தமிழ் வாழ்க ! “தமிழறிஞர்” ஒழிக !!

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

மஞ்சுளா நவநீதன்


கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ்கூறு நல்லுலகில் எழுந்த ஒரு புதிய உயிரினம் “தமிழறிஞர்” என்ற உயிரினம் ஆகும். இவர்கள் மக்களே போல்வர். ஆனால்?

தமிழறிஞர்கள் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளும் இவர்களுக்கு தமிழில் ஆழ்ந்த பயிற்சியோ, அல்லது தமிழ் மொழி வரலாறு பற்றியோ எதுவும் தெரியாது. கற்றுச் சொல்லிகளாக சிலவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவித்து, தமிழ் வாழ்க, தமிழ் வளர்க என்று அடுக்குமொழிப்பேச்சை எழுத்தில் பதிந்து விடுவார்கள். தம்மைத்தாமே சான்றோர் என்று அழைத்துக் கொண்டுஇ செய்தி மடல் வெளியிடுவார்கள். கலாசாரச் சிந்தனைகளோ நுண் உணர்வுகளோ, இலக்கியப் பயிற்சியோ எதுவும் இவர்களுக்குக் கிடையாது. இவர்களிடம் உள்ள ஒரே மூலதனம் அவர்களின் அலங்காரமான அடுக்கு மொழி. அது மேடைப்பேச்சிற்கு உகந்ததாய் இருக்கலாம், எழுத்தில் அதன் உபயோகம் தம்முடைய பாமரத்தனத்தைப் பறை சாற்றுவது ஒன்று தான். இவர்களை ஒத்த பாமரர்களிடமிருந்து இவர்களுக்குப் பாராட்டும் கிடைத்துவிட்டால் கேட்கவே வேண்டாம். வெற்று அலங்காரங்கள் மக்கள் திரளை உசுப்ப முடியும் ஆனால் சிந்திக்க வைக்க முடியாது.

Paranoia என்று ஒரு மனநோய் உண்டு. இந்த மிகையச்சம் கொண்டவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் எதிரியாய்த் தெரியும். எங்கு பார்த்தாலும் தம்மைக் கொல்ல ஆட்கள் மறைந்து நிற்கிறார்கள் என்பதாய்த் தெரியும். காண்போரெல்லாம் தம்மை எதிர்த்துச் சதி தீட்டுபவர்களாய் மனபிம்பம் கொள்வார்கள். அந்த அச்ச உணர்வின் காரணமாக சமூகத்தில் பிறரிடையே சமதையாய்ப் பழக முடியாமல் தம்முள் முடங்கிப் போவார்கள்.

இந்த “தமிழறிஞர்கள்” இந்த அதீத பகையச்ச வியாதிக்கு மிகச் சரியான உதாரணங்கள். எங்கு பார்த்தாலும் இவர்களுக்கு தமிழ்ப் பகைவர்கள் தான் கண்ணில் படுவார்கள்.

இந்தப் போக்கிற்கு மிக நல்ல உதாரணம் திண்ணையில் வெளியான இரா சிவக்குமாரின் கட்டுரை

முதலில் தலைப்பு. “தமிழுக்கு அழிவென்று பேர்” என்றால் என்ன பொருள்? தமிழே அழிவு என்று பொருளா? ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற பாரதிதாசனின் வரிகளை அடியட்டி இந்தத் தலைப்பு இடப்பட்டிருக்கலாம். தமிழ் இலக்கணத்தைப் படித்திருந்தால், பாரதிதாசன் தமிழை அமுதென உருவகப் படுத்தியிருக்கிறார் என்று அறியலாம். இந்தக் கட்டுரை ஆசிரியர் .தமிழை அழிவென்று உருவகப் படுத்துகிறாரா? தமிழை மற்றவர்கள் அழிக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பயமுறுத்தும் கட்டுரையின் தலைப்பு , தமிழையே அழிவாக உருவகப்படுத்தினால், கட்டுரையின் பொருளுக்கு நேர் எதிரான பொருளைத் தருவதாகாதா?

“எங்கும் தமிழ் மங்கும் தமிழாகி, தலைநிமிர்ந்து நின்ற தமிழர் வாழ்நிலை துரும்பாகி, வந்தேறிக் கூட்டத்திற்கு விருந்தாகி, மொத்தத் தமிழினமும் ஏவல் பணிக்கு ஆளாகி வாழ்ந்து கொண்டிருக்கிறது.”

இந்த வரிகளுக்கு ஏதாவது பொருள் இருக்கிறதா? யார் இந்த வந்தேறிக் கூட்டம்? திராவிட இயக்கம் துவேஷம் பரப்பிக்கொண்டிருக்கும் பிராமணர்களா? தெலுங்கர்களா? கன்னடம் பேசுவோரா? அல்லது தமிழ் பேசுகிறவர்களில் யாரும் வந்தேறிகள் இருக்கிறார்களா? அவரவர் வசதிப்படி கற்பனை செய்து கொள்ளலாம். மொத்தத் தமிழினமும் என்ன ஏவல் பணி புரிந்து கொண்டிருக்கிறது? யார் இந்த மொத்தத் தமிழினம்? இந்த மொத்தத் தமிழினமும் இரா சிவக்குமாருக்குத் தம் சார்பில் பேச ஏதாவது பட்டயம் அளித்திருக்கிறார்களா? “வந்தேறிக் கூட்டத்துக்கு விருந்தாகி” என்றால் என்ன பொருள்? வந்தேறிக்கூட்டம் தமிழர்களைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறதா?

“அமெரிக்காவின் மொழியியல் ஆய்வாளர் பேராசிரியர் நாம்சோம்ஸ்கி, “இன்று உலகத்தில் அனைத்து மக்களாலும் வழங்கப்படுகின்ற மொழிகளெல்லாம் இரண்டு தொல்மொழியிலிருந்துதான் உருவாகின. தென்னாப்பிரிக்கப் பழங்குடி மக்களால் வழங்கப்படுகின்ற சுவாகிலியும், இன்றும் வழக்கிலிருந்து காலத்திற்கேற்றாற்போல் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கும் தமிழும்தான் அவ்விரு மொழிகள்” என்று பதிவு செய்திருக்கிறார்.”

எங்கே நாம் சோம்ஸ்கி இவ்வாறு சொல்லியிருக்கிறார்? என்ன காரணத்தால் அல்லது எந்த சந்தர்ப்பத்தில் சொல்லியிருக்கிறார்? சரி இதற்கு மாறான கருத்துகள் எங்காவது யாரும் சொல்லிருக்கிறார்களா? அவற்றின் நம்பகத் தன்மை என்ன? இந்தக் கருத்துகளின் ஆதாரம் என்ன? இதனால் தமிழுக்கு என்ன புதுச் சிறப்பு சேரப்போகிறது அல்லது, இது உண்மையல்லாத பட்சத்தில் என்ன சிறப்பு தமிழுக்குக் குறைந்துவிடப் போகிறது?

” “ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த இனத்தின் அடையாளமாய்த் திகழும் மொழியை அழிக்க வேண்டும்” என்று சொன்னான் ஹிட்லர். அதன் பொருளை உணர்ந்த ஹிட்லரின் சிஷ்ய கோடிகள் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இனத்தைக் கருவறுக்கும் அந்தக் கூட்டத்தை தமிழர்களாகிய நாம் அடையாளம் காணத் தவறிவிட்டால், ‘தமிழன் என்றொரு இனமிருந்தது’ என்றே வரலாறு நாளை பதிவு செய்யும். ”

எங்கே ஹிட்லர் இப்படிச் சொல்லியிருக்கிறான்? நான் படித்த “மெயின் கேம்பில்” இந்த வாசகங்களைக் காணோம். அப்படி எங்கும் இருப்பதாய் ஒப்புக் கொண்டாலும், யார் ஹிட்லரின் இந்த வாசகத்தைச் சிரமேற்கொண்டு தமிழை அழிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள்? யார் இந்த ஹிட்லரின் சிஷ்யகோடிகள்? அவர்களுக்கு என்ன அடையாளம்? தமிழின் “எதிரிகள்” நாஜிப் படையைத் திரட்டிக் கொண்டிருக்கிறார்களா? எங்கே?

***

மேலே எழுதியிருக்கும் கேள்விகள் “திராவிட அறிஞர்”களுக்கு பாமரத்தனமாய் தோன்றலாம். இவையெல்லாம் “குறிச்சொற்கள்” என்பது அறிந்ததுதான். இவை யாரைக்குறிக்கின்றன, என்ன (subtext)அடையாளத்தைச் சுட்டிக்காட்டி பேசப்படுகின்றன என்பதும் “திராவிட அறிஞர்”கள் அறிந்ததுதான். கடந்த 50 ஆண்டுகளாய் இந்த குறிச்சொற்கள் ஒரு சமூக அந்தஸ்தை பெற்றுவிட்டன. இவை தாராளமாய் புழக்கத்தில் உள்ளவையாக மாறிவிட்டன. இவற்றின் வேராய் இருக்கும் இனவெறி , மொழிவெறிவாதம் அங்கீரிக்கப்பட்ட நிலைமையைப் பெற்றுவிட்டது. எவ்வாறு 100 வருடங்களுக்கு முன்னர் “நீசபாஷை” என்ற குறிச்சொல் தமிழை ஒரு சாராரிடம் குறித்ததோ அதே போல, இந்த “வந்தேறி” வார்த்தைகளும் மறுசாராரிடம் இடம் பெற்றுவிட்டன.

தமிழைப்போலவே எல்லா மொழிகளும் போற்றத்தக்கவையே. எல்லா மொழிகளும் புராதனமானவையே.புராதனம் அற்ற மொழிகளும் கூட வேறு புராதன மொழிகளிலிருந்து அமைப்பையும், சொற்களையும் பெற்றுத்தான் வளர்ந்துள்ளன. வளர முடியும். தமிழும் கூட நிச்சயமாய் மற்ற மொழிகளுக்கு அளித்தும், மற்ற மொழிகளிலிருந்து பெற்றும் தான் வளர்ந்துள்ளது. ஒரு மொழி இன்ன தேதியில் இனாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று சொல்வதைப் போல முட்டாள் தனம் கிடையாது. இந்த நாளிலிருந்து தமிழ் மொழி என்று ஒரு மொழி இப்படி பேசப்படும் என்பதல்ல ஒரு மொழியின் தோற்றுவாய். மொழி பல இடுகுறிகளாய் உள்ள ஓசைகளைச் சுவீகரித்துக் கொண்டு, மற்ற பேச்சாளிகளிடம் கடன் வாங்கித்தான் வளரும். மொழி என்ற உணர்வே கூட ஒரு மொழி பலகாலம் பேசப்பட்டும், பரிமாறப்பட்டும் அதன் பின்னால் தான் உருவாகியிருக்க முடியும்.

மனிதனின் தோற்றம் பற்றித்தான் அறிவியல் ஆய்கிறது. தமிழனின் தோற்றத்தையும் ஆப்பிரிக்க மொழி பேசுபவனின் தோற்றத்தையும் தனித்தனியே ஆராயவில்லை. அப்படிப்பட்ட ஆய்வு நடந்தாலும் கூட மனிதப்பெருங்குடும்பத்தில் அந்த ஆய்வுகள் நம்மை பிரிக்க இயலாது.

ஒரு புறம் “யாவரும் கேளிர்” என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டு மறுபுறம் தன் சகோதரர்களை “வந்தேறிகள்” என்று அழைப்பது என்ன முரண்பாடு என்பது யாருக்கும் உறுத்துவதில்லை.

***

தமிழின் தொன்மை பற்றிய ஆதாரங்கள் பலவாய் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் கூட இந்தோனேசியாவில் தமிழ் பிராம்மி எழுத்துகள் கண்டுபிடிக்கப் பட்டதாக செய்திகள் வந்தன. மகிழ்ச்சி. ஆனால் இது ஆய்வுக்கான தளமே தவிர மெய்சிலிர்ப்புக்கும், உணர்ச்சி உந்துதலுக்குமான தளம் அல்ல.

***

மொழியியல் வல்லுனர்கள் பிட்ஜின், கிரியோல் என்று இரண்டு விதமான மொழிகளைப் பற்றிப் பேசுவதுண்டு. பிட்ஜின் மொழி என்பது ஒரு விதமான கலப்பட மொழியினைக் குறிக்கும். கிரியோல் பிட்ஜின் மொழியின் சற்றே வளர்ந்த நிலை. உதாரணமாக குவானாவிற்கு இடம் பெயர்ந்த தமிழர்கள், முதலில் தமிழ்ல் பேசி வருவர். பிறகு உள்நாட்டு மொழியுடன் கலந்து ஒரு கலவை மொழியாய் உருவாக்குவர். காலப்போக்கில் அதுவும் கெட்டிப்பட்டு கிரியோல் மொழியாக உருவெடுக்கும்.

சமீபத்தில் ஜேரட் டைமண்ட் எழுதிய ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அது பிட்ஜின் மொழிகளுக்கும் கிரியோல் மொழிகளுக்கும் இடையேயான உறவு பற்றியது. எந்த மொழிகள் பிட்ஜின் நிலையிலேயே நின்றுவிடுகின்றன; பிட்ஜினாக ஆரம்பிக்கும் மொழி எவ்வாறு கிரியோலாக வளர்கிறது என்பதையும்; எந்த மொழிகள் கிரியோலாக உருவாகின்றன; கிரியோல் மொழிகளின் வளர்ச்சி எதனைக்குறிக்கிறது; கிரியோல் மொழிகள் மூலம் நுண்ணிய உணர்வுகள் உள்ள கவிதைகளும் கட்டுரைகளும் எழுதப்பட முடியுமா என்று ஆராய்ந்து பல முன் முடிவுகளை உடைக்கிறது.

கிரியோல் மொழியில் கவிதைகள் எழுதும் மக்கள் யாருக்கும் குறைந்தவர்களுமல்லர். அவர்களது மொழி வந்தேறி மொழியுமல்ல.

முன்பு கிரியோல் மொழிகளை கீழ்த்தரமான மொழி என்று மொழியியல் வல்லுனர்களே கூறி வந்தார்கள். இன்று அப்படிப்பட்ட கருத்து தவறு என்பதையும் கிரியோல் மொழிகள் எந்த விதத்திலும் மற்ற மொழிகளுக்கு குறைவானவை அல்ல என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறார்கள். ஆகவே இன்று கிரியோல் மொழிகள் என்று சொல்லப்படுபவைக்கான இலக்கணம் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளிலிருந்து கலப்பாகி உருவான மொழி என்பதை மட்டுமே குறிக்கிறதே தவிர மேல்தரமான மொழி கீழ்தரமான மொழி என்ற பாகுபாடு காரணமாக அல்ல.

அந்த வகையில் நோக்கினால், இன்று உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுமே ஒரு காலத்தில் கிரியோல் மொழிகள்தாம். பல்வேறு இனங்கள் பல்வேறு சேர்ந்தும் கலந்தும் உறவாடியும் உருவான மொழிகள்தாமே தவிர சிவபெருமானின் உடுக்கையிலிருந்து பிறந்த புனித பிறப்பு கொண்டவை அல்ல. அப்படிப்பட்ட பெருமையை தத்தம் மொழிகளுக்கு பல்வேறு இனக்குழுக்கள் உருவாக்கிக்கொள்ளலாமே தவிர அவை எந்தக் காலத்திலும் அறிவியற்பூர்வமானவையாகவோ உண்மையானவையாகவோ ஆகாது. அவர்தம் மொழி உணர்வை மதிக்கலாம். தமிழில் பல்லாயிரம் “வேற்றுமொழி” வார்த்தைகளும் கட்டுமானங்களும் உள்ளன. அதே போலத்தான் சமஸ்கிருதத்திலும், மலையாளத்திலும் கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் பல்லாயிரக்கணக்கான “வேற்றுமொழி” வார்த்தைகள் இருக்கின்றன. இவற்றை வேற்றுமொழி வார்த்தைகள் என்று காலப்போக்கில் குறிக்கவே முடியாது. சிறிது காலம் சென்று சைக்கிளும், பேனாவும் அலமாரியும் தமிழ் மொழிக்குள் உள்வாங்கப்பட்டு , தமிழாகவே ஆகி விடுகின்றன. எனவே புழக்கத்தில் ஒரு வார்த்தை வந்து ஒரு ஜனத்திரளால் ஒப்புக் கொள்ளப்பட்டபின்பு அதனை வேற்று மொழி வார்த்தை என்று கூறுவதும் கூட அபத்தமானது. ஏனெனில் எல்லாமே நம் மொழிகள்தாம். இந்த பெரிய மனிதக்குடும்பத்தில் நாம் என்ன மொழியைத் தேர்கிறோம் என்பதும், நாம் என்ன மொழியைப் பேச விரும்புகிறோம் என்பதும் கட்டாயத்தினால் அல்ல, சுயத்தேர்வால் நடக்கும்போது யாராலும் அதனை தடுக்க முடியாது தடுக்கவும் கூடாது. நமது மொழியின் வேர்கள் ஆப்பிரிக்காவில் இருக்கின்றன என்பதால் நாம் தமிழை வெறுத்தொதுக்கிவிடுவோமா? அல்லது தமிழிலிருந்து மலையாளம் பிறந்தது என்று நிரூபித்தால் மலையாளிகள் மலையாளத்தை வெறுத்தொதுக்கிவிடுவார்களா?

இப்படிப்பட்ட குழுமனப்பான்மையும், குறுகிய பார்வைகளும் நவீன காலத்து நிதர்சனங்களுக்கு பொருந்தாதவை. அவலம் என்னவென்றால் இந்த அபத்தத்தை எடுத்துச் சொல்லக்கூட ஆட்கள்இல்லை.

***

தமிழ் ஆய்வாளர்களில் மூன்று பரந்த பிரிவினரைக் காண்கிறேன். முதல் பிரிவில் நிஜமான தமிழ் ஆய்வாளர்கள். இவர்கள் தமிழையும் தமிழின் பெருமையையும் தமிழனுக்கு மீட்டுத் தந்தவர்கள். சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து இன்று வரையில் வையாபுரிப் பிள்ளை, வ அய் சுப்பிரமணியன், ஜேசுதாசன், நாச்சிமுத்து, உவே சாமிநாதையர், மா இராசமாணிக்கனார், பண்டித மணி, வேங்கடசாமி நாட்டார், சாமி சிதம்பரனார் என்று ஒரு பெரும் பட்டியல் இடலாம். இவர்கள் உண்மையானவர்கள். இவர்களின் சிலரின் கால ஆய்வில் தவறு இருக்கலாம். ஆனால் அதன் பின்னே ஏதும் செயல் திட்டம் இல்லை. இரண்டாவது வகையினர் : தமக்கென்று ஒரு கருத்துச் சார்பைக் கொண்டிருந்தாலும் , அந்தக் கருத்துகளைத் தாண்டியும் பொருட்படுத்தத்தக்க ஆய்வினைச் செய்தவர்கள். இவர்களில் மார்க்சியச் சார்புடைய கா சிவத்தம்பி, க கைலாசபதி, நுமான், நா வானமாமலை போன்றவர்களும், திராவிட இயக்கச்சார்புள்ள கா அப்பாத்துரை, தேவநேயப் பாவாணர், ஆ இரா வேங்கடாசலபதி ஆகியோரைச் சுட்டலாம். மூன்றாவது ரகம் தான் சிவக்குமாரை ஒத்தவர்கள். இப்போது இவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இவர்களில் கவிதாசரண், ஆனா ரூனா போன்றவர்களைக் காண்கிறேன். வெற்று ஓசையை , எந்த சுய சிந்தனையும் இல்லாமல் அர்ச்சனை செய்பவர்கள் இவர்களும் பிற திராவிட இயக்க “அறிஞர்களும்”. நான்காவது ரகமும் ஒன்று சமீபத்தில் எழுந்துள்ளது. மார்சியத்தையும், பெரியாரியத்தையும் கலந்து கட்டிக் கடை விரித்திருக்கும் இவர்கள், மார்க்சிடம் இல்லாத குறுந்தேசியவாதத்தையும், பெரியாரிடம் இருந்த இனத்துவேஷத்தையும் கலந்து பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைச் சுற்றியும் பத்துப்பேர் இருக்கத் தான் செய்கிறார்கள்

***

Series Navigation

மஞ்சுளா நவநீதன்

மஞ்சுளா நவநீதன்