துறை(ரை)களின் சூதாட்டமும் கவிழும் பொருளாதார / வெளியுறவு கொள்கைகளும்

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

செந்தில்


சிந்தனை செய்யும் எந்த ஒரு மனிதனுக்கும் மனதில் எழும் கேள்வி, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பொருளாதார திட்டங்களும், வெளியுறவு கொள்கைகளும் உண்மையில் அந்த நாடுகளில் உள்ள மக்கள் நலன் கருதிதான் வகுக்கபடுகின்றனவா? வளரும் நாடுகளின் கொள்கைகள், குறைந்த பட்சம், அந்தெந்த நாடுகளின் இறையாண்மை கோட்பாடுகளையாவது கருத்தில் கொண்டு வகுக்கபடுகின்றனவா என்றெல்லாம் சந்தேகம் எழுந்தவண்ணம் உள்ளது. ஏனெனில், சமீபகாலமாக, சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில், வளர்ந்த நாடுகளின் பல்கலைகழகங்களில் முன்மொழியப்படும் பொருளாதார வளர்ச்சிதிட்டங்களே, வளரும் நாடுகளின் மீது ஏதாவது ஒரு வழியில் திணிக்கப்படுகின்றன எனலாம். உதாரணமாக, இந்தியா ஒரு சமத்துவமும், அறநெறியும், சமாதானமும், பல்வேறு இனமொழிகலாச்சார உரிமைகளும் போற்றபடும் ஒரு மக்கள் குடியரசு என்பதே ஆட்சியாளர்களுக்கு மறந்துவிட்டதோ என தோன்றுகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக, இந்தியாவின் நெறியுணர்வுகளுக்கு சம்பந்தமில்லாத சந்தைபொருளாதார கோட்பாடும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் இந்தியா போன்ற நாடுகளின் திட்டங்களை தீர்மானிப்பதாகவே தெரிகிறது. இந்த சாய்வுக்கு காரணம், சந்தைப் பேரிரைச்சலில், இந்தியாவின் இறையாண்மை கோட்பாடுகளை மறந்து விட்ட அரசியலும் அதிகாரமும்தான் என்பது தெளிவு.

எந்த ஒரு நாட்டிலும் மக்கள் தாராளமாக நம்புவது, அந்த நாட்டின் அரசாங்கதுறைகளும், வெளியறவு துறைகளும், உளவு அமைப்புகளும் மக்களின் நலங்களுக்காக சதா சர்வ காலமும் செயல்பட்டுக் கொண்டிருப்பது என்று (என்ற ஒரு பிரமையைதான்!). இது பெருமளவுக்கு உண்மைதான் என்றாலும், இந்த துறைகளில் உள்ள பலவீனங்களையும், அரசின் திட்டங்களில் கொள்கைகளில், அதன் தாக்கங்களையும் மக்கள் ஓரளவுக்காது புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, பாதுகாப்பு, வெளியுறவு, மற்றும் உளவு சார்ந்த துறைகளின் செயல்பாடுகள் தனது நாட்டு மக்களுக்கு எதிராகவே இருப்பதாக தோற்றமளிக்கிறது. இவர்களில் சிலர் மக்கள் பாதுகாப்பு என்ற விஷயங்களை தாண்டி, உலகு தழுவிய வியாபார நிறுவணங்களுக்கு வர்த்தக ரகசியங்கள் விற்றல்(வாங்கல்), அரசியல்வாதிகளிடம் வியாபார நலன்கள் குறித்து பேரங்களில் ஈடுபடல் (lobbying), , உலகு தழுவிய கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தாதாக்களுக்கு விசுவாசமாயிருத்தல், ஊழல் அரசியல்வாதிகளின் அந்நிய வங்கி மற்றும் பங்கு சந்தை வியாபாரங்களை நிறுவகிக்கும் ஆட்களுக்கு தூது செல்லல், பெண்களை பாலியல் தொழில் மற்றும் ஆபாச படங்கள் வியாபாரங்களூக்கு உட்படுத்தல், அப்படி சிக்கல்களில் சிக்கி இருக்கும் பெண்களை உளவு வேலைகளுக்கும், அரசியல் பேரங்களுக்கும் சுய காரியங்களுக்கும் உபயோகித்தல் (சமீபத்தில் , ஆந்திரா கவர்னர் பற்றி கிளம்பிய ஊழல் செய்திகள்), தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் தொடர்புகளை ஒட்டு கேட்பதின் மூலம் குடும்பங்களில் உள்ள பொருளாதாரா, உறவு சிக்கல்களை தெரிந்து கொண்டு அத்தகைய குடும்பங்களை தவறான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தல் என பல மோசடிகள் நிகழ வாய்ப்பிருக்கிறது. வியாபார நலன்களுக்காக, பொதுத்துறை நிறுவன தொழில் வளாகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்கள், தொழில் நுட்ப கல்வி கூடங்கள், ஆகியவற்றில் உள்ள குடியிருப்புகள் ஆகியவற்றில் வேலை பார்க்கும், நபர்களையும், பலவீனமான, பலவீனபடுத்தும் மாணவிகள், பெண்கள், சிக்கல்களில் உள்ள குடும்பங்கள் ஆகியவற்றை எளிதில் குறிவைக்கலாம். தன்மானத்தையும், உரிமைகளையும் விலை பேச தயங்காத சில நபர்களையும் அவர்களது எடுபிடிகளையும் கொண்டு நாட்டின் நலதிட்டங்களையோ எதிர்காலத்தையோ திசைதிருப்பவோ, நிர்மூலமாக்கவோ முடியும். 123 அமெரிக்கா-இந்தியா ஒப்பந்த விவாதத்தின் போது பாராளுமன்றத்தில் பணம் கொட்டப்பட்டது, இந்த சீரழிவைத்தான் சுட்டிக்காட்டுகிறது.

