திருக்குர்ஆன்: மாற்றம்- உருவில்தான் கருவிலல்ல!

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

இப்னு பஷீர்


இஸ்லாமின் அடிப்படை ‘இறைவன் ஒருவன்’ என்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் கிளைகள்தான், முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித் தூதர், திருக்குர்ஆன் முழுவதுமே இறைவனின் வாக்கு, மறுமை உண்டு என்பது போன்ற நம்பிக்கைகள். முஸ்லிம்கள் குர்ஆனை அணுகும்போது இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அணுகுவர்.

குலாம் அவர்களின் பார்வையில் முஸ்லிம்களின் இத்தகைய அணுகுமுறை மூடநம்பிக்கையாக தெரிகிறது. அதற்காக அவர் 1400 ஆண்டுகால அரதப் பழசான சில வாதங்களை முன்வைக்கிறார். ஆம், இக்காரணங்கள் குர்ஆன் அருளப்பட்ட ஆரம்பக் காலங்களிலேயே முன்வைக்கப்பட்டு விளக்கமளிக்கப் பட்டவைதாம். அவற்றை இப்போது பார்ப்போம்.

ஒலிவடிவில் நபிகளாருக்கு இறக்கப்பட்ட குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டபோது ஸேரு, ஸபரு, பேஷ், ஷத்து, மத்து, நுக்தா போன்ற உயிர்க்குறிகள் இணைக்கப்பட்டதால் மாற்றத்திற்குள்ளாகி விட்டது என்பது குலாம் அவர்களின் வாதம். ஆனால் உண்மை இதற்கு நேர் மாறானது. அரபியை தாய் மொழியாக கொண்டவர்கள் ஸேரு, ஸபர் போன்ற உயிர்க்குறிகள் இல்லாத குர்ஆனை அதன் அசல் ஒலிவடிவிலேயே வாசிக்கக் கூடியவர்கள். ஆனால் அரபி மொழி அறியாதவர்களுக்கு இது இயலாத காரியம். இவர்கள் உயிர்க்குறிகள் இல்லாத குர்ஆனை ஓதுகையில் அதன் அசல் ஒலிவடிவிலிருந்து மாறுபட்டு பொருளும் மாறுபட வாய்ப்பு இருக்கிறது. இதை தவிர்ப்பதற்காகத்தான் ஸேரு, ஸபர் போன்ற உயிர்க்குறிகள் இணைக்கப் பட்டன.

திருக்குர்ஆன் ஒலி வடிவத்தில் அருளப்பட்டது என்பதை யாரும் மறுக்கவில்லை. அந்த ஒலிவடிவத்தைப் பாதுகாக்கும் ஒரு எற்பாடுதான் ஒலியை எழுத்து வடிவத்துக்கு மாற்றியது. ஜிப்ரயீல் என்ற வானவர் மூலம் வஹீயாக ஒலி வடிவில் அருளப்பட்டு முஹம்மது நபியால் மனனம் செய்யப்பட்ட குர்ஆன் எழுத்து வடிவில் மரப்பலகைகளிலும் பதப்படுத்தப்பட்ட விலங்குத் தோலிலும் எழுதி வைக்கப்பட்டு, கால மாற்றங்களுக்கு ஏற்ப வெவ்வேறு நுட்பப் பரிணாமம் பெற்று CD,PDA, முதல் இன்றைய இணையம் வரையில் அனைத்து மாற்றங்களையும் ஏற்றபோதிலும் கருமாற்றமோ பொருள் மாற்றமோ ஏற்படவில்லை.
திருக்குர்ஆன் ஒலிவடிவத்தில் அருளப்பட்டது போல அன்று முதல் இன்று வரை ஒலி வடிவமாகவும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது, இன்னும் உலகம் அழியும் வரை ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்.

”அகிலங்கள் அனைத்தையும் படைத்து, பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” ஒலி வடிவத்தில் இருக்கும் இந்த வார்த்தையை எழுத்து வடிவத்திற்கு மாற்றினாலும் அதனால் கருத்து முரண்பாடு எதுவும் ஏற்பட்டு விடாது. ”குலாம் ரஸுல்” என்ற ஒலியை எழுத்தில் வடித்தாலும் ”குலாம் ரஸுல்” என்று தான பொருள் படும் என்பதை குலாம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எழுத்து வடிவம் என்பது ஒரு பாதுகாப்பு முறை என்பதோடு, மேலும் கற்றுக் கொடுக்கவும், கற்கவும் எழுத்து முறைதான் சிறந்தது என்பது குலாம்களுக்கு தெரியாமல் போனாலும் இது அறிவுடையோர் அனைவரும் அறிந்ததே. ”ஆனா” ”ஆவன்னா” என்ற பாலர் பாடம் உச்சரிப்பில் தொடங்கி, எழுத்திலும் வரைந்து காட்டி கற்றுக் கொடுப்பது மொழியறிவு கல்வி முறை; கல்வியின் இந்த அடிப்படை முறையைத்தான் குலாம்களும் கற்று வந்தார்கள். அந்த எழுத்து வடிவில் அமைந்த ஒலியைக் கொண்டுதான் இன்று கட்டுரை வழியாக நம்மோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் குலாம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எழுத்து வடிவத்தின் ஒலியைக் கொண்டே அன்று ”அன்புள்ள அம்மா, இறையருளால் இங்கே நான் நலம், அங்கு நீங்கள் நலமா?” என்று கடிதங்களில் நலம் விசாரித்துக் கொண்டோம். இதுவே நவீன யுகத்தில் ஒலியைப் பதிவு செய்யும் கருவியின் மூலம் பதிந்து ஓசைகளை செய்தியாகப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் எழுத்து வடிவமானாலும், ஒலி வடிவமானாலும் அதிலிருந்து பெறப்படும் செய்தி ஒன்றுதான்!

தமிழ் மொழியிலும் முன்னர் மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளி இல்லாமல்தான் இருந்தது. முன்னர் குஙகும என்றுதான் எழுதுவர். தாய் மொழியாளருக்கு அது குங்குமம் என்று புரியும். வெளி நாட்டு சமயப் பரப்பாளர்கள் (வீரமாமுனிவர்) போன்றோர் வந்துதான் மெய்யெழுத்துக்களுக்கு புள்ளி வைக்கும் முறையை அறிமுகம் செய்தனர். அதுபோல ‘எ’னாவுக்குப் பின் வரும் ‘ஏ’யன்னா வரிவடிவம் வீரமாமுனிவர் அறிமுகப் படுத்தியதே. இதுபோன்ற சிறு திருத்தங்களால் தமிழ் மொழி மாற்றமடைந்து விட்டது எனக் கருத முடியாது.

ஒலிவடிவத்தில் அருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவத்தில் கொண்டு வரப்பட்டாலும், ஓசை வடிவத்திலும் இன்னும் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. குர்ஆனின் இவ்விரு வடிவங்களுக்குமிடையில் எந்த வித்தியாசங்களும் இல்லை என்பதுதான் உண்மை. ஸபர், ஸேர், பேஷ் என உயிர் குறிகள் இணைக்கப்படாத திருக்குர்ஆன் முதல் மூலப்பிரதிகள் இரண்டு, துருக்கி நாட்டின் ”இஸ்தான்புல்” நகரத்தின் அருங்காட்சியகத்திலும், மற்றொன்று ரஷியாவின் ”தாஷ்கண்ட்” நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது குலாம்களுக்கான ஒரு தகவல்!

ஆக, உயிர்க்குறிகள் இணைக்கப் பட்டதால் குர்ஆன் மாற்றத்திற்குள்ளாகவில்லை. மாறாக, இவை இணைக்கப் பட்டதால்தான் மாறுதலடையும் சாத்தியம் தவிர்க்கப் பட்டது.

திருக்குர்ஆன் உருவான காலச்சூழல் குறித்து குலாம் என்ன சொல்ல வருகிறார் என்பது சரியாக புரியவில்லை. திருக்குறள் குர்ஆனை விட காலத்தால் முந்தியது என்பதால், குறளின் தாக்கம் குர்ஆனில் இருக்கிறது என்கிறாரா? திருக்குறளைப் பற்றி அன்றைய அரபுலகம் அறிந்திருந்தது என்றால் அதற்கான ஆதாரங்களை குலாம் தெரிவிப்பாரா?

முதல் பத்தியில் சொன்னது போல, திருக்குர்ஆன் முழுவதுமே இறைவனின் வாக்கு என்பதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கை. ‘நபிகளாரின் மனத்தூண்டல் மூலமாக குர்ஆன் வெளிப்பட்டது’ என்ற வாதம் அந்தக்கால காஃபிர்களிலிருந்து இந்தக்கால கொய்ன்ராட் எல்ஸ்ட் வரை பலரால் முன்வைக்கப்பட்டு பொய்ப்பிக்கப்பட்ட ஒன்று. குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றைப் பற்றி சிறிதளவு கூட அறிந்திராதவர்கள்தான் ‘திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகளாகும், ஹதீஸ்கள் நபிமுகமது பற்றிய பிற அறிஞர்களின் வாய்மொழி வரலாற்று தொகுப்பாகும்’ என்ற தவறான கருத்தைக் கொண்டிருக்க முடியும். குர்ஆன், ஹதீஸ் தொகுப்புகளைப் பற்றி கொஞ்சமேனும் அறிந்திருப்பவர்கள் இக்கூற்று உண்மையல்ல என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

‘திருக்குர்ஆன் நபிமுகமதுவின் வார்த்தைகள்தான் என்பதை திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பாத்திகாசூரா சுட்டிக்காட்டுகிறது’ என்கிறார் குலாம். பாவம், அவர் இன்னும் அல்-பாத்திஹா எனும் முதல் அத்தியாயத்தைத் தாண்டி குர்ஆனுக்குள் புகவில்லை போலிருக்கிறது.

திருக்குர்ஆனுக்கு விளக்க உரை எழுதிய மார்க்க அறிஞர்கள் பாத்திஹா சூராவிற்கு இவ்வாறு விளக்கமளிக்கிறனர், “முதல் வசனத்தில் ‘பேரண்டம் முழுவதையும் படைத்துப் பரிபாலிப்பவனாகிய எனக்கே எல்லாப் புகழும்’ என்று தன்னிலை விதியில் சொல்லாமல் படர்க்கை முறையில் கூறப்பட்டிருப்பது ஏன்’ என்று ஒரு கேள்வி எழலாம். பதில் இதுதான்: அல்லாஹ் அடிப்படை நெறி ஒன்றை நமக்குக் கற்றுத் தருகிறான். ‘என்னுடைய அடியார்களே! நான் வழங்கும் அருட் கொடைகளுக்காகவும், உதவிகளுக்காகவும் எனக்கு நீங்கள் நன்றி செலுத்த நாடினால் – எனது மகத்துவத்தையும் மாண்பையும் போற்றிப் புகழ வேண்டுமானால் – அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறுங்கள்! ‘ இதைத் தொடர்ந்து அடியார்கள் செய்ய வேண்டிய பிரார்த்தனையையும் அவன் கற்றுத் தருகிறான். இவ்வாறு நாம் கேட்கும் பிரார்த்தனைக்கு பதிலாகவே குர்ஆன் முழுவதும் அமைந்துள்ளது. ஆம், நேர்வழி காட்டும்படி நாம் வேண்டுகிறோம். அதற்கு பதிலில் இந்த குர்ஆன் முழுவதையும் நம் முன்னால் சமர்ப்பித்து விடுகிறான் இறைவன்’. (ஆதாரம்: திருக்குர்ஆன் விளக்க உரை IFT வெளியீடு)

முஹம்மது (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் எதிர்கொண்ட சிக்கலான நெருக்கடியான பிரச்னைகளுக்கு தீர்வாக குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பதால் குர்ஆன் நபிகளாரின் வார்த்தைகளென உறுதிப்பட கூறலாமென்ற கருத்து விவாதிக்கப் படுவதாக குலாம் தெரிவிக்கிறார். இதுவும் அறியாதவர்களின் கூற்றுதான். குர்ஆனில் நபிகளாரை கடிந்து கொள்வது போல உள்ள வசனங்களுக்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறார் குலாம்?

திருக்குர்ஆனின் சில வசனங்கள் கவிதைகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன என்பது குலாமின் மற்றொரு வாதம். இதற்கு குர்ஆனே பதிலளிக்கிறது, “இன்னும் (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்” (2:23 மற்றும் 10:38, 11:13) என்ற குர்ஆனின் இந்த சவால் இன்னும் எந்தக் கவிஞராலும் முறியடிக்கப் படவில்லை.

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்தில் இவ்வகை வடிவத்தில் திருக்குர்ஆன் தொகுக்கப் படவில்லை என்கிறார் குலாம். ஆனால் வரலாறு வேறு விதமாக சொல்கிறது.

“திருக்குர்ஆனின் தொகுப்பு குறித்து மேலும் ஒரு விஷயத்தை வாசகர்கள் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, அதனுடைய இந்த அமைப்பு பிற்கால மக்களால் ஏற்படுத்தப்பட்டதல்ல; மாறாக இறைவனின் வழிகாட்டுதலுக்கேற்ப நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த அமைப்பில் தொகுக்கச் செய்தார்கள்.

