தமிழ் சினிமாவில் ‘படித்தவர்கள் ‘

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

ச. பெரியசாமி


‘சின்னக் கவுண்டர் ‘ என்ற படத்தில் ஒரு காட்சி. பஞ்சாயத்துத் தலைவராக இருக்கும் விஜயகாந்த் சொல்கிற தீர்ப்பை ஒரு கோர்ட் நீதிபதியே ஆச்சரியத்துடன் மெச்சுவார். அவர் கூட இருக்கும் இன்னொரு ஆள் நீதிபதியையும் நீதித்துறையையும் நீங்கள் எல்லாம் என்ன என்கிற மாதிரி பேசுவார். ரஜினி காந்த் படத்தில் ஒரு மாவட்ட ஆட்சியரை விடவும் படிக்காத ரஜினி காந்த் அறிவாளியாகவும் நல்லவராகவும் இருப்பார். இது தான் தமிழ் சினிமா கட்டமைத்திருக்கும் படித்த அறிவுஜீவிகள் குறித்த பிம்பம். அதாவது படிக்காதவர்கள் படித்தவர்களை விடவும் அறிவாளிகளாகவும் நல்லவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தான் அது. லஞ்சம், ஊழல், குழப்பமான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் நிலவி வரும் நமது அரசு அமைப்புக்கள், அதில் இருப்பவர்கள் குறித்து சாதாரண மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை தான். ஆனால் அதற்காக படித்தவர்களை மட்டும் அதற்கு பொறுப்பாக்க கூடாது. தேர்ந்தெடுக்கப்படுகிற மக்கள் பிரதி நிதிகளில் எத்தனை பேர் படித்த அறிவுஜீவிகள் ? தமிழ் சினிமாக்கள் போல் பாமரத்தனத்தை வலியுறுத்தும் சினிமா வேறு மொழிகளில் நிச்சயம் இருக்க முடியாது. ஏனெனில் இதில் ஈடுபடுகிறவர்களில் பலர் படிப்பு வாசனையை முழுமையாக அறியாத அரைகுறைகள். எட்டுப்பட்டிக்கும் பஞ்சாயத்து செய்வது, தொப்புளில் பம்பரம் விடுவது, ஆம்லட் போடுவது ஆகிய காட்சிகளுடன் படித்தவர்களைக் கேவலப்படுத்தும் ஒரு காட்சி நிச்சயம் இவர்கள் படங்களில் இருந்தே ஆகவேண்டும். அப்போது தான் பார்ப்பவர்களுக்குத் தூக்கம் வருகிறதோ இல்லையோ இவர்களுக்குத் தூக்கம் வரும். ‘படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான் ‘ என்ற பழமொழி வழங்கும் இந்த மண்ணில் படிக்காதவர்களுடைய அறிவையும் திறமையையும் நாணயத்தையும் புகழ்ந்து பாடும் ‘படிக்காதவன் ‘ ‘படிக்காத பண்ணையார் ‘ போன்ற படங்கள் வெளி வந்து வெற்றி அடைந்தன. உண்மை, சிக்கனம், உழைப்பு மற்றும் நியாயம் ஆகியன கிராமங்களில் மட்டும் இருப்பதாகவும் நகரத்தில் இருப்பவர்கள் சோம்பேறிகள், ஊதாரிகள், உல்லாசிகள், அ நியாயம் செய்யும் மோசமானவர்கள் என்றும் பழைய காலத் திரைப்படங்களில் சித்தரித்திருப்பார்கள். அது போலத்தான் இந்த வகையான திரைப்படங்களும்.

படித்தவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று யாரும் சொல்ல வில்லை. சொல்லவும் மாட்டார்கள். ஐந்து நட்ச்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு குடி, குட்டிகளுடன் ‘கதை டிஷ்கஷன் ‘ செய்யும் இவர்களுக்கும் அது நன்றாகத்தெரியும். மேலும் கல்வியைத் தனி நபர் ஒழுக்கத்தோடு தொடர்பு படுத்திப்பார்ப்பது ஒரு இந்தியச் சிந்தனை மட்டுமே. நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கல்வி மக்கள் மயமாக்கப்பட்ட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இது இல்லை.

சினிமா என்ற பெயரில் நடிப்பு என்றா ? என்னவென்றே தெரியாத கோமாளிச்சேட்டை, இரட்டை அர்த்த வசனங்கள், ஜட்டி, பிரா போன்ற குறைந்த ஆடைகளுடன் டப்பாங்குத்து ஆட்டம், எட்டுப்பட்டி பதினெட்டுப்பட்டிக்குப் பஞ்சாயத்து செய்யும் பிற்போக்குத்தனம், குத்து வசனம் ஆகியவற்றைக்காட்டி காசு பார்த்தும் திருப்தி அடையாத இவர்களில் வக்கிர உணர்வே இம்மாதிரி படித்தவர்களைப் பழிக்க தூண்டுகிறது. இம்மாதிரியான படங்கள் உலகத்தில் படிப்பறிவற்றவர்களின் பாதிப்பேர் இருக்கும் இந்தியாவில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என யோசிக்க வேண்டும். அறிவு சார் சமூகம் என்னும் கோட்பாட்டுக்கே இது எதிரானது. இன்னும் சொல்லப்போனால் இது ஒரு வகையான பிற்போக்குத்தனம்.

இப்போது பிரச்சினை அது மட்டும் அல்ல. இம்மாதிரியான ஆட்கள் அரசியலை ‘தூய்மை ‘ப்படுத்தி மக்கள் ‘சேவை ‘யாற்ற கொடி பிடித்துக்கொண்டு புறப்பட்டிருப்பதுதான் ரொம்பவே நெருடலாக இருக்கிறது.

ச. பெரியசாமி.

reperian@rediffmail.com

Series Navigation

ச. பெரியசாமி.

ச. பெரியசாமி.