ஜோதிர்லதா கிரிஜா
இக்கட்டுரையாளர் தமிழ்ப் புலமை படைத்தவள் அல்லள். எனினும் ஒரு தமிழ் எழுத்தாளர் என்கிற முறையில், தமிழைத் தவறுகள் இன்றி எழுத வேண்டும் எனும் ஆர்வம் உடையவள். இந்த ஆர்வக் கோளாற்றால் எழுதப்படும் இக்கட்டுரையில் கூறப்படுபவை பலருக்கும் ஏற்புடையவையாக இல்லாதிருக்கக் கூடும். இதனை உணர்ந்த பிறகும், தமிழ் உலகம் முழுவது பரவ வேண்டும் என்கிற ஆர்வத்தால் இது எழுதப் படுகிறது.
அண்மைக்காலமாகத் தமிழ்ப் பற்று மிக்கவர்களால் ஒரு கவலை மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. அதாவது, தமிழ் மெல்ல மெல்லத் தனது தனித்தன்மையை இழந்து வருகிறதோ, பிறமொழிச் சொற்களின் – குறிப்பாக ஆங்கிலச் சொற்களின் – நீக்குப் போக்கற்ற பயன்பாட்டால் அது மிகவும் கலப்படப்பட்டு, ஒரு நாள் கிட்டத்தட்ட அழிந்தே போய்விடக்கூடிய அபாயம் உள்ளதோ என்கிற கவலையே அது.
இந்தக் கவலை தேவையற்றது என்று சொல்ல இயலாது. மிகையானது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆங்கிலக் கலப்பால் தமிழ் மொழி தனது தனித்து நிற்கவல்ல தனிச் சிறப்பை இழந்து வருவதைத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு புறமிருக்க, அது பரவுதற்கு வகை செய்யும் முயற்சிகளை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பது மேற்சொன்ன பணிக்கு அடுத்ததாய்த் தமிழ் ஆர்வலர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டுள்ள கேள்வியாகும்.
தமிழ் சீரழிந்து வருவது பற்றிக் கவலை தெரிவித்துத் தமிழ் ஏடுகளிலும் இதழ்களிலும் வெளிவரும் தலையங்கங்கள், கட்டுரைகள் ஆகியவற்றைப் படிக்கையில் சிரிப்புத்தான் வருகிறது. இவ்வாறு எழுதப்படும் கட்டுரைகளிலேயே எண்ணிறந்த இலக்கண, எழுத்து, அச்சுப் பிழைகள்! இவற்றில் வெளியாகும் பிற கதை, கட்டுரைகளில் உள்ள தவறுகளோ கணக்கில் அடங்கா. தமிழைச் சிறப்புப் பாடமாகத் தேர்ந்தெடுத்து அதனை முறையாகப் பயிலாமல், தமிழைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள் என்கிற ஒரே தகுதி மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுப் பலருக்கும் பத்திரிகை அலுவலகங்களில் வேலை தரப்படுவதால் வந்துள்ள வினையே இது.
மேற்கோளாய் ஒரு சொல்லமைப்பைப் பார்ப்போம்: “ . . . ‘பான்ட்’ ‘பாக்கெட்’டிலிருந்து ‘பர்ஸை’ எடுத்து, ஒரு ‘·போட்டோ’ வை அவன் உருவிய போது ஒரு ‘லெட்டரும்’ ‘செக்புக்’கும் வெளியே விழுந்தன. அவன் தன் ‘ஷர்ட்’டை ‘இன்’ பண்ணிக்கொண்டு, அதன் மேல் ‘பட்டனை’ நீக்கி, அவற்றை ஒரு ‘கவரில்’ வைத்து. உள்ளே போட்டுக் கொண் டான். (இவ்வாக்கியங்களில் ஆங்கிலச் சொற்களுக்கு 33% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது!) அம்மைத் தழும்புகள் போல இவை தமிழன்னையின் அழகிய முகத்தை அசிங்கம் பண்ணுகின்றன என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியுமா? இன்னும் யோசித்தால், இவர்கள் தமிழில் ஆங்கிலம் கலந்து எழுதவில்லை, ஆங்கிலத்தில்தான் தமிழைக் கலந்து எழுதுகிறார்கள் என்றே தோன்றுகிறது! ஆங்கிலக் கலப்பு என்கிற அவலம் ஒரு புறமிருக்க, சந்தி எழுத்துகளான ‘ச்’, ‘த்’, ‘ப்’ பற்றியோ யாருமே கவலைப்படுவதில்லை. அவை உரிய இடங்களில் எழுதப்படாத சீர்கேட்டை விடவும், எழுதப்படக்கூடாத இடங்களில் அவை எழுதப்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை! “தெருவில் ஏராளமான வண்டிகள் ஓடிக்கொண்டிருந்தது” என்றெல்லாம் பன்மை வினைச்சொல்லுக்குப் பதிலாய் ஒருமை வினைச் சொல்லைப் பயன்படுத்தித் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் அவக்கேட்டை என்ன சொல்ல! ஒவ்வொரு பத்திரிகை அலுவலகத்திலும் பிழை திருத்துபவர்கள் தமிழை முறையாகப் பயின்றவர்களாக இருப்பின், இந்தக் கொடுமை பெருமளவுக்குக் குறையக் கூடும்.
சில ஆண்டுகளுக்கு முன்னால், அப்போது கொடிகட்டிப் பறந்து “எல்லார்” உள்ளங்களையும் கவர்ந்திருந்த புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகி ஒருவர் வானொலி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியபோது மிகத் துணிச்சலுடன் வெளியிட்ட கருத்தை இங்கு நினைவு கூர்தல் பொருத்தமாக இருக்கும். (அதை ஒலி பரப்பிய வானொலி இயக்குநரும் பாராட்டுக்குரியவர்தான்.) அந்தப் பாடகி சொன்னார்: “நாடு முழுவதும் புகழ்பெறும் ஓர் இந்திப் பாடலை, அதே பின்னணி இசைக்கருவிகளுடன், துளியும் வழுவாமல், அதே முறையில், அதே தரத்துடன், அதை முதலில் இந்தியில் பாடியவரின் குரலினிமைக்குச் சற்றும் குறையாத குரல்வளம் படைத்த தமிழ்ப் பாடகியோ, பாடகரோ பாடும் போது அது இந்திப் பாடலின் அளவுக்கு இனிமையாக இருப்பதில்லை’ என்று தமது தடாலடியான கருத்தை உண்மையுடனும், வெளிப்படையாகவும் தெரிவித்துவிட்டு, ‘ இப்படி நான் சொல்லுவதைக் கேட்டதும் பல தமிழ்ப் பற்றாளர்கள் முகம் கடுத்து, ‘இவள் ஒரு தமிழச்சிதானா?’ என்று பொருமி என் மீது கோபப்படுவார்கள்தான். அனால், அதற்காக நான் பொய்யைச் சொல்லலாமா?’ (அவர் கூறியதைச் சொல்லுக்குச் சொல் அப்படியே எழுதியுள்ளதாய்ச் சொல்ல முடியவில்லை. ஆனால், அவர் சொன்ன கருத்தின் சாரம் இதுதான்.)
இதற்கான காரணத்தை நாம் ஆராயப் புகுந்தால், ஓர் உண்மை வெளிப்படும். மெல்லிய, இனிய ஒலிகளைப் பயன்படுத்தாமல், வேண்டுமென்றே பொருளற்ற, தேவையற்ற காழ்ப்புணர்ச்சியால் நாம் அவற்றைத் தவிர்த்து வருகிறோம் என்பதே அது. சில ஒலிகள் தமிழில் இல்லை என்பது தனித் தமிழ் ஆர்வலர்களின் வாதம். “ஜ” என்பது தமிழின் “ஐ” போன்றும், “ஷ” என்பது தமிழ் “உ” மீது நாம் “டி” எழுதுவது போன்ற கொக்கியுடனும், “ஸ” என்பது தமிழ் “ல” வின் சற்றே மாறுபட்ட தோற்றத்துடனும், “ஹ” என்பது தமிழ் “உ”, “ற” ஆகியவற்றை இணைத்தது போன்றும் உள்ளன. இந்த அடிப்படையில் இவற்றைக் கிரந்தம் என்று புறக்கணிக்க வேண்டியதில்லை என்பது தெளிவாகிறது.
இந்த இனிய மெல்லோசைகள் தமிழில் இல்லை என்பதோ, தமிழர்கள் பேசுகையில் இவை ஒலிப்பதில்லை என்பதோ தவறாகும். பட்டிதொட்டிகளில் “சோலி” எனும் சொல் வழக்கில் உள்ளதையும். அதற்கு அலுவல் என்று பொருள் என்பதையும் நாம் அறிவோம். இந்தச் சொல்லைப் பெரும்பாலோர் “ஜோலி” என்றே உச்சரிக்கிறர்கள். “சாமான்” என்பதை “ஜாமான்” என்பார்கள். “எசமான்”, “எஜமான்” ஆகிய இரண்டு சொற்களுமே வழக்கில் உள்ளன. “ஜ” என்பது தமிழின் எழுத்துகளில் இல்லை என்பதால் அதைப் பயன்படுத்துவதோ, உச்சரிப்பதோ தகாது என்று நினைக்கிற அளவுக்கு நமக்குத் தமிழ் வெறி இருப்பின், அது நமது மொழிக்குத்தான் பேரிழப்பாகும்.
தமிழில் “ஜ” எனும் எழுத்து இல்லாது போயினும், அதற்குரிய ஓசை என்னவோ நம் பேச்சில் ஒலிக்கவே செய்கிறது. பஞ்சம், வஞ்சம், பஞ்சு, அஞ்சுதல், மிஞ்சுதல், கெஞ்சுதல் போன்ற சொற்களில் “ஜ” வின் ஒலி இருக்கத்தான் செய்கிறது. பகல், புகல், தொகுதி போன்ற சொற்களில் “க” என்பது “ஹ” (pahal, puhal, thohudhi) என்றே உச்சரிக்கப்படுகிறது. Pagal என்றோ, pakal என்றோ ஒருபோதுமன்று. பஞ்சம் என்பதை “ஜ” எனும் ஓசையின்றி, panchcham என்றுதான் உச்சரிக்கவேண்டும் என்கிற அளவுக்கு நாம் போகாதிருப்போமாக!
தமிழ், வடமொழி (சம்ஸ்கிருதத்து) க்கும் மூத்த மொழி என்று ஜெர்மானிய மொழி ஆராய்ச்சி வல்லுநர் ஒருவரால் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. பற்றுதலுக்குப் பதிலாய் நாம் வெறியை மேற்கொண்டால், தமிழ் அழிவை நோக்கியே நகரும். இவ்வாறு நேராவிடினும் தமிழ் மொழி திக்கெட்டும் பரவுதற்கான வாய்ப்பைக் குறைக்கவேனும் செய்யும் என்பதில் ஐயமில்லை.
ஜ, ஷ, ஸ, ஹ ஆகியவற்றை, அவற்றுக்குரிய வரிவடிவத்தில், தமிழில் கலக்க விரும்பாத அதிதீவிரத் தமிழ்ப் பற்றாளர்கள் ஒன்று வேண்டுமானால் செய்யலாம். ஆங்கில F ஐ “·ப” என்று தற்போது நாம் எழுதிவருவது போல், “ச” வின் மீது அல்லது அத்துடன் சில குறியீடுகளைச் சேர்ப்பதன் வாயிலாக, ஜ, ஷ ஆகியவற்றை உருவாக்கலாம். தமிழ்ப் பேரறிஞர், தமிழ்ப்பற்றாளர், காலஞ்சென்ற திரு பவானந்தம் பிள்ளை அவர்கள் தமது அகராதியில் “ஸ” என்பதை ஆங்கில Z – ஆகப் பயன்படுத்தலாம் என்று எழுதியுள்ளார்கள்.
இந்திய மொழிகள் பலவற்றிலும் ஒவ்வோர் எழுத்துக்கும் நான்கு ஒலிகள் உள்ளன. (ka, kha, ga, gha) ஆனால், நம் தமிழில் இரண்டு ஒலிகள் கூட இல்லாதது ஒரு பெருங்குறையே. இதனால் பிறமொழிக்காரர்கள் இதைக் கற்பது அவ்வளவு எளிதன்று. “க” வின் தலை மீது ஒரு பிறையைச் சேர்த்து அதை மெல்லிய ga வாக ஆக்கலாம். இதே போல் “ப” மீது ஒரு பிறை சேர்த்து அதை ba அக்கலாம். “த” வையும் இவ்வாறே dha ஆக்கலாம். கங்கை என்பதை kangai என்பதா, gangai என்பதா, gankai என்பதா அல்லது kankai என்பதா என்கிற குழப்பம் குறைந்த பட்சம் இரண்டு ஒலிகளேனும் இருப்பின் வராதல்லவா? கற்பதும் எளிதாக இருக்குமே. இதே போல் “த”, “ப” ஆகிய எழுத்துகளை உள்ளடக்கிய சொற்களும் தமிழைப் புதிதாய்க் கற்பவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தா. தமிழில் ஓசை சார்ந்த இலக்கணம் உண்டெனினும், பிறமொழியினர்க்குக் கடினமாய்த் தோன்றக்கூடிய அதணைக் கற்பதை ஓரளவுக்குத் தடுக்கலாமே! க, ட, த, ப ஆகிய நான்கே எழுத்துகளுக்கு மட்டும் இரண்டாம் மெல்லொலிக்குரிய குறியீட்டைச் சேர்த்தால் போதுமே. Jawakarlal, Kanthi, Dhandhai Beriyaar என்றெல்லாம் பிற நாட்டவர் நம் தலைவகளின் பெயர்களைக் கொலை செய்வதைத் தடுக்கலாமல்லவா!
சொற்கள் அனைத்திலும் இம்மாற்றங்களைச் செய்யாவிடினும், அபத்தமான உச்சரிப்புக்கு அடிகோலக்கூடிய சொற்களிலேனும் இம்மாற்றங்களைச் செய்தால் தமிழைக் கற்பது எளிதாகுமல்லவா !
பிற மொழிகளின் பால் வெறுப்புக்கொண்டவர்களது மொழி வளர்ந்து பரவ வாய்ப்பில்லை. பெரும் போக்குடன் பிற நாட்டு வேற்று மொழிச் சொற்களையும் தனதாக்கிக் கொண்டதாலேயே ஆங்கிலம் இன்று உலக மொழி என்னும் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. (அந்தஸ்து என்னும் மிகப் பொருத்தமான சொல் உருது என்பதற்காக அதைத் தவிர்க்க வேண்டுமா?)
எனவே தனித் தமிழில் எழுதுகிறேன் பேர்வழி என்று அபத்த மாற்றங்களில் ஈடுபட்டு, இனிய தமிழைச் சிதைக்காமல் இருப்பதோடு, அது வளர்ந்து பரவுவதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்ளுவோமாக! பிறமொழி வெறுப்பாளர்கள் சிந்திக்கட்டும்.
jothigirija@hotmail.com
நன்றி – தினமணி / 18.3.2008
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5
- வீடு
- அஷ்டாவதானம்
- நாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை ? (கட்டுரை: 23)
- எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 1 (சுருக்கப் பட்டது)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் !
- தாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி !
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ் – ஒரு முன்னோட்டம்
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்
- அவன்
- கோஸவா சுதந்திர பிரகடனமும் அதன் பின்னுள்ள உலக அரசியலும்
- ஆறு கவிதைகள்
- “நாம்” அறிமுகம் “சிங்கப்பூரில்”
- தமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று
- மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்
- ஆ கா ய ம் வா ட கை க் கு…”வானவில் கூட்டம்” – உலகத் தமிழர் கதைகள் தொகுப்புக்கான அணிந்துரை
- தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 1
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்………..18 வாசந்தி
- பாகிஸ்தான் பாரதி
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- ‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி
- முகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு
- விரைவில் இலண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி – 2008
- குழந்தை
- தமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு
- அடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்
- ஊழிக்கூத்து – எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன்
- காட்டாற்றங்கரை – 1
- கடவுள் வந்தார்
- அடுக்குமாடி காலணிகள்
- கர்நாடகம் தமிழகம்
- என் வீடு
- “ஏர்வாடியில் கண்டெடுத்த ஏட்டுச்சுவடிகள்”
- கவிதைகள்
- நினைவுகளின் தடத்தில் – (7)
- பின்னை தலித்தியம்
- தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்!
- கடவுள் தொகை
- மன்னியுங்கள் தோழர்களே…
- ஜனவரி இருபது
- நடை
- கழுதை வண்டிச் சிறுவன்