தி கிங் மேக்கர் : திரைப்படம்

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

புதியமாதவி


ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், சென்னை தமிழில் தயாரித்து வெளிவந்த காமராஜ் திரைப்படத்தை சர்வதேச பார்வையாளர்களுக்காக ‘தி கிங் மேக்கர் ‘ என்ற

பெயரில் ஆங்கிலத்தில் (டப்பிங்)தயாரித்திருக்கிறார்கள். தமிழ்ப் படத்தை இயக்கிய இயக்குநர் அ. பாலகிருஷ்ணன் அவர்களே ஆங்கிலப் படத்தையும் இயக்கியுள்ளார்.

தொலைக்காட்சியிலும் தொடராக வெளிவந்தது பலருக்கு நினைவிருக்கலாம். தமிழ்ப் படத்திற்கு தமிழக அரசின் சிறந்தப் படத்திற்கான சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

மும்பை, சர்ச்கேட், ஈராஸ் (EROS) மினி திரையரங்கில் பத்திரிகையாளர்களுக்காக 18.03.06 அன்று தி கிங் மேக்கர் ஆங்கிலப்படம் காட்டப்பட்டது. மிகவும் எளிமையாகவும் அதிர்ந்து பேச அறியாத மென்மையுடனும் அறிமுகமானர் இயக்குநர் அ. பாலகிருஷ்ணன் என்ற இளைஞர்.

நாட்டின் பிரிவினை, காலம் காலமாய்த் தொடர்ந்து கொண்டிருக்கும் பகைமை உணர்வு, காதல், உறவுகளின் பிரிவு,தீவிரவாதம் என்றெல்லாம் எடுக்கப்படும் இந்திய திரைப்படங்கள் கூட மிசா, எமெர்ஜென்ஸி குறித்து திரைப்படங்கள் எடுக்க முன்வரவில்லை. ஆனால், தி கிங் மேக்கர் மிகவும் துணிச்சலுடன் மிசாவின் கொடுமைகளை, அவசரச்சட்டத்தின் ஆணவப் போக்கைப் பதிவு செய்துள்ளது.

பெருந்தலைவர் காமராஜாக நடித்த ரிச்சர்ட் மதுரம் அவர்களின் உருவ ஒற்றுமை திரைப்படத்திற்கு மகுடம் சூட்டியது என்றுதான் சொல்ல வேண்டும். மகாத்மா காந்தியாக நடித்த கனகராஜ், நேருவாக நடித்த சுமந்த், ராஜாஜியாக நடித்த கோவை ராமசாமி ஆகிய பாத்திரப்படைப்புகளும் திரைப்படத்திற்கு அணி செய்தன. இந்திராவாக நடித்துள்ளார் ஆனந்தி.

‘நான் தேர்தலில் நின்று ஜெயித்தால் உங்கள் முதல்வர் நாற்காலியில் உட்கார முடியும்.

ஆனால் உங்கள் முதல்வர் என் நாற்காலியில் உட்கார முடியுமா ? ‘ என்று பாளையங்கோட்டை கலைக்டர் கேட்பதாக வரும் காட்சி ஒவ்வொரு அரசு அதிகாரியின் மனதிலும் பதியும் வண்ணம் அழுத்தமாக காட்டப்படுகிறது.

300 குடும்பங்கள் இருக்கும் எல்லா கிராமங்களிலும் ஆரம்பப்பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற திட்டமும், அப்படி திறக்கப்பட்ட பள்ளிகளில் ஏன் மாணவர்கள்

வருவதில்லை என்ற கேள்விக்கு பதில் காமராஜ் அவர்களுக்கு ஒரு மாடு மேய்க்கும் தந்தையிடமிருந்து கிடைக்கிறது.

பள்ளிக்கூடம் போனால் இவர்கள் வயிற்றுப்பாட்டுக்கு என்ன செய்வார்கள் ? என்று கேட்கிறார் அந்த தந்தை. அந்தக் கேள்வியிடமிருந்து தான் பிறக்கிறது பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம்.

படத்தில் பாடகி ஒருவர் (எம்.எஸ்.சுப்புலட்சுமியா ?)சத்தியமூர்த்தி தலைமையில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பட்டுப் புடவைகள் பளபளக்க,

மின்னும் மூக்குத்திகளுடன் மகாகவி பாரதியின் பாடலைப் பாடும் காட்சி

‘வந்தேமாதரம் என்போம்

எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்

வந்தேமாதரம் என்போம்..

….

சாதி மதங்களைப் பாரோம்

….

ஈனப்பறையர்களேனும் அவர் எம்முடன்

பிறந்தவர் அன்றோ..

வந்தேமாதரம் என்போம்…

இக்காட்சியில் கூட்டத்தில் பாடல் வரிகளுக்கு முரணாக பறையடித்தவன் ஒதுங்கி தனியாக உட்கார்ந்திருப்பதை நோக்கி நகர்ந்திருக்கும் காமிரா.

கவிதைகளும் மேடைகளும் இயல்பு வாழ்க்கையிலிருந்து எவ்வளவு மாறுபட்ட நிலைமையில் இருந்தன, இருக்கின்றன என்ற சிந்தனையை மிகவும் நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கும் காட்சி இது. இந்தக் காட்சியின் நிலையுடந்தான் காமராஜ் அவர்கள் தன் அமைச்சரவையில் அறநிலைத்துறைக்கு ஒரு தலித்தை அமைச்சராக்கியதுணிச்சலையும் தீண்டாமையின் ஆணிவேரை அடியோடு அசைத்துப் பார்க்க துணிந்த ஒரு தலைவரையும் இனம் காண முடியும்.

திரைப்படத்தை டப்பிங் செய்திருக்கும்போது அதில் வயதான பாட்டியும் அம்மாவும் பறையடிப்பவனும் மாடு மேய்ப்பவனும் ஆங்கிலத்தில் பேசுவதாகக் காட்டும் காட்சிகள்

படத்தின் யதார்த்த நிலையை பாதித்து செயற்கைத் தன்மையை வலிந்து புகுத்தியதாக அமைந்துள்ளது. அதற்குப் பதிலாக அவர்கள் சொல்ல வருவதை ஆங்கில எழுத்துகளில் காட்டும் உத்தியைக்கையாண்டிருக்கலாம்.

அதுபோலவே காமராஜ் அவர்கள் தன் அம்மாவை ‘மதர் ‘ என்று அழைப்பதைத் தவிர்த்து ‘அம்மா ‘ என்று அழைப்பதாகவே காட்டியிருக்கலாம். அம்மா என்று அவர்

ஆங்கிலத்தில் சொல்லும்போது அவர் தன் மதரைத்தான் குறிப்பிடுகிறார், அழைக்கிறார் என்பதை சர்வதேசப் பார்வையாளர்களும் புரிந்து கொள்வார்கள்.

(நிகழ்கால அம்மாக்களைக் கருத்தில் கொண்டு அம்மா என்ற சொல் தவிர்க்கப்பட்டிருக்கலாமோ ?)

தமிழ்ப் படத்தில் இல்லாத சிலக் காட்சிகள் -மகாத்மா காந்தியடிகள் பம்பாய் மாநாட்டில் ஆற்றிய உரை, காமராஜ் அவர்களின் சோவியத் பயணம் ஆகியவை ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

பெருந்தலைவர் காமராஜ் அவர்களை இன்று ஒரு சாதித்தலைவராக மட்டுமே சித்தரிக்கும் போக்கும், காங்கிரஸ் தலைவராக அரசியல் ஆதாயம் கருதி காட்டும் போக்கும் நிலவும் சூழலில் எப்போதும் தன் அமைச்சர் கக்கனை

அருகில் வைத்திருக்கும் காமராஜாக, காங்கிரஸ் கட்சி செய்த பல்வேறு அரசியல் குளறுபடிகள், மிசாவின் உருவத்தில் காங்கிரசின் முகம் என்று பல்வேறு கோணங்களில் காட்டியிருக்கும் இத்திரைப்படம் இன்றைய அரசியல் முகமூடிகளைக் கிழித்து எறியும் தார்மீகச் சிந்தனையுடன் எடுக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தில் பல காட்சிகள் மனதில் நிற்கின்றன. இது கற்பனைக் கதையல்ல. நம் காலத்தில் நம் மண்ணில் வாழ்ந்த ஒரு மனிதரின் கதை. அதுவும் ஓர் அரசியல்வாதியின் கதை. இன்றைய அரசியல் நாடகக் காட்சிகளில் மனம் வெதும்பி நிற்கும் மனங்களுக்கு இதம் தருவதுடன் ஒரு நம்பிக்கையையும் தருகிறது தி கிங் மேக்கர். இந்தப் படத்தைப் பார்க்கும் இன்றைய இளம் உள்ளங்களிலிருந்து

மீண்டும் எழுதப்படும் அரசியல் கறைகளை அகற்றும் வெளிச்சத்துடன் ஒரு விடிவெள்ளியின் கதை.

—-

பிற்சேர்க்கையாக உங்கள் வாசிப்புக்கு…

திரைப்படத்தின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் என் கவிதை.

1998ல் ‘சரித்திரத்தின் எல்லை ‘ என்ற தலைப்பில் (நூல்: சூரியப்பயணம்)

எழுதியது.

தனிமையில் பிறந்தவன் நீ – கடைசிவரை

தனிமையில் வாழ்ந்தவன் நீ

வறுமையில் வளர்ந்தவன் நீ – எங்கள்

வறுமையை அறிந்தவன் நீ

ஏழ்மையை மணந்தவன் நீ – ஏழையை

எடுத்து அணைத்தவன் நீ

பசியை உணர்ந்தவன் நீ – எங்கள்

பட்டினி தீர்த்தவன் நீ

பள்ளியிலே பசித்தப்பிள்ளை

பாடத்தை படிப்பதெப்போ ?

பகலுணவு நீ கொடுத்தாய்- அதைப்

படம் காட்ட நீ மறுத்தாய்

ஒரு வேளைச் சோறுபோட்டு -நீ

ஓட்டுக்கேட்டு நிற்கவில்லை

பெற்றவள்தான் பசியணைப்பாள்-அதையும்

போஸ்டர் போட்டா தெருவில் விற்பாள் ?

பெறாதப் பிள்ளைப்பேரில்-சொத்து

பெயரெழுதும் அரசியலில்

பெற்றெடுத்த சிவகாமிக்கு – பிள்ளை நீ

அனுப்பியதோ அஞ்சுபத்து

சொத்துசுகம் எதுவுமில்லை-உனக்கு

சுவிஸ்பேங்கில் கணக்குமில்லை!

வாரிசுகள் தொல்லையில்லை-உன்னால்

வாழ்ந்தது பல ஏழைப்பிள்ளை!

உயிலெழுத தேவையில்லை- உன்

உடமைகளோ எதுவுமில்லை

ஐந்தாறு வேட்டித்துண்டு -அதில்

அஞ்சுபத்து நீவிட்ட சொத்து

அதிசயம்தான் வணங்குகிறேன் – நீ

அரசியலின் அபூர்வசொத்து.

இத்துறையில் உனை வென்றார்-இன்று

இருக்குமிடம் தெரியவில்லை

சத்தியமாய்ச் சொல்லுகிறேன் – அரசியல்

சரித்திரத்தில் நீயோர் எல்லை.

****

புதியமாதவி, மும்பை.

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை