“திசைகள்” அ.வெற்றிவேல்
தண்டபாணிற்கு அதிகாலையிலே விழிப்பு வந்துவிட்டது.அம்மா வாசல் கூட்டிப்பெருக்கும் சத்தம் கேட்டது.பக்கத்தில்படுத்திருந்த தம்பி நாகுவைப் பார்த்தான்.அந்த அதிகாலை வேளையிலும் மனது உற்சாகமாக இருந்தது.அம்மாவைப் பார்க்கலாம் என்று படுக்கையை விட்டு எழுந்தான்.தோளில் இருந்து நழுவிய டவுசர் பட்டையைச் சரிசெய்து கொண்டேவாசலுக்கு வந்தான்.அம்மா கோலம் போட்டுக்
கொண்டு இருந்தார்கள்.ஒரு ஒரமாக குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டு அம்மாவையும் கோலத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
“யார்டா இது பூனை மாதிரி வந்து உக்காந்தது?”
தான் வந்ததை அம்மா கண்டுகொண்டது குறித்து மகிழ்ச்சி அடைந்தான்.பதில் சொல்லாமல் புன்னகையைப் பதிலாகத் தந்தான்.
“ஏம்பா தூங்காம எந்திரிச்சுட்டே..பனி கொட்டுதுல..போய் படுத்துக்க..அம்மா காபி போட்டுட்டு எழுப்புறேன்.போய் படுத்துக்க கண்ணு.”
கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு தண்டபாணி மெதுவாக தயங்கி தயங்கிப் பேசினான்.
“நாளைக்கு தீபாவளி., இன்னும் அப்பா ஏம்மா வரலை?இன்னைக்கு வந்துடுவாங்களாமா?”
“அதானே பாத்தேன்..எலி ஏண்டா அம்மணத்தோட ஒடுதுன்னு?அப்பாவைத் தேடித்தான் காலங்காத்தாலேயே முழிப்பு வந்துருச்சாக்கும்..அப்பா இன்னைக்கி கண்டிப்பாக வந்துருவாங்க..”
“போன வருஷம் போல இந்த வருஷமும் அப்பா வெடி வாங்கி வந்துருவாங்கள்ள..”
“கண்டிப்பா வாங்கி வருவாங்க., இந்த வருஷம் நாகுவும் பெருசாயிருச்சுல..அதனால இரண்டு பேருக்கும் சேத்து ரொம்ப வெடி வாங்கச் சொல்லி இருக்கேன்..துணி,வெடி,இனிப்பு எல்லாம் வாங்கி இன்னைக்கி சாயந்திரத்துக்குள்ள வந்துருவாங்க. அதனால இப்ப நீ போய் படுத்துக்க, மணி அஞ்சரைதானே ஆகுது.”
தண்டபாணி சந்தோஷமாக படுக்கைக்கு வந்தான்.நாகுவிற்கு அடியில் கிடந்த தனது போர்வையை இழுத்து எடுத்துப் போர்த்திக்கொண்டு படுத்தான்.தூக்கம் வரவில்லை.பக்கத்தில் படுத்து இருந்த நாகு ஏதோ முனங்கினான்.தண்டபாணி திரும்பி நாகுவைப் பார்த்தான்.நாகுவைப் பார்த்தவுடன் முதல் நாள் மாலை நடந்த நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது.
தண்டபாணி வசிக்கும் அந்த தெருவில் தண்டபாணியைச் சேர்த்து மொத்தம் ஏழு சிறுவர்கள்.அத்தனை பேரிலும் தண்டபாணிதான் மூத்தவன்.அதனாலேயே அந்த சிறுவர் கூட்டத்திற்கு தண்டபாணிதான் தேர்தெடுக்கப்படாத தலைவன்.அனைத்து சிறுவர்களுக்கும் தண்டபாணிசொல்வது தான் வேதவாக்கு.கோலி,பம்பரம்,கிட்டிப்புள் என எந்த விளையாட்டானாலும் தண்டபாணி சொல்வது தான் சட்டதிட்டம்.(சேட்டிலைட் டி.வி.,கிரிக்கெட் போன்ற கலாச்சார சீரழிவுகள் பரவாத, குழந்தைகளின் நேரம் அவர்கள் கையினிலே இருந்த பொற்காலம்)
நல்ல புத்திசாலி மட்டுமல்ல;எல்லோரையும் அரவணைத்துப் போகும் தலைவனுக்குரிய அனைத்து குணங்களும் கொண்டவன்.அந்தத் தெரு பெரிய மனிதர்களும் தண்டபாணி மேல் ப்ரியமுடன் இருப்பார்கள்.
புதிதாக அந்த தெருவிற்கு வந்து இருக்கும் கார்த்திக் வீட்டில் நேற்று இரவு எட்டு மணி அளவில் வெடி விட்டார்கள்.வெடியைப் பற்ற வைக்க கார்த்திக் பயப்பட கார்த்திக் அப்பாதான் பற்ற வைத்தார்கள்.அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு எல்லா சிறுவர்களும் ஒன்று சேர்ந்து வெடிகளைப் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள்.நாகுவிற்கு இதுதான் நினைவு தெரிந்து நடக்கிற முதல் தீபாவளி என்பதால் நாகுவிற்கு வெடிகளைப் பற்றி ஏகப்பட்ட சந்தேகங்கள்.லட்சுமி வெடி எப்படி இருக்கும்..அணுகுண்டு எவ்வளவு சத்தம் போடும்..புஸ்வானம் நம்ம வீட்டு உயரத்தை தாண்டுமா என ஏகப்பட்ட சந்தேகங்கள்.அவ்வளவையும் தண்டபாணி தான் தீர்த்து வைத்தான்.நாகுவிற்கு அவன் அண்ணனை
நினைத்து பெரிய ஆச்சர்யமாக இருந்தது.அண்ணனுக்குத்தான் எவ்வளவு விஷயங்கள் தெரிந்து இருக்கின்றன!அப்பொழுது தான் கார்த்திக் அந்த சந்தேகத்தைக் கேட்டான்.
“தண்டபாணி அண்ணா., டிரைன் வெடின்னு ஒண்ணு இருக்கானே., டிரைன் வெடி டிரைன் மாதிரி போகுமாமே.,
அதற்குள் நாகு அடுத்து கேள்வியைப் போட்டான்.
“டிரைன் வெடி டிரைன் நீளத்திற்கு இருக்குமா?”
தண்டபாணி சிரித்துக் கொண்டே பதில் சொன்னான்.
“டிரைன் வெடி அவ்வளவு நீளத்திற்கு இருக்காது.போன வருஷம் தீபாவளிக்கு கூட நான் விட்டேனே., நாகு.. உனக்கு ஞாபகம் இல்லயா?நம்ம வீட்டு ஜன்னலுக்கும் எதித்த மல்லி வீட்டு ஜன்னலுக்கும் கயிறு கட்டி நான் விடலே., நாகு இப்ப கூட ஞாபகம் வரலையா..குமார் உனக்குமா மறந்துறுச்சு.,என்றான் பக்கத்தில் இருந்த குமாரைப் பார்த்து.
குமார் பதில் சொல்லாமல் தலையாட்டி வைத்தான்.தண்டபாணி தொடர்ந்து சொன்னான்.
“இந்த வருஷமும் எங்க அப்பா வாங்கி வரேன்னு சொல்லி இருக்காங்க., நாளைக்குச் சாயந்திரம் எங்க அப்பா வந்துருவாங்க.எனக்கும்
நாகுவுக்கும் வெடி வாங்கி வருவாங்க., கண்டிப்பா டிரைன் வெடி வாங்கி வரேன்னு சொல்லி இருக்காங்க., வெடி வந்ததும் நாளைக்கு
சாயந்திரம் எல்லோருமாச் சேந்து வெடி வெடிப்போம்.”
குமார் கேட்டான்”எங்க அப்பா மாதிரி டிரைன் வெடி வாங்காம உங்க அப்பா வந்துட்டாங்கன்னா., என்ணண்னே செய்வீங்க?
