து ணை – குறுநாவல் -பகுதி 5

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

ம.ந.ராமசாமி


—-

‘ராத்திரிதான் சார் பயம். ஏன் சார் அப்டி ? ‘

‘ராத்தினா இருட்டு. கண் சரியாத் தெரியாது. எங்க என்ன இருக்கோ, எதன்மீது விழுவோமோ, எது காலை இடறி விடுமோன்னு சிறு பயம்…

அப்றம் நம்ம பெரியவங்க பேய் பிசாசை வேறு கற்பனை பண்ணிச் சொல்லி வெச்சிருக்காங்க. அவை பகல்ல வராதாம். ராத்திரிதான் வநது கூத்தாடுமாம். அது எதிரே வருங்கிற பயம். ராத்திரி நம் கண் தெரியறது இல்லையே… ‘

‘நிச்சயமா பேய் பிசாசு இல்லேங்கறேளா சார் ? ‘

‘இல்ல! ‘

‘செத்துப் போனவங்க ஆத்மா, உயிர் எங்க போறது ? ‘

‘செத்துப் போனவங்க உடலோடு எல்லாம் போயிடும். மனித உடலில் ஆத்மாவும் கிடையாது. உயிர்னு ஒண்ணுங் கிடையாது. கேக்கறியா ? ‘

‘சொல்லுங்க சார். ‘

‘உடல் ரத்த ஓட்டத்தினால் இயங்குகிறது. அந்த ரத்த ஓட்டம் நின்னு போனால், உடல் மரணம் அடைகிறது, இந்தக் காரைப்போல! ஜீவராசிகளின் உடலுக்கு ரத்த ஓட்டம் மாதிரி, இந்தக் காருக்கு பெட்ரோல் ஓட்டம் தேவை. பெட்ரோல் ஓட்டம் இல்லைன்னா கார் நின்னுடறது. ரத்த ஓட்டம் இல்லைன்னா உடல் மரணம் அடைஞ்சுடறது. ‘

‘அவ்வளவுதானா ? ‘

‘ஆமா. அத்தனை சிம்ப்பிளான விஷயம். ‘

‘அப்ப ஆத்மா இல்லைன்னு சொல்றீங்களா. ‘

‘இல்லை. ‘

‘பரமாத்மாவும் இல்லைங்கறீங்களா ? ‘

‘பரமாத்மான்னா கடவுள்தானே ? ‘

‘ஆமா ‘

‘பரமாத்மாவும் கிடையாதுதான். ‘

‘ஆத்மா பரமாத்மாவை அடையறதுங்கறது பொய்யா ? ‘

‘முழுப்பொய்! ‘

‘அப்படி ஒரு பொய்யையா நம்ம பெரியவா எல்லாம் சொல்லி வெச்சிருக்காங்க ? ‘

‘ஆமா! ‘

‘அவாளை நம்பாதே, என்னை நம்புனு நீங்க சொல்றேளா ? ‘ என்றான் ராமகிருஷ்ணன்.

—-

ஸ்டாயரிங்கைப் பிடித்தபடி ராமகிருஷ்ணனைத் திரும்பிப் பார்த்தேன். ‘நல்ல கேள்வி ராமகிருஷ்ணன். இப்டி கேள்வி மேல் கேள்வி கேட்டுத்தான் முடிவுக்கு வரணும். விவாதம் விதண்டாவாதத்தில் தான் கொண்டுவிடும்… ‘

ராமகிருஷ்ணன் மெளனமாய் இருந்தான்.

‘இப்ப என்ன கேட்டாங்க. ஆத்மா பரமாத்மா குறித்து நம்ம பெரியவாள் சொன்னதை நம்பாதே. நான் சொல்வதை நம்புனு நான் சொன்னதாச் சொல்றீங்க… ‘

