சேவியர்
காதுக்குள் டன் டன் னாய் ஈயம் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது டாக்டர் சொன்ன வார்த்தைகள்.
குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கவில்லையாம்…
காலை யாரோ பாதாளத்திலிருந்து இழுப்பது போல் இருக்கிறது.
நாளை மனைவிக்கு பிரசவம் என்று நாள் சொல்லியிருந்தார்கள், அதனால் தான் இன்று மனைவி பிாியாவுடன் வந்திருந்தான் விக்னேஷ்
….. சிாிப்பும் கனவுகளுமாக வந்து செக்கப் பண்ணியபோது தான் டாக்டர் முகம் மாறத் துவங்கியது….
எதிர்பார்க்கவே இல்லை….
திடாரென்று இப்படி சொன்னபோது இடிவிழுந்தது போல் இருந்தது…
டாக்டர்…. நீங்க என்ன சொல்றீங்க ?
ஒவ்வொரு மாசமும் வந்து டெஸ்ட் பண்ணிட்டிருக்கிறோமே…
கடந்தமாசம் வந்தப்போ கூட எல்லாமே நார்மலா இருக்குன்னு சொன்னீங்க ?
வார்த்தைகள் தடுமாறி தடுமாறி வந்தது…..
அம்மா அதிர்ந்து போனார்கள்…. பிாியாவுக்கு விஷயத்தைச் சொல்லவில்லை. அவள் வெளியே உட்காந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
பேசிக்கிட்டிருக்க நேரமில்லை விக்னேஷ்… உடனடியா பிரசவ அறைக்கு கொண்டுபோகவேண்டும்….
நர்ஸ்….பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ் திரும்பினாள்…
சொல்லுங்க மாடம்…
பிாியாவை லேபர் வார்டுக்கு கொண்டுவாங்க…
டாக்டர் திலகவதி அதற்குமேல் எதுவும் பேசவில்லை….
எல்லாம் அவசர கதியில் நடக்கத் துவங்கியது……
டாக்டர்…. ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாமா டாக்டர்… முன்னால் போய்க்கொண்டிருந்த திலகவதியை பின்தொடர்ந்து ஓடி கேட்டான் விக்னேஷ்…
அதெற்கெல்லாம் இப்போ நேரமில்லை சார்…. ஸ்கேன் எடுக்கணும்ன்னா டவுண்ல இருக்கிற ஆஸ்பிட்டலுக்குப் போகணும்… பிளீஸ் கொஞ்சம் பதட்டப்படாம இருங்க…. நான் பாத்துக்கறேன்.
எப்படி பதட்டப்படாமல் இருப்பது….
பிறக்கப் போகும் குழந்தை பற்றிய கனவுகளோடு இருக்கிறது மொத்தக் குடும்பமும்…
முதல் முதலாகப் பிறக்கப் போகும் குழந்தை….. தாத்தா பெயர் வைப்பதா, பாட்டி பெயர் வைப்பதா என்பதில் ஆரம்பித்து எதிர்காலம் மொத்தமும் பட்டிமன்றம் போட்டு பேசி முடித்துவிட்டு மழலைக்காகக் காத்திருக்கிறது என் கூட்டுக் குடும்பத்தின் மொத்த ஜ ‘வன்களும்.
ஆண்டவனே எதுவும் ஆகிவிடக் கூடாது… என் பிாியாவுக்கும் எங்கள் குழந்தைக்கும்….
இதயம் அரற்றியது.
‘பிாியா… இந்தாங்க, இந்த கவுண் போட்டுக்கிட்டு லேபர் ரூமுக்கு வாங்க ‘…
நர்ஸ் சொன்னபோது பிாியாவுக்கு எதுவும் விளங்கவில்லை…
இல்லைங்க, எனக்கு நாளைக்குத் தான் பிரசவம்… இப்போ வலி ஏதும் வரவில்லை.
சொல்லிவிட்டு சிாித்த பிாியாவை கொஞ்சம் பாிதாபமாய் பார்த்துவிட்டு நர்ஸ் சொன்னாள்…
இன்னிக்கே பிரசவம் நடக்கணும்னு டாக்டர் சொல்றாரு.. தேவைப்பட்டால் ஆபரேஷன் கூட நடக்கலாம்…
ஏன்..ஏன் ? என் குழந்தைக்கு ஏதாவது ?
இப்போது பிாியாவின் கேள்வியில் பதட்டம்….
