துயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்!

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

அறிவிப்பு


26-12-2004 காலை சுமத்திரா தீவுக்கு அண்மையாக வங்காள விரிகுடாவில் தோற்றங்கொண்ட சுனாமி (வுளுருேயுஆஐ) எனப்பெயரிடப்பட்டுள்ள பூமியதிர்ச்சியும் கடற்கொந்தளிப்பும் தெற்கு மற்றும் தெற்கிழக்கு ஆசிய நாடுகளைக் கடுமையாகத் தாக்கி பலத்த சேதத்தினை விளைவித்துள்ளது என்பதனை நீங்களனைவரும் அறிந்ததே. குறிப்பாக இலங்கையின் வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஐம்பதடிவரை கொந்தளித்தெழுந்த கடல் அலைகள்> அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்> மட்டக்களப்பு> திருமோணமலை> முல்லைத்தீவு> பருத்தித்துறை வரையிலான தெற்கு> கிழக்கு மற்றும் வடக்குக்கரையோரங்களில் நாங்கள் எண்ணிப்பார்க்க முடியாதளவிற்கு பேரழிவொன்றினை ஏற்டுத்திச் சென்றுள்ள துயரச்செய்திகள் எமது காதுகளில் விழுந்த வண்ணமுள்ளன. இலங்கையின் கடந்த பல நுாற்றாண்டுகால வரலாற்றில் மிகவும் மோசமானதாக வர்ணிக்கப்படும் இயற்கையின் இந்தக் கோரத்தாண்டவத்தால் பல கடற்கரையோர கிராமங்கள் கடல் அலையினால் அள்ளிச்செல்லப்பட்டும்> ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தும்> ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்தும் உள்ளனர். முன்னெச்சரிக்கை எதுவுமின்றி கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாக பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்கு> கிழக்கு மாகாண மக்களுக்கு நிவாரண உதவிகள் உரியவகையில் கிடைப்பதற்கு முன்னரே இதுவும் நிகழ்ந்து முடிந்திருக்கிறது.

இறுதியாக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்> இலங்கை உட்பட இந்தியா> மாலைதீவு> பங்களாதேஷ்> இந்தோனேசியா> மலேசியா> தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இம்மக்கள் அனைவருக்கும் இலக்கியச் சந்திப்பு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. மேலும் தெற்கு மற்றும் தெற்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ஒப்பீட்டளவில் இலங்கையே மிகவும் மோசமாகப் பாதிக்கப்படடுள்ளதாகவும்> அதிகளவிலான உயிரிழப்புகள் (5000 பேர்) ஏற்பட்டுள்ளதாகவும் உலகச்செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. கடந்த இரு சகாப்தங்களுக்கு மேலான உள்நாட்டு யுத்தத்திலிருந்து மீள முடியாமலிருக்கும் இலங்கை மக்கள்மீது இயற்கையும் தனது கொடுங்கரங்களைப் பதித்துள்ளது. வரலாற்றின் மிக முக்கியமான இக்கால கட்டத்தில் இலக்கியச் சந்திப்பு இலங்கையின் சகல இன மக்களின் துயரங்களிலும் பங்கெடுக்க வேண்டிய சமுதாயப்பணியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளது.

வங்காள விரிகுடாவில் உருக்கொண்ட சுனாமியின் அனர்த்தங்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழும் எங்கள் காதுகளை வந்தடைய முன்னரே> இலக்கியச் சந்திப்பு அண்மைக்கால வெள்ளப்பெருக்கினால் தங்கள் இயல்பு வாழ்வினை இழந்து பெரும் துயருக்குள்ளாகியுள்ள கிழக்கு மாகாண மக்களின் நிவாரணத்திற்கு நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். சுமத்திரா தீவுக்கருகிலிருந்து இலங்கையின் வங்காள விரிகுடா கடற்பரப்பினை அண்டிய நிலப்பரப்பினை வந்தடைந்த சுனாமி> இதுவரை எமக்குக்கிடைத்த செய்திகளின்படி இலங்கையின் கிழக்கு மாகாண பிரதேசங்களையும் மக்களையுமே மிக அதிகமாகவும் பரந்தளவிலும் தாக்கியளித்துள்ளதால்> இப்போது இப்பணியினை மேலும் விரிவுபடுத்த வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.

இலக்கியச் சந்திப்பு ஆர்வலர்களும்> இலக்கியச் சந்திப்பில் ஈடுபாடுகொண்ட நண்பர்களும் தத்தமது நாடுகளில் நிவாரணப்பணிகளுக்கான நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எமது வேண்டுகோளடங்கிய இச்சிறிய பிரசுரத்துடன் உங்களை அணுகும் எமது நண்பர்களை இனங்கண்டு> இந்நிவாரண உதவிக்காக உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யமாறு இலக்கிய சந்திப்பு உங்களனைவரையும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றது.

இலக்கியச் சந்திப்புக்குழு (ஸ்ருட்கார்ட்)

ஸ்ருட்கார்ட்

26.12.2004

தொடர்புகளுக்கு> : Chanthippu@yahoo.de

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு