‘தில்லானா மோகனாம்பாள் ‘ பின்னே ஒரு வாழும் இலக்கணம்:

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

கோவிந்த்


நடிகர் திலகத்தின் அந்த நாதசுரம் வாசிக்கும் முகபாவமும், பத்மினியின் மான் போன்ற துள்ளி ஆடும் நடன நளினமும் நம் கண்ணிலே கருவிழி போல் ஒன்றாகிப்போன காட்சிகள்.

அனைவருக்கும் தெரிந்த அந்த அற்புதப் படத்தின் பின்னே அனைவரும் தெரிய வேண்டிய ஒரு நல்ல இலக்கணம் ஒன்று உள்ளது.

சமீபத்தில், வளைகுடா தமிழ் மன்றத்திற்கு திரு.ஏ.பி.நாகராஜன் அவர்களின் குமாரர் திரு.பரமசிவம் வந்து கலந்துரையாடினார்.

அவர் சொன்னது:

கொத்தமங்கலம் சுப்பு தொடராக ஆனந்த விகடனில் எழுதி புகழ் பெற்ற கதைத் தொடர், ‘தில்லானாம் மோகனாம்பாள் ‘.

அதனால் ஈர்க்கப்பட்ட ஏ.பி.என், கொத்தமங்கலம் சுப்புவைத் தொடர்பு கொண்டு, அதன் திரைப்பட ஆக்க உரிமைக் கேட்க, அவரோ, அந்த உரிமை, ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனிடம் இருப்பதாகச் சொன்னாராம்.

இவரும் உடன் எஸ்.எஸ்-ஸிடம் வினவ, அவர் தி.மோ.பா-வைத் தானே எடுக்க இருப்பதாகச் சொல்லிவிட்டார்.

ஏபிஎன் -னும் திருவிளையாடல், திருமால் பெருமை என்று பல படங்கள் எடுத்த பின், மீண்டும் எஸ்.எஸ். அவர்களைத் தொடர்பு கொள்ள, அவர் மீண்டும் தனக்கு அதை திரைப்படம் ஆக்க விருப்பம் இருப்பதால் தர இயலாத நிலை பற்றிக் கூறினாராம்.

மேலும் எஸ்.எஸ் ‘வேண்டுமானால் இருவரும் பங்குதாரராக இணைந்து வேண்டுமானால் அப் படத்தைத் தயாரிக்கலாம் ‘ என்று யோசனை சொன்ன போது, ‘ தொழிலில் இணைவது இருவருக்கும் ஏதாவது மனஸ்தாபம் ஏற்படுத்தலாம் ‘ என்று மறுத்த ஏபிஎன் ‘ ஒவ்வொரு கதைக்கும் ஒரு காலகட்டம் இருக்கிறது. நீங்கள் தாமதிப்பது கதையின் ஜீவனை இழக்க செய்யும் ‘ -என்று சொல்லிவிட்டு தொடர்ந்து சிவாஜியுடன் பல படங்கள் தர ஆரம்பித்தார்.

இப்படியாக இருக்கையில் ஒரு நாள், எஸ்.எஸ்.வாசன் , ஏபிஎன் அவர்களைத் தொடர்பு கொண்டு, ஏபிஎன் சொல்வதும் சரிதான், அதனால் நேரில் வந்தால் பட உரிமை வியாரம் பற்றி பேசலாம் என அழைத்தாராம்.

ஏபிஎன்னும் உடனே, ‘ பல வருடம் தராமல் அப் பட உரிமை தர எஸ்.எஸ் அழைக்கிறார் அதனால் தொகை கொஞ்சம் அதிகமாகவே எதிர்பார்ப்பார் ‘ என்ற சிந்தனையுடன், அப் படத்திற்கு ரூபாய்.50,000. தரலாம் ( 1960 – களின் ஆரம்பத்தில் ) என்ற எண்ணமுடன் , எஸ்.எஸ் அவர்கள் முன் அமர, அவரோ, ரூபாய்.25,000 கேட்டாராம்.

‘…இல்லைங்க கதை ரொம்ப பிரமாதமான கதை. அதற்கு தொகை குறைவு. நான் ஒரு 50,000 ஆவது நீங்கள் கேட்பீர்கள் எனும் நினைப்புடன் வந்தேன் ‘ என்று சொல்ல,

அவரோ, ‘ நான் தருவது கதை தான் . அதை நீங்க சினமாவாக மாற்ற நிறைய உழைக்கனும். அதனால் இது போதும் ‘ எனச் சொல்ல,

25,000 செக் கொடுத்து திரும்பினாராம் எ.பி.என்.

வீட்டிற்கு வந்த பின்னும், மனம் கேட்காமல் எஸ்.எஸ் அவர்களுக்கு போன் செய்ய அவர், இல்லை… 25,000 போதும் என்று சொல்லிவிட்டாராம்.

மன உளைச்சளுக்கு ஆளான ஏ.பி.என் , அக்கதை எழுதிய கொத்தமங்கலம் சுப்பு பார்க்க முடிவு செய்தார்.

கண் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்தவரை அடுத்த நாள் சென்று பார்த்தவர், நடந்த சம்பவத்தைச் சொல்லி விட்டு, ‘அந்தக் கதைக்கு 50,000 மாவது கொடுத்தால் தான் தன் மனம் நிம்மதி பெறும் ‘ என்றபடி, கொத்தமங்கலம் சுப்பு பெயருக்கு தான் கொண்டு வந்த 25,000 காசோலையை கொத்தமங்கலம் சுப்புவிடம் நீட்ட, அவரோ

கண்கள் கலங்க, தலையணையடியில் இருந்து, எஸ்.எஸ் -வாசன் அனுப்பியிருந்த 25,000 காசோலையை எடுத்து காண்பித்தாராம்.

ஆம், ஏபிஎன் னிடம் வியாபாரம் செய்த விஷயம் சொல்லி முதல் நாளே எஸ்.எஸ்.வாசன் அப்பணம் கொத்தமங்கலம் சுப்புவிற்கு என்று அனுப்பியிருக்கிறார்.

ஏபிஎன் – தன் வாழ்நாளில் பலமுறை இச் சம்பவத்தை தனைச் சுற்றியுள்ளவர்களிடம் சொல்லி நெகிழ்வாராம்.

தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கதையெழுதிய படைப்பாளியின் உருவாக்கத்திற்கு மரியாதையும், மதிப்பீடும் தந்த காரணத்தினால் தான் கலையும் – வியாராமும் கலந்த திரைப்படத்துறை அன்று அற்புதமாகச் செயல்பட்டது.

மீண்டும் இவர்கள் போன்ற மனிதர்கள் திரைத்துறைக்கு நிறைய வேண்டும்

—-

kgovindarajan@gmail.com

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்