பிரகஸ்பதி
1. முன்னுரை:
தமிழ்ச் சமூக வரலாற்றையும், இந்திய சமூக வரலாற்றையும் வரலாற்றறிஞர்களும், வரலாற்றாய்வாளர் எனக்கூறிக் கொள்வோரும் தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ப மனம் போன போக்கில் புனைந்து வருகின்றனர். தொல்பொருள் தடயங்களுக்கு, தொல்லியல் அறிஞர்கள் கூறும் விளக்கங்களை இவர்கள் முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு அமைந்த தொல்லியல் அறிஞர்களின் விளக்கங்களை மட்டுமே, பெரும்பாலும் இவ்வரலாற்றறிஞர்கள் கணக்கில் கொள்கின்றனர். இத்தகைய போக்கினை தமிழக (தென் இந்திய) வரலாற்றாய்வாளர்களிடையே அதிக அளவில் காணமுடிகின்றது. இதன் விளைவாக, பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்ச் சமூக வரலாறு பலபுதிர்களை உள்ளடக்கியதாக உள்ளது. தொல்லியல் தடயங்கள் கூறும் செய்திகளை முமுமையாகக் கணக்கிலெடுத்துக்கொண்டு விறுப்பு, வெறுப்பற்ற நிலையில் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுத முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பண்பாட்டு மரனுடவியலில் முற்றிலும் புதிய கோட்பாடு ஒன்று இங்கு முன்வைக்கப்பட உள்ளது. எனவே சற்று விரிவாக எழுதவேண்டிய தேவையைக் கருதி இதனை ஒரு தொடராக எழுத திண்ணை இணையதள இதழ் ஆசிரியரும், வாசகர்களும் அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
1.1. தமிழ்மொழி தோன்றிய பொமுதே செம்மொழியான விந்தை:
கி.மு.300-கி.பி.200 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சங்ககால பாடல்கள், இலக்கிய, இலக்கண வளம் நிறைந்ததாக காணப்படுகின்றன. இக்காலக் கட்டத்தில் தமிழ் எழுத்திற்கும், சொல்லிற்கும் மிகத்தெளிவான இலக்கணம் வகுக்கப்பட்டுவிட்டதை தொல்காப்பியம் மூலம் அறியமுடிகின்றது. இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் பேசப்பட்ட அனைத்து செம்மொழிகளுக்கும் நிகராக தமிழ்மொழி விளங்கியது என்பதை அறுதியிட்டு கூறமுடியும்.
மனிதகுல வரலாற்றில் உலோகப்பயன்பாடு தோன்றி அரசு நிலை கொண்ட பின்னரே மொழியைச் செம்மைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உலகில் முதன்முதலில் மருதநில வாழ்க்கைத் தோன்றிய சுமேரியாவில், ஊருக் நகரில் கி.மு.3400 வாக்கில் ஏறத்தாழ 700 குறியீடுகளைக் கொண்டிருந்த எழுத்துமுறை புழக்கத்தில் இருந்ததை அறியமுடிகின்றது. இக்காலக் கட்டத்தில், சுமேரியாவிலும் அதன் அண்டைப் பகுதிகளிலும் நிலையான பல நகர அரசுகள் வாழ்ந்தன. அந்நகர மாந்தர் செம்பு பயன்பாட்டுடன் கூடிய மருதநில வாழ்வை மேற்கொண்டிருந்தனர். கி.மு.2900ல் அதே சுமேரிய பகுதியில் நில புரபுத்துவ அரசுகள் பல தோன்றிய நிலையில், கூனிபார்ம் (ஆப்பு எழுத்து) என அழைக்கப்பட்ட எழுத்துமுறை தோன்றியது. அக்காலக் கட்டத்தின் மேற்காசியாவில் பல்வேறு அரசுகளில் வாழ்ந்த, பல்வேறு மொழிபேசிய மக்களும் கூனிபார்ம் எழுத்து முறையையே பயன்படுத்தினர். இவ்வெழுத்து முறையின் அடுத்தக் கட்ட வளர்ச்சியான நவீன காலத்தில் நாம் பயன்படுத்தும் நெடுக்கணக்கு (alphabet) எழுத்துமுறை, பாலஸ்தீனப் பகுதியில் அமைந்திருந்த கானன் தேசத்தில் கி.மு. / 600 வாக்கில் தோன்றியது. மொழி வளர்ச்சியில் பூர்வ குடிகளாக கருப்பர்கள் வாழ்ந்த மேற்காசியா இத்தகையை நீண்ட நெடிய வரலாற்றினைக் கொண்டிருந்த போதும் இக்காலக்கட்டத்தில் அங்கு பேசப்பட்ட மொழிகள் எதுவும் செம்மொழிகளாகப் பரிணமித்து விடவில்லை. அதன்பின் இப்பண்டைய மேற்காசிய (சுமேரிய) பண்பட்ட குடிகளுடன் உறவுகொண்டு அப்பண்பாடுகளை தமதாக சுவீகரித்துக்கொண்ட, வெள்ளையின குடிகளின் மொழிகளான ஹீப்ரூ, கிரேக்கம், லத்தீன், அரேபியம் போன்ற மொழிகள் மிகவும் பிற்காலத்தில் செம்மொழிகளா பரிணமிக்கும் வாய்ப்பைப் பெற்றன.
சமஸ்கிருதம் சார்ந்த மக்கள் இந்தியாவிற்குள் குடியேறும் முன் ஈரான் (பண்டைய எல்லாமைட்) பகுதியில் பல நூற்றாண்டுகள் வாழ நேர்ந்ததால், அம்மொழியும் மேற்காசிய மொழி வல்லுநர்களின் துணையுடன் செம்மொழியாக பரிணமித்துவிட்டது. மேற்காசியாவுடன் நேரடி தொடர்பில்லாத சீனமக்கள், ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகள் நிலையான அரசுகளுடன் கூடிய மருதநில வாழ்க்கையை மேற்கொண்ட பின்பே சீன மொழி செம்மொழியாக பரிணமித்தது.
இச்செம்மொழிகளுக்கெல்லாம் விதிவிலக்காக தமிழ்மொழி உள்ளது. தொன்றுதொட்டு தமிழகத்திலேயே வாழ்ந்து வந்த பூர்வகுடி மக்களாலேயே சங்ககால தமிழ்ச் சமூகம் தோற்றுவிக்கப்பட்டதாக தமிழக வரலாற்றாய்வாளர்கள் நம்புகின்றனர். ஆனால், தமிழகத்தில் வாழ்ந்த பூர்வகுடி மக்களோ, கி.மு.800க்கு முன் உலோக பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. தென்தமிழ்நாட்டில் வாழ்ந்த பூர்வகுடிமக்கள் கி.மு.4000லிருந்து சிறுகற்கால பண்பாட்டு மட்டத்திலும், பிறபகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடிமக்கள் கி.மு.1800லிருந்து புதிய கற்கால பண்பாட்டு மட்டத்திலும் வாழ்ந்து வந்ததை தொல்பொருள் தடயங்கள் மூலம் அறியமுடிகின்றது. இவ்விரு பண்பாட்டு குடிகளும் மிக எளிமையான பொருளியல் வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தனர். மொழி வளர்ச்சிக்கான எந்தவிதமான தடயங்களையும் இப்பண்பாடுகளில் காண முடியவில்லை. இத்தகைய எளிய மேய்ச்சல் வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்களிடம் மொழி வளர்ச்சி தோன்றியிருக்கக்கூடும் என எதிர்ப்பார்ப்பது அறிவியலுக்கு முற்றிலும் புறம்பானதாகும். அறிவுப்பூர்வமாக சிந்தித்தால், கி.மு.800க்கு முன் தமிழகம் முழுவதும் வாழ்ந்த பூர்வகுடி மக்கள் பல்வேறு மொழிகளையே பேசினர் என துணிந்து கூறலாம்.
தமிழகத்தில், கி.மு. 800-கி.மு.500 வாக்கில் சேர நாட்டிலும் (இன்றைய கேரளா), தென்பாண்டி நாட்டிலும் இரும்பு பயன்பாடு தோன்றியதை தொல்பொருள் தடயங்கள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வுலோக பயன்பாடு கி.மு.300 வாக்கில் தமிழகம் முழுவதும் பரவி, மருத நில வாழ்க்கையின் அடிப்படையில் அமைந்த அரசுருவாக்கத்திற்கு அடிகோலியது. இச்சூழல் தமிழகம் முழுவதும் வாழ்ந்து வந்த பூர்வகுடி, பழங்குடி மக்கள் ஒரே மொழியைப் பேசுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். மருத நில நாகரிகம் தோன்றிய சில நூற்றாண்டுகளுக்குள் இலக்கிய மொழியாக பரிணமித்துவிட்ட தமிழ், மிகவும் எளிமையான கொடுமொழியாகவே இருந்திருக்க முடியும். மாறாக, சமகாலத்திய செம்மொழிகள் அனைத்தையும் விட ஒரு படி மேலாகவே தமிழ்மொழி செவ்வியல் தன்மையை அடைந்திருந்ததை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. மிக நீண்ட கால மருதநில வாழ்க்கையை மேற்கொண்டு மொழிவளர்ச்சியை படிப்படியாக தோற்றுவித்திருந்த மக்களின் மொழிகளான சுமேரியன், எல்லாமைட் போன்ற மொழிகள் கூட செவ்வியல் தன்மையை அடைந்திருக்கவில்லை. ஆனால், திடீரென நாகரிக மக்களாக மாறிய தமிழரின் மொழி சிறப்பான செவ்வியல் தன்மையுடன் விளங்கியது மிகப்பெரும் புதிரேயாகும்.
மொழியியலில் மட்டுமல்லாமல், சங்க கால தமிழர், தொழில்நுட்பம், வணிகம், போக்குவரத்து, விவசாயம், போர்முறை அறநெறி, போன்ற பல்வேறு துறைகளிலும் சமகாலத்திய வளர்ந்த சமூகங்களுக்கு இணையாக வளர்ந்திருந்ததை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.
இப்புதிரை விடுவிக்கும் வகையில் தமிழக வரலாற்றாய்வாளர்களிடையே இருவகையான கருதுகோள்கள் நிலவுகின்றன.
