திசை மாறும் திமிங்கலங்கள்

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

ரா. சரவணன்


உங்களது வீட்டில் 2000 வாட்ஸ் ஸ்பீக்கரில் 24 மணிநேரமும் உச்சஸ்தாயில் ராக் இசை பாடிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? நினைத்துப்பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதா. இது போன்ற ஒரு முயற்சியைதான் அமெரிக்க கடற்படை தண்ணீருக்குள் செய்ய முயன்றுகொண்டிருக்கிறது.

உலகின் ஒரே வல்லரசாக இன்று திகழும் அமெரிக்கா, தன் நாட்டுப்பாதுகாப்பை பலவகைகளிலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்காக புதுப்புது வகையான கருவிகளை இராணுவத்தில் சேர்த்துக்கொண்டே உள்ளது. அந்த வரிசையில் நீர்மூழ்கிக்கப்பலுக்கான ‘சோனார் ‘ என்ற கருவியில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. உலகமெங்கும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சுழலில் அக்கறை கொண்டவர்கள் இதைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

காரணம் என்ன ?

கடற்பாலுட்டிகளான, திமிங்கலங்கள், ஓங்கிகள்(Dolphins) ஆகியவை நீருக்கடியில் ஒலியெழுப்பி ஒன்றொடொன்று தொடர்பு கொள்கின்றன. மேலும் ஒலிஅலைகளின் எதிரொலி(echolocation) மூலம் அவைகள் தத்தம் இருப்பிடங்களையும், வலசை போதலையும்(migration) நிர்ணயிக்கின்றன. ஆனால் தற்போது அமெரிக்க கடற்படையால் செய்யப்பட உள்ள மாற்றமானது 18 கார் அளவு உள்ள ஸ்பீக்கர்கள் நீருக்கடியில் ஒலிஅலைகளை எழுப்பினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கும்.

இந்த வகை குறைந்த அலைவரிசை இரைச்சலானது திமிங்கலம் மற்றும் டால்பின்களை வெகுவாக பாதிக்கக்கூடியது என்று கடலறிவியலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு பஹாமஸ் தீவுகளுக்கு அருகில் அமெரிக்க கடற்படை இந்த வகை சோனார்களை பராட்சார்த்த முறையில் சோதனை செய்தது. சோதனையின் சில நாட்களுக்கு பிறகு 16 திமிங்கலங்கள் திசை தெரியாமல் பஹாமஸ் தீவுகளில் கரையோதுங்கிவிட்டன. அவற்றுள் 7 திமிங்கலங்கள் செத்துவிட, மீதம் உள்ளவற்றை தீவுவாசிகள் கடலில் இழுத்துக் கொண்டுவிட்டனர்.

திமிங்கலங்கள் இவ்வாறு கரையொதுங்கி தற்கொலைச் செய்து கொள்வதற்கு முன்பு பல்வேறு வகையான காரணங்கள் கூறப்பட்டபோதிலும், புதிய புதிய கருவிகளும், அவற்றால் ஏற்படும் சத்தப்பெருக்கமே (Noise Pollution) இத்தகைய திசைதெரியாமல் திண்டாடும் கதிக்கு திமிங்கலங்களை இட்டுச்செல்கின்றன.

ஏன் அக்கறை ?

கடற்பாலூட்டிவகைகளில் திமிங்கலங்கள் மிகவும் அரிகிப்போய்வருகின்றன. ஜப்பான், நார்வே, கீரின்லாந்து ஆகிய நாடுகள் முன்பு திமிங்கலங்களை கட்டுப்பாடின்றி வேட்டையாடிவந்தன. இதனால் உலகில் திமிங்கலங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இந்நிலையைத் தவிர்க்கும்பொருட்டு சிலவகை திமிங்கலங்களைப் பிடிப்பதை சர்வதேச திமிங்கலபிடிப்பு அமைப்பு தடை செய்தது.

அறிவியலுக்கான வேட்டை

நார்வே, ஜப்பான் நாடுகளில் திமிங்கலக்கறிக்கு ஏகமவுசு உண்டு. சர்வதேச திமிங்கலப்பிடிப்பு தடுப்பு அமைப்பின் கெடுபிடியை அடுத்து, திமிங்கலத்தை அறிவியல் ஆராய்ச்சிக்காக பிடிப்பதாகக் கூறி இந்நாடுகள் திமிங்கலப்பிடிப்பை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஏனெனில் ஆராய்ச்சிக்காக திமிங்கலங்களை வேட்டையாடுவது சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டது. கடந்த ஜீன் மாதம் 20 -24 தேதிகளில் கொரியாவின் உல்சான் நகரில் சர்வதேச திமிங்கலப்பிடிப்பு தடுப்பு அமைப்பின் 57வது ஆண்டு மாநாடு நடந்தது. இந்த மாநட்டில் ஆராய்ச்சிக்காக திமிங்கலங்களை வேட்டையாடும் ஜப்பானை, திமிங்கலவேட்டையை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ள ?!!!! தீர்மானம் இயற்றப்பட்டது. அதற்குமாறாக ஜப்பான் இந்த ஆண்டில் 850 மின்கி திமிங்கலங்களை அன்டார்டிகாவில் வேட்டையாடப் போவதாக அறிவித்தது. இது எப்படி இருக்கிறது பார்த்தீர்களா ? திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்பது போல, நார்வே, ஜப்பான் நாட்டு மக்கள் திமிங்கலக்கறியை உண்ணாமல் புறக்கணித்தால்தான் இதற்கு ஒரு தீர்வு வரும்.

திமிங்கலக்கறிக்கு வேட்டையாடுவது ஒரு புறம் இருக்க, மீன்வர்களின் நீண்ட வலைகளில் மாட்டியும், கப்பல்களின் மீது மோதியும் உயிரைவிடும் திமிங்கலங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. இந்த ஜூலை, 2005ல் கூட எட்டு தென் அட்லாண்டிக் திமிங்கலங்கள் மர்மமான முறையில் இறந்து ஒதுங்கின. இந்த வகை திமிங்கலங்கள் மொத்தம் 250 மட்டுமே இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் தொடர்ந்த இடையூருகளால் கடல்வாழ் உயிரினங்கள் நிம்மதியை இழந்துதான் தவிக்கின்றன. இந்த நீலக்கிரகம் மனிதர்களின் இருப்பிடமட்டுமன்று, பல்லாயிரக்கணக்கான தாவர, விலங்கினங்கள் நம்மோடு வாழ்ந்து வருகின்றன. ஆகவே ஒரு ஒருங்கிணைந்த சமுதாயமாக, மனிதகுலம் மற்ற உயிரிகளுடன் சேர்ந்துவாழ கடமைப்பட்டுள்ளது. இன்று உலகில் உள்ள இயற்கை உயிரி வளங்களை பாதுகாத்து எதிர்காலச் சந்ததிக்கு சேர்க்கும் பெரிய கடமை நமக்கு உள்ளதை மனிதகுலம் என்று அறியும் ?…. முதலில் மனிதர்கள் ஒற்றுமையாக வாழ வழி இருக்கிறதா ?….!!!!

****

முதுகலை மீன்வள அறிவியல்

stingray_mr@yahoo.com

Series Navigation

ரா.சரவணன்

ரா.சரவணன்