தீபாவளி பற்றி ஒரு கடிதம்

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

மைத்ரேயன்



தீபாவளியின் குதூகலம் சுமார் 16 வயதில் போய் விடத்தான் செய்தது என்று நினைக்கிறேன். மறுபடி வரவே இல்லை, அதுதான் வருத்தம். ஆனால் சென்ற வருடம் அக்கம் பக்கத்தினர் எல்லாம் வந்து அவரவர் பங்குக்கு சில கம்பி மத்தாப்பு, புதை வாணம், சாட்டை எல்லாம் கொளுத்திக் கலர் கலராகப் புகையைக் கிளப்பி விட்டு வேடிக்கை பார்த்தார்கள். நிறைய வெள்ளைக்காரப் பெண்கள், சீனப் பெண்கள், கலப்புப் பெண்கள் – எல்லாம் என் பெண்ணின் தோழிகள், உயர்நிலைப் பள்ளி மாணவிகள் வந்து வீட்டுப் பின் வெளியில் அவர்கள் பாட்டில் எதையோ கொளுத்திப் பார்த்தார்கள். பையன் தன் வெள்ளைக்காரச் சிறுவர் நண்பர்களோடு ஆபத்தாக எதையெல்லாமோ செய்து திட்டு வாங்கிக் கொண்டிருந்தான். என் அம்மா, வந்த இந்தியக் குடும்பத்தின் முதியவர்கள் எல்லாம் சௌக்கியமாக கண்ணாடிக் கதவுக்குப் பின்னே அமர்ந்து குளிராமல் கதகதப்பாக உட்கார்ந்து நாங்கள் வெளியில் குளிரில் சிறிது நடுங்கிக் கொண்டே அடிக்கும் கொட்டத்தைப் பார்த்து இருந்தனர். என் அம்மா மாத்திரம் தாங்க முடியாமல், வெளியே வந்து சில மத்தாப்புகளைக் கொளுத்திக் கொண்டு பேரனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். இத்தனைக்கு நடுவில் எனக்கு தீபாவளி என்று ஏதும் தனி மகிழ்ச்சி இல்லை. கடவுள் நம்பிக்கை இல்லாது போனால் பிறகு இந்தப் பண்டிகைகளை காரியார்த்தமாகத்தான் பார்க்க முடிகிறது. எல்லாரும் கூடி மகிழ ஒரு வாய்ப்பு என்று எதார்த்தமாகப் பார்க்கும்போது அந்த மகிழ்ச்சி இருக்கிறது- அது pleasure, களிப்பு. மனமகிழ்வு என்று உயர என்ன ஆனால் கிட்டும் என்பது தெரியவில்லை- Happiness and over and above that a sense of bliss கிட்டுவது எப்போதாவது அபூர்வமாகத்தான் நிகழ்கிறது. பெங்களூரில் இருந்து மைசூருக்குப் போகும் வழியில் ஒரு அருவியைப் பார்த்தேன். நல்ல மழைக்குப் பிறகு போயிருந்தோம். அருவி பிய்த்துக் கொண்டு கொட்டியது. அப்போது மனதில் ஒரு உவகை பொங்கியது. இத்தனையும் கிராமங்களுக்குப் போய் தண்ணீர்ப் பஞசம் இல்லாமல் ஆகும் என்றும் தோன்றியது. அதற்கு முன் கிட்டிய கண நேர சந்தோஷம் அது வெறும் உடலும் மனமும் தூண்டப்பட்டு இணைந்த கணம் என்று நினைக்கிறேன். எப்போதாவது இசையில் இது கிட்டுகிறது.

வெள்ளைக்கார அண்டை வீட்டாருக்கு ஒரே அதிசயம். கொண்டாட்டமும். அவர் பாட்டில் எங்கள் வாணங்களை எல்லாம் கொளுத்திக் கொண்டிருந்தார். போலிஸ் கார் வந்தால் அவர் இருட்டில் கரைந்து போய்விடுவார், மாட்டுவது நாங்கள்தானே என்று எனக்குத் தோன்றியது. ஆனால் வாய் அதிகம் அவருக்கு. நிறைய நல்ல ஜோக்கும், ‘கெட்ட’ ஜோக்கும் சொல்லுவார். சிலதெல்லாம் ரொம்ப கத்தியாக, இல்லை ரம்பமாக இருக்கும். இந்த ரம்பங்களை எல்லாம் உலகமகா விமர்சகர்களான ஹைஸ்கூல் பெண்களிடம் போய்ச் சொல்லிக் கொண்டு தீபாவளிச் சாப்பாட்டைச் சாப்பிட்டார். ஒரு வெட்டு வெட்டினார் என்றுதான் சொல்ல வேண்டும். என்னய்யா உரைக்கவில்லையா என்றால் ஹ, இதெல்லாம் உரைப்பா என்று சொல்லிக் கொண்டு கண்ணீர் விட்டு, மூக்கு ஒழுகி விடாமல் சாப்பிட்டார். உரைப்பு எங்கள் தயாரிப்பு அல்ல. ஒரு ஆந்திரா நண்பர் குடும்பம் தன் பங்குக்கு எடுத்து வந்த தயாரிப்பு.

எல்லா ரஷ்ய, சீன, அமெரிக்க வெள்ளைப் பெண்களும் கையால் எப்படிச் சாப்பிடுவது என்று ரொம்பத் திண்டாடி விரல் நனைவது, அழுக்காவது, கறையாவதை எல்லாம் தவிர்க்க முயன்று சோற்றையும் கூட்டு வகைகளையும் சாப்பிட முயன்ற சர்க்கஸ் காட்சி நன்றாக இருந்தது. கொஞ்சம் தவிக்க விட்டுப் பின் பரவாயில்லை பெண்களே, உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறோம். ஆனால் இதோ சாதனங்கள்- ஸ்பூன், ஃபோர்க் எல்லாம் என்று தவிப்பைக் குறைக்கக் கொடுத்தோம்.
சாப்பாட்டில் இந்தப் பெண்களெல்லாம் ரொம்பச் சுமார்தான். தோசை போடுங்கள் சாப்பிடுகிறோம் என்கிறார்கள். இந்த இந்திய ஸ்வீட்டெல்லாம் எடுபடவில்லை. ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி க்ரிஸ்ப் என்று மனைவி ஒன்று அவசரத் தயாரிப்பாகச் செய்வார்- ஓட்ஸ், வனில்லா, சின்னமன், பழுப்பு சர்க்கரை என்று சிலவற்றைக் கலந்து, அவன்னில் போட்டு சுட்டுச் சமைத்தது. அதைச் சூடாக கோப்பையில் போட்டு மேலே ஃப்ரெஞ்சு வனிலா ஐஸ்க்ரீமைப் போட்டுக் கொடுத்தால் மொத்த பேகிங் தட்டே நிமிடத்தில் காலியாகிப் போச்சு.

முதியோர் கூட்டம் இந்திய சாப்பாடு, ஸ்வீட் எல்லாவற்றையும் துளித் துளி ருசி பார்த்து விட்டு விலகிக் கொண்டது. எங்கள் கூட்டம் எல்லாவற்றிலும் கொஞ்சம் போட்டு உண்ட விட்டு, பிறகு இது குற்றம் அது சொள்ளை என்று அவரவர் குடும்பத்துக்குள் ரகசியமாகச் சொன்னோம். யாருடைய தயாரிப்பு கொஞ்சம் கூடப் போகவில்லை என்று எல்லாரும் ஓரக் கண்ணால் பார்த்தார்கள் என்று நான் பார்த்தேன். என் தயாரிப்பு வெங்காய சாம்பார் போன வருடம் அவ்வளவு உசத்தி இல்லை. சுமார்தான். முந்தைய வருடம் பிய்த்து உதறி இருந்தேன்.
இந்த வருடம் ஹர்ட் ரிடையர்ட் ஏதும் சமைக்கவில்லை. வீட்டைத் துப்புரவு செய்வதுதான் வேலை. இன்னும் ஆரம்பிக்கவில்லை! 🙂
சமைக்க ஜாம்பவான்களெல்லாம் வருகிறார்கள்- இரண்டு அம்மாக்கள், ஆந்திரா மூத்த தலைமுறை, ஒரு உ.பிரதேசப் பாண்டே குடும்பம் என்று. நான் வேடிக்கை பார்க்க முடியாதென்றாலும், இந்த சுத்து வட்டார வேலைகள் என்னது. குட்டிக் குரங்குகளை எல்லாம் மேய்ப்பேன்.
பெண் கல்லூரிக்குப் போய் டார்மிடரியில் சந்துஷ்டியாக சுதந்திரமாக இருக்கிறாள். வெள்ளி சனியெல்லாம் அருகில் உள்ள இன்னொரு பல்கலையான ஹார்வர்ட் பல்கலையில் அவளோடு ஹைஸ்கூலில் படித்த ஒரு பெரிய கூட்டமே இருக்கிறதால் அதுகளோடு கொட்டம் அடிக்க ஹார்வர்டு சதுக்கத்துக்குப் போய் விட்டு நள்ளிரவுக்கு டார்ம் அறைக்கு வருகிறாளாம். சொல்லும்பொது கண்ணெல்லாம் பளிச்சிடுகிறது. அவளும் சரி, கூடச் சுற்றும் வெள்ளை, சீன, ரஷ்யப் பெண்களெல்லாம் எப்படி அடக்கி வைத்தீர்கள் எங்களை எல்லாம், இப்போது பெற்றோர்களே ரெக்கை முளைத்தது பறக்கிறோம் என்ன செய்யப் போகிறீர்கள் என்று குதூகலமாக அவரவர் பெற்றோரைக் குறை சொல்வது கேட்க ஒருபக்கம் சங்கடமாக, இன்னொரு பக்கம் நமக்கே குதூகலமாக இருக்கிறது.

ஒரு ம்யூசிகலில் இந்தக் கூட்டம் நடிக்கிறது. அன்றும் அடுத்த நாளும் மேடையேற்றம். அதனால் இந்தக் கூட்டம் இந்த வருடம் வராது. நாங்களெல்லாம் இதனால் குறைந்து கரைந்து போகிறோம். பெண்ணில்லாமல் தீபாவளி கொண்டாடி சுமார் 15 வருடமாகிறது. இதுதான் அனேகமாக முதல் தடவை.

பயல் வளர்ந்திருக்கிறான, அதனால் கூடுதலாக வாணங்களை அவனே கொளுத்துவான் என்று நினைக்கிறேன். கால்பந்து விளையாடி உடல் கிண்ணென்று இருக்கிறது அதனால் ஓடி ஆடி சளைக்காமல் பாதி வேலைகளை அவன் செய்து விடுவான். சிமினி விளக்கு எல்லாம் இல்லையா, அடிக்கிற காற்றில் இந்த மெழுகு வர்த்தி அணைந்து போய்க் கொண்டே இருக்கிறது. அதை ஏற்றி எரிய வைப்பதை யாராவது ஒரு தாய்க்குலத்திடம்தான் கொடுக்க வேண்டும்.
ஆனால் வருகிற வெளி கிஷ்கிந்தா பட்டாளத்தோடு வீட்டைச் சுற்றி இருக்கிற பட்டாளமும் சேர்ந்தால் என்ன நடக்கப் போகிறதோ?
எல்லாம் நடந்த பின் ஒரு வட்டம் இங்கு வந்து எழுதுகிறேன்.
இந்த வருடம் மழையில்லை, வெறும் குளிர்தான். இலைகள் உதிர்ந்து பின்னால் புல்தரை மூடி இருந்ததை ஒரு முறை சுத்தம் செய்து இலைகளை நகர சுத்திக் குழு வந்து எடுத்துப் போய் விட்டார்கள். அடுத்த வீட்டு ஓக் எங்கள் வீட்டில் வேலியைத் தாண்டி நிழலையும், இலைகளையும் கொட்டுகிறது. Fair is Fair. வெயில் காலத்தில் குளிர்ச்சியாக வைத்தால் இலையுதிர்காலத்தில் இலையை அள்ளுவதும் நம் பங்குதானே? இந்த வருடம் பணத்தைக் கொட்டி தரையில் மண்ணைக் கொட்டினோம். பூகம்பம் வந்த கலிஃபோர்னியா மாதிரி இருந்த பின் தோட்டம் இப்போது கொஞ்சம் சரிவான வெளியாக நல்ல பசும் புல்லோடு காட்சி அளிக்கிறது. நிறைய அணில்கள், குருவிகள், பூனைகள், ஓரிரு முயல்கள், பல பறவைகள். ஒன்றிரண்டு சிவப்புக் கொண்டை கார்டினல்.

அருகில் உள்ள நியுஹாம்ப்ஷைர் மாநிலத்துக்குப் போய் மத்தாப்புகள் வாங்கினோம். சும்மா ஒரே ஒரு ஷாப்பிங்

நட்புடன்
மைத்ரேயன்

Series Navigation

மைத்ரேயன்

மைத்ரேயன்