திருக்குர்ஆனை முதன் முதலில் தமிழில் தந்த சூபிஞானி பீர்முகமது வலியுல்லா

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

ஹெச்.ஜி.ரசூல்



அரபு, தமிழ் இருமொழிப் புலமை மிக்க அறிஞர்கள் தற்காலத்தில் அதிகரித்து வருகின்றனர். மதரஸாக்கள் என்னும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு ஊடகங்கள் மிகுந்த வலிமையோடு செயல்படுவதே இதற்கு காரணம். எனவே அரபு மொழியிலிருந்து தமிழுக்கு திருக்குர்ஆனை. ஹதீஸ்களை, திருக்குர்ஆன் விளக்க உரைகளான தப்žர்களை மொழிபெயர்த்தும் வருகின்றனர். மேலும் வணிகப் பொருளாக இவற்றை உற்பத்தி செய்து தினுசுக்கு தினுசாய் சந்தைப்படுத்தி லாபம் ஈட்டுவதையும் கண்கூடாகக் காண்கிறோம்.

ஆனால் இத்தகையதான வணிக நோக்கு எதுவுமின்றி தொடர்பு ஊடகங்கள் எதுவும் இல்லாத காலத்தில் தமிழில் முதல்முதலாக திருக்குர்ஆனின் சூரத்துல் பாத்திகாவை மொழிபெயர்த்த பெருமை சூபிஞானி பீர்முகமதுவையே சேரும். இன்னும் கலிமா மற்றும் திருக்குர்ஆனின் பல முக்கிய வசனங்களையும், ஹதீசுகளின் சாராம்சத்தையும் பிக்ஹு சட்டங்களின் நுணுக்கங்களையும் அரபு கலாச்சாரங்களில் தென்படாத இந்திய, தமிழக கலாச்சார அடையாளங்களையும் பதினொண்ணாயிரம் பாடல்கள் வழியாக படைத்துத் தந்த பீர்முகமது வலியுல்லாவின் காலம் கி.பி. 1570-1670க்கு இடைப்பட்டதாகும். தற்போது இப்பாடல்களில் 4982 மட்டுமே அச்சுக்கு பிரதிகளாக கிடைத்துள்ளன.

திருக்குர்ஆன் வசனங்கள் நபிமுகமது வழியாக வெளிப்பட்ட காலம் கி.பி. 610 முதல் 632 வரையாகும். முதல் வசனம் வெளிப்பட்டு 40 ஆண்டுகள் கழித்தும் நபி முகமது மரணத்திற்கு பிறகு இருபது ஆண்டுகள் முடிந்த பிறகு கலிபா உதுமானின் காலத்தில் திருக்குர்ஆன் இறுதி செய்யப்பட்டு ஒற்றைப்படுத்தப்பட்டது.

திருக்குர்ஆனை தர்ஜுமா செய்தலை மொழிபெயர்ப்பு செய்வதாகவும் தப்žர் எழுதுதலை விளக்கவுரை எழுதுவதாகவும் புரிந்து கொள்ளலாம்.

அரபு மொழியில் இருந்து திருக்குர்ஆன் முதன்முதலில் பார்சியிலேயே மொழிமாற்றம் செய்யப்பட்டது. கி.பி. 700க்கு முன்பதாக சல்மான் அல் பார்சி சூரத்துல் பாத்திஹாவை மொழிமாற்றம் செய்துள்ளார்.

கி.பி.1143ல் மேற்கத்திய மொழிகளில் ஒன்றான லத்தீன் மொழியில் ராபர்ட் ஆப் கெட்டன் திருக்குர்ஆனை மொழிமாற்றம் செய்தார். 1543ல் தியோடர் பிலியாண்டர் லத்தீன் மொழியில் திரும்பவும் பதிப்பித்தார். கி.பி. 1647ல் பிரெஞ்சுமொழியில் அன்டெர் டியூ ரேயர் மொழிபெயர்த்தார்.

ஆங்கில மொழியில் கி.பி. 1649ல் அலெக்ஸாண்டர் ரோஸ் 1734ல் ஜார்ஜ் சேல், 1937ல் ரிச்சர்டு பெல், 1955ல் ஆர்தர் ஜான் அர்பெர்ரி ஆகியோர் திருக்குர்ஆனை மொழிமாற்றம் செய்தனர். இந்த அறிஞர்கள் அனைவரும் இஸ்லாம் அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் அறிஞர்கள் என்ற வகையில் 1917ல் அகமதியா பிரிவைச் சார்ந்த மௌலானா முகமது அலி, 1937ல் சுன்னிப் பிரிவைச் சார்ந்த அப்துல்லா யூசுப் அலி, 1936ல் மர்மதுக் பிக்தாலும், திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர். இதற்கு பிறகான காலங்களில் மிர் அகமது அலி (ஷ’யா பிரிவு) முகமது முஷ’ன்கான் (சலபி பிரிவு) ஷாவலியுல்லா (சூபி பிரிவு) மற்றும் ரஷாத்கலிபா (அஹ்லெகுர்ஆன்) வரையிலும் ஆங்கில மொழியாக்கங்களை தொடர்ந்து செய்துள்ளனர்.

1949ம் ஆண்டில் ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி திருக்குர்ஆனை முழுமையாக தமிழில் தந்தார்.

2. பீர்முகமது வலியுல்லா திருக்குர்ஆனை ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் எவ்வாறு படைத்துள்ளார்கள் என்பதை இங்கு கவனப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

மொழிபெயர்ப்பு என்பது மூலமொழியில் உள்ள பாடத்தை சொல், இலக்கணம், நடை, பேச்சுத் தன்மை தொடர் நிலைகளில் ஆய்வு செய்து மறு வடிவமைப்பு செய்து இன்னொரு மொழிக்கு மாற்றித் தரும் படைப்பாக்க முறையாகும். இது இரு வகைகப்பட்டது. முதல் வகை உருவ ஒத்திசைவு இணை காணல் முறையாகும். இது வரிக்கு வரி, வாக்கியத்திற்கு வாக்கியம் அப்படியே மூலமொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்வதாகும்.
இரண்டாவது வகை உள்ளடக்க ஒத்திசைவு இணை காணல் முறை என்பதாகும். இது மூலமொழியின் அதே உள்ளடக்கத்தை சாரமாக உள்வாங்கி மாறுபட்ட சொல், தொடர்களால் இன்னொரு மொழியில் மறுவடிவமைப்பு செய்வதாகும்.

பீர்முகம்மது வலியுல்லாவின் மொழிபெயர்ப்பு முறையியல் உள்ளடக்க ஒத்திசைவு இணைகாணல் முறை சார்ந்ததாகும்.

திருக்குர்ஆனின் பாத்திஹா சூரா
1-3 அல்ஹம்து லில்லாகி ரப்பில் ஆலமீன், அர்ரகுமானிற்றகீம், மாலிகி யௌத்தீன்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) மாபெரும் கருணையாளனாகவும் தனிப்பெரும்
கிருபையாளனாகவும், இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதியாகவும் இருக்கிறான்.

4 இயாக்க நஹ்புது வ இய்யாக்க நஸ்தகீன்
உனக்கே நாங்கள் அடி பணிகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்.

5-7 யக்தின சிறாத்தில் முஸ்தகீன், சிறி‘த்தில் அதீன அன்அம்த அலைகிம்
கைறில் மஹ்ளுபி அலைகிம் வலள்ளாலீன்
எங்களுக்கு நீ நேரான வழியை காண்பித்தருள்வாயாக. (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி
உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத நெறி தவறிப் போகாதவர்களின் வழி.

பீர்முகம்மது வலியுல்லாவின் ஞானப்புகழ்ச்சியில் இடம் பெற்ற
துஆஇரப்பு என்னும் இறுதிப் பகுதி:
அல்ஹம்து லில்லாகி யனைத்தும் புகழ்வதைக் கபூல் செய்
எல்லா திக்றுள்ளுறையும் ஏகனே – சொல்லந்த
மேலும் றப்பில் லால மீனென்னிறைவநீ
ஆலமனைத்தும் படைத்தாள்வோனே – கோலமுடன்

அர்ரஹ்மானென்றுலகில் அனைவர்க்கும் ஷபா அத்திலொரு
குறைபகராக் கிருபை தருங்கோமானே – இறைவனுன்னை
நின்று தெரிசிப்பவர்க்கு நிர்றகீமெனும் பழைய
நன்றி கிருபை தரு நல்லோனே – யென்று முயர்

ஏவலுறு மாலிக்கி யௌமித்தீனென் றடியார்க்
காவலுறுங்கூலி கொடுத்தாள்பவனே – காவல்தரும்
நிய்யாகு மென்றுலகில் நின் சரணந் தொழுமவரோ
ஈய்யாக்க நகுபுது வென்றேத்திறையே – வய்யாக்க

நஸ்தகீனென்று மிக நல்லுதவி தேடுமவர்
கஸ்தி போக்கிப் பதவி காண்போனே – விஸ்தி நலம்
எட்டணுகும் பெரியோர்க் கிஹ்தி நஸ்ஸ’றாத்தல்முஸ்தகீமென்
றொட்டும் கடும் பாலத்துதவும் பொருளே – பட்டுடையோர்க்

இரங்கி சிறாத் தல்லதீனா வென்றருளுமெய்ஞ்ஞானத்
துரங்களறிந்த தீடேற்றுந் துய்யோனே – வரங்கள் தரும்
அன்அம்த வென்றொலி மார்க்கமாக வருநிஃமத்திலொன்
றுன்னந்த மீந்தருளு முத்தமனே – அன் அம்த

அலைகி மெனவே அவுலியாக்களோடு மெங்களை நீ
சலுகையுடன் கூட்டியருள் தருவோனே – பலவிதமாய்
சதிகளைச் யாயஞ் செய்வோர் தம்முடன் கூட்டாமலே
கைறில் மகுலூபி யென்றுங் காப்பவனே – தெரியுநல

வாமவுலியாக்களுடனடி யேனையுஞ்சேர்த்து
நேம நபியோ டெமதுள் நிற்பவனே – யோமதனுள்
ஒளிகள் தெரிசித்துணரா ஓலல்லா அல்லீனென்றுன்
வழிபிழைத்தாரோடு வருத்தாதவனே – தெளிவுறுநல்

மூமின்களையும் பல்முஸ்லிமோ டெங்களையும்
ஆமினென்ற வழிதனிலாக்கு அல்லாவே – ஹாமீமதில்
பொங்கு நிகு மத்திரணப் பொலிவும் றகுமத்துமுவந்
தெங்கு முயர் பறக்கத் தீவோனே – யங்கையொடு

எரிகொடு சுட்டே புகைத்தோர்க் கிடறு வருத்தா தெமக்கு
மரிய நல வருளாமீ னல்லாவே – கதி பலவும்
விக்காமல் நல்லவர்க்கு மேலவர்க்கு மெற்குந் தொண்ட
னுக்கணுகா தருளாமீனல்லாவே – புக்காமல்

பாசத்துறும் பசுவும் பதியுந் தெரிந்தாரா வெமக்கு
ஆஷ’க் கருளாமீனல்லாவே – பேசக்கென்றும்
வராமற் காவல் செய்துன் வடிவு தெரிசித்திட நல்
ஆதார மருளா மீனல்லாவே – தீதாறை

மூமினல்ல பேர் முஸ்லிமோ டெமக்கு மருள்
ஆமீனல்லா கும்ம ஆமீனல்லாவே – பூமிதனில்
தந்தை தாயொஸ்தாது தருமவுனக் குருவோடெமக்
கெந்தநல முந் தருந் றப்பிலாலமீன் – உந்தி தரும்

மறுஹபா வுன்னை யுணரா வன்பிழை போக்கெமக்குப்
பிறஹ்மத் திக்கயா அறுஹமர் ராஹ’மீன்

(ஞானப்புகழ்ச்சி 664-686 பாடல்கள்)

இந்த அடிப்படையில் திருக்குர்ஆனின் சூரத்துல் பாத்திஹாவை முதன்முதலில் தமிழில் கவிதை வடிவில் உணர்ச்சிப் பெருக்கோடு மொழி பெயர்த்த பெருமை சூபி பீர்முகமது வலியுல்லாவைவே சாரும். திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் தோற்றம் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபிஞானி பீர்முகமது வலியுல்லாவின் அடக்கவிடம் அமைந்துள்ளது.


Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்