தேவதச்சன் கவிதைகள்

This entry is part [part not set] of 7 in the series 20000917_Issue


நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன்

ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன

சட்டையை தொளதொள வென்றோ

இறுக்கமாகவோ போடுகிறாய்

தலைமுடியை நீளமாகவோ

குறுகவோ தரிக்கிறாய்

உன்னிடமிருந்து பறந்து சென்ற

இருபது வயது என்னும் மயில்

உன்

மகளின் தோள் மீது

தோகை விரித்தாடுவதை

தொலைவிலிருந்து பார்க்கிறாய்

காலியான கிளைகளில்

மெல்ல நிரம்புகின்றன,

அஸ்தமனங்கள்,

சூரியோதயங்கள் மற்றும்

அன்பின் பதட்டம்

*

கைலாசத்தில்

புதரோரம்

ஒட்டாமல் கிடந்த

சிவனின் இடது பாகமும்

பார்வதியின் வலதும்

சரிந்து பூமியில் விழுந்தன

சாமிகளின் உடம்பில்லையா

காலங் காலங் காலமாய்

அழுகிக் கொண்டிருக்கிறது

தம் வீடுகளில்.

*

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை

காற்றில்

அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில்

காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன

வெட்ட வெளியில்

ஆட்டிடையன் ஒருவன்

மேய்த்துக் கொண்டிருக்கிறான்

தூரத்து மேகங்களை

சாலை வாகனங்களை

மற்றும் சில ஆடுகளை.

*

பழத்தை சாப்பிட்டு விடு

நாளைக்கென்றால் அழுகிவிடும்

என்றாள் அம்மா

வாங்கி விண்டு

உண்டேன்

இன்றை.

____________________________________

அத்துவான வேளை தொகுப்பிலிருந்து

வெளியீடு: முகவரி, சென்னை – 59

Series Navigation