திண்ணையும் மரத்தடியும் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

அறிவிப்பு


தமிழ் எழுத்தாளர்களிடையேயும் வாசகர்களிடையேயும் அறிவியல் புனைகதைகளை ஊக்குவிக்கும் பொருட்டும், மேலும் வளர்த்தெடுக்கும் பொருட்டும் திண்ணை இணைய இதழும் ( http://www.thinnai.com ) மரத்தடி இணையக் குழுமமும் ( http://groups.yahoo.com/group/maraththadi மற்றும் http://www.maraththadi.com ) இணைந்து அறிவியல் புனைகதைப் போட்டி ஒன்றைத் தமிழில் நடத்த உள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்போட்டியில் நடுவராக இருந்து பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தர, தமிழில் அறிவியல் புனைகதைகளின் முன்னோடியும் அறிவியல் தமிழை தன் எழுத்துகளினூடே பல பத்தாண்டுகளாக முன்னெடுத்துச் செல்பவருமான எழுத்தாளர் சுஜாதா மகிழ்வுடன் இசைந்துள்ளார்.

இப்போட்டிக்கான பரிசுகளை வழங்குதல், போட்டிக்கு வரும் படைப்புகளில் பரிசுக்குரியனவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நடுவருக்குத் தேவையான உதவிகளை வழங்குதல், பரிசுபெறும் கதைகளை திண்ணை இணைய இதழில் பிரசுரித்தல் ஆகியவற்றுக்கு திண்ணை பொறுப்பேற்றுக் கொள்கிறது.

போட்டியில் கலந்து கொள்பவர்களுக்குத் தேவைப்படும் கணினி மற்றும் எழுத்துரு தொடர்பான உதவிகள், போட்டிக்கு வரும் படைப்புகளை நடுவருக்கு அனுப்பத் தயார் செய்யுதல் (formatting, converting to TSCII fonts etc), போட்டிக்கு வரும் அனைத்து படைப்புகளையும் மரத்தடி இணையதளத்தில் வலையேற்றுதல், போட்டி குறித்த அறிவிப்புகளைப் பிற இடங்களில் வெளியிடுதல், போட்டியை நடத்துதல் என்று

போட்டியை நடத்துகிற நிகழ்வு மேலாளராக (event manager) மரத்தடி இணையக் குழுமம் செயல்படும்.

போட்டிக்கான விதிகள் பின்வருமாறு:

பரிசுத்தொகை

1. முதல் பரிசு பெறும் கதைக்கு இந்திய ரூபாய் பத்தாயிரமும் (Rs.10,000/-) , இரண்டாம் பரிசு பெறும் கதைக்கு இந்திய ரூபாய் ஏழாயிரமும் (Rs.7000/-), மூன்றாம் பரிசு பெறும் கதைக்கு இந்திய ரூபாய் ஐயாயிரமும் (Rs.5,000/-) பரிசுகளாக வழங்கப்படும்.

2. பரிசுகள் காசோலைகளாக அனுப்பப்படும் என்பதால் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களைக் குறித்த பெயர், முகவரி, புகைப்படம், சிறுகுறிப்பு போன்ற தனிப்பட்ட விவரங்களைப் போட்டி நடத்துனர்கள் கேட்கும்பட்சத்தில் அளிப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

கதை நிபந்தனைகள்

3. போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் அறிவியலைப் பின்புலமாகவோ கருவாகவோ கொண்ட தமிழ்ச் சிறுகதைகளாக இருக்க வேண்டும்.

4. படைப்புகள் ஆசிரியரின் சொந்தக் கற்பனையாக இருக்க வேண்டும். மொழிபெயர்ப்புகளுக்கும் தழுவல்களுக்கும் இடம் இல்லை.

5. போட்டிக்கு ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்ப இயலும்.

6. போட்டிக்கு வரும் படைப்புகள் இதற்கு முன்னர் அச்சுப் பத்திரிகை, இணைய இதழ், இணையக் குழுமம், வலைப்பதிவு, வலைத்தளங்கள் மற்றும் பிற ஊடகங்கள் எதிலும் பிரசுரமாகியிருக்கக் கூடாது. போட்டிக்கு அனுப்பும் படைப்புகளை போட்டியின் முடிவு தெரியும்வரை படைப்பாளிகள் மேற்சொன்ன எந்த ஊடகத்திலும் பிரசுரிக்கவோ பிரசுரத்துக்கு அனுப்பவோ கூடாது. போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வேறு இடங்களில் பிரசுரிக்க படைப்பாளிகள் விரும்பினால் அனுப்பலாம்.

படைப்பாளி பற்றி

7. போட்டியில் தமிழில் எழுதத் தெரிந்த எவரும் கலந்து கொள்ளலாம். ( போட்டியில் கலந்து கொள்பவர்கள் மரத்தடி இணையக் குழுமத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும், திண்ணை இணைய இதழில் ஏற்கனவே எழுதியிருக்க வேண்டும் என்பது போன்ற விதிகள் எதுவும் இல்லை.)

8. போட்டி குறித்து நடுவரையோ திண்ணை ஆசிரியர் குழுவையோ தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளக் கூடாது.

படிவ விதிகள்

9. போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் TSCII 1.7 தமிழ் எழுத்துருவில் (TSCII 1.7 enabled fonts) மின்னச்சு செய்யப்பட்டு மின்கோப்பாக (TSCII 1.7 Electronic Text file or Murasu Rich Text File with TSCII 1.7 fonts), tamil_scifi@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு (e-mail) அனுப்பப்பட வேண்டும். கணினி மற்றும் எழுத்துரு தொடர்பான பிரச்னைகளில் உதவி வேண்டுபவர்கள் mathygrps@yahoo.com, vhprasanna@yahoo.com மற்றும் pksivakumar@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதினால் இயன்ற உதவிகள் செய்யப்படும். கையெழுத்துப் பிரதிகளும், JPEG, GIF உள்ளிட்ட வடிவரீதியான கோப்புகளும், PDF வகை கோப்பும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

10. போட்டிக்கான படைப்பை அனுப்பிய பின்னர் அதில் திருத்தம் அல்லது மாற்றம் செய்து மீண்டும் உள்ளிடவோ அல்லது முதலில் அனுப்பிய படைப்புக்குப் பதிலாக வேறு படைப்பை அனுப்பவோ அனுமதிக்கப்பட மாட்டாது. எழுத்துரு தொடர்பான (font related) பிரச்னைகளில் போட்டி நடத்துனர்கள் சூழ்நிலை மற்றும் பிரச்னைக்கேற்ப இந்த விதியை நடைமுறைப்படுத்துவார்கள்.

போட்டி முடிவுகளும் பிரசுரமும்

11. போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பரிசு பெறும் கதைகளும் பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் கதைகளும் திண்ணை இணைய இதழில் பிரசுரமாகும். போட்டிக்குப் பின்னர், போட்டிக்கு வந்த எல்லாக் கதைகளும் (பரிசு பெற்ற கதைகள் உட்பட) மரத்தடி இணையக் குழுமத்திலும் மரத்தடி இணைய தளத்திலும் பிரசுரமாகும்.

12. போட்டிக்கான படைப்புகள் tamil_scifi@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேரக் கடைசி நாள்: டிசம்பர் 15, 2004 . போட்டியின் முடிவுகள் ஜனவரி 15, 2005க்குள் அறிவிக்கப்படும். போட்டி முடிவுகள் திண்ணை இணைய இதழிலும் மரத்தடி இணையக் குழுமம் மற்றும் இணைய தளத்திலும் வெளியாகும். போட்டியின் இறுதிநாளுக்குப் பிறகு வந்து சேரும் படைப்புகள்

பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டா.

தெரிவு

13. இப்போட்டியின் நடுவராக இருந்து பரிசுக்குரிய கதைகளை எழுத்தாளர் சுஜாதா தேர்ந்தெடுத்துத் தருவார். பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் எழுத்தாளர் சுஜாதா வேண்டுகிற உதவிகளை திண்ணை இணைய இதழின் ஆசிரியர் குழு செய்யும்.

14. பரிசுபெறும் படைப்புகளைப் பற்றிய விஷயத்தில் நடுவரின் தீர்ப்பும், போட்டி விதிகள், ஒருங்கிணைப்பு மற்றும் இதர விஷயக்களில் போட்டி நடத்துனர்கள் முடிவுமே இறுதியானது. போட்டிக்கு உதவலாம் என்கிற எண்ணத்துடனும், முரண்களையும் சர்ச்சைகளையும் தவிர்க்கும் நோக்குடனும், இந்தப் போட்டியின் விதிகளை மாற்றவோ, தளர்த்தவோ, கூட்டவோ போட்டி நடத்துனர்களுக்கு உரிமை உண்டு.

அறிவியல் புனைகதைகளைத் தமிழில் மேலும் வளர்த்தெடுத்துச் செல்லும் இந்த முயற்சியில் தமிழில் வளர்ந்துவரும், புதுமுக எழுத்தாளர்கள் அனைவரும் பங்குபெற வேண்டுமென்று அன்புடன் அழைக்கிறோம்.

– திண்ணை – மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி நிர்வாகக் குழு

எல்லா தொடர்புகளுக்கும் : tamil_scifi@yahoo.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு