தொழில் நுட்பமும் தொடர்ந்து வரும் வாழ்வுமுறை மாற்றங்களும்

This entry is part [part not set] of 13 in the series 20010527_Issue

சி குமாரபாரதி


நண்பா கேளாய்!

காலம் கனிந்தது பலகதை பறைய

பாதக்குறடுகள், பாய்மரக் கப்பல்கள்

ஒட்டும் கோந்துடன், முட்டைக் கோசுகள்

மாசிமீனுடன்,பாசிப் பருப்பும்

நாலும் கலந்து நான் தர உனக்கு

மணிமுடிமன்னர்கள் அணிநிரை கூறியும்

அலைகடல் கொதிப்பாயச் சுடுவதேன் எனவும்

செட்டைகள் உண்டோ சேற்றுப் பன்றிகட்கென

தப்பிதமின்றிச் செப்புவேன் நானே – அதிசய நாட்டில் அல்லிராணி

சங்கிலித் தொடர்..

எலிகளின் தொல்லை தாளாமல் இளம் துறவியார் பூனை வளர்க்க ஆரம்பித்த கதை உங்களுக்குத் தெரியும்தானே!. பூனைக்குப் பால், பாலுக்கு மாடு, மாட்டுக்கு குடியானவன்(அம்புலி மாமா சொற்பிரயோகம்), குடியானவனுக்கு ஒரு பெண், பெண்ணிற்கு இளமை என்ற நீண்ட சங்கிலித் தொடர் விளைவுகள் ஈற்றில், நமது இலட்சிய வாலிபனை சம்சார நடுக் கடலில் இழுத்துவிட்ட புராணம் இது. பாவம் ஆரம்பத்தில் மனிதன் யாசித்தது என்னவோ எலிகள் நாளாந்தம் நாசம் செய்யும் துண்டுகளுக்கு மாற்றாக புதுக் கோமணத் துண்டுதான். மனித இயல்புகள்!. அறிவியலில் மற்றும் சமூகவியலில் கூறப்படும் சங்கிலித் தொடர் விளைவுகளுக்கு இது எளிமையான விளக்கம்.

ஒன்றைத் தொற்றி அதனுடன் வந்து சேருவதற்கு எப்பொழுதுமே நுாறு விஷயங்கள் பின்னால் தயாராக நிற்கின்றன.இப்படி அவைகள் வரிசையாகக் கொழுவி நிற்கும் பாங்கு நமக்கு புலப் படுவதில்லை. ஏதோ அடுத்த ஒரு காரியத்தை மட்டும் முடித்துவிட்டால் போதும் பின்னால் நிம்மதியாயிருக்கலாம் என்ற எண்ணம் மேலோங்கி நிற்பதைக் கவனித்தீர்களா ? ஆசை! பின்னால் வரும் சங்கிலித் தொடர் விளைவுகளை தற்காலிகமாக மறந்து, அந்த அந்தக் கணங்களின் உந்தல்கள் இங்கு புத்திசாலித்தனமானவை எனத் தோன்றும் படி நியாயப் படுத்தப் படுகின்றன.

பொதுவாக நுகர்வோர் கலாச்சாரத்தில் பாரிய ஒரு சாமானைத் தேர்ந்தெடுக்கும் பொழுது அதற்குரிய ஒரு வாழ்க்கைப் பின்னணியையே தேர்ந்தெடுக்கிறோம் என்பது தெளிவாவதில்லை. பின்னால் படிப்படியாக இத் தேர்வுகள் எங்கள் வாழ்க்கை முறைகளில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் அச் சமயத்தில் பெரிதாகத் தெரிவதில்லை – என்பதுடன் பல சமயம், அப்படியான மாற்றம் மிகவும் விரும்பத்தக்கதாகவே உணர்த்தப் படுகிறது. இந்த விஷயம் மிகச் சில சமயங்களில் உண்மையும் கூட (கணினி பாவனையும் அதனால் கிட்டும் பலன்களும்). ஆனால் பல சமயங்களில் இவைகூட மிகைப் படுத்தப் படுகின்றன.

விளம்பரம், அயலவரின் நெருக்குவாரம் peer pressure – ஆகிய துாண்டல்கள் மூலமாக கடத்தப் படும் உந்தல்கள் (urges) வாழ்வு முறைகளை மிகுந்த mாற்றத்திற்குளாக்கு கின்றன. கடைக்குப் போய், பத்துச் சதத்திற்கு சீயாக்காய வாங்கி, வெந்தயத்துடன் அவித்து தலை முழுகும் சடங்கு – வேறு மாற்று முறைகள் இல்லாத காலத்தில் – பெரிய கரைச்சலானதாகத் தெரிவதில்லை. அதாவது ஷம்பூவைக் கொண்டு வந்தவரைக்கும். ஷம்பூவுக்குப் பழகிய பின்னர் எப்படி வந்தது என்று கூகிக்க முடியாத வகையில் மேலதிகமாக conditioner என்ற சரக்குக் கொண்டு வரப்பட்டது. இரண்டுக்குமே நன்றாகப் பழகியபின்னர் இன்றியமையா எண்ணெய்கள் essential oils இல்லாமல் உடம்பு மழுமழு ப்பாகாது என்று புதிய ஐதீகம் ஏற்படுத்தப் பட்டது. ஆனால் கவனித்தீர்களோ தெரியாது , பழையபடி சீயாக்காய்,கத்தாழை, புற்றுமண்,கழுதைப்பால் என்பவை நிறமேற்றப் பட்டு, சரியான பிசுபிசுப்புத்தன்மை ஒழுகும் தன்மை கரைசல் தன்மைகளுடன், கலைப் பொருளாக சேகரிக்கக்கூடிய கெண்டி செம்புகளில் ஊற்றப்பட்டு, மின்னி மறையும் முன்னழகு காட்டி மறைக்கும் காலழகுகளால் விற்பனை செய்யும் போக்குகள் மீண்டும் வந்துள்ளன. ஷவர் இல்லாத குளியலறையில் இந்த பூசி மெழுகும் சடங்குகள்தான் சாத்தியமாகுமா ? கிணற்றடிக்கு இந்த அடுக்கணிகளை நாளாந்தம் காவிச் செல்லவதற்கு சங்க ராமயண காலங்களைப் போல் தோழியர்கள் பாங்கிமார் தேவை. அப்படி முடிந்தாலும் கூடக் குளிக்கும் தண்ணீரை வாழைப் பாத்திக்கோ தென்னம் பாத்திக்கோகூடக் கட்டிவிடமுடியாது. மரங்கள் பட்டுவிடும்.எங்கள் செயல்களின் எதிர் விளைவுகள் எங்களை எவ்விதமும் பாதிக்காமல் இருக்கவேண்டுமாயின் அழுக்குநீரை மூடிமறைத்து சாக்கடைக்கு அனுப்புங்கள்.

இங்குதான் அழகு சாதன திரவியங்கள் குளியலறை சாதனங்களுடன் கைகோர்த்து எங்களை ஆக்கிரமிக்கின்றன.எங்கிருந்தோ எங்கு இழுபடுகிறோம். இத்தியாதி இத்தியாதி.

மாட்டுவண்டிக் கலாச்சாரத்திலிருந்து..

கணினியுடன் நான் படும் பாட்டை சொல்ல வெளிக்கிட்ட விஷயம் ஞாபகம் வருகிறது. செக் புத்தகத்தில் கைநாட்டு போடுவதைதவிர இப்பொழுதெல்லாம் நான் எழுதுவதை கைவிட்டு பல வருடங்களாயிற்று. இத்தனைக்கும் நான் தொட்டெழுதும் முள்ளம் பன்றி முனை பேனா காலத்திலிருந்து எழுதும் சாதனங்களின் பரிணாம வளர்ச்சியுடன் ஒன்றி வளர்ந்தவன். ஒவ்வொரு வியப்பிலாழ்த்தும் இந்த எழுதுகோல் வளர்ச்சிக் கட்டங்களையும் தாண்டியவன்( G Nib, Swan, blackbird, Ball points). மணல் – சிலேட்டு பென்சிலில் ஆரம்பித்து மிகவும் வரையறுக்கப் பட்ட முறையில் ஆசிரியர்களின் அங்கீகாரத்துடன் படிப்படியாக பென்சில், தொட்டெழுதும் பேனா, மைவிடும் பேனா, தானாகவே மை உறிஞ்சும் போனா என்று முன்னேறியவன்தான்.

கணினியிருந்தால் பல வசதி. உண்மைதான்.கொஞ்சம் மவுசு- (தொழில்நுட்ப பந்தயத்தில் நான் முன்னணியாக்கும்). கணினி பற்றித் கொஞ்சம் தொழில் நுட்ப அறிவு இருந்தால் சுலபமாக சமாளித்து விடலாம் என்பது பகுத்தறிவுச் சமாதானம் வேறு. கொஞ்சம் கொஞ்சமாக அறிவைக் கூர்மைப் படுத்த PC உலகம், கூடுதல் PC (+), அவை கூறும் வெப் உலகங்கள் என விரிகின்றன, இவற்றில் வெளிவரும் அறிவு சார்ந்த கட்டுரைகள் – knowledge base articles. கணினியுகம் பரவலாக்கிய பதம் knowledge base. மென்பொருள் பிரயோகம் நிறுவுதல் ஆகிய கீழ்மட்ட குறிப்புகள் அல்ல இவை, உசத்தியான தொழில்நுட்ப விஷயங்கள் என்பதை தெளிவுபடுத்த எழுந்த பதம். இவவிதழ்களில் இன்றியமையாத மென் பொருட்கள் என துாக்கி வைக்கப் படுபவை சுலபமாக சில கிளிக்குகளுடன் வலைவழியே இறக்கக்கூடியவையே. அதைவிட கவர்ச்சி காசில்லாமல் கிடைப்பவை பல. ஒரு மாத பரிசோதனைக்காக வாவது சில பெரிய சரக்குகள் அவ்வப்போ கிடைக்கின்றனவே.

மருத்துவ புத்தகங்களில் விபரிக்கப்பட்ட ஒவ்வொரு வியாதிகளுக்கும் உரிய அறிகுறிகள் நிச்சயம் எங்களுக்கும் உண்டு என்ற உணர்வு ஏற்படுவது போல் (Jerome K Jerome – ‘ஒரு படகில் மூன்று மனிதர்கள் ‘ வாசித்திருக்கிறீர்களா ? 19ம் நுாற்றாண்டு நுால்), சஞ்சிகைகளில் சொல்லப்பட்ட எல்லா மந்தத்தனங்களும் பிரச்சனைகளும் எனது கணினிக்கு உண்டு என தெரிந்த காலம். அதைவிட கணினியை தயார் நிலையில் வைப்பதே முழுநேரவேலையாயிருந்த காலம். தயார் நிலையில் வைப்பதற்கே நேரம் சரியாக இருந்ததால் கணினியை பாவித்து வேறு என்ன செய்ய முடியும் என்பது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. கணினியின் சாத்தியங்கள் பற்றி மிகைப்பட்ட எதிர்பார்ப்புக்கள் வேறு இருந்த ஆரம்ப காலம். ‘கணினியுகம் ‘ என்ற சொல்லே பலவகை இல்லாத பொல்லாத மற்றும் சில யதார்த்தமான சாத்தியங்களை பொதும்பலான போர்வையில் மறைக்கிறது.

விட்ட தடத்துக்கு வருவோம். சஞ்சிகைகள் வாசிப்பில் நோட்டன் யுற்றிலிற்றி இருந்தால் நன்றாயிருக்கும் எனத் தென்பட்டதில் வியப்பில்லை. இறக்கி நிறுவியதும் கணினியுடன் இவ்வளவு காலமும் நான் பட்ட அவதிக்கு கடைசியில் விடை கிடைத்துவிட்டது என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை ஏற்படவே, அதிலிருக்கும் சோதனைகளை பாய்ந்து பாய்ந்து இயக்கத் தொடங்கினேன்.மென் பொருள் பரிந்துரை பிரகாரம் அழிப்பதை அழித்து காப்பதை காத்து மாற்றுவதை மாற்றினேன். கணினியிலிருந்த கிட்டத்தட்ட 500 மெ.பை கோப்புகள் அழிக்கப்பட்ட திருப்தியுடன் மறுஉதை (reboot) கொடுத்தால் கணினி பலவித கோப்புக்களை காணவில்லை என்று அடம்பிடித்தது. நகல் கோப்புகள் என அழிக்கப் பட்டவை வெவ்வேறு (திகதிப்) பதிப்புகள் (Versions). இந்த வின்டோஸ்/சிஸ்டம் கோப்புக்களில் உள்ள அசைவியல் இணை கோப்புக்கள் (Dynamic Link Library or *.Dll) இல்லாமல் வினைத்தளமானது (Operating System) பாவனை மென்பொருட்களை விளங்கிக் கொள்ள

இயலாது. கச்சிதமான அதற்குரிய .Dll கோப்புக்களே வினைத்தளத்திற்கும் பாவனை மென்பொருட்களுக்குமான இடைமுகம். மூன்று நாட்களும் முன்நுாறு கெட்டவார்த்தைகளுக்கும் பின் அழிக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் சிஸ்டம் கோப்புத் தொகுதியில் நிறுவமுடிந்தது. இந்த மென்பொருட்களில் தேர்ந்திடல்கள் (Options) பூலியன் தருக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை இவை எல்லாவற்றையும் கணக்கிலெடுத்து கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்தான் ஒட்டு மொத்தமாக என்ன விளைவுகளைத் தேர்ந்திருக்கிறோம் என்பது தெளிவாகிறது. நோட்டன் யுற்றிலிற்றி போன்றவை வினைத்தளத்திற்குள் ஆழமாக ஊடுருவுகின்றன. இந்த மென் பொருள் காலவதியானபிறகு அதை வெளியேற்றுவதற்கு பட்டபாடு வேறொரு கதை. அவர்களின் சைமன்ரெக் வெப்தளத்திற்குச் சென்று கூச்சல் போட்டதில் பிரயோசனம் இருக்கவில்லை, பின்னர் அவர்களின் ‘ அறிவு சார் கட்டுரைகளை ‘ வாசித்து பதிவு மைய்திற்குள் (Windows Registry) சென்று கையால் அகற்றும்படியாயிற்று.பதிவுக் கோப்புக்களைக் கையாளும் முன்னர் அவற்றை பின்தேவைக்காக நகலெடுக்கவேண்டும் – கையாளும் பொழுது கோப்புகள் பழுதடைந்தால் வினைத்தளத்தை மீண்டும் நிறுவவேண்டும் என வேறு எச்சரிக்கை. பேய்க்கு வாழ்க்கைப் பட்டால் புளிய மரமேறத் தயங்க முடியுமா ?

அனுபவம். இப்பொழுதெல்லாம் கணினியை இலட்சிய நிலையில் வைத்திருக்க முனைவதில்லை. ஏதோ வேலைசெய்தால் சரி அல்லாவிட்டால் சில கிருத்தியங்கள். முடிவில் நிகர நேர மிச்சம் இரண்டு நிலைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. கட்டி வைத்து அடித்தலும் அடித்து விட்டு கட்டுதலும்.

இப்பொழுதெல்லாம் ஏதாவது உருப்படியாகச் செய்யும் பொழுது பின்னணியில் ‘சுடிதாரில் வந்த சொர்க்கமே ‘ ‘மடிசாரில் வந்த மாமியே ‘ போன்ற பாடல்களை (Napsterல் இறக்கியவை) போட்டபடி இது போல ஏதாவது கிறுக்குவதுதான். அதுசரி சொர்க்கம் ஆடைகட்டித்தான் வருமா ? நான் நினைத்தது என்ன வென்றால் ……

உங்களுக்குத் தெரியுமா ? சென்ற நுாற்றாண்டின் 70 களில். பாரிஸ் மாநகரங்களின் சுரங்கப் பாதைகளில் கிதாருடன் ஹிப்பிகள் நடமாடிய காலம்.ரவிசங்கரின் சிதார் ஒலி மேற்கில் ஊடுருவிய காலம். சேலை உடுத்துதல் மேல்நாட்டு விருந்துகளில் கதைக்கப் படும் அம்சமாக ஏற்றுக் கெகாள்ளப் பட்ட காலம். ஒரு விருந்தில் ஒரு இளம் பெண் பக்கத்திலிருந்த இந்திய இளஞனை கேட்கிறாள் ‘ உங்களுக்கு சேலை எப்படி உடுத்துவது எனத் தெரியுமா ? ‘ அவன் பதில் ‘ தெரியாது ஆனால் அதன் மறுதலை (reverse) நன்றாகத் தெரியும் ‘.

பார்வைகளில் ஒயிலேற்றம்

வெப் ஷொட்ஸ் என்ற இலவச திரைகாக்கும் மென் பொருள் விதம் விதமான உலகத்தை கணினித் திரையில் கொண்டுவருகிறது. இது ஒரு உதாரணம்தான். இப்படி பல நிகழ்த்துகைகள் உண்டு என்பது நேயர்களுக்குத் தெரிந்ததே!றெம்பிராண்ட் பிக்காசோ வான் கொக் போன்ற ஓவிய மேதைகளின் படங்கள் சதம் செலவில்லாமல் திரையின் பின்புலமாக சுவர் ஒட்டிகளாகின்றன. இவை அசலைப் போல் மிக நேர்தியாக இல்லைத்தான்.ஆனால் ஏதோ குருவிக்கேற்ற ராமேஸ்வரம். திரை நிறத் துணிப்பு – resolution போதாதுதான். ஆனால் காலாகாலத்தில் இவை சீர் செய்யப் படலாம்.

இப்பொழுதே photoshop போன்ற மென்பொருட்கள் கணினியாளர்கள் கையிலிருந்து மாறி கலைஞர்களைச் சென்றடைந்து விட்டது. உங்கள் படங்களை வான் கொக் பாணி ஓவியமாக மாற்றும் முன்னோடியாக பலவகையில் ஓவியமாக்கும் திறன் இப்பொழுதே வந்துவிட்டது.

இந்த மாதிரி புகழ் பெற்ற ஓவியங்களை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பது மேனாட்டு கலாச்சார மரபு. இதை உற்சாகப் படுத்தவே பல இலவச கலைக்கூடங்கள். இந்தப் பண்பாட்டின் விளைவாக இந்த அசல் ஓவியங்களுக்கு பெருமதிப்பு விலையில் ஏற்படுத்தப் படுகிறது. விலையை நுாறால் வகுத்தால் வரும் தொகைகூட நம்மைக் கிறுங்க வைக்கிறது. டாவின்சியின் மொனாலிஸா என்ற ஓவியத்தை (நீண்ட கியூ வரிசையில் நின்று) நேரில் பார்த்ததில் பெரிதாக ஒரு சிலிர்ப்பும் என்னில் ஏற்படவில்லை என்பதையிட்டு மனவருத்தம்தான்.எனது ரசனையில் ஏதோ குறைபாடு போலும் என்ற உணர்வு. இவற்றில் மிளிரும் படைப்பாற்றல் பற்றி அப்படி அழுத்தம் திருத்தமாக சொல்லப் பட்டிருந்தது. ஆனால் இதைவிட ‘நன்றாக இருந்தன ‘ என நான் நினைத்த வேறு பல ஓவியங்கள் சிற்பங்கள் Q இல்லாமல் பார்க்க முடிந்தது.

எனது ரசனை இன்றுவரை ‘நன்றாக இருந்தன ‘ என்பது போன்ற சில இருமைச் சொற்களுக்குள் (binary words) இன்று வரை அடக்கம். கலைப் படைப்புகள் சரி பாடல்கள் சரி மிகுந்த வெளிக்காட்டுகைக்கு உட்படுத்தப் பட்டால் விளைவு இதுவாகவிருக்கலாம். ஒரு கலைப் படைப்பிற்கு அதன் உள்ளார்ந்த மதிப்பு- intrinsic value என்ற நுட்பமான விஷயம், திரும்பத் திரும்பு விளம்பரம் போல் சொல்லப் படுவதால், எமது எதிர்பார்ப்புகள் அதிகரித்து, அதன் இயல்பான மதிப்பிழந்து விரையமாகி விடுகிறது எனலாம். இந்தச் சோபையிழக்கும் தன்மை எங்கள் பொதுவான ரசனையில் ஏற்படுகிறதா,அல்லது குறிப்பிட்ட அந்த படைப்பு தொடர்பாக மட்டும் எங்களில் ஏற்படுகிதா என்று சொல்வது கயிட்டம். டில்லி போயிருக்கிறேன் ஆனால் தாஜ்மகாலைப் பார்க்க ஆரம்ப முயற்சிகூட செய்யவில்லை. காரணம் இந்த உச்ச வெளிக்காட்டு கைகளினால் (exposure) எனது எதிர்வினை ஏமாற்றமளிப்தாகவிருக்கும் என நினைத்துக் கொண்டதுதான்.

நான் சொல்ல வந்த விஷயத்தை எங்கோ கோட்டைவிடுகிறேன் என மனப் பல்லி

சொல்கிறது. இப்பொழுதெல்லாம் நமது பார்வையில் விழும் ஓவியங்கள் சுவரொட்டிகள் டிவி விளம்பரங்கள் சஞ்சிகைப் படங்கள் என்று கண்ணில் தென்படும் பல வகை பார்வைஉருக்கள் மிகவும் ஒயிலேற்றம் பெற்றவை. உதாரணமாக ஒரு முறை உறிஞ்சி விட்டு விட்டு எறியும் கோக் பியர் கான்களின் மறுசெய்கை நேர்த்தி – repeatability, மற்றும் புதுமெருகு ஆகியவை பிரமிக்க வைக்கின்றன. பிளாத்திக்கும் பற்றறியும் சேர்ந்து உருவாகும் விளையாட்டுப் பொருட்களின் செயல்பாட்டு வீச்சுக்கு முன்னால் வேறு எது எடுபடும். பூவரசம் இலையில் ஊது குழல் செய்து காட்ட முடியுமா ? குரும்பட்டி ஈர்க்கினால் செய்யும் வியைாட்டுத் தேரை இழுக்கத் தோன்றுமா ? இதில் பிழை சரிகளைவிட இப்படியொரு அவதிக்கு ஆளாயிருக்கிறேன் என்பதையே கூறுகிறேன்.

தட்டித் தவறியே அமெச்சூர் தனமான, நளினம் குறைந்த பார்வைஉருக்கள் நமக்குத் தென்படுகின்றன. நமது பார்வை வெளியுலகில் பதியும் பொழுது இப்படியான செலவில்லாத, ஒயிலேற்றம் பெற்ற, பிம்பங்களையே தெரிவு செய்ய பழகி விட்டதா ? இந்த பாகுபடுததும் பார்வை பல ‘தரம் குறைந்த ‘ வற்றை ஒதுக்கி விடுவதினால் எங்கள் பார்வை குறுகி விடுகிறதா ? இந்தச் சூழலுக்கு பழக்கப் பட்டுவிடுவதில் பல எளிமையான இயற்கை இயக்கங்கள் இயல்பான கோலங்கள் எங்களில் பதிவு செய்யப்படாமலேயே நழுவிவிடுகின்றன. எங்கள் சுற்றியுள்ள அண்மையான சூழலில் எங்களால் சாத்தியமாகாத தரத்தில் எல்லாமே அமைந்து வருவதால் இத்தகைய கைவினை வெளிப்பாடுகள் தடைப் படுகின்றன. எங்கள் படைப்பாற்றல்கள் மட்டந் தட்டப்படுகின்றனவா ? ஆலமரத்தின் கீழ் நிற்கும் நிறம் மங்கிய குதிரை வாகனம் போல் மறக்கப்படுகின்றவை பல.

பழைய வீடுகளைப் பார்த்தால் பாவனைத் தேவைகளை மீறிய அவசியமற்ற பல கிறில்கள் நிலத்தில் பல கோலங்கள், கதவு நிலைகளில் சுழிப்பு வேலைப்பாடுகள் என எளிமையான ஒரு பழைய தொழிலாசானுடைய மனசஞ்சாரப்படி பல கூறுகள் தென்படும். இவைக்காக மேலதிக பணமோ அன்றி சொந்தக்காரரின் வற்புறுத்தலோ தேவைப் பட்டிருக்காது.இ தை கலை என்று கூறுவதைவிட நிர்மாணித்தவரின் மன இலக்கணப்படி ஏதோ ஒரு நிறைவு கருதி ஏற்பட்டவை எனலாம். அளவைகளில் ஏற்பட்ட பிழைகளை திருத்தும் முயற்சிகளை பழைய வீடுகளில் பார்க்கும் பொழுது பாந்தமாயிருக்கும். எல்லாமே கன கச்சிதமாக

அனாவசியமான எந்த அம்சமும் இல்லாமல் கைவினைகள் செய்வது ஒரு காலத்தில் சாத்தியமில்லை. இப்பொழுதெல்லாம் அழகு ஊட்டுவதாயின் இந்த இந்த அம்சங்கள் அலங்காரத்திற்காக ஏற்பட்டவை என்று பறைசாற்றும் படியாக அமைந்திருப்பது எரிச்சலுாடடுவதாகக் கூட இருக்கலாம். கைப்பிசகினால் மனசஞ்சாரத்தால் இப்படியாக எதுவும் ஏற்படும் நிகழ் சாத்தியம் குறைந்து வருகிறது எனலாம். இதைப் பற்றி கவலைப் படுவது நியாயமாகாது.

அழகியல்பற்றி நான் பேசவில்லை.சாதாரண ஒயிலற்ற ஒரு மாதிரியான (என்னை வெருட்டாமல்) கொஞ்ச அழகு ஊட்டுதல் பற்றி என்று கூறலாமா ?

இப்போ என்னதான் சொல்ல வருகிறேன் என்பது எனக்கே குழப்பமாயிருக்கிறது. சரி மீண்டும் சறுக்குக் கம்பத்தில் பிறிதொரு முறை ஏறப்பார்க்கிறேன்.எப்போ ? அதாவது – புல் வெட்டத் தேவையில்லாததும், குழாய்கள் சொட்டுப் போடாமலும், படலைப் பிணைச்சல் உறுதியாகவும் அமைந்து (எல்லாமே ஒன்றாக நிகழ்ந்து) வீட்டுத் தொணதொணப்புகளுக்கு பெளதீக காரணமில்லாத ராசியான ஒரு சுப வாரமுடிவில் மீண்டும் கதாப்பிரசங்கத்தை தொடர்கிறேன். பெளதீக காரணங்களற்ற தொணதொணப்புகள் ஏற்படுவது கடவுள் சித்தம்.

Series Navigation

சி குமாரபாரதி

சி குமாரபாரதி