தமிழ்நாட்டு தொழிற்நுட்பக் கல்விக்கு இன்னொரு பேரிடி

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

ஒரு முன்னாள் REC மாணவன்


நம் தமிழ் மக்களுக்கு முக்கியமான விஷயங்கள், சினிமாவும் அரசியல் நாடகங்களும்தான். இதன் கீழே, உண்மையிலேயே முக்கியமான விஷயங்கள் பேசப்படாமல் மறைந்து போய்விடுகின்றன.

மத்திய மந்திரிக்குழுமமான கேபினட், பிராந்திய பொறியியல் கல்லூரிகளான ஆர்ஈசி (REC)களின் தரத்தை உயர்த்தும் பொருட்டு அவைகளை National Institute of Technologyகளாக மாற்ற முடிவு செய்தது. இந்தியாவெங்கும் 17 REC என்ற பிராந்திய பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.

இன்று அவைகளுக்கு 8.5 கோடி ரூபாய் வருடத்துக்கு மத்திய அரசு மான்யம் வழங்கி வருகிறது. NITஆன பின்னால் மத்திய அரசு 50 கோடி ரூபாய் மான்யம், மேலும் கருவிகள் வாங்கவும், புத்தகங்கள் வாங்கவும் கல்வித் தரத்தை உயர்த்தவும் வழங்கும். இதன் பின்னர் என்.ஐ.டி யான திருச்சி பொறியியல் கல்லூரி ஐஐடி தரத்துக்கு உயர்த்தப்படும்.

திருச்சி துவாக்குடியில் இருக்கும் பிராந்திய பொறியியல் கல்லூரியில் இருந்த சிறப்பான முதல்வர்களால் RECகளிலேயே மிகச்சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறது. இதில் 11 இளங்கலைப் படிப்புகளும், 22 முதுகலைப்படிப்புகளும் சொல்லித்தரப்படுகின்றன. இது தவிர இதில் பிஹெச்டி படிப்புகளும் சொல்லித்தரப்படுகின்றன. இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். என்.ஐ.டிஆக ஆனபின்னால், இந்தக்கல்லூரியில் பிடெக் படிப்பு அளிக்க அனுமதி தரப்படும் என மத்திய கல்விக் குழுமம் உறுதி கூறியிருக்கிறது.

திருச்சி REC மத்திய அரசாலும், மாநில அரசாலும், அரசு சாராத ஆய்வாளர்களாலும் மிகவும் உயர்தரமான கல்வி நிலையமாக அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளது. இதுதான் முதன் முதலாக அப்படி NITஆக ஆகும் என்று கருதிக்கொண்டிருந்த அனைவருக்கும் பேரிடியாக மாநில அரசு நடந்து கொண்டுவிட்டது.

என்.ஐ.டியாக ஆர்.ஈ.சி ஆகவேண்டுமெனில், மத்திய அரசு ஒரு நிபந்தனை விதித்திருக்கிறது. அது, கல்வி நிலையத்தின் தலைவராக (சேர்மனாக) அரசியல்வாதி இருக்கக்கூடாது என்பதுதான் அது. ஆனால், தமிழ்நாடு அரசும், மேற்கு வங்காள அரசும் அந்த நிபந்தனையை ஒப்புக்கொள்ளவில்லை. மாநில கல்வி அமைச்சரே சேர்மனாக நீடிப்பார் என்று கூறின இந்த மாநிலங்கள். மற்ற மாநிலங்கள், தங்கள் மாநில ஆர்.ஈ.சி, என்.ஐ.டி ஆக உயர்வு பெறுவதால் வரும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை கருதி, அரசியல்வாதி அல்லாத ஒருவரை தலைவராக ஆக்க ஒப்புக்கொண்டுவிட்டன.

இதனால், மேற்கு வங்காள துர்காப்பூர் ஆர்.ஈ.சியும், தமிழ்நாட்டு ஆர்.ஈ.சியும் மட்டுமே இது போல பின் தங்கி விட்டன. இதில் இன்னொரு பிரச்னை, இந்த ஆர்.ஈ.சி என்ற பெயரே நீக்கப்படுவது.

இனி மத்திய அரசு மான்யமும் வராது என்பதால், இவை மாநில அரசின் கீழ் உள்ள பல பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாக இனி ஆகிவிடும். மாநில அரசு பொறியியல் கல்லூரிகள் நிலையை நாம் சொல்லித்தெரியவேண்டியதில்லை. தமிழ்நாட்டில் இரண்டு ஐஐடிகள் இருக்கும் என கனவு கண்டு, அதன் மூலம் தமிழ்நாடு பெரும் தொழில்நுட்ப முன்னேற்றம் அடையும் எனக் கனவு கொண்டிருந்தவர்கள் மத்தியில், இது பெரும் இழப்பாக வந்திருக்கிறது. இது ஐஐடி அளவுக்கு உலக அங்கீகாரம் பெற்றால், உலகத்தின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கும் திருச்சிக்கும் இடையே உறவு ஏற்படும். திருச்சி ஒரு பெரிய தொழில்நுட்ப நகராக உலக அளவில் அங்கீகரிக்கப்படும். உலகத்தின் அனைத்து பெரும் நிறுவனங்களிலும், திருச்சி என்ஐடிக்கு இடம் இருக்கும். பல நாடுகளிலிருந்து இங்கு வந்து பலர் படிக்கப் போவதால், திருச்சி நகரம் முன்னேற்றமடையும். இதனைச் சார்ந்து, திருச்சியில் இருக்கும் பிஹெச்ஈஎல் ஆகிய நிறுவனங்களும், இன்னும் இதிலிருந்து வரும் பல தொழில் முனைவோர்கள் உருவாக்கும் நிறுவனங்களும் திருச்சியை இன்னொரு சிலிக்கான் வேலியாக ஆக்க உதவும். வெறுமே பொறியியல் படிப்பு படிப்பதால் வராது இந்த முன்னேற்றம். உயர்தொழில் நுட்பமும், உலக அளவில் பேராசிரியர்களும் தமிழ்நாட்டுக்கு வந்து புதிய சிந்தனைகளையும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கத்தையும் கொடுக்கும் போதுதான் வரும்.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு மாநிலமும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் ஆர்ஈசிகளை ஐஐடி தரத்துக்கு கொண்டுவர முயலும்போது, தமிழ்நாடு அரசு மட்டும், இதற்கு முட்டுக்கட்டை போட்டு தன் தலையில் தானே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு அமைச்சர்களில் பலர் தாங்களே சுயநிதி பொறியியல் கல்லூரிகள் நடத்தி வருகிறார்கள். மாநில கல்வி அமைச்சர் ஹோசூரில் பொறியியல் கல்லூரி நடத்திவருகிறார்.

அவர்களுக்கு பொறியியல் கல்வியை திறம்படச் சொல்லித்தர ஆர்வம் இருப்பதை அந்த பொறியியல் கல்லூரிகளில் காண்பித்து, அந்த கல்லூரிகளை உலகத்தரத்துக்கு கொண்டு செல்லலாம். யாரும் மறுக்கப்போவதில்லை. மத்திய அரசு மான்யத்தில் ஒரு ஐஐடி தமிழ்நாட்டில் இருப்பது தமிழ்நாட்டின் பல மாணவர்களுக்கு உலகத்தரமுள்ள கல்வி கிடைக்க வழி செய்தது. இன்னொரு ஐஐடி வருவதை இரு கரம் நீட்டி வரவேற்க வேண்டிய மாநில அரசு, இது போன்று, இருக்கிற தரமான கல்லூரியை இன்னொரு மாநில பொறியியல் கல்லூரியாக சீரழிப்பதை யாருமே பேசவில்லை என்பது மிகவும் மிகவும் வருந்தத் தக்கது.

மாநில கல்வி அமைச்சர்தான் ஆர்.ஈ.சியின் தலைவராக இருக்கவேண்டும் என்பதால் என்ன தமிழ்நாட்டுக்கு நன்மை ? எத்தனையோ கல்லூரிகள் இருக்கும் தமிழ்நாட்டில் ஒரு கல்லூரி இன்னொரு ஐஐடியாக ஆவதில் இந்த அரசியல்வாதிகளுக்கு என்ன நஷ்டம் ?

ஐஐடி என்பது சாதாரண விஷயம் என்று நினைக்கலாம். அஸ்ஸாமில் மாணவர்கள் போராட்டம் வெடித்த போது அதில், மாணவர்களின் மிக முக்கிய கோரிக்கை, அஸ்ஸாமில் ஒரு ஐஐடி திறக்க வேண்டும் என்பது. அது மாநில அரசை எதிர்த்து நடந்த போராட்டமல்ல. அப்போது அஸ்ஸாம் மாநிலத்தில் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், அன்றைய அரசியல்வாதிகள் ஆட்சியில் இருந்து இறங்கி, மாணவர்கள் ஆட்சி அமைத்த பின்னர், அஸ்ஸாமில் ஐஐடி திறக்கப்பட்டது.

இன்று மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு இன்னொரு ஐஐடி-ஐத் தருகிறேன் என்று கூறுகிறது. மாநில அரசு அதனைத் தடுக்கிறது. இது விபரீத விளையாட்டு.

தன் பிடிவாதத்தை நீக்கிக்கொண்டு, திருச்சி ஆர்ஈசி இன்னொரு ஐஐடியாக ஆவதற்கு உதவ வேண்டும். அதுதான் அனைத்துத் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாக இருக்கும்.

***

http://www.hinduonnet.com/thehindu/2002/06/01/stories/2002060101220500.htm

Series Navigation