அதெல்லாம் ஒன்றுமில்லை…. சிாித்து விட்டு, துணியைக் கையில் திணித்துவிட்டுப் போனாள் நர்ஸ்.
என்னங்க…. இங்க வாங்க நர்ஸ் ஏதோ சொல்றாங்க…
ஒண்ணும் இல்லை பிாியா… துணி மாத்திட்டு வா…. அதற்கு மேல் விக்னேஷ் எதுவும் பேசவில்லை….
அவனால் எதுவும் பேச முடியவில்லை….
நேற்று கூட குழந்தை உதைக்கிறான்…உதைக்கிறான்… என்று சொன்னாளே… கடவுளே அதற்கிடையில் என்ன ஆச்சு ?
எதுவும் யோசிப்பதற்கே முடியவில்லை…
பிாியா பிரசவ அறைக்குள் போய்விட்டாள்….
மருத்துவமனை மொத்தமும் ஒரு அமைதி… மனம் மட்டும் அமைதி இல்லாமல் கதறிக்கொண்டிருக்கிறது.
மருத்துவமனை வராண்டா வெறிச்சோடிக் கிடக்கிறது.
பிறைவடிவில் இருக்கைகள் கம்பிகளோடு சேர்த்து இணைக்கப் பட்டிருந்தது.
ஓரமான ஒரு இருக்கையில் அமர்ந்து சிகரட் ஒன்றை எடுத்தான் விக்னேஷ்…
இங்கே சிகரட் எல்லாம் பிடிக்கக் கூடாது விக்கி…. கவலைப் படாதே பிாியாவுக்கு ஒண்ணும் நடக்காது…
நான் 7 பிள்ளை பெத்திருக்கேன்… எந்த கஷ்டமும் ஆண்டவன் தந்ததில்லை…
என் பிள்ளைங்களுக்கும் அவன் அந்த கஷ்டம் தர மாட்டான்… அம்மா கண்வரை வந்த கண்ணீரை கட்டுப் படுத்திவிட்டுப் பேசுகிறாள் என்பது புாிந்தது.
ஒண்ணும் நடக்கக் கூடாதும்மா…. சொல்லிவிட்டு எழுந்து வெளியே வந்தான் விக்னேஷ்.
ஒரு சிகரட் புகைக்க வேண்டும் போல் இருந்தது…. வராண்டாவைக் கடந்து வெளியே போய் ஒரு முறை புகைத்து விட்டு வரலாம்… மனதுக்குள் சொல்லிக் கொண்டே நடந்தான்….
வராண்டா முழுதும் வெள்ளை உடைகளில் மருத்துவமனை ஊழியர்கள்.
நிறைய தடவை இந்த மருத்துவமனைக்கு வந்திருக்கிறான் பிாியாவின் பாிசோதனைக்காக…
அப்போதெல்லாம் பிாியா கூட வருவாள்…. பெருமிதத்தோடு கைகளைக் கோர்த்துக் கொண்டு…
ஏதாவது பேசி சிாித்துக் கொண்டு…. தோளில் சாய்ந்துகொண்டு… நினைக்கும் போது கண்கள் நனைந்தது.
அவளைக் காதலிக்கத் துவங்கிய காலம் முதல் இன்று வரை அவளை எந்த கஷ்டத்திலும் பிாிந்ததில்லை.
மரணமும், பிரசவமும் தனித் தனியே சந்திக்க வேண்டிய வலிகள்… யாரும் கூட வர முடியாது.
சுற்றிலும் நோயாளிகள் கூட்டம். அவசர சிகிச்சைப்பிாிவு முன்னால் இருக்கும் மக்கள் பதட்டத்தோடும் கண்ணீரோடும் நடந்து கொண்டிருக்கிறார்கள்… பார்வையாளர் பிாிவில் இருப்போரெல்லாம் ஏதோ பேசி , சிாித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
வெளியே வந்து சிகரட் இழுக்க இழுக்க புகையோடு சேர்ந்து நினைவுகளும் உள்ளிருந்து வெளிவரத் துவங்கியது. கல்லூாிக்காதல் படிப்பு முடிந்த கையோடு முடிந்துவிடும் என்று சொல்லுவார்கள்… ஆனால் அதைப் பொய்யாக்கிக் காட்டியது தான் எங்கள் காதல்…
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பார்கள் அதை பொய்யாக்கி மாற்றியது எங்கள் திருமணம் ….
இன்றுவரை எங்களுக்குள் சண்டை வந்ததே இல்லை.
பொய்யாய்க் கோபித்து, பொய்யாய் சண்டையிட்டு படுக்கையறை விட்டு வெளி வரும் போது கோபம், சண்டை எல்லாம் காணாமல் போய் விடும்….
மாமியார் மருமகள் சண்டை என்று ஏராளம் கதைகளில் படித்திருக்கிறேன்… சினிமாக்களில் பார்த்திருக்கிறேன்…
அம்மாவிடம் கேட்டிருக்கிறேன்… ‘என்னம்மா நீங்க பிாியா கூட சண்டையே போட மாட்டேங்கிறீங்க… மாமியார்-ன்னு சொல்லவே உங்களுக்கு தகுதி இல்லையே ‘ என்று..
அப்போதெல்லாம் அம்மாவும், பிாியாவும் சேர்ந்து என்மேல் பாய்வார்கள்….
உண்மையான நேசம், காதல் தவிர நாங்கள் போடும் சண்டை எல்லாமே பொய்யாய் தான் இருந்தது.
விக்கி….
அம்மாவின் குரல் விக்னேஷான் நினைவுகளை இழுத்து மருத்துவமனைக்குள் நிறுத்தியது.
என்னம்மா ?
பிாியா பிரசவ அறைக்குள்ள இருக்கிறா… செயற்கையா வலி வரவைக்கப் பார்க்கிறாங்க….
நீ… வீட்ல போய் அலமாாில ஒரு வெள்ளை வேட்டி இஸ்திாி போட்டு வெச்சிருக்கேன், அதையும் எடுத்துட்டு
வீட்ல அப்பாகிட்டே இன்னிக்கு அட்மிட் ஆகப் போறோம்னு சொல்லிடு…. சாயங்காலமா ஆஸ்பத்திாி பக்கம் வர சொல்லிடு.
அப்படியே ஒரு சோப், பிரஷ் எல்லாம் வாங்கிட்டு வா…
இல்லம்மா… என்னால இப்போ அங்க போக முடியாதும்மா… பிாியாவுக்கு ஏதாவது தேவை வரலாம்…நான் இங்கயே இருக்கிறேன்
போன் பண்ணி சொல்லிடறேன், பொியப்பா பசங்க யாராவது தேவையானதை எல்ல்லாம் எடுத்துட்டு வரட்டும்….
சாி அப்போ அதைப் பண்ணு…
இந்தா…இந்த பிளாஸ்க்ல ஒரு டா வாங்கி வை.. அப்பப்போ பிாியாவுக்கு குடுக்க வேண்டி வரும்.
சாிம்மா….
பிளாஸ்க் எடுத்து டா வாங்கி… மறுபடியும் பிரசவ அறையின் முன்னால் வந்தான் விக்னேஷ்.
டாக்டர் உள்ளே தான் இருக்கிறாரா ?
இல்லை.. அவருக்கு வேறு ஏதோ ஒரு அவசர வேலையாம்… வந்திடுவாரு.
இந்த நேரத்தில அவங்க என்ன பண்றாங்க ? பேச்சில் ஏதோ ஒரு கோபம் தெறித்தது…
நீ பதட்டப் படாதே…. எதுவும் ஆகாது… அம்மா சமாதானப் படுத்தினாள்.
பலமுறை இதே பிரசவ அறை¢ முன் காத்திருந்திருக்கிறான்…
கடந்த வாரம் கூட நண்பன் ஆனந்தின் மனைவிக்கு பிரசவம் நடந்தது. அப்போதெல்லாம் எல்லோரையும் சமாதானப் படுத்தும் விக்னேஷ்க்கு இப்போது தான் அந்த நிமிடங்களின் வீாியம் உறைத்தது.
உள்ளே என்ன நடக்கிறது என்று தொியவில்லை…
ஒருமுறை பிாியாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.
இந்த பிரசவம் மட்டும் இல்லாமல் குழந்தை பிறந்திருந்தால் வாழ்க்கை மிகவும் வசதியாக இருந்திருக்குமென்று தோன்றியது..
அப்படி இருந்தால் ஒருவேளை உறவுகளுக்குள் வலிமை இருந்திருக்காதோ ?
நேரம் மிகவும் மெதுவாக பதட்டத்துடன் நகர்ந்து கொண்டிருந்தது….