இதற்காக கடைப்பிடிக்கப்பட்ட முறையாவது: குர்ஆனில் ஓர் அத்தியாயம் அருளப்பட்டால், நபி பெருமானார் (ஸல்) அவர்கள் உடனடியாக ‘காதிப்’ (எழுதுபவர்) ஒருவரை அழைத்து, அதனை முழுக்க முழுக்கச் சரியாக எழுதும்படிச் செய்து அதை ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்துக்கு முந்தியும், ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்துக்கு பிந்தியும் இடம் பெறச் செய்யுமாறு கூறுவார்கள். இது போலவே முழு அத்தியாயமும் அருளப்படாமல், ஒரு பகுதியே அருளப்பட்டால் குறிப்பிட்ட எந்த அத்தியாயத்தில் எந்த இடத்தில் அது அமைய வேண்டும் என்பதையும் கூறி விடுவார்கள். பின்னர், அதே வரிசைக் கிரமத்திலேயே பெருமானார் (ஸல்) அவர்கள் தொழுகையிலும், இதர நேரங்களிலும் குர்ஆனை ஓதி வந்தார்கள். மேலும் அதே வரிசைக் கிரமப்படியே பெருமானார் (ஸல்) அவர்களின் தோழர்களும் அதனை மனனம் செய்து வந்தனர்.

எனவே, குர்ஆனின் இறுதிப்பகுதி என்றைக்கு அருளப்பட்டு நிறைவு பெற்றதோ அக்கணமே குர்ஆனுடைய (இன்றைய) அமைப்பின் தொகுப்புப் பணியும் நிறைவு பெற்று விட்டது என்பது ஆதாரப்பூர்வமான வரலாற்று உண்மையாகும். ஆகவேதான், குர்ஆனை அருளிய இறைவனே அதன் தொகுப்பாளனாவான்; மேலும் எந்த நபியவர்களின் புனித உள்ளத்தில் அது இறக்கி வைக்கப்பட்டதோ அவர்களுடைய புனிதக் கரங்களாலேயே அதைத் தொகுக்கவும் செய்தான். அதில் எவரும் தலையிட உரிமையும் தகுதியும் பெற்றிருக்கவில்லை.” (ஆதாரம்: திருக்குர்ஆன் விளக்க உரை IFT வெளியீடு)

குலாம் இறுதியாக தான் இதுவரை எடுத்துவைத்த அபத்தமான வாதங்களின் பிண்ணனியில் ஒரு புதிய கண்ணோட்டத்தில் குர்ஆனை அணுக வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறார். இதற்குப் பதிலாக, திருக்குர்ஆனை அணுகுவதற்கு சரியான அணுகுமுறையை மார்க்க அறிஞர்கள் விளக்குகின்றனர்:

“இந்தத் திருமறையை உண்மையிலேயே நன்கறிந்து கொள்ள வேண்டுமெனும் ஆர்வமுள்ளவர்கள் – அதன் மீது அவர்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் சரி; இல்லாவிட்டாலும் சரி – முதன் முதலில் ஏற்கனவே தம் உள்ளங்களில் நிலைப் பெற்றுவிட்ட இந்நூலைப் பற்றிய கருத்துக்களையும் எண்ணங்களையும் விருப்பு வெறுப்புகளையும் இயன்ற அளவு அகற்றி விட வேண்டும்; பிறகு இதை புரிந்து கொள்ள வேண்டுமெனும் ஒரே நோக்கத்தோடு, திறந்த மனத்தோடு இதனை படிக்கத் துவங்க வேண்டும். அவ்வாறில்லாமல் இந்நூலைப் பற்றி ஏற்கனவே சில கருத்துக்களை உள்ளத்தில் புகுத்திக் கொண்டு இதனை படிக்க முற்படுவோர் குர்ஆனின் வரிகளுக்கிடையே தம் கருத்துக்களையே படித்துக் கொண்டு போகிறார்களேயொழிய குர்ஆனின் கருத்துக்களை அவர்கள் அறிந்து கொள்வதில்லை! பொதுவாக எந்த ஒரு நூலையும் இவ்வாறு படிப்பது சரியான வழியாகாது. அதிலும் குறிப்பாக திருக்குர்ஆனை பொறுத்த மட்டில் இம்முறை சிறிதும் பயன் தராது. இவ்வாறு படிப்பவருக்கு குர்ஆன் தன் கருத்துக்களை புரிந்து கொள்ள வாய்ப்பளிப்பதேயில்லை.”

குலாம் அவர்கள் திருக்குர்ஆனை ஒரு முறையேனும் இத்தகைய முறையான கண்ணோட்டத்தில் அணுகி அதன் கருத்துக்களை புரிந்து கொள்ள முயற்சித்தால், அவருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கத்தை அந்தக் குர்ஆனிலிருந்தே பெற வாய்ப்பு இருக்கிறது.


http://ibnubasheer.blogsome.com

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்