1.2 ஆரிய மாயை (அல்லது) ஐரோப்பிய மாயை
தமிழ் மொழி தோன்றிய பொழுதே செம்மொழியான புதிரை விடுவிக்கும் வகையில் ‘ஆரியமயமாதல்’ என்ற கருதுகோள் முன்வைக்கப்படுகின்றது. தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் வட இந்தியாவிலிருந்து குடியேறிய ஆரியராகிய பிராமணரால் வளர்த்தெடுக்கப்பட்டவை என்பது இக்கருதுகோளின் சாராம்சமாகும். இக்கருதுகோள், பிறப்பிலேயே தமிழ்மொழி செம்மொழியான புதிரை எளிதில் நீக்கிவிடுகின்றது. இக்கோட்பாட்டை எதிர்ப்போர் இதனை ஆரியமாயை எனவும் கூறுவர்.
கி.மு.600 வாக்கில் வடஇந்தியாவிலிருந்தது தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய பிராமணர்கள் தமிழ் அரசர்களை கத்தியின்றி, இரத்தமின்றி தங்களின் பண்பாட்டு மேலாண்மையினால் வென்றனர் என்பது இவர்களின் கருத்தாகும். இதற்கு ஆதரவாக புராணங்கள் கூறும் அகத்தியனின் தென்னகக் குடியேற்றம் தொடர்பான கதைகளைப் பயன்படுத்திக் கொண்டனர். வடஇந்திய மார்க்ஸிய வரலாற்றறிஞர் டி.டி.கோசாம்பியின் கீழ்க்கண்ட குறிப்புகள் ஆரிய மாயையின் கருத்தோட்டத்தைப் புரிந்து கொள்ள உதவும்.
” வரலாற்றைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு தெற்கிலுள்ள இராஜவம்சப்ப்ட்டியல் இன்பமான பொழுதுபோக்கு இக்ஷவாகு, பல்லவர், பாணர், கடம்பர், சேதியர், கலச்சூரி, சாளுக்கியர், சோழர், பாண்டியர், சேரர் மற்றும் வேறு பல மன்னர்கள் கொண்ட பட்டியல் கவர்ச்சியாக இருந்தாலும் பொதுவாக அர்த்தமற்றது. இடைக்கால இந்திய வரலாற்றைப் பற்றிய புத்தகங்களில் இந்த விவரங்களைப் படித்துக்கொள்ளலாம். ஆனால் இப்புத்தகங்கள், பொதுவாக இம்மன்னர்களால் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டத் தவறிவிட்டன. உயர்ந்த பிராமணப்பண்பாடு, பழங்குடி மக்கள் மீது திணிக்கப்பட்டது, அல்லது அவர்களால் சுவீகரித்துக்கொள்ளப்பட்டது. அதே சமயத்தில் பரிமாற்ற உணர்வின் அடிப்படையில், பிராமணர்கள் பூர்வகாலப் பழங்குடி மரபுக் கூறுகளை ஏற்றுக்கொண்டனர்”. (டி.டி.கோசாம்பி: பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாகரீகமும் பற்றிய வரலாறு, முதற்பதிப்பு பிப் – 1989; பக் 349)
சங்ககால வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்க்குடிகளை, கோசாம்பி போன்ற ஆய்வாளர்கள் பழங்குடிகளாக்கி மகிழ்வது தொல்பொருள் தடயங்களுக்கு பெரிதும் முரண்படவில்லைதான். எனினும் தமிழ்வேந்தர் குடியினர் உள்ளிட்ட தென்னக அரசர்களின் வம்சப் பட்டியலை கேலிக்குள்ளாக்கி பேசுவது ஏற்புடையதாகத் தோன்றவில்லை. தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாட்டுடன் கூடிய மருதநில வாழ்க்கை கி.மு.500லேயே தோன்றியிருந்ததற்கான தொல்பொருள் தடயங்கள் நூற்றுக்கணக்கான இடங்களில் 75 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருந்த நிலையில், பண்டைய தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய கோசாம்பியின் கருத்து மிகப்பெரிய கேலித் கூத்தாகும்.
புராதன இந்திய சரித்திர அறிமுகம் என்ற நூலில் மோரியர் பற்றிய தமிழ் இலக்கியச் சான்றுகள் குறித்த தனது கருத்தை கோசாம்பி வெளியிட்டுள்ளார்.
“மோரியர் காலத்தில் தமிழ் இலக்கியம் வளர்ச்சியடைந்திருந்தது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. மோரியர் காலத்தில் தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகம் நிலவியிருந்தது. எழுத்தும் இலக்கியமும் தோன்றவில்லை. இக்கருத்தை நான் மாற்றிக்கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.” என, மேற்கண்ட நூலில் கோசாம்பி குறிப்பிடுகின்றார்
மோரியர் காலமாகிய கி.மு.300ல், தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகமே நிலவியது எனக்கூறும் கோசாம்பியின் கீழ்கண்ட குறிப்புகள் அவரது உள்ளக்கிடக்கையை மேலும் தெளிவாக்குகின்றது.
