தமிழ் அரசியல்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

ஞாநி


தமிழை அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்தும் போக்கு தமிழ் நாட்டில் நீண்ட காலமாக் இருந்து வருகிறது. அரசியல்வாதிகளுக்கு தமிழ் பயன்பட்ட அளவு தமிழுக்கு அரசியல்வாதிகள் பயன்படவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

தமிழைப் பயன்படுத்தி அரசியல் லாபம் சம்பாதிக்க முடியும என்ற முயற்சியில் அண்மைக்காலமாக இறங்கியிருப்பவர் டாக்டர் ராமதாஸ். இதில் தன்னுடன் தலித் தலைவர் தொல்.திருமாவளவனையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் நாட்டில் அறிவிப்புப் பலகைகளில் தமிழ், திரைப்படப் பெயர்களில் தமிழ், தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்கள், கோயில்களில் தமிழ் வழிபாடு என்பவையெல்லாம் நிச்சயம் விரும்பத் தகுந்தவைதான். ஆனால் அவை தமிழையோ தமிழரையோ மேம்படுத்துவதற்கான முன்னுரிமைத் திட்டங்களல்ல.

தமிழ் நாட்டில் தமிழ் வழியில் மட்டுமே கல்வி ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி வரை இருக்க வேண்டும். ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக மட்டுமே ஒழுங்காகக் கற்பிக்கப்பட வேண்டும் . நீதி மன்றங்கள் முதல் தனியார் அலுவலகங்கள் வரை அன்றாடப் பணிகள் தமிழில் நடைபெற வேண்டும். இந்த மூன்று அம்ச திட்டம் மட்டுமே தமிழின் நிலையையும் தமிழர் நிலையையும் உயர்த்துவதற்கான அடிப்படை, முன்னுரிமைப் பணிகள்.

இதற்காக எந்தத் தீவிர முயற்சியையும் மேற்கொள்ளாமல் சினிமாக்காரர்களை மிரட்டுவது, கடைக்காரர்களை மிரட்டுவது போன்ற மேம்போக்கான வேலைகள் புரட்சிகரமான செயல்பாடு போல பொய்த் தோற்றம் தர மட்டுமே பயன்படும்.

மீடியாவில் தமிழ்ப் பெயர்கள் இல்லாதது மிக முக்கியமான பிரச்சினை என்று ராமதாஸ் கருதினால், அவர் முதலில் போராட்டம் நடத்த வேண்டியது சன் டிவி குழுமத்துக்கு எதிராகத்தான். தமிழ் சினிமா வருடத்தில் 70 படங்கள் மட்டுமே வெளியாகின்றன. அவற்றில் மக்கள் ஆதரிக்கும் படங்கள் எண்ணிக்கை ஐந்து. அந்த வெற்றிப்படங்களை மொத்தமாக் கொட்டகைகளில் பார்ப்பவர்கள் எண்ணிக்கை 40 லட்சம் பேருக்கு மேல் இல்லை.

ஆனால் சினிமாவை விட அதிகமான மக்களிடம் சென்று சேரும் மீடியா இன்று தொலைக்காட்சிதான். அதில் முதலிடத்தில் இருந்து கொண்டு, தினசரி ஒவ்வொரு நிகழ்ச்சியையும் 40 லட்சம் மக்கள் பார்க்கும் அளவுக்கு 24 மணி நேரமும் வருடம் முழுக்க ஒளிபரப்பு செய்யும் தமிழ்த் தொலைக்காட்சிகளின் பெயர்களை சன், கே, சன் நியூஸ் என்றுதான் தமிழினத்தலைவரின் குடும்பம் வைத்திருக்கிறது. தூர்தர்ஷன் கூட தன் தமிழ் ஒளிபரப்பை பொதிகை என்றே பெயரிட்டிருக்கிறது.

எனவே ராமதாஸ் மெய்யாகவே தமிழ்ப் பெயர்களுக்காகப் போராடுவதாயிருந்தால் சன் டிவிக்கு எதிராக முதல் போராட்டத்தை நடத்தட்டும். அதற்கான துணிவும் அரசியல் நேர்மையும் அவருக்கு இருக்குமானால் தமிழர்கள் மகிழ்ச்சிய்டையலாம்.

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி