தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2004 – பிரான்ஸ் – ஒரு குறிப்பு

This entry is part [part not set] of 55 in the series 20041111_Issue

தொகுப்பு : றஞ்சி


பிரான்சில் இரண்டாவது தடவையாக நடைபெற்ற பெண்கள் சந்திப்பின் 23வது தொடர் சென்ற ஒக்டோபர் 9,10ம் திகதிகளில் (2004) பிரான்சின் கார்கெஸ் சார்சல் நகாில் நடைபெற்றுள்ளது. இச் சந்திப்பு விஐியினால் ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இச் சந்திப்பில் பிரான்ஸ், ெஐர்மனி, சுவிஸ், லண்டன் போன்ற நாடுகளிலிருந்து பெண்கள் வந்து கலந்து கொண்டனர். பெண்ணிய சிந்தனை நோக்கிலான கருத்தாடல்கள், அனுபவப் பாிமாற்றங்கள், விவாதங்கள் என்பன இச் சந்திப்பில் இடம்பெற்றது. விஐி தலைமை தாங்கினார். நிகழ்ச்சிகள் இரு நாட்கள் நடைபெற்றது. முதலில் புரிந்துணர்வுக்கான சுயஅறிமுகத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. விஐி தனது தலைமை உரையின்போது இரண்டாவது தடவையாக பிரான்சில் நடைபெறும் இப் பெண்கள் சந்திப்பு 14 வருடமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது என்றும், இச் சந்திப்பானது பெண்விடுதலை நோக்கிலான பெண்ணிய சிந்தனை கருத்தாடல்களுக்கும் அனுபவப் பகிர்வுக்கும் வழிவகுப்பது மட்டுமல்லாமல், பல புதிய பெண் எழுத்தாளர்களை ஊக்குவித்தும் வருகிறது என்றார். இப் பெண்கள் சந்திப்பானது தனது எட்டாவது பெண்கள் சந்திப்பு மலரை வெளியிட்டுள்ளதையும் குறிப்பிட்டார். இப் பெண்கள் சந்திப்புக்கு எந்த ஒரு அமைப்போ அல்லது நிறுவனமோ உதவி செய்வதில்லை என்ற செய்தியை நினைவுபடுத்திய விஐி, என்றும் பெண்களாகிய நாம் தனித்தே இதை செய்து வருகிறோம் என்பதை தனது தலைமை உரையில் தொிவித்தார். அத்துடன் இப் பெண்கள் சந்திப்பை ஆரம்பித்த பல பெண்கள் இங்கு இல்லை என்றும் அது கவலைக்குரிய விடயம் என குறிப்பிட்டதுடன், என்றாலும் பல புதிய பெண்கள் கலந்து கொள்வதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம் எனக் கூறி பெண்கள் சந்திப்பை ஆரம்பித்து வைத்தார்.

முதல் நிகழ்ச்சியாக ”புகலிட வாழ்வு- புதிய தலைமுறையினர் எதிர்நோக்கும் இரட்டைக் கலாச்சார சிக்கல்கள்” என்ற தலைப்பின் கீழ் தனது கருத்தை முன்வைத்து பாிமளா (பிரான்ஸ்) உரையாடினார். தமது ஆயிரமாயிரமாண்டு கால ஆணாதிக்கச் சீரழிவுகளை பெண்களின் தலையில் எத்தனை இலகுவாக சுமத்திவிட்டு தப்பித்துக் கொண்டார்களோ, அதேபோலத்தான் இன்று புலம்பெயர் பிள்ளைகளின் தலையிலும் அதே கருத்தை சுமத்துகிறார்கள். நம் நாட்டுக் கல்விமுறை, குழந்தை வளர்ப்பு, சூழல், குடும்ப உறவுகள், மரபுகள் என்பன புலம்பெயர் நாட்டு நிலைமையுடன் மாறுபட்டதென்பது தெளிவான ஒன்றுதான். ஆனால் சில பெற்றோர் நாம் எமது குழந்தைகளுக்காக என்னவெல்லாம் செய்கிறோம், இன்னும் செய்வோம் என சடப்பொருள்ரீதியான பார்வையை மட்டுமே முன்வைக்கின்றனர். ஆனால் வருங்கால, எமது குழந்தைகள் மீதான பாதிப்புக்கள் என்ன ?. இளவயதினர் இரு வேறுபட்ட உலகில் வாழ்பவர்கள். இங்குள்ள முறை அவர்களுக்கு இயல்பாகவே தெரிகிறது. ஆனால் பெற்றோர்களோ தடைகளை மட்டுமே விதிக்கின்றனர். இதனால் பிள்ளைகளினால் பெற்றோர்களைப் புாிந்து கொள்ள முடியாது குழம்பிப்போவது மட்டுமன்றி மனமுடைந்தும் போய்விடுகின்றனர். இதனால் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான இடைவெளி கூடிக்கொண்டே போய்விடுகிறது.

