ஆல்பர்ட்
தாய்த் தமிழகத்தையே பார்த்திராத, உலகெங்கும் திட்டுத்திட்டாய் சிதறி….
நிரந்தர வாழ்விடமாய்க் கொண்டு வாழ்ந்துவரும் சின்னஞ்சிறார்களுக்கும்,
ஏன் ? வாலிப வயதினருக்கும் கூட சில பண்டிகைகளின் மரபுகள் தெரியாமலிருக்கும்!
எதோ, பண்டிகை வருகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம். புத்தாடை
உடுத்துகிறோம். வெடி வெடிக்கிறோம்! தடபுடலான விருந்துகளில்
ஊரும் உறவும் திளைத்துக் கிடப்பதில் மகிழ்ந்து போகிற நாட்களாகத்தான்
பண்டிகைகள் வந்து போவதாகக் கருதுபவர்கள் ஏராளம்!
இன்னும் சொல்லப்போனால் தீபாவளியா ? பொங்கலா ? ஏதோ ஒரு சனி
ஞாயிறில் ஏதோ ஒரு அமைப்பில் அசோசியேசன் நடத்துகிற ஒரு சில மணித்துளி
நிகழ்வில் போயமர்ந்து பலரும் கொண்டு வந்த விதவிதமான உணவு வகைகளை
ருசி பார்த்து விட்டு வரும் நாளாகத்தான் அமெரிக்காவில் வாழும் வாலிப
வயதினரும் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான
உண்மை!
அங்கும் தமிழில் பேசுவோர் வெகு சொற்பம்; தீபாவளிக்கு
இந்த சனிக்கிழமை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என்பதையே
நுனி நாக்கு ஆங்கிலத்தில் தமிழர்கள் இல்லத் தொலைபேசி குரல்
அஞ்சலில் (Voice Mail) தெரிவித்திருப்பார்கள், தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்!
தமிழ் அமைப்புகள், தமிழர்களின் இல்லங்களுக்கு தொடர்புகொண்டு பேசும்போதுகூட தமிழில் பேசத்
தயங்குகிறார்கள் என்பது வேறு விசயம்.
இவ்வளவையும் மீறி, அந்தப் பண்டிகையின் சிறப்பையோ மூலத்தையோ சொல்லித் தர
அந்த அமைப்புகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ நேரம் வாய்ப்பதில்லை!
அப்படிப்பட்டவர்களுக்காக தீபாவளிப் பண்டிகையின் சிறப்புகளை சங்கமம் மூலம்
இந்தக் கட்டுரையை அளிப்பதில் பெருமகிழ்ச்சியே!
பண்டிகைகள்….!
வாழ்க்கையில் பலவித சோதனைகளும், இன்ப துன்பங்களும் மாறி மாறி
வருவதால் பலருக்கும் வாழ்க்கை அலுத்துவிடுகிறது. தற்போதைய
இளைஞர்களின் வார்த்தையில் கூறுவது என்றால் ‘Bore அடிக்கிறது ‘.
வழிநெடுக நடந்து களைத்துப் போனவன் தாகசாந்தி செய்து சற்றே
இளைப்பாறுவதுபோலத்தான் வருடத்தில் சில மாதங்கள் தேர்… திருவிழா….
பண்டிகைகள் என்று மனித குலம் குதூகலித்துக் கொள்கிறது!
இவ்விதம் வாழ்க்கையில் அலுப்புத் தட்டாமல் இருப்பதற்கும், அதே சமயத்தில்
ஆன்மிகத்திலும், இறைபக்தியிலும் மனம் ஈடுபடுவதற்காகவுமே பல பண்டிகைகளை
நமது ஆன்றோர்களும், சான்றோர்களும் நிர்ணயித்து உள்ளனர். அத்தகைய
சிறப்பு மிகுந்த பண்டிகைகளில் ஒன்றே தீப – ஒளி என்ற தீபாவளி ஆகும்.
உலகெங்கும் உள்ள இந்துப் பெருமக்களால் கொண்டாடபடும் தீபங்களின் விழா…
தீபாவளித் திருவிழா!
தீபாவளி என்றால் தீபம் + வளி … வளி என்றால் வரிசை என்று பொருள்.
வரிசையாக தீபங்களை வைத்துக் கொண்டாடப்படுகிற பண்டிகையாக
இருந்ததால் தீபாவளி என்ற காரணப் பெயராக நிலைத்துவிட்டது!
ஐப்பசியில் கொண்டாடப்படுகிற மிக முக்கியமான திருவிழா தீபாவளி.
ஐதீகமாகவும், தத்துவார்த்த ரீதியிலும் விளங்கும் தீபாவளியானது உலகின்
பல பாகங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தீமையை
விலக்கும் உண்மையாகவும், இருளை விலக்கும் ஒளியாகவும்
இந்த விழாவைச் சொல்றோம்.
இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின் குறியீடாகக்
கருதப்படுகிறது. எனவே தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்றப்படும்
எண்ணெய் விளக்குகள் மனிதனுக்கு ஞானத்தைக் கொண்டு வருவதாக ஐதீகம்.
வேத காலத்திலிருந்து கொண்டாடப்பட்டு வரும் இந்த விழாவானது
மனிதர்களிடையே அன்பையும் நட்புறவையும், ஞானத்தையும் வலியுறுத்துகிறது.
பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் ‘சந்திர தரிசனம் ‘ என்றோ
சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் என்றோ
காணப்படும். ‘சந்திர தரிசனம் ‘ என்றால் என்ன ?
ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு
சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும்.
இது கிழக்கில் அடிவானத்தில் தெரியும்.
சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய்
கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு
முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு
சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது
இருக்கவேண்டும்.
இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச
கங்கை ஆர்ப்பரிக்கும். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக்
குளிக்க வேண்டும். ஆகையால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை
‘கங்காஸ்நானம் ‘ என்று கூறுகிறார்கள். கங்காஸ்நானம் செய்த புண்ணியம்
கிடைக்கும் என்று ஆன்றோர் கூறுவார்கள்.
சூரியன் உதயமாவதற்கு முன்னர் பிறைச் சந்திரன் தோன்றும் வேளையில் பூமியில்
உள்ள நீர்நிலைகளில் கங்காதேவி ஆவாஹனம் ஆவாள். அதே சமயத்தில் நல்லெண்ணெயில்
மஹாலட்சுமியின் அம்சங்கள் தோன்றும். ஆகையால் அந்த நேரத்தில்
எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்வார்கள். புத்தாடை அணிந்து மகிழ்வார்கள்.
தீபாவளியை ஒரு நாள் கொண்டாடுவோரும், நான்கு நாள், ஐந்து நாள்
கொண்டாடுவோரும் உண்டு என்றாலும் அமெரிக்காவிலோ இல்லை கனடாவிலோ
வார வேலை நாட்களில் வந்தால் அதாவது வியாழக்கிழமை தீபாவளி என்றாலும்
அந்த வார இறுதி நாளான சனிக்கிழமையோ, ஞாயிற்றுக்கிழமையோ தான்
கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் ஒருநாள் தீபாவளி கொண்டாடப்பட்டாலும் இந்தியாவின் சில
மாநிலங்களில் அதாவது ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில்
தீபாவளி ஐந்து நாட்கள் என்ற அளவில் வெகு அமர்க்களமாகக்
கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் மட்டுமின்றி ஜைன, பெளத்த சமயத்தைச்
சார்ந்தவர்களும் சேர்ந்து கொண்டாடுகிற….
ஒரு உன்னதமான பண்டிகை தீபாவளி !
இந்தியத் தத்துவ மரபானது ஐந்தாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை உடையது. இந்த
மரபில் தீபாவளி குறித்து ஏராளமான கதைகள் புழக்கத்தில் இருக்கிறது.
தீபாவளியின் தோற்றம் குறித்த கதையாக நரகாசுரனைக் கிருஷ்ணனும்,
சத்தியபாமாவும் சேர்ந்து அழித்த கதைதான் எல்லோருக்கும் தெரிந்த ரகசியக்
கதை.
உங்கள்ல சிலருக்கு… இல்ல… உங்க குழந்தைகளுக்குக் கூடத் தெரியாம
இருக்கலாம்.
நரகாசுரனைச் சத்தியபாமா வதம் புரிந்ததைத் தீபாவளியாகக் கொண்டாடுவதாகத்
தமிழர்கள் நம்புகிறார்கள். இதற்குரிய கதை ‘காளிகா புராண ‘த்திலும் வேறு சில
புராணங்களிலும் உபகதையாகச் சொல்லப்பட்டுள்ளது. கிருஷ்ணன் சத்தியபாமா
சம்பந்தப்பட்ட விழாவாக முழுக்க முழுக்க இருந்தால் இது வைணவ விழாவாகக்
கருதப்பட்டிருக்கும். ராமநவமி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி போன்ற
திருநாள்களைக் கொண்டாடத் தயங்கும் தீவிர சைவர்கள் தீபாவளியையும்
ஒதுக்கியிருப்பார்கள் அல்லவா ?
நவராத்திரியைத் தவிர்த்து இந்தியர்கள் அனைவராலுமே மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்படும் திருநாள் திபாவளிதான்.
வடநாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஹோலிபண்டிகையைத் தென்னாட்டில்
கொண்டாடுவதில்லை.
தமிழகத்தின் பொங்கல் கேரளத்தில் அவ்வளவாகக் கொண்டாடப்படுவதில்லை.
கேரளத்தின் ஓணம் மற்ற இடங்களில் கிடையாது. ஆனால் தீபாவளியை
இந்தியர்கள் அனைவருமே கொண்டடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு இடத்தில்
ஒவ்வொரு காரணத்தைக் கூறிக்கொள்கிறார்கள்.
தீபாவளிக் கதை….1
பூமாதேவியோட மகன்தான் நரகாசுரன்! நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம்
வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு சாவு…மரணம்
சம்பவிக்கக் கூடாதுன்னு பிரம்மனிடம் வரம் வாங்கியிருந்தான். வரத்தை
வாங்கீட்டோம்ங்கிற தைரியத்துல அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும்,
நாட்டு மக்களை பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான்.
எப்டிப்பட்ட தொல்லைன்னா ராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக்
கூடாதுன்னு உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்!
இருளை நேசிக்கும் இரக்கமில்லாதவன். வெளிச்சவிளக்குகளை வீட்டில்
வைத்தவர்களின் தலைகளைக் கொய்தான், கொடும்பாதகன் நரகாசுரன்!
நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், பகவான்
கிருஷ்ணரிடம் முறையிட்டனர். கிருஷ்ணரும் நரகாசுரனை
அழிக்கிறேன் என்று சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொன்னார்.
மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துட்டு கம்முன்னு சும்மா இருக்க முடியுமா ?
பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை எதிர்த்துச் சண்டை
போடுறதுன்னு முடிவு செஞ்சார் பகவான் கிருஷ்ணர். சண்டை ஆரம்பிச்சுச்சு.
போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பு கிருஷ்ணருக்கு மயக்கமடையிர
நிலைக்கு ஆளாயிட்டார். பூமா தேவி இதைப் பாத்தாங்க. அவங்க மனசு
பொறுக்கல. மிகுந்த கோபத்தோட சத்தியபாமா, நரகாசுரனோட சண்டை
போட்டாங்க. கொடியவன் நரகாசுரனை வெட்டி வீழ்த்தினாங்க, சத்தியபாமா.
நரகாசுரன் சாகிறதுக்கு முன்னாடி தன் தாயிடம் ஒரு விண்ணப்பம் செஞ்சான்.
எனக்குச் சாவு வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக்
கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இறக்கிற இந்த நாளை மக்கள்
வெளக்கேத்தி சந்தாஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு
கேட்டான்.
பூமாதேவி நரகாசுரனின் கோரிக்கையை நிறைவேத்துறதா ஒத்துக்
கிட்டாங்க. மக்களே, அரக்கன் ஒழிஞ்சான் அப்டாங்கிற நிம்மதியோட வீட்டுவீட்டுக்கு
வெளக்குகளா ஏத்தி தங்களோட சந்தோஷத்தை வெளிப்படுத்துனாங்க.
வீட்டுல யாரும் வெளக்கு ஏத்தக் கூடாதுன்னு நரகாசுரன் போட்ட தடை நீங்கிடிச்சு
இல்லையா ? அதனால நரகாசுரன் என்ற அந்தக் கொடிய அரக்கன் இறந்து
அழிந்து ஒழிந்த அந் நாளை தீபங்கள் ஏற்றி வெளிச்சத் திருவிழாவாக…. தீபத்திருவிழாவாக….
தீபாவளியாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. தவறு
செய்பவர் தன் மகனேயானாலும் அவன் மகன் என்று பாராமல் தண்டிக்கவேண்டும்
என்பதுதான் இதில் பொதிந்திருக்கும் உண்மை!
சத்தியபாமையென்ற பெண்ணின் உதவியின்றியே கிருஷ்ணரால் நரகாசுரனை
வென்றிருக்க முடியும். பின் ஏன் அப்பெண்ணின் துணையை அவன் நாடினான் ?
இதில் வாழ்க்கையின் ஒரு முக்கியத் தத்துவம் அடங்கியுள்ளது.
இன்ப, துன்பம்
நிறைந்த வாழ்க்கையில் மனைவியென்ற ஒரு துணையின்றி வெற்றி
பெறயியலாது என்பதை உணர்த்துவதற்காகவே சத்தியபாமையென்ற பாத்திரம்
உருவாக்கப்பட்டுள்ளது. கணவனும், மனைவியும் இணைந்து வாழ்வதே
உண்மையான வாழ்க்கையாகும்.
தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் இன்னும் பல கூறப்படுகின்றன.
தீபாவளிக் கதை….2
ராமயணக் காவியத் தலைவர் ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய
நாள் என்றும், திருமால் வாமன அவதாரமெடுத்து மகாபலியை வதம் செய்த நாள்
என்றும், சிலர் அதுதான் புதிய ஆண்டும் என்றும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
திருமுருக கிருபானந்த வாரியார் தீபாவளிக்குச் சொல்ற காரணத்தையும் நாம் ஒதுக்கித்
தள்ளிவிட முடியாது! ?
தீபாவளிக் கதை….3
கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொல்றார்….
‘ தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடுகிறார்கள்.
ஆனால் அதன் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரேயாவார்கள்.
பெரும்பாலோர், நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனை
அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். நரகாசுரனைச்
சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக்
கொன்ற நாளுக்கு ஒரு கொண்டாட்டம் நிகழ்வது யாண்டும் எக்காலத்தும்
இருந்ததில்லை.
அப்படியிருக்குமாயின், இரணியைனக் கொன்ற நாள், இராவணனைக்
கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப் – பகனைக் கொன்ற நாள்,
துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்த காசுரன் சரந்தராசுரன்,
இரண்யாட்சன், திருவணாவர்த்தன் இப்படிப் புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொரு
வரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடுவதாயின், ஆயுளே அதற்குச்
சரியாகி விடும். ஆகவே
நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று, ‘
தீபம் -விளக்கு, ஆவளி- வரிசை
தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள்
தீபாவளி என உணர்க.
தீபமங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை,
நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள்.
திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ ?
‘ விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
என்பது ஞான சம்பந்தர் திருவாக்கு. ‘ என்று குறிப்பிடுகிறார் வாரியார் சுவாமிகள்!
தீபாவளிக் கதை….4
சீக்கியர்கள் தீபாவளி கொண்டாடுற…. தீபாவளிக்கு சொல்ற காரணம் வேற.
சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு கோவிந்த சிங் குவாலியர் சிறையில்
அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுபட்ட நாளைத்தான்
தீபாவளியாகக் கொண்டாடுவதாச் சொல்றாங்க!
ஓ! இதான் தீபாவளி பிறந்த கதையா ? அப்டான்னு நீங்க கேட்டா, இல்லை…
இது மாதிரி நெறைய தீபாவளிக் கதைகள் இருக்கு… விரிவாச் சொல்லாட்
டாலும் கொஞ்சம் சுருக்கமாவே சொல்றேனே! ?
தீபாவளிக் கதை….5
ராமர் 14 வருஷ வனவாசத்துக்குப் பிறகு மனைவி சீதையோடவும் தன்னோட
அருமைத் தம்பி இலக்குமணனோடும் அயோத்தி திரும்புறாங்க. கம்பர் அந்த
அயோத்தி நகரம் எப்டி விழாக்கோலம் கொண்டிருந்துச்சுன்னு அழகாச்
சொல்லுவார்.
ஆக விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர் வனவாசம்
முடிந்து அயோத்திக்குத் திரும்பிய அந்த மகோன்னத நாளைத்தான் தீபாவளித்
திருநாளாகக் கொண்டாடுவதாகச் சொல்வாரும் உண்டு!
தீபாவளிக் கதை….6
இன்னும் சிலர் ராமன், அரக்கன் ராவணனை அழித்தொழித்த நாளைத்தான்
அயோத்தி நகர மக்கள் வீடுகளில் எண்ணெய் விளக்குகள் ஏற்றிக் கொண்டாடிய
அந்த நாளே தீபாவளி என்று சொல்வாரும் உண்டு.
தீபாவளிக் கதை….7
மகாபலி என்ற அரக்கனை அழிக்க மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார்.
அவர் வாமன வடிவமெடுத்து மகாபலியிடம் வந்தார். தமக்கு மூன்றடி நிலம்
வேண்டும் என்று மகாபலியிடம் கேட்டார் மகாவிஷ்ணு.
மகாபலியோ, மகாவிஷ்ணுவின் சூழ்ச்சியை அறியாமல் வாமன உருவிலிருந்த மகா
விஷ்ணுவிற்கு மூன்று அடி நிலம் தருவதாக வாக்களித்தான். ஆனால்,
மகாவிஷ்ணுவோ
முதல் அடியை மண்ணிலும்,
இரண்டாவது அடியை விண்ணிலும்
வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று மகாபலியிடம் கேட்கிறார்.
வாக்குத் தவறக்கூடாது என்பதில் உறுதியோடிருக்கும் மகாபலி,
மூன்றாவது அடியை தனது தலையில் வைக்குமாறு சொல்ல…. மகாவிஷ்ணுவும் அவனது
தலையில் மூன்றாவது அடியை வைத்து அழுத்திக் கொன்றார்.
மகாபலி அரக்கன் அழிந்த நாளே தீபாவளித் திருநாள் என்று கருதுவாரும் உண்டு!
தீபாவளிக் கதை….8
மகாவிஷ்ணு நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை
வதம் செய்து உலகத்தில் உண்மையை நிலை நாட்டிய நாளே தீபாவளியாகக்
கொண்டாடப்படுகிறது என்று சொல்வாரும் உண்டு !
தீபாவளிக் கதை….9
துர்கா தேவி மகிசாசுரனை வதம் செய்தழித்த நன்னாளே தீபாவளித்
திருநாள் என்று சொல்வதும் உண்டு. சொல்லப்படுகிற அனைத்துக் கதைகளிலும்
உள்ள ஒரே ஒற்றுமை விஷ்ணுவின் அவதாரம் இருப்பதுதான் !
தீபாவளிக் கதையுடன் ஒன்றை ஒப்பிட்டுப்பார்க்கவும் வேண்டும். நன்மையின் வெற்றி.
தீமையின் அழிவு என்பதைத்தான் கிருஷ்ண பகவான் நரகாசுரன் கதை கூறுகிறது என்
கின்றனர்.
தீபாவளிக்கு முன்னரே வரும்நவராத்திரியின்போதும், பின்னர் வரும் கந்த
சஷ்டியின்போதும் இந்தக் கருத்துத்தான் வலியுறுத்தப்படுகிறது.
இந்த இரண்டு விழாக்களிலும் அரக்கர்கள் அழிக்கப்படுகின்றனர். நன்மை வெற்றி
கொள்கிறது, தீமை அழிகிறது. இந்தக் கருத்து பண்டைய இந்துக்களை ஈர்த்திருக்க
வேண்டும்.
ஆகவேதான் ஒன்றன்பின்னர் ஒன்றாக வரும் பண்டிகைகளில் அதை வலி
யுறுத்தியுள்ளனர் போலும். மேற்குறிப்பிட்ட எந்த ஒரு காரணத்திற்காகவும் தீபாவளி
கொண்டாடப்பட்டாலும் அதனை சமூக ரீதியாகப்பார்ததால் என்ன ? மனிதன் மகிழ்ந்
திருப்பது அவனின் இயல்பு. குடும்பத்துடனும் நண்பர்களுடனும் மற்ற இனத்தவருடனும்,
சமயத்தினருடனும் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு நாள் தீபாவளி. . !
