தமிழ்நாடு இரண்டாகப் பிரியுமா ?

This entry is part [part not set] of 1 in the series 20000819_Issue

சின்னக்கருப்பன்


ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற இந்திய மாநிலங்கள் நேருவின் காலத்தில் முதல் மொழி வாரி மாநிலங்களாக பிரிந்தன. அதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர்கள் இந்தியாவெங்கும் இருந்த வேண்டுகோளும் முக்கியமாக ஆந்திரத்தில் பொட்டி ஸ்ரீராமுலுவும்.

அதன்போது சென்னை மாகாணமாக இருந்த மெட்ராஸ் பிரஸிடென்ஸி மொழிவாரியாக பிரிக்கப்பட்டு. கேரளமும், ஆந்திரமும், தமிழ்நாடும் கன்னட மாநிலமும் உருவாக்கப்பட்டன, அதன் போதே மகாராஷ்டிரமும், ஒரிஸ்ஸாவும் மொழிவாரியாக உருவாக்கப்பட்டன.

மொழி ரீதியான மாநிலங்கள் மொழி தீவிரவாதத்துக்கு வழி கோலும் என்றும் அது இந்தியா துண்டு துண்டாக சிதற உதவிவிடும் என்றும் இதற்கு எதிராக வாதிக்கப்பட்டது. அம்பேத்கார் உட்படப் பலரும் இதே கருத்தைக் கொண்டிருந்தனர்.

அது ஓரளவுக்கு தீர்க்க தரிசனம் என்பது தமிழ் மொழியையும். கன்னட மொழியையும் வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல் வாதிகளையும், இந்தி மொழி தீவிரவாதம் வளர அது உதவியது என்பதும் காணும் போது தெரிகிறது.

இப்போது இதே போன்று, இரண்டாவதாக மாநிலங்கள் பெரும் மாநிலங்களில் இருந்து பிரிந்து புது மாநிலங்களாக தோன்றுகின்றன. இதற்கு மூல காரணம், ஜார்க்கண்ட் தனி மாநிலம் வேண்டி பிகாரில் தோன்றிய கிளர்ச்சியும், வடக்கு உத்தர பிரதேசத்தில், வனாஞ்சல் வேண்டி உத்தரக்கண்ட் மாநிலக் கிளர்ச்சியும் தான்.

இவைகளும் இன்னும் அஸ்ஸாமில் தனி மாநிலம் கேட்கும் போடோக்களும், டார்ஜிலிங்கில் தனி மாநிலம் கேட்கும் கூர்க்காக்களும் வன்முறையை கையாண்டு பெரும் கிளர்ச்சி நடத்தினார்கள். இவைகள் வெற்றி பெறவில்லை. ஆனால் கூர்க்காலாந்து என்கிற தனிமாவட்டப் பகுதி உருவாயிற்று.

தனி மாநிலக் கிளர்ச்சியை காங்கிரஸ் அரசுகளும் அதன் பிரதி அரசுகளாக இருந்த ஜனதாதள அரசுகளும் பிரிவினை வாதமாக பார்த்து அதை வன்முறை கொண்டு ஒடுக்க முற்பட்டன. பொட்டி ஸ்ரீராமுலுவின் ஒரு உயிர் போய் சாதித்த மொழிவாரி மாநிலங்கள் இன்று எத்தனையோ பொட்டி ஸ்ரீராமுலுக்கள் இறந்த பின்னும் மறு ஆய்வுக்கு உட்பட மறுக்கின்றன.

பாஜக அரசு வந்த பின்னர், ஜார்க்கண்ட், உத்தரக்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் பிரிந்து இரண்டாகவும் ஆக எளிதாக லோக்சபையில் தாக்கல் செய்து பிரகடனமும் ஏறத்தாழ முடிந்து விட்டது. ஆனால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு இது ஆந்திரா போன்ற மாநிலங்களுக்குப் பொருந்தாது என்று கூறுகிறார்கள். இதற்கிடையில் பாரதீய ஜனதா கட்சி தெலுங்கானா மாநிலக் கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளது.

இந்த நிலையில் நாம் மறுசிந்தனை செய்ய வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

மக்களை ஏன் அரசுக்கள் நம்ப மறுக்கின்றன ? ஏன் மக்களின் சாதாரண வேண்டுகோளான தனி மாநிலம், பிரிவினை வாதமாக மத்திய அரசுகள் (முக்கியமாக காங்கிரஸ்) பார்க்கிறது ? ஏன் மக்கள் தனி மாநிலம் கேட்கிறார்கள் ? தனி மாநிலம் மூலம் மக்கள் எதை சாதிக்க நினைக்கிறார்கள் ? அவர்கள் எதிர்பார்ப்புதான் என்ன ? தனி மாநிலம் மூலம் எதை சாதிக்க முடியும் எதை சாதிக்க முடியாது ? தனி மாநிலம் அரசியல் வாதிக்களுக்கு சாதகமா ? மக்களுக்குச் சாதகமா ? தனி மாநில கோரிக்கையை எளிமைப் படுத்த முடியுமா ? சாத்வீகமான முறையில் ஒரு தனி மாநிலம் அமையுமா ? தனி மாநிலங்கள் தேவைதானா ?

ஆந்திரத்தில் தெலுங்கானா தனி மாநிலமாக வேண்டி கோரிக்கை சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே எழுந்து வந்திருக்கிறது. அது இன்னும் நிறைவேறவில்லை. அந்த கோரிக்கையை எழுப்பியதன் மூலம் அரசியலுக்கு வந்த சென்னாரெட்டி போன்றவர்கள் இன்று மறைந்துவிட்டாலும் இன்னும் அந்த கோரிக்கை அடிக்கடி எழுப்பப்பட்டு வருகிறது.

கன்னட மாநிலத்தில் குடகு மொழி பேசுபவர்கள் தனி மாநிலம் கேட்டு வருகிறார்கள். அந்த கோரிக்கையும் யாரும் அக்கறைப்படாமல் போய்க்கொண்டிருக்கிறது.

பழைய இந்திய அரசு சாஸ்திரங்கள் அரசு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளாக சாம. பேத தான தண்டத்தை கூறுகின்றன. இந்த வரிசை முக்கியமானது.

அதாவது எந்த பிரச்னை எழுந்தாலும் முதலில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். அப்படிப் பேசுவதன் மூலம் அவர்களின் நோக்கமும் அந்த பிரச்னைக்கான தீர்வும் எளிதாக அமையும். இறுதியாகத் தான் தண்டத்தை பிரயோகிக்க சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. மகாபாரதப் போர் முன்பு ஐந்து கிராமங்களை கொடுத்தால் போர் இல்லாது போகும் என்று பேச்சு வார்த்தைக்கு தர்மன் கண்ணனை அனுப்புகிறான். ஐந்து ஊசி முனை குத்தும் நிலம் கூட கொடுக்க முடியாது என்று துரியோதனன் கூறிய பின்னரே போர் ஆரம்பிக்கிறது.

ஆனால் இன்றைய இந்திய அரசோ, முதலில் தண்டத்தை பிரயோகம் செய்து எல்லா கலவரங்களையும் அடக்க துடிக்கிறது. எதுவும் முடியாமல் போன பின்னரே இறுதியில் பேச்சு வார்த்தைக்கு வருகிறது. காஷ்மீர கலவரத்துக்கும் இதுதான் கதி, இந்தி மொழிப்போருக்கும் இதுதான் கதி.

இந்திய அரசாங்க நிர்வாகத்தின் ஒரே கட்சி என்று காங்கிரஸ் தன்னை பார்த்துக்கொண்டதன் விளைவு, அதன் அதிகாரத்துக்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் அதை அடக்குமுறை, வன்முறை என்னும் தண்டம் கொண்டு அடக்க முயன்றது. அது முடியாமல் போனபின்னர், பேச்சு வார்த்தை என்ற சாமம் கொண்டு பேசி தீர்க்க முயன்றது. அந்த பேச்சு வார்த்தையின் முக்கியமான விளைவு, காங்கிரஸின் எதிராளிகளை ஆட்சி பீடம் என்னும் தானத்தின் உபயோகமாய் மாநிலங்களில் அவர்களை ஆட்சிக்கு கொண்டுவருவது. (பஞ்சாபில் அகாலிதளம், அஸ்ஸாமில் அஸாம் கன சங்ராம் பரிஷத், தமிழ்நாட்டில் திமுக, மகாராஷ்டிரத்தில் சிவசேனை, மிசோரமில் மிசோரம் தேசியக்கட்சி என்று ஒரே மாதிரி நிகழ்வதை பார்க்கலாம்) இறுதி விளைவு இந்த எதிர்க்கட்சிகள் இரண்டாய் உடைவது (அதை பேதம் என்று நாம் சொல்லிக் கொள்ளலாம்).

காங்கிரஸின் முட்டாள்தனத்திலிருந்து பாஜக வெகுவாக பாடம் கற்றிருக்கிறது. இது பேச்சு வார்த்தை பேச்சு வார்த்தை என்று எல்லா விஷயங்களையும் பேசி தீர்க்க முனைகிறது. ஆனால் பாஜகவின் மீது மற்ற கட்சிகளுக்கும், மற்ற குழுமங்களுக்கும் அடிப்படை நம்பிக்கையின்மை அவர்களின் பேச்சு வார்த்தை கோரிக்கையை நிராகரிக்க வைத்துவிடுகின்றன.

நான்கு கோடிக்கு மேல் ஒரு மாநிலத்தில் மக்கள் இருப்பின் அவை நிர்வாக எளிமை கருதி இரண்டாக பிரிப்பது நல்லது என்பது என் கருத்து. தமிழ்நாட்டில் 6 கோடி மக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு வட தமிழ்நாடு, மத்திய தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என்று மூன்றாக பிரிவது நல்லது. இது மூன்று முதலமைச்சர்களுக்கு வழி வகுக்கலாம். (பரவாயில்லை. ஒரு ஆள் தின்பதை மூன்று பேர் தின்னட்டுமே). மொழி தீவிரவாதம் குறையும். தமிழர்களை ஒட்டு மொத்தமாகப் பார்த்து பெங்களூர் தமிழர்கள் அடிவாங்குவது நிற்கும். (ஏனெனில் கர்னாடகமும் மூன்றாகப் பிரிந்து இருக்கும்)

நதி நீர் பிரச்னைகளை மொழி ரீதியாக இன்று மக்கள் பார்க்கிறார்கள். கன்னடர்களுக்கான தண்ணீரை இன்று தமிழர்கள் எடுத்துக்கொள்வதாகவும், தமிழர்களுக்கு வரவேண்டிய தண்ணீரை கன்னடர்கள் அபகரித்துக் கொள்வதாகவும் இரண்டு தரப்பினரும் நினைத்துக் கொள்கிறார்கள். இது மொழித் தீவிரவாதம் என்ற நச்சுக்கு பொருளாதார அடிப்படையை தோற்றுவித்து விடுகிறது. கன்னட மாநிலம் மூன்றாக இருப்பின், இந்த மொழித் தீவிரவாதம் குறையும். அது இரண்டு மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் பிரச்னையாக மட்டும் இருக்கும்.

இது போல் ஏராளமான மாநிலங்கள் நிர்வாக வசதி நோக்கி உருவாவது, நதி நீர் தேசிய மயமாக்குவதற்கும் துணை புரியலாம்.

இன்னும் தமிழ் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டிக்கும் முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கலாம். ஆந்திரத்து முதலமைச்சர் எவ்வாறு மற்ற முதலமைச்சர்களை முன்னேற தூண்டுகிறாரோ அதுபோல, தென் தமிழ் நாட்டு முதலமைச்சர் முன்னேறுவது வட தமிழ்நாட்டு முதலமைச்சரைத் தூண்டி செயலாற்ற வைக்கலாம்.

அமெரிக்காவில் நகராட்சிகளே கிட்டத்தட்ட மாநில அளவுக்கு அதிகாரங்களும் செயல் திட்ட வரைவு மற்றும் வரிவிதிப்பில் சுதந்திரம் பெற்று , அடிமட்ட அளவிலான ஜனநாயகம் கொண்டு விளங்குவதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். சொத்துவரி போன்ற வரிகள் நகராட்சி அமைப்பளவிலேயே நிர்ணயம் செய்யப்பட்டு வசூல் செய்யப் படுவதால், அந்தந்த நகரத்தின் வாழ்க்கைத் தரத்திற்கேற்ப வரிகள் விதிக்கப் படுகின்றன.

ஆகவே தமிழ் நாடு மூன்றாக பிரிவதற்கு என் ஆதரவு உண்டு. இதனால் சாதீயத்தின் தாக்கம் சற்றுக் குறையலாம். உதாரணமாக வன்னியருக்குச் சரியான அதிகாரப் பகிர்வு கிடைக்கவில்லை என்று எண்ணுபவர்கள், சிறு மாநிலத்தில் கணிசமான அளவில் இருப்பதால் அதிகாரம் பெற வாய்ப்புண்டு. இது நடக்காவிட்டாலும் கூட பஞ்சாயத்து, நகராட்சியளவில் அதிகாரப் பகிர்வு நிகழ்ந்து, ஜனநாயக முறையில் பிரசினைகள் கையாளப் பட்டால், மக்களிடையே தம் குரல் எங்கும் ஒலிக்க வில்லை என்கிற ஆதங்கம் குறையும்.

***

 

 

  Thinnai 2000 August 20

திண்ணை


  • தமிழ்நாடு இரண்டாகப் பிரியுமா ?

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்