ஒரு அரை மணிநேரம் கடந்தபோது திலகவதி டாக்டர் வருவது தொிந்தது..
அப்பாடா… இப்போதாவது வராங்களே…
இதைவிட வேறு என்ன அவசர வேலை அவங்களுக்கு… தனக்குன்னு வந்தா தான் எல்லாருக்கும் வலிக்கும்…
விக்னேஷ் மனதிற்குள் கருவிக் கொண்டான்….
கவலைப் படாதீங்க விக்னேஷ்….
பிாியாவுக்கு வலி வரல… வலியை வரவைக்க மருந்து குடுத்திருக்கோம்….
கவலைப் படாதீங்க…. சொல்லிவிட்டு நகர்ந்தாள் திலகவதி…
விக்னேஷ்…க்கு ஒன்றும் புாியவில்லை… எப்படி என் மனசை வாசிக்கிறாங்க ?
இவங்க கைனாகோளஜாஸ்டா இல்லை மனதத்துவ நிபுணரா ?
ம்ம்ம்…. எத்தனையோ பேரை பாத்திருப்பாங்க…
சிாிப்பு வரவில்லை, மெலிதாய்ப் புன்னகைத்தான்….
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது….
வலி வராவிட்டால் ஆபரேஷன் பண்ணுவாங்களாம்… அதை சீக்கிரம் பண்ணினால் தேவலை என்று தோன்றியது.
டாக்டர் வெளியே வரும் போது சொல்லிவிட வேண்டும்….
இந்த பதட்டத்தில் ஒருவேளை என் இதயத் துடிப்பே நின்று போகலாம்… விக்னேஷ் முடிவெடுத்தான்.
அம்மா ஆட்சேபித்தாள்…
நீ கவலைப்படாதே…. அவளுக்கு ஒண்ணும் ஆகாது. நமது பரம்பரையில் யாருக்கும் கத்தி வைத்த பின் குழந்தை பிறந்ததாய் சாித்திரமில்லை… நானும் 7 குழந்தை…..
சும்மா அதையே சொல்லிச் சொல்லி போரடிக்காதீங்கம்மா…..பிளீஸ்….
நீ போய் உட்காரு எல்லாம் சாியாயிடும்….
ம்…
என்ன சொல்றதும்மா…. நேரம் எவ்வளவு ஆகுது… யாராவது வந்து ஏதாவது சொல்றாங்களா ?
ஒரு தடவை டா வாங்கிட்டுப் போனதோட சாி…
வெளியில இருக்கிறவங்களோட கஷ்டம் யாருக்கும் புாியிறதில்லை….
சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதவு திறந்தது…
நர்ஸ் வெளியே வந்தாள்…
யாருங்க பிாியாவோட புருஷன் ?
நா..நான் தான்…
விக்னேஷ் முன்வந்தான்…
உங்களுக்கு பெண்குழந்தை பிறந்திருக்கு…
எ..ரொ…ரொம்ம தாங்க்ஸ்…
கு..குழந்தைக்கு…
தாயும், பிள்ளையும் செளக்கியமா இருக்காங்க….
விக்னேஷ்க்கு சந்தோசம் பிடிபடவில்லை….
சட்டென்று மனசு மொத்தமும் லேசாகிப் போனதாய் ஒரு உணர்வு…
இதுவரை கனமாகி இருந்த மனசு லேசாகி, பறக்கத் துவங்கியது…
அந்த சிாிப்புக்கு ஒரு சின்ன இடைவெளி விட்ட போது டாக்டர்.திலகவதி வெளியே வந்தார்…
‘விக்னேஷ் என்னோட ரூம் வரைக்கும் வாங்க ‘…
‘அம்மா நீங்க, ஒரு வெள்ளை வேட்டி ஏதாவது இருந்தா நர்ஸ் கிட்டே குடுங்க ‘….
சொல்லிவிட்டு நடந்தார் டாக்டர்…
புாியாமல் பின்தொடர்ந்து அறையை அடைந்தான் விக்னேஷ்.
உட்காருங்க விக்னேஷ்…
டாக்டர்… குழந்தைக்கும்,பிாியாவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே….
காலைல குழந்தைக்கு இதயத்துடிப்பு இல்லேன்னு சொன்னீங்க….. இ…
அதற்கு மேல் பேச முடியவில்லை விக்னேஷ்க்கு…
கவலைப் படாதீங்க விக்னேஷ்… ரெண்டு பேருமே நல்லா இருக்காங்க…
உங்களைக் கூப்பிட்டதே அந்த இதயத் துடிப்பு பத்தி பேசத் தான்.
