எஸ். அருண்மொழிநங்கை
சிறுகதையாசிரியர் திலீப் குமாருக்கு பாஷா பாரதி[ Bhasha Bharathi] பரிசு கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தி . இப்பரிசு தாய்மொழி அல்லாத வேறு மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுக்கு மைசூர் மொழி நிறுவனத்தால் வழங்கப்படுவதாகும். [ Central Institute of Indian Languages,Mysore & Dept of culture under Human Resorce Developement Ministry. India ] ரூ 25000 பரிசும் வாழ்த்தும் அளிக்கப்படும். இவ்வருடம் முதல் இப்பரிசு அளிக்கப்படுகிறது .
இம்முறை ஆறு பேர் விருதுபெற்றுள்ளனர் .வங்கமொழியில் எழுதும் இந்திக்காரரான ராம் பஹால் திவாரி , கன்னடத்தில் எழுதும் மலையாளியான சாரா அபுபக்கர் [இவரது ‘சந்திரகிரி ஆற்றின் கரையில் ‘ என்ற நாவல் தமிழில் தி .சு .சதாசிவம் அவர்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. தமிழ் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுவருவதாக தெரிகிறது ] ஒரிய மொழியில் எழுதும் குஜராத்தியான தயாலால் ஜோஷி , தமிழில் எழுதும் குஜராத்தியரான திலீப்குமார்,
தெலுங்கில் எழுதும் மலையாளியான ஆர் .எம். சிதம்பரம், உருதுவில் எழுதும் இந்தி எழுத்தாளர் நிஜாம் ஷீன் காஃப் ஆகியோர் அவர்கள் .
இந்தியாவின் விசித்திரமான கலாச்சாரக் கலவையை காட்டுவது இங்குள்ள இலக்கியம் .இந்தபரிசில்கூட அதை காணலாம்.குஜராத்திகளும் மலையாளிகளும் எல்லா பகுதிக்கும் சென்று எல்லா மொழிகளிலும் எழுதுகிறார்கள் . இந்த கலாச்சார பரிமாற்றத்தை இப்பரிசு ஊக்குவிக்கிறது. இது இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அவசியமானதாகும்.
தமிழ் இலக்கியத்திலே நகைச்சுவையாக எழுதுபவர்கள் மிகவும் குறைவு. அப்படி எழுதுபவர்கள் கூட அதிகமும் புதுமைப்பித்தனையே முன்மாதிரியாகக் கொள்கிறார்கள் .புதுமைப்பித்தனின் நகைச்சுவை நேரடியாக விமரிசனங்களை சொல்லி தவறுகளைக் கண்டிக்கும் தன்மை உடையது . புதுமைப்பித்தனின் கதைகள் பொதுவாக பெண்களுக்கு அதிகம் பிடிக்காது என்று நினைக்கிறேன் .தமிழில் பெண்கள் அதிகமும் கருத்துக்களைச் சொல்வது இல்லை .சொன்னாலும் ஏற்கனவே பரவியுள்ள கருத்துக்களை மறுத்துச் சொல்வது இல்லை . என் கருத்தில் அசோகமித்திரனே புதுமைப்பித்தனைவிட முக்கியமான் கதைகளை எழுதியிருக்கிறார் .அவரது நகைச்சுவை மிக மென்மையானது .பூடகமான முறையில் மட்டும் விமரிசனங்களை அவர்வெளிப்படுத்துகிறார் . [ அதோடுஅசோகமித்திரனின் கதைகளில் பெண்கள் அவர்களின் பாலியல் அடையாளத்தின் பாரம் இல்லாமல் சாதாரணமான் முறையில் வருகிறார்கள் . பெண்களின் சாதாரணமானதும் நுட்பமானதுமானபிரச்சினைகளும் காணப்படுகின்றன. உதாரணமாக் ‘எடை ‘ மாலதி ‘ ‘மாறுதல் ‘ போன்ற கதைகள்]
அசோகமித்திரனின் அடக்கமான கதைப்போக்கை மேலும் பலர் பின்பற்றியிருந்தாலும் அவரது மென்மையான நகைச்சுவையை மேலும் வளர்த்தவர் திலீப்குமார் தான். திலீப் குமாரின்கதைகளில் பொதுவாக விமரிசனம் ஏதுமிருப்பதில்லை .மனிதர்களின் பலவீனங்களையும் போலித்தனங்களையும் கண்டு புன்னகை செய்து கொள்வதுபோல இருக்கின்றன அவரது கதைகள் .தீர்வு இதற்கு சரியான எடுத்துக்காட்டு ஆகும் . அதில் ஒரு பூனை கிணற்றில் விழுந்துவிடுகிறது .அந்த நீரை என்னசெய்வது என்று தெரியவில்லை .பாட்டி கடைசியாக ஒரு ஆலாசனை சொல்கிறாள். ஒரு சொம்பு கங்கை நீரை கிணற்றில் விடுகிறார்கள்.பிரச்சினை சரியாகிவிடுகிறது . இதேபோல சராசரி இந்தியமனம் எப்படியெல்லாம் செயல்படும் என்ற நுட்பமான சித்திரத்தை எளிமையான கிண்டலுடன் சொல்லும் கதைகள் அவருடைய படைப்புகள் .
ஆனால் இந்த மென்மையான நகைச்சுவைக்கு பின்னால் உள்ள குரூரத்தையும் ‘மூங்கில் குருத்து ‘ போன்ற கதைகளில் நாம் காணலாம் . வாழ்க்கையின் கசப்பான யதார்த்ததைத் தான் அவர் தன் புன்னகை மூலம் சொல்கிறார் என்று அறிய முடிகிறது . உதாரணமாக உள்ள கதை ‘கடிதம் ‘.சிரிப்பு நிரம்பிய அக்கதை ஒரு நிராதரவான கிழவர் அடைக்கலம் தேடி செல்வந்தருக்கு எழுதியதாகும் .
திலீப் குமாரின் நடை மிகவும் நுட்பமானது .அவர் சிக்கலான வாக்கியங்களை பயன்படுத்தமாட்டார். அழகுபடுத்த மாட்டார். அசோகமித்திரனைபோலவே எளிய நேரடி பேச்சு மாதிரி இருக்கும் அந்த நடை .ஆனால் அசோகமித்திரன் நடையில் பொதுவாக கவித்துவம் ஏதும் இருக்காது , அது அவரது பாணி அல்ல .திலீப் குமாரின் பலகதைகளில் மிகை இல்லாத கவித்துவம் காணப்ப்டுகிறது . இப்போது நிறையபேர் உத்தி பரிசோதனைகள் செய்கிறார்கள் .மொழியை சிக்கலாக ஆக்கி படிக்க முடியாத கதைகளை எழுதுகிறார்கள் .பல வாசகர்களுக்கு சிக்கலான இலக்கியபடைப்பின் நடையும் வடிவமும் சிக்கலாகத்தான் இருக்கும் என்ற எண்ண்ம் உண்டு . அப்படியல்ல என்று காட்டும்கதைகள் இவருடையவை.அவை ஆழமான சிக்கல்களை உள்ளே வைத்திருப்பவையாகும் . ஆனால் மேற்பரப்பில் எளிமையானவை .
நல்ல கதை முதலில் சுவாரஸியமாக இருக்கும். அதை நாம் திலீப்குமாரின் கதைகளில் காண்கிறோம். அதை வாசித்த பிறகுநாம் எளிதில் மறக்கமாட்டோம் ,நிறைய சிந்திப்போம் அதை அவர்கதைகள் செய்கின்றன.ஆகவேதான் அவர் கதைகள் மிக முக்கியமானவை என சொல்லமுடிகிறது .
- நிழல் பூசிய முகங்கள்
- திண்ணை அட்டவணை
- திண்ணை என்ன சொல்கிறது ?
- புதிரின் திசையில் – எனக்குப் பிடித்த கதைகள் – 21 (வண்ணநிலவனின் ‘அழைக்கிறவர்கள் ‘ )
- திலீப் குமாருக்கு விருது
- அவனியைப் பல்லாண்டு சுற்றிவரும் அண்டவெளி நிலையங்கள்
- அறிவியல் மேதைகள் கலிலியோ (Galileo)
- பெண்தெய்வம்
- எல்லாவற்றுக்குமாய்…
- அரசியல்வாதி ஆவி
- வெற்றிட பயணம்
- உலக நண்பர்கள் தினம் (ஆகஸ்ட் 4ம் திகதி)
- நான்காவது கொலை !!! (அத்தியாயம் : ஒன்று)
- அச்சம்
- மாதுரி, பிரகாஷை உடனே விடுதலை செய்யவேண்டும்
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 4 2002
- உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – 2
- சகிப்புத்தன்மையில்லாத திராவிடர் கழகம்
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 7 (அத்தியாயம் 7 – இந்துத்துவ அணுகுண்டு)
- இதயத்தின் எளிமை (Simplicity of the heart)
- நெஞ்சு பொறுக்குதில்லையே..
- வீசும் வரை……
- போதி நிலா
- கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்