தலை அசைந்தாடும் மஞ்சள் பெருவெளி – நானும் எனது படைப்புலகமும்

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

க்ருஷாங்கினி


‘நான்’ உயிரானபோது

நாம் அமர்ந்திருக்கும் இந்த அறை, பயணம்செய்துவந்த இரயில், அமர்ந்திருந்த நாற்காலி, வசிக்கும் வீடு, தெரு என அனைத்தும் என்னுடன் இணையும்போது மட்டுமே என்னுடையது என்பதாகக் கூறலாம். இதற்கு முன்பாகவும் பிறகும் இன்னமும் அனேக அனேக உயிர்களின் இருப்பும் இதில் கலந்துதான் இருக்கும். நான் என்பது ஒரு சிறு கண்ணி அல்லது புள்ளி.

கடலில் விழும் மழைத்துளி தனித்து இருக்கவியலாது. வானத்திலிருந்து விழும் போது அது நன்நீராக இருந்தாலும், கலக்கும் கடல் அல்லது நதியின் நீர்ச் சுவையில் அத்துளியும் கலக்கிறது. இதை வேறு எதிர் திசையில் சிந்திக்கும் போது சில துளிகளாக விழுந்த மழையும் சிற்றோடையாகி நதியில் இணைந்து அகலத்தை அதிகப்படுத்துகிறது. எனவே எனது வாழ்க்கை எனது படைப்பு என்பது தனியானதாக இருக்க முடியாது.

எனது சிறு வயது முதலே எப்போதும் குடும்பத்தில் இலக்கியமும் சங்கீதமும் சூழ்ந்திருக்கும். எனது அண்ணன் ஏறக்குறைய பதினைந்து வயது மூத்தவர். எப்போதும் பாரதியின் கவிதைவரிகளை உரத்துச் சொல்லிக்கொண்டே இருப்பார். தனது கவிதைகளில் பாரதியையும் புதைத்துவைப்பார்.

என் மதம் கவிதை

என் குரு இயற்கை

என்று தனது மதத்தைக் கவிதையாக்கி வாழ்வார். நான் கவுனிலிருந்து முழுப் பாவாடைக்கு மாறி சுற்றிலும் கவனிக்க ஆரம்பித்தபோதே அண்ணனுடன் அம்மாவும் கவிதை எழுதுவதை கண்டேன்.

எங்கள் வீட்டில் மிகப்பெரிய படம் ஒன்று இருக்கும். நீண்ட தாடி, மீசையுடன் கூடிய சற்றே கூரிய கண்கள் கொண்ட இரவீந்திரநாத் டாகூரின் படம். அண்ணன் அவரது “கீதாஞ்சலி”யை தமிழாக்கம் செய்துகொண்டிருந்தார். (ஐம்பதுகளில்) நாங்கள் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆதலால் எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு அந்த தாடி வைத்த படம் பெரியாராய்த் தெரியும். ‘ராமசாமி நாயக்கன் படத்தை ஏண்டா மாட்டியிருக்கிறாய்?’ என்று கடுமையாகக் கண்டிப்பார்கள். அவர்களுக்கு பெரியாரையும் தெரியாது டாகூரையும் தெரியாது. எனக்கோ பெரும் அதிசயமாக இருக்கும்.

திலகம், சிங்கம் போன்றோரின் திரைப்படங்கள் போலியானவை என்று அறிந்துகொண்டேன். வாரப்பத்திரிகையில் வரும் தொடர்களோ, சிறு கதை களோ என்னை ஈர்க்காது. அவற்றைப் படிக்க மாட்டேன். தமிழில் மொழி பெயர்க்கப் பட்ட ருஷ்ய மொழி, வங்கமொழி புதினங்கள் என பரந்த அளவிலான எழுத்துக்கள் என் மனதில் ஏறியிருந்தன. சுற்றிவளைத்து விஷயம் கூற முற்பட்டால், “‘லட்சுமி’ நாவல்போல தொணதொணக்காதே” என்று கண்டிப்பு வரும். இயல்பு மனித நிலைகள் பதிவாயின. உயர்வென்று கண்டு கொள்ளப்பட்டன.

‘தமிழில் உரைநடை மேற்கத்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பு, அண்மையில் ஏற்பட்ட மாற்றம். அதற்கு முன்பு, நம்மிடையே கவிதையும் இலக்கணமும் கொண்ட செய்யுள் வடிவமே புழக்கத்தில் இருந்தது’ என்று பாடம் நடத்துவார் தமிழில். ஆனால், தமிழ் புத்தகத்தில் கடைசி சில பக்கங்களே கவிதைக்காக வென்று இருக்கும். அதுவும், பயன்பாட்டிலிருக்கும் சொற்களோ சொற்தொடர் களோ அற்று, வேற்றுமொழிபோல ‘கடக் முடக்’ என்று எளிதில் படிக்கமுடியாத படி.. தலைவனும் தலைவியும், அவர்களது பிரிவும், பெரிதுபடுத்தப்பட்டு பேசப் படும். விட்டுவிட்டுப் போனவனைப்பற்றி எதற்கு வீண் கவலை என்று எரிச்சல் வரும்.

என் மனத்தை பாதித்த தமிழ் பாடல்கள் அல்லது கவிதைகள் என்றால், சிறுவயதில் கற்ற “பனைமரமே பனைமரமே” “சூரியன் வருவது யாராலே” “கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச்சீடன்” “எட்டேகால் லட்சணமே” போன்றவை மட்டுமே. எனவே அந்த சிறு பிராயத்திலேயே சுய சிந்தனைகளையும் மனம் பாதித்தவைகளையும் உண்மையாக பாசாங்கின்றி எழுத வேண்டும் என்ற உறுதி ஏற்பட்டது.எனவே பத்தாவது வயதில் உரைநடை எழுதத் துவங்கினேன், என் வாழ்க்கையைப் பற்றி.

எனது பனிரெண்டாவது வயதில் எட்டாம் வகுப்பில் என்னைக் கவிதைக்குள் இழுத்துப் போட்டவர் வில்லியம் வோர்ட்ஸ் வொர்த். அவரின் ‘டேபோடில்ஸ்’ என்ற கவிதை என் முன்னே மஞ்சள் பெரு வெளியை விரித்தது. ‘த சாலிடரி ரீப்பர்’ கவிதையில் பெண்ணின் தனிமை மனதில் தைத்தது. காட்சிப் படுத்தப்பட்ட வார்த்தை ஓவியம் பச் என்று அப்பிக்கொண்டது. அப்போது முதலே வார்த்தைகள் வண்ணங்களுடன் இணைந்தது. பின் நாளில் ஒரு ஓவியரை விரும்பி மணந்ததற்குக் காரணம் கூட இக் கவியால்தான். வண்ணங்களுடன் இணைந்த வாழ்க்கை வாழ ஆசைப்பட்டேன்.

நான் கவிதைகளை, அகம், புறம், மேல் மனம், ஆழ் மனம் என நால் வகையாகப் பிரிக்கிறேன். சமூகம் சார்ந்து வாழும் யாரும் சமூகத்தை விட்டுத் தனியாக வாழ இயலாது. ஏறி பரண் மீது அமர்ந்திருக்க முடியாது. 12 வயதில் கவிதைக்குள் விழுந்த நான் கவிதை எழுத ஆரம்பித்தது 1982ல் தான். இலங்கை இனப்பிரச்சினையின் போது கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்ட மக்கள். உறங்கிக் கொண்டிருந்த குழந்தைக்கு தன் சாவு எதற்கானது என்று தெரியாமல் புன்னகை உறைந்த முகத்துடன் இறந்து கிடக்கிறது. பெரியவர்களாகி அறிந்தவர்கள் முகத்தில் பீதி, பயம். உறைந்த முகங்கள் எங்கும் நிறைந்த மனித உடல்கள். இது இன்றைய ஈராக்கிற்கும், நேற்றைய உலக யுத்தத்திற்கும், இரட்டை கோபுரத்திற்கும், குஜராத்திற்கும் கூடத்தான்.

எரியும் எண்ணைய் கிணறுகளும்

இரைந்து கிடக்கும் மனிதத் துண்டுகளும்

பகுதி-1

அண்ணாந்து வானம்

பார்த்தமர்ந்திருந்தோம்

அம்மாவும்நானுமாக;

ஆங்காங்கே சில

நட்சத்திரங்களும்

ஆரஞ்சு வண்ணத்து மேற்கு

சூரியனும்.

‘நட்சத்திரங்கள் யார் அம்மா?