தண்டபானி ஒருகணம் திடுக்கிட்டான்.அப்பா வாங்கி வராவிட்டால் என்ன செய்வது?தனது மார்க் ஷீட்டைக் காட்டி ·பர்ஸ்ட் ரேங் என்றால் அப்பா கண்டிப்பாக வாங்கித் தந்துருவாங்க என்ற நம்பிக்கை அவனுக்கு தைரியத்தைக் கொடுத்தது.அந்த தைரியத்தில் பதில் சொன்னான்.
“எங்க அப்பா வாங்கி வரலைன்னா எங்க அம்மாகிட்டச் சொல்லி காசு வாங்கிட்டுப் போயி மனோகர் கடையிலே நானே போய் வாங்கி வந்துருவேன்”
“தண்டபாணி அண்ணா..டிரைன் வெடி விடும் போது என்னைக் கூப்பிடுங்கண்ணே..நான் டிரைன் வெடி பாத்ததே இல்லை”என்றான்
கார்த்திக்
“அதெல்லாம் யாரையும் சேக்காம வெடி விடமாட்டேன்.கண்டிப்பா எல்லோரும் சேந்து விடுவோம்.”
தண்டபாணி நேற்று நடந்ததை நினைத்துப் பார்த்தான்..அப்பா இன்று வரப் போகிறார்கள் என்பதை நினைக்கவே மனது உற்சாகமாக இருந்தது.
அப்பாவின் வருகை என்பது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை நடக்கக் கூடியதுதான்.படிப்புக்கு வசதியாக சிவகங்கையில் வீட்டை வைத்துக் கொண்டு தனது மனைவியின் பொறுப்பில் எல்லா பொறுப்புகளையும் கொடுத்து விட்டு தான் மட்டும் காரைக்குடி,
தேவகோட்டை,சிங்கம்புணரி, தொண்டி என இடம் மாறி மாறி வேலை பார்க்கும் ஏட்டய்யா தான் தண்டபாணியின் அப்பா.ஏதாவது காரணம்
சொல்லி வீட்டுக்கு மாதத்திற்கு ஒருமுறையோ இரண்டு முறையோ வந்துவிடுவது வழக்கம். குழந்தைகளுக்கோ,மனைவிக்கோ ஏதாவது முடியலைன்னா எப்படித்தான் அவருக்குத் தெரியுமோ.,எந்தவித அழைப்பும் இன்றி வந்துவிடுவது இயற்கையாகவே நடக்கக்கூடியது.
“ஏன் சிவகாமி..தண்டபானிக்கு முடியலைன்னா அக்கம்பக்கத்துல இருக்கிற எங்ககிட்ட சொல்ல வேண்டியது தானே..அதுக்காக வேலை பாக்குற ஆம்படையானுக்கு தகவல் சொல்லி ஏன் அவர் வேலையைக் கெடுக்கிற” என்று பக்கத்து வீட்டு மாமி செல்லமாக கோபிப்பதும்,அதற்கு தண்டபாணி அம்மா “இல்ல மாமி,நான் ஒண்ணும் சொல்லி விடல..அவுங்களுக்கே ஏதோ தோன்றி வந்துருக்காங்க.ஆனால் அவுங்க முகத்தைப் பார்த்ததும் தான் அவன் காய்ச்சல் குறைந்தது மட்டும்தான் உண்மை” என்று பதில் சொல்வதும் அடிக்கடி நடக்கக் கூடிய ஒன்று. குழந்தைகள் அப்பாவைப் பார்த்து நாளாகி விட்டால் அவர்கள் உடம்பிற்கு ஏதாவது முடியாமல் போவதும் அப்பா வந்ததும் உடம்பு சௌகரியமாகப் போவதும் ஆச்சர்யமான உண்மை.
