ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்)
வாழ்வுடன் தொடர்புடைய, தங்களை பாதிக்கிற, யோசிக்க வைக்கிற விஷயங்கள் குறித்து – மனப்பூர்வமாகவும், மனம் விட்டும் – பேசவும், கேட்கவும் வந்திருந்த கூட்டத்தில் அந்தப் பெண்ணும் இருந்தார். அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்கிற மன உந்துதலாலோ, தன்னுடைய தோழியால் அழைக்கப்பட்டோ அந்தப் பெண் வந்திருக்கலாம். அவர் நன்றாக, நாகரீகமான உடையணிந்திருந்தார். பிறர் மனதில் அவர் பால் ஒரு கெளரவத்தையும் மரியாதையையும் ஏற்படுத்துகிற தோற்றம் அவருடையது. அதே நேரத்தில், தன் தோற்றத்தின் – மேலான இலட்சணத்தையும், அழகையும் – அவர் தெளிவாக அறிந்திருந்தார். சதாநேரமும், தன்னைப் பற்றிய முழுப் பிரக்ஞையுடனும், சுய நினைவுடனுமே அவர் இருந்தார் – தன்னுடைய உடலழகு, பார்வைகள், சிகையலங்காரம், தன் தோற்றமும், செய்கைகளும் பிறரிடம் ஏற்படுத்தும் பாதிப்புகள், அபிப்பிராயங்கள் பற்றிய பிரக்ஞைகள் அவை. தனிமையிலும், தனக்குள்ளேயும் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு, தணிக்கைச் செய்யப்பட்டு, மெருகேற்றப்பட்டவை அவரின் தோரணைகளும் செயல்களும், பாவனைகளும். அது, சில நிமிடங்களுக்கு ஒருமுறை, தான் அமர்ந்திருந்த நிலையையும், தன்னுடைய தேக, மனோ பாவங்களையும், தேர்ந்த விதத்தில் அவர் மாற்றிக் கொண்டதிலிருந்து தெரியவந்தது. எது நேர்ந்த போதும், தான் வளர்த்துப் பண்படுத்தி வைத்திருக்கும் ஒரு நிலையிலும் தோற்றத்திலும் தன்னைப் பொருத்திக் கொள்வதில் அவர் உறுதியாய் இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. கூட்டத்தினர் அனைவரும் தீவிரமாகவும், ஆழ்ந்தும் விவாதித்துக் கொண்டு இருந்த நேரம் எல்லாம் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதத்திலிருந்து மாறவில்லை. நோக்கங்களுடனும், நோக்கங்களுக்காகவும் தன்னை மறந்து பேசிக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்த அந்தக் கூட்டத்திடையே, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்தது போலவும், அதில் தானும் பங்கெடுத்துக் கொள்வது போலவும் காட்டிக் கொள்ள அந்த சுயநினைவு மிக்க பெண் முயன்று கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது. விவாதிக்கப்படுகிற பொருளில் விஷய ஞானம் இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், அவர் ஏதும் பேசவில்லை. ஆனால், அவர் கண்களில் தெரிந்த ஒருவித திகைப்பும் பயமும் அவரால் அந்தத் தீவிர உரையாடலில் கலந்து கொள்ள இயலவில்லை என்பதைக் காட்டியது. தன்னுடைய உண்மையான உணர்வுகளை மறைத்து, தன்னுடைய பண்படுத்தப்பட்ட பாவனைகளைத் தொடர்ந்தபடி, தனக்குள்ளேயே அவர் பின்வாங்குவதையும் உணர முடிந்தது. பிறரால் தூண்டப்படாததும், தன்னிச்சையுமான இயல்பு (spontaneity) அவரின் விடாமுயற்சியால் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு தோற்றத்தையும், பாவனையையும் தனக்குள்ளே வளர்த்துக் கொள்கிறார்கள்; அதையே வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். தன்னுடைய இலாபகரமான வணிகத்தையும் தன் வாழ்வின் வெற்றியையும் தன் நடையில் காட்டும் உத்யோகஸ்தர், தன்னுடைய இருப்பையும், வருகையையும் தன் புன்முறுவலால் அறிவிக்கும் மனிதர், தேடலும் அழகுணர்வும் நிறைந்த கலைஞன், மரியாதையும் பணிவும் நிறைந்த சீடன், கட்டுப்பாட்டுடன் உலக இன்பங்களை மறுதலித்து ஒழுகும் ரிஷி என்று நாம் வாழ்வில் பலவிதமான தோற்றங்களையும், பாவனைகளையும் பார்க்கிறோம். சுயப்பிரக்ஞை நிறைந்த அந்தப் பெண்ணைப் போலவே, மத கோட்பாடுகளிலும் தவத்திலும் நம்பிக்கை கொண்ட ரிஷியும் சுயக்கட்டுப்பாடு என்கிற தோற்றத்துக்குள்ளூம் பாவனைக்குள்ளும் தன்னைப் புகுத்திக் கொள்கிறார். சுயக்கட்டுப்பாடு என்பது மறுதலிப்பையும் தியாகத்தையும் தற்பயிற்சியினால் பண்படுத்தி வளர்ப்பதிலேயே வருகிறது. பிறர் தன்னைப் பற்றி கொள்ளப் போகும் மதிப்பீடுகளுக்காகவும், அந்த மதிப்பீடுகளினால் தனக்கு விளையப் போகும் பலன்களுக்காகவும் அந்தப் பெண் தன்னிச்சையான இயல்பைத் தியாகம் செய்தார். அதேபோல், ஆன்மீக ரிஷியும் வாழ்வின் எல்லையை, இறுதியைக் காண்பதற்காகவும், கடப்பதற்காகவும் தன்னை பலியிட்டுக் கொள்கிறார். இருவருமே வெவ்வேறு தளங்களில், வெவ்வேறு நிலைகளில், ஆனால் ஒரேவிதமான விளைவைப் பற்றியே சிரத்தை கொண்டுள்ளனர். ரிஷிக்குக் கிடைக்கிற பலன், அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கிற பலனை விட, சமூக அளவில் உயர்ந்ததாகவும், பயனுள்ளதாகவும் இருந்தாலும் கூட, இருவருக்கும் வித்தியாசம் இல்லை. அந்தப் பெண்ணை விட ரிஷியோ, ரிஷியை விட அந்தப் பெண்ணோ மேலானவர் இல்லை. இருவரும் அடிப்படையில் ஒன்றானவர்களே. இருவருமே புத்திசாலிகளோ, நுண்ணறிவாளர்களோ இல்லை. ஏனெனில், இருவரின் தோற்றங்களும், வெளிப்பாடுகளும் அவர்கள் மனதின் சிறுமையையும், தாழ்மையையுமே காட்டுகின்றன. சிறுமையும் தாழ்மையும் கொண்ட மனம் எப்போதும் ஞானமுள்ளதாகவோ, வளமானதாகவோ மாற இயலாது. அது எப்போதும் சிறுமையிலும் தாழ்மையிலும் தான் உழன்று கொண்டிருக்கும். அத்தகைய மனமானது, தன்னை அலங்கரித்துக் கொள்ளவோ, நற்பண்புகளைப் பயிலவோ விழையலாம். ஆனபோதிலும் கூட அது எப்போதும் சிறுமையானதாகவும், ஆழமில்லாததாகவும், அற்பமானதாகவுமே இருக்கிறது. வளர்ச்சி, முதிர்ச்சி, அனுபவம் என்கிற பெயர்களில் எல்லாம் அது தன்னுடையை சிறுமையையே வளர்த்துக் கொள்கிறது. ஓர் அருவருப்பான, அசிங்கமான விஷயத்தை அழகாக்க முடியாது. அதுபோலவே, சிறுமை கொண்ட மனத்தையும் அழகாக்கவோ, வளமாக்கவோ முடியாது. சிறுமை கொண்ட மனம் துதிக்கின்ற கடவுளரும் சிறுமையானவரே. கல்வி கேள்விகளால் பெறுகிற புலமையாலோ, புத்திசாலித்தனமான வார்த்தை விளையாட்டுக்களாலோ, விவேகம் நிறைந்த மேற்கோள்களாலோ, தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் அலங்காரங்களாலோ, பூஷணங்களாலோ- சிறுமை கொண்ட மனமானது – பூரணமிக்கதாகவோ, ஆழங்காண இயலாத ஞானமுள்ளதாகவோ மாறுவதில்லை. அகாதமான ஆழமுள்ள மனமே அழகாகும். நகைகளும் நாம் தேடிப் பிடித்த நற்பண்புகளூம் அழகாகா. தன்னுடைய சிறுமையையும் தாழ்மையையும் எள்ளளவும் சந்தேகமின்றி உணர்ந்த மனமே, ஒப்பீடுகள் செய்யாத, மதிப்பீடுகளை உதறிய மனமே, அழகாக இயலும். தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பும், அதனால் பிறக்கிற தன்னுணர்தலுமே அத்தகைய அழகு ஒருவருள்ளே வந்து தங்கி இருத்தலுக்கு வழி வகுக்கும்.
அந்தப் பெண்ணின் வெளிப்பூச்சும், ஒழுங்கும் ஒருமுகமும் படுத்தப்பட்ட ரிஷியின் தோற்றமும் – அடிப்படையில் ஒருவருக்கு இருக்க வேண்டிய, தன்னிச்சையான இயல்பை – வேண்டாம் என்று மறுதலிக்கிற – அதனால் வதைபடுகிற – சிறுமை கொண்ட மனத்தின் விளைவுகளே ஆகும். பண்படுத்தப்படாத, தன்னிச்சையான இயல்பானது – தங்களின் சரியான அடையாளத்தை, இயல்பான குணாதிசயங்களைத் தங்களுக்கும் பிறருக்கும் காட்டிவிடும் என்று – அந்தப் பெண்ணும், ரிஷியும் பயப்படுகிறார்கள். எனவே, தன்னிச்சையான தன்மையை அழிப்பதற்கு அவர்கள் இடையறாது முயல்கிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்த வெளிப்பாடுகளுக்கும், வெளிப்பூச்சுகளுக்கும், தோற்றங்களுக்கும், தங்களைப் பற்றிய முடிவுகளுக்கும் தாங்கள் எந்த அளவிற்கு இணங்கிப் போகிறோம் என்பதை வைத்து அவர்கள் இருவரும் தங்களின் வெற்றியை மதிப்பிடுகிறார்கள். ஆனால், எது ஒன்று குறித்தும் கேட்கப்படுகிற ‘இது என்ன ? ‘ என்கிற கேள்விக்கு, விடைதருகிற ஞானச்சுரங்கத்தின் ஒரே சாவி தன்னிச்சையான இயல்புதான். தன்னிச்சையான பிரதிபலிப்பே – மனதை, அதன் சரியான வடிவத்துடன், கண்டுபிடிக்கவும், வெளிக்காட்டவும் முடியும். ஆனால், அப்படி கண்டுபிடிக்கப்படுகிற மனமானது, அலங்கரிக்கப்படும்போது, தன்னை மட்டுமல்ல, கூடவே தன்னிச்சையான இயல்பையும் அழித்துக் கொள்கிறது. தன்னிச்சையான இயல்பைக் கைவிடுவதும், அழித்துக் கொள்வதும் சிறுமை கொண்ட மனத்தின் வழிகளாகும். அப்படி அழித்துக் கொண்ட பின்னர் சிறுமை கொண்ட மனமானது, தேவையான இடங்களிலும், தேவையான நிலைகளிலும் தேவையான அளவுக்கு தன்னை ஜோடித்துக் கொண்டும், அரிதாரம் பூசிக்கொண்டும் அகமகிழ்கிறது. இத்தகு ஜோடனைகள் மற்றும் வேடங்கள் மூலம் சிறுமை கொண்ட மனமானது தன்னைத் தானே வழிபட்டுக் கொள்கிறது. தன்னிச்சையான இயல்பாலும், விடுதலை பெற்ற மனத்தாலுமே, தன்னையுணர்கிற கண்டுபிடிப்பைச் செய்ய இயலும். கட்டுப்படுத்தப்பட்ட மனம் எதையும் கண்டுணர இயலாது. கட்டுப்படுத்தப்பட்ட மனமானது மிகவும் சக்தி வாய்ந்ததாகவோ, தயையற்றதாகவோ கூட இருக்கக் கூடும்; ஆனால், அதற்கு எதையும் கண்டுணர இயலாது என்பதால், ஆழமான ஞானத்தை அதனால் கண்டடைய இயலாது. பயம்தான், கட்டுப்பாடு, ஒழுக்கம் என்கிற தடைகளை உருவாக்குகிறது. தூண்டப்படாமல் தன்னிச்சையான இயல்புடனே பயத்தைக் கண்டறிதலே பயத்திலிருந்து விடுபட வழியாகும். ஓர் ஒழுங்கிற்கும், தோற்றத்திற்கும், உருவமைப்பிற்கும் இணங்கி நடத்தல் – அது எந்த நிலையில் இருப்பினும் – பயத்தின் அடையாளமே. அந்தப் பயமே முரண்பாடுகள், குழப்பம், பகை போன்றவற்றை வளர்க்கிறது. பண்படுத்தப்படாத தன்னிச்சையான இயல்பிலே இயங்குகிற மனமானது, பயமற்ற புரட்சி செய்கிறது; விடுதலை காண்கிறது. பயப்படுகிற எந்த மனமும் தன்னிச்சையான இயல்பையோ, விடுதலையையோ அடைய இயலாது.
தன்னிச்சையான இயல்பின்றி ஆத்ம ஞானம் அடைய இயலாது. ஆத்ம ஞானம் அடையாவிட்டால், மனமானது போகிற, வருகிற காட்சிகளால் வசீகரிக்கப்பட்டு, காட்சிகளின் தாக்க்கங்களூக்கேற்ப – உருமாறிக் கொண்டே இருக்கும். அத்தகைய தாக்கங்கள் – காண்கிற காட்சியின் பரிணாமத்திற்கும் எல்லைக்கும் உட்பட்டு – மனத்தைக் குறுகியதாகவோ, விரிவானதாகவோ ஆக்கலாம்; என்ற போதிலும், மனம் விடுதலை அடையாமல், கண்ட காட்சியின், அதன் தாக்கத்தின் வரையறைக்குளேயே இருக்கும். காட்சிகளின் தாக்கங்கள் மூலம் வடிவமைக்கப் பட்டுக் கொண்டிருக்கிற மனத்தை, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவோ, உருக்குலைக்கவோ இயலாது. எதன் அடிப்படையிலும் தூண்டப்படாத, வடிவமைக்கப்படாத மனத்தை ஆத்ம ஞானம் என்கிற சுய அறிவின் மூலமே பெற இயலும். ஆத்மாவானது காட்சிகள், காட்சிகளின் தாக்கங்கள், பண்படுத்தப்படுதல் என்கிறவற்றால் வடிவமைக்கப்படுகிறது. ஆத்மாவை அறிதல் என்பது, எதன் தாக்கங்களுக்கும் உட்படாத, வடிவமைப்புகளைத் தகர்க்கிற, காரணங்களோ பண்படுத்தலோ இல்லாத, தன்னிச்சையான கண்டுபிடிப்பின் மூலமே சாத்தியமாகும்.
(மூலம்: வாழ்க்கை குறித்த வர்ணனைகள் தொகுப்பு: 1 – ஜே. கிருஷ்ணமூர்த்தி [Commentaries on living Volume: I – J. Krishnamurthi])
- வழியோரம் நதியூறும்…
- குளிர் காலம்
- ரமேஷ் சுப்பிரமணியன் கவிதைகள்
- புவி யீர்ப்பு விசை.
- பின் தங்கிய சுவடுகள்
- டிராபிக் லைட்டுகள் பற்றிய முக்கியமான அறிவுகள்
- டாக்டரும் கத்திாிக்கோலும்.[டாக்டர் ஒருவர் பேஷண்ட் வயிற்றில் கத்தாிக்கோலை வைத்துத் தைத்துவிட்டார் என்ற செய்தி வாசித்தபின் உருவான
- குஞ்சன்வயலிலிருந்து தமிழீழத்தை நோக்கி…….சோபாசக்தியின் கொாில்லா — ஒரு விமர்சனம்
- மாட்ரிக்ஸ் (Matrix) என்ற திரைப்படத்தின் கேள்விகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 8 -ஆ.மாதவனின் ‘பறிமுதல் ‘ – தர்மமும் சட்டமும்
- கேரட் சாதம்
- தேங்காய்பால் போண்டா
- ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி
- அறிவியலாளர்கள் அரிசியின் மரபணு குறிப்பேட்டை விவரிக்கிறார்கள்
- மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிர் செய்ய இந்தியா அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.
- நம்மைப் பற்றி நாம்.
- மதுரையும் மல்லிகைபூவும்
- சின்ன கவிதைகள்
- இளமானே…!
- ஒரு தாயின் அழுகை
- பெரியாழ்வார்
- நகர் வெண்பா – 5
- தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
- பேரூந்து இலக்கம் 86
- இஸ்ரேலும் இந்தியாவின் இடதுசாரிகளும் : கோஷங்கள் யாருக்காக ?
- பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் – இஸ்ரேல் பற்றி ஜனவரி 31, 1970இல் எழுதியது
- அனுபவ மொழிகள்
- தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பு
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி
- முஷாரஃபின் வாக்கெடுப்பு
- ஓநாய்க்கூட்டம்
- அண்ணாச்சி