தீபாவளிக் கதை….10
இத்தனை கதையிருக்க உவமைக் கவிஞர் சுரதாவோ தீபாவளிக்குச் சொல்லும் கவிதை
விளக்கமோ வேறுமாதிரி உள்ளது. ஐப்பசியில் தேய் நிலாவின் சதுர்த்தசியி லே
எள் செடியின் மூலம் கிடைத்த எள்ளைக் கொண்டு
தயாரித்த எள் நெய்…அதாவது நல்லெண்ணெய் கண்டு பிடிப்பை பள்ளிநாட்டையாண்ட
பருபன் என்ற மன்னனுக்குச் சொன்னார்களாம்!
நல்லெண்ணெய் ‘ ‘நேத்திரத்தின் ரோகத்தை நீக்கும்; மேக நீரிருந்தால், எலும்புருக்கி நோயி ருந்தால்
மாத்திரை ஏன் ? இந்த எண்ணெயைத் தேய்த்துக் கொண்டால் போதும், நோய்கள் அகலும்; புதுப் பொலிவு
பெறலாம் என்றும் இந்த எண்ணெயில் பலகாரங்கள் செய்தும் சாப்பிடலாம்; அதன் சுவையோ தனி என்றும்
சொல்ல அதையும் மன்னன் சோதித்து அவ்வளவும் உண்மையென்று அறிந்த மன்னன்,
அந்த மன்னவர்தலைவன் மகிழ்ந்து அதன் சிறப்பைக் குடி மக்கள் உணர தீபவதி நதிக்கரையில் மக்களுடன்
மக்களாக நீராடி மகிழ்ந்தாராம். அந்த இனிய நாளை ஆண்டுதோறும் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து
அதிலேயே பட்சணங்கள் செய்தும், அன்று புத்தாடை அணிந்தும் மகிழ்ச்சியாக இருங்கள் என்று அந்த பருபன்
மன்னன் தன் குடிமக்களுக்கு உத்திரவிட்டானாம். அந்த நாள்தான் தீபாவளி என்கிறார் உவமைக் கவிஞர் சுரதா!
இத்தனை கதையில் எந்தக் கதை மெய் ? எந்தக் கதை பொய் ? எதை நம்புவது, எங்களைக் குழப்பிவிட்டார்களே
என்று என்னை யாரும் திட்ட வேண்டாம் 😉 இத்தனையிலும் மேலோங்கி நிற்பது நரகாசுரன் கதைதான்
என்றாலும் வாரியார் சுவாமிகள் சொன்னதை நாம் கணக்கில் கொள்ளலாமே! ?
அக்பர் காலத்தில்….!
விநாயகர் சதுர்த்தி மற்றும் முஸ்லிம் பண்டிகைக் கால நேரங்களில் இன்றைக்கு
தலைவர்கள் இந்து – முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திப் பேசவேண்டிய கட்டாயத்துக்கு
ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் மாமன்னன் அக்பர் சக்கரவர்த்தி ஆண்ட காலத்தில்
தீபாவளிப் பண்டிகையில் கலந்துகொண்டு கொண்டாடி மகிழ்ந்ததாக வரலாற்றுக்
குறிப்புகள் வளமையோடு சொல்கிறது. தீபாவளித் திரு நாளில் கோவில்களில்
தீபங்களை ஏற்றிவைக்க மான்யமாக பல லட்ச ரூபாய்களை பேருள்ளத்தோடு வழங்கியுள்ள
செய்தியை அறிந்து மகிழ்கிறோம்.
உலகெங்கும்….!
உலகெங்கும் தீபாவளி போன்று தீபங்கள் ஏற்றி விளக்கு வரிசைகள் வைத்து, பட்டாசு
வெடித்து கொண்டாடும் பண்டிகைகளும் உண்டு. சீனாவில் ‘ நஹீம் – ஹீபர் ‘ என்றும்
ஜப்பானில் ‘ டோரா நாகாஷி ‘ என்றும், பர்மாவில் அதாவது இன்றைய மியான்மரில்
‘ தாங்கீஜீ ‘ என்றும்,
ஸ்வீடனில் ‘ லூசியா ‘ என்ற விழாவும்,
இங்கிலாந்தில் ‘ கைபாக்ஸ் ‘
என்ற விழாவும் தீபாவளி போலவே கொண்டாடப்படும் பண்டிகைகளாகும்.
பட்டாசு வெடிச்சு….!
தீபாவளி என்றால் பட்டாசு இல்லாத தீபாவளியா ? காசைக் கரியாக்கும் விஷயம்
என்றாலும் அந்தப் பட்டாசுகள் கருக்கப்பட்டால் தான் லட்சக்கணக்கான பட்டாசுத்
தொழிலாளர்களின் இல்லங்களில் வெளிச்சம் எரியும் …. அடுப்பு புகையும் என்கிற
நிலையையும் இந்தத் தருணத்தில் எண்ணிப் பார்க்கத்தான் வேண்டும்.
தங்கள் வயிற்றுப் பாட்டிற்காக பள்ளி வாழ்க்கையைத் தொலைத்து பட்டாசுத் தொழிற்
சாலைகளில் தங்களைப் புதைத்துக்கொள்ளும் பிஞ்சுக் கரங்களின் உழைப்பு
அந்தப் பட்டாசுகளில் உறைந்து கிடக்கும் உண்மையை எத்தனை
பேர்கள் அறிவார்கள் ?
இந்தியாவின் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி நகரில் மட்டும் சுமார் 360 கோடி
ரூபாய் மதிப்புள்ள 50,000 டன்கள் எடையுள்ள பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் கேரள மாநிலம் எர்ணாகுளத்திலும், மத்தியப்பிரதேசமான குவாலியர், இந்தூரிலும் பட்டாசுத்
தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் நூறு 150 வகையான
பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
ஆனால் சீனாவில் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட பாட்டாசு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
இத்தாலி, பிரான்சு, பெல்ஜியம், கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளில்
சிறுவர் சிறுமியர்க்கு பட்டாசு விற்பனை செய்யப்படுவதில்லை.
தீபாவளிப் பண்டிகையின் பிறப்பிடமான இந்தியாவில் செய்யாத சிறப்பை
சிங்கப்பூர் செய்திருக்கிறது.
ஆம் !
தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்துத் தபால் தலை வெளியிட்ட நாடு
சிங்கப்பூர் மட்டும்தான்.
அதுமட்டுமல்ல. ஒரு மாதத்திற்கு இங்குள்ள சிராங்கூன் ரோடு அதாவது குட்டி இந்தியா-
ஒளி வெள்ளத்தில் மிதக்கும். தீபாவளி பற்றிய பல கதைகளை விவரித்து குட்டி இந்தியாவில்
உள்ள கண்காட்சியில் தட்டிகளில் எழுதிவைப்பது வழக்கம். சிங்கப்பூரில் இந்திய
வம்சாவளியினர் பல பாகங்கிளிலிருந்தும் வந்தவர்கள் வாழ்கின்றனர்.
ஆகவே எல்லாவிதக் கதைகளையும் அங்கு வைப்பது ஒரு மரபாக உள்ளது.
புத்தாண்டு, குடியரசு தினம் என சிறப்புமிக்க நாட்களில் வான வேடிக்கை மூலம் வானத்தில்
வண்ண வண்ணக் கோலமிட்டும் கூடியிருப்போரையும் தொலைக்காட்சியில் பார்ப்போரையும்
ஏற்பாட்டாளர்கள் பரவசப்படுத்துவதில்லையா ? அதைப் போலத்தான் பட்டாசு வெடித்தும்
மத்தாப்பு கொளுத்தியும் மக்கள் மகிழ்கின்றனர். ஆனால் அவை மற்றவர்களுக்குத் தொல்லை
தரும் வகையில் அமையக் கூடாது.
தீப விளக்குகளின் திருவிழாவாம்
தீபாவளித் திருநாள்!
உங்கள் உள்ளங்களில்
அந்தத் தீபங்களின் ஒளி
நிரம்பட்டும்!
பூக்கும் அன்பால் உங்கள் நல்
இதயம் நிரம்பி வழியட்டும்!
இந்த நன்னாளில் எல்லோரும் இன்புற்றிருக்க
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து இந்த இதழ் மூலம் வாழ்த்துவதில்
மகிழ்வெய்துகிறேன்.
ஆல்பர்ட், அமெரிக்கா.
—-
albertgi2004@yahoo.com
- கடிதம் நவம்பர் 11,2004
- வேண்டுகோள்: கல்லால் அடித்துக் கொல்வதை நிறுத்த உதவுங்கள்
- அபுதாபி வாசியே உன் கடிதம் கிடைத்தது- ஐக்கிய அரபு எமிரேட் அதிபரின் மரணம் பற்றி சில குறிப்புகள்
- தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு
- மெய்மையின் மயக்கம்-25
- மனுஷ்ய வித்யா
- தீபங்களின்….விழா…. தீபாவளித் திருவிழா!
- உரை நடையா ? குறை நடையா ? – மா. நன்னன் : நூல் அறிமுகம்
- அ.முத்துலிங்கம் பரம்பரை – 8
- மக்கள் தெய்வங்களின் கதைகள்- 9
- ஓவியப் பக்கம் ஆறு : யயோய் குஸாமா – சூழலிற் கலந்த சுயம்
- எங்கே செல்கிறோம் ?
- ந. முருகேச பாண்டியனின் ‘பிரதிகளின் ஊடே பயணம் ‘ (விமர்சனங்கள்)
- வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை
- ஆன்லைன் தீபாவளி
- அருண் கோலட்கரின் கவிதை மனம் : ஒரு நிகழ்வு : நவம்பர் 13,2004
- கடிதம் நவம்பர் 11,2004 – ஹரூன் யாஹ்யாவின் மோசடி மேற்கோளும், சிறிதே பரிணாம அறிவியலும்
- ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் பற்றி
- கடிதம் நவம்பர் 11,2004 – நன்றி நண்பர்களே
- கடிதம் நவம்பர் 11,2004 – ஆசார கீனன் கட்டுரைகள் குறித்து ஒரு குறிப்பு
- மதுரையில் உலகத் திருக்குறள் மாநாடு
- கடிதம் நவம்பர் 11,2004
- கடிதம் நவம்பர் 11,2004 – நாகூர் ரூமியும் நேச குமாரும்
- கடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை
- கடிதம் நவம்பர் 11,2004: நாகூர் ரூமிக்கும், தமிழ் முஸ்லிம்களுக்கும் : ஒரு சந்தேகம், ஒரு வேண்டுகோள்
- ‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:
- கடிதம் நவம்பர் 11,2004 – எது சுதந்திரம் ?
- அவளோட ராவுகள் -2
- பெரியாத்தா (மூலம் : அருண் கொலட்கர்)
- நீலக்கடல் -(தொடர்)-அத்தியாயம் 45
- ரோமன் பேர்மன்- மஸாஜ் மருத்துவள் ( மூலம்: டேவிட் பெஸ்மொஸ்கிஸ் ( David Bezmozgis))
- மீள்வதில் என்ன இருக்கிறது ?
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 2.அது மலரும் நேரமிது!
- கவிக்கட்டு 33 -பாலைவனத்துக் கானல் நீர்
- கவிக்கட்டு 34-தீராத வலி
- நடை
- கீதாஞ்சலி (3) இறைவன் எங்கில்லை!: மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- கவிதைகள்
- பெரியபுராணம் – 17 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம் )
- கவிதைகள்
- உயிரை குடிக்கும் காதல்
- லட்சியமானவன்
- அணுசக்தி அம்மன்:உலகை அழிக்கத்துடிக்கும் ஒரு பிசாசின் கதை (ஆக்கம்: சு.ப.உதயகுமார்)
- புகைவண்டி நிலையக் கவிதைகள் (மூலம் : அருண் கொலட்கர் )
- ஏன்
- செவ்வாயின் சந்திரன் (துணைக்கோள்) ஃபோபோஸ்
- அஸோலா: வெண்மைப்புரட்சிக்கு வித்திடும் பச்சைக் கம்மல்
- நர்மதா நதி அணைத் திட்டங்களை நிறுத்த தர்ம யுத்தம்! இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (8)
- கவர்ச்சி, அடக்கம் X மரியாதை!
- இஸ்லாத்தில் பர்தா – வரலாறும், நிகழ்வுகளும்
- நாடகம் நடக்குது நாட்டிலே!
- வாரபலன் நவம்பர் 11,2004 – லண்டன் ரிக்ஷா ஒழிப்பு, துரத்தும் துடைப்பங்கள், சினிமா ரிக்ஷா, வார்த்தை மூலம்
- பாயி மணி சிங் – தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி
- மக்கள் மெய் தீண்டல்
- இந்தியாவின் ஏழைகள் பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்துகிறார்கள்