திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன் கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில.

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

வெங்கட் சாமிநாதன்


நடந்த சரித்திரத்திற்கு மிக அருகில் இருப்பதால் அது பற்றி பக்ஷபாதம் இல்லாது நடு நிலையில் நின்று ஆராய்வதும் எழுதுவதும் கருத்து சொல்வதும் இயலாது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அது நேர்மையான, தள்ளி நிற்கும் பார்வையாளர்கள் கூற்று. ஒப்புக்கொள்ளவேண்டிய கருத்து தான். ஆனால் தமிழ் நாட்டின் விவகாரமே வேறு. அதிலும் கடந்த ஐம்பது அறுபது வருட கால சமூக சித்திரம் மிகவும் மாறிய ஒன்று. மிகவும் மாறியது என்றால் தலைகீழாக மாறியது என்று கொள்ள வேண்டும். சுமார் எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன் கருணாநிதியின் 77வது பிறந்த நாளை ஒட்டி, அவர் பற்றி எழுத என்னைக் கேட்டார்கள். அக்கட்டுரையின் கடைசியில் “இன்றைய தமிழ் நாட்டின் சரித்திரத்தை உருவாக்கியவர்கள் என்று ராஜாஜி, ஈ.வே.ரா. காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். கருணாநிதி ஆகிய அறுவரைச் சொல்லவேண்டும். இந்த ஆறு சரித்திர நாயகர்களைப் பற்றிய நிர்தாக்ஷண்யமற்ற சரித்திரம் எழுதப்படவேண்டும். அது கட்சி சார்ந்தவர்களாலோ, அல்லது அதற்கு எதிர்முனையில் இருப்பவர்களாலோ எழுதப்படக் கூடாது.” என்று எழுதியிருந்தேன். தமிழில் இதுகாறும் நேர்மையான, உண்மையான வரலாறுகள் எழுதப்பட வில்லை. எழுதப்படும் என்ற சாத்தியக் கூறுகள் கூட இப்போது காணப்படவில்லை.

இரண்டு நேர் எதிர்கோடிகளை சுட்டிக் காட்டினால் போதும். முதலில் சொல்லப்பட்ட ராஜாஜி, இது பற்றிக் கேட்டபோது தன் சுயசரிதையை எழுதுவதில் தனக்கு விருப்பமில்லை என்று மறுபேச்சுக்கு இடமில்லாமல் கூறியவர்.கடைசியாக வரும், நம்மிடையே ஜீவித்திருக்கும் இன்னமும் சரித்திர நாயகனாகவே வாழும் கருணாநிதியோ, தானே தன் நாயக வரலாற்றை தன்முனைப்போடேயே நிறையவே எழுதி வருகிறார். வரலாறு காணாத எழுத்துப் பிரவாஹம் அது என்று அவருக்கு மிகவும் பிடித்த வர்ணணையிலேயே தான் அதைக் குறிப்பிட வேண்டும். . காலம் சொல்லிக்கொள்ளட்டும் என்று ஒருவர் நிராகரிக்க, மற்றவர் காலம் என்ன சொல்லவேண்டும் என்னும் தன் நிர்ணயத்தை எழுதி வருகிறார்.

தமிழ் சமூகம் இரண்டு எதிர் எதிர் முனைகளில் நின்று ஒரு முனையைச் சேர்ந்தவர் மற்றவரைச் சாடுவதும் அல்லது ஸ்தோத்திர மாலை பாடுவதுமாகப் பிரிந்து கிடக்கிறது. ஈ.வே.ரா என்றோ, கருணாநிதி என்றோ அவரவர் பெயரிலேயே குறிப்பிடுவது பண்பாடற்ற செயலாக தமிழர்களுக்கு தெரியப் படுத்தப் பட்டுள்ளது. மனிதர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பட்டங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. பட்டங்களைத் தாண்டி மனிதர் அறியப்படுவது தடைப்பட்டுள்ள சூழலில் சரித்திரமும் உண்மையும் செலாவணியற்றுப் போயுள்ளன. யாரும் எப்படி அறியப்படவேண்டும் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது.

1949-ல் தமிழக அரசியலில் எரிமலையின் கொந்தளிப்பு போன்ற ஒரு நிகழ்வு. ஒரே குடைக்கீழ், குருவும் சிஷ்யனும் போல, தந்தையும் மகனும் போல நாம் கண்ட பகுத்தறிப் பகலவன் என்றும் தந்தை பெரியார் என்றும் அறியப்பட்ட ஈ.வே.ராவும், பேரறிஞர் என்று அறியப்பட்ட அண்ணாதுரையும் திடீரெனப் பிரிந்து எதிர் எதிர் முனைகளாயினர்.

இது எப்படி நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது? என்பது நமக்குச் சொல்லப்பட்டது. நமக்குச் சொல்லப்படுவது தான் நிகழ்ந்ததா என்பது தான் சுவாரஸ்யமான விஷயம். ஆனால் தமிழ் சமூகத்தில் தமிழக அரசியலில், சொல்லப்படுவது சரித்திரமாக எழுதப்பட்டாலும், அது உண்மையா என்பதை அறிவதற்கான சுதந்திர சூழல், இல்லாமல் போய்விட்டது

ஒரு நாள் திடீரென்று பெரியார் திருவண்ணாமலைக்கு வந்த அன்றைய கவர்னர் ஜெனரலும் தன் நெடுங்கால அரசியல் எதிரியும், அதற்கும் நீண்ட நெடுங்காலமாக தன் சொந்த நண்பர் என்றும் சொல்லிக்கொள்ளும் ராஜாஜியை ரகசியமாக, திருவண்ணாமலைக்கே சென்று சந்தித்துப் பேச, அண்ணா அது பற்றி பொது மேடையில் கேட்க, “அது என் சொந்த விஷயம்” என்று சொல்லி பதிலைத் தவிர்த்துவிடுகிறார். 72 வயதாகும் பெரியார் தன் உதவிக்காக சில வருஷங்களாகத் தன்னுடன் இருந்து வரும் 26 வயது மணி அம்மையை பதிவுத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து அது நடந்தும் விடுகிறது. வாழ்நாள் முழுதும் பெண்ணுரிமை பற்றியும் திருமணம் என்ற சடங்கை எதிர்த்தும் பிரசாரம் செய்த பெரியார் இப்போது தன் முதுமையில் இளம் பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டது கழகத்தில் பெரும் எதிர்ப்பைக் கிளப்புகிறது. அதற்கு பெரியார் சமாதானம் சொல்கிறார். “எனக்கோ வயதாகிறது. முன்னைப் போல என்னால் கழக வேலைகளைக் கவனிக்கமுடியவில்லை. எனக்குப் பின் பொறுப்பேற்க ஒரு வாரிசை ஏற்படுத்தி என் பொறுப்புக்களை கவனிக்கவே இந்த ஏற்பாடு. சில வருஷங்களாக தன்னுடன் பழகி தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான இயக்க நலனில் உண்மையான பற்றும் கவலையும் கொண்ட மணியம்மையை வாரிசாக்கிக்கொண்டு இயக்க நலனுக்கும் பொருள் பாது காப்புக்குமான ஒரு டிரஸ்ட் ஏற்பாடு இது,” என்று விளக்கம் தருகிறார்.

ஜூலை 9, 1949 அன்று ஈ.வே.ரா.வுக்கும் மணியம்மைக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. இதன் எதிர்வினையாக, திராவிடர் கழகத்திலிருந்து அனேக தலைவர்கள் அண்ணாதுரையின் தலைமையில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குகின்றனர். இது நாள் வரை அவருடைய தலைமையில் கழகத்தை வளர்த்த அவருக்கு அடுத்த படியில் இருந்த தலைவர்கள் யாரையும் ஈ.வே.ரா நம்பவில்லை. சில வருஷங்கள் முன்னதாக வந்து தலைவருக்கு அன்றாட காரியங்களில் உதவியாக இருக்க வந்த ஒரு இளம் வயதுப் பெண் தான், அவரது நம்பிக்கக்குப் பாத்திரமானவர் என்றும், இயக்கத்திற்கும் கழக சொத்துக்களுக்கும் வாரிசாக இருக்கத் தகுதியானவர் என்றும் தலைவர் நம்புகிறார். அதை வெளிப்பட அறிக்கையாகவும் உலகம் அறியத் தருகிறார். தலைவரின் இத்தகைய நடவடிக்கை, நம்பிக்கையின்மை, கழகத்தில் பெரும்பாலோரை கழகத்திலிருந்து வெளியேற வைத்துவிடுகிறது. அவ்வருட செப்டம்பர் மாதம் 18-ம் தேதி ராபின்ஸன் பார்க்கில் கூடிய ஒரு கூட்டத்தில் அண்ணாவின் தலைமையில் வெளியேறியவர்கள் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குகிறார்கள், திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில். அக்கூட்டத்தில் பெரியாரின் அண்ணன் மகன், ஈ.வி.கே.எஸ் சம்பத், மதியழகன், இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன், என்.வி.நடராசன், கே.கே நீலமேகம் அன்பழகன் சி.பி.சிற்றரசு போன்ற முன்னனணி தலைவர்கள் இருந்தனர்.

ஆனால், திமுக தொடங்கப்பட்ட அன்றைய கூட்டத்தில், அக்கட்சியில் இன்று பெரியாருக்கும் அண்ணாவுக்கும் அடுத்த மாபெரும் பெரிய தலைவராகக் கருதப்படும் கருணாநிதியின் பெயர் இருக்கவில்லை. அவர் இக்காலகட்டத்தில் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் சினிமா கதைவசனம் எழுதுபவராக வேலை பார்த்து வந்தார் மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில். வசனம் கருணாநிதி என்ற பெயரையும் கூட திரையில் காணமுடியாத ஆரம்ப நாட்கள் அவை. தன் குடும்பத்தோடு அங்கு சேலம் இடம் பெயர்ந்து தங்கியிருந்தார் அவர். அவருடன் இருந்தது கண்ணதாசன். அவர்கள் இருவரும் இக்கூட்டத்திற்காக சேலத்திலிருந்து வந்து விருதுநகர் நாடார் லாட்ஜில் தங்கியதாகவும், அண்ணா ‘உன்னை பிரசாரக் குழுவில் சேர்த்திருக்கிறேன்” என்று சொன்னதாகவும், மறு நாள் காலை தானும் கண்ணதாசனும் சேலம் திரும்பிவிட்டதாகவும் கருணாநிதி நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருக்கிறார். அக்காலங்களில் அவர் அவ்வளவாக பிரபலமாகியிருக்கவில்லை. நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சம்பத் போன்றோர் வரிசையில் அவரும் ஒரு முன்னணித் தலைவராக இருக்கவில்லை. இந்த வரிசையில் எங்கோ ஒரு கோடியில் இருந்தவர், அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அரசு கட்சி இரண்டையுமே தன் தலைமைக்குக் கீழ் கொணர்ந்து இப்போது நாற்பது வருஷங்களா, எவ்வித எதிர்ப்பும் இன்றி, அத்தலைமையில் நீடிக்கிறார் என்றால், தன் முன் இருந்த அத்தனை பேரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தன்னை முன்னால் நிறுத்திக்கொண்டது அவரது அசாத்திய சாமர்த்தியத்துக்கும், திட்டமிட்டுச் செயல்படும் திறமைக்கும், கையாண்ட யுக்திகள் நிறைந்த மூளைக்குமான அடையாளங்கள்.

திராவிடர் கழகத்தை விட்டு நீங்கி திராவிட முன்னேற்ற கழகம் என்று புதுக் கட்சி தொடங்கிய போது, பெரியாரைத் தவிர, பேச்சாற்றலும், செயல் ஊக்கமும் கொண்டவர் என வேறு யாரும் பெரியாரிடம் இல்லை. திராவிட கழகம் பெரும் மக்கள் கூட்டத்தை ஈர்த்ததும், கல்லூரிகளிலும் பல்கலைகழகங்களிலும் திராவிட கழகம் பரவி மாணவர்களையும் இளம் தலைமுறையினரையும் கவரக் காரணமாக இருந்தது அண்ணாதான். ‘பாப்பான் ஒழிக’ என்ற ஒற்றைக் கோஷத்துடன் பாமர அளவிலேயே அர்த்தப்படுத்தப் பட்டிருந்த திராவிட கழகத்தை பிரிட்டீஷ் அரசாங்கத்தின் அடிவருடிகளின் கட்சி என்று பெயர் பெற்றிருந்த நீதிக்கட்சியிலிருந்து விடுவித்து, படித்தோர் மத்தியிலும் ‘பாப்பான் ஒழிக’ கோஷத்துக்கு ஒரு வரலாற்று, தத்துவார்த்த பின்னணிகளும் கூட என்ற தோற்றத்தையும் கொடுத்தது அண்ணாதான்.அதாவது, பெரியாரின் வெற்றுக் கோஷத்துக்கு தமிழக அரசியலில் விலை போகக்கூடிய, மக்களைக் கவரும் packaging செய்து கொடுத்தது அண்ணா. வெகு சீக்கிரத்திலே திராவிட கழகத்தை வெகுஜனங்களிடையே ஒரு இயக்கம் என்ற தோற்றத்தையும் தந்தது அவர்தான். இப்போது அத்தனை சாதக அம்சங்களும் அண்ணாவோடு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே போய்ச்சேரும். அத்தோடு பெரியாரது கூடாரமே காலியானது. கோபம் வராதா பெரியாருக்கு?

கோபம் வந்தால் ஈ.வே.ராவிடமிருந்து எப்படிப்பட்ட வார்த்தைகள் வந்து விழும் என்பது சொல்ல முடியாது. ஆத்திரத்தில் பேசுகிறார் என்று சமாதானம் கொள்ளலாமே தவிர பகுத்தறிவின், நியாயத்தின் பாற்பட்டதாக, இராது. புதிய கட்சி தொடங்கியவர்களையெல்லாம் ‘கண்ணீர்த்துளிகள்’ என்று கேலி பேசினார். அது பல ஆண்டு காலம் தொடர்ந்தது. அனேகமாக, அண்ணா முதல் அமைச்சராக பதவி ஏற்று, தன் தலைவர் ஈ.வே.ராவிடம் ஆசி பெறச் சென்ற கணம் வரை. பிறகு தான் ‘கண்ணீர்த்துளிகள்’ என்ற கேலி நின்றது. பதவியில் இருக்கும் யாரையும் ஈ.வே.ரா. பகைத்துக்கொள்ள மாட்டார். திமுக காங்கிரஸை எதிர் கட்சியாக தாக்கிய போது, ஈ.வே.ரா.காமராஜ் ஆட்சியைப் புகழ்ந்தார். ‘பச்சைத் தமிழர்’ என்றார் காமராஜை. ஏனெனில், காமராஜ் அமைச்சரவில் ஒரே ஒரு பாப்பான் தான் அமைச்சர். ஈ.வே.ராவின் அரசியல் தர்க்கத்திற்கு வேண்டியது அவ்வளவே தான். பல சமயங்களில் காங்கிரஸ் சார்பில் நின்ற ‘பாப்பானை’ ஆதரித்து பிரசாரம் செய்திருக்கிறார். இதே ஈ.வே.ரா. தான் ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் அல்ல. துக்க தினம் என்றார். வெள்ளைக்காரன் இடத்தில் காங்கிரஸ் உட்கார்ந்து கொள்ளும். ‘திராவிட மக்கள் தொடர்ந்து அடிமைகளாகத்தான் இருப்போம்,’ என்றார். ஆனால் அண்ணா இது சுதந்திர தினமாகக் கொண்டாடவேண்டும் என்றார்.

வெளித்தெரிந்து இது தான் அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இடையேயான முதல் கருத்து பேதம். வெளித்தெரிந்தது என்பது மட்டுமல்லாமல், திராவிட கழகமும் சரி, திமுகவும் சரி, அல்லது இன்னும் இதன் மற்ற கிளைக் கட்சிகளும் சரி எல்லோரும் இக்கருத்து பேதம் இருந்ததை ஒப்புக்கொள்வார்கள் ஆனால் அண்ணாவுக்கும் அவர் கடைசி வரை தனக்கும் தன் கட்சிக்கும் தலைவராக மதித்த ஈ.வே.ரா.வுக்கும் இடையேயான வேறுபாடுகள் கருத்தளவிலும் சரி, மனித உறவுகளிலும் சரி, குண முரண்பாடுகளும் நிறைய இருந்தன. அது அனேகமாக, அண்ணா பெரியாரின் அழைப்பின் பேரில் கட்சியில் சேர்ந்த வெகு சீக்கிரத்திலேயே இருவருக்கும் அவரவர் சுபாவங்களும் சில முரண்பாடான போக்குகளும் ஒத்துவராமை வெளிப்பட்டு விட்டது. ஆனாலும் அண்ணா தொடர்ந்து 1949 வரை இருந்ததற்கும், பின்னர் பிரிந்து வேறு கட்சி ஆரம்பித்த பின்னரும் அதன் தலைவர் பெரியார் தான் என்றும் தான் கட்சியின் செயலாளர் தான் என்று பிரகடனம் செய்தது மட்டுமல்லாமல், கடைசி வரை அவ்வாக்கைக் காப்பாற்றவும் செய்தார் என்றால், அதற்கு அண்ணாவின் இயல்பான தாராளமனத்தை, கனிவை, முதியவருக்கு மரியாதை தரும் பண்பை, மன்னித்துவிடும் சுபாவத்தை யெல்லாம்தான் காரணங்களாகக் காண வேண்டும்.

இது வரை சொன்னது அத்தனையும் அச்சில் வெளிவந்தவை. எல்லோருக்கும் தெரிந்தவை. என்ற போதிலும் இன்று, பெரியாரின் போக்கை ஏற்கமுடியாது பிரிந்து வந்த திமுக விலும் சரி, அதனிலிருந்து பிரிந்த அதிமுகவிலும் சரி, பின்னர் கிளைவிட்டுத் துளிர்த்துள்ள இன்னும் பல திக, திமுக, கிளைகளிலும் சரி, பெரியாரும் அண்னாவும் தான் வணங்கப்படும் தெய்வங்கள். அவரவர் நினைவு தினங்களில் மாலை சார்த்தி வணங்கி நின்று போட்டோ பிடித்துக்கொள்ளும் சடங்குகளுக்கு உரியவர்கள். எல்லோருக்கும் ஈ.வே.ரா தந்தை பெரியார் தான். பகுத்தறிவுப் பகலவன் தான். அன்ணா பேரறிஞர் தான். இருவர் காட்டிய பாதையில் தான் எல்லா கழகங்களும் செல்வனவாகச் சொல்லிக்கொள்கின்றன.

ஆனால் அவ்வளவோடு சரி. மற்றபடி, பெரியாரின் இன்றைய திராவிடர் கழகமும், திமுகவும் அதிமுகவும் பெரியார், அண்ணா பற்றிய கடந்த கால சரித்திரத்தைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் பெரும் தணிக்கைக்குட்பட்டதாகவே இருக்கும். அந்தந்தக் கால கட்சி சார்பில்லாத செய்திப் பத்திரிகைகளில் வந்த செய்திகளை என்ன, விடுதலை, திராவிட நாடு, முரசொலி பத்திரிகைகளில் வந்த செய்திகளைக் கூட அவர்கள் இருட்டடிப்பு செய்யவே விரும்புவார்கள். அது பற்றி அவர்கள் பேசமாட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்க, இத்தகவல்களை அக்கால கட்டத்தில் அறிந்தவர்களோ, பத்திரிகைகளிலிருந்து தகவல்கள் திரட்டி யாரும் எழுதக் கூடுமானால், அவர்கள் எதிரிகளாகவே பாவிக்கப்படுவார்கள். எம்மாதிரியான எதிர்வினைகளை அவர்கள் சந்திக்கக் கூடும் என்பது சொல்லமுடியாது.

முதலில் அண்ணாவே இப்போது உயிருடன் இருந்திருந்து தம் அந்நாளைய அனுபவங்களை எழுதக் கூடுமானால், அவர் கூட தன் தலைவர் பெரியாரைப் பற்றிய உண்மை விவரங்களை எழுதமாட்டார் தான். காரணங்கள் பல. அண்ணாவின் சுபாவம் அது. சுபாவத்தில் சாது. தலைவரிடம் கொண்ட மதிப்பும் மரியாதையும். தனக்கு இழைக்கப்படும் தீங்குகளை, அவமானங்களை மறக்கும் மன்னிக்கும் சுபாவம். ஆக, அண்ணா எழுதாமல் இருந்ததைப் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் எல்லா திராவிட வாரிசு கழகங்களும் கூட இதில் சாதிக்கும் மௌனம் பற்றி என்ன சொல்வது?. They don’t want to wash their party’s dirty linen in pubic. நியாயந்தானே. அவர்களுக்கு தந்தை பெரியார் அப்பழுக்கற்ற பகுத்தறிவுப் பகலவன். அவர்கள் அவர் பற்றி மக்களுக்குக் கொடுத்துள்ள சித்திரத்தில் சுருக்கங்களே, கறுப்புக் கோடுகளே இருக்கக் கூடாது. அப்படியும் இது சிக்கல்கள் பல நிறைந்த காரியம் தான். எப்படி?

தந்தை பெரியாரைப் பற்றி தீட்டி வைத்துக்கொண்டுள்ள உருவத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற நினைத்து நடந்த உண்மைகளை மறைத்தால், அது அவர் அன்ணாவைக் கேவலமாக நடத்தியதை மறைத்து அண்ணாவுக்கு துரோகம் இழைத்ததாக ஆகும். பெரியாரிடம் அண்ணா பட்ட அவமானங்களைப் பற்றி உண்மையை எழுதினால் அது பெரியாரைப் பற்றிய கற்பனைச் சித்திரத்தை கோரமாக்கியதாகும். பெரியார் வழியில் அண்ணா வழியில் ஒரு சேர நடப்பவர்களுக்கு இது இக்கட்டான நிலை தான். இரண்டு பேரும் மரித்தாயிற்று. இனி இருவரது கற்பனையான உருவச் சித்திரத்தைக் காப்பாற்றி கட்சியை வளர்ப்பது தான் செய்யக் கூடிய காரியம். அதைச் செய்து வருகிறார்கள் எல்லா திராவிட கட்சியினரும். இவர்கள் எல்லாமே உண்மைக்கும் உண்மையாகவிருக்கவில்லை. அவர்கள் துதித்துத் போற்றி வணங்கும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இருவருக்குமே கூட உண்மையாக விருக்கவில்லை.

திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்: கிழக்கு பதிப்பகம், ப. 158: விலை ரூ.80


(அடுத்த பக்கத்தில்)

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்

திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன் – கழகங்கள் சொல்ல விரும்பாத சரித்திர நடப்புகள் சில. (கடைசிபகுதி)

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

வெங்கட் சாமிநாதன்



ஆனால் நடந்த சரித்திரத்துக்கு உண்மையாகவிருப்பது என்று ஒன்று இருக்கிறது. சரித்திரம் எழுதுபவனது தலையாய கடமை அது. இருவருமே இரு வேறு விதங்களில் முரண்பாடுகளின் சொரூபங்கள். தமக்குள்ளேயே முரணகளைச் சுமந்த இவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டவர்கள் வேடிக்கையான குரு சிஷ்யர்கள் தான். அதுவே இருவரையும் மிக சுவாரஸ்யமான மனிதர்களாக்குகிறது. இந்த முரண்கள் ஒரு கட்டம் வரை சகித்துக்கொள்ளப்பட்டு, அதன் உச்சத்தை எட்டியபோது பிளவு தவிர்க்க முடியாததாகியது. அக்கட்டத்திலும் அண்ணா தவிர்க்க முயன்றவர் தான். அவரது விஸ்வாசமும் சாத்வீகமும் அத்தகையது தான். ஆனால் அதையும் தன் முரட்டு சுபாவத்தால் முறித்துக் கொண்டவர் ஈ.வே.ரா. இவ்வளவையும் மீறி, இருவருமே தமிழ் நாட்டின் வரலாற்றை உருவாக்கியவர்கள். இவர்களது குணநலன்களை, கொள்கைகளை, சரித்திரத்தை, எதையும் மறைக்காது எழுதுவதனால் இவரகளது வரலாற்றுப் பங்களிப்பு எதுவும் குறைபடாது. அவரவரது குணநலன்களே அவர்கள் படைத்த வரலாற்றின் குணநலன்களையும் கட்டமைத்தது என்பதையும் அறிந்து கொள்ளச் செய்யும்.

இவையெல்லாம் அதிகாரபூர்வமாக இக்கட்சியினர் வாயிலாக வெளிவருவதற்கில்லை. ஆனால் ஆரம்ப காலத்திலிருந்து இத்தலைவர்களை நெருங்கி அறிந்தவர்கள் எழுதியவற்றிலிருந்து நாம் கொஞ்சம் இச் சொல்லப்படாத, இவர்கள் மறைக்க விரும்பும் பல தகவல்களை அறியலாம். சில பெயர்கள் உடன் ஞாபகத்துக்கு வருகின்றன. கோவை அய்யமுத்து, பி. ராமமூர்த்தி, திரு.வி.க. சாமி சிதம்பரனார், மா.இளையபெருமாள் போன்றோர் தம் அனுபவங்களை எழுதும் சந்தர்ப்பத்தில் பல தகவல்களைச் சொல்லிச் செல்கின்றனர். பழைய விடுதலை, திராவிடநாடு இதழ்களிலிருந்தும் இன்று கட்சியினரும், தலைவர்களும் அங்கீகரிக்க மறுக்கும் உண்மைகள் பெறப்படும். ஏன், கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதியிலிருந்தும் பெறலாம். ஒரு உதாரணத்திற்கு ஒரு சம்பவம். கருணாநிதி விடுதலை பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் காலை ஈ.வெ.ரா, “எங்கே கருணாநிதி?” என்று கேட்க, “கருணாநிதி குளிக்கப் போயிருக்கிறார்,” என்று பதில் வரவே, கோபமுற்ற ஈ.வே.ரா. ‘அவன் இங்கே வேலை செய்யவந்தானா, இல்லை குளிக்க வந்தானாய்யா?” என்று கேட்கிறார். ஒவ்வொரு தடவையும் கட்சி வேலைக்கே அவரிடமிருந்து காசு பெறப்படும் பாடு பெரும் பாடாக விருந்தையும் கருணாநிதி பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

ஈ.வே.ராவின் சிக்கனம் உலகம் அறிந்ததே. சிக்கனமாக இருப்பது என்பது வேறு. அதில் அவரது சிக்கனம் ஒரு தனி ரகம். அது பணம் வீணாகச் செலவாவதைத் தடுக்கும் சிக்கனம் அல்ல. பணத்தின் மீது கொண்ட அதீத பற்றுதலில் விளைந்த சிக்கனம் அது. இரண்டாவது தன்னிடம் வந்து சேர்ந்தவர்களை மதிக்காத போக்கு. இது அன்ணாவுக்கு வெகு ஆரம்பத்திலேயே தெரிய வந்த ஒன்று. அடிக்கடி ஈரோடிலிருந்து திருச்சிக்குப் பயணம் செய்யும் ஈ.வே.ரா திருச்சிக்கு டிக்கட் எடுக்க மாட்டார். கரூர் வரை ஒரு டிக்கட். பின்னர் கரூரில் இறங்கு கரூரிலிருந்து திருச்சிக்கு டிக்கட். இப்படி இரண்டு முறை குறைந்த தூரத்துக்கான டிக்கட் எடுத்தால் அதில் கொஞ்சம் காசு மிச்சமாகும். இப்படி ஒரு முறை அண்ணாவையும் கூட அழைத்துச் சென்றவர், அண்ணாவைத் தான் கரூரில் இறங்கி திருச்சிக்கு டிக்கட் வாங்க அனுப்பி, அண்ணா டிக்கட் வாங்கி வர தாமதமாகவே, ஆத்திரமடைந்த பெரியார், “சோம்பேறி, வக்கில்லாதவன், ரயில் டிக்கட் வாங்கக் கூட முடியாதவனால் ஒரு கட்சியை எப்படி நடத்தமுடியும்,” என்றெல்லாம் விழுந்த அத்தனை வசைகளையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டவர் அன்ணா.

இது தான் தந்தை பெரியார், தனக்கு தளபதியாக, தன் பெட்டிச் சாவியைத் தந்துவிட்டதாக பட்டம் சூட்டிய அண்ணாவை, தன் கழகத்திற்கு பெரிய ஜனத்திரளையே தேடித்தந்த அண்ணாவை, கழகத்தில் தனக்கு அடுத்த படியாகவிருந்த தலைவரை, தனக்கு முப்பது நாற்பது வயது இளையவரை நடத்திய முறை. கழகத்தில் அண்ணா தன் இனிய சுபாவத்தினாலும், பேச்சாற்றலாலும், கழகத்தின் கொள்கைகளுக்குத் தேடித்தந்த கௌரவத்தாலும், மக்களிடையே பெற்ற புகழாலும், கழகத்தில் அவருக்கு தானே வந்தடைந்த இரண்டாம் இடத்தை, தந்தை பெரியாரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். அவர் மட்டுமில்லை. வயதிலும் கழகத்திலும் அண்ணாவுக்கு மூத்தவர்களாக இருந்தோருக்கும், குத்தூசி குருசாமி, டி.பி.வேதாசலம் போன்றோருக்கும் அண்ணாவுக்கு கழகத்தினுள்ளும் வெளியே மக்களிடமும் இருந்த செல்வாக்கைக் கண்டு பொறுக்கமுடியாதுதான் இருந்தது. அன்ணாவின் இளைய தலைமுறை திராவிட கழகத் தலைவர்களும் தொண்டர்களும் அண்ணாவிடமே நெருக்கமாக உணர்ந்தனர்.

அதோடு கழகத்தை தன் விருப்பு வெறுப்புக்களையே கொள்கைகளாகவும் நடைமுறை யாகவும் ஆக்கியிருந்த தந்தை பெரியார், எவ்வளவு தான் தனக்கு கட்டுப்பட்டிருந்தாலும், தனக்கென ஒரு பார்வையும் கொள்கைகளும் கொண்டிருந்த அண்ணாவை உள்ளூர வெறுக்கத் தொடங்கியிருந் தார் என்றும் சொல்லவேண்டும். மற்றவர்களையும் தூண்டி அண்ணாவை கேலியும் வசையும் பேசத் தூண்டவும் செய்திருக்கிறார் பெரியாரும் திராவிடத் தந்தையுமான ஈ.வே.ரா. குறிப்பாக பாரதிதாசன், அழகரிசாமி போன்றோர். அப்படி வசை பாடிய அழகிரிசாமி உடல் நிலை கெட்டு மரணப் படுக்கை யில் இருந்த அழகிரிசாமிக்கு நிதி திரட்டித் தந்தவர் அண்ணா. பாரதி தாசனுக்கும் தான். நிதி திரட்டித் தராமல், “பாட்டுப் பாடறவனுக்கெல்லாம்” திரட்டித் தரானே என்று ஆத்திரப்பட்டவர் தந்தை பெரியார். அழகிரி சாமியும் பின்னர் தன் செய்கைகளுக்கெல்லாம் வருந்தவும் செய்தார்.

அண்ணாவுக்கு கருப்புச் சட்டை அணிவது என்றாலே பிடிக்காது. கறுப்புச் சட்டைப் படை என்று ஒரு வாலண்டியர் அணி உருவாக்குவது என்ற தீர்மானத்தில் பிறந்த வழக்கம் தான் திராவிட கழகத்தவர் கருப்புச்சட்டைக்காரன் என்றாக வழி வகுத்தது. இதை தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் மேடையிலேயே குறிப்பிடும் போது என்ன சொல்கிறார்? “வெள்ளைச் சட்டை அணியும் குள்ள நரிகள் என்று அவர்களைச் சொல்வேன்” அண்ணா குள்ள உருவினர் என்பது எல்லோரும் அறிந்தது. தனக்கு அடுத்த தலைவரை ‘குள்ள நரி” என்று மேடையில் தந்தை சொல்வாரானால், இவருக்குமிடையே யான உறவு எத்தகையது?

நீதிக் கட்சியைச் சேர்ந்த ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தன் அறுபதாம் ஆண்டு நிறைவை சம்பிரதாய சடங்குகள், புரோகிதருக்கு பசு, பொற்காசு போன்ற தானங்கள், வேள்வி என ஏராளமான செலவில் நடத்தவே, ஈ.வே.ரா வுக்கு கோபம். தன்னைக் கண்டு கொள்ளாமல், பார்ப்பனருக்கு தானம், பூஜை என்று செலவழிக்கிறாரே என்று. அண்ணாமலைச் செட்டியாரின் இச்செய்கையைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் ஒன்று எழுதும்படி தந்தை பெரியார் அண்ணாவிடம் பணிக்க, அண்ணாவுக்கும் இதில் ஒப்புதல் இருந்ததால் அவரும் எழுத, இடையில் அண்ணாமலைச் செட்டியாரிடமிருந்து ஆயிரம் ரூபாயோ என்னவோ அன்பளிப்பாக வரவே, செட்டியார் பணம் அனுப்பியிருக்கிறார், ஆதலால் ஏதும் அவரைக் கண்டித்து எழுதியதை நிறுத்தச் சொல்கிறார் பெரியார். ஆனால், அன்ணாவோ, “நான் எழுதியது எழுதியது தான். இனி அதை மாற்ற இயலாது” என்று சொல்ல, பெரியார் நன்கொடைக்கு நன்றி சொல்லி ஒரு குறிப்பு எழுதினார் என்பது நடந்த கதை.

இது போலத் தான் சேலம் மகாநாட்டில் திராவிடர் கழகம் என்ற புதிய நாமகரணமும், நீதிக்கட்சிப் பெருந்தலைகள் தம் பட்டம் பதவிகளைத் துறக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றியது அண்ணாவின் வலியுறுத்தல் காரணமாகத்தான். பெரியாருக்கு நீதிக்கட்சியினர் தரும் ஆதரவையும் பண உதவியையும் இழக்க வேண்டி வருமே என்ற கவலையும் அரித்துக்கொண்டிருந்தது. மிகுந்த ஊசலாட்டத்துக்குப்பின் தான் அண்ணாவுக்கு இளைய தலைமுறையினரிடம் வளர்ந்து வரும் கவர்ச்சியையும், கழகத்தின் பிராபல்யம் கருதியும் அண்ணாவின் தீர்மானத்துக்கு இயைந்தார். அண்ணாவின் இத்தகைய பார்வையின் தொடர்ச்சி தான் இந்திய சுதந்திர தினத்தை பெரியார் சொன்னது போல் துக்க தினமாக அல்ல, சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும் என்று பகிரங்கமாக அண்ணா எழுதியது. நிலமை கட்டுக்கு மீறிப் போகிறது என்று பெரியாருக்குத் தோன்றத் தொடங்கிவிட்டது. முதலில் பெரியார் கருத்தை ஒட்டி எழுதி பின்னர் சில மாதங்களுக்குள் அண்ணா தன் கருத்தை முற்றிலும் மாற்றிக்கொண்டது,

இருப்பினும் அவருக்கு அண்ணா வருங்காலத்தில் கழகத்திலும் மக்களிடையேயும் ஒரு சக்தியாக வளர்ந்து வருவது உவப்பாக இருக்கவில்லை. தனக்கும் வயதாகிக்கொண்டிருக்க, தன் பாரம்பரிய குடும்ப சொத்தும், கழகத்தின் பேரில் பைசா பைசாவாக சேர்த்து வைத்திருக்கும் சொத்தும், கழகமும் அண்ணாவிடம் போய்ச் சேராதிருக்கவேண்டுமே என்ற கவலை அவரை பீடிக்கத் தொடங்கியது. தனக்கோ மகன் இல்லை. மனைவியும் இல்லை. குடும்ப சொத்து ஈ.வி.கே. சம்பத்துக்குப் போய்விடும். கழகச் சொத்தோ, தனக்குப் பின் வரும் தலைமையிடம் போய்விடும். இதைத் தடுப்பதற்கு உடனடியாக ஒரு வழி தேடியாக வேண்டுமே. தன்னிடம் சில வருஷங்களாக உதவியாக இருக்கும் பெண்ணை மணந்து கொண்டால் தான் கவலைப் படும் இரண்டு விளைவுகளையும் தவிர்த்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தவர் தந்தை பெரியார். தன் சொத்துக் கவலைகளுக்குத் தீர்வாக, ஒரு சிறு வயதுப் பெண்ணின் வாழ்க்கையை பலியாக்குவதில் அவருக்கு தயக்கம் இருக்கவில்லை. சமூக சீர்திருத்தம் என்றும் பெண்ணின் விடுதலை என்றும் வாழ்நாள் முழுதும் பேசி வந்த எழுபது வயது புரட்சிக்காரருக்கு வந்த கவலைகளும் அதற்கான தீர்வுகளும் இப்படியாகிப் போனது பரிதாபம் தான்.

ஆக, கொள்கைகள் அல்ல, சொத்து பற்றிய கவலைகள், தன் விருப்பு வெறுப்புகளுக்கும் தன்னிச்சையான சுய தீர்மான போக்குகளும் தான் என்றும் தெரிந்ததென்றாலும் அதன் பட்டவர்த்தன மான வெளிப்பாடாக நிகழ்ந்த பெரியார் மணியம்மை திருமணம், அதுவும் பார்ப்பனராகிய எந்த ஆச்சாரியார் தன் சாதிக்கு சாதகமாகத்தானே சிந்திப்பார் என்று காலமெல்லாம் சொல்லி நிந்தித்து வந்தாரோ அந்த ஆச்சாரியாரிடமே, தன் கழகம், சொத்து, நம்பிக்கையான வாரிசு போன்ற கவலைகளுக்கு ஆலோசனை கேட்டது, அதுவும் ரகசியாமகச் சந்தித்துக் கேட்டது, பின் இதெல்லாம் ‘என் சொந்த விஷயம், உங்களுக்கு சம்பந்தமில்லை’ என்று உதாசீனமாகப் பேசியது எல்லாம் கழகத்தவர்க்கு பெரும் அடியாக விழுந்தது. பெரியாருக்கும் சரி, கழகத்தவர்க்கும் சரி இது தான் ஒட்டகத்தின் முதுகு தாங்காத சுமையாகச் செய்த கடைசி வைக்கோற் புல். இரு தரப்பாருக்கும் பெரியார்-மணியம்மை திருமணம் ஒரு சௌகரியமான சாக்காகிப் போனது. அந்த சாக்குதான் வெளிச் சொல்லப்பட்டது, திரையின் பின்னிருந்த நீண்ட காலப் புகைச்சல் பற்றி எல்லோருமே மௌனம் சாதிக்கத் தான் செய்கின்றனர்.

கடந்த காலப் புகைச்சல் மட்டுமல்ல. பின் எழுந்த புகைச்சல்களும் கூடத்தான். அண்ணா ‘கண்ணீர்த் துளிகள்’ தலையங்கம் திராவிட நாடு பத்திரிகையில் எழுதியதும், ‘கண்ணீர்த் துளிகள்’ என்று புதிய கட்சியினரை பெரியார் கிண்டலும் வசையுமாக தொடர்ந்து இருபது வருட காலம் பேசித் தீர்த்ததும் தெரிந்தது தான். ஆனால், பதவி ஆசை பிடித்துப் போய் பிரிந்தார்கள் என்று சொன்னார். பெரியாரைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும், கட்சி சொத்துக்களுக்காக வழக்கு தொடர வேண்டும் என்றெல்லாம் கட்சியில் எழுந்த கொந்தளிப்பை அடக்கி, பழைய கட்சி என்ன, புதிய திமுகவின் தலைமை நாற்காலி கூட பெரியாருக்காகவே காலியாகவே வைக்கப்பட்டுக் கிடக்கும் என்று கட்சியனரின் கோபத்தை அடக்கிய அண்ணாவின் பெருந்தன்மையையோ, அதற்கு எதிராக, பதவி ஆசை பிடித்துப் போய் பிரிந்தார்கள் என்று கழகத் தந்தை பெரியாரின் பழிச் சாட்டல் வசை பிரசாரம் எதையும் இன்று எந்த கழகத்தவரும் பேச விரும்பமாட்டார்கள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கடைசியாக தந்தை பெரியார் விடுத்த பிரம்மாஸ்திரம் தான், 1949 ஜூலை 13-ம் தேதி விடுதலை பத்திரிகையில் வெளியிட்ட அறிக்கை. அதில் தான் திருமணம் செய்துகொண்டதற்கான ஒரு புதிய காரணத்தைச் சொல்கிறார். அறிக்கையின் தலைப்பு:”திருமண எண்ணத் தோற்றத்துக்கு காரணமும், அவசர முடிவும்.” அதில் யாரோ (மறைமுகமாக அண்ணாவைக் குறித்து) தன்னைக் கொலை செய்ய சதி செய்து வருவதாகவும் அதற்கு சம்பத் உதவி வருவதாகவும்” ஒரு குற்றச் சாட்டு. உடனே அண்ணா, தந்தை பெரியார் தன்னைத் தான் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாக, அவதூறு வழக்கு தொடர்கிறார். நீதி மன்றத்தில் ஆஜரான பெரியார், தான் அண்ணாவைக் குறிக்கவில்லை என்று சொல்கிறார். அவ்வாறு வாக்குமூலம் அளித்தால் தான் வழக்கை வாபஸ் வாங்குவதாகச் சொல்லவே, வழக்கு தள்ளுபடியாகிறது. சம்பத்தும், ஈ.வே.ரா மணியம்மை இருவர் மீதும் அவதூறு வழக்குத் தொடர்கிறார். நீதி மன்றத்தில் ஈ.வே.ரா, மணியம்மை இருவருமே வருத்தம் தெரிவிக்கவே, வழக்கு வாபஸ் ஆகிறது.

ஆக, கடைசியில் இதனால் பெறப்படும் நீதி என்னவென்றால், இது சொத்து பற்றிய கவலைகள். கட்சியில் தனக்கு இளையவரின் புகழ் மீது கொண்ட பொறாமை உணர்வுகள். இதற்கெல்லாம் கொள்கைப் பூச்சு முலாம் பூசப்பட்டு பளபளக்கச் செய்கிறார்கள். மேலிருக்கும் முலாமை யாரும் கீறி விடாமல் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆகவே இந்த பழைய கதைகளை எந்த திராவிட குடும்பத்தினரிடமிருந்தும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் வசமே இருக்கும் பத்திரிகைகளை அணுகுவதும் கஷ்டம். பெரியார் திடல் போய் ஒரு பழைய விடுதலை இதழைப் பார்க்க முயன்றவர்களுக்கு தெரியும். “எதுக்கு? யார் நீங்க? என்ன வேணுமோ எழுதிக்கொடுத்துப் போங்க. தேடிப்பார்த்து வைக்கிறோம்.” என்று பதில்கள் வரும்.

40-களில் 50-களில் விவரம் தெரிந்தவர்களுக்கு எவ்வளவு நினைவில் தங்கி யிருக்குமோ அவ்வளவே வாய்மொழியில் வரச் சாத்தியம் உண்டு. அவர்களே இச்சரித்திரத்தை பதிவு செய்யக் கூடும். இவையெல்லாம் அதிகமாக பரவலாக வெளித்தெரியாத, மனவை ரெ.திருமலைசாமி நகர தூதன் இதழில் எழுதியது, எஸ் கருணானந்தத்தின் அண்ணா நினைவுகள், அரங்கண்ணலின் அண்ணா நினைவுகள், அண்ணா பேரவை இணைய தளம், டி.ம். பார்த்த சாரதியின் தி.மு.க வரலாறு. பி.ராமமூர்த்தி திராவிட கட்சிகள் பற்றி எழுதிய புத்தகம் ஒன்று, போன்றவற்றிலிருந்து உதிரி உதிரியாகக் கிடைப்பவை. விடுதலை, திராவிட நாடு இதழ்களிலிருந்தும் கூடத்தான். தேடி அலைபவர்கள் யாரிருக்கக் கூடும். மலர் மன்னன் எழுதியிருக்கிறார், இச்சம்பவங்களை மையமாகக் கொண்டு. மற்றவர்கள் தம் நினைவுகளை எழுதும் சந்தர்ப்பத்தில் இவை பற்றியும் குறிப்புகள் வரும். ஆனால் மையம் இதுவல்ல.

மலர் மன்னன், மற்றவர்கள் இது காறும் பயணிக்காத பிரதேசத்தில் கால் வைத்திருக்கிறார். அவர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியவர். அண்ணாவைப் பற்றி, நல்ல அபிப்ராயங்களும் மதிப்பும் கொண்டவர். அந்த நட்பும் நல்லெண்ணமும், அந்நாட்களில் அண்ணா, மூன்று மாத கால இடைவெளியில் முற்றிலும் நேர்மாறான நிலைபாட்டை வெளியிடுவதைக் குறிக்கத் தவறவில்லை. அண்ணா கனிவும் பாசமும் நிறைந்தவர். விரோதிகளுடன் கூட சினேகம் கொள்ளும் மனத்தவர். அவரது குணத்திற்கும், பார்வைகளுக்கும், முற்றிலும் எதிரிடையான குணங்கள் கொண்ட வயதில் மூத்த ஈ.வே.ரா வுடன் இவ்வளவு காலமாக, எல்லா அவமதிப்புகளையும் சகித்துக்கொண்டு இருந்ததன் காரணமென்ன என்பது ஒரு புதிர். அதே போல, கடுமையான விருப்பு வெறுப்புக்களையே கொள்கைகளாக பிரசாரம் செய்து வந்த, பேச்சில் முரட்டுத் தனமும் நயமின்மையும் கொண்ட தந்தை பெரியார், தனிப்பட்ட முறையில் தன்னைச் சந்திக்கும் எந்த சாதி மனிதரிமும், பெண்களிடமும், சிறுவர்களிடமும் கூட கனிவும் சாத்வீகமும் அளவுக்கு மீறிய மரியாதையும் காட்டும் மனிதராக இருந்ததன் புதிர். இத்தனிப்பட்ட நாகரீகமும் மேடையில் காணும் கொச்சையும் குரோதமும் ஒரே மனிதரிடத்தில் குடி கொண்டிருப்பதும் ஒரு விந்தை தான்.

தமிழ் தான் எங்கள் உயிர் மூச்சு என்று கோஷமிடும் இயக்கத்தின் தந்தை தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று பறைசாற்றியவர். பாப்பானை ஒழிப்பது தவிர வேறு சமூக சிந்தனை அற்றவர் சாதியை ஒழிக்கக் கிளம்பிய புரட்சிச் சிந்தனையாளர். “சமூகத்தில் இழிதொழிலாக இருக்கின்ற இந்தத் தொழில்களை ஒழிப்பதற்கு அரசியல் வாதிகள் முன்வருவதில்லை. சமூக சீர்திருத்த வாதிகளும் முன்வரவில்லை. ஏன், பெரியார் அவர்களே கேட்டார். இந்தத் தொழில்களை வேறு யார் செய்வது? இளையபெருமாள், நீயே ஒரு மாற்றுக் கூறு என்று கேட்டார்.” (சித்திரை நெருப்பு – மா. இளைய பெருமாள் – பக்கம் 41). இதுதான் பெரியார். அவர் சாதியை ஒழிக்கப் பிறந்த பகுத்தறிவுப் பகலவன். தந்தை பெரியார். இந்தப் பெருமைகள் எல்லாம் இல்லாத காந்தி என்ன செய்தார், என்ன கற்பித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இருப்பினும், தமிழ் நாட்டின் வரலாற்றையே மாற்றியவர்கள் பெரியாரும் அண்ணாவும், இன்னும் சிலரும். இதை எப்படிப் புரிந்து கொள்வது?

_________
திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன்: கிழக்கு பதிப்பகம், ப. 158: விலை ரூ.80

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்