மரணம் நட்சத்திரங்களா?”

“ஆம்!

மரணம் தவிர்க்க இயலாதது

மரணம் பயப்படக் கூடாதது மகளே,

இறந்தவர்கள் அடைகிறார்கள்

ஆண்டவனின் அருகாமையை.”

“என் தாத்தா எந்த நட்சத்திரம்?”

விரல் சுட்டிக் காட்டினாள் அம்மா.

ஒன்றை.

எனதாய் எடுத்துக் கொண்டேன்

நான் நினைத்ததை.

அதிலிருந்து எனது ஓவியம்

மலையிடைச் சூரியனும் எப்போதும்

மினுக்கும் நட்சத்திரங்களுமாய்

புறப்பட்டது என்னோடு அநேக

நாட்கள்.

பகுதி-2

அதைக் கடந்து நெடுந்தூரம்

பயணப்பட்டாயிற்று; தெரிந்தும் தெரியாததுமாய்

எனக்கான சதுரம் என்றோ உருவாயிற்று.

ஹாலில் அமர்ந்திருக்கிறேன்

அறையின் மூலையில் அனைவருக்குமான சதுரம்

அறுபது உட்பிரிவுகளுடனும்

வண்ணத்தின் துணையுடனும்.

அனைத்து நிகழ்வுகளும் உடனுக்குடன்

நேரடி தரிசனம் நின்று நிதானித்துப்

பயன் தரும் அனுபவம், பயமும்கூட.

கடவுளோ, விளையாட்டோ, அழகிப்போட்டியோ

எவ்விழாவிற்கும் ஆதி அந்ததிற்கான

வாணவெடிகள் சிதறும் நெருப்புத்

துண்டுகளுடன்.

துணைக் கோளங்களுடன் வான் நோக்கி முழங்க

எரியும் கட்டிடங்களும் சிதறும் உடல்களும்

மின்னி மறையும்.

விண்மீன்கள் கீழிறங்கி

எண்ணிலா உயிரழிக்கும்.

இன்று

எரியும் எண்ணெய் ஆரஞ்சு சூரியனும்

வெடித்துச் சிதறும் நட்சத்திரங்களும்

எல்லாமே

கண் கூசி, மனம் கலங்கி

என்னை வான் பார்க்கவிடாமல்

மண் பார்க்கச் செய்து விட்டன.

_______________________________________________

பதினொன்றிலிருந்து பதினொன்றுவரை

______________________________

வௌவால், தும்பி, வெறும் பறவை

வடிவம் ஏதானால் என்ன

வேட்டைப் பறவைக்கு?

புவிஈர்ப்பு நோக்கி

வழிந்து விழும் பலப்பல

வாழைப் பூக்களின் மேற்புறம்

பல்லாயிர உயிர்களின்

மரண சாசனம் தீர்மானம்.

மனித நேயத்தையும், மரணத்தையும்

சொல்லி அழத் தேவை புதிய

கடவுளும் மதமும்.

________________________________

மரணத்தைப் பற்றி அதிகம் எழுதுகிறேன் என்பவர்களுக்கு என் பதில் மரணத்தைப் பற்றி எழுதாமல் எப்படி இருக்க முடியும்?

மரணத்தை ஊடுருவி

உலகம் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது,

ஆனால்-

தட்டையாக, சக்கரம்போல;

எகிறி வீசுகிறது என்னை, விழவேண்டியுள்ளது

திரும்ப அச்சக்கரம் மீதே.

வாயிலிருந்து நீர்வடிதல், தலைசுற்றல் ஓய்வற்றதாக

வயிறு உள்ளடங்கி எக்கி, இழுத்து மூச்சுவிட

நாக்கு நுரை தள்ளும்- வெள்ளையாக.

வெளி விழுந்து தொங்கிய

நாக்கில் முழுதும் கருமையான முடி.

ஒற்றையாயின் வெட்டிஎடுத்துத் தொடர்பைத்

துண்டிக்கக் கூடும்; கூட்டத்தை அறுத்தெடுக்க

மேலும் மேலும் ‘நறநற’வென

மேலண்ணத்தில் நெருடும்.

கத்தி வைத்து முழுதும் மழிக்க

நாக்கில் ரணமும் ரத்தமும்.

படுக்கை மல்லாந்து மட்டுமே

காலின் கீழே பரப்பிய கூர் கற்கள்

முழங்கால் வரை ஊசிப்படுக்கை

தலை தன்னிச்சையாய் மேலெழும்பி

தத்துக்கிளி போல தனியாய் அடித்துக்கொள்ள

அடுத்தடுத்து அதிர்வு அடங்குவதற்குள்

கழுத்திலிருந்து விடுபடாமல் பசை போட்டு

ஒட்டித் துடிக்கும் தலை.

தலைமாட்டில் பூனைகள் ஆறு

தொடர் குரல் ஒலிகளுடன்;

வண்ணங்கள் பல கொண்டு

கண்கள் நீலமான கருப்புப் பூனை

கீழடிக்கும் தலையைக் கவ்விக்

கடிக்கத் தயாராய் அருகில்.

ஆறும் பங்குபோட ஒன்றாக

அலறி வருகின்றன.

ஓயாத பூனைச் சத்தம் நாராசமாய்

சிலபொழுது ஒற்றையாய்

கிழிந்து தொங்குகிறது.

கால்மாட்டுச் சுவர் நடந்து

மார்மேல் ஏறி எட்டி என் தலையை

விழித்துப் பார்க்கும் விஸ்வரூபமாய்.

கதவு விரியத் திறந்திருக்க

கைப்பிடியற்ற மொட்டைத்தளம்

வெட்ட வெளி மீது கண் நிலைக்க

இழைந்து, மிதந்து மிதந்து நடக்கிறது ஜீவன்

இரண்டாக மடிகிறது உடல், மல்லாக்காய்

மடங்கிய புத்தகம் போல்

மேலெழுந்த தலை கால்பட்டு எம்பும்.

அந்தரத்தில் வௌவால்கள் ஆதாரமின்றி

தலை கீழாய் ஒவ்வொன்றாய்

கீழ் எறிய கருமை கொண்டு

வேகமாக உலோகப் பந்தாகி

பலத்துடன் உடல் மீது விழும்.

வலி, வலி, வலி!

உள்ளும் வெளியும் உணருவதெல்லாமும்

வலி வியாபிக்கிறது சர்வாங்கமும்.

வலி கெட்டிப்படுகிறது

வலி உடற்பையை நிரப்புகிறது.

வலி, கொள்ளவுக்கும் அதிகமாக

வலி வெடித்துப் பரவும்

உச்சத்தில் வினை எதிராகி

பஞ்சாய்ப் பறக்கும் உடல்

மிக மிருதுவான தொடல்

இதமான சூட்டில் முங்கவைத்து

அமைதியைப் பரப்பவிட்டு சுழலில்

அமிழ அமிழ

ஆனந்தம், ஆனந்தம்!

இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக(1985ல்)எழுதப் பட்ட இக்கவிதையை வெளியிட எந்த இதழும் தயாராக இருக்கவில்லை. காலச்சுவடு, அரும்பு முதற்கொண்டு. 2006ல் மணல் புத்தகத்தில் வெளி வந்தது.

உலகின் அனைத்து அசையும் உயிர்களின் பிறப்பும் ஆண் பெண் இணைதலில். திரவம் அடங்கிய முட்டையாகவோ, எலும்பும் சதையும் ஒட்டிய திடப் படிவமாகவோ பெண்ணிண் யோனி வழி உலகம் நுழைதல் என்பதாக இருக்கிறது. ஆனால் மரணம், எங்கெங்கோ, எப்படி எப்படியோ. மரணம் சுகமாகிறது. மரணம் வாழ்க்கையாகிறது. மரணம் உறவாகிறது. மரணம் பிரிவாகிறது. மரணம் முற்றுப் புள்ளி ஆகிறது. மரணம் அவலமாகிறது. மரணம் கொண்டாட்டமாகிறது.

இருத்தல் நிமித்தம்

1) இரையாகும் உயிர்தான்

ஆனாலும் எதிர்த்தல்- எதிர்பார்ப்பில்

கால் உயர்த்தி, தலை நிமிர்த்தி

வாய்கொண்ட அளவு காற்று ஊதி- பயத்துடன்

விஸ்வரூபம் எடுத்த தவளையின்

கால்களுக்கு இடையில்

ஊர்ந்து செல்லும் பாம்பு;

2) மஞ்சளும் வெள்ளையுமாய்

உடலின் இருபுறமும் புரட்டி

வண்ணம் மாறி மாறி

மிதந்தே கரை அடையும்

மற்றொரு ஜீவன்;

3) கல் நிறம் ஒருபுறம்- சட்டென்று

மண்நிறமும், பின்னும்

இடைப்பட்டதாயும்

காட்சியளித்துக் கூட்டம் சேரும்

இன்னும் ஒன்று;

4) வசீகரித்து தொங்கும்

மலரின் அடியில்

வலை பின்னி அமரும்

சிலந்தியும் ஈயுமாக

இரையாகும் கைகோர்த்து

மரண திரவத்தில் ஒன்றாக.

______________________________

‘நான்’ பெண்ணான போது

எல்லோராலும், எப்போதும் தன் உடல் அடையாளம் சுமந்து கொண்டு திரிய முடியாது. உயிர் சுமந்து திரியலாம். ஆனால் அடையாளம் அவமானப் படும் போதும், உடல் மட்டுமாகவே பார்க்கப்படும் தருணங்களில் என்னால் எழுதப் பட்ட கவிதைகளில் சில. பெரும் கூட்டத்தை சாதகமாக்கிக் கொண்டு, கை வீசி நடப்பது போன்ற பாவனையில் கடந்து செல்லும் ஒவ்வொரு பெண்ணின் பின் புறத்தையும், தட்டித் தட்டிச் செல்லும் மனிதனின் மனத்தில் பெண் எப்படிப் பதிவாகி இருப்பாள். மறு உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட உடல் இணைப்பு, உல்லாசமாகிப் போனது மனிதர்களுக்கு மட்டும்தான், விலங்குகளுக்குக் கிடையாது. எனவே மனிதனுக்கு எப்போதும் தேவைப் படுகின்றன பெண் உடல்கள். ‘பெரெண்ட் லோடிங் மெஷின்’ சிலேடையில் சொல்லப்பட்ட கவிதை இது எட்டேகால் லட்சணமே என்ற அவ்வையின் பாணியில். இப்போது நான் பெண்ணாகிறேன்.

FRONT LOADING MACHINE

அடைத்து உள் செலுத்தி- கதவை

அழுத்தி மூடியிட்டபின்

நீரும் நிழலும் அதற்குள்ளேயே

திரவத்தில் மிதக்கும்,உருளும், புரளும்;

உரிய நேரம் வரும்வரை

சுழன்று சுழன்று மேலெழும்பும்.

அறைக்குள் சிறைவாசம்.

சிறுதுளை வழியே உள்நீர் வெளிவழிய

உச்சகட்ட அலறலுக்குப்பின்

கையிரண்டு இழுத்துப்போட

சுற்றிய கொடியும் ஈரமணமுமாக

ஏந்திய பாத்திரத்தில்

இறங்கிக் கீழே விழும். ( நவீன விருட்சம்)

______________________________________________

மரம் நடு விழா வைபவத்தில்

நட்டு நிறுத்தப்படுகிறது;

விழா எடுக்காமலும் தெருவோரம்

ஏதோ ஒரு பெயர் தாங்கிய

இரும்பு வேலியின் நடுவில்.

நீர் கோராது அதிகம்

விலங்குகள் அண்டாது, நின்று

வேகமாய் வளரும்;

கிளை நுனியில் பெரிதாய் விரிந்து

கண் பறிக்கும் கவர்ச்சி காட்டாமல்

வண்ணத்தால், வாசனையால்

திசை திருப்பாது மெல்லிய சிறு பூக்கள்

உச்சியில் பூக்கும், பூப்பது தெரியாமல்.

தரை உதிரும் சிறு பூக்கள் கொண்டு

கண்டடையலாம் இதன் வசந்தத்தை.

மேன்மேலும் வளர்ந்து வானெட்ட

முயலாது ஒருபோதும்.

பாங்காக ஐந்தடிக்குள்

உடலை நிறுத்தி வைக்கும்

கிளை விரித்து நிழல் கொடுக்கும்

பெரும் கொடையாய்.

ரயிலடியில் ஒன்றுக்கும் மேலாய்

ஒரே சிமென்ட் வட்டத்துக்குள்

முரணின்றி இணைந்து வாழும்.

எல்லோருக்கும் உகந்ததாய்,

யாருக்கும் உறுத்தாததாய்

ஆங்காங்கே வளர்ந்து நிற்கும்

தன் கண்கள்

இமை மூடி சிதறவைக்கும்,

காலடித் தளம் பரப்பி.

ஆனாலும்கூட-

இட நெருக்கடியில் சற்றே இடம் மாறி

குறுக்காக வளர முற்பட்டால்

சட்டென்று முறிக்கப்பட்டு

மொண்ணையாகவே நிற்கும்

இப்புன்னை-

பெண்ணைப்போல

__________________________________________________

‘நான்’ கனவான போது

உடல் ஆணாகிறது, பெண்ணாகிறது. வெறும் சொற்களாகிறது. உயிரற்ற தாகிறது. உடல் அற்றதாகவும் மாறிப்போகிறது. காலமும் அப்படியே. வாழும் காலத்தை விட்டு விலகி இறந்த காலம் நோக்கி எப்போதும் நகர்கிறது மனம். தெருவில் அலைகிறது. உள்ளே அடைகிறது. இடம் வலமாக மாறுகிறது. மேல் கீழாக எதிர் எதிர் திசையில் சுழல்கிறது. கவிதை உருவான காலமும், கவிதையின் கருப் பொருளின் காலமும், கவிதை எழுதப்படும் காலமும், கவிதை அச்சாகும் காலமும் கட்டுப் படாமல் திரிகிறது. கவிதையின் கருப்பொருள் காலம் நோக்கி மனம், உடல் மாறிப் போகிறது. பின் வெளியேறி வேறு வழியாக உள் நுழைகிறது. குளவி கூடு கட்டும் போது சுழன்று சுழன்று கட்டும் இடம் நோக்கி மண், புழு சுமந்து வருவதைப் போல வெவ்வேறு வழிகளில், ஆனால் ஏறக் குறைய அருகருகே சுற்றி வருகிறேன்.

உடலில், நகம் வளருகிறது, தலை முடி ஐந்து ஆண்டுகள் தொடர் வளர்ச்சியில் இருந்து, பின் உதிர்ந்து மறுபடியும் வளருகிறது அதே இடத்தில். பாம்பு தோல் உரிக்கிறது, அதே வண்ணம் கொண்ட மேல் தோல் போர்த்திய உடலுடன். சில பூச்சிகள் தம் பழந்தோல் உரித்து நிறமற்றதாக அலைகின்றன சில நாட்கள் வரை. மனித மனம் மாற்றம் கொள்ளத்தானே வேண்டும்? வலிந்ததாக இல்லாமல் தன் இயல்பில் “தானுரித்து” வெளிவரத்தான் வேண்டும்.

இப்போதைய என் கவிதைகளில் அரசியலும் சற்றே எள்ளல் சுவையும் கொண்டு வருகிறேன். பெரும் கோபம் நகைச் சுவையாகிறது; பெரும் அமைதி ஓசையாயும் பெரும் ஓசை நடுவில் அமைதி பிந்துவாய் இருப்பதைப் போன்றும் கவிதைகள். எப்போதும் கவிதைகள் ஒரேபோல இயங்க வேண்டுமா என்ற கேள்வி, எனவே இலேசான மெலிந்த விஷயங்களைக்கூட கவிதையில் கொணர முயல்கிறேன்.

மலைக் குடை

“ எப்படி நனையாமல் வந்தாய்?

‘எலக்ட்ரிக் ட்ரெயின்’இல் ஏறிக்கூட

இருக்கமாட்டாய்!- மழை

பின்தொடர்ந்து வந்ததா?”

“திரிசூல மலையை குடையாக்கினேன்

மாதவனைப்போல;

ஆனால், மலை

முன்பார்வைக்கானதுபோல

உப்பி முழுதாய் இருக்கவில்லை;

கல்லெடுத்துக் கல்லெடுத்து- பின்

அதுங்கிச் சரிந்திருந்தது.

ஆனாலும் பரவாயில்லையென

தெரு ஓடிய நாய் மீதேறி

குடையுடன் வழியேகினேன்.

நாய் முனகத் தொடங்கியது,

“நீயும் மலையும் சேர்ந்தென்னை

எத்தனை நேரம் அழுத்துவீர்கள்?

மேலும், மலையே நசுங்கி

மழையைத் தடுக்காமல்

சரித்துக் கொட்டுகிறது- என்

நீண்டிருக்கும் மூக்கின்மீது”

மலையை எடுத்து நாயை விடுவித்து- மின்சார

இரயில் உள்நுழைய,

குறுக்கத் தடுத்தது மலை;

எப்படி மடிப்பது? சற்றே தடுமாறி

காற்றை அடைத்து மூடிய

வாயைத் திறக்க- மலை

பெருமூச்சு விட்டே

சப்பித் தட்டையாயிற்று.

மடித்த மலையைக் கதவோரம்

சற்றே உயரவாக்கில்

சார்த்திவைத்து நீர் இறங்க,

தாம்பரத்தில் மறந்து

நானிறங்கிப் பின் தேட,

மலையை யாரோ

சுருட்டிக்கொண்டு சென்றதாக

அருகமர்ந்திருந்தவர் சொன்னார்;

உன் உறவில்லையா அவர்?”

___________________________________

ஐயனே

ஒரு சில மழைத் துளி

தலை மிசை வீழின்

நிற்காத அடுக்குத் தும்மல் – பின்

உடன் ஓடும் மூக்கருவி.

கைக்குட்டை, மிருது காகிதம்,

முக்கி எடுத்தாற்போல்

முற்றும் நனைகிறது, தலைக்கனம்.

சிவனே, உனக்கோ!

சடையிடை இடையறா

பிரவாக நீர் ஊற்று,

முடி நனைத்து – பின்

தலை இறங்கலாம்.

ஸ்தலம் புகழ் பெற்றால்

சன்னதி, மற்றும் சுற்றுத் தெருக்களிலும்

நிறுத்தம், வழி செல்லும் வாகனங்கள்

நின்று பின், ஓடும் — வழியெங்கும்

தூசு, ஒலிப்பான், மன மாசு.

இரவும் பகலும், எந்நேரமும்,

கூட்ட நெரிசலின் நாற்றம் போக்க

உயர்ந்த கோபுரத்தின் கீழ்

ஓலமிட்டு ஓடும் ஏ.சி.

அன்றாடம் அபிஷேகம்.

சிவனே, நீயோ!

அங்கத்தில்

அரவோனைச் சுமக்கிறாய்,

அரைஞாணும், முப்புரியும் அதுவே.

இடையிலோ எனில், புலித்தோலை

விரும்பிப் போர்த்தி, ஒரு காலை

உயர்த்தி எப்போதும்

சுழன்றாடுகின்றாய்!

உடம்பில் ஒரு சாணளவும்

வஸ்திரம் அற்ற நீ மட்டும்

அருவி மூக்கிலிருந்து

தப்பிப்பது எங்கனம்?

சற்றே ரகசியமாய் கூறு

எனக்கு மட்டுமாவது.

___________________________________

அன்புக்கட்டளை இடப்பட்டது அனைவருக்கும்

வீடுகளில் கட்டாய சேமிப்பாக

மழை நீரை நிரூபிக்கக் குழிக்கருகில்

புகைப்படமும் காசுமிணைத்துக்

காட்டப்பட்டது அலிவலக சிறு பிறைகளில்,

எப்போதும் ஓடும் வாகனங்களில்,

சிவப்பு விளக்குக்கு இடையிலும், பஸ்ஸின்

இருக்கைகளின் மீதும், எங்கெங்கும்

நீர்சேமிப்பு எடுத்துரைத்தார்.

‘எங்கள் வீடு சேமிக்கப்பட்டதுதான்

உங்களது?’ கேள்விக்குறியுடன்

எங்கும் தொடர்ந்து நிற்கும்

குட்டிச் சுவரிலும்,

முட்டும் நிலை வாசல்மேலும்

அழைப்பு மணிக்கருகிலும்

‘பிட் நோட்டீஸாக கடந்துபோகும்

அவசரத் தருணங்களிலும்

கொளுத்தும் வெயிலின்போது

குற்றவுணர்வுகளானோம்

சேமிப்பு சரியில்லையோவென.

சிறுதுளி பெரும்சேமிப்பு

ஆவது எப்படி? நிலத்தடி நீர்

ஏறுவது எப்போது? தாமதமோ?

யோசித்தோம் யோசித்தோம்

பின் யாசித்தோம், ‘பின் வழி’

பெற்றோம் அரசியலாளர் அனுமதி.

