க பாத்துட்டே இருப்பாங்க. இது ஒரு பக்கம். இன்னோரு பக்கத்துல யாரோ அடையாளமே தெரியாத ஒரு சாமியாரு இடுப்புத் துணியோட ஒரு திண்ண ஓரமா ஒக்காந்துட்டிருப்பாரு. கதக்களிகாரன் அளவுக்கு அவருகிட்ட கவர்ச்சி இருக்காது. ஆனா அவரிட்டயும் ஒருசில பேரு வந்து உக்காந்து பேசிட்டு போவாங்க. கோயில் வாசல்னா ரெண்டும்தான் இருக்கும். நாம ரெண்டயும்தான் பாக்கணும்.”
அந்த உவமைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது.
இரவு நெருங்கியதால் நான் கிளம்பவேண்டியிருந்தது. “இங்கயே தங்கியிருந்துட்டு நாளைக்கு காலையில போவலாமே” என்று சொன்னார். பயிற்சி நிலைய விடுதியின் முன்அனுமதியைப் பெறாமல் வந்திருந்ததால் தங்க இயலாமல் இருப்பதை எடுத்துச்சொன்னேன். அவர் புரிந்துகொண்டு என்னை வழியனுப்புவதற்கு எழுந்தார்.
“திருவனந்தபுரத்துல என்னென்ன பாத்திங்க?”
“பத்மநாபசாமி ஆலயத்துக்குமட்டும்தான் பாத்தேன். சின்ன கசப்பான சம்பவம் அங்க நடந்துட்டுது. அதனால வேற எங்கயும் போகலை.”
“என்ன கசப்பான சம்பவம்? வேட்டி கட்டிட்டு உள்ள போவணும்னு சொல்வாங்களே அதுவா?”
“அதெல்லாம் இல்ல. வாடகைக்கு வேட்டிய வாங்கி கட்டிட்டு உள்ள போயிட்டேன். பத்மநாப ஸ்வாமியயும் பாத்தேன். அற்புதமான படுத்த கோலம். கருகருன்னு யாரோ அந்தக் காலத்து ரிஷி கண்ணமூடிட்டு படுத்துட்டிருக்கற மாதிரி இருந்தது. சந்தோஷத்துல கீழ உழுந்து கும்பிடலாம்னு குனிஞ்சப்ப பின்னாலேருந்து சட்டுனு ஒரு கை என்ன அழுத்தி து¡க்கிட்டுது. பயத்துல திரும்பிப் பாத்தா பயில்வான் கணக்கா ரெண்டுபேரு நிக்கறாங்க. விழுந்து கும்பிடக்கூடாதுன்னு மலையாளத்துல சொல்லி எறங்க சொல்லிட்டாங்க. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாவும் வருத்தமாவும் போயிடுச்சி. யாரோ வெளியே போன்னு சொன்னாப்பல இருந்தது. வேகமா பிராகாரத்த பாத்து நடந்தேன். திடீர்னு சதுரமா ஒரு மணற்பரப்ப அங்க பாத்ததும் ஆச்சரியமா இருந்திச்சி. அதுக்கப்பறம்தான் மனசு நிதானமாச்சி. ஒவ்வொரு தூண்லயும் சிற்பங்கள நின்னு நிதானமா பாத்துட்டு வெளியே வந்தோம். நிறைவா இருந்தாலும் ஏதோ வேப்பங்காய விழுங்கிட்டாப்ல நெஞ்சில ஒரு கசப்பு நின்னுபோயிடுச்சி.”
அந்தச் சம்பவம் அவருக்கும் சங்கடமளித்ததைப்போல இருந்தது. “சில சமயம் நம்ம அறியாம இப்படித்தான் நடந்துபோவுது. நல்ல இடம்னு நாம நினைக்கக்கூடிய இடத்துல இப்படி நடந்துபோயிட்டா மனசே ஆறாது. போகட்டும் விடுங்க. அதயே நெனைக்காதிங்க. நீங்க அவசியமா விலங்குக் கண்காட்சிக்கு போங்க. அதுக்குள்ளே அழகான ஒவியக் கண்காட்சிக் கூடங்கள் இருக்குது. அவசியமா பாக்கவேண்டிய இடங்கள். பிறகு வேலின்னு அற்புதமான ஒரு எடம் இருக்குது. கழிமுகப் பகுதி அது. படகெல்லாம் விடுவாங்க. அதுக்கப்புறம் கடற்கரை. எதயும் விடாதிங்க.”
அவர் சொல்லிக்கொண்டே வந்தார். மறுபடியும் தன் மனைவியையும் மகனையும் மருமகளையும் அழைத்து நான் விடைபெற்றுக்கொள்ளும் செய்தியைச் சொன்னார். எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு திரும்பம்போது ஏதோ காலம்காலமாக நெருங்கிய ஒரு சொந்தக்காரருடைய வீட்டைவிட்டுக் கிளம்புவதைப்போல இருந்தது.
“ஜாக்கிரயதா போயிடுவிங்களா? சரியா வழியக் கண்டுபிடிச்சிடுவிங்களா?” கூடவே வாசல்வரை வந்தார் சு.ரா. சில கணங்கள் நின்றோம்.
“கண்டுபிடிச்சிடுவேன் சார். ஒன்னும் தடுமாறமாட்டேன்.”
“த்ரு பஸ்ஸான்னு கேட்டு ஏறுங்க. அதுதான் சீக்கிரமா போகும். ”
“சரிங்க சார்.”
“திருவனந்தபுரம் போயி சேந்ததும் ஒரு போன் போடறிங்களா? அப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கும்.”
“ஒம்பதுமணிக்குமேல ஆயிருமே சார்.”
“பரவாயில்ல . நீங்க பேசுங்க. ஒங்க போனுக்காக நான் காத்திட்டிருப்பேன்.”
நெருங்கி என் தோளைத் தொட்டு இழுத்துத் தன்னோடு சேர்த்துக்கொண்டார். கிட்டத்தட்ட என் அப்பாவை ஞாபகப்படுத்தும் செயல். ஒரு கணம்தான். “போயிட்டு வாங்க” மறுகணம் விடையளித்து அனுப்பிவைத்தார்.
தெருமுனை திரும்பி சிறிது து¡ரம் நடந்து வளைவில் திரும்பநேரும் முன்னர் திரும்பிப் பார்க்கத் தோன்றியது. உடனே திரும்பிப் பார்த்தேன். அவர் நின்றிருக்கும் தோற்றம் இன்னும் தெரிந்தது.
பேருந்து நிலையத்தை அடைந்தபிறகும் திருவனந்தபுரம் வண்டியில் இடம்பிடித்து அமர்ந்தபிறகும் நெஞ்சம் முழுக்க அவர் முகமே நிறைந்திருந்தது. அவர் சிரிப்பு. அவருடைய வாக்கியங்கள். உவமைகள். புருவம். மூக்கு. உதடுகள். மாறிமாறி கண்முன்னால் சுழன்றுகொண்டே இருந்தன.
இருட்டுக்குள் நெளிகிற தென்னைகளைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த கணத்தில்தான் ஒரு விஷயம் திடீரென என் மனத்தில் உறைத்தது. இரண்டு நாட்களாக அவரிடம் பேசுவதற்காக ஒத்திகை பார்த்துத் திரட்டிவைத்திருந்த வாக்கியங்களில் ஒன்றைக்கூட பேசும் வாய்ப்பே அமையவில்லை.
*
இந்தச் சம்பவம் நடந்த இரண்டாண்டுகளுக்குப் பின்னர் ஒருமுறை சொந்த அலுவல் காரணமாக சில நாட்கள் தங்கியிருக்கும் விதமாக பெங்களூருக்கு வந்திருந்தார் சு.ரா. நண்பர்கள் மகாலிங்கத்தோடும் முகம்மது அலியோடும் சேர்ந்து நானும் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். ஏறத்தாழ ஐந்துமணியளவில் நாங்கள் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று சேர்வோம். அதற்குள் அவர் அன்றைய தன் வேலைகளை முடித்துவிட்டுக் காத்திருப்பார். நாங்கள் அனைவரும் அருகிலிருக்கும் ஏதாவது ஒரு விடுதிக்குள் சென்று காப்பி அருந்துவோம். ஏதோ ஒரு பத்திரிகைச் செய்தி அல்லது ஒரு கதையின் குறிப்பு அல்லது ஒரு கட்டுரையின் சாரம் என்று தொடங்கும் உரையாடல் மெள்ளமெள்ள வளர்ந்து ஒரு புல்லாங்குழல் கச்சேரியைப்போல நீண்டுகொண்டே செல்லும். வைத்த கண்ணை எடுக்க இயலாமல் நான் அவரையே நிமிர்ந்து பார்த்தபடி இருப்பேன். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயங்களைக்கூட ஏதோ முதல்நாள் இரவுதான் நடந்துமுடிந்ததைப்போன்ற துல்லியத்தோடு ஞாபகத்திலிருந்து சொல்லக்கூடிய அவருடைய நினைவாற்றல் எனக்கு நம்பமுடியாத ஆச்சரியமாக இருந்தது. புத்தகங்களின் தலைப்புகளையும் அவற்றின் அட்டை வடிவ நிறங்களையும் கூட அவரால் சரியாக நினைவுபடுத்திச் சொல்லமுடிந்தது. எழுத்துக்கும் பேச்சுக்கும் வித்தியாசம் எதையும் காட்டாதவரைப்போல எழுதும் விதத்திலேயே அவர் மிகச் சரளமாகப் பேசிக்கொண்டு போனது என் ஆச்சரியத்துக்கு இன்னொரு காரணம். எந்த வாக்கியங்களையும் முன்பின் மாற்றவேண்டிய அவசியமே இல்லாததைப்போலவும் எல்லாவற்றையும் ஏற்கனவே யோசித்துவைத்திருப்பதைப்போலவும் அடுக்கடுக்காகச் சொல்லிக்கொண்டே இருந்தார். எழுத்தில் எந்த அளவுக்குக் கச்சிதமும் கலையழகும் லேசான நகைச்சுவை உணர்வும் கூடியிருந்ததோ அதற்குச் சற்றும் குறையாத அளவுக்கு பேச்சிலும் அவை நிறைந்திருந்தன. அப்பேச்சையெல்லாம் யாராவது எழுத்தில் பதிவுசெய்து அப்படியே அச்சுக்குத் தந்துவிடலாம். படிப்பவர்கள் யாராலும் அதை உரை என்று நம்பமாட்டார்கள். எங்கோ நண்பர்கள் கூட்டத்திடையேயோ அல்லது ஒரு கருத்தரங்கிலேயோ படிக்கப்பட்ட ஒரு கட்டுரை என்னும் எண்ணமே எல்லாருடைய மனத்திலும் எழும். அந்த அளவுக்கு தடையற்ற எண்ண வெளிப்பாட்டை அவருடைய உரையாடலில் காணநேர்ந்தது.
அவர் இளமையில் படிக்கநேர்ந்த புத்தகங்களைப்பற்றியே நாங்கள் பெரிதும் கேட்டோம். புதுமைப்பித்தனுடைய சிறுகதைத் தொகுதியிலிருந்து தொடங்கி அவர் பல நூல்களைப்பற்றியும் வரிசையாகச் சொல்லத் தொடங்கினார். படித்த காலத்தில் அப்படைப்புகள் அவருக்குள் உருவாக்கிய கருத்துக்கும் பல ஆண்டுகள் கழித்து அவற்றை எண்ணிப் பார்க்க நேர்கிற தருணங்களில் எழும் கருத்துக்கும் பெரிய வித்தியாசமில்லை என்பதாகவே அவர் சொன்னார். தொடக்கக் காலக் கருத்துகள் மேலும் கூடுதலான அழுத்தங்களோடும் வண்ணத்தோடும் புலப்படுவதாகவும் சொன்னார். தொ.மு.சி.ரகுநாதனுடைய “பஞ்சும் பசியும்” படித்தபிறகு தான் அடைந்த ஏமாற்றத்தைச் சொல்லும்போது ஏதோ முதல்நாள் இரவில் படித்துமுடித்த ஒரு படைப்பு தந்த ஏமாற்றத்தைச் சொல்வதைப்போல இருந்தது.
“அவர்கூட அதப்பத்தி பேசனீங்களா?” என்று கேட்டோம்.
“சொன்னமே. நான் படிச்சதுமே அந்த புத்தகத்த எங்கிட்டேருந்து வாங்கிம்போயி நம்பியும் படிச்சிட்டான். அவனுக்கும் அது ரொம்ப ஏமாத்தமா போயிடுச்சி. அப்பவே கெளம்பிப் போயி அவர்கூட அதப்பத்தி விவாதிக்கணும்னு எங்களுக்குள்ள ஒரு வேகம். அடுத்த நாளே திருநெல்வேலிக்கு கெளம்பிப் போயிட்டம். சாயங்காலமா தொடங்கன எங்க பேச்ச நடுராத்திரிவரைக்கும் பேசிட்டுதான் நாங்க நிறுத்தனம். அவரால உடனடியா எங்களுக்குப் பதில் சொல்லமுடியல. நீங்க சொல்றதபத்தி யோசிச்சிப் பாக்கறேன்னு பதில் சொன்னாரு. பதில் எதயும் அவர் சொல்லல. எழுதவும் செய்யல. ஆனா கூடிய சீக்கிரத்தில அவருடைய நட்ப நாங்க இழக்கும்படியா ஆயிட்டுது.”
“நட்ப இழக்கறது ரொம்ப வருத்தமானது இல்லயா?”
“வருத்தமாத்தான் இருக்கும். ஆனா நாம நம்பற இலக்கிய மதிப்பீடுகளும் நமக்கு முக்கியமில்லயா? ஒரே நேரத்துல ரெண்டு தெசையில எப்படி பயணம் செய்யமுடியும். எதையாவது ஒன்ன இழந்துதானே ஆவணும். தொ.மு.சி. இருக்காரே, அவருக்கு எங்க மேலெல்லாம் ரொம்ப நல்ல மதிப்பு உண்டு. பாக்கறப்போயெல்லாம் எழுது எழுதுன்னு சொல்லிட்டே இருப்பாரு. அப்ப ஒரு சிறுகதைப்போட்டி அறிவிச்சாங்க. நாகர்கோயில் எழுத்தாளர்ங்க எல்லாரிட்டிருந்தும் கதைங்க வந்தாச்சி, ஒரே ஒருத்தரத் தவிர. அவர உடனே எழுதச் சொல்லுங்கன்னு எனக்கு கடிதம் போட்டாரு. அதுல நான் கலந்துக்கணும்னு அவருக்கு ரொம்ப ஆச. ஞாபகப்படுத்திட்டே இருந்தாரு. இன்னும் பத்து நாள்தான் பாக்கி, அதுக்குள்ள கதை கெடைக்கணும். இன்னும் அஞ்சி நாள்தான் பாக்கி, கதையை எழுதி முடிச்சாச்சா, சீக்கிரமா அனுப்பி வையுங்கன்னு தொடர்ந்து கடிதங்கள எழுதிட்டே இருந்தாரு. “தண்ணீர்” கதை அதுக்கு எழுதனதுதான். இப்படி பல கதைகள நான் எழுத காரணமா இருந்தவரு அவர். அவர் நட்ப இழந்தது ரொம்ப வருத்தத்துக்கு உரியதுதான். ஆனா வேற வழியில்லயே.”
“நெறய பேரு வெலகிட்டாங்களா?”
“ஒன்னா ரெண்டா? அது பெரிய பட்டியல். அதெல்லாம் எதுக்கு, விடுங்க.”
அப்புறம் பேச்சு அவருடைய இளமைக்காலம்பற்றித் திரும்பியது. அவர் தன்னுடைய தந்தையாரைப்பற்றிய பேச்சைத் தொடங்கியதுமே அவருடைய குரலில் உற்சாகம் பெருகியது. ஒரு ரயில் கிளம்புகிற நேரத்தைக் கண்டறிய ஒரு ரயில்வே கைடை காலைவேளையில் கையில் வைத்துக்கொண்டு அரைமணிநேரத்துக்கும்மேல் அவர் பட்டபாட்டை எடுத்துச் சொன்னபோது எல்லாரையும் சிரிக்கவைத்துவிட்டார். வார்த்தைகளால் ஒரு சின்னச் சித்திரமே தீட்டிக்காட்டினார்.
“அங்கதான் சேர்ல உக்காந்திருந்தார். மொதல்ல இன்டெக்ஸ் பக்கத்த பாக்கறாரு. அப்ப்றமா ரயில் பேரப் படிக்கறார். அவ்ளோதான் அவரால முடியுது. அதுக்குமேல அவருக்குப் புடிபடல. ஒவ்வொரு ரயிலுக்கும் ஒரு நெம்பர் இருக்குது. ஒவ்வொரு ரூட்டுக்கும் ஒரு அட்டவணை இருக்குது. அந்த அட்டவணைக்கும் ஒரு நெம்பர் இருக்குது. ரெண்டயும் எணைச்சிப் பாக்கணும்ங்கறத அவரால புரிஞ்சிக்கவே முடியலை. ரெண்டு பக்கம் பொரட்டுவாரு. அப்படியே வெரலவச்சி தேடிகிட்டே வருவாரு. தொடர்ச்சி விடுபட்டுடும். அப்படியே மூடிடுவாரு. மேட்டுவளைய பாத்தபடி கன்னத்த சொரிஞ்சிக்குவாரு. என்னதான் செய்றாருன்னு பாக்கலாம்ன்னு ஓரக்கண்ணால பாத்தபடி குறுக்கும் நெடுக்குமா நான் நடப்பேன். அவரு என்ன பாத்துட்டதாலேயே அந்த கைடை கையில வச்சிகிட்டு தேடறமாதிரியே பாப்பாரு. நான் கண்ணுல படலைன்னா அந்த புத்தகம் ஏதாவது ஒரு மூலையிலதான் விழுந்திருக்கும். ஒரு கால்மணிநேரம் இப்படியே போயிடும். அப்பறம் நானே மெதுவா கிட்டப்போயி எந்த ரயிலபத்தி தெரிஞ்சிக்கணும்னு கேப்பேன். பத்துமணிக்குதானடா அந்த ரயிலு என்று ஏதோ ஒரு கேள்வியை என்னப் பாத்து கேக்கறவருமாதிரி கைடை எங்கிட்ட தந்துருவாரு. ஒரே ஒரு நிமிஷத்துல நான் சரியான பக்கத்துல விரல வச்சி சரியான நேரத்தச் சொல்வேன். அதத்தான்டா நானும் சொன்னேன்னு சாதிப்பாரு. தோல்விய ஒத்துக்கிடவே மாட்டாரு. அப்பறமா இந்த ரயில்வேகாரன் நேரத்த பதிமூணு, பதினாலுன்னு எழுதறதெல்லாம் அவராலே ஜீரணிக்கவே முடியலை. சாதாரண விஷயம்தான் இது. ஆனா கொழம்போ கொழம்புன்னு கொழம்புவாரு. வியாபாரத்துல பெரியபெரிய விஷயங்களயெல்லாம் புரிஞ்சிக்கற அவருடைய மூளையால இந்த சாதாரண சூட்சுமத்த புரிஞ்சிக்க ரொம்ப சிரமப்படுவாரு.”
அந்தத் தத்தளிப்பை அவர் நகைச்சுவை ததும்ப சித்தரித்த விதத்தைக் கேட்டு எங்களால் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை. கண்களில் நீர்கோர்த்துக்கொள்ளும் அளவுக்கு சிரித்தோம்.
மறுநாள் கப்பன் பூங்காவுக்குள் நிழலடர்ந்த மரத்தடியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அன்றைய பேச்சு மலையாள வாசக உலகத்தைப்பற்றி எப்படியோ திரும்பிவிட்டிருந்தது. அவர் தகழியின் “செம்மீன்” நாவலை மொழிபெயர்த்த விதத்தைப்பற்றியும் வெளிவந்தபோது உருவான எதிர்வினைகளைப்பற்றியும் சொல்லத் தொடங்கினார். அன்றைய உரையாடலில் என் மனத்தில் பசுமையாகப் பதிந்து கிடக்கும் சம்பவம் ஒன்றுண்டு.
“ஏதோ வெளியூருக்குப் போவணும்னு கெளம்பி ரயில்ல ரெண்டு மூணு நாளா போயிட்டே இருந்தேன். வேடிக்க பாக்கறதுதான் ரொம்ப புடிச்ச விஷயம். புடிச்ச ஸ்டேஷன்ல எறங்கிக்குவேன். அப்படியே வேடிக்கை பாத்தபடி உக்காந்துடுவேன். அப்பறமா வேற வண்டிய புடிச்சி பயணத்த மீண்டும் தொடர்வேன். அப்படித்தான் ஏதோ ஒரு ஸ்டேஷன்ல உக்காந்துட்டிருந்தேன். எனக்குப் பக்கமா ஏதோ ஒரு பெரிய மரம் இருந்தது. அது பெரய பெரிய பூக்கள் ரொம்ப ஆச்சரியமா இருந்திச்சி. அதயே வேடிக்கை பாத்துட்டிருந்தேன். அரமணிநேரத்துக்கும் மேல இருக்கும். திடீர்னு பக்கத்துல என்னமோ நெழலாடறமாதிரி இருந்தது. திரும்பிப் பாத்தேன். ஸ்டேஷன் மாஸ்டர். எதுக்கு நம்ம பக்கத்துல நிக்கறாருன்னு எனக்கு ஒரு சந்தேகம். டிக்கட் கேக்கப்போராருன்னு நெனைச்சி நானே பையிலேருந்து டிக்கட்ட எடுக்கப் போனேன். மெதுவா சிரிச்சிகிட்டே சாரு மலயாளியோன்னு ஒரு கேள்வி கேட்டாரு. அசல் மலையாளத்துக்குரல். மலயாளத்த அவர் உச்சரித்த விதம் அவர் கொச்சின் அல்லது ஆலப்புழைக் காரரா இருக்கணும்னு தோணிச்சி. நானும் மலையாளத்துலயே பதில் சொன்னேன். நான் நெனச்சமாதிரியே அவர் கொச்சின்காரர். நான் சரியா கண்டுபுடிச்சிட்டேன்னு அவரு கொழந்தமாதிரி சந்தோஷமாயிட்டாரு. எப்பிடி சார் கண்டுபிடிச்சீங்கன்னு ஆச்சரியமா கேட்டாரு. சட்டுனு நெருக்கமா பக்கத்துல உக்காந்துட்டார். அரமணிநேரம் பேசிட்டே இருந்தோம். வாங்கன்னு பக்கத்துல கேண்டீனுக்கு அழச்சிம் போனாரு. என்னுடைய பயணம், என்னுடைய நோக்கத்தயெல்லாம் கேட்டு அவருக்கு சொல்லமுடியாத ஆச்சரியம். இப்படிகூட ஜனங்க இருப்பாங்களான்னு திரும்பத் திரும்ப எங்கிட்டயே கேட்டாரு.”
“எனக்கு சட்டுனு பஷீர் ஞாபகம் வந்தது. இந்தியாவுல அவர் சுத்தாத எடமா, அவர் கால்படாத பூமியா? அதச் சொன்னதுமே அவருக்குச் சந்தோஷம். ஒரு கடவுளோட பெயரைக் கேட்டமாதிரி அவருடைய முகத்துல ஒரு பரவசம். அவர் ரைட்டராச்சேன்னு சொல்லிட்டே என்ன ரொம்ப ஆச்சரியமா பாத்தாரு. ஆமாம், நானும் ஒரு ரைட்டராச்சேன்னு திரும்ப பதில் சொன்னேன். அவரால நம்பவே முடியலை. நம்பாம இருக்கவும் முடியலை. உடனே மலையாளத்திலயா எழுதறீங்கன்னு தயக்கத்தோட கேட்டாரு. இல்ல, தமிழ்ல எழுதறேன்னு சொன்னேன். அவருக்கு என்னுடைய பதில் கொஞ்சம் ஏமாற்றமா இருந்தமாதிரி தெரிஞ்சிது. இவ்வளவு அழகா பேசறீங்களே, மலையாளத்தில எழுதியிருக்கலாமேன்னு கேட்டாரு. அப்பறம் என் மலையாளத்தபத்தி தெரிஞ்சிக்கவும் ஆசயா இருந்தார். நான் எல்லாத்தயும் சுருக்கமா சொன்னேன். கடசியா மலையாளத்தில நான்எழுதலயே தவிர மலையாளத்திலேருந்து தமிழுக்கு சிலத மொழிபெயர்த்திருக்கேன்னு சொன்னேன். அது அவருக்கு இன்னும் பெரிய ஆச்சரியமான விஷயமாயிடுச்சி. எந்த படைப்பை மொழிபெயர்த்திருக்கிங்கன்னு ஆசயா கேட்டாரு. நான் செம்மீன்னு சொன்னதுமே அவர் முகமெல்லாம் புன்னகை. என் கைய புடிச்சி குலுக்கு குலுக்குன்னு குலுக்கனாரு. என்னமோ அவர் எழுதன புத்தகத்தயே மொழிபெயர்த்துட்டதா நெனச்சிகிட்டாரு. செம்மீனயே மொழிபெயர்த்திட்ங்களான்னு திரும்பத்திரும்ப கேட்டபடி இருந்தாரு.”
“நான் தகழிய பாத்திருக்கிங்களான்னு அவர்ட்ட கேட்டேன். இல்ல, அவர படிச்சதோட சரின்னு அடக்கமா சொன்னாரு. தகழிமாதிரியானவங்கள்ளாம் கடவுளா இருக்கப்பட்டவங்க தானெல்லாம் அவர்களுக்குப் பக்தர்களா இருக்கக் கடமப்பட்டவங்கன்னு நெனைக்கற அளவுக்கு தகழிமேல ரொம்ப உசந்த எண்ணம் அவருக்கு இருந்தது. அந்த எடம்தான் மலையாள வாசக உலகத்தோட முக்கியமான புள்ளி. ஒரு மலயாளி எதவேணுமாலும் படிக்கறவனா இருக்கலாம். நாட்டுல எந்த மூலையல வேணுமாலும் எப்படியோ ஒரு வாழ்க்கய வாழறவனா இருக்கலாம். ஆனா அவனுக்கு தன்னுடைய மொழியில முக்கியமான ஆள்னு சொல்லிக்காட்ட சரியான ஆள அடயாளம் தெரிஞ்சி வச்சிருக்கான். அந்த ஸ்டேஷன்மாஸ்டர்கிட்ட அதத்தான் நான் பாத்தேன். அதுக்கப்புறம் அவர் தகழி நேருல வந்திருந்தா எப்படி நடந்துக்குவாரோன்னு அந்த அளவுக்கு மரியாதயா என்கிட்ட நடக்கத் தொடங்கிட்டாரு. வீட்டுக்கு அழச்சிம் போனாரு. ரெண்டு நாளு தன்னோட விருந்தாளியா என்ன தங்கவச்சிகிட்டாரு. இலக்கியத்த பத்தி நெறய விஷயங்கள் அவருக்கு சந்தேகமா இருந்தது. எல்லாத்த பத்தியும் ராவும் பகலுமா பேசனாரு. அதுக்கப்புறம் என்ன வேறொரு வண்டில ஏத்திவிட்டாரு.”
மதியம்வரை பூங்காவில் பேசியிருந்துவிட்டு ஆட்டோ பிடித்து ரிச்மன்ட் சர்க்கிள் அருகில் இருக்கிற கோனார்க் என்னும் உணவு விடுதிக்கு வந்தோம். உள்ளே மேசையைச் சுற்றி உட்கார்ந்ததும் திடீரென அவர் எங்களை உபசரிக்கத் தொடங்கிவிட்டார். என்னங்க இப்படின்னு நாங்க தயங்கித்தயங்கி கேட்டப்போ ஒரு மாறுதலுக்காக இப்படின்னு வச்சிக்குவமேன்னு சிரித்தார். அவருடைய அடர்ந்த புருவங்களையும் அழுத்தமான நாசியையும் வெட்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
உண்டு முடித்த பிறகு மீண்டும் பேச்சைத் தொடங்கினோம். மாலையில் அவரை அவர் தங்கியிருந்த விடுதியில் விட்டுவிட்டுத் திரும்பினோம். கிளம்பும் முன்னர் அடுத்த நாள் மாலை எங்கள் வீட்டுக்கு அவரை அழைத்தேன். எதாவது காரணத்தைச் சொல்லித் தட்டிக்கழித்துவிடுவாரோ என்று உள்ளூர அச்சமாக இருந்தது. ஆனால் ஒரேஒரு நொடிகூட யோசிக்காமல் “வரேனே” என்று என் தோளைத் தொட்டார். மீண்டும் என் தோளில் அவர் கைகள். அவருடைய கைகளைப் பார்க்கும்போதெல்லாம் நீண்ட காம்பையுடைய ஒரு தாமரைப்பூவின் சித்திரமே என் மனத்திலெழும். அவருடைய நெருக்கமும் உள்ளங்கை அழுத்தமும் எனக்கு மிகவும் சந்தோஷத்தைத் தந்தன. நன்றி என்று வாய்திறந்துகூட சொல்லத் தெரியாமல் நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தேன். நான் பேச வேண்டியதை என் கண்கள் பேசின. “சாயங்காலமா ஒரு அஞ்சிலேருந்து அஞ்சரைக்குள்ள வந்துடறேன் சார்” என்றேன்.
“வாங்க. அது சரி, அது என்ன அஞ்சிலேருந்து அஞ்சரைக்குள்ளன்னு ஒரு கணக்கு” என்று ஆச்சரியமாகக் கேட்டார்.
“நகரத்துக்குள்ள எப்ப கூட்டம் குறைவா இருக்கும் எப்ப அதிகமா இருக்கும்ன்னு சொல்லவே முடியாது சார். சீக்கரம் போயி சேந்துடலாம்னு நெனைப்போம். அன்னிக்குன்னு பாத்து ரோட்டுல பஸ்ங்க நத்தைவேகத்துல ஊர்ந்துபோவும். இன்னொருநாளு இன்னிக்கு போயி சேந்தமாதிரிதான்னு அலுப்பா நெனைச்சிக்குவோம். அப்ப எங்கனா குறுக்கு வழிய கண்டுபுடிச்சி பஸ் ஓட்டமா ஓடிடும். நேர ஒழுங்கு எதுவும் நம்ம கையில மட்டும் இல்ல. அதுக்காகத்தான் இந்த அரமணித் தாராளம்.”
மீண்டும் தோளைத்தட்டி விடைகொடுத்தார்.
அடுத்த நாள் ஐந்தேகாலுக்கு அவருடைய அறைக்குச் சென்றுவிட்டேன். அவர் புத்தாடை அணிந்து தயாராக இருந்தார். சாலைக்கு வந்ததும் நான் ஒரு ஆட்டோவை நிறுத்தப் போனேன். அவர் வேகமாக என்னைத் தடுத்தார். “தெனமும் நீங்க எப்படி வேலைக்குப் போவீங்க?” என்று என்னைக் கேட்டார். “பஸ்லதான் போவேன்” என்றேன் நான்.
“அப்ப பஸ்லேயே போவலாமே” என்றார் அவர்.
அவர் வயதை உத்தேசித்து நான் மிகவும் தயங்கினேன்.
“இல்ல, கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.”
“இருக்கட்டுமே, எல்லாரும் படற கஷ்டத்த நானும் படறேனே.”
“உக்கார இடம் கெடைக்காது சார்”
“நிக்க இடம் கெடைக்குமில்ல, நான் நிப்பேன். வாங்க போவலாம்.”
“ரெண்டு பஸ் மாறணும் சார்.”
“தாராளமா மாறிக்கலாம். வாங்க போவலாம்.”
“அன்று அவர் என் வார்த்தைகளை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. பேருந்தில்தான் செல்லவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். வேறு வழியில்லாமல் அவர் வார்த்தைகளுக்கு நான் கட்டுப்படவேண்டியதாக இருந்தது. ஒரு தடத்தில் எங்களுக்கு உட்கார இடம் கிடைத்தது. மற்ற தடத்தில் இடம் கிடைக்கவில்லை. ஓர் இடம் மட்டுமே கிடைத்தது. நான் அவரை உட்காரும்படி கேட்டுக்கொண்டேன். அவர் மறுத்துவிட்டார். “ரெண்டுபேருமே நிக்கலாமே” என்றபடி பேசிக்கொண்டு வந்தார். ஸ்டாலின் காலக் கொடுமைகளைப்பற்றித் தெரிந்துகொள்ள உதவிய ஆங்கில நூலைப்பற்றிச் சொன்னார்.
இறங்கும்போது ஒரு கேள்வியைக் கேட்டார். “இப்ப என்கிட்ட நீங்க ஒரு சந்தேகத்த கேக்கறிங்க. நான் என்ன செய்யலாம். உங்க கேள்விக்கு எனக்குத் தெரிஞ்ச அளவு உங்களுக்கு விடைய சொல்லணும். தெரியலைன்னா யாராவது தெரிஞ்சவங்ககிட்ட கேட்டுச் சொல்றதா சொல்லணும். உங்க கேள்வியே தப்பு, அந்தக் கேள்விக்கு ஆதாரமே இல்லைன்னு நான் சொன்னா என்ன நெனைப்பிங்க சொல்லுங்க” என்று கேட்டார். எனக்குப் பதில் சொல்லத் தயக்கமாக இருந்தது. அவர் “தாராளமா சொல்லுங்க” என்று தைரியமூட்டினார். “ஏன் பதில் சொல்ல மறுக்கறாங்கன்னு சந்தேகம்தான் வரும்” என்று சொன்னேன். அதைக் கேட்டு அவர் முகம் மலர்ந்தது. “சரியா சொல்லிட்டீங்க. கபடமில்லாத மனசுக்கு அப்படித்தான் தோணும்” என்று தலையை ஆட்டிச் சொன்னார்.
“இதேபோலத்தான் நானும் நெனைச்சேன். அந்த ஸ்டாலின் புத்தகத்த படிச்சிட்டு ராத்திரியெல்லாம் து¡க்கமே இல்ல. என்னய்யா கோடி ஜனங்க உண்மைன்னு நம்பற தத்துவத்தின் பேரால இவ்வளவு கொடுமையான்னு மனசுக்குள்ள ஒரே குமுறல். யார்யாரெல்லாம் அப்ப தலைவரா இருந்தாங்களோ அவுங்களயெல்லாம் கேட்டேன். எல்லாரும் பூசி மழுப்பனாங்களே தவிர யாருமே நேரிடையா பதில் சொல்லலை. அதுக்கு மாறா அந்தப் புத்தகமே தப்புன்னு சாதிச்சாங்க. எனக்கு மொதல்முறையா அப்பதான் சந்தேகம் வந்தது. நீங்க சொன்னிங்களே அதேபோல ஒரு சந்தேகம்.”
வீட்டுக்கு நெருக்கமான நிறுத்தம் வந்துவிட்டது. அவர் பேருந்திலிருந்து தடுமாற்றமின்றிப் படியிறங்கி வரவேண்டுமே என நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். முதலிலேயே வேகமாக இறங்கி அவர் தொடர்ந்து நிதானமாக இறங்கிவரத் தோதாக வழிசெய்து கொடுத்தேன். ஆட்கள் இறங்கும் முன்னரேயே ஏதோ விமானத்தைக் கிளப்புகிறமாதிரி சர்ரென்று வேகமாகக் கிளப்பிக்கொண்டு பறப்பதிலேயே குறியாக இருக்கிற எங்கள் நகரப் பேருந்து ஓட்டுநர்களைப்பற்றிய பொதுவான அச்சம் வேறு என்னை ஆட்டிப்படைத்தது. இறங்குகிறவர்மீது ஒரு கண்ணும் ஓட்டுநர் வாசல்மீது மற்றொரு கண்ணுமாக திரும்பித்திரும்பி நான் நிற்பதைப் பார்த்தபடி இறங்கினார். மெதுவாக என் தோள்மீது கையை வைத்து அழுத்தினார். “ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கறிங்க? எனக்கு இதெல்லாம் பழக்கம்தான். பல ஊருகள்ல நெறய தரம் டவுன்பஸ்ல போயிருக்கேன். சண்டயெல்லாம் போட்டிருக்கேன் தெரியுமா? அதெல்லாம் நீங்க பயப்படக்கூடாது. நான் சமாளிப்பேன்” என்றார். நெருக்கமாக தோள்மீது கைபோட்டபடி அவர் பேசிக்கொண்டே வந்தார். அந்த சின்மயா மிஷன் தெரு திடீரென ஒரு கடற்கரைச் சாலையாக மாறிவிட்டதைப்போலத் தோன்றியது. குளுமையாக வீசிய காற்றும் அந்த எண்ணத்துக்கு உரமிடுவதைப்போல இருந்தது. இப்படியே மாறிமாறிக் கதைபேசியபடி நடந்துகொண்டே இருக்கலாம் என்றொரு ஆசை திடீரென நெஞ்சில் அரும்பியது.
“ரொம்ப சந்தோஷமா இருக்குது. நெறய விஷயங்கள உங்களுக்கு முதல்முறையா சொல்லறமாதிரி இருக்குது .”
நான் பக்கவாட்டில் திரும்பி அவர் முகத்தைப் பார்த்தேன். “இன்னிக்கு உக்காந்தா எழுதலாம்போல இருக்குது மனசு. ரெண்டுமூணு பக்கம் நிச்சயமா எழுதிரலாம். பல நினைவுகள் அப்படியே மேகம் இறங்கிவரமாதிரி வருது.”
கனிவான குரலில் வார்த்தைகள் வெளிப்பட்டன. அவர் முகத்திலும் கண்களிலும் படர்ந்த வெளிச்சத்தைப் பார்த்தபோது எனக்குப் பரவசமாக இருந்தது. படைப்பாளிகளுக்கே உரிய அந்தப் பரவசம் முகம்முழுக்க பிரதிபலித்தபடி இருந்தது. அப்புறம் ஒருசில கணங்கள் பேசவில்லை. மெளனமாகவே நடந்தார்.
சட்டென்று அவர் அருகில் இருந்த ஒரு பேக்கரிக்குள் நுழைந்துவிட்டார். வீடு இருக்கும் திசையைக் காட்டி “இந்தப் பக்கம் சார், இந்தப் பக்கம்” என்று சொல்லி முடிப்பதற்குள் கடையின் படியேறிவிட்டார். எனக்கு ஒருகணம் எதுவுமே புரியவில்லை. “என்ன வாங்கட்டும் சொல்லுங்க” என்று என்னைப் பார்த்துக் கேட்டார். “ஒன்னும் வேணாம் சார். வீட்டுக்கு வாங்க போவலாம்” என்று அவரை அழைத்தேன்.
“அதெல்லாம் நீங்க சொல்லாதிங்க. உங்க மகனுக்கு என்ன புடிக்கும் அதமட்டும் சொல்லுங்க?” அவர் கண்டிப்பான ஆசிரியராக திடீரென மாறிப் போனார். அருகில் இருந்த வகைவகையான கேக்குகள், பிஸ்கெட் பாக்கெட்டுகளைக் காட்டிக்கொண்டே போனார்.
“அவன் இது எதயுமே சாப்பிடமாட்டான் சார்” நான் கூச்சத்தோடு சொன்னேன்.
“ஏன்?”
“எதுவுமே அவனுக்குப் புடிக்கறதில்ல சார்” நான் ஆதங்கத்தோடு சொன்னேன். நான் ஏதோ வேடிக்கைக்காக சொல்வதாக நினைத்துக்கொண்டார் அவர்.
“நெஜமாவே அவனுக்கு எதுவுமே புடிக்காது சார். நாங்களும் எதஎதயோ கொடுத்துப் பாத்துட்டோம். எங்க வித்த எதுவுமே அவன்கிட்ட பலிக்கலை.”
“அப்ப அவனுக்குன்னு எதுதான் வாங்கிட்டு போவீங்க?”
“கேட்பரீஸ் டைரிமில்க் சாக்லெட் மட்டும்தான் அவனுக்கு பிடிச்ச ஒரே ஐட்டம் சார்.”
“சரி, உங்க மனைவிக்கு?”
“ரெளண்ட் கேக்”
அவர் கடைக்காரரிடம் சொல்லி கேக்கையும் சாக்லெட்டையும் வாங்கிக் கொண்டார். சாலையைக் கடந்து வீட்டுக்குச் செல்லும் பாதையில் நடந்தோம். அப்போதுதான் சொந்த வீடா வாடகை வீடா என்றும் வாடகை எவ்வளவு என்றும் அம்மா அப்பா தம்பி தங்கைகள் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
“உங்க மகன் பேரென்ன? ”
“அம்ரிதா மயன் கார்க்கி ”
“என்ன என்ன? ஏதோ வங்காளப் பேர்மாதிரி இருக்குதே. இன்னொரு தரம் சொல்லுங்க.”
நான் திரும்பவும் சொன்னேன்.
ஒருமுறை அவர் அப்பெயரைச் சொல்லிப் பார்த்துக்கொண்டார். “ரொம்ப ஜோரா இருக்குதே. உங்களுக்கு கார்க்கி ரொம்ப புடிக்குமோ?” என்று கேட்டார். நான் “ஆமாம்” என்றேன்.
“அந்த வயசில புடிச்சிருக்கலாம். இப்பவும் புடிக்குமா?” என்று மீண்டும் கேட்டார். “இப்பவும் எனக்கு அவர ரொம்ப புடிக்கும்” என்றேன்.
“அவர் எழுதனதுல எது உங்களுக்கு ரொம்ப புடிக்கும்?”
“அர்த்தமோனவ்கள்”
“தாய் ?”
“அர்த்தமோனவ்கள் அளவுக்கு அதச் சொல்லமுடியாது.”
அவர் தலையசைத்துக் கொண்டார். பேசிக்கொண்டே ஐந்து நிமிடங்களில் வீட்டை அடைந்தோம். ஒரே கணத்தில் என் மனைவியோடும் மகனோடும் நட்பைச் சம்பாதித்துவிட்டார். என் கூற்றுகளைச் சரிபார்ப்பதைப்போல அவர்களிடமே ருசி சார்ந்து கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொண்டார். பிறகு என்னிடம் பேசியதைவிட அவர்களிடம்தான் அவர் அதிகம் பேசினார். சாப்பாட்டு நேரம் நெருங்கியது. கைகழுவிக்கொண்டோம். சூடாக அவருக்கு தோசைகள் வார்த்துக் கொடுத்தாள் என் மனைவி. தொட்டுக்கொள்ள புதினாச் சட்டினியும் பொட்டுக்கடலைச் சட்டினியும் இருந்தன. முறுகலான அந்தத் தோசைகளை அவர் மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்.
“ராத்திரி வேளையில எப்பவும் டிபன்தானா?” என்று கேட்டார்.
“பெரும்பாலும் டிபன்தான். என்னைக்காவது விசேஷம்னா சாப்பாடு.”
“என்னென்ன டிபன் சாப்பிடுவிங்க?”
“அரிசிப்புட்டு, இடியாப்பம், சப்பாத்தி, கோதுமை தோசை, அடை இப்பிடி எதயாவது செய்வோம்.”
“நல்லது. நல்லது. இதுதான் நல்ல சாப்பாடு.”
பிறகு என் மனைவியின்பக்கம் திரும்பி “அம்மா, தோசை ரொம்ப நல்லா இருக்குது. என் ஒய்ப்கிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவா. எப்படித்தான் இவ்வளவு அழகா மடிப்புகுலையாத சட்டமாதிரி ட்ரிம்மா மெலிசா சுடறிங்களோ? ரொம்ப ருசியா இருக்குது” என்றார். அதைக் கேட்டு அவளுக்கு ஆனந்தமோ ஆனந்தம்.
“விளையாட்டுக்கு சொல்லலம்மா, உண்மையாவே சொல்றேன். தோசை ரொம்ப ருசியா இருக்குது. சின்ன வயசுல நானும் நம்பியும் இப்படித்தான் தோசைய ருசிச்சி சாப்பிடுவம். க.நா.சு இருக்காரே, அவர்கூட பெரிய தோசைப்பிரியர்.”
பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தோம். பிறகு மெதுவாக என் புத்தக அடுக்குகளையும் எழுதும் மேசையையும் பார்த்தார். “இங்கதான் உக்காந்து எழுதுவிங்களா?” என்று கேட்டார்.
நான் தலையசைத்தேன்.
“சாதாரணமா எத்தன மணிவரிக்கும் எழுதுவிங்க?”
“நல்லா செட்டாயிடுச்சின்னா ஒருமணி ரெண்டு மணிவரைக்கும் எழுதுவேன் சார். இல்லன்னா பன்னெண்டு மணிக்கெல்லாம் முடிச்சுக்குவேன்.”
“அப்ப அம்மா, கொழந்த து¡ங்கறதெல்லாம்?”
“இப்படி பக்கத்துலயே கட்டில்ல படுத்துக்குவாங்க”
“வெளிச்சம் தொந்தரவா இருக்காதா?” ஆச்சரியமாகக் கேட்டார் அவர்.
“அதெல்லாம் ஒரு தொந்தரவும் இல்ல சார். எல்லாருக்கும் எல்லாமும் பழகிடுச்சி.” அவர் ஒரு கணம் அமைதியாக என் மனைவியைத் திரும்பிப் பார்த்தார்.
“அம்மா, நீங்க கன்னியாகுமரியெல்லாம் பாத்திருக்கிங்களா?” என்று அவளிடம் பேசத் தொடங்கினார்.
“பாத்திருக்கேம்பா.”
“எந்த வயசில பாத்திங்க?”
“கல்யாணத்துக்குப் பிறகுதாம்பா. நாங்க எல்லாருமா சேந்துதான் பாத்தம்.”
“தமிழ்நாட்டுல என்னென்ன இடங்கள் பாத்திருக்கிங்க?”
“எல்லா முக்கியமான எடங்களுக்கும் போயிருக்கோம்பா. மதுரை, பழனி, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, குற்றாலம், ஊட்டி, தஞ்சாவூர், சிதம்பரம், கன்னியாகுமரி.”
“பெரிய சுற்றுலாவே போயிருக்கிங்கன்னு சொல்லுங்க. அடுத்தமுறை அவசியமா நீங்க நாகர்கோயில் வரணும். வந்து வீட்டுல தங்குங்க. அங்கேருந்து கன்னியாகுமரிக்கு போய்வரலாம். கன்னியாகுமரில நீங்க ஒரு கடற்கரையத்தான் பாத்திருப்பிங்க. நீங்க வாங்க. நாலஞ்சு கெடக்குது. சந்தோஷமா பாக்கலாம்.”
அந்த அழைப்பு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தது. பிறகு மனைவியடமும் மகனிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற்றார். நான் அவரை அழைத்துக்கொண்டு சாலைவரைக்கும் வந்தேன்.
அவருடைய வலதுகை என் தோளை அழுத்தியது.
“பாவண்ணன், சாயங்காலமா சொன்னனில்லயா சந்தோஷமா இன்னிக்கு இருக்கேன்னு. இப்ப அதவிட இன்னும் கொஞ்சம் கூடுதலா சந்தோஷமா இருக்கேன். நான் பாத்த லேடீஸ்லயே உங்க மனைவி ரொம்ப அற்புதமானவங்கன்னு தோணுது. உங்களுக்கு அவுங்க ரொம்ப பக்கபலமா இருப்பாங்கன்னு நெனைக்கறேன். எழுத்திலயாகட்டும் வாழ்க்கையிலாகட்டும் இப்ப, எந்த எடத்துல இருக்கறிங்களோ, அதவிட பெரிய எடங்களுக்கு நீங்க சுலபமா போய்ச் சேந்துடுவிங்கன்னு தோணுது.”
கேட்பதற்கு எனக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது.
“பாவண்ணன், அவுங்கள நீங்க ரொம்ப முக்கியமானவங்களா நடத்தணும். நிச்சயம் நீங்க செய்விங்க. இருந்தாலும் எனக்குச் சொல்லணும்னு தோணுது.”
எப்பவும் எனக்கு அவுங்க ரொம்ப முக்கியமானவங்கதான் சார்.”
நான் மீண்டும் அவரோடேயே பயணம் செய்து தங்கியிருந்த அறையில் விட்டபிறகு திரும்பலாம் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அவர் என் எண்ணத்தை ஏற்றுக்கொள்கிறவராக இல்லை.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். என்ன ஒரு ஆட்டோவில ஏத்திவிடுங்க. எறங்கவேண்டிய லொக்கேஷன ஆட்டோ ஓட்டறவருகிட்ட சரியா சொல்லிடுங்க. அது போதும். நான் போய் எறங்கிக்குவேன்.”
அவர் தன் முடிவில் உறுதியாக இருந்ததால் அவர் சொல்வதை மட்டுமே செய்யமுடிந்தது. ஆட்டோவை நிறுத்தி சேர்ப்பிக்கவேண்டிய இடத்தைப்பற்றிய தகவலைச் சொன்னேன். ஆட்டோ நகர்ந்தது. அவர் புன்னகையோடு விடைபெற்றுக்கொண்டார். அந்தப் புருவம், நெகிழ்ச்சிகூடிய அந்த முகம், கண்ணாடிக்குள் அலைபாயும் அந்தக் கண்கள், ஒட்டிய உதடுகளுக்கிடையே மின்னிய புன்னகை எல்லாம் மீண்டும்மீண்டும் என் மனத்தில் சித்திரங்களாக அசைந்தன. அவற்றை அசைபோட்டபடி வீட்டுக்கு நடக்கத் தொடங்கினேன்.
*
குற்றாலத்தில் பதிவுகள் சார்பாக இரண்டுநாள் நிகழ்ச்சியொன்று ஏற்பாடாகியிருந்தது. நான் குடும்பத்துடன் சென்றிருந்தேன். அந்நிகழ்ச்சிக்கு நண்பர் ஜெயமோகனும் குடும்பத்தோடு வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்தபிறகு எல்லாருமாக பத்மநாபபுரத்துக்குச் சென்றோம். திற்பரப்பு, பத்மநாபபுரம் அரண்மனை, வள்ளியாறு, தொட்டிப்பாலம், குன்றுகள் என பல அழகான இடங்களை எங்களுக்குக் காட்டினார் ஜெயமோகன். இனிமையான இயற்கைக்காட்சிகளும் இலக்கிய உரையாடல்களுமாக பொழுதுகள் உற்சாகமாகக் கழிந்தன. ஒருநாள் காலையில் “சு.ரா.வைப் பாக்கலாமா?” என்று கேட்டேன். “ஒரு போன் போட்டு கேட்டிடலாம் இருங்க” என்று தொலைபேசி எண்களைச் சுழற்றினார். “உடனே கெளம்பி வாங்க, எல்லாரும் பாத்து ரசிக்கும்படியா இங்க ஒரு காரியம் நடந்திட்டிருக்குது” என்றார் சு.ரா. நாங்கள் உடனே கிளம்பிவிட்டோம். ஆட்டோ, பேருந்து, நடை என்று மாறிமாறி அவர் வீட்டை அடுத்த ஒருமணிநேரத்தில் அடைந்தோம். அந்தத் தெருவில் கால் பதித்ததுமே சில ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலாக அந்த வீட்டின் முகவரியை வைத்துக்கொண்டு தேடியதெல்லாம் நினைவில் அலைமோதியது.
கிருஷ்ணன் பொம்மை வைத்த வீட்டின் வரைபடம் என் மனத்தில் துல்லியமாகப் பதிந்திருந்தது. அன்று அந்தப் படம் சற்றே சிதைவுற்றதைப்போல இருந்தது. வாசலில் இரண்டு பெரிய வேன்கள். அகலாமக நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய வாகனத்தில் நிறுத்தப்பட் டிருந்த ஒரு ஜெனரேட்டர் புகைகக்கியபடி ஓடிக்கொண்டிருந்தது. பக்கத்தில் கூடாரம் போட்டு சமையல் வேலை நடந்தபடி இருந்தது. பார்க்கும் இடங்களிலெல்லாம் ஒரே சிரிப்பு. ஆண்களும் பெண்களுமாக இருபதுக்கும் மேற்பட்ட புதிய முகங்கள். ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஒரு பகுதியைப்போல இருந்தது வீடு. நான் அந்தத் திண்ணைகளை ஆசையாகப் பார்த்தேன். வாசலில் காவலுக்கு நின்றிருந்தவர் எங்களை அந்தத் திண்ணையின் பக்கம் விடவில்லை. “அப்படிப் போ சார், உள்ள ஷ¥ட்டிங் நடக்குதே தெரியல?” என்று திசைதிருப்பியது ஒரு குரல். வெற்றிலை ஈரம் கசியும் உதடுகளுடன் அவனைப் பார்க்கும்போதே அருவருப்பாக இருந்தது. அந்தத் திண்ணையில் ஒரு போர்வையைத் தடுப்பாகக் கட்டி உள்ளே சில பெண்களும் சில ஆண்களும் சளசளவெனப் பேசியபடி உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் சுவரில் சாய்ந்து உறங்குவதைப்போல காணப்பட்டார். இந்தப் பட்டப்பகலில் இவருக்கு எப்படி து¡க்கம் வருகிறது என்று ஆச்சரியமாக இருந்தது. ஓரமாக ஒதுங்கிநின்று வேடிக்கை பார்க்கும் முகங்கள்.
பக்கவாட்டில் இருந்த கதவின் அருகே சென்று நின்றோம். கூடம் தெரிந்தது. கேமிரா பொருத்தப்பட்டு வெளிச்சத்துக்கிடையே ஏதோ ஒரு காட்சி படமாகிக்கொண்டிருந்தது. உள்ளே தைரியமாக நுழைந்தார் ஜெயமோகன். நான் அவரைத் தொடர்ந்து சென்றேன். முதலாக கண்ணில் பட்டவரிடம் “சுந்தர ராமசாமின்னு இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் இருக்காருங்களா?” என்று கேட்டார். “இந்த ஊட்டுக்காரங்கள்ளாம் அதோ அந்த அறையில இருக்காங்க போயி பாருங்க” என்று இன்னொரு மூலையில் இருந்த அறையைக் காட்டிவிட்டுத் தன் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார் அவர். நாங்கள் அவர் சுட்டிக்காட்டிய அறைக்குச் சென்றோம். குடும்பத்தினர் அனைவரும் உள்ளே இருந்தார்கள். எங்கள் இருவரையும் வாங்க வாங்க என்று வரவேற்றார். அவர் படுக்கையில் சாய்ந்தபடி ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார். நாங்கள் அவரருகில் படுக்கையில் உட்கார்ந்தோம்.
“என்ன சார் இது? உங்களயே வீட்டுக்கள்ள சிறைவச்சமாதிரி இருக்குது.”
சு.ரா. சிரித்தார். “பழைய சிநேகிதர் ஒருத்தர். தனக்குத் தெரிஞ்ச சினிமாக்கோஷ்டி ஒன்னுக்கு பழைய கால அமைப்புள்ள வீட்ட படமெடுக்கணும்னு வந்து கேட்டார். வீட்டத்தானே படம்புடிக்கப் போறாங்கன்னு நானும் ம்ன்னு சொல்லிட்டேன். இப்படி ஒரு பெரிய கோஷ்டி பஸ்லயும் வண்டியிலயும் வந்து எறங்கும்ன்னு நெனைச்சிக்கூடப் பாக்கலை. சாயங்காலம்தான் போவாங்கன்னு தோணுது. சரின்னு வார்த்த கொடுத்தபிறகு என்ன செய்யமுடியும் சொல்லுங்க. சகிச்சிக்க வேண்டிதுதான்.”
அந்தச் சூழல் உண்மையிலேயே கோபம் மூட்டுவதாக இருந்தது. அனுமதி கேட்டு நுழைந்த வீடாகவே அவர்கள் நடந்துகொள்ளவில்லை. ரொம்ப சுதந்தரமாக எல்லா இடங்களிலும் நுழைந்து நுழைந்து வந்தனர். அவர்களுடைய பழக்கவழக்கங்களே விசித்திரமாக இருந்தன. கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்குப் பிறகு வெயில் தாழ்ந்ததும் “வாங்க வாக்கிங் போவலாமா? என்று எங்களை அழைத்துக்கொண்டு எஸ்.எல்.பி. பள்ளிக்கூட மைதானத்துக்கு சென்றார். அங்கே சென்று சேரும் முன்னர் ஓர் உணவு விடுதிக்குள் நுழைந்து எல்லாரும் ஒரு காப்பியைப் பருகினோம்.
மைதானத்தை நாலைந்துமுறை நடந்தே சுற்றினோம். திடீரென பேராசிரியர் ஜேசுதாசனைப்பற்றியதாக பேச்சு மாறியது. இருவரும் உற்சாகமாக அவரைப்பற்றி மாறிமாறிப் பேசினார்கள். இருவருமே அவரை நேரில் பலமுறை சந்தித்து உரையாடியவர்களைப்போலக் காணப்பட்டார்கள். நான் அவரைப்பற்றிக் கேள்விப்பட் டிருந்தேனே தவிர நேரில் பார்த்ததில்லை. அதனால் அந்த உரையாடலில் பங்கெடுத்துக்கொள்ள இயலாத நிலையில் வெறும் பார்வையாளனாகவே நான் காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருருந்தேன். பிறகு பேச்சு ஆற்று¡ர் ரவிவர்மாவின் பக்கமாகத் திரும்பியது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் நடந்தபிறகு படிக்கட்டுகளில் முக்கோணமாக அமர்ந்தோம். உரையாடல் மறுபடியும் தொடர்ந்தது.
இருள் கவிந்தபிறகுதான் கிளம்பினோம். சு.ரா. மெதுவாக என் பக்கம் திரும்பி “மனைவி, மகன்லாம் எப்படி இருக்கறாங்க?” என்று கேட்டார். “நல்லா இருக்காங்க சார். குற்றாலம் போயிட்டு இப்படியே வந்தம். ஜெயமோகன் வீட்டுலதான் இருக்காங்க” என்றேன். “அடடா, கூடவே அழச்சிட்டு வந்திருக்கலாமே” என்றார். அவர் வாங்க என்று அழைத்ததுமே உடனே புறப்படமட்டுமே தோன்றிய எனக்கு அவர்களையும் அழைத்துக்கொள்ளத் தோன்றாததை நினைத்துக் குற்ற உணர்வாக இருந்தது. “அடுத்த முறை கண்டிப்பா அழச்சிட்டு வரேன் சார்” என்றேன். வழியில் தென்பட்ட ஒரு சிற்றுண்டி விடுதியில் எங்கள் இருவரையும் சாப்பிடுமாறு சொன்னார். பிறகு அவருடைய வீட்டுவாசல்வரை நடந்தே வந்தோம். அங் கிருந்தபடியே நாங்கள் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.
மறுநாள் காலை நானும் ஜெயமோகனும் கிளம்பி பத்மநாபபுரத்துக் குளத்தில் குளிக்கக் கிளம்பினோம். காலையில் தேநீர் அருந்தியபிறகு பேச்சோடு பேச்சாக “குளத்தில குளிக்கலாமா பாவண்ணன்?” என்று கேட்டார். குளம் என்றதும் உற்சாகத்தோடு நான் தலையாட்ட இருவரும் உடனேயே புறப்பட்டோம். பசுமையான சூழலுக்கிடையே அந்தக் குளம் அழகாக இருந்தது. ஆசைஆசையாகப் படித்துறையில் கால்வைத்தவன் அப்படியே முழங்கால் அளவு ஆழத்தில் உட்கார்ந்துகொண்டேன். கைகளால் தண்ணீரை அள்ளிஅள்ளி உடல்மீது ஊற்றிக்கொண்டேன். குளத்துக்குள் தாவி நீச்சலிடித்துக்கொண்டிருந்த ஜெயமோகன் திரும்பி “என்னங்க நீந்த வரலியா?” என்று அழைத்தார். நான் புன்னகைத்தபடி எனக்கு நீச்சல் தெரியாததை எடுத்துச் சொல்லித் தயங்கினேன். கரைக்குத் திரும்பி அவர் சிரித்த சிரிப்பு மறக்கமுடியாத ஒன்று. “வேகமா கெளம்பனத பாத்தா நீங்க கொளத்த உண்டுஇல்லன்னு ஆக்கப்போறிங்கன்னு நெனச்சேன். கடசியில இதுதான் உங்க நீச்சலா?” என்றார்.
வீட்டுக்குத் திரும்பி சிற்றுண்டி சாப்பிட்ட பிறகு நாங்கள் திருநெல்வேலிக்குக் கிளம்பினோம். திருநெல்வேலியில் எங்கள் மனைவியின் தங்கையுடைய குடும்பம் இருந்தது. என் நண்பரும் அவள் கணவருமான சிவக்குமார் அந்த மாவட்டத்தின் களவிளம்பரத் துறையில் அதிகாரியாக இருந்தார். அங்கே என் மனைவியையும் மகனையும் மேலும் சில நாட்கள் தங்கி விடுப்பைக் கழித்தபிறகு திரும்புமாறு சொல்லிவிட்டு நான் ஊருக்குத் திரும்பிவிட்டேன்.
நான் உருவாக்கித் தராத சந்திப்பை என் மனைவிக்கு இயற்கை இரண்டே நாட்களில் அதிருஷ்டவசமாக உருவாக்கித் தந்தது. என் மனைவியின் தங்கை அப்போது கன்னடத்திலிருந்து நான் மொழிபெயர்த்திருந்த கிரீஷ் கார்னாடின் நாகமண்டலம் நாடகத்தை பாளையங்கோட்டையில் இயக்கி அரங்கேற்றினாள். தற்செயலாக அந்த நாடகக்காட்சி நாகர்கோயிலில் நடப்பதாக இருந்ததால் நாடகக்குழுவினரோடு என் மனைவியும் மகனும் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். இன்னொரு தற்செயலாக அந்த நாடகக்காட்சிக்குத் தலைமை வகித்தவர் சு.ரா. அவரைச் சந்தித்ததில் என் மனைவிக்கு சொல்லமுடியாத மகிழ்ச்சி. அவரும் தன் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே தெரிவித்தாராம். ஊருக்குப் போறோம்னு சொன்னாரே என்று விசாரித்தாராம். நடந்ததையெல்லாம் அவளும் திருப்பிச் சொன்னாளாம். நாடகம் முடிந்ததும் அவர் அவளையும் மேடையில் ஏற்றி இந்த நாடகத்தை மொழிபெயர்த்தவரின் மனைவி என்று சொல்லி அரங்கத்தில் இருப்பவர்களுக்கு அறிமுகப்படுத்தி ஒரு பொன்னாடையைப் போர்த்தினாராம். நாடகத்தை இயக்கியவர் என்னும் முறையில் என் மைத்துனியையும் பாராட்டினாராம். அப்போதும் வீட்டுக்கு அழைத்தாராம். அவளுக்கு ஆசைதான். ஆனால் குழுவோடு இருக்கும்பொழுது எப்படிப் பிரிந்து தனியாகச் செல்வது என்ற எண்ணத்தில் “அடுத்த தரம் வரேம்பா” என்றாளாம். அவரும் புன்னகையோடு விடைகொடுத்தாராம்.
பெங்களூருக்குத் திரும்பியபிறகு அவள் இச்சம்பவத்தைப் பலமுறை சொல்லிச்சொல்லிச் சந்தோஷப்பட்டாள்.”பாக்கணும்னு இருந்தா எப்படியாவது சந்தர்ப்பம் அமைஞ்சிடுது பாருங்க” என்றாள்.
அவர் அணிவித்த துண்டுக்கு வீட்டில் சு.ரா.துண்டு என்றே பெயர் வைத்துவிட்டோம். “சு.ரா.துண்ட தொவச்சாச்சா?”, “சு.ரா.துண்ட பொட்டியில வச்சாச்சா?” “மேல மாடியில சு.ரா. துண்டு காயுது பாருங்க. மழவர மாதிரி இருக்குது. நனஞ்சிடப் போவுது. போயி எடுத்தாங்க” இப்படிப்பட்ட உரையாடல்கள் தினசரி வாழ்வில் சகஜமாயின. ஒருநாள் அந்தத் துண்டு காணாமல் போவதற்கும் நானே காரணமாகிவிட்டேன். ஏதோ ஒரு இரவுநேர ஊர்ப்பயணத்தில் ஊர்போய் சேர்ந்ததும் தூக்கக் கலக்கத்தில் இருக்கையின்மீது விரித்திருந்த துண்டை எடுக்க மறந்து பெட்டியைமட்டும் எடுத்துக்கொண்டு இறங்கிவிட்டேன். வீட்டுக்குத் திரும்பியபிறகுதான் உறைத்தது. அந்த இழப்பைப்பற்றி என் மனைவியிடம் சொன்னபோது எழுந்த குற்ற உணர்வை மறக்கவே முடியாது. அவளைப் பொறுத்தவரை அது சாதாரண துண்டல்ல, சு.ரா. துண்டு.
*
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினம். அன்று சு.ரா.வின் இல்லத்தில் நண்பர்கள் சந்திப்பு ஒன்றுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அன்று சு.ரா – கமலா தம்பதியினரின் ஐம்பதாண்டு இல்லற வாழ்வின் நிறைவுநாளை ஒட்டி சிறிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் வரும் முன்னரேயே அதே கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு என் மைத்துனியின் குடும்பத்தினரும் வருவதாக இருந்தது. ஆண்டுக்கு ஒருமுறை அந்த விடுப்பையொட்டி நிகழும் அந்த வருகையை எதிர்கொள்வது எங்கள் கடமையானது. விருந்துக்கான கடிதம் வந்ததும் மிகப்பெரிய மனப்போராட்டம் உருவாகிவிட்டது. கடமையா ஆசையா என்னும் போராட்டம். என் மனைவிக்கு அந்த விருந்தில் கலந்துகொள்ளவேண்டுமென்பது மிகப்பெரிய ஆசை. ஆனால் பலத்த யோசனைக்குப் பிறகு அவள்தான் ஒரு திட்டத்தை முன்வைத்தாள். விருந்துக்குப் போய்வரும் வேலையை நானும் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினர்களைக் கவனித்துக்கொள்ளும் வேலையை அவளும் கவனித்துக்கொள்வதாக முடிவெடுத்துக்கொண்டோம்.
நண்பர் மகாலிங்கம் தன் துணைவியாருடன் வருவதாகச் சொன்னார். கிறிஸ்துமஸ் சமயம் என்பதால் எங்களுக்கு டிக்கட்டுகள் எளிதாகக் கிடைக்கவில்லை. அவர்தான் மிகவும் சிரமப்பட்டு எங்கெங்கோ அலைந்து ஏற்பாடு செய்தார். பேருந்தின் கடைசி இருக்கையில் உட்கார்ந்து நாங்கள் பயணம் செய்தோம்.
அந்த நிகழ்ச்சிக்குச் சில வாரங்கள் முன்புதான் அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்தார். காலையில் விடுதியில் குளித்து முடித்து நாங்கள் அவரைச் சந்தித்தோம். கூடத்தில் பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவர் எழுந்து புன்னகைத்தபடி தோளில் கைகளை அழுத்தி அருகில் நெருக்கமாக இழுத்துக்கொண்டார். அந்த நெருக்கம் மிகவும் சந்தோஷமாக இருந்தது. திருமதி.சு.ரா.வும் அவர் மகளும் சிறிது நேரம் உரையாடலில் கலந்துகொண்டனர். “உங்க திருமதி வரலியா? நான் கடுதாசியில எழுதியிருந்தனே” என்று என்னை நிமிர்ந்து பார்த்தார். உண்மை நிலையை எடுத்துச் சொன்னேன். அவர் புரிந்துகொண்டதற்கு அடையாளமாக தலையசைத்துக்கொண்டார். விருந்தினர்கள் கணிசமான அளவில் தொடர்ந்து வந்தபடி இருந்தனர். அவர் அருகில் அமர்ந்து அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்பாமல் நாங்கள் மாலையில் சந்திப்பதாகச் சொல்லிவிட்டுத் திரும்பினோம்.
மாலை விருந்து இனிதே நடைபெற்றது. சு.ரா.வின் பேரப் பிள்ளைகள் கூடி நடத்திய இசை நிகழ்ச்சியும் சிலம்புக்கழி ஆட்டமும் புலன்களுக்கு நல்ல விருந்தாக இருந்தன. குழந்தைகளிடம் காணப்பட்ட பலதுறைத் திறமைகள் ஆச்சரியமளிப்பதாக இருந்தது. ஏறத்தாழ இரவு பத்து மணியளவில் நாங்கள் விடைபெற்றோம். அடுத்தநாள் அதிகாலையிலேயே அவர்கள் எங்கோ வெளியே செல்லும் திட்டமிருந்ததால் அப்போதே நாங்கள் மறுநாள் மாலையில் ஊருக்குக் கிளம்பும் திட்டத்தைச் சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.
“பெங்களூருக்கு நீங்க வந்து ரொம்ப வருஷங்களாயிடுச்சி. நேரமிருந்தா இந்த முறை ஒருதரம் வந்துட்டு திரும்பலாமே” நாங்களாகவே ஒரு திட்டத்தை முன்வைத்தோம். அவரும் அதைப்பற்றி யோசிப்பதாகவும் நேரமிருக்கும் பட்சத்தில் அவசியமாக வருவதாகவும் சொன்னார். அந்த வாக்குறுதி எங்களுக்கு மிகவும் மனநிறைவளிப்பதாக இருந்தது. சொல்லிக்கொண்டு கிளம்பினோம். வழக்கமாக ஒவ்வொரு முறையும் வாசல்வரைக்கும் வந்து தோளைத்தொட்டு வழியனுப்பும் சு.ரா.வால் அன்று அந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க இயலாதபடி சூழல் அமைந்திருந்தது. கூட்டமாகத் திரண்டிருந்த நண்பர்களை விலக்கிக்கொண்டு ஓரிருவருக்காக வருவது அசாத்தியமான காரியம் என்றே தோன்றியது. இருந்தாலும் ஒரேஒரு விழுக்காடு அளவு அந்த இழப்பை உணரவே செய்தது மனம்.
