தவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

ஜெயஸ்ரீ


சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல தளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் பாவண்ணனின் இரண்டாவது கவிதைத்தொகுப்பாக ‘கனவில் வந்த சிறுமி’ வெளிவந்திருக்கிறது. இத்தொகுப்பில் 52 கவிதைகள் அடங்கியுள்ளன. ஒரு வாசிப்புக்குப் பிறகு இவருடைய கவிதையுலகத்தை இயற்கையின் மீதான காதல், நகர வாழ்வு சார்ந்த துயரங்கள், அன்பின் தேடலான ஒரு தவிப்பு என்ற மூன்று பிரிவுகளில் அடங்கக்கூடியதாக வகுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

தொகுப்பில் ஏராளமான அருவியின் சித்திரங்கள் தென்படுகின்றன. அன்புமிகுந்த ஒரு காதலியைப்போலவும் பாசம் மிகுந்த ஒரு குழந்தையைப்போலவும் அருவி கவிஞரைக் கட்டிப்போட்டிருப்பதைக் காணமுடிகிறது. திரிகூட ராசப்பக் கவிராயர் குற்றால மலையின் அழகை வர்ணித்ததைப்போல, அருவிகளின் அழகையும் அவை வழங்கக்கூடிய அனுபவத்தையும் அவற்றின் தோற்றம் எழுப்பக்கூடிய எண்ணங்களையும் பித்து நிலையில் வெளிப்படுத்தும் கவிதை வரிகள் மீண்டும்மீண்டும் படிக்கத் தூண்டியபடி அமைந்துள்ளன. அருவிகளின் சாரலில் திளைத்திருக்கும் எவரையும் இக்கவிதைகள் எளிதில் ஈர்த்துவிடும். தொகுப்பில் நீள்கவிதையாக விளங்கக்கூடிய ‘உயிரின் இசை’ நல்ல வாசிப்பனுபவத்தை வழங்குகிறது. தொகுப்பின் உச்சமாக இக்கவிதையைச் சொல்லலாம். கவிதையை வாசிக்கும்போதே அருவியில் குளித்த ஈரம் சொட்டச்சொட்ட இன்னும் உயரே உயரே மலைமீது ஏறிப்போகும் பிரமை உண்டாகிறது. அந்தப் பிரமை நீடிக்கும்போதே, இது அருவியின் இன்பம் தேடி அலையும் மனத்தின் வெளிப்பாடா அல்லது அன்பை நாடி ஓடும் மனத்தின் தத்தளிப்பா என்று வாசிப்பவரை பரவசமடையச் செய்கிறது.

நகரம் சார்ந்து மக்களின் வாழ்க்கை எந்திரத்தனமாக மாறிவிட்டதையும் வேற்று மாநிலங்களில் போய் வாழ நேர்கிற அவலத்தையும் இவர் கவிதைகள் நேர்த்தியாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. மழையின் அழகைக்கூட ரசிக்கமுடியாத நகர வாழ் மக்களை எண்ணித் துயருறுவதை ‘மழை முடிந்த நகரம்’ என்னும் கவிதை உணரவைக்கிறது. என் முகம், கண்ணாடி ஆகிய இரு கவிதைகளிலும் வேற்று நகரம், வேற்று மாநிலம் சார்ந்து வாழ நேர்வதன் துயரத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. காலம்காலமாக சாதி, மதம், இனம் ஆகியவற்றை முன்னிட்டோ பதவி, புகழ் சார்ந்தோ, எதையோ முன்வைத்து சிறிய பொறியாய் ஆரம்பிக்கின்ற விஷயம் பெரிய கலவரங்களாக வெடிக்கும்போது அத்தருணங்களில் எதுவுமே அறியாத அல்லது எதனுடனும் தொடர்பில்லாத பல அப்பாவிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். பஞ்சாப் கலவரமோ அல்லது குஜராத்தில் நடந்த கலவரமோ அல்லது தற்சமயம் லெபனானில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கலவரமோ எதுவாக இருந்தாலும் அன்பும் மனிதமும் புறக்கணிக்கப்படும் சூழலில் சிக்கித் தவிக்கும் இயலாதவர்களின் ஒட்டுமொத்தக் குரலின் பிரதிபலிப்பாக பாவண்ணனின் குரல் கவிதையில் ஒலிப்பதை உணரமுடிகிறது.

‘கண்ணாடி’ கவிதையில் எந்தெந்த நெஞ்சில் நெருப்பிருக்குமோ, எந்தெந்த கைகளில் வன்மம் வழியுமோ என்று கவிஞர் பதறும்போது நம் மனமும் பதற்றத்தில் மூழ்குகிறது. சக மனிதர்களிடையே நம்பிக்கை குலைந்து ஒருவரோடொருவர் பழகுவதற்கே மனம் சந்தேகம் கொள்ளும் சூழல் எவ்வாறு உருவாகிறது என்ற கேள்வியோடு அலைபாய்கிறது. ஒருவரையருவர் நம்பாத உலகில் எப்படி வாழ முடியும்? அன்பைத் தவிர்த்த இந்த வன்முறைக்கு யார் காரணம்? சாத, மதம், பொறாமை, பழிவாங்குதல் என்ற எந்த உணர்வு மனிதனை நம்பிக்கை இழக்கவைத்து பதற்றமடையவைக்கிறது என்ற துயரம் வாசிப்பவரைப் பற்றிக்கொள்கிறது.

கனவில் வந்த சிறுமி, ஏமாற்றம், அந்த முகம், மெளனம், பாடல் எனப் பல கவிதைகள் மனத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்து கிடக்கும் தவிப்பின் வெளிப்பாடாகவும் வாசிப்பவரையும் அந்தத் தவிப்பில் தள்ளிவிடுபவையாகவும் அமைந்துள்ளன.
வீடு, வாழ்க்கையின் வரிகள் போன்ற கவிதைகள் ஒரு சிறுகதைக்கு நிகரான வாசிப்பனுவத்தைத் தரக்கூடியதாக உள்ளன. நிழற்படம் எடுக்கும்போது தோன்றி மறையும் ஒளிச்சிதறலாக இவர் படம் பிடிக்கும் சில காட்சிகள் வாசகர் மனத்திலும் உறைந்த காட்சிகளாகத் தங்கி விடுகின்றன. வழிபாடு, காலப்பிழை ஆகிய கவிதைகளை முன்வைத்து இதைச் சொல்லத் தோன்றுகிறது.

கவிதைகளில் கையாளப்படும் உவமைகள் எண்ணியெண்ணி ரசிக்கத்தக்கவையாக உள்ளன. நகரும் வண்டிகள் ஆட்களை இறக்கிவிடும் காட்சி ‘வாணலியில் வறுத்த கடலையை முறத்தில் கவிழ்ப்பதைப்போல’ (காத்திருப்பின் கூச்சம்) என முன்வைக்கப்படுகிறது, மாண்டவன் உடல் ‘காக்கைக்கு வைத்த படையல் சோறென’ (வாழ்க்கையின் வரிகள்) காட்சிப்படுத்தப்படுகிறது, இப்படி எடுத்துச் சொல்வதற்கு தொகுப்புமுழுக்க ஏராளமான வரிகள் உள்ளன. ‘அவமானத்தில் மனம் சிறுத்து / தலைதாழ்ந்த நிரபராதியாக / பள்ளம் பார்த்தோடி தேங்கிக் கிடக்கிறது / தார்ச்சாலை நனைத்த மழைநீர்’ போன்ற வரிகள் மனத்தில் மீண்டும்மீண்டும் மிதந்தபடி உள்ளன.

எளிய வார்த்தைகள், எளிய நடை, இதயத்தை ஊடுருவுகிற கூறல்முறை, வரிகளெங்கும் மறைமுகமாக ஒரு நதியைப்போல ஓடுகிற இனிய இசை ஆகியவற்றின்மூலம் வாசகர்களை ஈர்க்கும்வண்ணம் அமைந்துள்ளன பாவண்ணன் கவிதைகள். புத்தகம் மிக அழகான முறையில் அச்சாக்கப்பட்டிருக்கிறது. தொகுப்புக்கு ஒரு அட்டவணை இல்லையே என்பதுதான் குறையாக உள்ளது.

(கனவில் வந்த சிறுமி- கவிதைத் தொகுப்பு- பாவண்ணன், அன்னம் வெளியீடு, மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர்-613 007. விலை ரூ45)

jayashriraguram@yahoo.co.in

Series Navigation

ஜெயஸ்ரீ

ஜெயஸ்ரீ