திரும்பவும் திண்ணையில் அமரும் துணிவு பெறுகிறேன்

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

மலர் மன்னன்


கடந்த காலங்களில் சொல்லடிகளுக்கு மட்டுமின்றிக் கல்லடிகளுக்கும், ஏன், ஒருமுறை திராவக வீச்சுக்குங்கூட இலக்கானவன்தான். ஆகையால் திண்ணையிலும் சொல்லடிபட நேர்ந்ததில் அப்படியொன்றும் நொந்துபோய்விடவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே தெருவில் இறங்கியதுமே கண்டதையும் மிதிக்க நேரிடும் என்று தெரிந்தேதான் இறங்கினேன். ஏனெனில் நமது தெருக்கள் கடந்த பல தலைமுறைகளாக அந்த அளவுக்கு அசுத்தம் செய்துவைக்கப் பட்டிருக்கின்றன.

என் முன்னோர்கள் தம் காதுகளில் மணிகளைக் கட்டிக் கொண்டு திரிந்தார்களா என்று கேட்கப்பட்டபோது கூட, என் நிமித்தமாக என் மனோமய வழிபாட்டுக்குரிய உத்தம சீலர்களான அவர்கள் பொது சபை நடுவே எள்ளி நகையாடப்பட இடமளிப்பதுடுவது அவசியம்தானா, என்று தயங்காமல் எழுதுவதைத் தொடர்ந்தேன்,; குறிப்பாக இளந் தலைமுறை

யினரிடமிருந்து ‘எம் கண்களைத் திறந்து வைக்கிறீர்கள். எமது பாட புத்தகங்கள் எங்களிடம்மிருந்து மறைத்துவைத்துள்ள சகல உண்மைகளையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் “ என இடைவிடாது மெயில்கள் வந்த வண்ணமிருந்ததால்.

சில ஆண்டுகளுக்கு முன் மிகவும் தற்செயலாகத்தான் திண்ணையைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். அந்த அனுபவத்தை விரிவாகவே சொல்கிறேன்:

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பலவும் பாரதத்தின் மனித ஆற்றல் மதிப்பு வாய்ந்ததாக இருப்பதோடு, மலிவாகவும் இருப்பதால் பலவாறான பணிகளுக்கும் அங்கிருந்தவாறே நம்மவரை நியமித்து நிர்வாகம் செய்வது வழக்கமாகி விட்டிருப்பது தெரியும்தானே; இப்படித்தான் அமெரிக்க வாசகர்களுக்கான பல்சுவை இதழ்கள் குழுமம் ஒன்று இணையம் வழியாக பெங்களூரில் ஓர் அலுவலகம் வைத்து என்னைத் தலைமை ஆசிரியனாகவும் நியமித்தது. இஅதற்கு முன்னரே பெங்களூரில் கர்நாடக மாநிலம் பற்றிய தகவல்களைக் குறிப்பாகக் கர்நாடக மாநிலத்திற்கு வெளியே உள்ள கர்நாடகத்தவருக்காக ஒரு இணைய இதழ் நடத்த வேண்டும் என பெங்களூரைச் சேர்ந்த சுசீல் குமார் பசீன் என்ற பஞ்சாபியத் தொழிலதிபர் விரும்பி அதற்கான பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்

திருந்தார்.

இப்படியெல்லாம் வேலை வாய்ப்புக் கிட்டியதால்தான் நான் தமிழகத்தைவிட்டு விலகிச் சென்றதாக எண்ணிவிட வேண்டாம். ஒரு கட்டத்தில் தமிழ் நாட்டின், அரசியல், சமூகம், கலைத் துறை, கலாசாரம், அணுகுமுறை முதலான தளங்கள் யாவுமே மூச்சைத் திணறடிக்கிற அளவுக்கு மாசு பட்டுப் போனதால் எவ்வித உத்தரவாதமும் இன்றியேதான் அருகாமையில் உள்ள, நான் மிகவும் நேசிக்கும் நகரங்களுள் ஒன்றான பெங்களூருக்குக் குடிபபெயர்ந்தேன்; இப்போதுள்ள பெங்களூர் என்னுடைய பெங்களூர் அல்ல என்றாலும்! அங்கு சென்றபிறகுதான் வேலை வாய்ப்புகளைப் பெறலானேன்.

பெங்களூரில் பசீன் விரும்பிய பிரகாரம் அவருடன் இணைந்து கர்நாடகா காலிங் (Karnataka Calling) என்று பெயர் சூட்டி, ஓர் இதழ் தயாரித்து இணையத்தில் வெள்ளோட்டம் விட்டேன். கர்நாடகத்தின் தகவல் களஞ்சியம் போல் அதனை உருவாக்கியிருந்தேன். சில பக்கங்கள் மட்டும் பொருத்தம் கருதி தினந்தோறும் புதுப்பிக்கப்பட்டு வந்தன. உதவிக்குத் துணை ஆசிரியர் எவருமின்றித் தனி நபராகவே பக்கங்களை நிரப்பி வந்தேன்.

ஒருநாள் மாலை நான் வேலையாக இருந்தபோது கதவையே உடைத்துக் கொண்டு வருகிற மாதிரி மிகவும் பரபரப்புடன் உள்ளே நுழைந்தார் பசீன்.

பழத்தைப் பறித்துவிட்டோம் என்று என் தோள்களைப்பற்றிக் குலுக்கலானார். நான் லேசில் பரபரப்படைகிறவன் அல்ல. ஆகவே, என்ன விஷயம், என்றேன் மெதுவாக.

சி. எம். மிடமிருந்தே மெயில் வந்திருக்கிறது, வாருங்கள் என் அறைக்கு, வந்து படியுங்கள், என்று அவரது அறைக்கு இழுத்துக் கொண்டு போனார்.

அந்தச் சமயத்தில் கர்நாடக மாநில முதல்வராக இருந்தவர் எஸ். எம். கிருஷ்ணா.

அல்ம்மட்டி என்ற இடத்தில் கிருஷ்ணா நதியின் மீதான அணைக்கட்டை ஆந்திர மா நில அரசு மேலும் உயர்த்த முற்பட்டு அதன் காரணமாகக் கர்நாடகத்திற்கும் ஆந்திரத்திற்கும் விவகாரம் கிளம்பியிருந்த தருணம்.

கிருஷ்ணை ஆறு, கர்நாடகத்தின் வழியாகவும் எட்திடிப் பார்க்கிற மாதிரிபுகுந்து புறப்படுகிறது. எனவே அல்மட்திடி அனைணயின் உயரம் மேலும் அதிகரித்தால் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. அல்மட்டி அணையின் உயரம் கூடுதலாக்கப்படலாகாது என்று முதல்வர் கிருஷ்ணா குரல் எழுப்பத் தொடங்கியிருந்தார். இதனை முன்னிட்டு நான் Krishna’s Tryst with River Krishna என்று முதல்வர் கிருஷ்ணாவின் முயற்சியை ஆதரித்தும் கிருஷ்ணா ஆற்றின் மீது கர்நாடகத்திற்கும் உள்ள உரிமை பற்றியும் நாங்கள் தொடங்கிய இணைய இதழில் எழுதியிருந்தேன். வலையைச் சலிப்பதில் விருப்பம் மிக்க முதல்வர் கிருஷ்ணா, தற்செயலாக அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, தொடர்புப் பக்கத்தில் பசீன் பெயரில் இருந்த மின் அஞ்சல் முகவரிக்கு பாராட்டுச் செய்தி அனுப்பிவிட்டு, எங்கள் இணைய இதழ் பற்றிய தகவல்களையும் விசாரித்திருந்தார். இதழை முன்னின்று நடத்துவோரைச் சந்திக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பசீனுக்கு இது புல்லரிப்பாகிவிட்டது!

அதன் பிறகு நாளும் நேரமும் குறிப்பிட்டு பசீனும் நானும் முதல்வர் கிருஷ்ணாவைச் சந்தித்தோம். இவர்தான் அந்தக் கட்டுரையை எழுதியவர், இதழின் ஆசிரியரும் இவர்தான் என்று என்னை அறிமுகம் செய்துவைத்தார், பசீன். கர்நாடகா காலிங் (Karnataka Calling) என்று இதழுக்கு நான் வைத்த பெயரே மிகவும் ஆகர்ஷிப்பதாகச் சொன்னார், கிருஷ்ணா. கட்டுரையின் தலைப்பும் அதேபோல் மிகவும் சிறப்பாக அமைந்துவிட்டதாக மகிழ்ந்தார். கட்டுரையின் தலைப்பைப் படித்ததுமே சிரிப்பு வந்துவிட்டது, என்றார்.

மா நில அரசின் சார்பில் முடிந்தவரை எங்கள் இதழுக்கு உதவுவதாக நாங்கள் கேட்காமலேயே கிருஷ்ணா உறுதியளித்தார். எந்த விதத்தில் உதவமுடியும் என்றும் வினவினார்.

மாநில அரசின் எல்லாத் துறைகள் பற்றிய விவரங்களை தனித்தனிப் பக்கங்களாகவும் அரசு நிறுவனங்களான சுற்றுலா, முதலீட்டு நிதி உதவி போன்ற அமைப்புகள் பற்றி சிறப்புத் தகவல் பக்கங்களாகவும் இதழில் இணைக்கிறோம், அதற்கு ஆகும் செலவு என்பதுபோல் ஒரு குறிப்பிட்ட தொகையை எங்களுக்குச் செலுத்தலாம் என்று சொன்னேன் (அம்பலம் இணைய இதழுக்கான நிதி ஆதாரங்களை மேம்படுதுவதற்கான ஆலோசனை கேட்டு ஒருமுறை எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து மின்னஞ்சல் வந்தபோது இதேவிதமான ஆலோசனையை அவருக்குத் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. பதிலுக்கு இரா. முருகன் தெரிவித்த யோசனைகளை அனுப்பிவைத்திருந்தார் ).

முதல்வர் கிருஷ்ணா என் யோசனையை உடனே ஏற்று முறைப்படித் தமக்கு விண்ணப்பிக்குமாறும், எல்லாத் துறைகளுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் ஒரு பொதுவான ஆணை பிறப்பித்துவிடுவதாகவும் வாக்களித்தார். சொன்னவாறே செய்து தம் வாக்கையும் நிறைவேற்றினார். பசீன் எனக்கு ராஜோபசாரம் செய்யலானார்.

அதன்பின் எங்கள் இணைய இதழுக்காக முதல்வர் கிருஷ்ணாவை நேர்காண்பது போல் சில சமயம் சந்தித்துப் பேசும் வாய்ப்பினைப் பெற்றேன். அவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றில் நமது காவிரிப் பிரச்சினை பற்றி அவரிடம் பேச்செடுத்தேன்.

கிருஷ்ணாவில் கர்நாடகத்தின் உரிமைக்காக வாதாடும் நீங்கள் காவிரியின் விஷயத்தில் தமிழ் நாட்டின் உரிமையைக் கண்டுகொள்ளாமல் இருப்பது சரிதானா என்று அவரிடம் கேட்டேன்.

நீங்கள் ஒரு தமிழன் என்பதை இப்போது உறுதி செய்கிறீர்கள் என்று சிரித்தார், கிருஷ்ணா.துரதிர்ஷ்ட வசமாகக் காவிரிப் பிரச்சினை அரசியலாக்கப் பட்டுவிட்டது. எனவே இரு தரப்புமே திரும்பி வர இயலாத புள்ளிக்குள் சிக்கிக் கொள்ளும்படியாகிவிட்டது, என்றார்.

நியாயப்படி இருதரப்புகளையும் சேர்ந்த நீர்ப்பாசனம், வேளாண்மை, பொறிஇயல் சார்ந்த நிபுணர்களும் விவரம் தெரிந்த விவசாய சங்கப் பிரதிநிதிகளும் ஆரம்ப காலப் பேச்சு வார்த்தையைத் தொடங்கியிருந்தால் பிரச்சினைக்கு இரு தரப்பினரும் ஏற்கத் தகுந்த தீர்வு ஏதாகிலும் கிடைத்திருக்கும் என்று கிருஷ்ணா அபிப்பிராயப்பட்டார்.

கிருஷ்ணாவின் கருத்து சரிதான். காவிரி ஆற்று நீர்ப் பங்கீடு தொடர்பாக மைசூர் சமஸ்தானத்திற்கும் சென்னை ராஜதானிக்கும் இடையிலான ஒப்பந்தம் 1972 ல் காலாவதியாக விருந்தது. அப்படிக் காலாவதியாகும்போது மைசூர் சமஸ்தானம் என்பதாக ஒன்று இல்லை. அதற்குப் பதிலாகக் கர்நாடக மாநிலம் உருவாகிவிட்டிருந்தது. சென்னை ராஜதானியானது தெலுங்கு, மலையாள, கன்னடப் பிரதேசங்களையெல்லாம் இழந்து, தமிழ் நாடு என்கிற மாநிலமாகக் குறுகிப் போயிருந்தது. மொழிவழி என்கிற மயக்கத்தினால் கிடைத்த பாதிப்பு!

நியாயப் பிரகாரம் ஒப்பந்தம் காலாவதியாவதற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் நாடு அதைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். யோசிக்கத் தவறிவிட்டது. ஒப்பந்தம் காலாவதியாவதால் பாதிப்பு ஏற்படப் போவது தனக்குத்தான் என்கிற பிரக்ஞையே தமிழ் நாட்டிற்கு இருக்கவில்லை.

1967ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டிருந்தது. அதிகம் செயல்பட முடியாத அளவுக்கு ஆட்சிக்கு வந்தவுடனேயே அண்ணா உடல் நலம் குன்றிப் போனார்.

ராஜ தந்திரமோ நிர்வாக அனுபவமோ பிரச்சினையின் தீவிரத்தை உணரும் பக்குவமோ இல்லாத தி.மு.க. ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதால் தமிழ் நாட்டிற்கு ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பு காவிரி நீரில் உரிய பங்கினைப் பெற முடியாமல் போனதுதான். இம்மாதிரியான விஷயங்களில் அனுபவம் மிக்க பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 1967க்குப் பிறகும் நீடித்திருந்தால் இந்த இழப்பைப் பெருமளவிற்குத் தவிர்த்திருக்க முடியும்.

காவிரி நீர்ப் பங்கீடு குறித்துக் கர்நாடக முதல்வருடன் பேச்சு நடத்த 1970 வாக்கில் தமிழக முதல்வர் கருணாநிதி பெங்களூர் வந்தபோது, நான் முன்னரே குறிப்பிட்ட மாதிரி யூனிவர்சல் பிரஸ் சர்வீசின் கர்நாடகப் பிரதிநிதியாக பெங்களூரில் இருந்தேன். எனக்கு நன்றாக நினைவுள்ளது; கர்நாடக அரசின் தலைமைச் செயலகமான விதான சவுதாவில் முதல்வர் கருணாநிதி லிப்ட் வழியாக ஏறிச் சென்றபோதும் அதே லிப்டில் திரும்பியபோதும் நானும் அவரோடு கூடவே பயணித்தேன் காவல் அதிகாரிகளின் முகச் சுளிப்பைப் பொருட்படுத்தாமல்! முதல்வர் கருணாநிதி வெறும் கருணா நிதியாக இருந்த காலத்திலிருந்தே அறிமுகமானவர்தான் என்பது அவர்களுக்குத் தெரியாது அல்லவா ?

காவிரி பற்றி நான் மிகவும் கவலையுடன் கருணாநிதியிடம் விசாரித்தபோது அவர் சிறிதும் அலட்டிக் கொள்ளவேயில்லை! அது ஏதோ ஒரு சாதாரண விவகாரம்போல் மீண்டும் பேச்சு தொடரும் என்றார்!

ஒப்பந்தம் போடப்பட்ட காலத்தில் இருந்த நிலைமை வேறு, அது காலாவதியாகும் தருணத்தில் இருந்த நிலைமை வேறு என்பதைப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தாற்போல் வியூகம் அமைத்திருக்க வேண்டாமா ?

கர்நாடகத்திலும் பசுமைப் புரட்சி பரவி விவசாயம் விரிவடைந்துவிட்டிருப்பது இயற்கையே அல்லவா ? ஒரு கசப்பான உண்மையை ஒப்புக்கொண்டுதானாக வேண்டும். நீர் நிர்வாகத்தில் நாம் மிக மிகப் பொறுப்பற்றவர்களாகவே இருக்கிறோம். காவிரி ஒரு பிரச்சினையாகப் போகிறது என்று உணர்ந்து அப்போதே சிக்கன நடவடிக்கைகளையும், நீர் பிடிப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருக்க வேண்டாமா ? அதற்கப்புறமுங்கூட அலட்சியமாகத் தானே இருந்துவந்திருக்கிறோம் ? தண்ணீருக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கவே இல்லையே! தண்ணீரின் வரத்து மித மிஞ்சி இருந்ததால் அதன் அருமை தெரியவில்லை.

ஆண்டின் பெரும்பகுதி வெயில் அடிக்கும் பிரதேசம் நமது மாநிலம். தூர் வாரவும் புதிது புதிதாக ஏரி குளங்கள் வெட்டவும் எவ்வளவு சவுகரியம்! மாறாகத் தூர்த்துக்கொண்டல்லவா வந்திருக்கிறோம்!

196566 தேர்தல் நெருங்கிய நேரம்; மேலும் தி.மு.க. வலிமை பெற்று வந்த தருணம். தவிரவும் தேவையற்ற வெறும் உணர்ச்சித் தூண்டலான அதி தீவிர ?ிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்றெல்லாம் நடத்தி அரசின் கவனத்தைத் திமுக மாணவர் தரப்பினர் திசை திருப்பிவிட்டிருந்த காலகட்டம். ஆகவே பக்தவத்சலம் மீது இவ்விஷயத்தில் குறைகாண்பதற்கில்லை. காவிரிப் பிரச்சினை சிடுக்காகிப் போனதற்கும், காவிரி டெல்டா விவசாயிகளை முன்னெச்சரிக்கை செய்து சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தத் தவறியமைக்கும் புத்திசாலித்தனமான நீர் நிர்வாகத்தை உருவாக்காமல் விட்டதற்கும் அன்று முதல்வராக இருந்த கருணாநிதியும், ஆளுங் கட்சியாக இருந்த தி.மு.க.வுமே பொறுப்பேற்க வேண்டும்.

கருணாநிதி தஞ்சை மாவட்டத்தவராக இருந்த போதிலும் விவசாயம், நீர்ப் பாசன ஏற்பாடு போன்ற இன்றியமையாத துறைகள் பற்றி ஏதும் அறியதவாரக இருந்ததால் தமது சொந்த மாவட்டத்திற்கு நிரந்தரமாக ஊறு விளைவித்துவிட்டார்.

நமது நாடு அடிப்படையில் ஒரு விவசாய தேசம். இங்கு முக்கிய பொறுப்புகளை ஏற்பவர்கள் விவசாயம், நீர்ப் பாசனம் ஆகியவை குறித்து ஆதார அறிவைப் பெற்றிருப்பது மிகவும் அவசியம். எல்லாம் ஐ ஏ எஸ் அதிகாரிகள் பார்துக் கொள்வார்கள் என்று அரசியல்வாதிகள் அலட்சியம் செய்தால் பிறகு அனுபவிப்பது வாக்களித்த மக்கள்தாம்.

இவ்வாறாகப் பிற்காலத்தில் மீண்டும் நான் பெங்களூர் வந்து இணைய தளங்களில் சஞ்சரிக்கத் தொடங்கியபோதுதான் தமிழில் வெளிவரும் இணைய இதழ்கள் பற்றித் தெரியவரலாயிற்று. அம்பலத்தில் என்னை நேர்காணல் செய்து எழுதினார்கள். திருப்பூர் கிருஷ்ணன் கேட்டதற்கு இணங்கத் தமிழ் இலக்கியத்தினூடே சமூகம் சார்ந்த இரு கட்டுரைகளும் இரு சின்னஞ் சிறு கதைகளும் அம்பலத்தில் எழுதினேன். தாளில்தான் எழுதிக் கொடுத்தேன்; கணினி மூலம் தமிழில் எழுத அப்போது அறிந்திருக்கவில்லை.