மறுநாள் அதிகாலை மிகப்பெரிய துரதிருஷ்டமாக எல்லாருக்கும் விடிந்தது. சுனாமியின் விளைவாக கன்னியாகுமரிக் கடல் கொந்தளித்து பனைமர உயரத்துக்கு எழுந்துவந்த அலைகள் பல உயிர்களைக் குடித்துவிட்டன. கன்னியாகுமரியும் நாகர்கோயிலும் பதற்றத்தில் தத்தளித்தன. கருக்கலிலிருந்து எட்டுமணிவரை சொத்தைவிளைக் கடற்கரையில் தனிமையில் சூரியோதத்தைப் பார்த்து அலைகளிடையே காலாற நடந்து களித்த நானும் மகாலிங்கமும் பசியின் காரணமாக விடுதிக்குத் திரும்பிய அரைமணிநேரத்தில் அக்கடல் கொந்தளித்தெழுந்து கரையில் விளையாடிக்கொண்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருந்த இருநு¡ற்றுக்குமான நபர்களை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டன. கரையில் நிற்பதுபோல படமெடுக்க விரும்பிய பேரக்குழந்தையின் ஆசையைத் தீர்த்துவைக்கும் வேகத்தில் கடலை நெருங்கிச் சென்ற இன்னொரு குடும்பத்தின் உறுப்பினர்களைக் கடல் ஆளுக்கொரு திசையில் உருட்டித் தள்ளிவிட்டது. இருவர் உயிரிழந்தனர். இருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். பொழுது இறங்கஇறங்க வந்து சேர்ந்தபடி இருந்த மரணச் செய்திகள் மனத்தைப் பாரமாக்கின. பயணத்தை ரத்து செய்துவிட்டு சு.ரா. வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அன்று இரவு வண்டியில் மனபாரத்தோடு நாங்கள் ஊருக்குத் திரும்பினோம். நெல்லையில் இரவு வேளையில் படிக்கக் கிடைத்த மாலைச் செய்தித்தாளையும் அதிகாலையில் ஓசூரில் படிக்கக் கிடைத்த ஆங்கிலச் செய்தித்தாளையும் படித்தபிறகுதான் தமிழகமெங்கும் கடற்கரையோரப் பகுதிகளில் உருவாகியிருந்த இழப்புகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. இறக்கிவைக்கமுடியாத அளவுக்கு யாரோ பெரிய பாரத்தைத் து¡க்கி நெஞ்சின்மீது வைத்துவிட்டதைப்போல இருந்தது.
சில நாட்கள் கழித்து சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது. அது ஒரு ஞாயிறு. காலச்சுவடு பதிப்பகத்தின் வழியாக சு.ரா.வின் நான்கு புத்தகங்களும் என்னுடைய ஒரு புத்தகமும் வெளிவருதாக இருந்தன. காலையில் என் புதிய புத்தகத்துக்கு கையெழுத்திட்டு நானும் மாலையில் தன் புத்தகங்களுக்கு கையெழுத்திட்டு சு.ரா.வும் வாசகர்களுக்கு வழங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நானும் என் மனைவியும் ஒருநாள் முன்னதாகவே கிளம்பிச் சென்றிருந்தோம். எதிர்பாராத விதமாக அச்சகத்தில் ஏற்பட்டிருந்த தாமதத்தால் காலையில் வரவேண்டிய புதிய நூல் வரவில்லை. மாலையில்தான் வந்தது. சு.ரா.வும் கண்காட்சிக்கு வந்துவிட்டார். அருகருகே நாங்கள் உட்கார்ந்திருந்தோம்.
“இதுக்கு முன்னால புத்தகக் கண்காட்சிக்கு வந்திருக்கிங்களா பாவண்ணன்?” என்று கேட்டார் அவர்.
“ஒன்பது வருஷங்களுக்குப் பிறகு இப்போதான் மறுபடியும் வரேன் சார். இது மூணாவது தரம்.”
“எனக்கு இதுதான் முதல் தரம் தெரியுமா? இதுவரைக்கும் நான் புத்தகக் கண்காட்சிய பாத்ததே இல்ல.” அவர் குழந்தையைப்போல சொல்லிச் சிரித்தார். நான்கு புறங்களிலும் கடைகளுக்குள் ஏறியும் இறங்கியும் வெளிப்பட்டபடி இருந்த கூட்டத்தினரை ஆச்சரியத்தோடு பார்த்தார். சில வினாடிகள் கழித்து “ஜேஜேன்னு சுசீந்தரம் தேரோட்டத்த பாக்கறமாதிரி இருக்குது” என்றார். அந்தக் கூட்டம் அவருக்குள் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
“நீங்க வந்திருக்கிங்களாம்மா?” என்று என் மனைவியிடம் கேட்டார். “எனக்கும் இதுதான் முதல் தரம்பா” என்று கூச்சத்தோடு சொன்னாள். “இனிமே ஒவ்வொரு வருஷமும் வந்துடுங்க. எழுத்தாளர்கள் என்னென்ன செய்றாங்கன்னு நீங்க கண்கூடா பாக்கவேணாமா? கண்காட்சிக்குன்னு சொல்லிட்டு ஐயா பொட்டிய து¡க்கும்போது நீங்களும் கூடவே வந்துருங்க, தெரியுதா?”
அவர் சிரிப்பதைப் பார்த்து அவளுக்கும் சிரிப்பு பொங்கியது.
அதற்குள் பல வாசகர்கள் அவரை நெருங்கிச் சூழ்ந்துகொண்டார்கள். பலருக்கும் அவருக்குப் பக்கத்தில் நின்று பேசியபடி இருக்கவேண்டும் என்னும் ஆசை ஆழமாக இருப்பதைப் பார்த்தேன். ஆனால் சூழல் அதற்கு இடம்தரவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நெருக்கடியிலேயே கழிந்தது. கையெழுத்திடும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சு.ரா. அருகில் வேறொரு கட்டடத்தில் நடக்கவிருந்த கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக கிளம்பினார். கூட்டத்துக்காக இல்லையென்றாலும் அன்றைய இரவு ரயிலில் பெங்களூர் திரும்புவதற்காக நாங்கள் முன்பதிவு செய்திருந்ததால் நாங்களும் கிளம்பினோம். நாங்கள் மூவரும் கண்காட்சி அரங்கைவிட்டு வெளியே வந்தோம்.
“புத்தகத்துலயெல்லாம் உங்களப்பத்தி ரொம்ப உயர்வா இவர் எழுதறதயெல்லாம் பாத்துட்டுதான் இருக்கேன். படிக்கறதுக்கு சந்தோஷமா இருக்குது. உங்கள பாக்கறதுக்கும் சந்தோஷமா இருக்குது. அவர நல்லபடியா பாத்துக்குங்க.”
“பாத்துக்குவம்பா.”
“பாவண்ணன், நீங்களும் அவுங்கள நல்லபடியா பாத்துக்கணும். சும்மா எழுதறதோடு நிக்கக்கூடாது.”
“அப்படியெல்லாம் இல்ல சார். நல்லா பாத்துக்குவேன் சார்.”
“மகன் என்ன செய்றாரு?”
“இப்ப பி.யு.சி. ரெண்டாம் வருஷம் சார்.”
“வந்திருக்காரா?”
“இல்லிங்கப்பா. அவருக்கு காலேஜ்ல எக்ஸாம். அதனால வரமுடியலை. ”
“இந்த மாதிரி இடங்களுக்கு பிள்ளைகளையும் அழச்சிவந்து காட்டணும். அவுங்களுக்குள்ள நெருப்பு இருந்தா தானா புடிச்சிக்கும்.”
“வழக்கமா அழச்சிம்போறதுதான். இப்பதான் இப்படி ஒரு நெலைமை உண்டாயிடுச்சி”
“அவருக்கு படிக்கற பழக்கமுண்டா?”
“உண்டுங்க சார்.”
“யார ரொம்ப புடிக்கும்?”
“ஆர்.கே.நாராயண்.”
“தமிழ்ல படிக்கமாட்டாரா?”
“இல்ல சார். தற்சமயம் இங்கிலீஷ்லதான் படிக்கறாரு. இனிமேதான் தமிழ்ல பழக்கணும்.”
திடீரென எனக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. இத்தனை ஆண்டுகள் நாங்கள் பார்த்துக்கொள்கிறவர்களாகவும் பழகுகிறவர்களாகவும் இருந்தாலும் அவருடைய புகைப்படம் ஒன்றுகூட என்வசம் இல்லை என்பது உறைத்தது. எல்லாரும் சேர்ந்து நின்று ஒரு படமெடுத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்தது. கிட்டத்தட்ட அவரை அழைத்துச் செல்ல கார் நெருங்கிவந்துவிட்ட நேரம் அது. நான் அவசரமாக என் விருப்பத்தைச் சொன்னேன்.
“அதுக்கென்ன? தாராளமா எடுத்துக்கலாமே? உங்ககிட்ட கேமிரா இருக்குதா?”
அவசரமாக என் பையிலிருந்து கேமிராவை எடுத்தேன். பக்கத்தில் நின்றிருந்த ஒருவரிடம் எங்களைப் படம் எடுத்துத் தரச்சொல்லுமாறு கேமிராவை அவரிடம் கொடுத்துவிட்டு நான் அவரருகில் நின்றுகொண்டேன். அமுதாவின் தோளில் ஒருகையையும் என் தோள்மீது ஒரு கையையும் படரவிட்டபடி அவர் நின்றார். படமெடுக்க முனைந்த நண்பர் தடுமாறுவதை உணர்ந்து எனக்குள் பதற்றமேற்பட்டது. இவ்வளவு பொருத்தமாக சூழல் கனிந்துவரும் வேளையில் ஏதாவது பிசகாக நடந்துவிடுமோ என்று குழப்பமாக இருந்தது. “என்னங்க சார்?” என்று அங்கிருந்தபடியே கேட்டேன். “க்ளிக்காக மாட்டுதுங்க சார்” என்றார் அவர். அவசரமாக ஓடிச்சென்று நான் அவரிடமிருந்த கேமிராவை வாங்கி அவர்கள் இருவரையும் மட்டுமாவது எடுக்கலாம் என்ற வேகத்தில் க்ளிக் பொத்தானை அழுத்தினேன். பொத்தான் அழுந்துகிறது. ஆனால் உள்ள படச்சுருள் அசையவில்லை. வாழ்வில் மிகப்பெரிய துரதிருஷ்டமான கணம் அது.
“புது கேமிராதான் சார். என்ன ஆச்சின்னு தெரியலையே?”
என் குழப்பத்தையும் வேதனையையும் பார்த்து அவர் என்னை அமைதிப் படுத்தினார். “இதுக்கெல்லாம் ஏன் கவலப்படறிங்க பாவண்ணன். நான்தான் கூடிய சீக்கிரமா பெங்களூர் வரப்போறேனே. அப்ப எவ்வளவு படம் வேணுமாலும் எடுத்துக்குங்க. சரிதானே?”
“சரி சார். கண்டிப்பா பெங்களூர் வருவிங்கல்ல?”
“கண்டிப்பா வருவேன். அப்படி ஒரு திட்டமிருக்கு மனசுல. பாப்போம். ”
“நாங்களும் கெளம்பறம் சார். நண்பர் வீட்டுலதான் பெட்டிங்க இருக்குது. அங்க போய் பெட்டிய எடுத்துகிட்டு ஸ்டேஷன் வரணும்.”
“சரி ஜாக்கிரதயா போயிட்டு வாங்க. பாக்கலாம்” அவர் வழக்கம்போல தோளைத்தட்டி விடைகொடுத்தார்.
*
அந்தச் சந்திப்புக்குப் பிறகு ஒரு மாத இடைவெளியில் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமியின் விருதுக்கு என் பெயர் தேர்ந்தெடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்ட நேரம். அன்று காலைமுதல் ஏராளமான நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்தபடி இருந்தார்கள். எனக்கு எல்லாமே புது அனுபவமாக இருந்தது. ஒருபுறம் மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் கூச்சம். இந்த வாழ்வில் நான் பெற்ற பெருஞ்செல்வம் இந்த நண்பர்கள் கூட்டத்தைத் தவிர வேறென்ன இருக்கமுடியும் என்று நினைத்துக்கொண்டேன். எல்லாரிடமும் சந்தோஷமாக சில வார்த்தைகள் பேசி நன்றியையும் தெரிவித்தேன்.
ஏழரை மணியிருக்கும். தொலைதூர அழைப்புக்கே உரிய நீண்டு ஒலிக்கும் தொலைபேசி ஒலி. நாகர்கோயிலிலிருந்து கண்ணனுடைய குரல். வாழ்த்துரைக்கும் அந்த உரையாடலின் முடிவில் தொலைபேசியை சு.ரா. வாங்கிக்கொண்டார்.
“ரொம்ப சந்தோஷமா இருக்குது பாவண்ணன். ரொம்ப சந்தோஷமா இருக்குது. வாழ்த்துகள். செய்திய படிச்சதுமே மனசுல ஏதோ பெரிய நிம்மதி உண்டாச்சி. சரியான ஆளுக்கு போயிருக்கேங்கற நிம்மதி. உங்க உழைப்புக்கு நீங்க இன்னும் உயரமா போவலாம். அதுக்கெல்லாம் இது ஒரு தொடக்கம்னு வச்சிக்குங்க.”
ஒவ்வொரு வார்த்தையாக கனிவோடு அவர் பேசினார். என் காதுகளை நம்பமுடியாமல் அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் அந்த உரையாடலை நிறுத்திவிடக்கூடாது என்றும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் குழந்தைத்தனமாக ஆசைப்பட்டேன். ஆனால் அந்த உரையாடல் சங்கிலியைத் தொடரவைக்கும் ஆற்றல் என்னிடம் இல்லை. நெகிழ்ச்சியான மனநிலையில் கரைந்துபோயிருந்த உள்ளத்திலிருந்து வார்த்தைகள் புறப்படவில்லை. “நீங்க வாழ்த்திப் பேசறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது சார்” என்று தடுமாற்றத்தோடு சொன்னேன். “சரி, வீட்டம்மா இருக்காங்களா?” என்று கேட்டார். பிறகு “அவுங்ககிட்ட போன குடுங்க. நீங்க அவுங்களுக்குத்தான் நன்றி சொல்லணும். அவுங்களோட செலவு செய்யவேண்டிய நேரத்தத்தானே நீங்க இந்த எழுத்துலயும் புத்தகத்தலயும் செலவு செய்திருக்கிங்க” என்றார். “வாஸ்தவம்தான் சார், இங்கயே நிக்கறாங்க. குடுக்கறேன்” என்றபடி என் மனைவியடம் தொலைபேசியைக் கொடுத்தேன். சில நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டார்கள். அவள் முகம் மெல்லமெல்ல ஆனந்தத்தில் சிவப்பதைப் பார்த்தேன். மெய்மறந்து உரையாடிக்கொண்டிருந்தாள். இறுதியாக “நிச்சயமாப்பா” என்று ஏதோ ஒரு கேள்விக்குப் பதில் சொன்னபடி தொலைபேசியை என்னிடம் கொடுத்தாள். “நேரா பாக்கும்போது நெறய பேசலாம் சரிதானே? தொடர்ந்து எழுதிட்டு வாங்க” என்று சொன்னபடி விடைபெற்றுக்கொண்டார். “என்ன அமுதா சொன்னாரு?” என்று அவளை ஆவலோடு கேட்டேன். “உங்கள நல்லா பாத்துக்கணுமாம்” என்று சிரித்தாள் அவள்.
“நெஜமாவா அப்படிச் சொன்னாரு?”
“ஆமாங்க”
அன்றும் அதற்கடுத்த மூன்று நான்கு நாட்களும் வீட்டுத் தொலைபேசியும் அலுவலகத் தொலைபேசியும் விடாமல் ஒலித்தபடியே இருந்தன. எல்லா மூலைகளிலிருந்தும் நண்பர்களின் வாழ்த்துக் குரல்கள். விருதை முன்னிலைப்படுத்தி அனைவருடைய குரல்களையும் ஒருங்கே கேட்டது பரவசமான அனுபவமாக இருந்தது.
தற்செயலாக அறிவிப்பு வெளிவந்த பத்து நாட்கள் இடைவெளியில் தொ.மு.பரமசிவனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் துறைத்தலைவராக இருக்கக்கூடிய திருநெல்வேலி மனோன்மணி பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கில் நான் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். கருத்தரங்கில் ஒரு அமர்வை மொழிபெயர்ப்புக்கென அமைத்திருந்தார்கள். மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலிருந்து தமிழை வந்தடைந்திருக்கும் படைப்புகளைப்பற்றிய ஒரு அமர்வு அது. மலையாளத்தைப்பற்றி சு.ரா.வும் கன்னடத்தைப்பற்றி நானும் தெலுங்கைப்பற்றி மதுரைப் பேராசிரியர் ஒருவரும் பேசவேண்டும் என்பதுதான் அமர்வின் திட்டமென்று அவர் சொன்னார். பயணத்தொலைவு அதிகமென்றாலும் அந்த அழைப்பைத் தட்டமுடியவில்லை. ஏற்றுக்கொண்டேன். குறுகிய காலத் தயாரிப்புடன் கருத்தரங்கன்று திருநெல்வேலிக்குச் சென்றேன்.
முதலில் பேசி அமர்வைத் தொடங்கிவைத்தார் சு.ரா. கச்சிதமான பேச்சு. அதற்குப்பிறகு
நான் உரையாற்றினேன். என் உரை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. நெருங்கிவந்து தோளைத் தொட்டு அழுத்தித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார்.
கிளம்பும் முன்னர் பெங்களூர் திட்டத்தைப்பற்றி மெதுவாக நினைவூட்டினேன். அமெரிக்காவுக்குச் செல்லும் முன்னர் எப்படியும் பெங்களூருக்கான பயணத்தைத் திட்டமிட இருப்பதாகவே சொன்னார்.
“இப்ப என்ன எழுதறீங்க சார்?”
“பாக்கி வச்ச வேலைகளையெல்லாம் ஒன்னொன்னா முடிக்கறேன் பாவண்ணன். இன்னும் ஒரேஒரு வேலை பெரிய அளவுல பாக்கியா இருக்குது. சாகித்திய அகாதெமிக்காக கிருஷ்ணன் நம்பிய பத்தி ஒரு புத்தகம் எழுதித் தரதா வாக்களிச்சிருக்கேன். அத சீக்கிரமா எழுதி முடிச்சாவணும். இங்க வச்சி முடியும்னு தோணல. அமெரிக்கா போனபிறகுதான் முடிச்சி அனுப்பணும்.”
வேலைப்பளுவின் காரணமாக அவரால் பெங்களூருக்கான பயணத்தை வகுத்துக்கொள்ளவே இயலாமல் போனது. என் மனைவிக்கும் அதில் சற்றே வருத்தமாக இருந்தது. சில சமயங்களில் “அடுத்த வருஷம் வருவாருல்ல, அப்ப பாக்கலாம் விடு” என்று அவளிடம் நான் சொல்வதுண்டு.
இனி அப்படிச் சொல்லி அமைதிப்படுத்துவதற்கான அவசியமே இல்லாத அளவுக்கு மரணம் அவரை இப்பொழிது அள்ளிக்கொண்டு போய்விட்டது. நாங்கள் எடுக்கத் திட்டமிருந்த புகைப்படத்தை எடுக்கவே வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
எங்களிடையே சொல்லிக்கொள்கிற அளவுக்கு கடிதப் போக்குவரத்து இருந்ததில்லை. தொலைபேசியிலும் அதிக அளவில் எதையும் பரிமாறிக்கொண்டதில்லை. ஆனாலும் அவை எதற்குமே அவசியமற்ற நிலையில் எங்களிடையே நட்பும் நெருக்கமும் அரும்பியிருந்ததை நினைத்துப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. நான் ஏதோ ஒரு நகரில் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து எழுதுகிறவனாக இருக்கிறேன். முற்றிலும் வேறொரு பகுதியில் வாழ்பவராகவே அவர் இருந்தார். என்னை அறிந்தவர் ஏதோ ஒரு மூலையில் இருந்தபடி என்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்கிற எண்ணமும் நம்பிக்கையும் அழுத்தமாக எனக்குள் உண்டு. அப்படி கவனிக்க ஒருவர் இருக்கிறார் என்னும் எண்ணமே இத்தனை காலமும் எனக்கு ஆறுதல் அளிப்பதகாவும் நிறைவளிப்பதாகவும் இருந்தது. அந்த ஆறுதலையும் இல்லாமலாக்கிவிட்டது அவருடைய மரணச்செய்தி.
அவரை நினைக்கும்போதெல்லாம் அவர் என் தோளைத் தொட்டு இழுத்து பக்கத்தில் நெருக்கமாக நிறுத்திக்கொள்ளும் காட்சியே மீண்டும்மீண்டும் மனத்தில் எழுகிறது. அப்படி ஒரு வாய்ப்பு இனிமேல் வாழ்வில் நேரவே வழியில்லை என்னும் உண்மை ஊட்டும் வலி தாங்கமுடியாததாக இருக்கிறது.
*
- கீதாஞ்சலி (94) நான் பிரியும் வேளை!
- மகா அலெக்ஸாண்டர் இந்தியப் போரில் தோல்வி அடைந்தாரா?
- உருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”
- சு.ரா.வுக்கு இறப்பே இல்லை! ( சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன்.)
- போராளியின் பயணம்
- கடித இலக்கியம் – 26 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
- ‘கவிபாஸ்கரி”ன் தொட்டில் கனவு!
- பெண் மொழி ≠ ஆண் மொழி
- சம்பங்கி – சண்பகம் – சண்பகராசன் கதை
- கீதாரிகள் உலகம்
- இதமிழிசைப் பாடல் -. தொட்டுத் தொட்டுப் பார்க்கட்டுமா சிட்டுக்குருவியே
- தோளைத் தொட்ட கைகள்
- நான் தான் நரகாசூரன் பேசறேன்….
- கணக்கு !
- இராஜேஸ்வரி- பெண்கள் சிறுகதைப்போட்டி. 2006
- தொடரும் இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ்
- அறிவிப்பு:
- நேச குமார் என்ற பெயரில் எழுதுபவர் கவனத்திற்கு:
- பேசும் செய்தி – 3
- சாமிச்சண்ட
- வணக்கம் துயரமே! அத்தியாயம் – 6
- பெண்/பெண்
- மடியில் நெருப்பு – 7
- இரவில் கனவில் வானவில் 6
- திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்…
- வடகொரியாவின் அணுஆயுதச் சோதனையும் கிழக்காசியாவின் ஆயுதப் பரவலும்.
- பிரச்சினைக்குள்ளான, போப்பின் சமீபத்திய உரையின் தமிழாக்கம
- “கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?”
- அப்சல் மரண தண்டனை – ஓர் அலசல்
- திரிசங்கு
- கயிற்றரவு
- தாஜ் கவிதைகள்
- நான் ?
- நன்றி. மீண்டும் வராதீர்கள்.
- பெரியபுராணம் – 107 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி