ஜடாயு
அக்டோபர் 12 திண்ணை இதழில் ஹெச்.ஜி.ரசூல் “திருக்குர் ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்” என்ற தலைப்பில் சொல்லியிருந்த கருத்துக்கள் சிந்தனைக்குரியதாக இருந்தன. வழக்கமான இஸ்லாமிஸ்ட்களுக்கு மத்தியில் இத்தகையதோர் கருத்து புத்துணர்வு ஊட்டுவதாக இருந்தது. நன்றி ரசூல் அவர்களே.
முதலில் ரசூலின் “திருக் குர் ஆன்” என்ற சொற்பிரயோகம். சமீப காலமாக பெரும்பாலான இஸ்லாமிய எழுத்தாளர்கள் (நாகூர் ரூமி உட்பட) வேண்டுமென்றே இந்த “திரு”வைத் தவிர்த்து “குர் ஆன்” என்று எழுதி வருவது இங்கு குறிப்பிடத் தக்கது, கவனத்திற்குரியது. “திருக் குர் ஆன்” என்று சொல்லும்போது இந்த இறுதி வேதமும் திருக்குறள், திருவாய்மொழி, திருமந்திரம், திருவாசகம் போன்றவற்றுக்கு ஒப்பான ஒரு நூல் தான் என்று தமிழ்ச்சூழலில் குறிப்புணர்த்தப் படுகிறது, இது மிக முக்கியமானது. உலகத்தின் ஒரே மறையை இப்படி மற்ற காஃபிர்களின் பொய்மை நூல்களோடு பெயரளவில் கூட ஒப்புமைப் படுத்துவது உண்மையான இஸ்லாம் ஆகுமா? மார்க்க அறிஞர்களால் இது எப்படி சகிக்கப் படும்?
“ஒரே குர்ஆன் – அர்த்தப்படுத்துதல்களின் வழியாக ஒவ்வொரு குழுவுக்கும் ஒவ்வொரு குர்ஆனாக உருமாறியுள்ளது. மூலப்பிரதியிலிருந்து அர்த்தத்தின் வழி உருவான இந்த துணைப்பிரதிகள் (sub-Text) பல குர்ஆன்களாகவே நடைமுறையில் நுண்ணிய அளவில் செயல்படுகின்றன” என்று ரசூல் சொல்லுகிறார். மனிதர் கீதையைப் பற்றி சொல்கிறாரா இல்லை உபநிஷதங்கள் பற்றியா என்று 2-3 முறை படித்துப் பார்க்கிறேன். குர் ஆனைப் பற்றித் தான். கண்டிப்பாக அவர் சொல்வது தான் சரி. ஆனால் இஸ்லாமிய சமய உலகிலோ, குறைந்த பட்சம் இஸ்லாமிய அறிவுஜீவி, கருத்தியலாளர்கள் வட்டங்களிலோ கூட இந்தக் கருத்துக்கு எவ்வளவு மதிப்பும், மரியாதையும் இருக்கும்? இப்படி சொல்லுபவனை ஒரே அடியில் உம்மாவுக்கு எதிரானவன், இல்லை அல்லாவுக்கே எதிரானவன் என்று சித்தரிப்பது அல்லவா அங்கே நடக்கிறது?
“நபிமுகமதுவின் வார்த்தைகளாக வெளிப்பட்ட திருக்குர்ஆன்” இன்னொரு தெளிவான கருத்து. நால் வேதங்கள் சம்பிரதாயமாக “அபௌருஷேயம்” (மனிதனால் படைக்கப் படாதவை) என்றே வழக்கில் இருந்தாலும், பெரும்பாலான இந்துக்கள், இந்து அறிஞர்கள் இவை ரிஷிகள் என்ற மாமனிதர்களின் வாய்மொழி என்றே கருதினார்கள். “நிறைமொழி மாந்தர்” என்றே குறளும் கூறும். வேதம் மனித மொழி என்ற இந்தக் கருத்து மிகவும் சகஜமாக இந்து சமுதாயத்தில் ஏற்கப்பட்டு விட்டது. வேத ஞானத்தின் மீதிருந்த மதிப்பு இதனால் கூடியதே தவிரக் குறையவில்லை. இதே போல மேற்சொன்ன கருத்து இஸ்லாமியர்களிடையில் எந்த அளவுக்கு எடுபடும்? ரசூல் சொன்ன இதே கருத்தை பல படித்த முஸ்லீம் நண்பர்களிடம் பல முறை சொல்லியிருக்கிறேன். அது அவர்களுக்குப் பெரும் கோபத்தையே ஏற்படுத்தியது. காரண அறிவுக்கு உட்பட்ட இந்தச் சிறு விஷயத்தைக் கூட ஏற்கும் நிலையில் இஸ்லாமிய உலகம் உள்ளதா என்பதே கேள்வி.