தண்டபாணியின் அப்பா அன்று வீடு வரும் போது மாலை மணி அஞ்சு இருக்கும்.வரும்போது வழக்கமாகத் தென்படும் உற்சாகம்
கொஞ்சம் கூட இல்லை.அவர் முகத்தைப் பார்த்து சிவகாமியின் உற்சாகமும் குறைந்து விட்டது.வழக்கமாக அவர் கொண்டு வரும்
லக்கேஜுகளை எடுத்து வரும் போலீஸ்காரர் யாரும் உடன் வரலை.அவர் கையிலும் எந்தப் பெரிய பார்சலும் இல்லை.உள்ளே நுழைந்ததும் கையில் இருந்த இரண்டு மஞ்சப் பைகளையும் சிவகாமியிடம் கொடுத்து விட்டு ஹாலில் கிடந்த சேரில் உட்கார்ந்தார்.
பைகளைத் திறந்து பார்த்த சிவகாமி ஒரு பையில் துணியும் இன்னொரு பையில் சில வெடிகளும் இருக்கக் கண்டாள்.பதிலேதும் பேசாமல் தன் கணவரைப் பார்த்தாள்.
“தண்டபாணியும் நாகுவும் எங்கே?”
“இங்கதான் வெளியில வெளையாடிட்டு இருக்காங்க..அப்பா வந்துட்டாங்களான்னு அப்பப்ப வந்து பாத்துட்டு பாத்துட்டுப் போய்
விளையாடுதுக..இந்தா கூப்பிடறேன்.”
“வேணாம்.கூப்பிடாதே..விளையாடிட்டு வரட்டும் இப்ப என்ன அவசரம்?”
“இல்ல அப்பா எப்ப வருவாங்க..வெடி எப்ப வரப்போதுன்னு இருக்குக..நீங்க என்னடான்னா வெடி கொஞ்சமா வாங்கி வந்துருக்கீக.. புள்ளைக கஷ்டப்படப் போகுதுங்க..
“சிவாமி உனக்கென்ன தெரியும்..இத நான் வாங்கப்பட்ட பாடு.புதுசா வந்துருக்கிற சர்க்கிள் இன்ஸ்பெக்டர் இந்த தீபாவளிக்கு நம்ம ஸ்டேசன்ல எந்த கலெக்ஷனும் இருக்ககூடாதுன்னு ஸ்டிரிக்டா ஆர்டர் போட்டுட்டாரு.எப்பவும் வர்ற வருமானம் போச்சு..எல்லாத்துக்கும் டிரஸ் எடுக்ககூட கையில் காசில்லை.புதிசா டிரான்ஸ்பர் ஆகிப் போன வூரு. யாரையும் தெரியாது.அப்புறம் அங்க சொல்லி இங்க சொல்லி
பிரேமா டெக்ஸ்டைல்ஸில் மாசம் மாசம் கட்டுறதாச் சொல்லி இந்த டிரெஸ்ஸெல்லாம் வாங்கி வந்துருக்கேன்.அப்புறம் ரைட்டர்
ஏட்டய்யாக்கிட்ட கொஞ்சம் பணம் வாங்கி இந்த வெடி வாங்கி வந்துருக்கேன்..அதுவும் ரொம்ப வாங்க முடியல.ஏதோ சாஸ்திரத்துக்கு கொஞ்சம் கம்பி மத்தாப்பு, புஸ்வானம் இதான் வாங்கிருக்கேன்.”
“புள்ளைக ரொம்ப எதிர்பாத்து இருந்துச்சுக..ஏமாந்து போயிரும்..”
“ஏமாந்துதான் போகும்ணு எனக்கும் தெரியும்..என்ன செய்ய..இந்த தீபாவளிக்கு இதுதான் கொடுத்து வைச்சதுன்னு சந்தோஷமா இருக்கத் தெரிஞ்சுக்கணும்”
“இதுக்கு மேலெ பேசினால் அனாவசியமாகத் தன் கணவருக்குக் கோபம் வந்துடும் எனத் தெரிந்து கொண்ட சிவகாமி அத்துடன் பேச்சைமுடித்துக் கொண்டு வந்தவர்க்கு காபி கொண்டு வர அடுப்படிக்குள் நுழைந்தாள்.
“அப்பா வந்தாச்சாமா?”கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த தண்டபாணியும் நாகுவும் அப்பாவைப் பார்த்ததும் சந்தோஷத்துடன்
“கும்பிடறேன் அப்பா” என்றார்கள்.
“வாய்யா..மாராசனா இரு..”என்றவர் தண்டபாணியையும் நாகுவையும் இரு கைகளாலும் இழுத்து அணைத்துக் கொண்டார்.
“என்னய்யா..இந்த மாச டெஸ்ட்டில் நீ ·பர்ஸ்ட்டா..இல்ல அந்த அய்யர் வீட்டு குமார் வாங்கிட்டானா?”
“இல்லப்பா எல்லாத்திலேயும் நாந்தான் ·பர்ஸ்ட்..ஆனா இங்கிலீஸ¤ல மட்டும் அவன் ·ப்ர்ஸ்ட்..மொத்தத்தில் ·பர்ஸ்ட் ரேங்
நாந்தான்ப்பா..”என்றான் தண்டபாணி.
“வெரி குட் அடுத்த தடவை இங்கிலீஸ¤லேயும் நீதான் ·பர்ஸ்ட் வரனும்..கொஞ்சம் கவனமாப் படிச்சா ஈஸியா வரலாம்யா..”
“அப்பா..”மெதுவாக இழுத்தான் தண்டபாணி.
“என்னய்யா?”
“அப்பா வெடி வாங்கிட்டு வந்துருக்கீங்களா?”
‘வெடியாப்பா..நீங்க சின்னப்புள்ளைங்க..அதனாலே வெடி வாங்காம கம்பி மத்தாப்பு புஸ்வானம் எல்லாம் வாங்கி வந்துருக்கேன்.”
தண்டபாணியின் முகம் கறுத்துவிட்டது.வாடிப்போன மலர் போல இருந்தான்.அதைக்கவனித்த அவன் அம்மா தண்டபாணியைத் தனியாக அழைத்தாள்.
“தண்டபாணி..இந்த வருஷம் இது போதும்..அடுத்த வருஷம் அப்பா எல்லா வெடியும் வாங்கித் தருவாங்க..”
“இல்லம்மா..நான் ·ப்ரெண்ட்ஸ¤க்கிட்டலாம் சொல்லி வைச்சுருக்கேன்..நாகுக்கு இதெல்லாம் இருக்கட்டும்.எனக்குத் தனியா அப்பாக்கிட்ட வெடி கேட்டு வாங்கப்போறேன்.”
என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் சிவகாமி”சரி அப்பாகிட்ட கேளு..ஆனா அவுங்களை ரொம்பத் தொந்தரவு பண்ணக்கூடாது. அப்பா கோபம்தான் தெரியும்ல்.நல்ல நாள் அதுவுமா அவுங்க கோபத்தைக் கெளப்புற மாதிரி பேசக்கூடாது”என்று எச்சரிக்கை பண்ணி அனுப்பினாள்.
அப்பாவிடம் சென்ற தண்டபாணி “அப்பா,இதெல்லாம் தம்பிக்கு இருக்கட்டும்.நான் பெரிய ஆளாயிட்டேன்ல.அதுனால எனக்கு இந்த
மத்தாப்பு வேண்டாம்.எனக்குத் தனியாக வெடி வாங்கித் தாங்கப்பா”என்றான்.
“இல்ல கண்ணு..இந்த வருஷம் இது போதும்..அடுத்த வருஷம் அப்பா போதும் போதும்னு சொல்ற அளவு வாங்கித் தர்றேன்.”
“என் ·ப்ரெண்ட்ஸ்கிட்டல்லாம் சொல்லிட்டேன்..அதுனாலே எனக்கு இந்த வருஷம் தான் வேணும்.”
“அப்பா சொன்னா கண்டிப்பா செய்வேன்.அதுனாலே இந்த வருஷத்திற்கு இதை வச்சுக்க”
“இல்லப்பா.எனக்கு இந்த வருஷம் தான் வேண்டும்”..அடக்கி வைத்திருந்த அழுகை அவனை அறியாமல் பெரும் சத்தமாக வந்தது.
“தண்டபாணி..அப்பா சொல்றேன்ல.இதுக்கு மேல அடம் புடிச்சா அப்பாவிற்குப் பிடிக்காது..சிவாமீ..இந்தா இவனைக் கூப்பிட்டுட்டு போ..என்றார் தண்டபானியின் அப்பா.அவருடைய குரல்,சாதாரண தந்தையின் குரலில் இருந்து போலீஸ் குரலுக்கு மாறியது கேட்டு, சிவகாமி தனது குழந்தையை அணைத்துக்கொண்டு அடுக்களைக்குள் சென்றாள்.இதுவரை நடந்ததில் பாதி புரிந்தும் புரியாமலும் பார்த்துக்
கொண்டிருந்த நாகுவும் அவர்களைத் தொடர்ந்து உள்ளே போனான்.
சிவகாமி தொடர்ச்சியாக ஏதேதொ சொல்லி தண்டபாணியைச் சமாதானப்படுத்திப் பார்த்தாள்.நாகு எதுவும் பேசாமல் அமைதியாக தனது அண்ணன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.தண்டபாணிற்கோ சிந்தனை எல்லாம் எப்படி இந்த வெடிகளுடன் நண்பர்கள் மத்தியில்
விழிப்பது என்பதிலேயே இருந்தது.எல்லா நண்பர்களையும் சேர்த்து இன்னைக்கு ராத்திரி வெடி விடுவதாக சொல்லியாச்சு.எல்லாரும்
எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.கார்த்திக்,குமார்.,ஏன் நாகுட்ட கூட பந்தாவா டிரைன் வெடி விடுவதாக சொல்லியாச்சு.இப்ப பேச்சுக்கு கூடஒரு வெடி இல்லை.தண்டபாணியால் சமாதனத்திற்கு அவ்வளவு சுலபமாக வர முடியவில்லை.வெளியில் போக விருப்பமின்றி சமையல்கட்டிலேயே அடைந்து கிடந்தான்.தனக்கு நேர்ந்துவிட்ட அவமானத்தை எப்படி போக்குவது என்ற கவலையில் அதையே
யோசித்தபடி இருந்தான்.
அரை மணிக்கு மேல் தண்டபாணி அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தான்.எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் கேட்காததால்,
அவனாகவே இயல்பு நிலைக்கு திரும்பி வரட்டும் என்று சிவகாமி தன் வேலையைப் பார்க்க,பாத்திரங்களை எடுத்துக் கொண்டு
கிண்ற்றடிக்குச் சென்று விட்டார்.நாகு மட்டும் அண்ணன் பக்கத்தில் தானாகவே வரவழைத்துக் கொண்ட சோகத்துடன் உட்கார்ந்து இருந்தான்.
கொஞ்ச நேரம் கழித்து ஆசையைக் கட்டுப்படுத்த முடியாத நாகு மெல்ல எழுந்து சென்று மேசை மேல் இருந்த பட்டாசு இருக்கும் மஞ்சப்பையை எடுத்து வந்து அண்ணன் பக்கத்தில் உட்கார்ந்து பட்டாசுகளை வெளியில் எடுத்தான்.தண்டபாணி அதைப் பார்த்தும்
பார்க்காதது மாதிரி இருந்தான்.அதில் இரண்டு கட்டு கம்பி மத்தாப்பு, இரண்டு கட்டு புஸ்வானம்,கொஞ்சம் சாட்டை, கொஞ்சம் சக்கரம் இருந்தன.கம்பி மத்தாப்பைத் தவிர அதில் இருந்த வேறு எதையும் நாகு பார்த்ததில்லை.ஒரக் கண்ணால் அண்ணாவைப்
பார்த்தான்.அண்ணனும் வெடிகளைப் பார்ப்பதைப் பார்த்ததும் நாகுவிற்கு கொஞ்சம் தைரியம் வந்தது.
“அண்ணா இது என்ன வெடி?”என்று புஸ்வானத்தை எடுத்துக் காட்டிக் கேட்டான்.
