அப்துல் கையூம்
அன்று சித்ரா பெளர்ணமி. நின்றிருந்தவர்கள் நிலா ரசிகர்கள். நிலா ரசிகர்களில் நானும் ஒருவன். நிலாப் பெண் உலா வரும் நேர்முகக் காட்சியை கலாரசனையோடு கண்டு களிக்க வளாகத்தில் வந்தவர்கள்.
வந்தவர்கள் அனைவரும் காதலர்கள். காதலிக்கத் தெரிந்தவர்கள் அல்லது காதலில் திளைத்தவர்கள். சொல்லுங்கள்; யார்தான் காதலிக்கவில்லை? நேரமில்லாதவனும் காதலிப்பதுதான் விந்தையிலும் விந்தை!!
குழந்தைகள்; இளவட்டங்கள்; முதியோர்கள்; எல்லோரும் காதலர்கள்தானே? இதயம் என்ற ஒன்று இருந்தால் காதல் வரத்தானே செய்யும்?
ஒப்பிலா அந்த ஒப்பனை மாடத்தில் ஒய்யாரமாய் நிலா வந்து தன்னை அழகு திருத்திக் கொள்ளும் அற்புதக் காட்சியை அனுபவிக்கத்தான் இந்த அட்டகாச அணிவகுப்பு.
எனக்கு நிலா உலா கண்டதும் அளவிலா சந்தோஷம்; நிலையிலா உற்சாகம். மனதிலே மத்தாப்பு. பார்த்திராத பரவச பூத்திரி.
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகை உளவு பார்க்க சுற்றிலும் ஒற்றர்கள் கூட்டம். ஆம் ! எண்ணிலா விண்மீன்கள். மண்டபமெங்கும் கண்சிமிட்டிகளின் கண்கொள்ளா பிரதிபலிப்பு.
‘அழகின் சிரிப்பை’க் கண்டு களிக்க அக்கூட்டத்தில் பாவேந்தன் இல்லை. கொள்ளை கொள்ளும் வெள்ளைப் பளிங்கில் ஆங்காங்கே திட்டுத் திட்டாய் அப்பியிருந்தன கண்கள். கண்டவர்கள் கண்ணப்பர்களாக மாறியிருந்தனர்.
வைத்த விழிகள்; தைத்த விழிகளாக, வச்சப் பார்வைகள்; மிச்சப் பார்வைகளின்றி தீர்ந்து போயிருந்தன. கவிக்கொம்பன் கம்பனிருந்தால் கவிதை புனைந்திருப்பான் ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்று.
ஆனைப் பசிக்கு சோளப் பொறியாய் விழுங்க விழுங்க விழிகளுக்குத் தாகம். அகோரப் பசியைத் தீர்க்கும் அட்சய பாத்திரமாய் மாறியிருந்தது தாஜ்மகால். பசிப்பிணி போக்கும் பளிங்குப் பழரசத்தை பருகின பரவசக் கண்கள்.
நிலவும் பெண். தாஜ்மகாலும் பெண். பால்நிலா பதுசாய் வைத்தது பூனைப்பாதம். அவனியெங்கும் பவனிவந்த நிலாப் பெண்ணுக்கு உலா வந்த களைப்பு கலைந்தது. மேக முக்காடிட்ட மோகனத்தைக் கண்டதும் ஆகாய நிலாவுக்கு ஆனந்தத் தாண்டவம்.
நிறம் மாறும் ரசவாதம் நிமிடத்தில் நிகழ்ந்தேறியது. பளிங்குக்கூடம் ஆனது பரிசோதனைக் கூடம். மனிதன் நிறம் மாறினால் பச்சோந்தி என்று துச்சமாய் வெறுத்த மனது இந்த பச்சோந்தித்தனத்தை இரசித்து இலயித்தது.
தாஜ்மகாலின் பளிங்குக் கிண்ணம் பொன் வண்ணம் மின்னும் கன்னமாய் சுண்டிப் போனது. நாணந்தான் வேறென்ன? “பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ” என்று கண்ணதாசன் பாடியது எண்ணத்தை கன்னமிட்டது.
மும்தாஜ் ஓர் அழகியாம். முள்ளை முள்தான் எடுக்கும்; வைரத்தை வைரம்தான் அறுக்கும். ஆஹா.. அழகுக்கு சமர்ப்பணம் இந்த பேரழகு !
உயிராயிருந்த அகலிகை கல்லானது புராணம் ! உயிரில்லாத கற்கள் உயிரோட்டமானது வரலாறு ! அது சாபம். இது வரம்! பெருந் திறம். தனித் தரம். புகழ் நிரந்தரம்.
