குறும்புக் குகநாதன்
சூலைத் திங்கள் 1,2,3 தேதிகளில் தாம்பாவில் நடந்த தமிழ் விழா பற்றிச் சுருக்கமாகச் சொல்வதென்றால் சிம்ரன் வராமல் ஏமாற்றினார். ஜெயகாந்தன் வந்து ஏமாற்றினார். சிம்ரன் நடனத்தைக் கண்டு களிக்கவென்று (மனைவியைக் கூட வீட்டிலேயே விட்டு விட்டு) வந்த என் போன்ற ஜொள்ளு ஆட்கள் சிம்ரன் வரவில்லை என்று தெரிந்ததுமே மனம் சோர்ந்து போனோம். ஜெயகாந்தனைக் கேட்கவென்று ஆவலாய் வந்திருந்த அறிவு ஜீவிகள் ஐந்து நிமிடமே அவர் பேசியது கண்டு மனம் சுருங்கினர்.
எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல , சிம்ரன் மூன்று லட்ச ரூபாய் கேட்டார் அதனால் தான் வரவில்லை , என்று ஒரு நிர்வாகி எரிச்சலூட்டினார். இதற்கிடையில் அமெச்சூர்த் தனமான நிகழ்ச்சிகளும் இருந்தன.
மிக உழைப்புடன் டோரோண்டோ தமிழ்க் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த நாட்டிய நாடகமும் இருந்தது. டோரோண்டோ குழுவினர் ஒவ்வொரு வருடமும் தம் திறமைக்கு மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியைப் பிசிறில்லாமல் எப்படித் துல்லியமாய் நடத்துவது என்று இவர்களிடம் தமிழ்க் கூட்டுச் சங்க நிர்வாகிகள் கற்றுக் கொள்ளலாம். அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. நிகழ்ச்சிகள் யார் பொறுப்பில் யார் அமைப்பில் நடக்கிறது என்று தெரியாமலே அது பாட்டுக்கு நடந்தது. எதெது எந்த விகிதத்தில் நிகழ்த்தப் பட வேண்டும் என்கிற பொறுப்புணர்வு இல்லாமல், ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி அரை மணி நேரம் பேசினார். குமரி அனந்தனின் அருமையான பேச்சு கத்தரிக்கப் பட்டது. கூறியது கூறல் தவிர்க்கப் பட வேண்டும் என்ற உணர்வு இல்லாமல், அவர்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போனவர்களும் உண்டு.
இது அறிவுரைகள் சீசன் போலிருக்கிறது. சுகி சிவம் என்று ஒருவர் வந்திருந்தார். ஆன்மீகப் பேச்சாளர் என்று சொன்னார்கள். அவருடைய தந்தையார் சுகி சுப்பிரமணியம் என்ற அருமையான எழுத்தாளர். சுகி சிவம் அவருக்குப் பெருமை சேர்க்க வில்லை. ஆன்மீகம் அடக்கத்தை வலியுறுத்துகிறது என்று எண்ணிக் கொண்டிருந்த என் போன்றோருக்கு அதிர்ச்சியளிக்கும் படியாக, தன் அகந்தையைக் காண்பித்தார் அவர். பேச்சு நன்றாயிருப்பினும் கேட்பவர்களைச் சற்றே அவமதிப்பது போல், முகவரியைத் தொலைத்து விடாதீர்கள் என்று அறிவுரை வழங்கினார். நகைச்சுவை நடிகர் தாமு மிக அருமையான பல குரல் நிகழ்ச்சியை நிகழ்த்திக் காட்டினார். அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை.மக்கள் மகிழ்ச்சியாய்ச் சென்றிருப்பார்கள். நீங்கள் யாரும் மகிழ்ச்சியாய் இல்லை. அதனால், கல்கி பகவானை (தமிழ் நாட்டில், பகவான்களுக்குப் பஞ்சமில்லை — ‘பகவான்களின் தொல்லை தாங்கமுடியாமல் அமெரிக்கா வந்தால் இங்குமா பகவான்கள் ? ‘ என்று என் பக்கத்திலிருந்தவர் அலுத்துக் கொண்டார்.) சரண் அடைந்து உய்யுங்கள் என்றார். இதற்கு ஜெயகாந்தன் விதி விலக்கு. அறிவுரைகள் வழங்க முடியாது என்று திட்டவட்டமாய்ச் சொன்னார்.
ஹரிணி யின் பாடல்கள் நன்றாய் இருந்தன. நம் ஊர் (அமெரிக்கா) ராஜாவின் பாடல் நிகழ்ச்சிகளும் நன்றாக இருந்தன. பழைய பாடல்களைக் கேட்கக் காத்திருந்த பலர் சற்றே ஏமாற்றம் அடைந்தனர்.
கவிஞர் அப்துல் ரகுமான் வந்திருந்தார். அவருடைய கவிதைகளின் சில வரிகள் , மற்றபடி சிறப்பேதுமில்லாத கவியரங்கிற்கு உயிரூட்டியது.
இந்த பட்டிமன்றம், கவியரங்கம் எப்போது தான் தமிழ் மாநாடுகளிலிருந்து , ஒழியுமோ தெரியவில்லை. உப்புச் சப்பில்லாமல் பேசிய பட்டி மன்றத்தின் தலைப்பு : ‘ சினிமாவினால் சமூகம் கெட்டுப் போய் விட்டதா ? ‘ பட்டிமன்றத்தால் சமூகம் கெட்டுப் போய் விட்டதா என்று தலைப்புக் கொடுத்தால் நான் பேசத் தயார். கவிதையின் நுனியைக் கூடத் தொடாத மோசமான உரை நடையைக் கவிதையென்று அளித்த உள்ளூர்க் கவிராயர்கள் நடுவில் அப்துல் ரகுமான் நெளிந்தார். கொஞ்சம் தன் வரிகளால் கவிதையைக் காப்பாற்றினார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி எம்.எல்.ஏ வந்திருந்தார். தமிழ் நாட்டின் முக்கியமான இயக்கமாய் புதிய தமிழகம் அமையும் ,அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிற என் போன்றோருக்கு அவர் பேச்சு, கூறியது கூறலாக இருந்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது எனினும் பல முக்கியமான கருத்துகளை அவர் தெரிவித்தார். கேள்வி பதிலின் போது, எப்போதோ செத்துப் போன பழைய வருணாசிரமத்தை இழுத்து ரெண்டு சார்த்துச் சார்த்தினார். தாமிரவருணிப் படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் , மாஞ்சோலை எஸ்டேட் போராட்டத்தின் போது தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அநீதி விளைவித்தவர்கள் நிச்சயம் ‘பழைய வருணாசிரமத் தலைகள் ‘ இல்லை என்பது கிருஷ்ணசாமிக்குத் தெரியாததில்லை. ஜெயலலிதா புதிய தமிழகம் இயக்கத்தை ‘வன்முறைக் கும்பல் ‘ என்று ஏசிய போது தூண்டுகோல் பழைய வருணாசிரமமில்லை. புதிய உடன் பிறவா சகோதரியின் , புதிய வருணாசிரம தர்மம் என்று அவருக்குத் தெரியாததா என்ன ?
இந்த விழாவில் நடந்த இன்னொரு முக்கிய நிகழ்ச்சி ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கம் வெளியீடு. சிறப்பாகத் தயாரிக்கப் பட்ட இந்த மொழியாக்கத்தைச் செய்தவர் ஆனந்த் சுந்தரேசன். அவருடைய மொழியாக்கம் மூலத்தின் உயிரோட்டத்தைச் சிறப்புற வெளியிட்டது. ஆங்கிலப் பதிப்புகளுக்கு இணை சொல்லும்படி அழகிய முறையில் தயாரிக்கப் பட்டிருந்தது. வெளியிட்டபின் ரத்தினச் சுருக்கமாக ஜெயகாந்தன் பேசினார். இதைத் தொடர்ந்து, நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கம் தயாரித்த ‘சுப்பிரமணிய பாரதி ‘ டாகுமெண்டரியின் ஆங்கிலப் பதிப்பு வெளியிடப்பட்டது. அதிலிருந்து 15 நிமிடங்கள் காட்டப்பட்டன. முழு டாகுமெண்டரியையும் காட்டியிருந்தால் ஒரு முழுமையான நிகழ்ச்சியைப் பார்த்த திருப்தி கிடைத்து இருக்கும்.
ஆதிரை என்று ஒரு பெண் நிகழ்ச்சி நடத்திக் காண்பித்தார். இளம் மேதை என்று சொல்ல முடியாது. ஆனால் நல்ல ஞாபக சக்தி. மேடைப் பயம் இல்லாமல், தன் தந்தை கண்ணப்பனின் கேள்விகளுக்கு பதில் சொன்னாள் அந்தப் பதினைந்து வயதுப் பெண். இந்த நிகழ்ச்சி பலருக்குப் பிடித்திருந்தது. ஜெயகாந்தன் நாவல்கள் தொடங்கி, நீரின் பெயர்கள் தமிழில் எப்படி வழங்குகின்றன என்று பட்டியலிடுவது வரையில் ஒப்பித்தாள். அதில்லாமல், சில பாடல்களையும் ராகங்களையும் சொல்லிச் சென்றாள்.
‘திருவிளையாடல் டாட் காம் ‘ என்ற கிண்டல் நாடகம் நிகழ்த்தப் பட்டது. கன்(GUN)னைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று சொல்லும் நக்கீரர் நமக்குப் புதிதில்லையா ? தருமியாக நடித்தவர் அருமையாய் எழுதித் தயாரித்திருந்தார்.
சிறப்பாகத் தயாரிக்கப் பட்ட திருக்குறள்-தமிழர் கையேடு வெளியிடப் பட்டது. அழகப்பா ராம் மோகனின் சிரத்தையான முயற்சியில் வெளிவந்த இந்த நூல் ஒவ்வொரு தமிழர் கையிலும் இருக்க வேண்டிய நூல். இது பற்றி எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் அதையும் மீறி இதன் பின்னால் இருக்கிற உழைப்பையும், கனவையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
வேட்டி கட்டுவது தான் தமிழ்ப் பண்பாடு என்று எண்ணிக் கொண்டிருந்த ஒருவர், முக்கிய நிகழ்ச்சியின் போது , முன் வரிசையில் அமர்ந்து குரங்கு சேஷ்டை செய்தபடி இருந்தார். சாக்ரடாஸ் , கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கிற தமிழ் பீடம் பற்றிய , முக்கிய அறிவிப்பு ஒன்று செய்யும் போது , அவரை இழுக்காத குறையாக இழுத்து மேடைக்கு வெளியே வரச் செய்தார் இவர். இதனால் நிகழ்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. இவர் தமிழ்க் கூட்டுச் சங்கத் தலைவராகவும் இருந்தவராம். கருத்துகளுக்குச் செவி சாய்க்கப் பொறுமை இல்லாதவர்கள் , பண்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் – பண்பாடு கற்றுக் கொள்ள முடியாதவர்கள் வெளியே நின்று கொள்ளலாம்.
மிகச் சிரமங்களுக்கிடையில் இந்தியாவிலிருந்து நாம் அழைக்கிற விருந்தினரைச் சரியாக நடத்தி அவர்களை முழுக்கப் பயன் படுத்திக் கொள்ள வேண்டுமானால், நேரத்தை நிர்வகிக்கிற திறன் மிக அவசியம். துரதிர்ஷ்டவசமாக இந்தத் திறன் இந்த விழாவில் வெளிப்படவில்லை.
சில அபஸ்வரங்களை நீக்கிவிட்டுப் பார்த்தால், அருமையான சாப்பாடு, இனிய ஃபுளோரிடா வெயில் , சில நல்ல நிகழ்ச்சிகள், நண்பர்களுடன் உரையாடல் , கண்ணுக்கும் காதுக்கும் விருந்து, இந்த விழா.
திண்ணை
|