திருப்பாலைத்துறை – திருத்தலப் பெருமை

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

கோ. தில்லை கோவிந்தராஜன்



நெஞ்சையள்ளும் தஞ்சை மாநகரின் சோழவளநாட்டுக் காவிரிக்கரையின் தென்கரை சிவதலங்களில் ஒன்று திருப்பாலைத்துறையாகும். இத்தலம் பாபநாசம் புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கே ஒரு மைல் தூரத்தில் கும்பகோணம், தஞ்சைப் பேருந்து சாலையில் அமைந்துள்ளது.

தலச்சிறப்பு: தாருகாவன முனிவர் ஏவிய வேள்வியினின்று தோன்றி வந்த புலியினை யுரித்து அதன் தோலை ஆடையாக அணிந்தவர் இத்தல இறைவன் ஆவார்.

வசிட்டர், இராமர், சீதை, இலக்குமணர், தௌதமியர் அருச்சுனன் முதலியோர் வணங்கிய தலம்.

இறைவன் திருநாமம்: பாலைவன நாதர் (க்ஷ£ரவனேஸ்வரர்); இறைவி திருநாமம் தவள வெண்ணகையாள்; ஸ்தல விருட்சம்: பாலைமரம்.

பாலைவனநாதர்: இவ்விறைவருக்கு இப்பெயர் வரக்காரணம் பாலை என்பதற்கு முள்மகிழ் இருள்மரம் (இரும்பாலைமரம்) என்பது பொருள். இருள்பாலை என்பது ஏழிலைப் பாலை எனப்பொருள்படும். இப்பாலை மரம் பற்றிக் கம்பராமாயணத்தில் குறிக்கப்படுகின்றது.

மேலும் பால் வடிகின்ற மரங்களின் கீழ் இவ்விறைவன் வீற்றிருந்திருக்க வேண்டும். இதனால் இத்திருநாமம் பெற்றிருக்கலாம். “க்ஷ£ர” என்னும் வடமொழிச் சொல்லுக்கு பால் என்பது பொருளாகும். ஆகையால் க்ஷ¢ரவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுவதுண்டு. திருஞானசம்பந்தர் பெருமான் திருக்கொச்சைவயம் என்ற 137ஆவது திருப்பதிகப் பாடலில் (3) “பாலையன்ன வெண்ணீறு பூசவர்” என்பார். அதாவது பவளம் போன்ற உடம்பில் பால் வெண்ணீறு பூசியுள்ளார் என்பதை குறிக்கின்றார். திருநாவுக்கரசரும் திருப்பாலைத்துறைப் பதிகத்தில் (2) பாடலின் இறுதி வரியில் “பவளமேனியர் பாலத்துறையரே” என்றே குறிப்பிடுகின்றார். ஆகையால் பால் போன்ற நிறத்தையுடைய வெண்ணீற்றினைப் பவளம் போன்ற உடம்பில் பூசியுள்ளதால் பால்நிறம் கொண்டவர் என்ற பொருளும் கொண்டிருக்கலாம்.

தவளவெண்ணகையாள்: தவளம் என்பதற்கு ‘வெண்மை’ என்பது பொருள். இவ்விறைவியானவர் தம் அழகிய வெண்பற்கள் தெரிய முறுவல் புரிபவளாக இருந்திருக்க வேண்டும்.

“கவளமா களிற்றின்னுரி போர்த்தவர்
தவள வெண்ணகை மங்கையர் பங்கினார்
திவள வானவர் போற்றித்திசை தொழும்
பவள மேனியர் பாலைத்துறையரே”

பாடல்:2 திருப்பாலைத்துறை.

இறைவியைத் “தவள வெண்ணகை மங்கை’ என்று குறிப்பிடுகின்றார்.

திருத்தளிச்சேரித் திருத்தலப் பதிகத்தில் பாடல் – 6இல் திருஞானசம்பந்தப் பெருமான் மேற்கண்ட பாடல்களில் காணும் வார்த்தைகளையே

“தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழ்நல்
திவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர்
குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி யெங்ஙன நீர்கையிற் காய்ந்ததே”
எனக் கையாண்டுள்ளார்.

சிவமந்திரம்: சிவமந்திரத்தினை ஓதினால் நிச்சயமாக நற்கதி கிடைக்கச் செய்வார் இப்பாலை வனநாதர் என்பதனை இத்திருத்தலப் பதிகப்பாடலில் (6) குறிக்கின்றார்.

“விண்ணினார் பணிந்தேத்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாயவென்
றெண்ணினார்க் கிடமாவெழில் வானகம்
பண்ணினாரவர் பாலைத் துறையரே”

சிற்பச் செய்திகள்:

திருவிளையாடற்புராணம்: கீழ்திசை ராஜ கோபுர நுழைவாயிலின் தென்புறச் சுவரில் உள்ள சிற்பத்தில் மேல்பகுதிக் காட்சி பிட்டுக்கு மண் சுமந்த காட்சியாகும். இதில் பாண்டிய மன்னன் அரியணையில் அமர்ந்த நிலையும் அவனை அடுத்து மூதாட்டி ஒருவர் பிட்டு கொடுத்துக் கூலிக்கு ஆள் அமர்ந்துவதும் அதனை அடுத்துக் காவலர்கள் பிரம்பை உயர்த்தி வேளையாட்களை வேலை வாங்குவதும் காட்சியாக அமைந்துள்ளது.

இரண்டாம் சிற்பத் தொகுதியில்: பரிகள் நரிகளாய் மாறுவதும், நரிகள் கொட்டிலிலுள்ள மற்ற பரிகளைக் கடித்து துன்புறுத்துவதும் காட்சியாக அமைந்துள்ளது.

மூன்றாம் சிற்பத் தொகுதியில்: சேரமான் பெருமாள் திருக்கயிலாயம் செல்லும் காட்சி அமைந்துள்ளது.

மேலும் இந்த ராஜகோபுரத்தில் நுழைவாயிலில் வடக்குப்புறத்தில் உள்ள சிற்பத் தொகுதியில் தில்லைச் சிற்றம்பல வாணனை தேவார மூவரும் தொழுவதாக அமைந்துள்ளது. மேலும் நந்தனார் கதையைக் கூறுவதுமாகவும் இக்காட்சி அமைப்புகள் அமைந்துள்ளன.

இந்நுழைவாயிலின் இரண்டு புறமும் உள் சுவரிலும் மனநிலை ஒருங்கே அமையுமுகமாக ஒருதலையையும் பல உடல் கொண்ட, குரங்கும், மனிதன், பாம்பு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

இத்திருத்தலத்தின் இறைவனின் கருவறையை யடுத்துள்ள பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் எதிரில் துர்க்கை அம்மன் அமர்ந்துள்ள மண்டபம் அருகில் ஒரு சிற்பம் அமைந்துள்ளது. இச்சிற்பக் காட்சி திருநாவுக்கரசப் பெருமானின் வாக்கினைப் பிரதிபலிக்கும் (பாடல் 11இல் உள்ள) காட்சியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது சிறப்புடையதாகும்.

“உரத்தினாலரக்கன னுயர் மாமலை
நெருக்கினானை நெரித்தவன் பாடலும்
இரமக்கமாவருள் செய்த பாலைத்துறை
கரத்தினாற்றொழுவார் வினையோயுமே”

உடல் வலிமையினால் இராவணன் கயிலையைத் தூக்கினான். அவனை எம்பெருமான் நெருக்கியதால் நெருக்குண்ட இராவணன் தன் உடலினை வீணையாக்கி இசைத்தனன். அதன்பால் இரக்கம் கொண்டு அருள்செய்த இப்பாலைத்துறையாரை இருக்கரத்தினால் தொழுபவன் வினை அகலுமே என்பதாக சிறப்பிக்கிறார்.

கல்வெட்டு செய்தி: இக்கோயிலில் காணும் 10 கல்வெட்டுகள் மத்திய அரசு தொல்லியல் துறையினால் கல்வெட்டு ஆண்டு அறிக்கை 1912இல் வெளியிடப்பட்டுள்ளன. எண்;433-442.

இதில்

433 – விக்கிரமசோழன்
434 – முதலாம் குலோத்துங்கன்
435,436,442 – அரச மரபு பற்றிய விபரங்கள் தெரியவில்லை
438, 439, 441 – மூன்றாம் குலோத்துங்கன்
440 – இரண்டாம் ராஜராஜன்
437 – மூன்றாம் ராஜராஜன்

ஆகியவர்கள் ஆட்சி கால கல்வெட்டுகளாகும்.

நெற்களஞ்சியம்: தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் எனப்போற்றப்படுவது தஞ்சாவூராகும். நாயக்க மன்னரின் அமைச்சர் கோவிந்ததீட்சதரால் கட்டப்பட்ட நெற்களஞ்சியத்தை இத்திருக்கோயிலில் இன்றும் காணலாம். அதன் கொள்ளளவு 3000 கலம். சுவற்றின் கன அளவு 90 செ.மீ. உள்விட்டம் 6.40மீ உயரம் 6.05 மீட்டர் ஆகும். இதனை தமிழக அரசு தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

மேற்கோள் நூல்கள்

1. மூவர் தேவாரம் – தலமுறை (அடங்கல் முறை)
1 முதல் 7 திருமுறைகள், பதிப்பாசிரியர்: குமரகுருபரன் பிள்ளை

2. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்கள் இரண்டாம் திருமுறை
பதிப்பாசிரியர்: ஸ்ரீமத்.சோம சுந்தரதம்பிரான் சுவாமிகள்

3. திருச்சோற்றுத்துறை புராணம்: இராம.கோவிந்தசாமி பிள்ளை

4. பாபநாச வட்டம் திருக்கோயில்கள் பாவை மாநாட்டு நினைவுமலர்

5. Later Chola Temple: S.R. Balasubramanaian

thillai.g@gmail.com

Series Navigation

கோ. தில்லை கோவிந்தராஜன்

கோ. தில்லை கோவிந்தராஜன்