திருக்குறள் ‘திருந்திய’ பதிப்பு?

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

ஹரன்


( எனது முகப்புக் கடிதம்)

26.10.92

தினமணி ஆசிரியர் அவர்களுக்கு,

திருமதி. ராஜம் கிருஷ்ணன் அவர்களின் “பெண்ணை மனித மதிப்புடன் பாருங்கள்” எனும் கட்டுரை பற்றிய எனது எண்ணங்களை உடன் இணைத்துள்ளேன். அதில் ஏதும் கடுமையான வரிகள் காணின், கடல் கடந்து வாழும் ஒரு தமிழனின் உள்ளக் குமுறல்களாக எண்ணி மன்னிக்கவும்.

நேரடியாக சகோதரி அவர்களுக்கு இதனை எழுதலாம் என்றே முதலில் நினைத்திருந்தேன். பிறகு அச்சுக்கு வந்துவிட்ட ஒரு ‘குற்றச்சாட்டிற்கு’ அச்சு வழியாகத்தான் பதில் கொடுக்கவேண்டும் என்று தோன்றியமையால், இதனைத் தங்களின் மேலான பார்வைக்குக் கொண்டுவருகின்றேன். அச்சுக்கு ஏற்றதாக இது அமையவில்லை என்று தாங்கள் கருதினால். அன்பு கூர்ந்து இதனை சகோதரியாருக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

வணக்கத்துடன்,
ஹரன்

முதலில் “பெண்ணை மனித மதிப்புடன் பாருங்கள்” எனும் ராஜம் கிருஷ்னனின் கட்டுரையைப் பார்ப்போம் (11.10.92-தினமணி கதிர்)

“கதிர் 30-8-92 இதழில் வெளியான ‘ஒரு கோரிக்கை’ என்ற தலைப்பிலான எனது கட்டுரைக்கு எதிரொலியாக வந்து பிரசுரிக்கப்பட்டிருக்கும் கடிதங்களைப் பார்த்தேன்; அனேகமாக என் கருத்தை, ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி; நன்றி.

மகளிர் இயக்கக் கூட்டங்களில் இதே கருத்துக்களை நான் முன் வைத்துப் பேசியிருக்கிறேன். எதிர்பாராதவிதமாக, எங்கோ ஒரு மூலையில் பார்வையாளர்களாக வந்திருக்கும் ஆண்களிடமிருந்து கண்டனக் கணைகள் என்மீது பாய்ந்திருக்கின்றன. தெய்வத்தன்மை ஏற்றப்பட்டுவிட்ட ஒரு நீதி நூல், அதை குறை கூறலாமா என்று பெண்- தமிழ்ப் புலவர்களும் கண்டனம் செய்திருக்கின்றனர். மறுபடியும் நான் வலியுருத்துகிறேன். குறை காண வேண்டும் என்ற நோக்கில் நான் மற்றவர் அபசாரமாகக் கருதும்படியான ஒரு கருத்தை வைத்திருப்பதாக அன்பு கூர்ந்து எண்ண வேண்டாம்.

திருக்குறள், ஒப்பற்றதோர் அரிய நூல்; அந்த நூலில், அது தேசீய அளவில் பயன்படு நூலாக ஏற்றம் பெற்று, பல மொழிகளில், மக்களுக்கெல்லாம் வாழ வழிகாட்டும் நூலாக அவர்கள் கைகளில் செல்லும்போது, இந்த ஒருபக்கக் கற்புக் கருத்துகள் தேவைதானா என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

திருவள்ளுவர் காலத்துக்கு முந்தைய, தாயாண் சமுதாய மரபுகளினால் ஏற்படக்கூடிய ஒழுங்கீனங்களைக் கட்டுப்படுத்துவதற்கு, ‘கற்பு நெறி’ அவளுக்கு மட்டுமாக வலியுறுத்தப்பட்டது என்றே வைத்துக் கொள்வோம். மழைக்கு ஆணையிடும் ஒரு வலிமை அக்கற்பினால் வரும் என்பது என்றுமே சாத்தியம் இல்லை. இந்த வாக்கின் விளைவு, அவர் வாழ்க்கையில், துணையாக நின்ற வாசுகியம்மை மணலைச் சோறாகச் சமைத்தார் என்ற புனைந்துவிட்ட கற்பனைகளையும் சேர்த்துக் கோண்ட கருத்தாகக் காலம் காலமாக வலிமை பெற்றிருக்கவில்லையா? இந்த வலிமைகள் என்றுமே சாத்தியம் இல்லை. பெண்ணின் மூடத்தனமாகிய அடித்தளத்தில் குருட்டு நம்பிக்கைகளை வளர்க்க விதைக்கப்பட்ட பொய்கள் என்பதை எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்கள் இளைத்தவர்களில்லை என்று விளக்கமாகிவிட்ட நிலையிலும் புரிந்துகொள்ளக்கூடாதா?

இந்த மரபுகள், வலிமை வாய்ந்த மின்னணுவியல் சாதனங்களில், அன்றைய புராணக் கதைகளில் இருந்து, இன்றைய நவீன கம்ப்யூட்டர் கொலைக் கதைகள் வரை எடுத்துச் சொல்லப்பட்டு, கோடானுகோடியான அறியாமைச் சகோதர, சகோதரிகளின் மனங்களில் பதிக்கப்படுகின்றனவே? இன்று பொருளாதார வருவாய்க்கான கட்டாயம், ஒவ்வொரு பெண்ணையும் பலதரப்பட்ட ஆண்களுக்கு இடையே பணிபுரியவும் பழகவும் செய்திருக்கிறது. தாம் அன்புநெறி வழுவுகிறோமோ என்ற உணர்வாகிய, ஒருபக்க நுகத்தடியைச் சுமந்து கழுத்துப் புண்ணாகிக் கூறும் நிலையில்தான் தெய்வப்புலவர் வாக்கு பாலிக்கப்பட வேண்டுமா?

திருத்திய பதிப்பு என்றால், குறைந்தபட்சம், அத்தகைய ‘அதீத’மான அடிகளை நீக்கிவிட்ட பதிப்பு என்றுதான் நான் பொருள் கொள்கிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இல்லாத கருத்தை இப்போது கொண்டு புகுத்துவதாகப் பொருளில்லை. மேலும் திருக்குறள், அறிவாளரும், ஆய்வாளரும் மட்டுமே மேற்கோள் காட்டுவதற்கு மட்டும் உபயோகப்படுத்தப்படும் நூலாகவே (இன்றுபோல்) இருக்குமானால், அந்த அடிகள் நீக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அப்போது இலக்கியம் (வரலாறு) காப்பாற்றப்படும். அவர் காலத்துச் சமூகம், கருத்துக்களைப் பிரதிபலிக்கும் நீதிகளை எடுத்துச் சொல்வதாக இருக்கும்.

உண்மை யாதெனின், அது இன்றும் (அன்றும்) எக்காலத்துக்கும் மானுட வாழ்வுக்கு வழிகாட்டியான நூல் என்று போற்றப்பட்டிருந்தாலும், பெண்ணுக்கு மானுட மதிப்பு நல்கியிராததால், எக்காலத்துக்கும் என்பது பொருந்தாமலிருக்கிறது………………………..
…………………………………………………………………………………………….
…………………………………………………………………………………………….
‘சிலம்பு போன்ற காப்பியங்களையும் இப்படிப் பார்த்தால் குறைவாகத் தெரியும், திருத்த முடியுமா’ என்று கேட்கப்படுகிறது.

சமுதாயத்தில் சரிபாதியாகத் திகழும் பெண்ணை மன ஊனமாக்கும் கருத்துகள் பலவும், காப்பியங்களிலும் இலக்கியங்களிலும் சாரமாகவே இருக்கின்றன. அவற்றை, இன்று விழிப்புணர்வு பெற்ற பெண்கள், இனம் காணும் நிலை வராமலிருக்காது.

வாழ்க்கைக்கு உறுதுணையாகக் கொள்ளப் படித்துப் பயன்பெறுவது என்பது வேறு: திறனாய்வு என்பது, நீதிநூலின் அவசியத்துக்கு அப்பாற்பட்டது. எல்லா மக்களுக்கும் தேவையில்லாதது. இரண்டு நிலைகளையும் சேர்த்துக் குழப்ப வேண்டியது அவசியமில்லை.

எங்கோ ஊனம் என்பதற்காகக் கையையும் காலையும் வெட்டிவிட்டால் முண்டமே மிஞ்சும் என்ற உவமை, இந்தக் கருத்துக்குச் சிறிதும் பொருத்தமில்லை.

பளிச்சென்ற முரண்பாடான ஒரு சில வரிகளை நீக்குவதனால் மேலும் ஏற்றம் பெறும் – பயன்படு நூலாகவே திருக்குறள் திகழும். பெண்ணை இன்னமும் மனித மதிப்புடன் பார்க்கத் தடை போடும் மரபுகளால், சமுதாய முன்னேற்றமே தடைபடுகிறது என்பதையே மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

– ராஜம் கிருஷ்ணன்.

(மேலே உள்ள கட்டுரைக்கு, நான் அனுப்பியிருந்த மறுப்பு பின் வருமாறு)

நாள்: 25.10.92
இடம்: துபாய்

கடந்த 11.10.92 தினமணி கதிரில் திருமதி. ராஜம் கிருஷ்ணன் அவர்களின் “பெண்ணை மனித மதிப்புடன் பாருங்கள்” என்ற கட்டுரை என்னை மிகுந்த வேதனைப்படுத்தியது. அது குறித்த எனது எண்ணங்களை இங்கு எழுத விழைகின்றேன்.

அக்கட்டுரையின் சாராம்சமாக எனக்குத் தெரிவது இரண்டு;
1. திருவள்ளுவரும் ஒரு பக்கக் கற்புக் கருத்துக்கள் உள்ளவரே.
2. அவ்ருடைய சில ‘அதீத’ அடிகள் நீக்கப்பட்ட ‘திருந்திய’ பதிப்பு வெளியிடப்பட வேண்டும்.

அதாவது முதலில் உள்ளது, சகோதரியார் கண்டுபிடித்துள்ள நோய்; இரண்டாவதாக உள்ளது, அந்நோய்க்கு அவரின் மருந்து.

முதலில் ‘நோய்க்கு’ வருவோம்.

கற்பு பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், ஆண்களுக்கு கற்பு சம்பந்தமாக எந்தவிதக் கட்டுப்பாடுகளும் அவர் இடாதது போலும், ஆண்களின் தறிகெட்ட உடலின்ப வாழ்விற்கு வள்ளுவர் பச்சைக்கொடி காட்டிவிட்டது போலும் ஓர் உணர்வை இங்கு ஏற்படுத்தியுள்ளார்.

‘பிறனில் விழையாமை’ என்றோர் அதிகாரம் உள்ளதே, அது பற்றி சகோதரியார் கருதுவது என்ன? அதில் ஆண்களின் ‘கற்பு’க்கு இலக்கணம் கூறப்பட்டில்லையா? பிறன் மனை நோக்காப் பேராண்மை என்பது என்ன? கண்ணால் மட்டுமல்ல, மனதாலும் நோக்காமை இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளதே! பிறனின் மனைவி என்பதனைத் திருமணம் ஆனவர்களை மட்டும் குறிப்பிடுவதாகக் கொள்ள வேண்டாம். அது காலத்திற்கு அப்பாற்பட்டது. நிகழ்கால, எதிர்கால, கடந்தகால பிறன் மனைவிகளுக்கும் பொருந்தும். ஆகவே வள்ளுவத்தில், தன்னுடைய மனைவியை அல்லாமல், வேறு எந்தப் பெண்ணுடனும் ‘உறவு’ கொள்ள ஆணுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை. அன்புச் சகோதரியார் மீண்டும் ஒருமுறை ‘பிறனில் விழையாமை’யைப் படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். (ஒரு பொருளைப் பற்றிய உண்மையானப் பரிமாணம் கிடைக்க வேண்டின், ‘காய்தல் உவத்தல் அகற்றி ஆய்தல்’ வேண்டும் என்ற பொன்வரிகள் இங்கு என் நினைவுக்கு வருகிறது)

எந்த இல்லறக் கோட்பாடுகளுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளாது, வெளியில் நிற்கும் பொது மகளிரோடும், அதனைப் பெற ஆண்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. ‘வரைவின் மகளிர்’ என்ற அதிகாரம் இதனைத் தெளிவாக்குகிறது. இதில் சம்பந்தப்படும் இரு சாராரையும் கடுமையாகச் சாடுகிறார் நம் பெருமகன்.

பெண்களுக்கான இலக்கணம் வகுத்தபோது, ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற பொது அதிகாரத்தில், கற்பு குறித்து ஓரிரு குறள்களோடு நின்றுகொண்ட வள்ளுவர், ஆண்களுக்கான கற்பு இலக்கணமாக இரண்டு அத்தியாயங்களையே படைத்துள்ளார். இதனைத்தானா ‘ஒரு பக்கக் கற்புக் கருத்துக்கள் என்றும், கற்பு நெறி அவளுக்கு மட்டுமாக வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்றும் சகோதரியார் கருதுகிறார்?

‘மழைக்கு ஆணையிடும் வலிமை அக்கற்பினால் வரும் என்பது என்றும் சாத்தியம் இல்லை’ என்று கூறுகிறார். வார்த்தைக்கு வார்த்தை நேரடிப் பொருள் கொள்வது, பல சந்தர்ப்பங்களில் நம்மைத் தவறான திசைக்கு இட்டுச் செல்லும் என்பது மிகச் சாதாரணமான உண்மை. எடுத்துக்காட்டாக சில குறள்களைப் பார்ப்போம்;

(அ) “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”
பின்னங்கால்களில் நின்று கொண்டு, முன்னக்கால்களை உயர்த்தி, கைகூப்பி உயிரினங்கள் வணங்கும் என்று பொருள் கொள்ளலாமா? இது ஓர் இலக்கிய நயம். சிறப்பு குறித்து மிகைப்படுத்தல் மரபு.

(ஆ) “கொல்லாமை மேர்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று”
உயிரைக் கொல்லாதவனுக்கு மரணமே இல்லை என்று பொருள் கொள்ளுவதா?

(இ) “இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்”
வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தபோது, சிரிக்க முடியுமா? பின் ஏன் இப்படிக் கூறுகிறார்? சற்று ஆழமாகப் பார்ப்போம். துன்பம்/இடையூறு வந்ததும், கலக்கமடைவது மனித இயல்பு. அக்கலக்கம் சிந்தனையைக் கொல்லும். பின் அவ்விடையூரிலிருந்து விடுபடுவது எப்படி? கலக்கமடையாதே என்று சொல்லும் முகமாக, ஆழம் வேண்டி, நேர் எதிர் திசைக்குப் போகச் சொல்கிறார் (வளைந்த கம்பியை நிமிர்த்த அதன் எதிர் திசையில் வளைத்தலைப்போல). இப்பயிற்சியினால் எச்சூழ்நிலையிலும் கலங்காத சித்தம் கிட்டும். அப்போது அவ்விடுக்கணை அடுத்தூர்வது எளிது.

மழை பெய்வதற்கு ‘உபாயம்’ கூறிய வள்ளுவர், மழை பெய்யாமல் போவதற்கும் ஒரு காரணம் கூறுகிறார்;
“முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்”
பகுத்தறிவு கொண்டு நோக்கும்போது, ‘பெய்யெனப் பெய்யும் மழை’க்கு மாத்திரம் அல்ல, மேலே உள்ளதற்கும் சாத்தியம் இல்லை. இவ்வுலக இயக்கங்கள் அனைத்தும் அறத்தை அடிப்படையாகக் கொண்டவை என்றும், ஒழுக்கம் தவறும்போது, இயற்கை எதிர் விளைவுகளைக் கொடுக்கும் என்பதும், ஒழுக்க நெறியில் நிற்பவனுக்கு இயற்கையும் தலை வணங்கும் (அவன் விருப்பத்திற்கு எதிரான நிகழ்ச்சிகள் நிகழாது) என்பதுமான சித்தாந்தத்தின் அடிப்படையில் எழுந்த சிந்தனைதான் இது. இதே கருத்தைத்தான் இவ்வுலகின்கண் தோன்றிய ஏனைய மதங்களும் வலியுருத்துகின்றன, எவ்வித பேதமுமில்லாமல். சைவம், வைணவம், புத்தம், சமணம், இஸ்லாம், கிருத்துவம் மற்றும் சித்தர்களிடமும் இதே கருத்தைக் காணலாம். நூறு சதவிகித ஒழுக்க சீலனாக வாழ்ந்து, சோதித்துப் பார்த்து, இக்கூற்றைத் தவறென நிரூபிக்கும் வலிமை இன்று யார்க்கு உள்ளது?

ஆக, ஒழுக்கத்துடனும் கற்பு நெறியுடனும் வாழ்வது இரு சாரார்களுக்கும் பொதுவாக்கப்பட்டே உள்ளது என்பது தெளிவாகிறது. எனவே சகோதரியார் குறிப்பிட்டுள்ள ‘நோய்’ வள்ளுவத்தில் உள்ளதா? கணிப்பு சரிதானா? கோளாறு காட்சியிலா? கண்ணிலா என்பதனைப் பெரியவர்கள் கூறட்டும்.

இனி அவருடைய ‘மருந்து’க்கு வருவோம்.

‘இன்று பொருளாதார வாய்ப்புக்கான கட்டாயம் ஒவ்வொரு பெண்ணையும் பலதரப்பட்ட ஆண்களுக்கு இடையே பணி புரியவும், பழகவும் செய்திருக்கின்றது. தாம் அன்பு நெறி வழுவுகிறோமோ என்ற உணர்வாகிய ஒரு பக்க நுகத்தடியைச் சுமந்து வருந்தும் பெண்களுக்காக, அத்தகைய ‘அதீத’ அடிகளை நீக்கிவிடலாம் என்பதே சகோதரியின் மருந்து.

இதேபோல், கொல்லுதல், புலால் உண்ணுதல், கள், சூது, பொய், செய்நன்றி மறத்தல், திருடுதல் போன்ற எல்லாக் கயமைகளையும் வள்ளுவர் கடுமையாகச் சாடியுள்ளார். இவைகளெல்லாம் நாட்டில் ஒழிந்துவிட்டனவா? இல்லையே. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, இன்று ராஜபவனி வந்து கொண்டிருக்கின்றனவே. இப்படிப்பட்டவர்களுக்கும் ‘துன்பத்தை’க் கொடுக்கக் கூடிய, ‘சகித்து’க் கொள்ள இயலாத எத்தனையோ ‘அதீத’ வரிகள் குறளில் உள்ளனவே. அவைகளையும் சகோதரியார் பட்டியலிட்டுக் கொடுத்தால், ‘திருந்தியப் பதிப்பு’ ஒன்று வெளியிட ஏதுவாக இருக்கும்.

பகுத்தறிவாளர்களால் ஒப்புக்கொள்ள இயலாத சில அதிகாரங்களும் வள்ளுவத்தில் உள்ளன. அவர்களுக்கு வேண்டி, பின் வேறொரு ‘திருந்திய பதிப்பு’ செய்ய வேண்டி வரும். முடிவாக, வருங்காலத் தமிழனின் கையில், வெள்ளைக் காகிதங்கள் மட்டுமே அடங்கிய (அல்லது வெறும் காமத்துப் பால் மட்டுமே கொண்ட) ஒர் ஏட்டினை ‘திருக்குறள்’ என்று இவ்வுலகம் காண வேண்டி வரும்.

இதேபோல் ஒவ்வொரு படைப்பையும், வெட்டி ஒட்ட ஆரம்பித்தால், நாளை எது மிஞ்சும்? எது சரி, எது தவறு என்பதனைக் காலம் தீர்மானிக்கட்டும். எந்தத் தனிமனிதனும் அந்தப் ‘பொறுப்பை’ ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஒரு படைப்பில் கை வைக்க, அந்தப் படைப்பாளிக்கு மாத்திரமே உரிமை உண்டு என்று திடமாக நம்புபவர்களுள் நானும் ஒருவன். தவறுகள் பெறுகிவிட்டன என்ற காரணம் காட்டி, தவறைத் தவறு என்று கூறும் வரிகள் இனியும் இருப்பது தவறு என்று ஓர் இலக்கியவாதி, சமூக சிந்தனையாளர் கூறுவது பெருத்த வேதனையைத் தருகிறது.

‘ஆய்வாளர்களுக்கும், மேற்கோள் காட்டும் அறிஞர்களுக்கும் உபயோகப்படும் ஒரு நூலாகவும், அக்குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கும், அச்சமுதாயத்திற்குமுரிய நீதி நூலாகவும் இருக்கும் இலக்கியமாக’ வள்ளுவத்தை சகோதரிக் குறிப்பிடுகிறார். அல்ல, இலக்கியம் என்பது ஒரு காலக் கட்டத்துடன் நின்று விடுவது அல்ல. அது யார்க்கும், எக்காலத்தும், தேவைக்கேற்ப, முயற்சிக்கேற்ப வாரி வழங்கும் தன்மை உடையதாகும். அது “தொட்டணைத்து ஊறும் மணற்கேணி” – தொட்டி நீர் அல்ல; அள்ள அள்ளக் குறைய, காலப் போக்கில் பாசம் பிடித்துப் போக. நாம் வளர வளர தானும் வளரும். அதனால் கால வெள்ளத்தில் எதிர் நீச்சலிட்டு உலகில் நிலைக்கும். இவ்வழி நோக்கும்போது திருக்குறள் ஓர் இலக்கியமே. நேற்று அதிலிருந்து பெற்றதை விட இன்று அதிகம் பெற முடிகிறது. நாளை இன்னும் சிறப்பாக வாரி வழங்கக் காத்திருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு சில குறள்களைப் பார்ப்போம்;

(அ) “தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது”

பரிமேலழகர் பார்வை: தம்மக்களின் அறிவுடைமை, பெரிய நிலத்து மன்னா நின்ற உயிர்கட்கெல்லாம் தம்மினும் இனியதாம்.

மு.வ பார்வை: தம்மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதைவிட உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

‘தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் தம்மின் இனிது’ என்ற வடிவத்தில் கண்டபோது மேலே உள்ள பார்வைகள் கிடைத்துள்ளன.

குறளின் வடிவத்தை சற்று மாற்றிவோம்;

‘தம்மக்கள் தம்மின் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் இனிது’

வரும் பொருள்: தம் மக்கள் தம்மைக் காட்டிலும் அறிவில் சிறந்தவர்கள் என்ற உண்மை, உலகின் அனைத்து உயிர்களுக்கும் இன்பம் பயப்பதாகும்.

தோல்வி என்பது யாராலும் ஜீரணிக்க இயலாதது; துன்பம் பயப்பது. அதுவும் அறிவு ரீதியான தோல்வியென்பது கொடியது. அப்படிப்பட்ட தோல்வியும் ஒருவனுக்கு இன்பம் கொடுக்கும், தன்னை வென்றவன் தன் மகன் எனும்போது. (இப்பார்வை எங்கு கண்டது / யார் சொல்லிக் கேட்டது என்பது நினைவில் இல்லை)

(ஆ) “தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு”

இக்குறளில் ‘தாழ்விலாச் செல்வர்’ என்ற பதத்திற்கு, கேடில்லாத செல்வம் உடையவர் என்றே ப.அ, மு.வ, இருவராலும் பொருள் எழுதப்பட்டுள்ளது.
அங்ஙனமாயின் இவ்விலக்கணம் பொது உடைமை நாடுகளுக்கு சற்றும் பொருந்தாது. வள்ளுவத்தில் இப்படி ஒரு தவறு நிகழ வாய்ப்பு உண்டா? இல்லை. எனவே இதனை வேறொரு கோணத்தில் காண்போம்.

