நல்ல ஞாபக சக்திக்கு நல்ல தூக்கம் தேவை
ராத்திரியெல்லாம் தூங்காமல் இருந்தால் ஞாபக சக்தி குறைகிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
Nature Neuroscience டிஸம்பர் 2000 இதழில் வெளிவந்திருக்கும் இந்த ஆய்வு, பகலில் படித்ததை ஞாபகம் வைத்துக்கொள்ள இரவில் நல்ல தூக்கம் தேவை என்று கண்டறிந்திருக்கிறது.
இந்த வழிமுறையை கெடுத்தால், ஒரே ஒரு இரவு மட்டும் தூங்காமல் கெடுத்தாலும், சில விஷயங்களை கற்றுக்கொள்ளாமல் போய்விடுகிறார்கள் என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ராபர்ட் ஸ்டிக்கோல்ட் கூறுகிறார்.
24 ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு, இந்த ஆய்வு செய்யப்பட்டது.
ஒரு திரையில் (தொலைக்காட்சிப் பெட்டியில் தோன்றும் வீடியோ படம்) ஒரு சில நொடிகளே தோன்றும்படிக்கு சில பிம்பங்களை காண்பித்தார்கள். அடுத்த நாள் அவர்களை எந்த எந்த பிம்பங்கள் தோன்றின என்று தேர்வு வைத்தார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் மீண்டும் அந்த பிம்பங்களை நினைவுக்கு கொண்டுவர எவ்வளவு நேரம் பிடிக்கிறது என்று தேர்வாளர்கள் குறித்துக்கொண்டார்கள்.
இந்த மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழுவுக்கு அன்று இரவு சரியான தூக்கம் தூங்கும் படியும் (ஒரு நாளைக்கு 8 மணிநேரம்) மற்றொரு குழு விழித்து இருக்கும் படியும் வைத்து இதே தேர்வை வேறு பிம்பங்களை வைத்து நடத்தினார்கள்.
அன்றிரவு தூங்கிய மாணவர்களே முன்னைவிட குறைந்த நேரத்தில் பிம்பங்களை ஞாபகத்திலிருந்து அடுத்த நாள் சொன்னார்கள். தூங்காத மாணவர்களோ, இந்த பிம்பங்களை ஞாபகத்திலிருந்து சொல்லவில்லை, அல்லது ஞாபகத்திலிருந்து சொல்ல எடுத்த நேரம் அதிகமாயிற்று.
இதை விட முக்கியமான விஷயம், தூங்காத மாணவர்கள், அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் விட்ட தூக்கத்தை எல்லாம் பிடித்து அதிக காலம் தூங்கினாலும், தொடர்ந்து சரியான நேரம் தூங்கிய மாணவர்களை விட குறைவாகவே மதிப்பெண் பெற்றார்கள்.
இன்னும் பல ஆய்வுகள் செய்து ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்துவ பள்ளி, இந்த ஆய்வை வெளியிட்டிருக்கிறது.
தூங்கும்போது, மூளையில் இருக்கும் கார்டெக்ஸ் (Cortex) பகுதியில் அன்று பகலில் கற்றதையெல்லாம் மீண்டும் திருப்பி அலசி ஞாபகத்தில் அழுத்துகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வழிமுறையை ஒரு முறை கெடுத்தாலும், அவர்கள் புதிய விஷயங்களை கற்பது குறைந்து விடுகிறது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். புதிய விஷயங்களை கற்பதில் இந்த கார்டெக்ஸ் (Cortex) பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது.
இரவெல்லாம் தூங்காமல் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்களின் முயற்சி வீணானது மட்டுமல்ல, எதிர்விளைவைத் தரக்கூடியது என்றும் இதனால் தெரிகிறது. இழந்த தூக்கத்தோடு, நினைவுகளையும் இழக்கிறோம் இதனால்.
ராத்திரியெல்லாம் தேர்வுக்குப் படிப்பவர்களின் ஞாபகசக்தி, வேறொரு பகுதியில் சேமிக்கப்பட்டு இரண்டாவது இரவே மறக்கப்பட்டுவிடுகிறது.
மாணவர்களுக்கு மட்டும் இந்த 8 மணிநேரத் தூக்கம் தேவை என்றில்லை. வேலை செய்யும் எல்லோருக்கும் இந்த தூக்கம் தேவை. தூக்கமில்லாதவர்கள் சரியாக வேலை செய்வதுமில்லை, வேலை செய்தால் அதற்கு நீண்ட நேரமும் ஆகிறது.
இரவெல்லாம் தங்கி மருத்துவமனைகளில் இண்டெர்ன் ஆக வேலை செய்யும் மாணவர்களும், புதிய விஷயங்களை தொடர்ந்து கற்று உபயோகப்படுத்த வேண்டிய வேலையிலுள்ள யாவரும், இது போல தூக்கமில்லை எனில் அவர்கள் கற்கும் விஷயங்களி தண்ணீரில் எழுதப்பட்ட விஷயங்களாக மறைந்துவிடுகின்றன என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் அதிக விபரங்களுக்கு Sleep Foundation என்ற முகவரிக்குச் செல்லுங்கள்