திரு நேசகுமாருக்கு பதில்

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

சின்னக்கருப்பன்


ஷியா சுன்னி பிளவுக்கும் ஈரான் ஈராக் பிளவுக்கும் என்ன சம்பந்தம்? ஈராக்கின் பெரும்பான்மை ஷியா. ஈரானின் பெரும்பான்மையும் ஷியாதான். ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மையும் பாகிஸ்தானில் பெரும்பான்மையும் சுன்னிதான். ஏன் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் எல்லைக்கோட்டுக்காக அடித்துக்கொள்கின்றன? இத்தனை வேற்றுமைகளோடும் இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நேசக்குமாரே கூறுகிறார். ஏன் இந்தியாவுக்கு நேபாளத்துக்கும் பனிப்போர் வெகுகாலமாக நிலவிவருகிறது? இதனாலெல்லாம்தான் நான் கூறினேன். சம அந்தஸ்துள்ள குடிமகன்களாக உள்ள நாட்டில் “வெளியார் தூண்டுதல் இல்லையென்றால்” சமாதானமாகவே பிரச்னைகள் தீர்க்கப்படும் என்ற உத்திரவாதம் இருக்கும். அதனால்தான் இந்தியாவின் காஷ்மீர் பிரச்னைக்கும், இந்தியாவில் வெடிக்கும் குண்டுகளுக்கும் காரணம் பாகிஸ்தானே அல்லாது, இந்திய முஸ்லிம்கள் ஆதார காரணம் இல்லை என்று எழுதினேன்.

நிச்சயம் பாகிஸ்தானாலோ, சவூதி அரேபியாவாலோ வளர்த்துவிடப்பட்ட ஒரு சில கறுப்பு ஆடுகளை கண்டுபிடிப்பது கடினம் இல்லைதான். ஆனால், அதுவே எல்லா முஸ்லீம்களையும் குற்றவாளிகளாக்கி விடாது. ஸ்டாலினும் லெனினும் எப்படிப்பட்ட கொடுங்கோலர்கள் என்பதும், சமத்துவம் மிக்க சமுதாயம் என்ற பெயரில் எத்தனை அட்டூழியங்கள் செய்தார்கள் என்பதும் ஆவணமாகக் காணக்கிடைக்கிறது. எந்த ஒரு படிப்பறிவுள்ள மனிதனும் இந்த கொடுங்கோலர்களை ஆதரிக்க மாட்டான். ஆனால், இந்தியாவில் இந்த கொடுங்கோலர்களை படங்கள் வைத்து பூஜிக்கும் கம்யூனிஸ்டு கட்சிகளும், தொண்டர்களும் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் இந்துக்களே. அதற்காக எல்லா இந்துக்களையும் கூண்டில் ஏற்றபோகிறோமா? சரி 150 முஸ்லீம் தீவிரவாதிகள் இல்லை என்றால் எத்தனை பேர்? சிமி ஒரு மாணவர் அமைப்பாகத்தான் இருந்தது. அதில் பல முஸ்லீம் மாணவர்கள் மதத்தின் அடிப்படையில்தான் சேர்ந்தார்களே அல்லாது, இந்தியாவுக்கு எதிரான போராட்டம் என்ற காரணத்தினாலா சேர்ந்தார்கள்? இந்தியாவில் ஏபிவிபி என்ற ஆர்.எஸ்.எஸ் மாணவர் சங்கம், எஸ்.எ·ப்.ஐ என்ற கம்யூனிஸ்ட் மாணவர் சங்கம் போன்ற சங்கங்கள் இருக்கும்போது, முஸ்லீம் மாணவர்கள் தங்களுக்கு என ஒரு சங்கத்தை அமைத்துக்கொள்ள விழைந்ததில் என்ன தவறு இருக்க முடியும்? அதன் தலைமையில் இருந்த சில தீவிரவாதிகளால் தவறான வழிக்கு அதனை கொண்டு சென்றதால், அந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. அது தீவிரவாதத்தை நோக்கி போகிறது என்றதும் அதிலிருந்து விலகியவர்கள் ஏராளமாகத்தான் இருப்பார்கள். சிமி அமைப்பில் இத்தனை மாணவர்கள் இருந்தார்கள் அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று பேசுவது அப்பாவிகளை குற்றம் சாட்டுவதுதான்.

சிறையில் இருக்கும் பலரை குற்றவாளி என்று நிரூபிக்க முடியவில்லை என்றால் அவர்கள் வெளியே சென்று சந்தோஷமாக தற்கொலைப் படையாக சாவார்கள் என்று எழுதுகிறீர்கள். ஒருவர் குற்றம் செய்வார் என்ற எதிர்பார்ப்பில் அவரை குற்றவாளியாக நடத்துவது எந்த ஒரு சட்டத்தின் கீழும் சாத்தியமில்லாதது. இதனைத்தான் “புரோபைலிங்” என்று மக்கள் எதிர்க்க வேண்டும். ஒருவர் தவறு செய்யும் முன்னர் அவருக்கு தண்டனை கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. ஏன் தவறான எண்ணத்துக்காகக்கூட தண்டனை கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. எது சரியான எண்ணம் எது தவறான எண்ணம் என்பதை யார் நிர்ணயிப்பது?

சரி இன்றைக்கு முஸ்லீம்கள் மீது பழியை போடுகிறார்கள். நாளை தேவர்கள் மீதோ அல்லது தலித்துகள் மீதோ இப்படிப்பட்ட ஒட்டுமொத்த பழி விழாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? அப்போதும் இடைவிடாத பத்திரிக்கை பிரச்சாரங்களால், அப்பாவிகள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை சகித்துக்கொள்ள வேண்டுமா? பார்ப்பனர் சிலர் செய்த தவறுகளுக்காக (உண்மையோ பொய்யோ, அதுதான் பிரச்சாரம்) முழு பார்ப்பன குலமும் இன்று தூற்றப்படுகிறது. அதனை சகித்துக்கொள்ள வேண்டுமா? மனித உரிமை மீறல்களைச் சகித்துக்கொள்வது ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆபத்தானது. நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த ஜாதியை சார்ந்தவராக இருந்தாலும். அது ஆபத்தானது. அந்த மதம்தான் அந்த ஜாதிதான் என்று கை காட்டிவிட்டு போவது இன்றைக்கு எளிதாக இருக்கலாம். நாளைக்கு உங்கள் ஜாதிக்கும் உங்கள் மதத்துக்கும் அதே நிலை நேரும்போது, உங்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடக்கும்போது, நீங்கள் உரத்த குரலெழுப்ப உங்களுக்கு ஒருவிதமான தார்மீக உரிமையும் இருக்காது.

இந்து ஆன்மீக பாரம்பரியம் தலித்துகளுக்காக உரத்த குரலெழுப்பி வருவது அவருக்கு தெரியாமல் இருக்கலாம். கண்ணன் பாண்டவர்களையும் துரியோதனாதிகளையும் ஒதுக்கி விதுரன் வீட்டில் தங்கியதிலிருந்து ராமானுஜர் தலித்துகளுக்காக போராடியதிலிருந்து, நாராயண குரு ஈழவர்களுக்காக உழைத்ததிலிருந்து இன்னும் எத்தனை எத்தனையோ உதாரணங்கள். இந்த சமூகத்தில் தலித்துகளின் நிலைக்கு சமூக அமைப்பு காரணம். அந்த சமூக அமைப்பில் இருக்கும் தலித்துகளின் நிலைமைக்கு எதிராக குரலெழுப்பி வருவது இந்து ஆன்மீக பாரம்பரியம். அந்த ஆன்மீக பாரம்பரியமே, உலகெங்கும் இருந்த அடிமை முறை இந்தியாவில் இல்லாமல் செய்தது. இராமன் குகனை தன் சகோதரனாக வரிக்கும் போதும், மாட்டிடையன் கண்ணன் பரம்பிரம்மமாக இருக்கும்போதும், இந்து ஆன்மீகம் சமூக நிலைகளை தாண்டி மனிதர்களை மதிக்கவே மக்களுக்கு போதிக்கிறது. அதுவே சங்கரருக்கு புலையர் வடிவில் ஈசன் வந்து போதிப்பதாகவும் புராணம் எழுதப்பட வைக்கிறது. ஏற்றத்தாழ்வு கொண்ட சமூக நிலை மனித சமுதாயத்துக்கு பொது. எல்லா மனித சமுதாயங்களுக்கும் பொது. ஆனால், ஏற்றத்தாழ்வை தாண்டி மனிதனை மனிதனாக பார்க்க வைப்பது ஆன்மீகம். என்னைப்பொறுத்த மட்டில் இந்து ஆன்மீகம்.

என் ஆதரவு யாருக்கும் தேவையில்லை, அது யாருக்கும் பிரயோசனமில்லை என்றாலும், ஒரு கேள்வி என்று வந்தால், நிச்சயம் என் ஆதரவு பாலஸ்தீனர்களுக்காகவும், தெற்கு லெபனானில் வாழும் ஷியா மக்களுக்காகவும் தான் இருக்கும்.

பாலஸ்தீனர்களின் போராட்டம் பாண்டவர்களின் போராட்டம் போன்றது. யுதிஷ்டிரன் கண்ணனை துரியோதனனிடம் சமாதானம் பேச அனுப்பும்போது சொல்கிறான். பாண்டவர்களுக்கு ஐந்து நாடு கொடுக்கச் சொல், இல்லையேல் ஐந்து ஊர் கொடுக்கச்சொல். இல்லையேல் ஐந்து வீடுகள் கொடுக்கச்சொல் என்று அனுப்பி வைக்கிறான். துரியோதனன், ஐந்து ஊசி குத்தும் இடம் கூட கொடுக்க முடியாது என்றபின்னரே யுத்தம் ஆரம்பிக்கிறது. துரியோதனன் போல நிற்கும் இஸ்ரேல் இன்று பாலஸ்தீனர்களுக்கு செய்வது அதர்மம்.
இன்று பாலஸ்தீனர்களின் சொந்த வாழ்விடங்களில் அவர்களது வீடு பத்திரமில்லை. அவர்கள் வாழும் வீடுகள் ஏதேனும் காரணம் சொல்லி இடிக்கப்படுகின்றன. அவர்களது நிலங்கள் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு யூதர்கள் வாழும் செட்டில்மெண்டுகளாக ஆக்கப்படுகின்றன. காஜா பகுதியிலும், மேற்கு கரை பகுதியிலும் யூதர்கள் ஒரு செட்டில்மெண்டிலிருந்து மறு செட்டில்மெண்டுக்குப் போகும் சாலைகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. காஜா பகுதியிலும் மேற்குக்கரை பகுதியிலும் பாலஸ்தீன அரசு இருக்கிறது என்று சொல்வது கேலிக்கூத்தான விஷயம். தன்னுடைய ஆக்கிரமிப்புக்கு இன்று தெற்கு லெபனானில் இதே வேலையை அமெரிக்க அண்ணன் உதவி கொண்டு செய்துகொண்டிருக்கிறது. இதற்கு எந்த ஒரு மனிதாபிமானம் உள்ள மனிதனும் ஆதரவு தெரிவிக்க முடியாது. அப்படிப்பட்ட வேலையை இந்தியா செய்தாலும் நான் எதிர்ப்பேன். அதுதான் இந்து தர்மம் எனக்குச் சொல்லும் பாடம்.

ஏன் போர்முறைக்கும் கூட தர்மம் இருக்கிறது. அப்பாவி மக்கள் மீது குண்டு மழையை ஆகாய விமானத்திலிருந்து வீசும் இஸ்ரேலை எந்த இந்து ஆதரிக்க முடியும்? ஆயுதம் ஏந்தாத போர்வீரனோடு கூட போர் புரியாத தர்மமே இராமன் காட்டும் தர்மம். ஆயுதம் இழந்த இராவணனையும் இன்று போய் நாளை வா என்று அனுப்புகிறான் பெருந்தகை. அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த நாம், எப்படி அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழியும் இஸ்ரேலை ஆதரிக்க முடியும்? மக்கள் கூட்டத்துக்கு நடுவிலிருந்து இராணுவத்தை நோக்கி சுட்டு பொதுமக்களை பலிகடா ஆக்கும் போர்முறையை பல தீவிரவாதக் குழுக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அப்படிப்பட்ட போர்முறையை ஆதரித்து வளர்க்கும், சகித்துக்கொள்ளும் மக்கள் தங்களுக்கே ஊறு ஏற்படுத்திக்கொள்கிறார்கள். நியாயமான காரணங்களுக்காகக் கூட அநியாயமான போர்முறையை ஏற்றுக்கொள்வதை நான் ஆதரிக்கவில்லை. ஆனால், அன்றைய ராவணன்கள் கூட கடைபிடிக்காத அதர்மப் போர்முறைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். என்னவென்பது? அப்படிப்பட்ட அதர்மப் போர் புரியும்போது, கையை கட்டிக்கொண்டு போர் புரிந்து ஏராளமாய் இழப்பை பல ராணுவங்கள் பெற்றிருக்கின்றன. ஆனால், இஸ்ரேலிய ராணுவம் அப்படி ஏதும் தன் கையை கட்டிக்கொள்வதில்லை. இன்று பாலஸ்தீன மக்கள் மீது, ஆயுதம் தாங்காத பாலஸ்தீன மக்கள் மீது மேற்குக்கரையிலும் காஜா பகுதியிலும் அடக்குமுறையை அத்துமீறி செய்வது இஸ்ரேலிய ராணுவமே என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். தெற்கு லெபனானில் ஹிஸ்பொல்லா இல்லையென்றால், காலாற்படையாலேயே உள்ளே புகுந்துவிடுவார்கள் இஸ்ரேலியர்கள். அவர்களுக்கு தேவை அந்த ஆற்றின் நீர். இதற்காகத்தான் கோலன் ஹைட்சும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருக்கிறது.

இஸ்ரேல் தனது பாதுகாப்புக்கு உத்தரவாதத்தை தன் அருகாமை நாடுகளின் ஒத்துழைப்பு, நட்பு மூலமாகத்தான் பெற முடியும். இன்றைக்கு இஸ்ரேலுக்கு இருக்கும் அமெரிக்க அண்ணன் கொடுக்கும் பாதுகாப்பின் தைரியத்தில் பேயாட்டம் ஆடினால், அது அதன் எதிர்காலத்துக்குத்தான் ஆபத்தாக முடியும். இன்றைக்கு அமெரிக்கா கொடுக்கும் பாதுகாப்பை ஆக்கப்பூர்வமாக உபயோகப்படுத்தி அருகாமை நாடுகளுடனும், பாலஸ்தீனத்துடனும் நட்பை உருவாக்க செலவழிக்க வேண்டும். ஏறத்தாழ இதே பிரச்னைதான் பாகிஸ்தானுக்கும். அதுவும் அமெரிக்க அண்ணன் கொடுக்கும் பாதுகாப்பின் தைரியத்தில் ஆட்டம் போடுகிறது. அது அதற்கே ஆபத்தாகத்தான் முடியும். ஏற்கெனவே அப்படித்தான் ஆகிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு புரிந்ததா என்றுதான் தெரியவில்லை. வாஜ்பாயி பிரதமராக இருக்கும்போது சொன்னார். “என் நண்பனை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். ஆனால் என் பக்கத்து வீட்டுக்காரனை தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியாது. பக்கத்து வீட்டுக்காரனுடன் நான் நட்பாகத்தான் இருந்தாக வேண்டும்”. பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய அரசியல் அறிவுரை அது.

ஆனால் இஇஸ்ரேலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் இடதுசாரிகளும், முஸ்லீம் அரசியல் வாதிகளும், டார்·புரில் அராபிய முஸ்லிம்கள் கறுப்பின முஸ்லிம்களைத் தாக்கிக் கற்பழித்துச் சூரையாடும்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இதே தீவிரத்துடன் போராட்டம் நடத்தவில்லை என்பது பற்றிக் கவலை தெரிவியுங்கள். அது நியாயம். சோமாலியாவில் கென்யா நோக்கித் துரத்தப்படும் மக்களுக்காக போராடுவதில்லை என்று கவலை தெரிவியுங்கள் அது நியாயம். பாகிஸ்தானிலும், ஈராக்கிலும், ஷியா சுனி போராட்டங்களில் பிளவுபட்ட முஸ்லீம் சமூகம் மசூதிகளைத் தீக்கிரையாற்றுவது பற்றி இஸ்லாமிய அரசியல்வாதிகள் கவலை கொள்வதில்லை என்று ஆதங்கப் படுங்கள் அது நியாயம். ஆனால் இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் நியாயமானது என்று சொல்லாதீர்கள்.

இஇடதுசாரிகளும், முலாயம் சிங் யாதவ் போன்றவர்களும், காங்கிரஸ் கட்சியும் முஸ்லீம் ஆதரவு என்ற பெயரில் நியாயமான போராட்டங்களில் ஈடுபடாமல், வெறும் யூத வெறுப்பை வளர்க்கும் போராட்டங்களில் மட்டும் தம் ஆதரவைத் தருகிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் இஇஸ்ரேல் நாடு இஇந்த விஷயத்தில் நடந்து கொண்டது சரி என்பது இதன் பொருள் அல்ல.

பாலஸ்தீன மக்களைப் போன்றே, சூடானில் டார்பாரில் துயருரும் கறுப்பின மக்களும். அம்மக்களைப் போன்றே சோமாலியாவிலிருந்து கென்யா ஓடும் அகதி மக்களும். அவர்களைப் பற்றி தெருவில் போராட்டம் நடத்தமாட்டார்கள் நம் இடது சாரியினர். அவர்களுக்கு கறுப்பின மக்களின் ஓட்டு தேவையில்லையே?

உலகளாவிய அரசு என்பதிலும் எனக்கு நாட்டமில்லை. சிறுசிறு நாடுகளாக பிராந்திய அணுகுமுறை என்பதிலும் எனக்கு நாட்டமில்லை. உலகளாவிய அரசு இயந்திரங்கள் எதிர்க்கமுடியாத சர்வாதிகாரத்தையே கொண்டுவரும் என்று நம்புகிறேன். பிராந்திய அணுகுமுறை, இஸ்ரேல் பிரச்னை போல தீர்க்கப்பட முடியாததாகவே இருக்கும். ஏனெனில், அங்கு இருக்கும் பாலஸ்தீன இஸ்ரேல் கட்சியினரின் பின்னால் உலகளாவிய ராஜதந்திர காய்நகரத்தல்களும் மூலங்களுக்கான போட்டியும்தான் இருக்கும்.

ஒரு ஜனநாயக நாடு இன்னொரு ஜனநாயக நாட்டின் மீது போர் தொடுத்ததில்லை என்பதை பலர் அடிக்கடி கூறுவார்கள். பிரச்னைகளின் தீர்வு ஜனநாயக அதிகாரப்பரவலை விரிவுபடுத்துவதே என்பது தவிர எனக்கு வேறெதும் தோன்றவில்லை.
——————————-
karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்