சொல்லுங்க…
குழந்தைக்கு… இடப்பக்கம் இருக்க வேண்டிய இதயம் வலப்பக்கம் இருக்கு..
அதனால தான் காலைல வழக்கமான டெஸ்ட் ல இதயத் துடிப்பு கேட்கல….
இப்போ கூட குழந்தை அழுததுக்கு அப்புறம் டெஸ்ட் பண்ணி பார்த்தேன்…
இதயத் துடிப்பு கேக்கல…. சந்தேகத்துல வலப் பக்கம் கேட்டப்போ தான் விஷயமே புாிஞ்சுது…
இலேசாகிப் போன இதயம் மறுபடியும் கனமான உணர்வு விக்னேஷ் க்கு..
இ..இப்போ என்ன பண்றது டாக்டர்…
இதுல குழந்தைக்கு ஏதாவது…
கவலைப் பட ஒண்ணுமே இல்ல… ஒரு டெஸ்ட் எடுக்கணும்… எக்கோ கார்டியா -ன்னு சொல்லுவாங்க..
ஆனா அது குழந்தைக்கு 6 மாதம் தாண்டி தான் எடுக்க முடியும்…
இது இலட்சத்துல ஒருத்தருக்கு தான் இப்படி இருக்கும்…. ஆனா கவலைப் பட ஒண்ணுமில்லே…
இனிமே ஏதாவது மருத்துவமனைக்கு போனா இந்த விஷயத்தை கண்டிப்பா முதல்ல சொல்லணும்….
இதோட பாதிப்பா ஒருவேளை குழந்தைக்கு இடது கைப் பழக்கம் வரலாம்… அது கூட ஒரு அனுமானம் தான்…
சொல்லி நிறுத்தினார் திலகவதி
மனசு கொஞ்சம் லேசானது போல இருந்தது…
டாக்டருக்கு நன்றி கூறி வெளியே வந்த போது வாசலிலேயே நின்றிருந்தாள் அம்மா…
டாக்டர் என்ன சொன்னாரு விக்கி…
ம்ம்ம்… உன் பேத்திக்கு வலப்பக்கம் இருக்காம் இதயம்…
ஆனா பிரச்சினை எதுவும் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு….
இனி ‘இருதயம் இடம் மாறித் துடிக்கும் வலது புறத்திலேங்கிற ‘ பாட்டை அவ பாட முடியாது…
‘இருதயம் இடம் மாறித் துடிக்கும் இடது புறத்திலே ‘- ன்னு தான் பாடணும்…
என்ன பண்றது பையனா பொறந்திருந்தா ‘வலம் ‘புாிஜாண் னு பேரு வெச்சிருக்கலாம்…..
சொல்லிவிட்டு மெதுவாய் சிாித்தான் விக்னேஷ்…
ஆமா … இப்போ சிாி…
குட்டி போட்ட பூனை மாதிாி யும், இஞ்சி தின்ன குரங்கு மாதிாி யும் இங்கே இவ்வளவு
நேரம் சுத்திகிட்டு இருந்தபோ எங்கே போச்சுதாம் இந்த சிாிப்பு ?
சொல்லிவிட்டு அம்மா நக்கலாச் பார்த்தாள்…
சிாிங்கம்மா சிாிங்க…
அவ எனக்கு உயிரோட கிடச்சிருக்கா… இனி எனக்கு எதுவும் வேண்டாம்……..
மனசுக்குள் சிலிர்த்துக் கொண்டான் விக்னேஷ்.
****
- குறைப் பிறவி
- மனப்பான்மைகள்
- தலைப்பிரசவம்…
- புதிய நந்தன்களும் பழைய பார்வைகளும் : கே ஏ குணசேகரனின் கருத்துகள் மீது ஒரு பார்வை
- இந்த வாரம் இப்படி – ஏப்ரல் 7 2001
- விருதுகள் பரிசுகள், பட்டியல்களின் அரசியல் : எதிர்வினை
- நாளை
- எங்கள் வீதி
- பூக்களின் மொழி
- அறிவியல் துளிகள்
- முட்டை மசாலா
- மீன் கபாப்
- விருதுகள் பரிசுகள், பட்டியல்களின் அரசியல் : எதிர்வினை