அவன் என்னையே பார்த்தான்-

‘ரொம்பச் சரி. என்னை நம்புங்க! அந்தப் பெரியவாளை நம்பாதீங்க! ‘

‘ஏன் அப்டிச் சொல்றீங்க ? ‘

‘சரி. இப்படி வெச்சுக்குவோம். ஆத்மா பரமாத்மாவை அடையறது. அடைஞ்சு என்ன பண்ணும் ? ‘

‘அங்க ஒரே ஆனந்த வெள்ளம்! சந்தோஷமயம்! ‘

‘கேட்கவே சந்தோஷமா இருக்கு, ராமகிருஷ்ணன். ஆனந்த வெள்ளம்! சந்தோஷமயம்!… ஆங்கிலத்துலயும் இதை எடெர்னல் பிளிஸ்னு சொல்றாங்க…

அப்டி ஒரு ஆனந்த நிலை இருக்குமானு நாம யோசிச்சுப் பார்க்கணும். இல்லையா ? ‘

‘யோசிச்சுப் பாக்கத்தான் வேணும் சார்! ‘

‘வயிறு இருக்கு. சாப்பிடறீங்க. வயிறு ஆனந்தத்தை அனுபவிக்கிறது இல்லையா ? ‘

‘ஆமா சார் ‘

‘மல்லிகைப் பூவைத் தட்டுல வெச்சி விற்பனைக்குக் கொண்டுபோறாள் ஒருத்தி. நல்ல வாசனை சுத்துமட்டத்தில். மூச்சை இழுத்து வாசனை பிடிக்கறீங்க. மூக்கு ஆனந்தத்தை அனுபவிக்கிறது இல்லையா ? ‘

‘ஆமா சார் ‘

‘இலைலே பாயசம் போட்ருக்காங்க. முதல்லே அதைத் தொட்டு நாக்ிகுல வச்சுக்கிடறீங்க. நாக்கு ஆனந்தத்தை அனுபவிக்கறது…. ‘

தலையை அசைத்தான் ராமகிருஷ்ணன்.

‘நல்ல சங்கீதம். நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் ஜதி சொல்றார். காது ரெண்டும் ஆனந்தம் அனுபவிக்கிறது.

சின்னப் பொண்ணு ஒண்ணு, அழகா அலங்காரம் பண்ணிண்டு நாட்டியம் ஆடறது. ‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ… ‘ சுகமான யமுனா கல்யாணி ராகம். கண்கள் ரெண்டும் பார்த்துக் களிக்கிறது.

பாரத்தைத் துாக்கறீங்க. ரொம்ப துாரம் ஓடிட்டு வரீங்க. கைகளும் கால்களும் வலிக்கிறது. ஒருத்தர் இதமாப் பிடிச்சு விடறார். கையும் காலும் ஆனந்தம் அனுபவிக்கிறது… இல்லையா ? ‘

‘சரி சார். ‘

‘இப்படி உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஆனந்தம் அனுபவிக்கிறது. அதாவது மூளை என்கிற உறுப்பு இப்படி உடல் உறுப்பின் ஒவ்வொன்றின் மூலமாக ஆனந்தம் அனுபவிக்கிறது… ‘

‘புரிஞ்சுக்கறேன் சார். ‘

‘இப்ப உடலே இல்லாத ஆத்மா பரமாத்மாவை அடைஞ்சு ஆனந்தத்தை அனுபவிக்கும்னு சொல்றீங்க. கை கால் வாய் கண் மூக்கு காது… இதெல்லாம் இல்லாத ஆத்மா எப்படி ஆனந்தத்தை அனுபவிக்க முடியும் ? ‘

—-

ஓயாமாரி தாண்டி ஸ்ரீரங்கம் செல்லும் ரயில்ப் பாதையில் லெவல் கிராசிங் சாத்தப்பட்டு இருந்தது. காரை நிறுத்தினேன். காருக்கு முன்னால் இரண்டு லாரிகள் நின்றிருந்தன.

நான் ராமகிருஷ்ணனைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

‘பரவால்ல. ஆன்மிக விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சிண்டிருக்கே… ‘ என்றேன். ‘ஆக சந்தோஷம் ஆனந்தம் மகிழ்ச்சி பிளிஸ்… என்பது எல்லாம் ஆத்மாவால அனுபவிக்க முடியாது…

ஆத்மாவைக் கற்பனை பண்ணினவங்க கடவுளுக்குப் பரமாத்மான்னு இன்னொரு பேரும் கொடுத்து, இப்படி ஆனந்தம் பிளிஸ் கிடைக்கும்னு பொய்சொல்லி வச்சிருக்காங்க. ‘

‘எவ்வளவு பெரிய சமாச்சாரத்தை மிகச் சுளுவா பொய்யினு சொல்லிட்டாங்க! ‘

‘உண்மையைச் சொல்வது சுலபம்தான். பொய்யைச் சொல்லத்தான் கற்பனை வேணும்! ‘

ராமகிருஷ்ணன் தனக்குள் யோசிக்கிறாப் போலிருந்தது.

‘எதிர்ல இருப்பவரைக் குழப்பி, நமக்குதான் புரிந்துகொள்ள அறிவு இல்லையோன்னு சிறுமை உணர்வு உண்டாகும்படி பண்ணிடுவாங்க! ‘

‘அது சரி சார். இந்த த்வைதம் – அத்வைதம்- விசிஷ்டாத்வைதம்… இவையெல்லாம் உங்க விளக்கத்துனால ஒண்ணுமில்லே, சுத்த ஏமாற்று வித்தைன்னுனா ஆயிடறது… ‘

‘ஆமா. இதுலே வேடிக்கையைப் பார்.

முதலில் மாத்வர் என்ற பிரிவினர் த்வைதம் பற்றிச் சொன்னாங்க. அதாவது ஆத்மா வேற பரமாத்மா வேற என்பது இவர்களுடைய நம்பிக்கை.

ஜீவேஸ்வர பேத ஞானம்னு அஞ்சுவித ஞானங்களைப் பற்றி இவா குரு ஆனந்த தீர்த்தாச்சாரி சொல்லீர்க்கார்… ‘

ரயில் கடகடவென்று கடந்து சென்ற பெருஞ்சத்தம். காத்திருந்தோம். கேட் திறக்கப் பட்டது.

சிந்தாமணியை நோக்கிச் சென்றபோது வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது. முன்னும் பின்னுமாக வண்டிகளில் இருந்து ஹார்ன் ஒலி. ஒலிகள். ஒரே இரைச்சல். வண்டிகள் ஊர்ந்து சென்றன. எச்சரிக்கையுடன் வண்டியைச் செலுத்த வேண்டியிருந்தது. நான் மேலும் பேச்சைத் தொடர முடியவில்லை.

செயின்ட் ஜோசஃப் அருகில் காரை நிறுத்தினேன்.

—-

‘சொல்லுங்க சார்! ‘ என்றான் ராமகிருஷ்ணன்.

‘என்ன சொன்னேன் ?… த்வைதம் ஆயிற்று. இப்ப அத்வைதத்தை எடுத்துக் கொள்வோம்.

அத்வைதம் என்றால், இரண்டு அற்றது. ஒன்று – என்று அர்த்தம். இல்லையா ?

மாத்வர்கள் த்வைதம் என்று சொன்னதை மறுத்து அத்வைதம் எழுந்தது.

அத்வைத சித்தாந்தத்துக்கு விளக்கம் சொல்பவர்கள், ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்று. காலம் வரும்போது ஆத்மா பரமாத்மாவை அடையும்னு சொல்றாங்க.

அந்தப் பெரியவர்கள் பேரை யெல்லாம் இழுத்து வைச்சு நாம பேச வேண்டாம். இந்த அத்வைத வாதிகளும் குழப்புவாங்க. படிச்சதை – மனப்பாடம் பண்ணினதை – ஞாபகம் இருக்கற அளவு சொல்றேன் ராமகிருஷ்ணன்…

சகுணப்ரம்ம உபாஸனையால் மனம் வயப்படுமாயின், நிர்குண ப்ரம்ம உபாஸனை செய்து உலகம் மருமரீசிகை இடத்தில் சலங்காலத்திரயத்திலும் இல்லாதவாறு போலவும், பொய்யெனக் கண்டு சகல சங்கற்பங்களும் நாசமாக, பூரணமாய் இருக்கும் அப்பிரம்மமே தான் என்று பாவித்து அதில் லாபம் அடைதல் முக்கியமாகும்…

தத்துவ நிஜானு போக சாரம்-னு ஒரு புஸ்தகம். அதுலே அத்வைதத்தைப் பற்றி இப்படிச் சொல்லி யிருக்கு.

திருப்பித் திருப்பிப் படிச்சிப் பார்த்தேன். புரியல்லே. என்ன சொல்றே ராமகிருஷ்ணன். ‘

ராமகிருஷ்ணன் விழித்துக் கொண்டிருந்தான்.

‘இப்ப விசிஷ்டாத்வைதம்… ‘

‘வேணாம் சார். எனக்கு தலையைச் சுத்தறது ‘

‘நான் சொல்லி முடிச்சுடறேன்!

வைஷ்ணவா சித்தாந்தம் இது. மாத்வர் ஸ்மார்த்தர், என்னும் சைவர்கள் சொல்லியதற்கு மாற்றாக, சொல்லவேணும் என்பதற்காக சிருஷ்டிக்கப் பட்டது… ‘

‘ஓ ‘

‘ஆத்மா ஒன்றல்ல – பல, என்கிறார்கள் இவர்கள். அத்வைதத்தைச் சார்ந்து அதே சமயம் அத்வைதத்தை எதிர்க்கும் தத்துவம்.

ஒவ்வொரு பிரிவினரும் மத்தவங்க தத்துவத்தைப் பொய்யினு சொல்றாங்க! ‘

‘சரி சார்! நான் கோவிலுக்குப் போயிட்டு வந்துடறேன்! ‘

கதவைத் திறந்து கொண்டு ராமகிருஷ்ணன் இறங்கி நடந்தான்.

—-

நான் காத்திருந்தேன். சாலையை கவனித்தேன்.

மக்கள் கூட்டம் அலையலையாகச் சென்றது. கார்களும் லாரிகளும் பஸ்களும் யமத்தனமாக விரைந்தன.

இவ்வளவு பேர்களுக்கும் ஏதோ வேலை இருக்கிறது. அல்லது வேலை /இங்கே/ இருந்திருக்கிறது… அல்லது இருக்கிற பிரமை இருக்கிறது.

நான் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவன். கன காரியமாக காரில் இருந்துகொண்டு பராக் பார்த்து நிற்கிறேன்! காத்திருக்கிறேன்…

முக்கால் மணி நேரத்தில் ராமகிருஷ்ணன் திரும்பி வந்தான்.

நெற்றியை முழுமையாய் மறைத்து துளி இடம் இடைவெளி விடாது விபூதி பூசியிருந்தான். நடுவே அரை ரூபாய் வட்டத்துக்கு ஒரு குங்கும அப்பல்.

தொண்டைத் தண்ணி வத்த இவனிடம் பேசிக் கொண்டிருந்தேனே! சற்றேனும் பலன், பயன் இல்லை.

‘சார் விபூதி இட்டுக்குவேளா ? ‘ – சிறு காகிதப் பொட்டலத்தைப் பிரித்துக் காண்பித்தான்.

‘நான் விபூதி இட்டுக்கணும்னு நீ விரும்பறியா ? ‘

‘அப்டி இல்லே. கோவில் ப்ரசாதம்!… ‘

‘நான் வேணாம்னு சொன்னா உன் மனசு வருத்தப் படுமா ? ‘

‘அப்டின்னில்லை. உங்களுக்குனு ஒரு கொள்கை இருக்கு… ‘

‘விபூதி பூசினால் நல்லதுங்கிற எண்ணம் கிடையாது. பூசா விட்டால் பெரிதாகக் கொள்கையைக் காப்பாற்றிக் கொண்டு விட்டேன்… என்கிற எண்ணமுங் கிடையாது. கொண்டா. உன் ஆசையைக் கெடுப்பானேன்… ‘

மீதி விபூதியையும் காகிதத்தையும் ராமகிருஷ்ணன் காற்றில் பறக்க விட்டான். அவ்வளவுதான் விபூதிமேல் அவன் வைத்திருக்கும் மதிப்பு!

/தொ ட ர் கிறது/

ma na ramasamy

phone-cell – 0 94432 90030 – 0 94431 16324

31 sri chakra nagar chellamnagar extn

kumbakonam 612 001 tamilnadu indi

Series Navigation

ம. ந. ராமசாமி

ம. ந. ராமசாமி