“இந்த பின்னணிகளை குறைந்த பட்சம் பு¡¢ந்து கொள்ள வேண்டும். இதுவே திருக்குர்ஆனை அணுகுவதற்கு ஒரு புதுக்கண்ணோட்டத்தை வழங்கும். மாறாக திருக்குர்ஆன் வசனங்களை எந்திர கதியில் வெறுமனே நீட்டி மூழ்கி மேற்கோள் காட்டுவதால் எந்த பலனும் இல்லை” இது யாருக்குச் சொன்னது என்றாலும் சரியானதே. இதன்படி பார்த்தால் கொய்ன்ராட் எல்ஸ்டும், நேசகுமாரும் பின்பற்றும் அணுகுமுறை சரியானதே அல்லவா? அவர்கள் குரானிய வசனங்களை விளக்கும்போது அவற்றின் வரலாற்றுப் பின்னணிகளையும், அரசியல், சமூக சூழலையும் மிக விரிவாகவே அலசுகிறார்கள். வெறும் வசனங்களை மட்டும் நீட்டி முழக்குபவர்கள் இஸ்லாமிஸ்டுகளே.
“திருக்குர்ஆனின் யதார்த்தமான அறவியல் கோட்பாடுகளை வாழ்வியல் வழிகாட்டலுக்காக தேவைக்கேற்றவாறு முன்வைத்துக் கொள்ளலாம்” என்று ரசூல் சொல்வது பண்பட்ட சிந்தனை. “முக்குணங்களுக்கு உட்பட்டவையே வேதங்கள். முக்குணங்களையும் தாண்டிச் செல்பவனாக ஆகு நீ, அர்ஜுனா!” என்ற கீதை உபதேசத்தையும், “குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்” என்ற குறளையும் இது நினைவுபடுத்துகிறது. இங்கே பலர் “அறம்” என்பதை “ஒழுக்கம்” என்பதோடு குழப்பிக்கொள்ளும் சாத்தியம் இருக்கிறது. பல ஒழுக்க நெறிகளின் அடிப்படையாக அறம் இருக்கிறது, ஆனால் ஒழுக்கம் என்பதற்கு மேலாக அறம் என்பது பல விரிவான தளங்களில் இயங்குகிறது. மகாபாரதம் இந்த தார்மீக சிக்கல்கள் பற்றிய அற்புதமான கண்ணோட்டங்களை முன்வைக்கிறது. உதாரணமாக, திரௌபதியை ஐவர் மணம் முடிப்பது அக்காலத்திய ஒழுக்கத்துக்கு முரணானது, ஆனால் அறம் சார்ந்த பாதை எது என்று அந்தக் கட்டத்தில் கருத்து மோதல்கள் முன்வைக்கப் படுகின்றன. ரசூல் சொல்லும் கருத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல திருக்குர் ஆனில் எந்த அளவுக்கு “அறம்” உள்ளது என்ற விவாதம் தேவைப்படும். குர் ஆன் பற்றிய அடிப்படையான பல விமரிசனங்களை அலசி ஆராய்வதற்கு அது துணை புரியும். இத்தகைய விவாதத்தை நேர்கொள்ளும் பக்குவம் இஸ்லாமிய கருத்தியல் உலகிற்கு இருக்கிறதா என்பதே கேள்வி.
“திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த சில கற்பிதங்களை கட்டுடைக்கும் போதுதான் அதன்மீது கட்டி எழுப்பப்பட்டிருக்கின்ற அடிப்படைவாதம், தீவிரவாதமும், தகர்க்கப்படும்” என்ற ரசூலின் கருத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன். இஸ்லாம் பற்றியும் குர்-ஆன் பற்றியும் முகமது நபி பற்றியும் உறுதியான ஆதாரங்களுடன் காட்டமான விமரிசனங்களை முன்வைப்பவர்கள் இதைத் தானே செய்து வருகிறார்கள்? துரதிர்ஷ்டவசமாக இத்தகைய விமரிசனங்கள் அனைத்தும் முஸ்லீம்கள் அல்லாதவர்களிடமிருந்தே வருகின்றன. இவை ஜிகாதிகளையும், தீவிரவாதிகளையும், இஸ்லாமிஸ்டுகளையும் இன்னும் கோபப்படுத்துவதாக சொல்லப் படுகிறது. ஏன்? இஸ்லாமுக்குள்ளிருந்தே இத்தகைய விமரிசனங்களை முன்வைக்கும் சூழல் இவ்வளவு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் இன்னும் உருவாகவில்லை என்பதையே இது காட்டுகிறதோ?
சென்ற நூற்றாண்டின் இந்து எழுச்சியின் நாயகரான சுவாமி விவேகானந்தரால் இந்து தர்மம் பற்றிய பெருமித உணர்வையும், இந்து மதத்தின் சீர்கேடுகளான சாதீயம், தன்னம்பிக்கையின்மை முதலியவற்றைக் களைய வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றுசேர உணர்த்த முடிந்ததே, அதை இந்து சமுதாயம் ஏற்றுக் கொண்டதே? பாரத நாட்டின் அங்கமாகவே வாழ்ந்து வரும் இந்திய முஸ்லீம்களிடம் ஏன் இத்தகைய நடைமுறை செல்லுபடியாவதில்லை என்பதும் ஒரு கேள்வி.
இந்தக் கேள்விகளை ரசூல் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
http://jataayu.blogspot.com
- முழுத் திமிங்கிலத்தை எழுத்தால் மறைத்த ஹரூண் யாகியா
- ‘மகா’ அலெக்ஸாண்டரின் விசித்திர வெற்றி
- பார்வதி வைத்த பரவசக் கொலு!
- மின்னிதழ்கள் அச்சிதழ்கள் அச்சுநூல்களின் பன்மைப் பெருக்கமும் ஆகத் தெளிவாக வேண்டிய வாசகரும்
- தடுமாற்றமும் தெளிவும் : சாசனம் -திரைப்பட அனுபவம்
- கடித இலக்கியம் – 27 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
- புக்கர் பரிசு 2006: கிரண் தேசாய்
- தீபாவளியும் ஆர்.எம்.கே.வியும்
- சிறப்புச் செய்திகள்-3 அல்லது குருட்டுத்தனக் கட்டுடைப்பு
- வகாபிய பார்ப்பனீயத்தின் மூட நம்பிக்கை
- திருக்குர்ஆன்: மாற்றம்- உருவில்தான் கருவிலல்ல!
- குதிரைகளின் மரணம்
- சுடர் விட்டெரிந்த இளஞ் சூரியன் ஏ.ஜே.கனகரட்னா (1934-2006) – அஞ்சலிக் கூட்டம்
- இருளும் மருளும் இஸ்லாமும் – பாபுஜி அவர்களுக்கு சில வரிகள்
- திருக்குர் ஆன் புனிதக் கற்பிதங்கள் குறித்து – சில எண்ணங்கள்
- புன்னகைக்கும் கூர்மை : திரு.நாகூர் ரூமியின் எதிர்வினை குறித்து
- நாகூர் ரூமிக்கு எனது பதில்
- ‘ரிஷி’ யின் கவிதைகள்
- என் மத வெறியும் முக மூடிகளும்
- அலெக்ஸாண்டர் இந்தியப் படையெடுப்பைப் பற்றி ….!(கடிதம்-2)
- National folklore support center
- கொலைகாரக் கொசுக்கள்: தொடரும் சுகாதார அவலம்
- அவள் வீடு
- வணக்கம் துயரமே! அத்தியாயம் – 7
- பலி
- இரவில் கனவில் வானவில் – (7)
- மடியில் நெருப்பு – 8
- என்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்?- 2
- வட கொரியாவின் அணு ஆயுத சோதனை
- உச்ச நீதிமன்றமும், இட ஒதுக்கீடும்
- சிற்றலைகள் வெகுஅரிதாகவே மணல் வெளியை தொடுகின்றன – பாரசீக வளைகுடா நாடுகளின் வரலாறு பற்றி
- உள்ளுக்குள் ஒலிக்கின்ற கோஷம் எது?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1 பாகம்:2)[முன்வாரத் தொடர்ச்சி]
- வெறுமே விதித்தல்
- பேசும் செய்தி – 4
- ஆண்களுக்குச் சமத்துவம் வேண்டும்
- தாஜ் கவிதைகள்
- பெரியபுராணம் – 108 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கீதாஞ்சலி (95) ஒருபுறம் நீக்கும்! மறுபுறம் சேர்க்கும்!
- ஊமைக்காயம்
- உலகத்தில் எத்தனை வண்ணங்கள்? (தமிழிசைப் பாடல்)
- உளி