திண்ணை தற்செயலாகவே என் கண்ணில் பட்டது. பாவண்ணன் தமக்குப் பிடித்த சிறுகதைகளை மிகவும் புதிதான தடத்தில் எழுதிவரக் கண்டேன். அதன்றி, நான் மிகவும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள் பலரும் திண்ணையில் அமர்ந்திருக்கக் கண்டேன். அவர்களோடு, அதற்குமுன் நான் அறிந்திராத எழுத்தாற்றல் மிக்க சில புதியவர்களும் இருந்தனர். மிகவும் தரமான முயற்சியாகத் திண்ணை அமைந்திருப்பதை அடையாளங் கண்டு அதுமுதல் கிழமை தவறாமல் திண்ணைக்கு வரலானேன். இதெல்லாம் 200102 கால கட்ட அனுபவம். அவ்வப்போது நான் மிகவும் ரசித்த கட்டுரைகளையும் கதைகளையும் எழுதியவர்களுக்கு மின்அஞ்சலில் பாராட்டும் தெரிவித்து வந்தேன். மிகவும் பயன்தருமாறு மட்டுமின்றி, கவுரவமாகவும் திண்ணை இருப்பது மனதுக்கு நிறைவாக இருந்தது. திண்ணை எனப் பெயர் இருப்பினும் அங்கு நேரத்தை வீணடிக்கும் வெறும் அரட்டைக் கச்சேரி நடப்பதில்லை எனப் புரிந்தது. ஆசுவாசத்திற்காக அங்கு இடம்பெறும் நகைச் சுவை அம்சங்களுங்கூடத் தரத்தில் உயர்வாகவே தெரிந்தன, பெரும்பாலும்.

தமிழகத்தின் எதிர்மறைச் சூழலைக் கூடத் திண்ணை சிரத்தை எடுத்தால் மாற்றிக் கொண்டு வந்து, சரியான தடத்தில் நகர்த்த முடியும் என நம்பலானேன். இந்த நம்பிக்கையுடனேதான் 2005 இறுதிவாக்கில் நானும் திண்ணையில் எழுத முற்பட்டது. கணினி மூலம் தமிழில் எழுதுவது அப்படியொன்றும் சிரமமான காரியமல்ல, நீங்கள் விரைவிலேயே எழுதத் தொடங்கலாம் என்று கோபால் ராஜாராம் தைரியமளித்தார். சு.ரா. வுடனான கலந்துரையாடலின் பதிவுகள் திண்ணையில் வரலானதும், பழைய நினைவுகளால் தூண்டப் பெற்று திண்ணையில் நானும் வந்து அமர்ந்துகொண்டேன்.

திண்ணை கவுரவர் சபையாக அல்லாமல் கவுரவமான சபையாக இருப்பதால் அங்கு நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்கள் கண்ணியக் குறைவாக இருத்தல் தகாது என்பதால்தான் எனது பதிவுகளுக்கான எதிர்வினைகளின் தரம் தாழத் தொடங்கியதும் அதன் விளைவாகத் திண்ணையின் தரமும் தாழ்ந்துபோக நானும் ஒரு கருவியாகி விடலாகாது எனக் கருதியே விலகிக் கொண்டேன். மற்றபடி சொல்லடிபட்ட வருத்தத்தினால் அல்ல.

எனது விலகல் எண்ணிறந்த இளந்தலைமுறையினருக்கு ஏற்படுத்திவிட்ட வலி அனுதினமும் எனது மின்னஞ்சல் பெட்டியில் பிரதிபலித்த போதிலும் பொறுமையாக இருந்தேன்.

இப்பொழுது திண்ணையின் கண்ணியத்திற்கு ஊறு ஏற்படாதவாறு கருத்துப் பரிமாற்றங்கள் அமையும் என்ற நம்பிக்கைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இது வரவேற்கப்பட வேண்டிய திருப்பம். இதனைச் சுட்டிக்காட்டி அஞ்சல்கள் வரத் தொடங்கி, விண்ணப்பங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. இது மீண்டும் தின்ணையில் அமரும் துணிவினை எனக்குத் தருகிறது.

—-

malarmannan97@yahoo.co.uk

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்