“மொழி விவசாயம் ஆகியவற்றின் வளர்ச்சிக்குரிய ஊக்கம் வடக்கிலிருந்து பெரிய அளவுக்கு கி.மு.6ம் நூற்றாண்டில் தெற்கே வந்தடைந்தன.” (டி.டி.கோசாம்பி: பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாககீகமும் பற்றிய வரலாறு, பக் – 202)
“விந்திய மலைக்குத் தெற்கே ஊடுருவிய ஆரியக் குடியேற்றத்திற்கும், அகத்திய கோத்திரத்திற்கும் சில தொடர்புகள் உண்டு. தெற்கிலுள்ள பெருங்கற்காலத்துடன் அத்தொடர்புகளை உறுதி செய்யலாமென்ற ஆர்வம் எழுந்தாலும் அதன் அடிப்படை இன்றளவும் தெய்வீக கற்பனை வடிவிலேயே உள்ளன.” (டி,டி.கோசாம்பி: பண்டைய இந்தியா, அதன் பண்பாடும் நாகரீகமும் பற்றிய வரலாறு, பக் – 164)
கி.மு.600ல் வடக்கிலிருந்து தமிழகத்திற்குள் குடியேறிய ஆரியப்பார்ப்பனர், பழங்குடிகளாக வாழ்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு மொழியையும், விவசாயத்தையும், கற்றுக்கொடுத்தனர் என்பது கோசாம்பியின் கொள்கையாகும். மோரியர் காலமாகிய கி.மு.300 வரை தமிழகத்தில் புதியகற்கால நாகரிகமே நிலவியது என்றும், இக்கருத்தை தான் மாற்றிக் கொள்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கோசாம்பி அடித்துக் கூறுகின்றார். எனவே கி.மு.600லேயே தமிழகத்திற்குள் குடியேறிவிட்டதாக் கருதப்படும் ஆரியரிஷி கோத்திரத்தினரும், புதியகற்கால பண்பாட்டு மட்டத்திலேயே தமிழகத்திற்குள் குடியேறினர் என்றுதான் கோசாம்பி கருதியிருக்க வேண்டும்.
புதியகற்கால பண்பாட்டு மட்டத்தில் வாழ்ந்த கருப்பரிடம் மொழியும் பண்பாடும் வளர்ந்திருக்கவில்லை என்றும், அதே பண்பாட்டு மட்டத்தில் தமிழகத்திற்குள் குடியேடிறிய ஆரிய கோத்திரத்தினர் வளர்ந்த பிராமணப் பண்பாட்டைக் கொண்டிருந்தனர் என்றும் மனம் போன போக்கில் டி.டி.கோசாம்பி போன்ற சிறந்த வரலாற்றறிஞர் எழுதுவது வியப்பாக உள்ளது. அகத்தியனின் குடியேற்றத்துடன் டி.டி.கோசாம்பியால் சரியாகவே தொடர்புபடுத்தப்படும் பெருங்கற்கல்லறை பண்பாடு நன்கு வளர்ந்த நிலையிலிருந்த இருப்பு பயன்பாட்டு மருதநில விவசாயப் பண்டபாடாகும். கி.மு.600ல் தமிழகத்திற்குள் குடியேறிய ஆரிய கோத்திரத்தினர் இரும்பு பயன்பாட்டுடன் கூடிய மருதநில விவசாய நாகரிகத்தை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுடைய வளர்ச்சியடையாத கொடுமொழியை செம்மைப்படுத்தி ‘செந்தமிழை’ தோற்றுவித்தனர் என்று கூறினால் கூட ஏற்புடையதாக இருக்கும்.
அவ்வாறு கூறினால், கி.மு.600லேயே செம்மைப்படுத்தப்பட்டுவிட்ட தமிழ் மொழியில் மோரியர் காலமாகிய கி.மு.300ல் (சங்க காலம்) இலக்கியங்கள் தோன்றியிருக்க வாய்ப்பு உண்டாகி, தமிழக அரசவம்ச பட்டியலுக்கும் அர்த்தமுண்டாகிடும் என்பதால் முன்னுக்குப்பின் முரணாக கோசாம்பியார் குறிப்பிடுகின்றார் போலும். ஆரிய ஆர்வலர்கள் கருதுவது போல், வட இந்தியாவிலிருந்து தர்ப்பைப் புல்லை ஆயுதமாகக் கொண்ட பிராமணர் (அகத்திய கோத்திரத்தினர்) ஒருபோதும் தனிக்கூட்டமாக தென்னகம் குடியேறிவிடவில்லை. தமிழகவேந்தர் வேளிர் குடியுடன் கூடவே பிராமணர்களின் தென்னக் குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. தமிழக அரசகுலத்தவரின் பூர்வீகம், வடஇந்தியா என்பதற்கு புறநானூற்று பாடல் ஒன்று சான்று பகர்கின்றது.
“நீயே வடபால் முனிவன் தடவினுட் தோன்றி
செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை
உவரா வீகைத் துவரை யாண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற் போரண்ணல்.” (புறம் : 201)
இப்புறநானூற்றுப் பாடலில், தமிழக வேளிர் குடியினர் சங்ககாலத்திற்கு 49 தலைமுறைக்கு முன் வட இந்தியாவிலுள்ள துவாரகையை ஆண்ட அரசகுலத்தவரின் வழிவந்தவர்கள் என்ற செய்தி பதிவாகியுள்ளது. துவாரகை யதுகுல மன்னன், கண்ணனுடன் தொடர்புடையது குறிப்பிடத்தக்கது.
கி.மு.600லிருந்து தமிழகம் முழுவதும் கிடைக்கக்கூடிய பெருங்கற்கல்லறை பண்பாடு குஜராத் பகுதியிலிருந்து தமிழகத்திற்குள் பரவியிருக்கலாம் என்ற தொல்லியல் அறிஞர்களின் கருத்தும் புறநானூற்றுப் பாடலின் செய்திக்கு உயிரூட்டுவதாக உள்ளது. தொல்லியல் அறிஞர் எஸ்.இராமச்சந்திரன், சங்க கால உற்பத்திக் கருவிகள் என்ற கட்டுரையில், தமிழக பெருங்கற்கல்லறைகளில் கிடைக்கக்கூடிய தொல்பொருட்கள் பெரும்பாலும், இரும்பினால் தயாரிக்கப்பட்ட போர் ஆயுதங்களாகவே உள்ளன எனக் குறிப்பிடுகின்றார். இச்செய்தியிலிருந்து, தமிழக பெருங்கற்கல்லறை பண்பாட்டினை போர்குடிகளான தமிழக அரசர்குடியினரின் குடியேற்றத்துடன் தொடர்புப்படுத்த முடிகின்றதேயன்றி, டி.டி.கோசாம்பி கருதுவதுபோல் அகத்திய (பிராமண) கோத்திரத்தவரின் குடியேற்றத்துடன் தொடர்புபடுத்த முடியவில்லை. அவ்வாறாயின் தமிழகத்தில் வழங்கப்படும் அகத்தியன் தொடர்பான கதைகளுக்கு பொருள் ஏதும் இல்லை எனக்கூறலாமா? இச்சிக்கலுக்கு நக்கினார்க்கினியரின் உரை ஒன்று தீர்வு நல்கின்றது.
” துவராபதி போந்து நிலங்கடந்த
நெடுமுடியண்ணல் வழிக் கண்ணரசர்
பதினெண்மாயும், பதினெண்குடி
வேளிருள்ளிட் டாரையு மருவா
ளரையுங் கொண்டு போந்து காடு
கெடுத்து நாடாக்கி”. (தொல்: எழுத்ததிகாரம்: பாயிரம்: நச் உரை)
இதன் பொருளாவது, சிவபெருமானின் விருப்பத்திற் கிணங்க தென்திசை நோக்கி பயணித்த அகத்தியன், வழியில் துவாரகை சென்று, மாவலியிடமிருந்து பூமியை அபகரிக்க, நிலம் அளந்த நெடுமுடியண்ணலாகிய திருமாலின் வழி வந்த வேந்தர் குடியினரையும், பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும்இ அருவாளரையும் தன்னுடைன் அழைத்துக் கொண்டு, தமிழகம் குடியேறி, பின் அவர்களின் உதவியுடன் காடு கெடுத்து நாடாக்கினான் என்பதாகும். அதாவது அகத்திய முனிவரின் தலைமையிலேயே தமிழக அரசகுலத்தவர் வட இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்துள்ளதாக நச்சினார்க்கினியர் உரைக்கின்றார். வடக்கிலிருந்து குடியேறிய பிராமண கோத்திரத்தினர், சுத்தியின்றி, இரத்தமின்றி தங்கள் பண்பாட்டு மேலாண்மையினாலேயே தனிழக பூர்வகுடி மக்களை வென்றெடுத்தனர் என்ற ஆரிய ஆர்வலர்களின் கருதுகோள், பேனை பெருமாளாக்கிக் காட்டும் வித்தையே ஆகும். சிறந்த போர் குடிகளான தமிழக வேந்தர் குடியினர் தங்களுடன் குடிபெயர்ந்த வேளிர் மற்றும் அருவாளர் ஆகிய போர் குடிகளின் துணை கொண்டு, தமிழகத்தில் ஏற்கனவே வாழ்ந்து வந்த பழங்குடிமக்களை தங்களின் வாளின் வலிமையால் வணக்கியதையே சங்க இலக்கிய குறிப்புகளும், தொல் பொருள் தடயங்களும் நிறுவுவதாக உள்ளன. இப்போர் குடிகளுக்கு குரு நிலையில் தலைமையேற்று வழி நடத்தியவர் அகத்திய கோத்திரத்தினர் ஆவர். எனவே, தமிழக அரசர் குடியினரையும் பிராமண கோத்திரத்தினரையும் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரித்துப் பார்ப்பதற்கு தமிழகச் சூழலில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உணரவேண்டும்.
எனவே, பிராமணமயமாதல் அல்லது ஆரியமயமாதல் என்ற ஆரிய ஆர்வலர்களின் கருகோள் அவர்களது சொந்த விருப்பத்திற்கேற்ப, பல ஆதாரங்களைத் திரித்துக் கூறியும், திரிக்கமுடியாத ஆதாரங்களை மறைத்தும் கட்டப்பட்ட ஒரு மாயையாகும். மனித இனங்களில் ஐரோப்பிய இனங்களே உயர்ந்தவை, ஐரோப்பிய இனங்களில் ஆரிய இனமே உயர்ந்தது. ஆரியரில் பிராமணரே உயர்ந்தவர் என்ற கருத்துதான் ஆரியமாயையின் சாராம்சமாகும்.
டி.டி. கோசாம்பி கருதுவது போல், மொழி வளர்ச்சியில் சிறிதும் முன்னேற்றம் பெற்றிராத புதியகற்கால பண்பாட்டு குடிகள் வாழ்ந்த தமிழகத்தில், ஆரியமயமாதல் நடைபெற்றிருக்குமேயானால், தமிழ்மொழி அரசியல் மற்றும் சமூகவியல் தொடர்பான பல சொற்களை சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய சொற்கள் தமிழுக்கே உரியனவாக, நாடு, கூற்றம், ஊர், சீறூர், பாடி, பட்டணம், பாக்கம், குறும்பு, வேந்தன், நாடன், ஊரன், மகிழ்னன், வேளிர், வெற்பன், சிலம்பன், சேர்ப்பன், புலம்பன், கிழவன், சான்றோன், ஏனாதி, எட்டி, சீறூர் மன்னன், பெருமகன், பெருங்குடி, சிறுகுடி, நாள்மகிழ் இருக்கை, சான்றோர் அவையம், ஐம்பெருங்குழு, என்பேராயம், நெடுமுடி, குறுமுடி, செங்கோல், அரசுகட்டில், அரியணை, வெண்கொற்றக்குடை, கொடி, முத்திரை, முரசு, கடிமரம், தேர், கஞ்சுகமாக்கள், துhதர், ஒற்றர், திருமுகக்கணக்கு, உழைச்சுற்றாளர், அகவர், படைச்சிறுக்கன், கட்டியங்காரன், உழையர், பெருங்கணி என்று ஒரு பெரும் பட்டியலையே கொடுக்கலாம். சமயத்துறையிலும் தேவையான அளவிற்கு தனித்தமிழ் சொற்கள் நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்மொழி சமஸ்கிருத சொற்கள் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதைப் போல், சமஸ்கிருதமும் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளதை காண முடிகின்றது. எனவே, சில சொல் பரிமாற்றகளைக் கொண்டு சமஸ்கிருதம் தமிழ் மீது ஆதிக்கம் செலுத்தியது என்றோ அல்லது தமிழ்மொழி சமஸ்கிருதம் மீத ஆதிக்கம் செலுத்தியது என்றோ கூறுவது அறிவுக்கு ஒவ்வாத ஒன்ற.
ஆரியமாயை, பண்டைய உலக வரலாற்றை தங்கள் விருப்பத்திற்கேற்ப திரித்து சித்தரித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய மாயையின் இந்திய வடிவமாகும். ஐரோப்பிய மாயையினரால் தோற்றுவிக்கப்பட்ட குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய சித்திரத்தைக் கொண்டு ஐரோப்பியரே உலகின் முதல் ஆணாதிக்க சமூகத்தினராகப் பரிணமித்தவர் என பரவலாக நம்பப்பட்டு வருகிறது. இந்திய சமூகத்தில் இந்தோ ஆரியரே முதல் ஆண்வழி சமூகத்தவர் என ஆரிய ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். கி.மு. 4000 ஆண்டளவில் ஆரியர் வாழ்ந்ததாகக் கருதப்படும் காகேசியப்பரப்பில், நால்சிக் என்ற இடத்திலுள்ள புதிய கற்காலக் கல்லறைகளில் ஆண்களை வலது புறமும் பெண்களை இடது புறமுமாகச் சாய்த்துப் புதைத்திருந்ததை இதற்குச் சான்றாகக் காட்டுகின்றனர். இது ஏற்கக்கூடியதுதான். ஆனால் சமகாலத்தில் மேற்காசியாவில் வாழ்ந்துவந்த கருப்பின மக்கள் வேட்டை நிலையில் தோன்றிருந்த ஆண்வழி சமூக அமைப்பைக் கடந்து உலோகப் பயன்பாட்டையும், நீர்ப்பாசனத்துடன் கூடிய விவசாயத்தினையும் அறிந்து மிக வளர்ந்த பண்பாட்டு நிலையில் வாழ்ந்து வந்துள்ளனர். இது மட்டுமின்றி மேற்காசியாவிலிருந்து பரவிய பண்பாட்டின் மூலமே ஆரியர் உட்பட்ட ஐரோப்பியரிடம் புதிய கற்காலப் பண்பாடு தோன்றியது என்பதை தொல்பொருள் தடயங்கள் தெளிவாக நிறுவுகின்றன.
மேற்காசிய கருப்பின மக்கள் புதிய கற்கால நாகரிகத்தை ஐரோப்பாவிற்கு எடுத்துச் செல்லும்வரையிலும் ஆரியர் தாய் தலைமையிலான இரத்த உறவுக் குடும்ப அமைப்பு கூட்டங்களாகவே வாழ்ந்துள்ளனர் எனத் தெரிகிறது. இதற்கு கிரேக்கப் புராணங்கள் சான்றாக உள்ளன. கிரேக்க புராணங்கள்படி முதலில் சூனியத்திலிருந்து கேயா என்ற பூமித் தாயும் டார்டாரஸ் (Tartarus) என்ற பாதாள உலகக் கடவுளும் ஈராஸ் (Eros) என்ற காதல் தெய்வமும் தோன்றினர். பூமித்தாய் கேயா ஆண் துணையின்றி கன்னித்தாயாகி யுரேனஸ் (Uranus) என்ற ஆகாயக் கடவுளையும் அவுரியா என்ற மலை தெய்வத்தையும் பாண்டஸ் (Pontus) என்ற கடல் தெய்வதத்தையும் தோற்றுவித்தாள். பின் யுரேனஸைக் கணவனாக்கிக் கொண்ட கேயா, மூன்று ஒற்றைக் கண் அரக்கர்களையும் மூன்று 50 தலைகள் கொண்ட அரக்கர்களையும் பெற்றெடுத்தாள். பிள்ளைகளால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் எனக் கருதிய யுரேனஸ் அவர்களைப் பாதாள உலகிற்குள் தள்ளிவிடுகிறான். இச்செயல் கேயாவை வெறுப்படையச் செய்தது. இந்நிலையில் இவ்விருவருக்கும் டைட்டன் (Titan) என அழைக்கப்பட்ட அசுரர்கள் பிறந்தனர்.
கடைசி டைட்டனாகிய குரோனஸ் (Cronus) தனது தாயின் விருப்பப்படி தந்தை யுரேனஸைக் கொன்று கடவுளர்களின் தலைவனாகிறான். பின் குரோனஸ் தன் சகோதரி ரியா (Rhea) – வை மனைவியாக்கிக் கொள்கிறான். அதன் பின் குரோனசின் மகன் ஜீயஸ் (Zeus) தந்தையை வென்று மேலுலகத்தின் கடவுளாகிறான். ஜீயஸ் தனது சகோதரி ஹீரா (Hera)- னவ மணந்து வேறோர் கடவுளின் மனைவியாகிவிட்ட மற்றோர் சகோதரி டெமடரைக் (Demeter) காதலிக்கிறான் என்பதாகச் சொல்கிறது கிரேக்கப் புராணம்.
கிரேக்கப் புராணப்படி கேயா தனது மகன் யுரேனஸை கணவனாக்கிக் கொள்கிறாள். மேலும் சகோதர, சகோதரிகளுக்குள் மணவுறவிருப்பது மிக இயல்பாகக் காட்டப்பட்டுள்ளன. தந்தை சொந்த மகன்களை போட்டியாளனாகக் கருதி பாதாள உலகிற்கு அனுப்பிவிடுவதும் பிள்ளைகள் தந்தையைக் கொன்று பதவியைக் கைப்பற்றுவதும் கூறப்படுகின்றன. பிள்ளைகளைப் போட்டியாளராகக் கருதுகிற கடவுளர்களையோ அல்லது தந்தையைக் கொன்று பதவியை எடுத்துக் கொண்ட மகன்களையோ இந்துப் புராணங்களில் காணமுடியாது.
மேலும் சகோதர, சகோதரி மண உறவு இந்துப் புராணங்களுக்கு முற்றிலும் அன்னியமானது. மாறாக இந்துப் புராணங்கள் காட்டும் மணஉறவுகள் மாற்று சகோதர மண உறவை (Cross Cultural Marriage) அடிப்படையாகக் கொண்டுள்ளன. மாற்று சகோதர மணஉறவு வட இந்திய ஆரிய சமூகத்திற்கும் கூட அன்னியமானதாகும். கி.மு. 6-ஆம் நுhற்றாண்டைச் சேர்ந்த போதாயன தர்ம சூத்திரம் மாற்று சகோதர மண உறவு தென்னிந்தியருக்கே உரியது எனக்கூறுகிறது. இந்துப் புராண மரபுகள் திராவிடருக்கே குறிப்பாக தமிழருக்கே பொருந்தி வருவதை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆங்கில மொழி உறவுப் பெயர்களான பிரதர் – இன் – லா, சிஸ்டர் – இன் – லா, சன்- இன் – லா, டாட்டர் – இன் – லா போன்றவை இரத்த உறவுக் குடும்ப அமைப்பின் சாயலைக் கொண்டுள்ளன. ஐரோப்பியர், காட்டுமிராண்டி நிலையிலிருந்து மிகவும் பிற்காலத்திலேயே நாகரிகத்திற்குள் நுழைந்ததால்தான் இத்தகையப் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நீடித்திருக்கின்றன. வேறு சில பண்பாட்டு எச்சங்களும் கூட இதற்கு வலு சேர்க்கின்றன.
பெண்களின் கற்புநெறி என்பது ஆண்களின் தனிவுடைமையைப் பாதுகாக்கக் கூடிய நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் மிகமுக்கியக் கூறாகும். கி.மு. 1750-இல் பாபிலோனிய அரசன் முராபி வகுத்த சட்டங்கள் முதல் மனு ஸ்மிருதி வரையிலும் உலகின் நிலப்பிரபுத்துவ சமூகச் சட்டங்கள் அனைத்தும் பெண்களின் கற்பு
நெறிக்கு மிக முக்கியமான இடத்தைக் கொடுத்துள்ளன. ஐரோப்பிய சமூகம், பெண்கள் கற்பு நெறியைப் பேணுவதற்காக கொடுமையான சட்டங்களை பழங்காலத்திலிருந்தே பெற்றிருந்த போதிலும் கூட கற்புநெறியைக் கடைப்பிடித்துக் காக்க முடியாமல் தடுமாறுவதை நாம் காண்கிறோம். அங்கு நட்புள்ள எந்த ஒரு ஆணும், பெண்ணும் பொது இடத்தில் கட்டிப்பிடிப்பதும் முத்தமிடுவதும் இயல்பானதாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. விவாகரத்தும், மறுமணமும் வெகு இயல்பானதாக அங்கு உள்ளன. விழாக்களில் ஆணும், பெண்ணும் சேர்ந்து ஆடுவதும் பாடுவதும் வரைமுறையற்ற நிலையில் மேட்டுக்குடியினரிடமும் நடைபெறுகிறது. இவ்வாறு இருபாலரும் சேர்ந்து ஆடுவதை தமிழகக் கிராமப்புறங்களில் கூட நாம் காணமுடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சங்க கால உண்டாட்டுகளில் கூட இருபாலரும் சேர்ந்து வரைமுறையின்றி கூத்தாடும் வழக்கம் இல்லை. ஐரோப்பியரின் இன்றைய நடனக்கலை காட்டுமிராண்டி நிலை இனக்குழு நடனங்களின் ஒரு வளர்ந்த வடிவமாகவே தெரிகின்றது.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்பின் வளர்ந்த வடிவத்தை தமிழ்ச் சமூகம் சங்க காலத்திலிருந்து கொண்டுள்ளது. கற்புநெறி, தமிழ்ச் சமூகத்தின் மனதளவிலேயே பதிவாகியுள்ள அளவு வேறெந்த சமூகத்திலும் இல்லை. கி.மு. 1500-ல் லேயே பாபிலோனியா, அக்காடியன், அசிரியா, ஹிட்டைட், காசைட், மிட்டானி போன்ற நிலப்பிரபுத்துவ அரசுகளை மேற்காசியாவில் தோற்றுவித்திருந்தும்கூட ஐரோப்பியரிடம் தமிழர் அளவுக்கு கற்புநெறி மனதிலே பதிந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கி.மு. 1500-க்கும் முன்பே, மிக நீண்ட காலமாக தந்தை வழிச் சமூகமாகவும் அதனடிப்படையில் தோன்றிய தனிவுடமைச் சமூகமாகவும் வாழ்ந்திருந்ததாலேயே பெண்களின் கற்புநெறி இவ்வளவு ஆழமாக தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றியுள்ளது எனக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
சங்க கால தமிழ் வேந்தர் குடியினரில் பாண்டியரும், சோழரும் இரண்டாயிரம் ஆண்டுகளாக சிறுபகுதியையேனும் ஆட்சி செய்து வந்ததற்குச் சான்றுகள் உள்ளன. சேரரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளனர். இந்நீண்ட கால வரலாற்றில் ஒரேயொரு பெண் அரசிகூட வேந்தர்கள் சார்பில் அரசுக் கட்டிலில் அமரவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சமூகம், ஆண்வழி சமூக அமைப்பில் நீண்ட காலம் வாழ்ந்ததால் மட்டுமே இது சாத்தியமாயிற்று எனலாம்.
ஆரிய (ஐரோப்பிய) மாயையினர், அம்மாயையிலிருந்து விடுபட்டு விவாதிக்கப்படும் விஷயங்களை சீர்துhக்கிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வளவு நீண்ட விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது. மேற்கண்ட பொருள் குறித்து பண்பாட்டு மானுடவியலாளர் பரிசீலனை செய்வாராயின் அது பயனுடையதாக அமையும்.
ஆரிய மாயைக்கு எதிராக வளர்த்தெடுக்கப்பட்ட மற்றுமொரு மாயை, நீண்ட காலமாக தமிழ்ச் சமூக வரலாற்றை ஆட்டிப்படைத்து வருகின்றது. ஆரிய மாயையை விட மிக மோசமான அளவில் தமிழ்க் குடிகளின் வரலாற்றை குழி தோண்டி புதைத்து வரும் இம்மாயையை அடுத்துக் காண்போம்.
(கட்டுரை ஆசிரியர் தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவன ஆய்வாளர்.)
brahaspathy@gmail.com
- 7 th FILCA International Film Festival
- காதல் நாற்பது (17) என்னிடத்தைத் தேர்ந்தெடு !
- தில்லியில் ஒரு நாடக விழா
- யாகாவராயினும் �நா�காக்க
- இலை போட்டாச்சு ! -25 – எலுமிச்சம்பழச் சாதம்
- தமிழ்நூற்கடல் தி.வே. கோபாலையர் மறைவு (22.01.1926 – 01.04.2007)
- காரைக்கால் அம்மையார் பின்தள்ளப் பெற்றதன் சூழலும் அதில் உள்ள ஆணாதிக்க அரசியலும்
- ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்?-ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி
- தமிழரைத் தேடி – 1
- திருக்குறள் விழாவில் விளம்பரமோகம்
- இராணுவ ஏவுகணைகள் படைத்த இந்திய மேதை டாக்டர் அப்துல் கலாம் -3
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 15
- திண்ணையில், எச். ஜி. ரசூல் மதங்கள் குறித்து
- காந்தி-பெரியார் பற்றி அருணகிரி
- நண்பர் அருணகிரிக்கு அன்புடன் ஓர் மறுமொழி.
- ஒன்று என்றால் ஒன்றுதானா?
- கி.மு. – கி.பி.க்களின் கட்டுடைப்பு
- கடிதம்
- மடியில் நெருப்பு – 34
- நட்பா, காதலா
- ஒரு சொல்.. தேடி..
- புரியாத புதிர்
- பெரியபுராணம்- 129 44. கணநாத நாயனார் புராணம்.
- காலமும் காலமும்/ பாரதியார் சாலை
- வார்த்தைகளாய் மாறிய சூபியின் ரத்தம்
- அம்மாவுக்காக சில வரிகள்
- கண்ணீர் விட்டு வளர்த்த கதை!
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு – காந்தி கிரியும்,கருத்துச் சுதந்திரமும்
- சிறுபான்மை, பெரும்பான்மை, மனப்பான்மை..
- நாதஸ்வாமி
- நாவல்: அமெரிக்கா II – அத்தியாயம் ஆறு: மழையில் மயங்கும் மனது!
- கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 3
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்:7 காட்சி:8)
- மாத்தா ஹரி – அத்தியாயம் 6