கற்கள் பேசுகிறதென்றால் கடினம்தான் நம்புவது. எல்லா மொழியும் பேசியது; எல்லோருடனும் பேசியது. எல்லா நேரமும் பேசியது. இசைக்கு மொழியேது? கலைக்கு மொழியேது?
பல்லவனின் கைவண்ணத்தில் பேசியது கருங்கற்கள். ஷாஜகான் பேசவைத்தது சலவைக் கற்கள். கனக விசயனின் தலையில் ஏற்றிய கற்கள் அவனை தலை குனிய வைத்த கற்கள். இக்கற்கள் ஒவ்வொரு இந்தியனையும் தலை நிமிர வைத்த கற்கள். உலக அதிசயங்களில் ஒன்று. முதல் ஒன்று. இந்தியத் தாய்க்கு சிந்து வழி வந்த அந்த மன்னன் தந்து போன சுந்தர மகுடம்.
தூக்கும் கனத்தில் இருந்தால் இதையும் கோஹினூராய் தூக்கி இருப்பானோ அந்த பறங்கித் தலையன்?
சீனாக்காரன் சிலையாகிப் போக; பிரஞ்சுக்காரன் பிரமித்து நிற்க; அரபுக்காரன் அண்ணாந்து வியக்க; அமெரிக்கன் அதிசயித்து நோக்க; மொழிகள் முக்காடிட்டு மெளனராகம் இசைத்தன.
குடைந்தெடுத்து பதிக்கப்பட்ட நவமணிக் கற்கள் பிரெய்லி மொழியும் பேசியது. தொட்டனைத்தூறும் மணற்கேணியாய் பார்வையற்றவர்களுக்கும் பழம்பெரும் வரலாற்றை பாடம் புகட்டியது. விரல்களுக்கும் வியாக்யானம் தரும் விந்தையல்லவா அது?
ரத்தினக் கற்களால் வித்தைகள் புரிந்த அந்த சித்திரக் கைகளை முத்தமிட வேண்டும். யார் மனதிலோ அன்றுதித்த அந்த உத்தம எண்ணம் இத்தரையில் முத்திரையாய் இன்றளவும் நின்றுலாவும் காதற் சின்னம்.
இயற்கை மட்டுந்தான் அழகா? செயற்கையும் அழகுதான் என்று சொல்லாமல் சொல்கிறதே? இது மனிதப் படைப்பு. படைப்பிலே ஓர் அதிசயம். அதிசயங்களிலே ஒரு கிரீடம். கிரீடங்களிலே முதற்இடம். முதற் இடம்தந்த முன்னோனை வாழ்த்தியது நெஞ்சம்.
மூலப்போலிகை (Cloning) முயன்றும் முடியாத முகலாயச் சின்னம். நகலில்லா நளினம். களங்கமிலா காலப் பெட்டகம். கவிஞனுக்கு கற்பனையூற்று. காலங்காலமாய் களிப்பூட்டும் கலைப் பொக்கிஷம்.
அனார்கலிக்காக எழுப்பிய கற்கள் காதலுக்குச் சமாதி. மும்தாஜுக்காக எழுப்பிய கற்கள் காதலுக்கு மரியாதை. உயிரற்றுப் போன சடலத்திற்கு உயிரோட்டம் நிறைந்த ஒரு நினைவு மண்டபம்.
தாஜ்மகால் ஒரு காதற் காவியம். கவினோவியம். இலக்கணப் பிழை ஏதுமிலா இலக்கியப் பேழை. எதுகைக்கேற்ற மோனை, மோனைக்கேற்ற எதுகை.
நாற்புற வாயிலும் நாற்சீர் விருத்தமாம் நள வெண்பா. மைய அறை – எண்சீர் விருத்தம். இரட்டைக் கிளவியாய் கல்லறை. அதில் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமாய் தொக்கி நிற்கும் ஷாஜகானின் சமாதி. பிற்பாடு நேர்ந்த பொருத்தமிலாச் சேர்க்கை.
தாஜ்மகால் ஒரு வடிவக் கணித அகராதி. அட்சரம் பிசகாத சமச்சீர் கோணங்களின் ஜாலங்கள். பரிவட்டம் ஜொலிக்கும் ரசமட்டம்.
ஆயிரம் பிகாஸோக்கள், ஆயிரம் ரவிவர்மாக்கள், ஆயிரம் லியோனார்டோ டா வின்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய கலைப் படைப்பு. பதினேழாம் நூற்றாண்டிலிருந்து பார்வையாளர்களை கவரும் பிரமாண்ட ஓவியக் கண்காட்சி.
கல்லறைப் பெட்டியல்ல அது. விலையுயர்ந்த கற்களின் வேலைப்பாடுகள் நிறைந்த அழகு தேவதையின் ஆபரணப் பெட்டி.
கங்கையை தன் சிரத்தில் சூடிகொண்ட சிவனைப்போல, யமுனையும் தன் நதிதீரத்தில் தாஜ்மஹலை முடிமகுடமாய் சூடிக் கொண்டது.
பதினான்கு குழந்தைகளை ஈன்றெடுத்த மும்தாஜின் அழகு அவள் வாழ்நாளில் சற்றேனும் குறைந்திருக்கக் கூடும். நாளோரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய் தாஜ்மகாலின் அழகு கூடிக் கொண்டே போவது ஓர் ஆச்சர்யம்.
மும்தாஜின் மூச்சு நின்றது அவளது முப்பத்தொன்பதாவது வயதில். இளமனைவியின் மறைவுக்கு மாமன்னன் வைத்த மலரஞ்சலி இந்த மணிமண்டபம். உலகத்திலேயே காதலுக்காக கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த பரிசு இதுவாகத்தானிருக்கும்.
காதற் சின்னமாய் உலகம் ஏற்றுக்கொண்ட குறியீடுகள் இரண்டு. ஒன்று : இதயம், இன்னொன்று : தாஜ்மகால். இரண்டுமே மகத்தானது. விலையிலாதது. இதில் கனமானது தாஜ்மகால்தான். பரிசுத்தமான காதலுக்கு பரிசுத்தமான வெள்ளை நிறப் பரிசு.
காதலர் தினம் பிப்ரவரி பதினான்காமே? அது தாஜ்மகாலின் உதயதினமாக இருந்தாலென்ன?
vapuchi@hotmail.com
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்………(11 ) – ‘சி.சு.செல்லப்பா’
- தாகூரின் கீதங்கள் – 15 ஏற்றுக்கொள் பூமித் தாயே !
- கருணாகரன் கவிதைகள்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 5 கண்ணனிடம் அடைக்கலம்
- பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா!
- நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE’S DAY )
- பங்கு சந்தை:: ( அகில உலக LOSS வேகாஸ் …? )
- மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் – புத்தக அறிமுகம்
- சம்பந்தமில்லை என்றாலும் – மதுரை மாவட்ட சுதந்திர வரலாறு ( ந. சோமயாஜுலு )
- அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்
- திப்பு: அங்கீகார ஏக்கத்தால் உருவானதோர் ஆளுமை
- சீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும்
- குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரையும் அதன் தனித்தன்மைகளும்
- தாஜ்மகால்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 6
- நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்
- கதை சொல்லும் வேளை … 1
- பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் பொங்கல் திருவிழா 2008
- அஜீவன் இணைய தளம்
- நேசகுமாரும்…. நல்லடியாரும்….
- இக்கால இலக்கியம்,தேசியக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
- திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும்
- நல்லடியாரின் கடிதம் குறித்து – கர்பளா, வஹ்ஹாபிகள், காபா, பாலியல் வன்முறை, மத மூளைச் சலவை
- வந்து போகும் சுதந்திர தினங்களும் குடியரசு விழாக்களும்
- முக அழகிரி – பன்ச் பர்த்டே
- விருதுகளின் அரசியலும் கொச்சைப் படுத்தலும்
- திண்ணைப் பேச்சு – பிப்ரவரி 7, 2008
- கவிதை
- யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு – குறமகள்
- மந்திரம்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! முடத்துவ விண்மீன்களின் ஈர்ப்பலைகள் ! (Gravitational Waves)(கட்டுரை: 15)
- மா.சித்திவினாயகத்தின் மானிட வலிக் கவிதைகள்
- அந்தரங்கம்
- சிங்கப்பூர் – ஜுரோங் தீவு
- பயங்கரபறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்
- வலியும் புன்னகைக்கும்
- குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா?
- Last Kilo bytes – 7 காந்திக்கும் கோட்ஸேக்கும் உள்ள ஓற்றுமை ?/ சீமானின் உரை
- தத்துவத்தின் ஊசலாட்டம்
- தீராக் கடன்
- மாற்று வழி
- சாம்பல் செடி