பாலியல் மற்றும் உடல்ாீதியான மாற்றங்களை எளிமையாகச் சொல்லலாம். இங்கு பாடசாலையிலும் அவை சம்பந்தமாக கற்றுத்தரப்படுகின்றன. ஆனாலும் பெற்றோர்களாகிய நாம் எமது பங்கினையும் செய்யவேண்டும். பாலியல் பற்றிய விளக்கங்களை, விளைவுகளை விளங்கப்படுத்த வேண்டும் அது எமது கடமையும் ஆகிறது. பெற்றோர்கள் முதலில் அவர்கள் வாழும் நாட்டின் மொழியை ஓரளவுக்கேனும் தொிந்துவைத்திருக்க வேண்டும். இல்லையேல் பிள்ளைகளுடனான பிரச்சினைகளை கதைப்பதற்கோ விளங்கப்படுத்துவதற்கோ இயலாது போய்விடும்.

அத்துடன் பெண் குழந்தைககளுக்கு தண்டனைகள், இறுக்கமான கட்டுப்பாடுகள் என துன்பங்களை கொடுத்து வருகின்றனர். 10 வயது தொடக்கம் 13வயது பாலியல் உணர்வுகள் அரும்பும் காலகட்டமாதலால் மாறுபட்ட பாலியல் பழக்கவழக்கங்களும் தோற்றம்பெறுகின்றன. இதை ஒருவகை அச்சம்கொண்ட மனோபாவத்தில் அணுகமுனையும் பெற்றோர்கள்  கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் என்பனவற்றை அதீதமாகப் பயன்படுத்த முனைகின்றனர். இது எதிர்மறையான விளைவுகளைக் கொண்டுவந்துவிடுகின்றது. நாங்கள் மிகவும் ஒடுக்குமுறைக்குள்ளான எங்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கு முயல்கிறோம். அதாவது பிணி பிடித்த எமது அடிமைக் கலாச்சாரத்தில் இருக்கும் குழந்தைகளின் விடுதலை இன்று முக்கியம். நாங்கள் அந்த அடிமைக் கலாச்சாரத்தின் பரப்பில் இருந்துதான் இன்னும் செயற்படுகின்றோம், சிந்திக்கின்றோம். அந்தச் சுமையை எங்களுடைய சிறார்களுக்கூடாகத் தாங்கிப்பிடிப்பதற்கு முயல்வதன் காரணமாக தொடர்ந்த தொடர்கின்ற போராட்டத்தில் அவர்களின் ஆளுமையை அழிக்கிறோம், அவர்களை வெறுப்படையச் செய்கிறோம். பெற்றோர்களாகிய நாம் ஒரு நல்ல உலகத்தை பிள்ளைகள் உருவாக்குவதற்கும், அவர்கள் சிந்திப்பதற்கும் வழிவகுக்க வேண்டும். என தனது கருத்தைக் கூறி முடித்தார். இதுசம்பந்தமாக கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் நீடித்த கலந்துரையாடலில் பல பெண்களும் கருத்துக் கூறினர். கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. (விவாதத்தில் இடம்பெற்ற பல கருத்துக்கள் இங்கு தொகுக்கப்படவில்லை.)

