மலர்மன்னன்
வாழ்விடங்கள் பற்றிய தகவல் விவரங்கள் ஓர் அட்டவணைக் குரிய எல்லைக் கோடுகளைத் தாண்டி, ஜீவகளை ததும்ப வாசகனை வந்தெய்தும் போது, அவை இலக்கியமாகி விடுகின்றன. அசோகமித்திரனின் ஹைதராபாத்-செகந்தராபாத் இரட்டை நகரங்களும், சுப்ர பாரதி மணியனின் ஹைதராபாத், நாஞ்சில் நாடனின் மும்பை, ஆதவனின் தில்லி, சுந்தரராமசாமியின் நாகர்கோவில், திலீப் குமாரின் கோயமுத்தூர், புதுமைப் பித்தனின் அவர் காலத்து வட சென்னை, தி. ஜானகிராமனின் கும்பகோணம், ஏன் யாரும் அறிந்திராத பாவண்ணனின் வளவனூருங்கூட இப்படித்தான் இலக்கிய அந்தஸ்தினைப் பெற முடிந்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து பாளையங் கோட்டை செல்கையில் தாமிரவருணியைத் தாண்டுவதற்காக அதன் மீதாக உள்ள பாலத்தைக் கடக்கையில் இது வண்ணநிலவனின் சுலோசன நாடார் பாலம் அல்லவா என்கிற உணர்வு வாசகனுக்கு எழாமல் போவதில்லை. ஓவியரும் சித்திரக்காரருமான சி. தட்சிணா மூர்த்தி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிக்கையில் தம் மாடியறை ஜன்னல் வழியாகக் கண்ட சிந்தாதிரிப் பேட்டைத் தெருவை வரைந்ததால் பார்வையாளன் கண்களில் அது கலை வடிவம் பெற்றதும் இவ்வாறுதான். தி. ஜானகிராமனின் மோகமுள் சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் தொடராக வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் கும்பகோணத்து மகாமகக் குளத் தெருவும் காந்தி பூங்காவும், காவிரியாற்றுக் கரையோர மணலும் பாபுவின் கால் தடங்கள் பதிவதாகப் படிக்கிறபோதெல்லாம் கும்பகோணத்தில் வசிக்கும் அல்லது வசித்து அவ்வூருக்கே உரிய வெடையம் போன்ற தனித்தன்மைகளில் பரிச்சயப் பட்ட வாசகர்களால் ஜானகிராமனின் எழுத்தோடு ஒன்றிக் கிறங்கிப் போக முடிந்தது. காந்தி பூங்காவில் பாபு தன் சிநேகிதரோடு அமர் கையில் அவர்களோடு சேர்ந்து தானும் உட்கார்ந்துகொள்வதாகப் பல வாசகர்கள் மனம் லயித்துக் கூறியதுண்டு. அசோகமித்திரன் தமது பதினெட்டாவது அட்சக் கோட்டில் காண்பிக்கிற அவரது பால பருவத்து செகந்தராபாதும் ஹைதராபாதும், அவரது எழுத்தின் ஆளுமையால் அன்றைக்கு இருந்த கருக்கழியாமல் அப்படியே உறைந்து போகமுடிந்திருக்கிறது. ஹைதராபாத் நைஜாமின் செல்லப் பிள்ளை களான ரஜாக்கர் என்கிற குண்டர் படையின் அத்து மீறல்களுக்கும் அக்கிரமங்களுக்கும் கூட அந்த நாவல் ஒரு சந்தர்ப்ப சாட்சியப் பத்திரமாகத் தாக்கலாகிவிட்டிருக்கிறது. சுப்ரபாரதி மணியனும் ஹைதராபாத் எப்படித் திடீர் திடீரென வகுப்புக் கலவர பூமியாகி மக்களின் அன்றாட வாழ்க்கை யைக் குலைத்துப் போடுகிறது என்பதைப் பதிவு செய்கையில், அந்நகரின் சுபாவம் வாசகன் மனதில் பதிந்துபோகிறது. இப்போது அவர் திருப்பூருக்கு வந்தமர்ந்து சாயக் கழிவால் நகரின் இயல்பான வர்ணமே மாறிப் போன சோகத்தை விவக்கையில், சுற்றுப்புறச் சூழலுக்கானதாக மட்டுமின்றி வாழ்க்கை யின் போலி தரமேம்பாட்டினை அம்பலப்படுத்து வதான ஆவண அந்தஸ்தையும் அவரது எழுத்து பெற்றுவிடுகிறது. தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கு மிகச் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ள போதிலும் அதற்குரிய கவனிப்பைப் பெறாமலேயே மறைந்து விட்ட ப. சிங்காரம் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி,’ இரண்டாம் உலகப் போரின் போது தமிழர்கள் மண்டிக்கிடந்த இந்தோனேசிய மெடான் நகரையும், அங்கு நகரத்தார் கொடிகட்டிப் பறந்த வட்டிக்கடை விமசைகளையும் அவ்வூருக்கே உத்தான காலைப் பசியாற்றும் சிற்றுண்டி சாலைகளையும் அங்கு தமிழர்கள் உண்டு களித்த பலகார வகைகளையும் எள்ளலும் துள்ளலுமாய்ப் பதிவு செய்கிறது. ப.சிங்காரத்தின் அனாயாசமான எழுத்தாளுமை யினால் அந்தக் காலத்து மதுரை மூதூருங்கூட இந்த நாவரில் அற்புதமாகப் பதிவாகிவிட்டிருக்கிறது. மதுரை ரயிலடியில் தொடங்கி அவர் ஊருக்குள் முன்னேறுகையில் எதிர்ப்படுவன யாவும் படிக்கப் படிக்கத் திகட்டுவதில்லை. சிங்காரம் சித்திக்கும் நான்மாடக் கூடல் நகரம் 1925-26 கால கட்டத்து கிராமப்புறச் சாயலின் எளிமையையும் 1941 வாக்கில் உருமாறிய நகர்ப்புறத்தையும் ஒப்பிட்டுக் காட்டுவது. ஜி.நாகராஜனின் மதுரைத் தெருக்களும் கூட நிழலிருட்டில் உயிர்த்திருக்கும் வித்தியாசமான மதுரையை வாசக நெஞ்சில் வரைகிறது. நாகராஜன் என்கிற அபார எழுத்தாற்றல் வாய்க்கப்பெற்ற படைப் பாளி, தான் அமைத்துக் கொண்ட வாழ்க்கை ரீதியின் அடியொற்றிப் பதிவுசெய்துள்ள வாழ்விடம், அந்த மதுரை! ஆ.மாதவனின் கூரிய பார்வையில் பதிவாகி யிருக்கும் திருவனந்தபுரத்து சாலைத் தெரு, வாசகனின் கண்களிலும் அப்பிக் கொள்ளத் தவறுவதில்லை. சாலைத் தெருவையே பார்த்திராதவர்களைக் கூட அது தமக்கு மிகவும் பரிச்சயப்பட்டதுபோல் உணரச் செய்துவிட்டவை மாதவனின் சிறுகதைகளும் நாவல் களும். முக்கியமாகக் கோமதி என்னும் வளப்பமான பசு மேய்ந்து திந்து கிளர்ச்சியூட்டும் சாலை! பிரபஞ்சனின் புதுச்சேரி , அதற்கே உரித்தான பிரஞ்சு சர்க்காரிடமிருந்து இன்னமும்கூட மாதந் தவறாமல் ஓய்வூதியமாக வந்து கையும் பையும் பணங் கொழிக்க பிரான்சின் குடி மக்களாகவே தொடர்ந்து வாழும் பல புத்திசாýகளின் மீனும் கோழியும் மதுவுமாய்க் கழியும் வாழ்க்கையை அழகாக விவக்கத் தவறுவதில்லை. ‘மயிலாப்பூர் குளத்தங்கரையிலிருந்து பாரீசுக்கு பஸ் ஏறினாள்’ என்கிற வெறும் தகவல் அறிக்கை, ‘மயிலாப்பூர் தெற்கு மாட வீதியின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிற காய்கறிக் கடைகளி னூடே பிரவேசித்து, குளத்தங்கரையை ஒட்டினாற் போலவே விரைந்து திரும்பி, சாலையை அவசரமாகக் கடந்தாள். எதிர்ப் புறம் பாரீசுக்குப் போகும் பஸ்களுக் கான நிறுத்தத்திற்கு அவள் போய்ச் சேருவதற்குள் வந்து தொலைத்துவிட்ட பஸ், வழக்கம்போல நிறுத்தத் திýருந்து பத்தடி தாண்டிச் சென்று நின்றதும், மற்றவர்களோடு சேர்ந்து அவளும் ஓடிக் கதைத்துக் கொண்டு போய் ஒருவாறாக அதில் ஏறிக்கொண் டாள்’ என்று பதிவாகிறபோது, வாழ்விடத்தின் இயல்பினை உள்வாங்கிக்கொண்டு, படைப்பிலக்கிய அந்தஸ்தை வத்துக்கொள்ள முனைகிறது. குறிப்பிட்ட வாழ்விடம் ஒன்றைக் களமாகக் கொண்டு உருவாக்கப்படும் இலக்கியம், தனது எல்லைகளைக் குறுக்கிக் கொண்டுவிடுகிறது என்ற விமர்சனமும் எழுவதுண்டு. யோசிக்கும் வேளையில் இந்த விமர்சனம் சயாகப் படவில்லை. எழுதப்படுவ தெல்லாம் மானிட வர்க்கத்தின் இயக்கத்தையும் அதன் தாக்கத்தையுமே சார்ந்தவையாதலால் சர்வ வியாகபத்தன்மையுள்ளதாக ஒரு படைப்பு அமையவேண்டுமெனில் குறிப்பிட்ட வாழ்விடத்தை வýந்து பேசாமýருப்பதே மேல் என்று ஒரு கருத்தியல் உள்ளதுதான். என்றாலும், வெறும் சடப் பொருளுக்குக் கூட அதனைப் பாவிப்பவர் நாளாவட்டத்தில் தம்மையறியாமல் ஓர் உறவினை அதனோடு ஏற்படுத்திக் கொண்டுவிடுவதால் ஒரு நுட்பமான உயிர்ச் சலனம் அதற்கு ஏற்பட்டு விடுகிறது. அப்படியிருக்கும்போது, பல்லாயிரம் மக்கள் இடைவிடாது சுவாசிக்கும் காற்று கலந்துகொண்டேயிருக்கிற ஒரு வாழ்விடத்திற்கும் அதற்கென்றே பிரத்தியேகமாய் ஒரு ஆன்மா கருவறைச் சிசுவைப் போல் அசைந்து கொண்டிருக் கக்கூடும் அல்லவா? இந்த அசைவினை அடையாளங் கண்டுகொள்ளும் படைப்பாளி, அவனோ அவளோ ஒரு சித்திரக்காரரோ எழுத்தாளரோ மிகவும் சயாகப் பதிவு செய்துவிடும் போது, ரசனையுள்ளவரும் அதனை இனங்கண்டுகொள்ளும்போது, குறிப்பிட்ட அந்த வாழ்விடம் பொருட்செறிவு மிக்க அத்தியாவசியமாகிவிடுகிறது.
படைப்பிலக்கியத்தில் வாழ்விடத்தின் பதிவுக்கு இருக்கிற அவசியம் பற்றிய சிந்தனை கிளர்ந்தெழத் தூண்டுதலாக இருந்தது சமீபத்தில் படித்த, புதிய மாதவி எழுதிய ‘மின்சார வண்டிகள்’ என்கிற குறுநாவல். சில மாதங்களுக்கு முன் கணையாழியில் வெளிவந்த ‘ஒரு பெரியாரிஸ்டின் தீபாவளி’ என்கிற சிறுகதையின் வாயிலாக என் கவனம் பெற்றது, புதிய மாதவியின் எழுத்து. மேலோட்டமாகப் பார்க்கையில் லேசான எள்ளலுடன் கூடிய சுய அனுபவ நடைச் சித்திரம் போலத் தோன்றினாலும், நடை முறையில் உள்ள நுட்பமான இயலாமைகளையும், அன்றாட வாழ்க்கையில் விட்டுக்கொடுத்தாக வேண்டிய கட்டாயங்களையும் இச்சிறுகதை உணர்ச்சி வசப்படாமல் ஓர் அந்நியத்தன்மையுடன் விலகி நின்று பதிவு செய்ததாலேயே கவனத்திற்குயதாயிற்று. புதிய மாதவியின் எழுத்து ஒரு படைப்பாளிக்கு அத்தியாவசியமான கூர்மையான பார்வையையும், பார்க்கப் படுவதை அதன் இயல்பு கெடாமல் பதிவு செய்யும் தேர்ச்சியையும் உறுதி செய்ததால் அவரது மின்சார வண்டிக்குள் எளிதாகவும் ஆர்வத்தோடும் புக முடிந்தது. மின்சார வண்டிகள் புதிய மாதவியின் வாழ்விடம் மும்பை என்பதைப் புலப்படுத்துகிறது. மும்பை மாநகரோடு அதன் புறநகர்களைப் பிணைக்கும் மின்சார வண்டிகள், நொடிப் பொழுதில் பல்லாயிரக் கணக்கானோரை விழுங்கிக்கொண்டும், உமிழ்ந்துகொண்டும் அவசர கதியில் நெளிந்தோடும் அரவங்களேயன்றி, உலோகமும் மரச்சட்டங்களும், மின்விசையும் பின்னிப் பிணைந்த ஜடப் பொருள்கள் அல்ல, ஒரு படைப்பாளியின் பார்வையில். சமயங்களில் மும்பையின் உள்ளிழுப்பும், வெளிவிடலுமான சுவாசமாகவும் தோற்றங்கொள்பவை, இந்த மின்சார வண்டிகள். புதிய மாதவியால் இதனை மிகச் சரியாகவே அவதானிக்க முடிந்திருக்கிறது. முக்கியமான நிலையங்களில் இந்த வண்டிகள் நின்றதும் கொல்லென அதிலிருந்து இறங்கும் ஜனத் திரள் பின்னர் மாடிப்படிகளை ஏறிக் கடக்கையில், ஒரு ஜன மகா சமுத்திரம் அலைபுரண்டு கரை கடப்பதாகவே பிரமை தட்டும். மும்பை ஒரு மாநிலத்தின் தலைநகரம் என்றாலும், பிற மாநிலத் தலைநகரங்களுக்கு இல்லாத ஒரு தனித் தன்மை அதற்கு உண்டு. அது மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகராயிருப்பினும் அங்கு மராட்டிய மொழியைவிட இலக்கணக் கட்டுகள் தளர்ந்த இந்தியும் பிற மொழிகளுந்தாம் பிரசித்தம்! புதிய மாதவி தமிழரானதால், அவரது பிரதான கதை மாந்தர்கள் தமிழகத்தின் கடைக்கோடியிலிருந்து வந்து, மும்பையில் கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டவர்களாகவும், கிடைத்த இடங்களில் ஒண்டிக் கொண்டவர்களாகவும் இருக்கக் காண்கிறோம். இப்படி வந்து சேர்ந்து சந்தர்ப்பக் கோளாறால் நிழல் உலகின் மறைவிடங்களில் ஒதுங்கி, காலப் போக்கில் தொழில் கைவரப்பெற்று, மும்பைக்கே உரித்தான தாதாக்களாக உயர்ந்த தமிழர்களும் உண்டு. புதிய மாதவி அறிமுகப்படுத்தும் ‘தம்பிபாய்’ அத்தகையவர்களில் ஒருவன்தான். . நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து கூடி, ஏறத்தாழ ஒரு பிரமாண்டமான குடும்பமாகவே வாழ்ந்து பழகிவிட்டவர்கள், மும்பையின் அடித் தட்டு மக்களும் நடுத்தர வர்க்கத்தாரும். இவர்கள் பேசும் மொழி வீட்டிற்குள் தமிழாக, தெலுங்காக, மலையாளமாக, வங்காளியாக என எவ்வாறான தாய்மொழியாக இருப்பினும் மும்பைக்கே உத்தான சில வேற்று மொழிச் சொற் பிரயோகங்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்கும். இதனையும் மின்சார வண்டிகள் பதிவு செய்யும்போது, வெவ்வேறு திக்குகளிலிருந்து வந்து சேர்ந்த அம்மக்களை ஒன்றாகக் கோத்துப் பிணைக்கும் சரம் அதுவே என்பதைப் புந்துகொள்ள முடியும். மனிதர்கள் எங்கு இருந்தாலும் ஒன்றுபோலவே இருக்கிறர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அடிப்படையில் அவர்கள் இவ்வாறு இருப்பினும் வாழ்விடத்தின் தனித் தன்மைகளுக்கு ஏற்ப அவர்களின் பிரதிபலிப்புகளும் எதிர்வினைகளும் வித்தியாசப்பட்டுப் போகின்றனதான்; தண்ணீர், தான் புகும் குடுவையின் அமைப்பைத் தானும் சுவீகரித்துக் கொள்வதுபோல. ஒரு படைப்பாளி தனது வாழ்விடத்தைக் கலையின் வெளிப்பாடாக்குகையில் இதனைக் கவனத்தில் கொண்டால்தான் படைப்பின் உன்னதத்தை அந்தக் கலையால் எய்த முடிகிறது.
—————
malarmannan79@rediffmail.com
- கண்ணகி எதன் அடையாளம்?
- கற்சிலைகள் காலிடறும்!
- ஒரு சிலையும் என் சிலம்புதலும்
- தேரா மன்னா! செப்புவது உடையேன்!
- எச்.முஜீப் ரஹ்மானின் கட்டுரைகள் குறித்து
- தற்கால இலக்கியம்..வாழ்விடம் கலையாகும் தருணம்
- சூபி இசை – இதயத்திலிருந்து ஒரு செய்தி
- மொழியின் கைதிகள்
- விமர்சனங்களும் எதிர் வினைகளும்
- ஞான. ராஜசேகரனின் பாரதி – சில திரைப்படத் திரிபுகள்
- கடித இலக்கியம் – 9
- ஸீஸன் கச்சேரியும் தொய்வு அளவையும்
- வீட்டுப் பறவைகள்
- 33வது ஐரோப்பிய இலக்கியச் சந்திப்பு
- மாப்பிள்ளைமார் கலகமும், இந்துத்துவத்தின் இடியாப்பச் சிக்கலும்
- செர்நோபில் அணுமின் உலையை மூடக் கட்டிய புதைப்புக் கோட்டை-8
- சர் சி வி ராமன் குறும்படம் வெளியீட்டு விழா
- கடிதம் – எஸ். இராமச்சந்திரன் ” இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி… “
- பாரதி பஜனையில் மயங்கும் மக்கள்
- கண்ணகி சிலை விவகாரம்: மறக்கப்பட்ட சில உண்மைகள்
- 25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த ஒன்றுகூடல் தள்ளி வைப்பு
- கடிதம்
- ஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் கருத்து பற்றி
- எடின்பரோ குறிப்புகள் – 18
- சேர்ந்து வாழலாம், வா! – 7
- உறவின் சுவடுகள் ( தெலுங்கு கதை )
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-5) [முன்வாரத் தொடர்ச்சி]
- எ ட் டி ய து
- அரசு ஊழியர்களுக்கு மணி கட்டுவது யார்?
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 4. திருமண உறவுகள்
- கண்ணகியின் கற்பு சாஸ்திரம்..?
- மன்னரும் மல்லரும்
- தனி மனிதப் பார்வையில் சமூகம், இலக்கியம் பற்றிய குறிப்புகள்
- ஒரு காடழிப்பு
- தீய்ந்த பாற்கடல்
- கோமாளிக் காக்கைகள்
- தூங்க மறுக்கின்ற வெய்யில் இரவுகள்
- பெரியபுராணம் – 92 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கீதாஞ்சலி (77) என் சொத்தனைத்தும் உனக்கு!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 25
- பேரா.நா.வா.நினைவு கலைஇலக்கிய முகாம்,கன்னியாகுமரி