‘தாழ்விலா’ என்ற அடைமொழி தாழவும், உயரவுமான, நிலையில்லாத் தன்மையதாகிய பணத்திற்கு கொடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. ஒரு பொழுதும் குறையாத, அழிவற்ற செல்வம், அறிவு வழி பெற்ற தொழில் நுட்பமே. எனவே ‘தாழ்விலாச் செல்வர்’ என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது ‘தொழில் நுட்ப வல்லுனர்களையே’ எனக் கொள்ளலாம். இப்போது, இக்குறள் அனைத்துத் தனியுடைமை மற்றும் பொது உடைமை நாடுகளுக்கும் பொருந்தி வரும் இலக்கணம் ஆகிறது.

(இ) “இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று”

இதற்கு பரிமேலழகர், “வறுமையுற்றிரப்பவர் இல்லையாயின், குளிர்ந்த இடத்தை உடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள், உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற் போலும்” என்றும், மு.வ அவர்கள், “இரப்பவர்கள் இல்லையானால், இப்பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்” என்றும் கூறுகின்றனர்.

அதாவது உலகின் இயக்கம், இரப்பவர்கள் இல்லையானால், செயற்கையானதாகவும், தற்காலிகமானதாகவும் இருக்கும் என்பதாகப் பொருள் வருகின்றது. அப்படியானால் உலகம் தொடர்ந்து இயங்க பிச்சைக்காரர்கள் அவசியம் என்று வள்ளுவர் கருதுவதாக ஆகிவிடுகிறது.

‘இரவு’ என்பதனை வயிற்றுப் பசிக்கு என்றில்லாமல், அறிவுப் பசிக்கு வேண்டி இரத்தல் என்பதாகக் கொண்டால், இன்னும் சிறப்பான கருத்துக் குவியல்களை, ‘இரவு’ இரவச்சம்’ எனும் இரண்டு அதிகாரங்களிலும் காணமுடிகிறது. இப்போது மேற்கண்ட குறளுக்கு வருவோம்.

புறவாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஏற்றத் தாழ்வை ஒழித்துவிட்ட, யாரும் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லாத ஒர் உன்னத சமுதாயத்திலும், அக வாழ்வில் அறிவுரீதியான பேதங்கள் காணப்படும். நாளடைவில் அதுவும் மறைந்து, எதனையும் இரப்பாரும் இல்லாது, கொடுப்பாரும் இல்லாத ஒரு முழுமை நிலை (saturated point) வரும். அது உலகப் பரிணாம வளர்ச்சியின் இறுதி ஆகும். அப்போது இவ்வுலகின் இயக்கம் இயந்திர கதியிலானது: இறுதி பயப்பது. தொடங்கிய அனைத்தும் முடிந்தே தீரும். இவ்விதிப்படி இவ்வுலகத்தின் இறுதி, எவ்வித வர்க்க பேதமும் அற்ற பூரணத்துவ சமுதாயமாக இருக்கும் என்பதாக இக்குறளுக்குப் பொருள் வருகிறது.

மேலும் பல குறள்களுக்கு, முழுக்க முழுக்க வித்யாசமான, பல மடங்கு அழகும், ஆழமும் நிறைந்த பார்வைகளை நாம் கலைஞரின் ‘குறளோவியத்தில்’ பார்க்கவில்லையா?

இது போன்ற அவரவரின் ஊக்கத்திற்கும், சக்திக்கும், இயல்புக்கும் ஏற்ற வகையில் கருத்துக்களை வாரி வாரிக் கொடுத்து, இனியும் ஏராளமாகக் கொடுக்க உள்ள ஒரு மணற்கேணியைத் தூர்த்துவிட வேண்டும் என்றால், அது பார்வைக் கோளாறு அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

நான் புலவன் அல்லன்; எழுத்தாளனும் அல்லன். சாதாரண, இலக்கிய ரசிகன். பட்டதை எழுதிவிட்டேன்; பிழை பொறுக்கவும்.

வணக்கத்துடன்,

ஹரன்.

(பழம் இலக்கியங்களில் காணப்படும் கருத்துகளின் இன்றைய எதிர்வினை குறித்த விவாதங்களின் களத்தில் பொருத்தம் கருதி இந்தக் கட்டுரை பிரசுரம் செய்யப் படுகிறது. – திண்ணை குழு)

Series Navigation

ஹரன்

ஹரன்