அடுத்த நிகழ்ச்சியாக ”தேடல் வலி” என்ற கவிதைத் தொகுப்பை தர்மினி (பிரான்ஸ்) விமர்சனம் செய்திருந்தார். இக் கவிதைத் தொகுதி ெஐயந்தி சாம்சன் இன் கவிதைகளின் தொகுப்பாகும். இந் நுால் பற்றி தர்மினி கூறுகையில், என்னதான் ஆண்கள் எழுதித்தள்ளினாலும் ஒரு பெண்ணின் மனநிலையை பெண்களால் மட்டுமே உணர முடியும். பிரச்சினையை சந்தித்தவர்களால் தான் புாிந்துகொள்ள முடியும். இல்லை என்றால் பாலின் நிறமும் கொக்கின் நிறமும் வெள்ளை என்ற கதையாகத் தான் இருக்கும். ஆண்கள் இக் கவிதைகளைப் படித்து விட்டு அதன் கருத்துக்களை உள்வாங்குவதும் பெண்கள் உணர்வது என்பதும் வித்தியாசம். இதன் அடிப்படையில் இவாின் கவிதைகள் பெரும்பாலானவை சந்தேகம், நட்பு பற்றியே கூடுதலாகப் பேசுகிறது என்றார். அதேநேரம் சில கவிதைகள் முரண்நிலையாக உள்ளன என்றும் விமர்சித்தார். தேடல் வலியில் வந்த கவிதைகள் சில உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

தர்மினியின் விமர்சனத்திற்கு கருத்துச் சொன்ன பெண்கள், புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்கள் ஒரு கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு நிதி பிரச்சினையோ அல்லது தொழில்நுட்பப் பிரச்சினையோ இல்லை. ஆனால் இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ வசதிவாய்ப்பு அப்படிப்பட்டதல்ல. நல்ல தரமான கவிதைகளை படைப்பவர்களால்கூட தமது படைப்புகளை தொகுப்பாக கொண்டுவருவதற்கு முடியாத நிலை உள்ளது. இந்த புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்கள் பலர் மற்றைய படைப்பாளிகளின் படைப்புகளை தேடி வாசிப்பதில்லை. அத்துடன் அவர்களால் வெளியிடப்படும் புத்தகங்களை இவர்கள் விமர்சனம் செய்வதுமில்லை. ஆகக் குறைந்தது மற்றவர்களின் படைப்புகளை வாசித்து தமது எழுத்துதிறனை வளர்த்துக் கொள்ளவும் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. ெஐயந்தி சாம்சன் பிரான்சில் வாழ்ந்து கொண்டிருப்பவர். அவாின் கவிதைத் தொகுதி மீதான விமர்சனம் பெண்கள் சந்திப்பில் நடைபெறுகிறது என்று தொிந்தும் அவர் பெண்கள் சந்திப்புக்கு வருகை தராதது அவருக்கு இலக்கியத்தின் மேல் உள்ள அக்கறையை எடுத்துக் காட்டுகிறது என்றும் சில பெண்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் ஊடறு என்ற தொகுப்பில் வெளிவந்த கவிதையே தேடல்வலி என்ற கவிதை எனவும் ஆனால் மற்றைய சஞ்சிகைகளுக்கு நன்றி கூறிய ெஐயந்தி சாம்சன் ஊடறு தொகுப்பை மறந்து விட்டார் என்றும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ”பெண்கள் சந்திப்பு மலர்-2004” வெளியீடு இடம்பெற்றது. 170 பக்கங்களில் வெளிவந்துள்ள இம் மலரைப் பற்றிய ஓர் அறிமுகத்தை நான் செய்தேன். இந்த (8 வது) பெண்கள் சந்திப்பு மலாில் பல புதிய பெண் எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள் என்றும் பெண்கள் சந்திப்பு மலர் பெண்களுக்கு ஓர் எழுதுகளமாக இருந்து வருகின்றது எனவும் குறிப்பிட்டேன். பொருளாதாரப் பிரச்சினை மற்றும் கால நெருக்கடிகள் இருந்தும் அதையும் மீறி இச் சந்திப்புக்களை நடத்துவதோடு மட்டுமல்ல, பெண்கள் சந்திப்பு மலரையும் கொண்டு வருவதில் கடுமையாக உழைப்பதையும் பாராட்டியே ஆகவேண்டும் என்றேன். இந்த 8 வது பெண்கள் சந்திப்பு மலருக்கு ஆக்கங்களைத் தந்துதவிய பெண்களுக்கு நன்றிகூறி அறிமுகத்தை முடித்துக்கொண்டேன். முதல் பிரதியை தேவா வழங்க அதை ராேஐஸ்வாி பாலசுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார்.

அடுத்த நிகழ்வாக ”சினிமாவில்- பெண்களும் பாலியல் பாிமாணங்களும்” என்ற தலைப்பின் கீழ் தனது கருத்துக்களை முன்வைத்த ராேஐஸ்வாி பாலசுப்பிரமணியம் இன்றைய தமிழ்ச் சினிமாவில் பெண்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றனர் என்பதையும், அவர்களின் உடை, நடனம் , சண்டைக்காட்சிகள் என கேவலமான காட்சி முறைகளை நடைமுறைப்படுத்தும் இந்திய கனவுத் தொழிற்சாலையான தமிழ்ச் சினிமா என்ன கருத்தை மக்களிடையே கொண்டு வருகிறது என்றால் அது பூச்சியம் என்றும் கூறினார். வெளிநாட்டுக் காட்சிகள் கூடுதலாக காண்பிக்கப்பட்டாலும் சினிமாக்காரர்களின் கமரா குளியல் அறைகளையும் படுக்கையறைகளையுமே அதிகமாக சுற்றிவருகின்றன. ஆனால் சொந்த மண்ணையும் அந்த மண்ணின் வேர்களையும் கணக்கில் எடுக்காமல் தங்களது சுயலாபத்திற்காக சினிமாக்காரர்கள் இயங்கி வருவதுதான் இன்றைய பாிமாணமாக உள்ளது. இக் காலத்துப் படங்கள் பாய்ஸ், நியூ, ஆயுதம் போன்ற படங்கள் என்னத்தை மக்களுக்கு சொல்ல வருகின்றன. நியூ படத்தில் கதாநாயகியாக நடிக்கும் சிம்ரான் ஒரு காமவெறி பிடித்த பெண்ணாக சித்தாிக்கப்படுகின்றாள். எட்டு வயது சிறுவனுக்கு குழந்தை பிறக்கிறது. இப்படியாக படங்களை தயாாிக்கின்றார்கள். ஆனால் இந்த மக்கள் இதற்கு எல்லாம் ஆமாம் என்ற தலையாட்டலோடு நின்று விடுவதோடு உள்ளார்கள். இதே சினிமா நடைமுறையில் இவர்களால் வாழ்க்கையாகக் கொள்ள முடியுமா ? என்று கேள்வியும் எழுப்பினார். இந்தப் படங்களை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு, புலம்பெயர் மக்கள் அதையே தமது வாழ்வாக ஏன் கொண்டு வருகின்றனர் இல்லை என்றும், பல உதாரணங்களுடன் அவர் தனது கருத்தை வெளியிட்டார். கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இத் தலையங்கத்தில் எல்லோரும் தமது கருத்துக்களை பாிமாறிக் கொண்டனர்.

இதனையடுத்து ”வன்முறையை எதிர்கொள்ளல்” என்ற தலைப்பின்கீழ் ”கோலா” அமைப்பின் செயற்பாடுகளை கிருசாந்தி (பிரான்ஸ்) அறிமுகம் செய்தார். இவ் அமைப்பின் மூலம் பெண்கள் எப்படி செயற்படுகிறார்கள் என்றும் மனித உாிமைகள் எப்படி மீறப்படுகின்றன, அது தனியே ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் தான் மீறப்படுகின்றன என்று கூறியவர் உதாரணமாக சந்திாிகா அம்மையார் மனித உாிமைகளை மீறுவதுமட்டுமல்ல, உணர்வு பூர்வமாக சமாதானத்தையும் முன்னெடுத்துச் செல்லவில்லை என்றும் கூறினார். இதற்கு குறுக்கிட்ட பல பெண்கள் சந்திாிகா அம்மையார் என்று சொல்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும், சந்திாிகாவின் கருத்துக்களிலோ அல்லது அரசியலிலோ தமக்கு உடன்பாடு இல்லை, ஆனால் அம்மையார் என்ற வார்த்தையை ஏன் பாவிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன் ஏன் அவர் இலங்கையின் ஐனாதிபதி என்று கூறக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர். இதில் இலங்கை அரசியலும் கலந்துரையாடப்பட்டது.

அடுத்து நடைபெற்ற நிகழ்வாக ”ஓவியங்களில் பெண்கள்” என்ற கருத்தின் கீழ் ஓவியை அருந்ததி உரையாடினார். நன்கு தாயாாிக்கப்பட்ட தனது கருத்துக்களை அவர் முன்வைத்தார். பெண்கள் குறிப்பிட்ட சில துறைகளில் பிரபல்யமாதல் ஏனோ கடினமாகிவிடுகின்றது. கலைகளில் பெண்ணின் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் பெருமளவில் இருந்தாலும் கலை வரலாற்றில் பெண்களின் பெயர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாகவே உள்ளது. ஒவ்வொரு பெண்களின் பங்களிப்பும் இருந்துவந்த போதும் அவர்களின் பெயர்கள் ஏனோ வரலாற்றில் பதிவாக்கப்படாமலேயே போய்விட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. முதன்முதலில் பெண் ஓவியர்கள் மறுமலர்ச்சிக் காலத்தில் இத்தாலிலேயே அடையாளம் காணப்பட்டனர். ஆனாலும் நவீன காலங்களில் பெண்களிற்கு ஓவியத்துறையில் முற்றுமுழுதாக கற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் அமைந்திருந்தாலும் முன்னர் குறிப்பிட்டது போன்று திருமணத்தால் ஏற்படும் சமூக நிலவரங்கள் பெண்களுக்கேயான உடற்கூற்று காரணங்கள் மற்றும் தாய்மை போன்ற காரணிகள் பெண்களை முழுமையாகக் கலைத்துறையில் ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் செய்துவிடுகின்றது. ஆயினும் தேவாலயங்களை மையமாகக் கொண்டு கலை வளர்ந்த காலப்பகுதியில்  கன்னியாஸ்திாிகள் மட்டுமின்றி தனிப்பட்ட பெண்களும் ஆண் ஒவியர்களுக்கு ஈடாக ஓவியங்களை படைத்திருக்கின்றனர் என்பது பெண்களுக்கு பெருமை தரும் விடயமே. பிற்பட்ட காலங்களில் அதாவது ஓவியக்கல்லுாாிகளில் பெண்கள் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்படுவதுடன் ஆண்களின் நிர்வாணத் தோற்றத்தை வரைவதிலும் தடைவிதிக்கப்படுகின்றது. இந் இடர்ப்பாடான சூழலில் பெண்கள் தம்மை இத்துறையில் ஆண்களிற்கு ஈடாக வளர்த்துக் கொள்வதென்பது சாத்தியமற்றதாகவே போகின்றது. ஆனாலும் காலப்போக்கில் ஓவியத்தின் கருத்துக்கள் மாறிச் சென்றிருப்பதுடன் பெண் ஓவியர்களின் பார்வையில் பெண்கள் வித்தியாசமான முறையில் சித்தாிக்கப்பட்டிருப்பதையும் காணலாம் என்று தனது கருத்துக்களை முன்வைத்த அருந்ததி, அவ்வாறான சில ஓவியங்களையும் எடுத்துக்காட்டியுமிருந்தார். ஓவியம் பற்றிய வாசிப்பே எம்மிடையே அருகியிருக்கும் நிலையில் ஓவியர் அருந்ததியின் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

எழுத்தாளர், பத்திாிகையாளர், மனித உாிமை ஆர்வலர், குறந்திரைப்பட இயக்குநர், சமூக நலப் பணியாளர் என்று பல்துறைகளிலும்  இயங்கிக் கொண்டிருக்கும் ராேஐஸ்வாி பாலசுப்பிரமணியத்தின்  ”நாளைய மனிதர்கள்” என்ற நாவல் அண்மையில் வெளிவந்துள்ளது. நவீன கலையில் நிகழ்கால வாழ்வின் நெருக்கடிகளைச் சித்தாிக்கும் முறையில் நாவல் என்ற படைப்பு தன்னை மேம்படுத்திக் கொள்கிறது. புறச்சூழல் பற்றிய விபாிப்புகளைக் காட்டிலும் நெருக்கடிகள், அழுத்தங்கள்  போன்ற அம்சங்கள் (மனிதர்கள் தமக்குள் நடத்துகின்ற மனப் போராட்டங்கள்) நாவல் என்ற கலைக்கு வளம் சேர்க்கின்றது. நாவல் என்பது ஒரு கலை மட்டுமல்ல. ஒரு கல்வியாகவும் மனித இனம் குறித்த ஆய்வாகவும் செயல்படுகின்றது. குடும்ப அமைப்பு முறையினுள் இருக்கக் கூடிய பிரச்சினைகள், கருச்சிதைவு என்பது ஒரு பெண்ணால் எப்படி தீர்மானிக்கப்படுகிறது, கூட்டு அமைப்பு முறையினால் ஏற்படும் சிக்கல்கள், அக் குடும்ப அங்கத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்றவற்றையும் எடுத்துக் கூறியுள்ளார் நாவலாசிாியர். நாளைய உலகத்திற்கு நம்மையும் தயார்படுத்திக் கொள்வதற்காக இந் நாவலை வாசிக்கலாம் எனவும் கருத்துக் கூறப்பட்டது. இந் நாவலில் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் ஜரோப்பியர் என பல பாத்திரங்கள் வந்து போகின்றன. இந் நாவலை பலர் வாசிக்காததினால் கருத்துக்கள் பாிமாறப்படவில்லை. அதனால் படைப்பாளி என்ற வகையில் ராேஐஸ்வாி பாலசுப்பிரமணியத்தை கதையின் சாரம்சத்தை கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர் அந் நாவலின் சாரம்சத்தை விளக்கினார். அவர் கதை சொன்ன விதம் மிகவும் பிடித்தமானதாகவே இருந்தது. நாவலை கட்டாயம் வாசிக்க வேண்டும் என்ற துடிப்புடன் பலர் காணப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து சுமதி ரூபனின் மனுசி, சப்பாத்து, உ–, மனமுள் உட்பட ராேஐஸ்வாி பாலசுப்பிரமணியத்தின் (ஈழப்போராட்ட ஆரம்பகாலங்களில் புலம்பெயர்வு பற்றிய) விவரணப் படமும் காட்டப்பட்டது. சுமதி ரூபனின் படங்களில் ஒன்றைத் தவிர மற்றையவை அவரது கவிதைகளையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது என்ற செய்தி பாிமாறப்பட்டது. சப்பாத்து, ஏற்கனவே செருப்பு என்ற குறும்படத்தின் சாரம்சம் ஆக இருக்கின்றது என்றும் அதில் நடித்த அந்தச் சிறுவனின் நடிப்பு நன்றாக உள்ளதாகவும் கருத்துக் கூறப்பட்டது. மனுசி குறும்படம் எல்லோரையும் கவர்ந்த படமாகவே இருந்தது. சாதாரணமாக அன்றாடம் பெண்கள் எதிர்நோக்கும் நிகழ்வாகவே மனுசி வலம்வருகிறாள். இதுவரை காலமும் ஆண்களிடமிருந்து ஆணாதிக்க சிந்தனையில் எடுக்கப்பட்ட பல குறும்படங்களுக்கு மாற்றாக பெண்நிலையில் நின்று பெண்களால் படைத்துக்காட்ட முடியும் என்பதை சுமதி ரூபன் நிரூபித்துள்ளார் என கருத்துக்கள் கூறப்பட்டன. (இதேநேரம் லண்டனில் நடைபெற்ற குறுந்திரைப்பட விழாவின்போது சிறந்த நடிகையாக சுமதி ரூபன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்படத்தக்கது.)

ஓவ்வொரு நிகழ்ச்சிகளின் முடிவிலும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அதில் பெண்களது பிரச்சினைகள் பெண்கள் செய்ய வேண்டியவைகள் பற்றிப் பேசப்பட்டன பெண்களுக்கு தனியான சந்திப்புக்கள் மனம்விட்டுப் பேசுவதற்கான உளவியல் சந்தர்ப்பத்தை வழங்கும் எனவும், பெண்கள் அப்போதுதான் ஆண்நோக்கின் இடையீடற்ற கருத்துக்களில் சுதந்திரமாக வளரமுடியும் என்றும், எதிர்ப்புக்களை எதிர்கொள்வதற்கு பக்குவம் வரும் என்றும் கருத்துக்கள் விாித்துக் கூறப்பட்டன. பெண்கள் சந்திப்பானது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனவும் ஏன் இப் பெண்கள் சந்திப்பை 6 மாதத்திற்கு ஒருமுறை நடத்தக் கூடாது எனவும் கலந்து கொண்டவர்கள் கேள்வியும் எழுப்பியுமிருந்தனர். அடுத்த பெண்கள் சந்திப்பு 2005 ம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ளது.

ஓவியை அருந்ததி, சிறுமி ஆரதியின் ஓவியங்கள் முதல்நாள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. அவை பெரும் வரவேற்பைப் பெற்றன.

அத்துடன் ஈராக்கில் அமொிக்க இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் அவலநிலையைச் சித்தாிக்கும் பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டது.

தொகுப்பு

றஞ்சி (சுவிஸ்) 06.112004

ranr@bluewin.ch

Series Navigation

றஞ்சி

றஞ்சி