பித்தன்
—-
திண்ணை நண்பர்களை சந்தித்து கிட்டதட்ட 2 மாதங்களாகிவிட்டது. கடுமையான வேலை பளுவினால் எதுவும் எழுத நேரம் கிடைக்கவில்லை. அதுவும் முக்கியமான தேர்தல் நேரத்தில் எழுதமுடியாமல் போனது வருத்தமே. கிடைக்கும் கொஞ்ச ஓய்வு நேரத்தில் படிப்பதைமட்டும் விடவில்லை. தேர்தல் பற்றி முன்பும் பின்பும் பல நண்பர்கள் ஆராய்ந்து
எழுதியிருந்தவைகள் அருமை. காலம் கடந்தாலும் பரவாயில்லை என்று என் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.
முடிந்தவரை இந்த தேர்தல் மட்டுமில்லாது பொதுவாக நடப்பவைகளைத் தொட்டு செல்ல எண்ணுகிறேன்.
மதக்கலவரங்களை எதிர்த்து, அமைதியை முன்னிறுத்தி, சோனியாகாந்தி மற்றும் கூட்டணிகளின் பலத்தை மட்டும் நம்பி காங்கிரஸ் ஒரு புறம். தீவிர இந்துத்வத்தையும், மதக்கலவரங்களையும் மறைத்து, ஓட்டுக்காக சாதுபோல முகங்காட்டி, இந்தியா ஒளிர்கிறது என்று பொய்ப்பிரசாரம் செய்து, வாஜ்பாய் அமைதி விரும்பும் தலைவர் என்று முன்னிறுத்தி பி.ஜே.பி மறுபுறம். மதத்தைவிட மனம் பெரியது என்பதாக பெரும்பானமையான மக்கள் நினைத்திருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கிறது. 300 இடங்களை தனித்தே பெற்றுவிடுவோம் என்று இருமாந்திருந்த வெங்காய
நாயுடுவுவின் முகத்தில் மக்கள் கரி பூசியிருக்கிறார்கள். இன்னும் பல குஜராத்துக்களை உருவாக்கவேண்டும் என்று வன்முறைக்கு அடிகோல முயன்ற மூடர்களை, குஜராத்திலேயே அடி கொடுத்து மக்கள் உட்கார வைத்திருப்பது
ஆறுதலான விஷயம். சோனியா என்ற தனிமனிதரைக் கீழ்த்தரமாகத் தாக்கி பேசியதை – தனிமனித தாக்குதல்களை- மக்கள் விரும்பவில்லை என்பதும் நிரூபணமாகியிருக்கிறது. தீவிர இந்துத்வ வெறியரான ஜோஷி தோற்றது மகிழ்ச்சி. அத்வானி போன்ற மற்ற தீவிரர்களும் தோற்றிருந்தால் அமைதி விரும்பும் மக்களுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர் பிரதமராவார், இவர் ஆவார் என்று ஆரூடம் கூறிய சோதிட மன்னர்களின் முகங்களைக் காணவில்லை.
தேர்தல் நேரம் மட்டுமல்லாது மற்ற நேரங்களிலும் எழும் கோஷங்களை, தனிமனித சாடல்களைச் சற்று விரிவாகப்
பார்ப்போம். முடிந்து போன தேர்தல் மட்டுமல்லாது, இனி வரும் தேர்தல்களிலும், ஏன் சாதாரண காலங்களிலும் கூட இந்த கோஷங்கள் எழுப்பப் படுவதால் இவற்றைப் பார்ப்பது அவசியமாகிறது. ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி மற்றும் சங் பரிவாரக் கும்பல்களின் முக்கிய முதல் கோஷம், சோனியா வெளிநாட்டவர் என்றும் அதனால் அவருக்கு நாட்டுப்பற்று இருக்காது(!) என்பது. இந்தியர் என்பதும், நாட்டுப்பற்றும், உணர்வு சம்பந்தபட்டது, பிறப்பு சம்பந்தபட்டதல்ல என்ற அடிப்படைகூட இந்த அறிவிலிக் கூட்டத்துக்குப் புரியவில்லை. எட்டப்பன் கூட இந்தியாவில் பிறந்தவன் தான். அவன் இந்தியன் என்று சொல்லிக்கொள்ளவதில் யாருக்கு என்ன பெருமை ? இந்தியாவில் பிறந்து, 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் இருந்து, அது கொடுத்த உணவையே உண்டு, இந்திய இரகசியங்களை அமெரிக்காவிற்கு கொடுத்து வந்திருக்கும் கயவன் ரவீந்தர் சிங், இவனை இந்தியாவில் பிறந்தவன் என்பதால் பிரதமாராக்கிவிடலாமா ? இந்தியாவில்
பிறந்ததால் இவனுக்கு நாட்டுப்பற்று வந்துவிடவில்லை. அமெரிக்கனாகத் தான் இருந்திருக்கிறான். சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே ஆங்கிலேயர்களிடம் வேலைப் பார்த்த எண்ணற்ற ‘இந்தியர்களை ‘ தேசப்பற்று இல்லாதவர்கள் என்று ஒதுக்கிவிட வேண்டுமா ? உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பதை பிறப்பு நிர்ணயிப்பதில்லை, அவர்களின் நடத்தைதான் நிர்ணயிக்கிறது. அதுபோலத்தான் இந்த உணர்வுகளும். எங்கு பிறந்திருந்தாலும், இந்தியர் என்ற உணர்வும், இந்தியர்களுக்காக உழைக்கும் எண்ணமும் இருந்தால் அவர்கள் இந்தியர்களே. அடுத்ததாக இவர்கள் கேட்பது, இவ்வளவு இந்தியரில் இந்தியாவை ஆள ஒரு இந்தியர் கூட இல்லையா ? என்பது. இவர்கள் எல்லாவற்றிலும் இப்படிக் கேட்டால் பரவாயில்லை. ஏன் தொழுநோயாளிகளைத் தொட்டுத் தூக்கி, முதியவர்களைக் காப்பாற்ற இந்தியர்கள் இல்லையா என்று இந்த ‘இந்தியர்கள் ‘ கேட்டுவிட மாட்டார்கள். அதற்கு மட்டும் வெளிநாட்டிலிருந்து ஒரு அன்னை தெரசா வேண்டும். ஆனால் ஆட்சி, அதிகாரங்களைப் பிடித்து ஊழல் செய்வதற்கு மட்டும் இவர்கள் தான் வேண்டுமாம். அடடா என்னே நாட்டுப்பற்று ?! சுஷ்மா சுவராஜ்களும், உமா பாரதிகளும் போய் இந்த தொண்டுகளை செய்யவேண்டியது தானே.
உடல் முழுதும் தொழுநோய்ப் புண்களால் அவதிப்படும் இந்தியரைத் தொட்டு, துடைத்து, மருந்திட்டு, ஆதரவற்ற இந்திய குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அரவணைத்து, கல்வி புகட்டி, உணவளிக்கும் தெரசாக்கள் இந்தியர்கள் இல்லையாம், சக மனிதனைப் பார்த்து தொடாதே, தொட்டால் தீட்டு ஒட்டிக்கொள்ளும் என்று கூறும் சங்கராச்சாரிகளும் சங்பரிவாரக் கும்பல்களும், மற்ற சாதி மத வெறியர்களும்தான் இந்தியர்களாம். வெட்கக்கேடு. மனதாலும், உணர்ச்சியாலும்,
மனிதாபிமானத்தாலும் இந்தியர்களாய், இந்தியர்களுக்குத் தொண்டு புரியும், சகோதர சகோதரிகளும், அன்னைகளும், நண்பர்களும் எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் இந்தியர்கள் தான். அப்படி சொல்வது நமக்குப் பெருமையே.
இந்தியாவிலேயே பிறந்திருந்தாலும், ஆட்சிக்கும், அதிகாரங்களுக்கும் மட்டும் ஆசைப்படும், சாதி-மத வெறியர்களையும், இந்தியாவை அந்நியர்களுக்குக் காட்டிக்கொடுக்கும் கயவர்களையும் ஊழல்வாதிகளையும் (ஆவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும்) இந்தியர்கள் என்று அழைப்பது இந்தியாவிற்கே அவமானம்.
அடுத்து இவர்கள் கூறும் உதாரணம், அமெரிக்கா போன்ற நாடுகளில், அங்கே பிறக்காதவர்கள் தலைமைப் பதவிக்கு வரமுடியாது என்பது. எதற்கு உதாரணம் காட்டினாலும், இதற்கு அமெரிக்காவை உதாரணம் காட்டுவது. சைத்தான் ஓதும் வேதம் போன்றது. அமெரிக்கா என்பதே வந்தேறிகளின் நாடு. மண்ணின் மைந்தர்களாகிய ‘(சிவப்பு)இந்தியர்களை ‘ அடக்கி, ஒரு அங்கீகாரமும் தராமல், ஆயுத பலத்தால் வெளி நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள்தான் இதுவரை ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி பதவி அமெரிக்கர்களுக்குத் தான் என்று சொல்லும் தார்மீக உரிமை வாஷிங்டன் முதல் இப்போதிருக்கும் புஷ் வரை எந்த ஜனாதிபதிக்கும் இல்லை என்பதுதான் உண்மை.
நாடு, நாட்டுப்பற்று என்பதெல்லாம் சுயநலக் கருத்துக்கள். தங்கள் வசிக்கும் நாட்டிலுள்ள வளங்களை பாதுகாக்கவும், மற்றவர்கள் பகிர்ந்துகொள்வதைத் தடுக்கவுமே, நாடுகளும் எல்லைகளும் ஏற்பட்டுள்ளன. நாட்டுப்பற்று என்பது அதை
நியாயப்படுத்த மக்களைத் தூண்டும் சுயநல கோட்பாடு. கதை போல தெரிந்தாலும் சிந்தித்துப் பார்த்தால் உண்மை புலப்படும். அப்போது மன்னர்கள் காலத்தில் தஞ்சாவூர்க்காரர்களும், மதுரைக்காரர்களும் (சோழ, பாண்டிய) நாட்டுப்பற்று என்ற பெயரில் சண்டையிட்டுக்கொண்டார்கள். மன்னர்களின் சுயநலத்தை மறைக்க நாட்டுப்பற்று(!) ஊட்டப்பட்டது. இப்போது இந்தியாவில் அவர்கள் இணைந்து நாட்டுப்பற்றுடன் மற்ற நாட்டுக்காரர்களை எதிர்க்கிறார்கள். அப்போது, இந்தியர்கள் ஒன்றாக நாட்டுப்பற்றுடன் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்கள். அவர்களே சுதந்திரத்திற்குப்பின், பாகிஸ்தானியர்களாகவும், இந்தியர்களாகவும், பங்களாதேஷ் காரர்களாகவும் ஒருவருகொருவர் நாட்டுப்பற்றுடன் அடித்துக்கொள்கிறார்கள்! எனவே நாட்டுப்பற்று என்று நமக்கு கற்பிக்கப்பட்டது இன்னும் அந்த அர்த்தத்திலேயே இருக்கிறதா என்று கேள்வி கேட்கவேண்டியவர்களாகிறோம். நாட்டுப்பற்று என்பதை எப்படி மதிப்பீடு செய்வது என்றும் நாம் சற்று சிந்திக்க வேண்டியவர்களாகிறோம்! என்னடா இப்படி சொல்கிறானே நாட்டுப்பற்றுத் தேவையே இல்லையா என்றால்,
நடைமுறையில் அப்படி ஒதுக்கிவிடுவதற்கும் இல்லை! நாம் அமைதி விரும்பியாக பொதுநலம் விரும்பியாகவே இருக்கிறோம். ஆனால் அண்டை நாடுகள் அப்படி இல்லாமல் சண்டைக்கு வருகிறார்கள். அப்போதும் நாட்டுப்பற்று இல்லாமலிருக்க முடியுமா ? நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும் காக்க நாட்டுப்பற்றுடன் நாம் போராடித்தான் ஆகவேண்டும். எனவே நாட்டுப்பற்று என்று நாம் பார்ப்பதை பகுக்கவேண்டியுள்ளது. அதாவது, சுதந்திர போராட்டக் காலங்களிலும்,
போர்க்காலங்களிலும் உள்ள நாட்டுப்பற்றுக்கும், சாதாரண காலங்களில் உள்ள நாட்டுப்பற்றுக்கும் வீரியத்திலுள்ள
வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. அரசியல்
லாபங்களுக்காகவும், தங்கள் சுயநலங்களுக்காகவும், ஒன்றை மற்றொன்றோடு ஒப்பிட்டு மக்களை குழப்பக்கூடாது. தேர்தல் காலத்தில் மட்டும் தலைவர்கள் விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்வார்கள்; மற்ற நாட்களில் சில கூட்டங்கள், சில பேட்டிகள் என்று அடக்கி வாசிப்பார்கள். அதுபோல நாட்டுப்பற்று வீரியத்துடன் தேவைபடும்போது உபயோகித்தால்
போதுமானது. மற்ற நேரங்களில் மனதில் இருந்தால் போதும். கார்கில்லையும் கிரிக்கெட் ஆட்டங்களையும் ஒரே
நோக்கில் (பால் தாக்ரே, சிவசேனா, சங் பரிவார அறிவிலிகள் போலப்) பார்க்கக் கூடாது.
‘இந்தியனாய் இரு; இந்திய பொருள்களையே வாங்கு ‘ (Be Indian; Buy Indian) என்ற கோஷத்தை, நாட்டுப் பற்று ஊட்டுவதற்காக சுதந்திரப் போராட்டக் காலங்களில் எழுப்பினோம். அப்படி இருந்தால் அது பெருமையே ஆனால் அதையே இப்பொது சாதாரண காலங்களிலும் எழுப்புவதில் அர்த்தமில்லை. தேவையுமில்லை. அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்துவிட்டது. நாடுகளுக்கிடையேயான தூரம் குறைந்துவிட்டது. மற்ற நாட்டுப் பொருள்கள் இங்குவருவதும், அதை மக்கள் வாங்குவதும், பொருளீட்டுவதற்காக மற்ற நாடுகளுக்குப் போவதும் சாதாரணமாகிவிட்டது. அதையெல்லாம் நாட்டுப்பற்றோடு சம்பந்த படுத்தக்கூடாது. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு ‘ என்று சொன்ன நம் முன்னோர்கள்
நாட்டுப்பற்றில்லாதவர்களல்ல. இந்தியாவிலேயே இருப்பவர்களுக்கு அதிக நாட்டுப்பற்று என்றும், திரவியம் தேட
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு குறைவு என்பது போன்ற ஒரு எண்ணம் (வாய்ப்புக் கிடைக்காமல்)
இந்தியாவிலேயே இருப்பவர்களுக்கு இருக்கிறது. இது தவறான கருத்து. அந்நிய செலவாணி மிக முக்கியம் என்பது மட்டுமல்ல, கார்கில் மற்றும் குஜராத் பூகம்ப நிவாரண நிதிகளில் பெருமளவு அயல்நாடு வாழ் இந்தியர்கள் கொடுத்தது என்பதையும் கவனிக்கவேண்டும். எங்கு வாழ்கிறோம் என்பதைவிட என்ன நினைக்கிறோம் என்பதே முக்கியம். எனவே
சாதாரணக் காலங்களில் ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர் ‘ என்பதே நன்று.
அடுத்து இவர்கள் எழுப்பும் கிறுக்குத்தனமான வாதம். சோனியா இந்தியா வந்து சில வருடம் கழித்துதான் குடியுரிமை வாங்கினார் என்பது! குடியுரிமை என்பது என்ன கத்திரிக்காய் வியாபாரமா ? காசு கொடுத்த உடனே கத்திரிக்காய் வேண்டும் என்பது போல, இந்தியா வந்த உடனே குடியுரிமை வாங்கிவிட வேண்டும் என்பதற்கு. உலகிலுள்ள அனேக நாடுகளில் குடியுரிமை உடனே வழங்கப்படுவதில்லை. (சில விதி விலக்குகளைத்தவிர). அங்கு குடியேறவேண்டும், பின்
சில வருடங்களுக்குப் பிறகுதான் நீங்கள் குடியுரிமைக்கு மனுவே செய்யமுடியும். குடியுரிமைகளின் எண்ணிக்கையைக் குறைக்க மட்டுமல்ல, அவர்கள் அந்த மொழி, கலாச்சாரங்களோடு ஒன்றவும் அவகாசம் தேவை என்பதால் தான் அப்படி. இப்போது புலம்பும் அரவிந்தன்களும், ராஜேஷ்களும் வேலை காரணமாக, பீகாருக்கோ, அஸ்ஸாமுக்கோ குடி போகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் மறு நாளே, வாயில் ஜர்தா போட்டுக்கொண்டு, பீகாரியாக மாறிவிடுவார்களா ? அப்படியே அவர்கள் நடித்தாலும், அவர்கள் உடனே பீகாரியாக ஏற்றுக்கொள்ளப் படுவார்களா ? நிச்சயமாக இல்லை. ஒரே நாட்டில் கிட்டதட்ட ஒரே கலாச்சாரத்தில் இருப்பவர்களுக்கே சில வருட அவகாசம் தேவைப்படுகிறது. வேறு நாட்டிலிருந்து அதுவும் உடை, உணவு, மொழி, கலாச்சாரம் என்று அனைத்திலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு தேசத்திலிருந்து கணவருக்காக வந்த ஒரு பெண்மணியை, பலதரப் பட்ட மொழிகளும், உணவும், உடைகளும், மக்களும் உள்ள சிக்கலான சமூக அமைப்புடைய ஒரு நாட்டிற்கு வந்தவுடனேயே அவர் அந்நாட்டிம் பிரஜையாகிவிட வேண்டுமென எதிர்பார்ப்பதைவிட முட்டாள்தனம் வேறெதுவுமிருக்க முடியாது. சட்டத்திற்காக உடனே பெயரளவில் பிரஜையாகிவிடாமல், உணவு, உடை, மொழி என்று அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக பழகிக்கொண்டு, உணர்வாலும் ஒரு இந்தியப் பெண்மணி எப்படி இருப்பார் என்று அறிந்து பின்னர் பிரஜையாகி ஒரு முழு இந்தியராகவே தோன்றும் சோனியா காந்தி செய்தது சரியே. இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் இந்தியா வந்து கிட்டதட்ட 30 வருடங்களுக்கு
பிறகு, அவர் இரண்டு இந்தியர்களைப் பெற்று வளர்த்து, பேரன் பேத்தி பெற்றபின்பும் வந்து உப்பு சப்பில்லாத இந்த
விவகாரத்தை எடுக்கிறார்கள். சோனியாகாந்தி என்ற தனி நபரின் புகழையும், பெருமைகளையும், பலத்தையும் கண்டு பயந்து தொடை நடுங்கி இவர்கள் கத்தும் கத்தல் என்பதைத் தவிர அதில் வேறெதுவுமில்லை. ராகுல் காந்தியோ, பிரியங்காவோ தலைமையேற்றுவிட்டால் என்ன செய்வது என்று பயந்து, இந்தியாவில் பிறந்திருந்தாலும், பெற்றோரும் இந்தியர்களாக இருக்கவேண்டும் என்று வேறு அவ்வப்போது கிளப்பிவிடுவார்கள் இந்த ‘தைரியசாலிகள் ‘.
பகத் சிங் போன்றோர்கள் இதற்குத் தான் போராடி உயிர் விட்டார்களா ? என்று இந்த ஆர்.எஸ்.எஸ், காரர்கள் கேட்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்-ஸிற்கும் பகத் சிங்கிற்கும் என்ன சம்பந்தம் ? எதற்கெடுத்தாலும், பகத் சிங், வாஞ்சிநாதன் என்று
நாட்டுப்பற்றுடன் போராடியவர்களின் பெயர்களைச்சொல்லி தாம் நாட்டுப்பற்றுள்ளவர்கள் என்று நிலை நிறுத்தும் தந்திரம்.
பகத் சிங் ‘இதற்குத்தான் போராடினேன் ‘ என்று இவர்களிடம் மட்டும் சொல்லியிருப்பார் போல இருக்கிறது! அன்றைய கால கட்டத்தையும் இன்றைய காலக் கட்டத்தையும் ஒப்பிடுவதே தவறு. மக்கள் தங்களுக்குத் தேவையானதை தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை, சுதந்திரம் பெற வேண்டும் என்று தான் பகத் சிங்குகள் போராடினார்கள்.
அப்போது ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டுக் கிடந்தோம். நம் உரிமைகள் நம்மிடம் இல்லை. இப்போது நம் உரிமைகள் நம்மிடமே இருக்கின்றன. ஊழல் வாதிகளையும், சுயநல வாதிகளையும், மதக் கலவரங்களுக்கு வித்திடுபவர்களையும் விட வேற்று நாட்டில் பிறந்திருந்தாலும் இந்தியரை மணந்து, இந்தியாராய் இந்தியாவிலிருக்கும் ஒரு இந்தியரை, ‘மக்களே சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்தால் ‘ அதில் என்ன தவறு. மக்களே தேர்ந்தெடுக்கும் போது அது எப்படி அடிமைத் தனமாகும் ?. பகத் சிங் இப்போது இருந்திருந்தால் இதை ஒத்துக்கொள்வதோடு, அவரே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்திருப்பார். தேர்தல் முடிவுகளுக்குப் பின்னும் சோனியா காந்தியை பதவி ஏற்க விடமாட்டோம் என்று
போராடிய பி.ஜே.பி., சங்பர்வாரக்கும்பல்கள், ஓட்டளித்த மக்களின் சுதந்திரத்தையே தடுக்க முற்பட்டுவிட்டார்கள் என்று
தான் அர்த்தம். [இவர்கள்தான் சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள்!] அதுமட்டுமல்ல, அரசியல் அமைப்பு/சட்டப் படியும்
சோனியா காந்திக்கு பிரதமராக முழு உரிமையும் இருக்கிறது. அதை தடுத்ததன் மூலம், அரசியலமைப்பையும் கேலிக்குரியதாக்கிவிட்டார்கள். அரசியல் அமைப்பில் தவறு இருக்கலாம். அதைப் பற்றி கருத்தும் கூறலாம். ஆனால், தவறு என்று ஒத்துக்கொள்ளப்பட்டு, வேறு புதிய சட்டங்கள் இயற்றப்படும் வரை, அதற்கு மதிப்பளிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. அதுவும் ஆட்சிப் பீடத்திலும், பாராளுமன்றத்திலும் இருந்தவர்கள் அரசியலமைப்பைக் கேலிகுறியதாக ஆக்கியது அவர்களின் அப்பட்ட அதிகார ஆசையையும், இந்தியா மற்றும் இந்திய அரசியலைப்பின் மேல் அவர்களுக்கு இருக்கும் உண்மையான ‘பக்தியையும் ‘ (அதாவது பக்தியில்லாததையும்) வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.
அடுத்து ‘வாரிசு அரசியல் ‘ கோஷம். மத்தியில் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களிலும் வாரிசு அரசியலும், வாத, பிரதி
வாதங்களும் கேட்பதால் இதை சற்று விரிவாகப் பார்ப்போம். பிரியங்கா காந்தியிடம் ஒரு நிருபர் கேட்கிறார், ‘காங்கிரஸில் வாரிசு அரசியல் நடைபெறுகிறதே ? ‘ என்று, அதற்கு அவர் பதில் சொல்கிறார், ‘தேர்தலில் போட்டியிட்டு, மக்கள் வாக்குடன், வெற்றி பெற்ந்தானே வருகிறோம், பின் ஏன் அப்படி சொல்கிறீர்கள் ? ‘. இதில் பெருமளவு உண்மை இருக்கிறது. அதாவது அவர் குறிப்பிடுவது, பிரதமர் போன்ற பதவிக்கு. ஆனால் கட்சிகளின் தலைமைக்கு அவ்வாறு தேர்தல்
நடக்கிறதா என்பதே உண்மையான கேள்வியாக இருக்கவேண்டும். உண்மையில் ஒரு கட்சியைப் பார்த்து மற்றக் கட்சிக் காரர்கள் ‘வாரிசு அரசியல் நடக்கிறது ‘ என்று குறை கூறுவதில் அர்த்தமேயில்லை. ஏனெனில், இந்தியாவில் எந்த கட்சியும் உண்மையான ஜனநாயகக் கட்சி இல்லை என்பதுதான் நிதர்சனம். உட்கட்சி தேர்தல் வைத்து எந்த கட்சியும் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. ஆர்.எஸ்.எஸ், கை காட்டுபவர் தான் பி.ஜே.பி, சங்பரிவாரக் கட்சிகளின் தலைவர்கள். சோனியாவிற்குப் பின் ராகுலோ, பிரியங்காவோ, கலைஞருக்குப் பின் ஸ்டாலின் என்பதாகத் தான் இருக்கிறது. இதில் ஒரு கட்சி மற்றதைப் பற்றி குறை கூற என்ன முகாந்திரம் உள்ளது ? உண்மையில் இவைகளெல்லாம் உட்கட்சிப் பிரச்சனைகள். இதில் மற்றக் கட்சிகள் தலையிடுவது தேவையில்லாதது. [இங்கே நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடலைக் குறிப்பிடலாம். நண்பர் கோவை காரர். கோவை குண்டு வெடிப்பிற்குப் பிறகு, மஞ்சள் பூசி மந்திரித்து விட்ட ஆடுகள் போல திரியும், பிஜேபி அனுதாபங்கொண்ட – வேற்று மத காழ்ப்புணர்ச்சியுடன் திரியும் பலியாடுகளில் அவரும் ஒருவர். சோ-வின் துக்ளக் பற்றி பேச்சு. நண்பர், ‘துக்ளக் படிப்பேளா ? அருமையா இருக்குண்ணா. ‘ நான், ‘படிக்க நல்லாதான் இருக்கும், ஆனா அவ்வளவும் விஷம்ணா. ஒரு சார்பு நிலைப் பத்திரிக்கை. மண்டல் கமிஷன் அமுல் படுத்தியதற்காக ஒரு பெரிய தலைவரை, நாட்டின் பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்களைப் பற்றி கீழ்த்தரமாக எழுதியிருக்காண்ணா ‘. ந, ‘ஜனதா தளத்தில் சீனியர்கள் இருக்கும் போது, தந்திரமாக பிரதமரானவர் வி.பி.சிங், அதானால் சோ-விற்கு பிடிக்காதண்ணா. அதனாலதான் அப்படி. ‘ நா, ‘அது ஜனதா தளின் உட்கட்சி பிரச்சனை-ணா அதில் சோ-விற்கு என்ன வந்துச்சு ? மண்டல் கமிஷனால தான் அப்படி எழுதிருக்கா ‘. இப்படியே போயிற்று. அந்த உரையாடல் பற்றி விரிவாக இன்னொரு நாள்].
சரி இதற்கெல்லாம் என்ன காரணம். இதை தடுக்க என்ன செய்ய ? இதற்கெல்லாம் மூல காரணம், நம் அரசியல் வாதிகள் எல்லாம் முதுகெலும்பில்லாதவர்களாக இருப்பதுதான். எல்லாக் கட்சிகளும் தலைவர்களையே சார்ந்திருப்பது தான் காரணம். திமுக கலைஞரை நம்பியே இருக்கிறது. அதிமுக ஜெயலலிதாவை நம்பியே இருக்கிறது. காங்கிரஸ் சோனியாவை (பின் பிரியங்கா மற்றும் ராகுலையும்) நம்பியே உள்ளது. பிஜேபி, வாஜ்பாய் மற்றும் அத்வானியை நம்பியே உள்ளது.
இந்தக் கட்சிகளில் உள்ளவர்கள் அனைவரும் தலைவர்களின் துதிபாடியே, அவர்கள் புகழை நம்பியே காலந்தள்ள வேண்டியுள்ளது. மாறனுக்கு எம்.பி சீட் கொடுத்ததை எதிர்த்து ஒரு பேராசிரியரோ, ஆற்காட்டாரோ குரல் கொடுப்பதில்லை. ஒரு தகுதியும் இல்லாத அன்புமணிக்கு அமைச்சர் பதவி வாங்கி கொடுத்ததை எதிர்த்து காடுவெட்டியோ மாடுவெட்டியோ குரல் கொடுக்க முடியாது. ஏனென்றால் இவர்களெல்லாம் அந்த தலைவர்களை நம்பியே பிழைப்பு
நடத்துபவர்கள். எதிர்த்துக் குரல் கொடுத்து வெளியேறிய ஆர்.எம்.வி-க்களின், கண்ணப்பன்களின் நிலையோ பரிதாபத்திலும் பரிதாபமாக உள்ளது. அது மற்றவர்களையும் யோசிக்க வைக்கிறது. எதிர்த்து வெளியேறி, கட்சி ஆரம்பித்து ஓரளவிற்காவது வெற்றி பெற்ற வை.கோ, சரத்பவார் போன்றோர்களின் கட்சிகளிலும், முறையாகத் தேர்தல் நடத்தி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். தங்கள் கட்சியிலுள்ள கோழைகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பதால், இந்த தலைவர்களும் அதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். மாறன் துடிப்பான இளைஞர் என்பதிலோ, அவரின் தகுதியையோ நாம் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை. ஆனால் கட்சிக்காக பல வருடங்கள் உழைத்த எத்தனையோ பேர் இருக்க, அவருக்கு எம்.பி. சீட் கொடுக்கப்பட்டதே தவறு. காபினட் மந்திரி பதவி அதைவிட பெரிய தவறு. இவருக்காவது தேர்தலை சந்தித்து பெற்றார் என்றாவது கூறலாம். ராமதாஸ் இன்னொரு படி மேலே போய் தேர்தலையும் சந்திக்காமல் தன் மகனுக்கு காபினட் மந்திரி பதவி வாங்கி கொடுத்துள்ளார். இவைகளெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். மக்களால் வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டியது. தீர்வு மக்கள் கையிலேயே இருக்கிறது. தகுதியில்லாத வாரிசுகள் தேர்தலில் நின்றால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அவர்களை தோற்கடிக்க வேண்டும். புற வாசல் வழியாக பதவி பிடிப்பவர்களின் கட்சிகளை அடுத்த தேர்தலில் ஒரு ‘கவனிப்பு ‘ கவனிக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் அந்தக் கட்சிகளை மட்டும் மக்கள் குறை சொல்வதிலோ, தங்கள் கட்சியின் ஜனநாயகமின்மையை மறைத்து/மறந்து அடுத்தக் கட்சியை தூற்றுவதிலோ ஒரு பயனும் இல்லை.
கடைசியாக சோனியா காந்தி பிரதமர் பதவி ஏற்காதது ஒன்றும் பெரிய தியாகமில்லை என்று எதிர்க் கட்சிகள் கூறுகின்றன. தியாகமில்லாவிட்டாலும் கூட அது ஒரு மிகப்பெரிய பெருந்தன்மையான செய்கை என்பதில் சந்தேகமில்லை.
அதிகமாக ஒரு வாரம் பிரதமர் பதவியிலிருப்பதற்காக மாநில ஆட்சிகளைக் கவிழ்த்த சந்திரசேகர்களை விட பெருந்தன்மையான செயலே. பிடிவாதமும் அகம்பாவமும் கொண்ட உமாபாரதிகளும், ஜேயலலிதாக்களும் அந்த நிலையில் இருந்திருந்தால் யாரைப் பற்றியும் கவலைப் படாமல் பதவியில் உட்கார்ந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் குடும்பத்தார் வேண்டாமென்று சொன்னதாக கூறப்பட்ட செய்திகளையும் நாம் ஒதுக்கிவிட முடியாது. தேசத்துக்காகப் போராடிய காந்தியையே கொல்லத் துணிந்தவர்களுக்கு சோனியா எம்மாத்திரம் ?
திண்ணைப் பக்கங்களில் காந்திஜியின் கொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்-ற்கும் சமபந்தமில்லை என்று சொல்லிக்
கொண்டிருக்கிறார்கள். ஒருவர் வழக்கம்போல அவர் சொன்னார், இவர் சொன்னார், மொரார்ஜி தேசாயும் அவர் அப்பாவும் சேர்ந்து வந்து பாராளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார்கள் ‘ஆர்.எஸ்.எஸ்-ற்கு சம்பந்தமில்லை என்று ‘ என்கிறார்!
கூடவே இருந்த கொலைகாரனின் அண்ணன், அவன் கடைசி வரை ஆர்.எஸ்.எஸ்-ல் தான் இருந்தான் என்கிறார். அதை ஒத்துக்கொள்ள மாட்டார்களாம். சில அரசியல்வாதிகள், ஏதோ அரசியல் காரணங்களுக்காக சொன்னதை மட்டும் ஒத்துக்கொள்வார்களாம். இன்னொருவர் அதைவிட புத்திசாலித்தனமாக ஆர்.எஸ்.எஸ்-கு முன்னர் கொலைகாரன் காங்கிரஸில் இருந்திருக்கிறான், எனவே காங்கிரஸ்தான் காரணம் என்று சொல்லலாமா ? என்று கேட்கிறார். அதற்கும் முன்னர் ஆரம்ப பள்ளியில் இருந்தான், அந்த ஆசிரியர்கள் சொல்லித்தான் கொலை செய்திருக்கிறான். எனவே அந்த ஆசிரியர்களைத் தான் கைது செய்யவேண்டும் என்று சொல்லாமல் போனார்களே! ஆர்.எஸ்.எஸ்-ற்கும் காந்தி கொலைக்கும் சம்பந்தமில்லை என்று சொல்வது, கென்னடி கொலைக்கும் அமெரிக்கர்களுக்கும் சம்பந்தமில்லை, கோவை குண்டுவெடிப்பு மற்றும் இந்தியாவில் நடக்கும் தீவிரவாத செய்கைகளுக்கும் இந்திய முஸ்லீம்களில் யாருக்குமே சம்பந்தமில்லை என்று சொல்வதைப் போல முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற செய்கையாகும்.
ஆர்.எஸ்.எஸ் பற்றி சோ-விடம் கேட்கப் பட்டதற்கு என்று ஆரம்பிக்கும் போதே அந்த கடிதத்தில் புளுகுகளைத்தவிர படிப்பதற்கு ஒன்றுமில்லை என்பது தெளிவாகிவிட்டது. அரசியலில் எப்படி சுப்ரமணிய சாமி கோமாளியாகக் கருதப் படுகிறாரோ அப்படி பத்திரிக்கை உலகின் கோமாளிதான் சோ. தன் புத்திசாலித் தனத்தை மட்டமான காரணாங்களுக்காக பயன்படுத்துபவர். உச்ச சாதி வெறி பிடித்தவர்; சங்கராச்சாரிகளே தோற்றுவிடுவார்கள். மதவெறியோ அதற்கும் மேலே; சங்பரிவாரங்களுக்கே தலைவராகப் போடலாம்! அவரிடம் போய் ஆர்.எஸ்.எஸ் பற்றி கேட்டால், அவர் வேறு எப்படி
சொல்வார் ? இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே அந்த இயக்கம் தான் தாங்குகிறது என்று கூட சொல்வார். கிராமப் புற வெகுளி இளைஞர்களிடம் போய், பிற மத துவேசத்தைத் தூண்டி ஆர்.எஸ்.எஸ்-ற்கு ஆள்பிடிப்பதைப் போல இங்கு வந்து ஆர்.எஸ்.எஸ், சாவர்க்கர் என்று கதையளந்து கொண்டிருக்கிறார்கள். தெகல்கா-க்களும், rediff-களும் கடித ஆதாரங்களுடன் சாவர்க்கர்கள் பற்றியும், வாஜ்பாயிகள் பற்றியும் புட்டு புட்டு வைத்துவிட்டதற்குப் பிறகும் இணையதள உலகில் வந்து ‘சாவர்க்கர் வானத்தை வில்லாய் வலைத்தார், மலையப் புடுங்கி -யிறாகத் திரித்தார் ‘ என்று சொல்பவர்களை என்ன சொல்ல ? இன்னொருவர் பாய்ந்து வந்து, ‘சாவர்க்கர் எப்படி வீரமாக கப்பலில் இருந்து தப்பித்தார் தெரியுமா ‘ என்று சொல்கிறார், எதற்காக கப்பலில் கொண்டுவந்தார்கள் என்பதை கவனமாக சொல்லாமல் விட்டுவிட்டு. தப்பியோடிய கொலைகாரன், அவனைப் பிடித்து அந்தமான் சிறையில் போட்டிருக்கிறார்கள். அந்தமான் சிறையில் இருந்த ஒரே
காரணத்துக்காக (அதுவும் ஆங்கில வார்டன்களிடம் கஷ்டப்படாமலிருக்க கெஞ்சி கூத்தாடியவரை) ‘வீர ‘ பட்டம்
போட்டு அழைப்பது உண்மையான வீரர்களை அசிங்கப் படுத்துவது போன்றதாகும். ஒரு கொலைகாரனின் படத்தை பாராளுமன்றத்தில் மாட்டி இந்தியாவையே கேவலப் படுத்திவிட்டார்கள். ‘வீர சவர்க்கர், வீரத் துறவி ராமகோபாலன் ‘ என்று அவர்களாக போட்டுக்கொள்கிறார்கள். என்ன வீரமாக செய்துவிட்டார்கள் ? வாய் கிழிய பேசுவதைத் தவிர வேறு என்ன வீரமாக செய்துவிட்டார் ராமகோபாலன் ? வீரமும் இல்லை. துறவியும் இல்லை. அப்புறம் எப்படி வீரத் துறவியானார் ?
துறவி என்பவன் ஆணவம் அழிந்தவன், ஆசைகளை அறுத்தவன், பற்றில்லாதவன். இவர்களுக்கு இருக்கும் ஆணவத்திற்கும், அதிகார ஆசைகளுக்கும், ராமகோபால்களையும், சங்கராச்சாரிகளையும் துறவிகள் என்று அழைப்பது கேலிக்குரியது.
(கல்யாணம் செய்துகொள்ளாதவர்களெல்லாம் துறவிகள் இல்லை, பிரம்மச்சாரிகள் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்).
இந்தியாவிலேயே முதலில் தடை செய்யப் படவேண்டிய இயக்கம், ஆர்.எஸ்.எஸ். தான். காந்திஜியின் கொலைக்குப் பின் அப்போதே தடை செய்யப்பட்டிருக்கவேண்டும். எப்படியோ அரசியல்வாதிகளை சரிகட்டி வந்திருக்கிறார்கள். இப்போதிருப்பவர்கள் கூட ஏனோ இதை சொல்லத் தயங்குகிறார்கள். தமுமுக தடை செய்யப் படவேண்டிய இயக்கமெனில் அதே காரணங்களுக்காக, ஏன் அதைவிட அதிகமான காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ்-ம் தடை செய்யப் படவேண்டிய இயக்கமே. ஒரு வினை இருக்குமிடத்தில் அதற்கு சமமான எதிர்வினை இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
தமுமுக-வை மட்டும் தடை செய்வது ஒரு வினையை மட்டும் தடை செய்வது போன்றது. ஆர்.எஸ்.எஸ்-ற்கு நாட்டுப்பற்று இருக்கிறது என்பதற்காக அவர்கள் செய்திருப்பதாகக் கூறும் செய்கைகள் சாதாரணமாக கல்லூரிகளில் NSS, NCC மாணவர்கள் செய்யக்கூடியது. அதோடு இருந்தால் மட்டும் பரவாயில்லை. மற்ற சாதி, மத துவேஷங்களை ஏற்படுத்தும் பிரிவினைவாத இயக்கமாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் பாடப்படும் பாடல் ஒன்றை திரு.அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிட்டிருந்தார். அந்த பாடலிற்கு சில கேள்விகளை எழுப்பியிருந்தேன். அது,
[ ‘சம்மந்தமில்லாமல் ஆர்.எஸ்.எஸ் பாட்டு ஒன்றை சொல்லியிருக்கிறார். எதற்கென்று புரிபடவில்லை. இந்தியா ஒன்று என்று சொல்ல இந்த பாடல் எதுவும் தேவையில்லாமலிருக்கிறது. அதுதான் முழுபாடலா இல்லை இன்னும் இருக்கிறதா என்று அறிய ஆவல். கல்லு தெய்வம், மண்ணு தெய்வம் என்பதோடு நின்றுவிடுகிறதா அல்லது, வேளாங்கண்ணி சிலுவை செய்த இரும்பு தெய்வம், ஆக்ராவில மசூதி செய்த சலவக் கல்லும் தெய்வம் என்பதாக எதாவது இருக்கிறதா என்று அறிவதற்காக கேட்கிறேன். அப்படி எதாவது இல்லையென்றால், இந்த பாடலில் உள்ள இந்தியா ஒன்றுதான் எந்த அர்த்தமுமில்லை. வெறும் மேடைப் பிரச்சாரம் என்பதற்குமேல் அதில் எதுவுமில்லை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி ரக இந்துத்துவக் கும்பல்களுக்குத்தான் தேசப்பற்று இருக்கிறது என்பதுபோல ஒரு பெரிய மாயையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.மத விகிதப்படி பிரித்து ஒரு 20 சதவிகித மக்களை சிறுபான்மையினர் என்று சொல்லி வருகிறார்கள். (அப்படி சொல்லப்படுபவர்கள் சாதி விகிதத்தில் பிரித்துவிட்டால் யார் சிறுபான்மை என்பது எல்லோருக்கும் தெரியும்! 3 சதவிகிதம் உள்ள இனத்தவர் அதிகாரத்திலிருந்து ஆட்சி செய்யும் நாட்டில் 20 சதவிகித மக்கள் ஏன் சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுகிறார்கள் என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது!). 20 சதவிகிதம் என்பது 20 கோடி மக்கள்! பல நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம். 20 கோடி மக்களையும், அவர்களின் உணர்வுகளையும் ஒதுக்கிவைத்து விட்டு இந்தியா ஒன்றுதான் என்று பாட்டுப் பாடினால் அது எப்படிப் பட்ட போலி பிரச்சாரம் என்பதும், எப்படிப் பட்ட நாட்டுப் பற்று என்பதும் மக்களுக்குப் புரியட்டுமாக. ‘]
அரவிந்தன் நீலகண்டனிடமிருந்து வழக்கம்போல இதற்கு பதிலில்லை. வேறு ஆர்.எஸ்.எஸ்-காரர்களாவது இதற்கு பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்ததும் வீணாகிவிட்டது. நமக்கு கூட பதில் சொல்லவேண்டாம். சுதந்திர இயக்கம் என்று கூறிக்கொள்கிறார்களே, அவர்களே அந்த ஷாகாக்களில் இந்தக் கேள்விகளை எழுப்பட்டும் பார்க்கலாம். 20 கோடி மக்களை ஒதுக்கிவிட்டு எப்படி இந்தியா ஒன்றுதான் என்று சொல்கிறார்கள் என்று கேட்கட்டும். அப்படி கேட்பதற்கான உரிமையும், தைரியமும் இருக்கிறதா ? கேட்டால் உடனே இயக்கத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அல்லது எப்படி, இது போல கேட்கிறாய் என்று இன்னும் அதிக மூளைசலவை நடக்கலாம். [நண்பர் ஒருவரிடம் ‘ஆர்.எஸ்.எஸ்-ல் மூளைச் சலவை செய்வதில்லை ‘ என்று திண்ணையில் ஒருவர் எழுதியிருக்கிறார் என்றேன். அவர் சொன்னார், அதெல்லாம் இருக்கிறவங்களுக்குத் தான்-ணா செய்யமுடியும் ‘ என்று!).
‘எங்கும் நிறைந்தவன் இறைவன் ‘ என்றும், ‘தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் இறைவன் ‘ என்றும் கூறும் இந்து மதத்தை, காக்க வந்தவர்கள் போல பேசுபவர்கள், ஏன் மசூதியை இடித்தார்கள். அங்கு மட்டும் ராமர் இல்லாமல் போய்விட்டாரா ?! இதனால் தான் நான் முன்பே குறிப்பிட்டேன், இந்து மதத்திற்கும் இந்துத்வா-ற்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்று. இந்துத்வா என்பது அரசியல் என்று. இப்படி பிற மத மக்களை தூற்றி கலவரங்களுக்கு வித்திடும் இயக்கம் எப்படி நாட்டுப்பற்றுள்ளதாக இருக்க முடியும் ? உமா பாரதி, சுஸ்மா சுவராஜ், ராஜா போன்ற அரசியல் கோமாளிகளையும், நரேந்திர மோடி, ஜோஷி போன்ற இந்துத்வ தீவிரவாதிகளையும் உருவாக்கும் இயக்கம் எப்படி நல்ல இயக்கமாக இருக்கமுடியும் ? இந்தியா என்பது இந்துக்களுக்குத் தான் என்று கூறும் இயக்கம் பிரிவினை வாத இயக்கம்தானே. இந்துமதம் என்று இப்போது அறியப்படுவது, சைவ, வைணவ, அதர்வண மதங்களாக பிரிந்து இருந்தது. இவர்களுக்குள் ‘உன் சாமி பெரிதில்லை, என் சாமிதான் பெரிது ‘ என்று ஏற்பட்ட குடுமி பிடி சண்டைகள் ஏராளம். இப்போதுகூட சங்கராச்சாரிகளை ஜீயர்களும், ஜீயர்களை சங்கராச்சாரிகளும் ஒத்துக்கொள்வதில்லை. (ஆதாவது அவர்கள் அதிகாரங்களை). இந்த சண்டைகள் இருக்கும்போதே புத்த, சமண மதங்களும் இந்தியாவில் இருக்கத்தான் செய்தன. கோவில்களோடு கூட, புத்த விகாரங்களும், சமணப் பள்ளிகளும் கட்டப்பட்டுத்தான் வந்திருக்கின்றன. எனவே இந்தியா என்பது எப்போதும் இந்துக்களுக்கு மட்டும் என்று இருந்ததில்லை. இந்தியா என்பது இந்தியர்களுக்கு என்றுதான் சொல்லலாம்.
மகாத்மா காந்தியை ஏன் ‘தேசத்தின் தந்தை என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஒத்துக்கொள்வதில்லை ? ‘ என்று ஒருவர் கேள்வி கேட்கிறார். என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று அறிய நானும் ஆவலாக இருந்தேன். பார்த்தால் வழக்கம்போல சமாளிப்புகள். ‘ஜின்னா ஏன் ‘மகாத்மா ‘ என்று சொல்லவில்லை ? ஏன் ‘வந்தே மாதரம் ‘ சொல்லவில்லை ? ‘ என்று எதிர் கேள்வி கேட்கிறார்கள்! கேள்விக்கு எதிர்கேள்வி பதிலாகிவிடாது (எல்ல சமயங்களிலும்), என்று பல முறை இங்கே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அது பதில் சொல்லமுடியாதவர்கள் சமாளிப்பதற்குத் தான். எதிர் கேள்வி கேட்பதில் தவறில்லை. பதில் சொல்லிவிட்டு எதிர் கேள்வி கேட்கலாம். இப்போது என்ன சொல்ல வருகிறார்கள் ?
ஜின்னா காந்திஜியை மகாத்மா என்று சொல்லாததினால் இவர்கள் காந்திஜியை தேசத் தந்தை என்று ஒப்புக்கொள்ளவில்லை என்கிறார்களா ?! இது என்னடா காந்தியடிகளுக்கு வந்த சோதனை!
மகாத்மா காந்தி இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திலேயே ஒரு ஒப்பற்றத் தலைவர். ‘இந்தியாவின் தேசத் தந்தை ‘ என்று அழைப்பதால் எதோ காந்திக்கு பெருமை சேர்த்துவிட்டதாக நினைப்பது தவறு. உண்மையில் அப்படி அவரை அழைப்பதும், அவர் இந்தியாவில் பிறந்ததும் இந்தியாவிற்கே பெருமை சேர்ப்பதாகும். இதை மறுப்பதற்காக இந்த அசடுகள் கேட்கும் கேள்வி, ‘காந்தி மட்டும்தான் சுதந்திரத்திற்காக பாடுபட்டாரா ? மற்றவர்கள் பாடுபடவில்லையா ? ‘.
கோடிக் கணக்கான மக்கள் போராடினார்கள். அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் யார் தலைமை ஏற்று நடத்துகிறார்களோ அவர்களுக்குத்தான் வரலாறு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்பதுதான் நடைமுறை உண்மை. கங்கைக் கரை வரை படையெடுத்து சென்ற கரிகாலச் சோழனும், இராஜேந்திர சோழனும், வாதாபிக்கு சென்று அதை அழித்த
நரசிம்மவர்ம பல்லவரும், தனியாகவா இவற்றை சாதித்தார்கள் ? இலட்சோப இலட்சம் வீரர்களும்தான் அதற்கு உதவினார்கள், என்றாலும் வரலாறு, கரிகாலனையும், இராசேந்திரனையும் தான் கங்கை கொண்ட சோழர்கள் என்கிறது. நரசிம்மரை ‘வாதாபி கொண்டான் ‘ என்கிறது. எனவே தலைமை ஏற்று நடத்துபவர்களுக்கு கிடைக்கும் புகழைக் கண்டு
பொறாமைப்படுவது அர்த்தமற்றது. காந்தியடிகள் செய்தது இந்த மன்னர்கள் செய்ததைவிட அருமையான காரியம். ஏனெனில் இந்த மன்னர்களுக்கு கட்டுப்பாடான படைவீரர்கள் உதவினார்கள். கஜானா நிறைய பொருள் இருந்தது.
காந்திக்கோ, கட்டுப்பாடற்ற, முக்காலும் படிப்பறிவில்லாத மக்களை ஒன்றிணைத்து செல்லவேண்டியிருந்தது.
பரவலாக அங்கங்கே இருந்த சுந்தந்திர போராட்டங்கள், ஒன்றிணைந்த ஒரு பெரும் போராட்டமாக, இந்தியா என்று இப்போது அறியப்படுகிற நாட்டின் ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டமாக மாறியது காந்தியின் வருகைக்குப்பின் தான் என்றால் அது மிகையில்லை. காந்திதான் சுதந்திரப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் என்பது யாவரும் அறிந்த உண்மை. காந்தியின் அகிம்சையை கண்டுதான் இங்கிலாந்து அரசு ஸ்தம்பித்து நின்றது என்பதும் வரலாறு கண்ட உண்மை. பாதுகாப்பிற்கு ( ?!) என்ற பெயரில் இலவசமாக சூலம் வழங்கி, மற்றவர்களை குத்துவதற்கு தூண்டுவதோ, பிற மதத்தினரைத் தூற்றுவதற்கோ, பிற மத சின்னங்களை அழிப்பதற்கோ, உணர்ச்சிவசப்பட்டு ஆட்டு மந்தைகள் போலிருக்கும் ஒரு கூட்டத்தைத் தூண்டுவது மிக எளிது. அதை எந்த மடையனும் செய்யலாம். ஆனால் அதிகம் படிப்பறிவில்லாத ஒரு சமூகத்தை, உணர்ச்சிவசப் படக்கூடிய மக்கள் கூட்டத்தை அகிம்சை வழியில் கொண்டுசெல்வது என்பது ஒரு அருபெருஞ்செயல். அதை காந்தி செய்திருக்கிறார். வாய் கிழிய பேசுவதும், பிறரை அவமதிப்பதும், அடிப்பதும், அழிப்பதும் வீரமல்ல. அடி வாங்கிக்கொண்டு ஒரு கொள்கைக்காக பேசாமலிருப்பதும், தன் கோபத்தையே கட்டுபடுத்துவதும்தான் மிகப் பெரிய வீரமாகும்.
கொள்கைகளை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். தனக்குத் தானே அதை விதித்துக்கொண்டு, அதை கடைசி வரை கடைபிடிப்பது என்பது சாதாரண காரியமில்லை. அதிலும் அந்த கொள்கைகளை மற்றாவர்களையும் பின்பற்ற வைப்பது, அதற்கு தானே ஒரு முன்மாதிரியாக இருப்பது என்பது மிக அசாதாரண செயல். பொய் சொல்லமலிருப்பது, மது அருந்தாமல் இருப்பது, நேரந்தவறாமலிருப்பது, சொன்ன சொல் தவறாமலிருப்பது, எளிமையாக இருப்பது, தனக்கு வேண்டியவற்றைத் தானே செய்துகொள்வது, அதிமுக்கியமாக அகிம்சையை கடைபிடிப்பது, தீண்டாமை ஒழிப்பு என்பது போன்ற கொள்கைகளை வகுத்துக்கொண்டு, அதை கடைசிவரை பின்பற்றிய காந்தியைப் போன்ற ஒப்பற்ற தலைவர் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருந்திருக்கவேண்டும். (இவற்றில் சில, சாதாரணமான கொள்கைகளாகத் தெரியலாம். ஆனால் அவற்றை கடைசிவரை கடைபிடிப்பதென்பது எளிதானதன்று). ஒரு நாட்டில் தோன்றிய கொள்கையையோ, ஒரு கருத்தாக்கத்தையோ பிற நாடுகளிலுள்ளவர்கள் பின்பற்றுவது சாதாரணம். ஆனால் ஒரு நாட்டில் தோன்றிய ஒரு மாமனிதரை வேற்று நாட்டினர் பின்பற்றுவது- ஆப்பிரிக்க மண்டேலா, அமெரிக்க லூதர் கிங் போன்ற தலைவர்கள்-காந்திக்கு மட்டுமே நடந்த அதிசய உண்மை. அதுவே காந்திஜியின் புகழை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. தலைவர்கள் மட்டுமள்ள எண்ணற்ற மக்கள், காந்தியின் எளிமையையும், அகிம்சையையும் பின்பற்றுகின்றனர். இந்த செய்கைகளில் அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டதில் பெருமையடைகிறேன்.
‘புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, தோழா ஏழை நமக்காக ‘ என்று கடவுளர் வரிசையில் காந்தியையும் வைத்து கவிஞர் பாடியிருக்கிறார் என்றால் அது காந்தியின் ஒப்பற்ற தன்மையை விளக்குவதற்கே.
—-
திண்ணையில் முன்பு ஒருவர் என்னை ‘இலவச சூலம் வழங்கி ‘ என்றார். சில வாரங்களுக்குப் பின் ஒருவர் ‘தி.க.காரன் ‘ என்றார். இரண்டும் நேரெதிரானவை என்பதால் நான் விளக்கமளிக்கத் தேவையில்லமலேயே என் நடுநிலமை காணப்பட்டது. இங்கே நான் கூறியிருக்கும் அரசியல் விமர்சனங்களைக் கண்டுவிட்டு, ‘காங்கிரஸ் காரன் ‘, ‘சோனியா விசிறி ‘ என்றெல்லாம் தனிமனித தாக்குதல்களில் ஈடுபடுவதற்குமுன் இதையும் படித்துவிடுங்கள்! நான் எந்த கட்சியையும் சார்ந்தவனல்ல. இந்தியாவிலுள்ள எந்த கட்சியின் மேலும் எனக்கு நம்பிக்கையில்லை. எல்லாமே ஊழலில் திளைத்த ஒரே சாக்கடையில் ஊறிய மட்டைகள். நாம் மேலே விளங்கப் பார்த்த தேர்தல் கோஷங்களை ஊன்றி பார்த்தால் ஒன்று விளங்கிவிடும். அது, ‘தனிமனித சாடல்களைக் கொண்ட கோஷங்களையே ‘ நான் விரிவாகப் பார்த்திருக்கிறேன் ‘ என்பது. தனி மனித தாக்குதல்களில் எனக்கு நம்பிக்கையில்லாததாலேயே அப்படி. மேலும் ஊழலா ? அல்லது ஊழலும் அதோடு கூடிய மதக்கலவரங்களா ? என்ற நிலையிலேயே மக்கள் ஓட்டளித்திருக்கக் கூடும் என்று நான் கருதுகிறேன். தேர்தல் காலங்களில் ஏற்பட்ட தனிமனித தாக்குதல்களையும், பொய்ப் பிரசாரங்களையும் தவிர எண்ணற்ற மக்கள்
பிரச்சனைகள் இருக்கின்றன. அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்காமல் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.
இது போன்ற எந்தப் பிரச்சனையைப் பற்றியும் எந்தக் கட்சியும் வாயே திறக்கவில்லை என்பதுதான் வருந்தத் தக்க உண்மையாகும்.
—-
ஒரு கிராமத்தில் உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் கீழ்த்தர எண்ணங்கொண்டவர்கள் தலித்துக்களைத் தாக்கியிருக்கிறார்கள். வேறு சாதிக்காரன் என்பதால், தன் மருமகனையே கொன்றிருக்கிறார்கள் ஒரு குடும்பத்தார் (தங்கள் மகளின் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப் படாமல்), இன்னொரு குடும்பத்தில் தங்கள் மகளையே கொன்றிருக்கிறார்கள்.
இவையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டிய சாதிவெறிச் செயல்கள். இவர்களெல்லாம் என்று திருந்தப் போகிறார்கள் ? இன்னும் எத்தனை காந்தி, எத்தனை பெரியார் வரவேண்டும் ? திருவிழாவில் தேர் இழுக்கச் சென்ற திருமாவளவனைக் கைது செய்து பின்னர் வெளியே விட்டிருக்கிறார்கள் காவலர்கள். இதுவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. தேர் இழுப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா ? ஊர் கூடி தேர் இழுக்கவேண்டும் என்பர். பின் கூடிவரும் மக்களை தடுப்பது எதற்காக ? சாதிப் பாகுபாடுகளைக் களைவதுதான் அரசின் நோக்கமெனில் அவருக்கு பாதுகாப்பு அளித்து தேரிழுக்க அல்லவா செய்திருக்கவேண்டும். சுதந்திர நாட்டில், அதுவும் ஒரு தெய்வத் திருவிழாவில் தேரை ஒருவர் இழுக்கவே மற்றவர்கள் அனுமதி வேண்டும் என்று சொல்லும் நிலையிலேயே இன்னும் நம் நாடு இருப்பது நாமெல்லாம் வெட்கப் படவேண்டிய விஷயம்.
—-
தமிழகத்தில் ராமகோபாலன் அடிக்கும் லூட்டி தாங்கமுடியவில்லை. கோவில் கோவிலாக சென்று ‘ஆண்டவா கும்பல் கும்பலாக கட்டாய மதம் மாற்றுகிறார்கள் ‘ என்று புலம்புகிறாராம். எங்கே அப்படி தமிழகத்தில் மாற்றுகிறார்களோ தெரியவில்லை. அது ஒருபுறமிருக்கட்டும். இந்த அரசியல் ஸ்டண்ட் எதற்காக ? யாரையும் கட்டாயப் படுத்தி மதம் மாற்றியதாக நான் இதுவரைக் கண்டதில்லை. பணம் கொடுத்தோ சலுகைகள் கொடுத்தோ ஒருவரை மதம் மாற்றுவதை கட்டாயம் என்று சொல்வதற்கில்லை. வயிற்றில் ஈரத்துணிக் கட்டிக்கொண்டு பட்டினிக் கிடக்கும் ஒருவனுக்கு பணம் கிடைத்து அவன் குடும்பம் ஒரு வேளை உணவாவது உண்ண முடியுமெனில் அவன் எந்த கடவுளை வேண்டுமானாலும் வணங்கிக் கொள்ளட்டும். அவன் குழந்தைகள் எளிதாக கல்வியறிவு பெற முடியுமெனில் அவன் எந்த மதத்தை வேண்டுமானாலும் தழுவட்டும். அவன் குடுப்பத்திற்கு ஒரு வேளை உணவாவது கொடுக்கமுடியாமல், நல்ல கல்வி கொடுக்க முடியாமல் இந்து மதம் வைத்திருந்தால் அது யார் குற்றம் ? (இன்னும் இந்து மதத்திலுள்ள சாதிப் பாகுபாடுகளையும் ஒரு சில சாதியினர் மட்டும் உயர்ந்தவர்கள், அதிகாரங்களில் இருக்க வேண்டியவர்கள், வெள்ளையுடை வேலை செய்யத் தகுந்தவர்கள் என்பது போன்ற பாகுபாடுகளை நான் இங்கு தொடவே இல்லை. அதையெல்லாம் எழுதப் புகுந்தால் ஒரு புத்தகமே எழுத வேண்டிவரும்!). இலக்குதான் முக்கியம். பாதைகளல்ல. எல்லா மதங்களும் இறைவனை அடைவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. எனவே ஒருவன் எந்த மதத்தைத் தழுவி வாழ்ந்தால் என்ன ? இந்தப் பிறவியில் பட்டினி கிடக்காமல் ஒருவன் தன் குடும்பத்தைக் காக்க ஒரு மதம் உதவினால் அவன் அதைப் பின்பற்றட்டும். அதில் எங்கே கட்டாயம் வந்தது ? கட்டாயப் படுத்தி ஒருவரை மதம் மாற்றுவது தவறெனில் கட்டாயப்படுத்தி ஒருவரை ஒரு மதத்தில் இருக்கச் செய்வதும் தவறுதானே ?
எனக்குத் தெரிந்தவரை தமிழகத்தில், கிறிஸ்தவப் பள்ளிக்கூடங்களில் தான் கல்விக் கட்டணங்கள் குறைவு. வசதிகளும் அதிகம். ஏழைக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க அவைகள் உதவுகின்றன. காஞ்சி காமகோடி பீடங்களின் பெயர்களிலும் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. இவற்றை ஏழைக் குழந்தைகள் நெருங்க கூட முடியாது என்பது தானே உண்மை நிலையாக இருக்கிறது. அவர்களுக்கு வெளி நாடுகளிலிருந்து பணம் வருகிறது என்று புலம்புகிறார்கள் இவர்கள். திருப்பதியில் மாதம் தோறும் சேரும் கோடிக்கணக்கான பணத்தை கல்விக்காக செலவிட்டாலே நம் குழந்தைகள் அனைவரும் கட்டணமே இல்லாமல் படிக்கலாமே. எனவே பணமல்ல பிரச்சனை, மனம் தான் பிரச்சனை. உயர்ந்த தத்துவங்கள் கொண்ட இந்து மதத்திலிருந்து மக்கள் விலகி செல்வதற்கு இந்த குறைந்த கட்டண கல்வி நிலயங்களும், மருத்துவமனைகளும், உணவுக் கூடங்களும்தான் காரணம் என்றால், அந்தக் குறைகளைப் போக்கி மக்களை இருத்திக் கொள்ள ‘ஐயோ, மதம் மாற்றுகிறார்களே ‘ என்று அரசியல் நாடகமாடும் இராம கோபாலன்களும், மதமாற்றத் தடை சட்டம் வேண்டுமென்று கேட்கும் சங்கராச்சாரிகளும் என்ன செய்திருக்கிறார்கள் ? அல்லது இந்த குறைகளைப் போக்க பாடுபடாமல் ஏன் மற்ற மதத்தினரைப் பார்த்து பொருமிக்கொண்டிருக்கிறார்கள் ? உண்மையில் இந்த ஏழை மக்களை ஏழைகளாகவே வைத்திருந்து, படிப்பறிவில்லாதவர்களாகவே வைத்திருந்தால்தான் தாங்கள் அதிகார வர்க்கமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கமுடியும் என்று இவர்கள் நன்றாகவே அறிவார்கள். ஆனால் வேற்று மத
நிலயங்கள் அவர்களின் இந்த உண்மையான நோக்கத்திற்கு எதிராக இருப்பதாலேயே இப்படிப் பொருமுகிறார்கள் என்பதைத் தவிர வேறு எந்த நியாயமானக் காரணத்தையும் காணமுடியவில்லை.
—-
திண்ணையில் சில வாரங்களாக வரும் மாலதி அவர்களிம் கட்டுரைகளும், கவிதைகளூம் அருமை. ஆபாசக் கவிதைகள் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டிருப்பவை ஆணாதிக்கக் காரர்களுக்கு ஒரு சாட்டையடி. தொடரட்டும் அவர் பணி.
ஆசாரகீனனின் இந்த வாரக் கட்டுரை அருமை. பழமைவாத இஸ்லாமியர்களுக்கு ஒரு சிந்தனையடி. ‘ரூமி போன்றோர் தாங்கள் புனிதமாக நம்பும் ஒரே காரணத்துக்காக இஸ்லாத்தை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. அல்லது அப்படி செய்பவர்கள், இஸ்லாமியர்களாகவே இருந்தாலும் ‘முட்டாள்கள் ‘ என்பது போன்ற அடிப்படை வாதக் கருத்திலேயே இருக்கிறார்கள். தாரிக் அலி போன்ற சிந்தனையாளார்களின் கருத்துக்களை கண்ணை மூடிக்கொண்டு விலக்கிவிட வேண்டுமென இவர்கள் விரும்புகிறார்கள் ‘ என்பதையும் அதற்கான காரணத்தையும் அருமையாக விளக்கியுள்ளார். எந்தக் கருத்தையும் கண்ணை மூடிக் கொண்டு விலக்குவதோ, சில கருத்துக்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று
நினைப்பதோ அறிவுடைமையாகாது. விமர்சனங்களால் ஒரு கருத்து அழிந்துவிடாது. (அப்படி அழிந்து போனால் அது நல்ல கருத்தாக இருந்திருக்கவும் முடியாது).
—-
பாஜக-வினர் ஒரு பொறுப்புள்ள எதிர் கட்சியாக செயல்படாமல் பாராளுமன்றத்தையே செயல் படவிடாமல் கேலி கூத்தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அது கண்டிக்கத் தக்கது. மோடி செய்தது தவறில்லை என்று அவர்கள் சொல்வது உண்மையானால், லாலு குஜ்ராத் சம்பவங்களை அறிய விசாரணைக்கு உத்தரவிட்டால் இவர்கள் ஏன் பயப்படவேண்டும் ?
பயந்து அமளி செய்யவேண்டும் ? மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இவர்கள் உணரவேண்டும்.
—-
ப.சிதம்பரம் அவர்கள் ஒரு நல்ல அருமையான, மக்கள் நல பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். ஒதுக்கப் பட்ட
நிதிகள், ஒதுக்கப் பட்டக் காரணங்களுக்காக சரியாக கையாளப் படுகிறதா என்பதையும் அவர் கவனிக்கவேண்டும்.
—-
கும்பகோணத்தில் நடந்த கோர தீ விபத்து, நம் இந்தியப் பள்ளிக்கூடங்களின் நிலமையை எடுத்துப் பறைசாற்றியிருக்கிறது. எப்படிப்பட்ட நிலைகளில், கல்வி நிலயங்களில் நம் பிள்ளைகளைப் படிக்கவைத்துக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணி மனம் வெதும்புகிறது. அந்த பிஞ்சுகளை நினைத்தாலே மனம் பொறுக்காமல் உடலும் மனமும் நடுங்குகிறது. அந்த பெற்றோருக்கு நம் ஆழ்ந்த அனுதாபங்கள் . எத்தகைய ஆறுதலும் அனுதாபங்களும் அந்த பெற்றோர்களின்
கண்ணீரைத் துடைத்துவிட முடியாது. ஆண்டவன் அவர்களுக்கு கருணை காட்டட்டும். வேறு யாரால் அவர்களுக்கு
மனசாந்தியளிக்க முடியும் ?
– பித்தன்.
—-
piththaa@yahoo.com
—-
piththaa@yahoo.com
- கடிதம் ஜூலை 22 , 2004
- மீள்பிறக்கும் உயிர்வளக் கழிவு, எருவாயு எருக்களில் எடுக்கும் எரிசக்தி [Energy from Renewable Biomass & Biogas Fuels]
- தங்கம் மனோரமா – மணிப்பூரில் இந்திய ராணுவத்தினரின் அத்துமீறல்
- தியாகிகளுக்கு கண்ணீருடன் சிரம் தாழ்த்துவோம்
- ஊழலின் சந்நிதியில் 100 நரபலிகள்
- கூரையைப் பிய்க்கும் குரங்குகள்!
- கர்ணனின் மனைவி யார் ?
- மெய்மையின் மயக்கம்-9
- வாழ்வின் புன்னகை இந்தக் கதைகள்
- அறிய விரும்பிய ரகசியம்(எலீ வீசலின் ‘இரவு ‘ -நூல் அறிமுகம்)
- கொடிகள் அறுபடும் காலம்( உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை ‘-நாவல் அறிமுகம்)
- அழகும் அதிகாரமும் (காதல் தேவதை-மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம்)
- நூறு வருடம் லேட்
- சோமரட்ண திசநாயக்காவின் ‘சின்ன தேவதை ‘ திரைப்படம்
- பூச்சிகளின் காதல்
- உயிர்மை ஓராண்டு நிறைவு விழா – உயிர்மை.காம் துவக்க விழா – ஜூலை 31 , 2004
- மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் ஆண்டுவிழாப் போட்டிகள்
- தஞ்சை ப்ரகாஷ் நான்காம் ஆண்டு புகழஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- கடிதம் ஜூலை 22,2004
- கடிதம் ஜூலை 22, 2004 – கலைந்ததா ‘மவுண்ட் ரோடு மாஒ ‘வின் உறக்கம் ?
- தேர்தல், காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற
- கடிதம் ஜூலை 22, 2004 – தமிழ் சங்க பேரவை
- கும்பகோணத்தில் தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி : 24-07-04
- கடிதம் ஜூலை 22, 2004 : வஹாபி இயக்கமும் வர்னாஷிரம லோகஸ்டுகளும்
- கடிதம் ஜூலை 22, 2004
- ஆட்டோகிராஃப் ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி ‘
- வள்ளுவர் தந்த புதுக்கவிதை (அதி:111)– இன்பத்தின் இன்பம்(3)
- டாக்ஸி டிரைவர்
- அன்புள்ள ஆண்டவனுக்கு
- பொய்யன் நான் பொய்யனேனே!
- பதியப்படாத பதிவுகள்
- அன்புடன் இதயம் – 24 – எழுதக் கூடாத கடிதம்
- ஒரு தமிழனின் பிரார்த்தனை
- பெரிய புராணம்
- கொட்டு
- வேடத்தைக் கிழிப்போம்-3 (தொடர் கவிதை)
- எப்போதும் சூாியனாய்
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- சுயதரிசனம் (26.01.004)
- தோற்கிறேன் தான்!
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 29
- கவிதைகள்
- கவிதைகள்
- தீயே நீ தீபம் ஆகமாட்டாய்…
- கும்பகோணம் காட்சிகள் ஜூலை 2004
- இனிப்பானது
- சத்தியின் கவிக்கட்டு 16-நன்றாய்ப் பார்த்துவிடு
- வதங்கள்
- தீக்கொழுந்தாக….
- 16-ஜூலை-04
- சின்னபுள்ள….
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-4
- அறிவியல் தொழில்நுட்பம்:எதிர்காலத்தில் மனிதனுக்கு இயற்கை மரணமில்லை!