பெரும் பள்ளங்களையும் சிறுவழித்

தடங்களையும் மடக்கி, அதனை

அதனை மேடாக்கிப், பிறகு

கொத்து வீடுகளாக்கி தொடராக்கி

பற்றுடன் வீடுகள் அடுக்கி,சுற்றிலும்

மாநகரின் அரணாக்கி ஒரு

துளியும் எங்கும் நீர்

வெளிவராவண்னம் பெருந்தொட்டியாக்கி

மாநகரில் நீர் சேமிக்கிறோம் நாம்

பெரும் எத்தனத்துக்குப் பின்

இப்போதோ?

எங்கும் காட்டுகிறார்கள்

நீர் சேமிப்பை படகு ஓட்டவும்

துடுப்புப் போடவும் எனவும்.

அடுத்த ஆண்டு சொட்டும் நீர்

சேகரம் ஆகாது என உறுதி கூறி

வீணாக்குகிறார்கள் உழைப்பை

அடிமைக்கோ ஒரு சிறு ஐயம்

நேற்றொரு பேச்சு இன்றொரு பேச்சா?

புரியவில்லை சாமி

_____________________________________

எல்லா நேரத்திலும் நான் பெண்ணல்ல, எல்லா நேரத்திலும் நான் எழுத்தாளரல்ல. நினைவு தெரிந்த நாள் முதல் நாம் கனவுகள் காண்கிறோம், ஆனால் கனவுகளில் வரும் ‘நான்’கள் எந்த உருவத்தையும் எந்த நிறத்தையும் எந்த வயதையும் கொண்டிருக்கும்? அது போன்று கவிதையும் நானும். கவிதை வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்குமான வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது. வாழும் உரிமையும் இருக்கிறது. நாம் அதை மனதில் கொள்ளவேண்டும். மனிதன் தனக்கு இடையூறாக இருக்கிறது என்று எண்ணுபவைகளையும், பயனற்றது எனக்கருதும் எதையும் அழிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. இயற்கையை தனக்கு மட்டுமே உரித்ததாக எண்ணுகிறான். நாய் வீட்டைக்காக்கும், பசுபால் கொடுக்கும், தென்னை இளநீர் தரும் என அனைத்தையுமே தனக்கானதாக வரித்துக்கொண்டு அழிக்க முற்படுகிறான். இது நுனி மரத்தில் அமர்ந்துகொண்டு அடி மரத்தை வெட்டுவதற்கு சமமானது.

இன்னமும் சில வரிகள். படைப்புலகில் பெண்கள் எப்போதும் எண்ணிக் கையில் குறைவுதான். மற்ற கலைகளில்கூட அவ்வாறே. ஒரு பெண் எதை எழுதவும், எழுதாமல் இருக்கவும் அவளுக்கான உரிமையை யாரும் வழங்கத் தேவையில்லை. மேலும், பெண் என்பதால் ‘பெண்ணியம்’ சார்ந்த படைப்புகள் மட்டுமே எழுதப் படைக்கப் பட்டவள் என்பதும்கூட ‘பசு பால் கொடுக்கும்’ என்பது போலத்தான். பெரும் அறிவுஜீவியும் இதைத்தான் அவளிடம் எதிர் பார்க்கிறார். உலகிலுள்ள எதைப்பற்றியும் எழுத, பேச உரிமை பெற்றவள் பெண். மேல் சீலை அணிய ஒரு போராட்டம் நடத்த வேண்டியிருந்தாற்போல அதைக் அகற்றவும் கூட ஒரு பெரும் போராட்டம் மேற்கொள்ள வேண்டிவருகிறது.

_______________________________________________________________________________________

( திராவிடப் பல்கலைக் கழகத் {சீனிவாசபுரம், குப்பம், ஆந்திரப் பிரதேசம், தென் இந்தியா} தமிழ்மொழி மற்றும் மொழிபெயற்புத் துறையும், காலச்சுவடு அறக் கட்டளையின் பாரதி 125 நினைவும் இணைந்து நடத்திய இரு நாள் தேசியக் கருத்தரங்கில் (30-31மார்ச்-2007) “புதுக்கவிதையில் பெண் கவிஞர்கள்” என்னும் பொருளில் படித்த கட்டுரை)

க்ருஷாங்கினி

Series Navigation

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி