தேர்தலும், அதற்கு அப்பாலும்-1

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


1, மத்தியில் ஆளும் கட்சி அல்லது கூட்டணிதான் மாநிலத்தில் ஆள்வது நல்லது என்ற கருத்தை சிதம்பரம்
அடிக்கடி குறிப்பிடுகிறார். இது சரியல்ல.மக்கள் தெரிவின் அடிப்படையில்தான் அரசு அமைய வேண்டும். இன்னும் 3 ஆண்டுகள் மத்தியில் உள்ள கூட்டணி அரசு நீடிக்கும் என்று என்ன நிச்சயம்.அது கவிழ்ந்து பா.ஜ.க தலைமையில் வேறொரு கூட்டணி அல்லது தனிக்கட்சி அரசு ஏற்பட்டால் மாநில அரசும் ராஜினாமா செய்ய வேண்டுமா. ஜெயலலிதா அரசிற்கும் தற்போதைய மத்திய அரசிற்கும் சுமுக உறவு இல்லை என்பதற்காக ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கக் கூடாது என்பது சரியல்ல. கூட்டாட்சித் தத்துவதிற்கு இது முரணானது. மாநில அரசு எதிர்க்கட்சி வசமிருந்தாலும் பாரபட்சமின்றி நடத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. இதைச் செய்ய முடியாதவர்கள் அமைச்சர்களாக இருக்க தகுதியற்றவர்கள்.

2, ஜெயலலிதா அமைச்சரவையில் இஸ்லாமியர் ஒருவர் கூட இப்போது இல்லை என்பதை சுட்டிக்காட்டி
அவரை விமர்சிக்கிறார்கள் சிலர் (உ-ம். தமுமுக,வீரமணி,சிதம்பரம்). இது ஆரோக்கியமான பார்வையல்ல.
அரசியல் சட்டம் எல்லா மதங்களுக்கும் அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என்று கூறவில்லை. அமைச்சரவையில் யாரை சேர்ப்பது, யாரை நீக்குவது என்பது முதல்வரின்/பிரதமரின் தனி உரிமை. அரசு
மதசார்பற்ற அரசாக இருக்கிறதா, அரசியல் சட்டப்படி நடக்கிறதா என்பதே முக்கியம். ஒரு மதத்தினை
சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லாததால் அந்த அரசு அந்த மதத்தவருக்கு விரோதமான அரசு என்று அர்த்தப்பள்ளிக் கூடாது. அரசு எப்படி செயல்படுகிறது என்பதே முக்கியம், அமைச்சரவையில் எந்த மதத்தினை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள், இல்லை என்பதல்ல. என் மதத்தினைச் சேர்ந்தவர் இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இல்லை ஆகவே இது என் மதத்திற்கு எதிரான நிறுவனம் என்று ஒரு பொதுத்துறை
நிறுவனத்தினை கருத முடியாதோ அது போல்தான் அமைச்சரவையும். பெயரளவிற்கு ஒருவரை அமைச்சராக்கிவிட்டேன் என்று வாக்குவங்கி அரசியலைக் கருதாமல் தன் முடிவின் படி செயல்படும் ஜெயலலிதாவை இந்த விதத்தில் பாராட்ட வேண்டும். ஒரு முதல்வருக்கு இருக்கும் அதிகாரம் அமைச்சரவையில் யார் இடம் பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பது. அங்கும் மத ரீதியாகவே, சாதி ரீதியாகவே
அவர் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

3,ஜெயலலிதா மீது வைக்கபடும் இன்னொரு குற்றச்சாட்டு முஸ்லீம்களின் தொகுதியான வாணியம்பாடியில்
முஸ்லீம்கள் அல்லாத ஒருவரை நிறுத்தியது. இது மிகவும் அபத்தம். அரசியல் சட்டம் மத ரீதியாக தொகுதிகளைப் பிரிக்கவில்லை. மேலும் அப்படி நிறுத்தப்பட்டவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுள்ளார். எனவே முஸ்லீம்களின் தொகுதி, முஸ்லீம் நின்றால்தான் ஒட்டுப் போடுவோம் என்று வாக்காளர்கள் நடந்து கொள்ளவில்லை. இது அவர்கள் தங்கள் பொறுப்பினை சரியாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. மும்பையில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து மராட்டியர் அல்லாதோரும், மராட்டியை தாய்மொழியாகக் கொண்டிராதோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது போல் பல உதாரணங்கள் தரலாம். இத்தகைய குற்றச்சாட்டுக்கள் இவ்வாறு கூறுவோரின் குறுகிய மனப்பான்மையினையும், சகிப்புத்தன்மையின்மையும் காட்டுகின்றன. அப்படி ஒருவரை நிறுத்தி வெற்றிக் காணச் செய்த ஜெயலலிதா வாக்களர்கள்
வேட்ப்பாளரின் மதத்தினை மட்டுமே கருதி ஒட்டளிப்பார்கள் என்ற எண்ணம் பொய்யானது என்பதை
நிரூபித்திருக்கிறார்.

4, திமுகவின் இலவசத் திட்டங்கள் எந்த அளவு சாத்தியம், நிதி எங்கிருந்து வரும், மான்யங்களை மத்திய அரசு குறைக்கும் போது மாநில அரசால் எந்த அளவு மான்யங்களை ஏற்க இயலும் – இப்படி பல கேள்விகள் எழுகின்றன. பொது விநியோகத்தில் அரிசி இலவசமாகத் தரப்படுவது (அதிமுக வாக்குறுதி) அல்லது
மிகக்குறைந்த விலைக்கு தரப்படுவது (திமுக வாக்குறுதி) பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். ரூ 2க்கு வாங்கி சந்தையில் ரூ 10க்கு (ஒரு உதாரணமாக) விற்க முடியும் என்றால் அரிசியை கடத்துவது, நுகர்விற்கு இல்லாமல் அரிசியை விற்பது, விநியோகத்தில் முறைகேடுகள் என்று பல பிரச்சினைகள் ஏற்பட இது வழிவகுக்கும். மேலும் இவை அனைவருக்கும் என்னும் போது அரிசி வாங்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கும்
வழங்கிவிட்டதாக கணக்கு காண்பித்து அரிசியை வெளிமார்க்கெட்டில் விற்பது அதிகரிக்கும். ரேஷன் கார்டுத்தார்களில் கடந்த காலங்களில் எத்தனை பேர் அரிசி வாங்கியிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு இவ்வாறு செய்வது எளிது. 10% பேர் வாங்கவில்லை என்றால் கூட கொள்ளை லாபம் கிடைக்கும்.
இதையெல்லாம் தவிர்க்க அரிசி மற்றும் உணவு பொருள், எரி பொருள் மான்யம் யாருக்கு மிகவும் தேவையோ அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் அரசின் மான்யங்கள் கூடினாலும்
அதன் பயன் யாருக்கோ போய்ச்சேரும்.

5, இரு கழகங்களும் கல்வி குறித்து சிலவற்றை கூறியிருக்கின்றன. முதலில் பொறியியல் கல்லூரிகளில் அரசு நினைத்தபடி கட்டணத்தினை குறைக்க முடியாது. அதை தீர்மானிக்கும் கமிட்டி பரிந்துரைத்தாலும்
குறைப்பது என்பது சாத்தியம் இல்லை. அரசு மான்யத்தினை நிர்வாகங்களுக்கு வழங்கலாம். ஆனால் இது
பெருந் தொகையாக இருக்கும். இதற்கு அரசே ஏன் புதிதாக கல்லூரிகளை திறக்கக் கூடாது என்ற
கேள்வி எழும். இந்திய தொழில் நுட்ப கழகங்களுக்கு நிகரான கல்லூரிகளை நிறுவுவது (அதிமுக
வாக்குறுதி) எளிதல்ல. மேலும் இப்போது பொறியியல் கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான இடங்கள்
காலியாக இருக்கும் போது இவற்றிற்கு என்ன தேவை. முன்னாள் துணைவேந்தர குழந்தைசாமி ஒரு
கட்டுரையில் தமிழ் நாட்டில் கடந்த இருபதாண்டுகளில் துவக்கப்பட்ட பல பல்கலைகழகங்களில் போதுமான ஆசிரியர்கள் இல்லை, அடிப்படை வசதிகள் இல்லை, ஏன் பல துறைகள் கூட இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதை சரி செய்யாமல், இது போல் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக் கல்வியில் உள்ள
குறைகளை சீர் செய்யாமல் புதிது புதிதாக திட்டங்களை அறிமுகப்படுத்த தேவையில்லை. இருக்கின்றதை
ஒழுங்காக்கினால் பல பிரச்சினைகள் தீரும். பல பல்கலைகழகங்களில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவது நடந்து கிட்டதட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று அறிகிறேன். இன்றுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கல்வி குறித்த ஒரு முழுனையான ஆய்வு தேவை, பலம், பலவீனம், வாய்ப்புகள், ஆபத்துகள் (SWOT) குறித்த
விரிவான ஆய்வு தேவை. மேலும் எதிர்காலத்தில் இங்குள்ள பல்கலைகழகங்கள் எத்தகைய துறைகளில்
தனிக்கவனம் செலுத்த வேண்டும், எத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து
ஆய்வு செய்யப்பட்டு பல்கலைகழகங்கள் சீரமைக்கப்பட வேண்டும். முதலில் இத்தனை பல்கலைகழகங்கள்
வேண்டுமா அல்லது இவற்றிற்கு பதிலாக தரமான, வசதிகள் கொண்ட பல்கலைகழகங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், போதாதா என்பதையும் யோசிக்க வேண்டும். தமிழக அரசு உலகத்தரமான
பல்கலைகழகங்கள், தொழில் நுட்பகல்வி நிறுவனங்கள் போன்றவை தமிழ் நாட்டில் வளாகங்கள் அமைக்க
முன் வரும் வகையில் கொள்கை வகுக்க வேண்டும். ஆந்திர மாநிலம் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் வளாகத்தினை அமைக்க உதவியது. அது போல் தமிழக அரசும் செய்ய வேண்டும். ஆனால்
இரு கழகங்களுக்கும் கல்வி குறித்து ஒரு தொலை நோக்குப் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை.

6, யார் ஆட்சிக்கு வந்தாலும் பாலறு, முல்லைப் பெரியாறு,காவிரி ஆகிய மாநிலங்களுக்கிடையே
ஆன நீர்ப்பகிவுப் பிரச்சினைகளை எதிர்கொண்டாக வேண்டும். இதில் காங்கிரஸ், கம்யுனிஸ்ட்,பாஜக
கட்சிகள் தமிழகத்திற்காக, தமிழகத்திற்காக உரத்து குரல் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
அவற்றின் மத்திய தலைமைகள் நீக்குப் போக்காக, கண்டதும் காணாததும் போல்தான் நடந்து
கொள்ளும். திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் இப்பிரச்சினைகளை எப்படிக் கையாளும் என்பதை
பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் ஜெயலலிதா முனைப்பாக செயல்பட வாய்ப்புகள்
அதிகம், ஆனால் பிரச்சினைகள் தீரும் என்று உறுதி சொல்ல முடியாது. பாலாற்றில் அணைக் கட்டாதே
என்று காங்கிரஸின் தலைமை ராஜசேகர ரெட்டியிடம் கூறாது. அதற்காக திமுக மத்திய அமைச்சரவையிலிருந்து விலகும் அல்லது ஆதரவை விலக்கிக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்க முடியாது. எனவே ஒருவிதத்தில் பார்த்தால் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதே நல்லது என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம் ஒரு பலமான எதிர்ப்பினையாவது அவர் காட்டுவார்.

7, தமிழகம் முன்னேறிய மாநிலம் என்று இரு கழகங்களும் கூறினாலும், அகில இந்திய அளவில் நாம்
பலவற்றில் முதல் இரண்டு அல்லது மூன்று இடங்களில் இல்லை. மானுட வளர்ச்சிக் கண்ணோட்டத்தில்
பார்த்தால் நாம் போக வேண்டிய தூரம் மிக அதிகம். சுகாதாரம், கல்வி போன்றவற்றிலும், சுற்றுச்சூழல்
பாதுகாப்பு,இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்துவது, தொழில்மயமாதல்,நகர்மயமாதல் போன்றவற்றின் எதிர்மறை தாக்கங்களை குறைப்பது ஆகியவற்றிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இனி வரும் சில பத்தாண்டுகளில் நாம் என்ன செய்ய வேண்டும், எத்தகைய இலக்குகளை எட்ட வேண்டும்,
அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தொலை நோக்குக் கண்ணோட்டம் தேவை. இந்திய அளவில்
மாநிலங்களின் முன்னேற்றத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதால், சராசரிகளை மட்டும் கருத்தில் கொண்டு நாம் முன்னேறி விட்டோம் என்று இருந்து விட முடியாது.

8,மாறனின் ஒன் இண்டியா திட்டத்தினை இடதுசாரி கம்யுனிஸ்ட்கள் பாராட்டுவது வேடிக்கையாக
இருக்கிறது. இதை விமர்சித்து கட்சியின் அதிகார பூர்வ ஏட்டில் கட்டுரை வெளியாகியுள்ளதை
தமிழ்நாட்டில் உள்ள நிர்வாகிகள் படிக்க வில்லையா இல்லை திமுகவை பகைத்துக்கொள்ள வேண்டாம்,
அதுவும் இப்போது என்ற எண்ணமா. பொருளாதார சிறப்பு மண்டலங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெருகும்
என்று திமுக தரப்பில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. முரசொலி மாறனின் திட்டத்தினை அதிமுக அரசு
புறக்கணித்துவிட்டதாக குற்றம் சாட்டபடுகிறது. ஆனால் இந்த மண்டலங்கள் குறித்து இடதுசாரியினரும்,
பிறரும் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். வரி சலுகைகளைப் பயன்படுத்தில் சில நிறுவனங்கள்
லாபம் பெறவே இது உதவும், எதிர்பார்க்கப்படும் அளவிற்கு இவை ஏற்றுமதிகளைப் பெருக்கா என்றும்
கருதப்படுகிறது. இதெல்லாம் இங்குள்ள இடதுகளுக்குத் தெரியாதா இல்லை இந்த எதிர்ப்பெல்லாம்
தில்லியில் மட்டும்தானா.

தொடரும்

Series Navigation

தேர்தலும், அதற்கு அப்பாலும்-2

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


9, விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலுக்குப் பின் தலித் அரசியலை பிற தலித் அமைப்புகள், கட்சிகளுடன்
சேர்ந்து பலப்படுத்த வேண்டும்.இப்போதுள்ள நிலை நீடித்தால் விடுதலை சிறுத்தைகள் அரசியலில் அதிக தூரம் பயணிக்க முடியாது. குடியரசுக் கட்சியின் கதி என்ன ஆனது என்பதை யோசிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள் மாயாவதியிடமிருந்து சிலவற்றைப் கற்றுக் கொள்ளலாம். பா.ம.கவிடான தமிழ் மொழிப் போராட்டம் போன்றவை தலித் அரசியலை வளர்க்க உதவாது. மேலும் இப்போதுள்ள நிலையில் தலித் அரசியல்சக்திகள் தமிழ்நாட்டில் தங்களைப் பலப்படுத்திக் கொள்வதும், அமைப்பு ரீதியாக வலுப்பெறுவதும் மிக அவசியம். அமைப்பு ரீதியாக வலுப்பெறுவது இல்லாத போது இயக்கங்கள் எழுச்சியினை முன்னெடுத்து செல்ல முடியாமல் தேங்கி விடுகின்றன அல்லது பிளவுபடுகின்றன. ஒரு காலத்தில் நாராயண சாமி நாயுடுவின் விவசாய இயக்கம் மிக பலமாக இருந்தது.ஆனால் அது பின்னர் வலுவற்று சிதறிப் போனது.விடுதலை சிறுத்தைகள், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஏனைய தலித் அமைப்புகள் ஒரே அமைப்பாக சேராவிட்டாலும் ஒரு கூட்டமைப்பையாவது அமைத்து தலித் அரசியலை அடுத்த கட்டதிற்கு எடுத்துச் செல்லவேண்டும். குறைந்த பட்ச செயல்திட்டம், தமிழகமெங்கும் அமைப்பு ரீதியாக கிளைகளை உருவாக்குதல், இளைய தலைமுறையினருக்கு அரசியல் பயிற்சி அளித்தல் போன்று பல வழிகளில் அவர்கள் செயல்பட வேண்டும். இல்லையேல் 1990களில் ஏற்பட்ட எழுச்சி திரட்டப்பட்ட எழுச்சி சரியான திசையில் பயணிக்காததால் வலுவிழந்தும், நீர்த்தும் போய்விடும் சாத்தியக் கூறு உள்ளது. சிவில் சமூகத்தில் தலித் அமைப்புகள் இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டும். இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும், வராவிட்டாலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக தீர்மானிக்க வேண்டும். தலித் ஒட்டுகள் தலித் அமைப்புகள் அல்லது கட்சிகளுக்கே என்ற நிலையை ஒரு பத்தாண்டுகளில் உருவாக்கினால் அதுவே பெரிய சாதனை. தேர்தல் கூட்டணிகள் மூலம் தங்களை வலுப்படுத்திக் கொள்ள தலித் கட்சிகள் தயங்க வேண்டியதில்லை.அதே சமயம் அக்கூட்டணிகளும், தேர்தல் அரசியலும் தலித் அரசியலை நீர்த்துப் போகவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

10, திமுகவைப் பொறுத்தவரை தேர்தலின் முடிவுகள் எப்படியிருந்தாலும் கட்சி வலுவிழக்காது. ஆனால்
தேர்தலில் தோற்றால் மத்தியில் திமுகவின் செல்வாக்கு மங்க ஆரம்பித்துவிடும். எதிர்காலத்தில் காங்கிரஸ்
அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. மேலும் மத்திய அரசு கவிழ்ந்தால் புதிய அரசியல் கூட்டணிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேசிய முண்ணனி போன்ற முயற்சிகள், அல்லது மூன்றாம் அணி உருவாகலாம். தேர்தலின் தோல்வி திமுகவிற்கு பல வழிகளில் மோசமான பாதிப்பினை
ஏற்படுத்தும். தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டாலும் அதிமுகவின் முக்கியத்துவம் வெகுவாக குறையாது.
1996 ல் தோற்ற அதிமுக 1998 பாராளுமன்றத் தேர்தலில் கணிசமாக வெற்றி கண்டதை இங்கு கருத்தில்
கொள்ள வேண்டும். அதிமுகவின் ஒட்டு சதவீதம் கிட்டதட்ட நிலையாக உள்ளது. அது வெகுவாக குறைந்ததில்லை. ஒருவேளை இத்தேர்தலில் வெகுவாகக் குறைந்தால் அதை மீண்டும் பெறுவது கடினம். 2004 போல் 2006ல் அதிமுக பெருந் தோல்வியை எதிர் கொள்ளும் வாய்ப்புகள் குறைவு என்றே தோன்றுகிறது.

11, குறிப்பிடத்தகுந்த நல்ல மாற்றம் தேவையெனில் தமிழக அரசியல் இரண்டு கழகங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது அவசியம். விஜயகாந்த்தின் கட்சி நிலைக்குமானால் அது காங்கிரஸின்,கழகங்களின் ஒட்டுவங்கியை பாதிக்கலாம். கிட்டதட்ட 60% முதல் 66% வாக்குகள் இரு கழகங்கள் வசம் இருக்கையில் இன்னொரு கட்சி அல்லது கூட்டணி அசுர வளர்ச்சி பெற்றால் ஒழிய இவற்றின் ஒட்டு சதவீதம் குறையாது. தேர்தலில் வாக்களிதோர் சதவீதம் கிட்டதட்ட 30% ஆக இருக்கும் போது இதில் கணிசமானவர்கள் ஒரு புதிய கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு வாக்களிக்க முன்வந்தால் தமிழக அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படும்.அவர்கள் நம்பிக்கையை பெறும் வகையில் இப்போது எந்தக் கட்சியும் இருப்பதாகத் தோன்றவில்லை. எனினும் எதிர்காலத்தில் இதற்கான சாத்தியக் கூறு இருக்கிறது.

12, இடதுசாரி கட்சிகள் தேர்தல் கூட்டணிகளுக்கு அப்பால் அரசியல் யுக்திகள் குறித்து யோசிக்க
வேண்டும். இல்லையேல் அவர்கள் கதி மேற்கு வங்கத்திலும், கேரளத்தில் உள்ள கூட்டணிகளில் உள்ள
சிறிய கட்சிகள் போலாகி விடும். தொழிற்சங்க அரசியலை ஒரு கட்டத்திற்கு மேல் எடுத்துச் செல்வது கடினமாக இருக்கும் போது, பல்வேறு காரணங்களால் தொழிற்சங்கள் முன்பு போல் பலத்துடன் செயல்பட முடியாத போது இடதுசாரிகளின் அடித்தளமான தொழிற்சங்கங்களை நம்பி கட்சியை முன்னெடுத்துச்
செல்ல முடியாது. இடதுசாரிகள் தலித் அரசியல் சக்திகள் போன்றவற்றுடன் தோழமை கொள்வது போன்ற சாத்தியப்பாடுகளை பரிசீலிக்க வேண்டும்.

13,இந்தத் தேர்தலில் யார் வென்றாலும் தோற்றாலும் அடுத்த சில பத்தாண்டுகளில் தமிழகம் பொருளாதார
ரீதியாக முன்னேறியாக வேண்டியது கட்டாயம்.வேலைவாய்ப்புகள் பெருகாவிட்டால் சமூகப் பிரச்சினைகள் கூர்மை அடையும். தமிழக விவசாயத்தினைப் பொறுத்த வரை நீர் பெரும் பிரச்சினையாக இருக்கும் என்பதால் நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களுக்கு முன்னுரிமை எந்த அளவிற்கு கொடுக்க முடியும், மாற்றுப் பயிர்கள் என்னென்ன என்பதை குறித்து விவாதிக்க வேண்டும். அரிசி மீது நமக்கு உணர்வு பூர்வமான பற்று இருக்கலாம். அது புத்திச்சாலித்தனமாக, யதார்த்தமாக சிந்தித்து முடிவெடுப்பதை தடுக்கக் கூடாது.

14,இந்த தேர்தலில் யார் வெல்கிறார்கள் என்பதை விட அதன் தாக்கங்கள் எவையெவை என்பதே
எனக்கு முக்கியமாகப்படுகிறது. கூட்டணி ஆட்சி ஏற்பட்டாலும் கேரளா, மே.வங்கம் போல் நிலைத்த
கூட்டணிகள் உருவாகுமா என்பது கேள்விக்குறிதான். பா.ம.க தேர்தலுக்குப் பின் அணிமாறினாலும்
வியப்படைய ஒன்றுமில்லை. ஒரு வேளை யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாமல் யாரும்
அரசு அமைக்க முடியாமல் போகலாம். அதன் பின் இதே கூட்டணிகள் தொடருமா என்பது
சந்தேகமே.

15, ஜெயலலிதா அரசு அமைத்தாலோ அல்லது கருணாநிதி அரசு அமைத்தாலோ பெரும் வித்தியாசம்
இராது. ஜெயலலிதா சர்வாதிகாரியாக செயல்படுவார் என்ற அச்சம் காரணமில்லாமல் இல்லை. ஆனால் அவர் 2004க்குப் பின் நடந்து கொண்டது போல் நடந்து கொள்ளலாம். கருணாநிதி ஆட்சிக்கு வந்தால்
மத்தியில் திமுகவின் செல்வாக்கு அதிகரிக்கும், அது இங்கும் பிரதிபலிக்கும். ஏற்கனவே கருணாநிதியின்
கடைக்கண் பார்வையின் குறிப்பறிந்து செயல்படும் காங்கிரஸ் காலடியில் விழுந்துவிடும். அதானல் அது
இன்னும் பலவீனமடையும். ஆனால் காங்கிரஸ்காரர்கள் ஒரு கட்டத்திலேனும் தங்கள் கட்சியை வலுப்படுத்துவது குறித்து யோசித்தாக வேண்டும். இரண்டு கழகங்களின் தோள்களில் மாறி மாறி
சவாரி செய்திருப்பதால் காங்கிரஸின் ஒட்டு வங்கி அப்படியே நீடிக்கும் என்று கூற முடியாது. அது
குறையக்கூடும்.

16, ஒரு கட்சி தொடர்ந்து பல ஆண்டுகள் ஆண்டு வந்துள்ளதென்பதலாயே அதுதான் எப்போதும் ஆட்சி
செய்யும் என்று கருத முடியாது. வீழ்ச்சி அடைய பத்தாண்டுகள் போதும், அதன் பின் அக்கட்சி ஆட்சிக்கு
வரவாய்பில்லை என்று கூட ஆகலாம்.1967 ல் தோற்ற காங்கிரஸ் தமிழ்நாட்டில் அதன் பின் ஆட்சியைப் பிடிக்க முடியவே இல்லை. இப்போது அதற்கு 10% – 12% ஒட்டுகள் கிடைக்கின்றன. அது பாராளுமன்றத்
தேர்தலில், சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதை விட கூட்டணியை விரும்புகிறது. எண்ணிகையை முக்கியமாகக் கருதினால் கூட்டணியே வழி என்று கருதுகிறது. ஆனால் காங்கிரஸ் இழந்த பலத்தினைப் பெற முடியவேயில்லை. அதன் பின் இரண்டு தலைமுறை காங்கிரஸ்காரர்கள் வந்தும் காங்கிரஸ்
பலம் பெறவேயில்லை. உ.பி, பீகாரில் ஒரு காலத்தில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் ஆண்டது.
ஆனால் 1980களிலிருந்து அது வலுவிழக்கத்துவங்கியது. இப்போது காங்கிரஸ் தனித்து நின்று ஆட்சி
அமைப்பது அங்கு சாத்தியமேயில்லை. குஜராத்திலும் இதே போல்தான். மேலும் காங்கிரஸ் கட்சியின்
ஒட்டு வங்கியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அதால் இழந்த பலத்தில் பாதியைக் கூட பிடிக்க முடியாத
நிலை உள்ளது. இது போன்ற ஒரு நிலை தமிழகத்தில் நிகழாது என்று கூற முடியாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் மக்கள் காலாகாலத்திற்கும் இரண்டு கழகங்களில் ஏதேனும் ஒன்றையே தேர்ந்தெடுத்து ஆட்சி அமைக்க வைப்பார்கள் என்று கருத முடியாது. கூட்டணி ஆட்சி ஏற்பட்டால்
அது வேறு பல மாற்றங்களுக்கு வழிவகுக்கும். ஆட்சியில் பிற கட்சி(கள்) பங்கேற்றாலும், பங்கேற்காவிட்டாலும் ஒரு கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதே அது பலவீனமடையத் துவங்கிவிட்டது
என்பதாகும். அது தொடர்ந்து பலவீனமடையும் என்பதில்லை. மாறாக ஒற்றைக் கட்சி ஆதிக்கம் சரியத்
துவங்குகிறது என்றே பொருள். உ.பியில் காங்கிரஸின் பலம் குறைய ஒரு முக்கிய காரணம் ஒரு கட்டத்தில்
அதன் தலித் வாக்குவங்கி பகுஜன் சமாஜ் கட்சிக்கு சாதமாகவும், உயர்ஜாதியினர் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்ததுமாகும். குஜராத்தில் இதே போன்ற மாற்றம் வேறொருவிதத்தில் நடந்தது. காங்கிரஸ் காலங்காலமாக காத்த வாக்குவங்கிகள் நிலைக்கவில்லை. தமிழ்நாட்டிலும் இது போன்ற நிலை எழாது என்று
கூற இயலாது, அத்தகைய நிலை எழுந்தே தீரும் என்றும் கூற முடியாது. அதற்கான சாத்தியக் கூறு
இருக்கிறது என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

17, மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் உள்ளது போன்ற கூட்டணிகள் இங்கும் உருவாகலாம். அதற்கு 2006 தேர்தல் ஒரு துவக்கமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணிக்கு
எதிராக காங்கிரஸ் எவ்வளவோ முயன்றும் வெற்றி பெற முடியவில்லை. தமிழ்நாட்டில் அது போன்ற நிலை
உருவாக வாய்ப்புகள் குறைவு. எது எப்படியாயினும் கூட்டணி ஆட்சி என்பது இங்கு எப்படி செயல்படுகிறது என்பதைப் பொருத்தே கூட்டணி ஆட்சிகளை மக்கள் தெரிவு செய்வது இருக்கும். ஒரு தேர்தலில் கூட்டணி ஆட்சி, இன்னொரு தேர்தலில் ஒரு கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை என்று மக்களின் தெரிவு
இருக்கலாம்.

18, விஜயகாந்த் கட்சியை ஒராண்டிற்கு முன்பு துவக்கியிருந்தால் கணிசமான தாக்கத்தினை தேர்தலில்
ஏற்படுத்தியிருக்கலாம். மக்கள் ஆதரவை ஒட்டுகளாக மாற்ற உதவும் அமைப்பு ரீதியான பலம் அவருக்கு
இல்லை. ஆனால் அமைப்பு ரீதியாக கட்சியை அவர் வலுப்படுத்தினால் 4 அல்லது 5 ஆண்டுகளில் அவர்
கட்சி மூன்றாவது அல்லது நாலாவது பெரிய கட்சியாக மாறக்கூடும். ஆந்திராவில் ராமாராவ் சாதித்ததை
இங்கு சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.அதே சமயம் முயற்சி செய்தால், சரியான அணுகுமூஅரியை கடைப்பிடித்து கட்சியை வளர்த்தால் பாமக அல்லது மதிமுக போன்ற கட்சிகளுக்கு இணையாக அவர் கட்சி வளர்வதும் சாத்தியம். கழகங்களின் வாக்குவங்கியில் உடனடியாக அவர் கட்சியினால் பாதிப்பு
ஏற்படுத்த முடியாது. நீண்ட காலப் போக்கில் அது சாத்தியமாகலாம், அதே போல் மதிமுக, பாமகவின்
வாக்குவங்கியையும் அவர் கட்சி பாதிக்கலாம்.

19, இன்றைய உலகமயமாகும் சூழலில் கனிம வளங்கள், நீர் வளம் அதிகமற்ற தமிழகம் எத்தகைய பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும், எத்தகைய துறைகள், தொழில்களில் தன்னை முதன்மையான இடத்தில் இருத்திக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் யோசிக்க வேண்டும். இந்தியப் பொருளாதார
வளர்ச்சி 8% என்றால் இங்கு 11% என்று செய்ய முடியுமா என்று யோசிக்க வேண்டும். நம்முடைய மிகப் பெரிய பலம் நம் மானுட ஆற்றல்.இதை பிரதானப்படுத்தி, நம் அறிவாற்றலையும், அனைத்து வித உழைப்பையும் கொண்டு தமிழகம் இந்தியாவில் மிகச் சிறந்த மாநிலமாக, உலக அளவில் கவனமும், மரியாதையும் பெறும் மாநிலமாக மாற முடியுமா என்று கேட்டுக் கொண்டு, முடியும், அதை சாத்தியமாக்குவோம் என்று சிந்திக்கின்றன அரசியல், நிர்வாகத் தலைமை வேண்டும். இந்த கண்ணோட்டம் இங்கு எந்த அரசியல் கட்சிக்காவது இருக்கிறதா, இனி வரும் தலைமுறைகளின் உதவியுடன் வளமான, முன்னேறிய தமிழகத்தினை உருவாக்கத் தேவையான திட்டமும், தொலை நோக்கும் இங்கு எந்தக் கட்சிக்காவது இருக்கிறதா.துரதிருஷ்டவசமாக இது போன்ற சிந்தனை கட்சி அரசியல் சார்பற்ற அமைப்புகளுக்கும் இருப்பதாகக்
தெரியவில்லை.

மேலே உள்ள ஒவ்வொன்றையும் விரிவாக எழுதினால் கிட்டதட்ட 20 கட்டுரைகள் எழுதலாம். அப்படி
எழுதுவதற்கான நேரமோ , பொறுமையோ இல்லை. ஒரு விவாததிற்கான துவக்கப் புள்ளிகள் என இவற்றைக் கொள்க.

——————–

Series Navigation