கொஞ்ச நேரம் பதில் பேசாமல் தண்டபாணி அமர்ந்து இருந்தான்.தொடர்ந்து நாகு இரண்டு மூன்று முறை கேட்கவே பல்லைக் கடித்துக் கொண்டு “புஸ்வானம்” என்றான்.
அண்ணன் பதில் சொன்ன முறையை கவனிக்காது,அண்ணன் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக தப்பாக நினைத்துவிட்ட நாகு அண்ணணிடம் அடுத்த கேள்வியைக் கேட்டான்.
சாட்டையை எடுத்து நீட்டிவிட்டுவிட்டு அது தான் டிரைன் வெடி என்று நினைத்துக் கொண்டு,”அண்ணா இது தான் டிரைன் வெடியா..
நீளமா இருக்கு..”என்றான்.
தண்டபாணிக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி வந்த கோபமும் ஆத்திரமும் மறுபடி ஆக்ரோஷமாக உயிர் கொண்டன.எங்கிருந்து தான் அவனுக்கு அந்த வெறி வந்ததோ தெரியவில்லை.நாகுவை இழுத்து வைத்து அவன் பிஞ்சு முதுகில் மொத்து மொத்துன்னு மொத்தினான். தண்டபாணி அடிக்கிற சத்தமும் நாகு ஓவென்று அலறும் சத்தமும் கேட்டு கொல்லையில் இருந்து சிவகாமியும் உள்ளறையில் இருந்து
தண்டாபாணியின் அப்பாவும் ஓடி வந்தார்கள்.
————————-
மின் அஞ்சல் முகவரி:vetrivel@sahara.com.sa
- சாகசமும் மனித நேயமும் – எனது இந்தியா – கட்டுரைகள் – ஜிம் கார்பெட் – (தமிழில் யுவன் சந்திரசேகர்)
- செர்நோபில் அணுமின்னுலை விபத்துக்குக் காரணமான இயக்கநெறி முறிவுகள்!-9
- படிக்கப்படுபவை நடிக்கப்படுகையில்…
- கீதாஞ்சலி (78) பூரணப் படைப்பில் குறை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- அபத்தம் அறியும் நுண்கலை – 1
- திருக்குறள் ‘திருந்திய’ பதிப்பு?
- மெட்டாரியலிசம் : பின்நவீன கலையிலக்கிய போக்கு
- மறு நவீனத்துவம்/ரெமொ/ரீமாடனிசம்
- காவளூர் அமர்ந்த கந்தப்பெருமான்
- கடித இலக்கியம் – 10
- சாந்தனின் எழுத்துலகம்
- ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்
- கூற்றும் கூத்தும்
- தாஜ் எழுதிய ‘விமரிசனங்களும் எதிர்வினைகளும்’ அருமையான கட்டுரை
- கடிதம்
- எழுத்தில் எளிமை வேண்டும்
- பொருள் மயக்கம்
- ஒரு 40 பக்க நோட்டும் இரு நிகழ்வுகளும்
- கண்ணகி சிலை விமரிசனங்களில் ஏன் இந்து விரோதக் காழ்ப்புணர்ச்சி?
- ஜானகி விஸ்வநாதன் செய்திப்படம் “தீட்சிதர்கள்” வெளியீடு
- ஜோதீந்திர ஜெயின் உரை – இந்திய ஜனரஞ்சகக் கலாசாரம் பற்றி
- வெள்ளாரம் கல்வெட்டு குறித்து…
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 26
- தீபாவளி வெடி
- வினை விதைத்தவன்
- பா த் தி ர ம்
- டாவின்சி கோட்டினை முன் வைத்து – 1
- இந்தி,இந்தியா, இந்தியன்
- கம்யூனிசத்தின் பூலோக சொர்க்கம் – வட கொரியா
- எடின்பரோ குறிப்புகள் – 19
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 5. உடை
- இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… மேலும் சில விவரங்கள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-6)
- புலம் பெயர் வாழ்வு 14
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து
- கவிதைகள்
- சிந்திப்பது குறித்து…..
- நெஞ்சே பகை என்றாலும்
- பெரியபுராணம் – 93 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- விழிகளின் விண்ணப்பம்
- பறவையின் தூரங்கள்