இந்த மாதிரி நிகழ்வுகளுக்காண காரணங்களாக நான் நினைப்பது: பல நாடுகளின் தவறான வெளியுறவு கொள்கைகளும், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செயல்களும், திட்டங்களும் நாட்டின் இறையாண்மை கோட்பாடுகளுக்கு உட்பட்டுள்ளதா என சோதனைகளுக்கு உட்படுத்தாமல் இருப்பதும், பொருளாதார, வர்த்தக ஆதாயங்களுக்காக நீதி மற்றும் சட்ட நெறிமுறைகளை, விதிகளை தளர்த்திகொள்வதும், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கும்பல்களின் உதவிகளையும், உறவுகளையும் நாடுவதும் என சில காரணங்கள் சொல்லலாம். இத்தகைய செயல்களுக்கு சொல்லப்படும் காரணங்கள்; சாணக்கியத்தனம் அல்லது மாக்கியாவில்லனிசம் (Machiavellianism). அதாவது, அரசியல், பொருளாதார ஆதாயங்களை மட்டுமே கருத்தில் கொண்டு, எந்த ஒரு நீதியையும், அறநெறியையும் கருத்தில் கொள்ளாமல், தனிமனிதர்களுக்கும், குடும்பங்களுக்கும், வர்க்க நலன்களூக்கும், சமூகத்திற்கும் விளையும் தீங்குகளையும் பொருட்படுத்தாமல் செயல்படுவது. ஆனால், இந்த கோட்பாடு, இந்த நிறுவனங்களில் இருக்கும் சில ஊழல் ஆசாமிகளுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்; இந்த புல்லுருவிகள், இந்த அக்கிரம கோட்பாட்டை பயன்படுத்தி கொண்டு, பணத்திற்கு விலை போகும் சிலரை கொண்டு நாடுகளுக்கு எதிராக, மக்களுக்கு எதிராக, உரிமை போராட்டங்களுக்கு எதிராக செயல்படுவதுடன் சுய லாபமும் அடைய முடியும்.

பொருளாதார வளர்ச்சி திட்டங்கள், வெளியுறவு கொள்கைகள் மட்டுமின்றி மக்கள் பாதுகாப்பும், உரிமைகளும் இதனால் பாதிக்கபடுகிறது என்றால் மிகையாகாது. இந்த நோக்கில்தான் இலங்கையில் நடந்த இன அழிப்பைபையும், இந்தியாவில் நிலவும் விவாசாயிகளின் தற்கொலைகளையும், எந்த சலனமின்றி சகித்து கொள்ள முடிகிறது. ஏனெனில், இந்தியா ஒரு சமத்துவம் மற்றும் சமாதானக்குடியரசு என்பதை நாம் மறந்துவிட்டதுதான். சில அரசுகளுக்கு உண்மையாக மக்கள் விடுதலைக்காக, உரிமைகளுக்காக போராடும் இயக்கங்களுக்கும், கடத்தல் கும்பல்களுக்கும் வித்தியாசமே தெரிவதில்லை. உண்மையில் வித்தியாசங்கள் தெரிந்தும், ஆனால் வேறுபடுத்தி பார்ப்பதில்லை. காரணம், விடுதலை மற்றும் உரிமை போராட்டங்களால் எந்த பொருளாதாரா ஆதாயமும் இல்லை என்பதுதான். ஆனால் நிழல் உலக தாதாக்களோ பல மோசமான வழிகளிலும் சில அரசுகளுக்கு உதவி செய்கிறார்கள்; அதுவும் மக்களுடைய உரிமை போராட்டங்களை வீணடிப்பதிலும், நாடுகளின் பொருளாதாரங்களை சீர்குலைத்தல் என பல.

மக்களிடம் இருந்து அந்நியமான, போலித்தனமான கொள்கைகளாலும்(Ivory tower planning), ஊழல் செய்பவர்களின் கைகளில் உள்ள அதிகாரத்தால் அவர்களது திரிப்புகளால்தான் தாவூத் இப்ராஹிம் நண்பராகவும், தமிழ் ஈழ மக்கள் விரோதிகளாகவும், இந்திய மீனவர்களை கொல்லும் சிங்கள ராணுவம் நட்பாகவும் தெரிகிறது பல நாடுகளுக்கும். தாங்கள் எதோ நேர்மையாக இருப்பதாக நினைத்து கொண்டு செயலாற்றும் அதிகாரிகளும், சினிமாவில் பார்ப்பது போல, நிழல் உலக தாதாகளுக்கும், பதுக்கல்காரர்களுக்கும், தெரிந்தோ, தெரியாமலோ வேலை செய்து கொண்டிருக்க நேரிடலாம். இந்த மாதிரி ஊழலின் விளைவால் ஏற்படும் இடைவெளியையும் தெரிந்து கொண்டு செயல்படும் அதிபுத்திசாலி தீவிரவாத இயக்கங்களுக்கு இது மிகவும் வசதியாக உள்ளது. இப்படித்தான் இந்த ஊழல் கரங்கள் உதவியுடந்தான் ஊடுருவி அனைத்து தாக்குதல்களையும் தீவிரவாதிகள் நடத்தியிருக்க கூடும் என தோன்றுகிறது. இந்த மாதிரி நிகழ்வுகளை கொண்டு ஒரு நாட்டின் வெளியுறவு கொள்கைகளையும் தேர்தல் முடிவுகளையும் கூட எளிதில் திசைதிருப்ப முடியும்.

***********

Series Navigation

செந்தில்

செந்தில்