பாவண்ணன்
படம் முடிந்து அரங்கைவிட்டு வெளியேறும்போது தந்தைமை என்பதை எப்படி வரையறுப்பது என்கிற கேள்விதான் மனத்தில் முதலில் எழுந்தது. “சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” என்பதும் “தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்” என்பதும் தந்தை என்னும் பொறுப்பில் இருப்பவரின் கடமைகளைப்பற்றி மட்டும்தான். புராணங்களும் பக்தி நூல்களும்கூட இறைவனை தந்தை என்கிற நிலையில் முன்னிறுத்திப் புகழ்கின்றன. “தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்புரையும் திருவடியென் தலைமேலேவே” என்றும் “மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கினேனே” என்றும் திருமங்கையாழ்வார் உருகி உருகித் துதிக்கிறார். இவையும் தந்தையின் மேன்மைக் குணங்களையே முன்வைக்கின்றன. ஆனால் தந்தைமை என்னும் சொல் உணர்த்தும் உணர்வு மேற்சொன்ன கடமைகளையும் மேன்மைகளையும் சொல்லாத இன்னும் பல அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு பேருணர்வு. அந்த உணர்வை நம் ஆழ்மனத்தால் தீண்டிப் பார்க்கும் ஒரு வாய்ப்பை “அப்பா” என்னும் ஈரானியத் திரைப்படத்தின் வழியாகப் பெறமுடிகிறது.
அம்மா, இரண்டு சிறுமிகள், ஒரு சிறுவன் ஆகிய உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கிராமத்துக் குடும்பம். அப்பா இறந்துவிடுகிறார். அப்பாவின் பொறுப்பை மகன் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நகரத்துக்குச் சென்று பணமீட்டி வருவதாகச் சொல்லி நகரத்தைநோக்கிப் புறப்படுகிறான் சிறுவன். ஒரு மொத்த வியாபாரக் கடையில் கடுமையாக உழைக்கிறான். சில மாதங்களுக்குப் பிறகு கொடுக்கப்பட்ட சம்பளப்பணத்தை வாங்கிக்கொண்டு ஆவலோடு ஊருக்குத் திரும்புகிறான். தாயாருக்காகவும் தங்கைகளுக்காகவும் வாங்கிய புத்தாடைகளும் மணிகளும் அவன் பையில் இருக்கின்றன. ஊர் எல்லையில் சந்திக்க நேரும் நண்பன்வழியாக தெரியவரும் செய்தி அவனை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. உள்ளூரில் இருக்கிற காவல்துறை அதிகாரிக்கும் அவன் தாயாருக்கும் திருமணம் நிகழ்ந்த செய்தியை அவனால் நம்பமுடியவில்லை. தாயார்மீது கடுமையான கோபம் கொள்கிறான் அவன். அவன் சீற்றம் ஒரு சிறுவனுக்குரியதாக இல்லை. அவன் கொட்டும் வார்த்தைகளும் ஒரு சிறுவனுக்குரியவை அல்ல. அவளையும் தங்கைகளையும் காப்பாற்றும் பொறுப்பை தானே விரும்பிச் சுமந்துசென்றவன் அவன். தன் தந்தையைப்போல குடும்பப் பாரத்தைச் சுமக்க நினைத்தவன். தாயார், சகோதரிகள் என உறவுகள் வேறுபட்டாலும் அவ¨ன் பொறுத்தவரையில் அவர்கள் அவனால் காப்பாற்றப்படவேண்டிய பிள்ளைகள். ஒரு தந்தையாக நின்று அக்குடும்பத்தை அவன் நிலைநிறுத்தவேண்டும். இப்படித்தான் அவன் மனம் நினைக்கிறது. இதனாலேயே அவன் பதற்றம் அதிகரிக்கிறது. சிறுவயதுக்கே உரிய துடுக்குத்தனமும் புரியாமையும் வேகமும் எகத்தாளமும் தந்திரமும் அவனிடம் அவ்வப்போது வெளிப்படாமல் இல்லை. ஆனால் அவையனைத்தும் சில கணங்கள்மட்டுமே நிலைத்திருக்கின்றன. மிக விரைவாகவே மறுபடியும் அவன் தந்தை என்னும் கோட்டுக்குச் சென்றுவிடுகிறான். ஆழ்மனத்தில் இருக்கிற தந்தைமை உணர்வோடும் சிறுவயதுக்கே உரிய துடுக்குப் பேச்சோடும் அவன் மாறிமாறி வெளிப்பட்டபடி இருக்கிறான்.
தாயை மணந்துகொண்டு தன் சகோதரிகளுக்குத் தந்தையாக இருக்கிற அதிகாரிக்கும் அவனுக்கும் தொடக்கத்திலேயே மோதல் உருவாகிவிடுகிறது. மெல்லமெல்ல அம்மோதல் வலுப்பதில் சிறுவனுடைய இதயம் வெறியுணர்வால் நிரம்பிவிடுகிறது. ஆவேசத்தின் உச்சத்துக்குப் போன சிறுவன் தனக்குள் ஊற்றெடுக்கும் தந்தைமையையும் அதிகாரியின் நெஞ்சில் நிறைந்திருக்கும் தந்தைமையையும் ஒரே நேர்க்கோட்டில் புரிந்துகொள்ளும் தருணத்தை முன்வைத்துப் படம் முடிவெய்துகிறது. தந்தைமை என்பது ரத்த உறவால் உருவாவதில்லை. சட்ட உறவாலும் உருவாக்கப்படுவதில்லை. அது அனைத்துக்கும் மேலான ஓர் உணர்வு. அரவணைக்கிற உணர்வு. தன்னையே வழங்குகிற உணர்வு. அன்பைப் பொழிகிற உணர்வு. எங்கும் எதிலும் வேறுபாடுகளைக் காணாத உணர்வு. பாதுகாப்பை வழங்குகிற உணர்வு. அதைக் கண்டடையும்போது நம் நெஞ்சம் அடையும் பரவசத்துக்கு அளவே இல்லை.
ஒரு கட்டத்தில் காவல் பணியில் சின்னமாக விளங்கக்கூடிய கைத்துப்பாக்கியைத் திருடிக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகிற சிறுவனை நகரத்தில் கண்டுபிடித்து கைவிலங்கிட்டு மீண்டும் அழைத்து வருகிறார் அதிகாரியான வளர்ப்புத்தந்தை. ஒரு கைதியாக அவரைத் தொடர்ந்து வரும் சிறுவனுக்கும் அவருக்கும் இடையே சாதாரண உரையாடல் எதுவுமே இல்லை. வளர்ப்புத் தந்தைக்கு தன் தரப்பில் எவ்வளவோ சொல்வதற்கிருந்தும் எதுவும் சொல்வதில்லை. அச்சிறுவனுக்கும் தன் தரப்பில் சொல்வதற்கிருந்தும் அவனும் எதையும் சொல்வதில்லை. எப்போதும் இருவருக்கும் ஒரு முறைப்பு. வெறுப்பு கலந்த பார்வை. எரிச்சல். இகழ்ச்சி புரளும் புன்னகை. இவைமட்டுமே அங்கே நிகழ்கின்றன. அதிகாரி ஏமாந்த தருணத்தில் வாகனத்தோடு தப்பிச் சென்றுவிடும் சிறுவனுடைய முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. குறுக்குவழியில் அவனை மீண்டும் பிடித்துவிடுகிறார் அதிகாரி. ஆனால் வாகனம் பழுதடைந்துவிடுகிறது. பாதைகள் மாறிவிட்டதில் திசை குழம்பிவிடுகிறது. உத்தேசமாக ஒரு குறிப்பிட்ட திசையைநோக்கி அவர்கள் பாலைவனத்தில் நடக்கத் தொடங்குகிறார்கள். எங்கும் ஒரே வெயில். நாக்கு வறள்கிறது. ஒரு வாய் தண்ணீருக்கு தவியாய்த் தவிக்கிறது நெஞ்சம். அங்கங்கே தோண்டிவைக்கப்பட்டிருக்கும் ஊற்றுகள் வற்றிப்போய்க் கிடக்கின்றன. கானல்நீராய்த் தெரியும் ஓடைக்கரைகள் அருகில் சென்றதும் ஏமாற்றத்தைத் தருகின்றன. உணவு இல்லை. நீரும் இல்லை. இருவரையும் களைப்பு வாட்டியெடுக்கிறது. அதிகாரி சட்டென ஒரு முடிவெடுத்தவராக சிறுவனுடைய கைவிலங்கை அவிழ்த்து ஓடிப் பிழைத்துக்கொள்ளுமாறு சொல்கிறார். தப்பிக்கும் கணங்களுக்காக அதுவரை காத்திருந்த சிறுவன் ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகாரியைவிட்டு விலகாமல் அவர் அருகிலேயே நடக்கிறான். திடீரென பாலைவனத்தில் சூறாவளிக்காற்று வீசுகிறது. மண்புழுதி எங்கும் பற்றிப் படர்கிறது. பலமணிநேரம் வீசிய புயற்காற்றைத் தாங்கிக்கொள்ள இயலாமல் அதிகாரி கீழே விழுந்துவிடுகிறார். புழுதி தணிந்த கணத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒட்டகங்கள் மந்தையாக மேய்வதைப் பார்க்கிறான் சிறுவன். அவனுக்குள் ஒரு நம்பிக்கை ஊற்று சுரக்கிறது. அந்தப் புள்ளியைக் குறிவைத்து ஓடுகிறான். அவன் கணக்கு தப்பவில்லை. சளசளத்தபடி ஓரிடத்தில் நீர் பொங்கி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருகணம்கூட தயங்காமல் திரும்பி ஓடிவரும் சிறுவன் மயக்கமாகி விழுந்திருக்கும் அதிகாரியின் கைகளைப் பிடித்து நீர்நிலைவரை இழுத்துச் செல்கிறான். கரையில் இருவரும் சரிந்துவிழுகிறார்கள். தண்ணீரின் குளுமை அவன் தவிப்புக்கு இதமாக இருக்கிறது. ஒரு கை அள்ளி பருகக்கூடத் தோன்றாமல் உடல்முழுக்கப் படரும் அந்தக் குளுமையில் ஆழ்ந்தபடி கிடக்கிறார்கள். ஒரு தந்தையின் பாதுகாப்பான கரங்களில் இருப்பதைப்போல அந்தத் தண்ணிரின் கரங்களில் அவர்கள் படுத்திருப்பதாகத் தோன்றுகிறது.
தண்ணீர் வலிமையான ஒரு படிமமாகப் படத்தில் இயங்குகிறது. சுட்டெரிக்கும் பாலைக்கு நடுவே தேடிவருகிறவர்களுக்கு ஆதரவாக ஓடிக்கொண்டிருக்கிறது அந்தத் தண்ணீரோடை. தந்தைமை என்பதும் ஒருவகையான ஆதரவு உணர்வு. வாழ்க்கை என்னும் பாலையில் நோய்வாய்ப்பட்டுவிட்ட பிள்ளைகளைக் காப்பாற்றமுடியாமல் தவிக்கிற பெண்ணுக்கு ஆதரவளிக்கத் து¡ண்டுகோலாக இருந்தது தந்தைமை உணர்வு. முதல்முறையாக சிறுவன் அதிகாரியைப் புரிந்துகொள்கிறான். அவருக்குள் வெளிப்பட்ட தந்தைமை உணர்வையும் புரிந்துகொள்கிறான்.
இன்னொரு கோணத்திலிருந்தும் இதைச் சொல்லிப் பார்க்கலாம். அதிகாரிமீது தீராத கோபம் கொண்டவன் சிறுவன். அவரை வசைச் சொற்களால் கைநீட்டித் திட்டியவன். கடுமையான பசிக்கும் தாகத்துக்கும் இடையில்கூட அவர் வாங்கித் தந்த குளிர்ப்பானத்தை அருந்த மறுக்கும் அளவுக்கு சீற்றமும் வெறப்பும் நிறைந்திருப்பவன். கைவிலங்கிட்டாலும் தப்பிக்கும் தருணத்துக்கும் அவரைத் தாக்கும் தருணத்துக்கும் காத்திருக்கிறவன். புயலுக்கு முந்தைய கணத்தில் கைவிலங்கு அவிழ்க்கப்பட்டாலும் போகச் சொல்லி வலியுறுத்தப்பட்டாலும் ஒரு அடிகூட அவரைவிட்டு விலகிச் செல்ல மனமில்லாமல் அவன் ஏன் நிற்கிறான் என்பதும் மயங்கிக் கிடக்கிற அவரை தண்ணீர் நிலைவரைக்கும் தன் சக்திக்கும் மீறி இழுத்துச் சென்று ஏன் காப்பாற்றுகிறான் என்பதும் முக்கியமான கேள்விகள். அக்கேள்விகளை ஒட்டி நாம் யோசிக்கும்போதுதான் அதிகாரியின்மீது வெறுப்பு இருந்தாலும் இச்செயல்களை அவன் தன்னிச்சையாகவே செய்யும்படி அவனைத் து¡ண்டிய உணர்வு எது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அந்த உணர்வுதான் இரக்கத்தையும் அன்பையும் பராமரித்துக் காக்கும் கடமையுணர்வையும் ஒருங்கே கொண்ட தந்தைமை உணர்வு. யாராக இருந்தாலும் ஆதரவாக நின்று காப்பாற்றத் துடிக்கும் தந்தைமை உணர்வு. தனக்குள் ஊற்றெடுக்கும் தந்தைமை உணர்வும் அதிகாரியின் நெஞ்சுக்குள் ஊற்றெடுக்கும் தந்தைமை உணர்வும் வேறுவேறல்ல என்னும் உண்மையை அவன் மனம் அந்தத் தண்ணீரின் குளிர் ச்சியில் கண்டடைகிறது. தந்தைமை உணர்வு என்பது ஒரு குடும்பத்தின் எல்லைக்குள் முகிழ்த்து அடங்கிவிடும் ஒன்றல்ல. அது ஒரு உலகம் தழுவிய பேருணர்வு. அதன் தடத்தை அழகானமுறையில் அடையாளப்படுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் மஜித் மஜிதி.
ஒரேஒரு சொல்கூட இல்லாதவகையில் இக்காட்சிகளை வகுத்திருக்கும் இயக்குநரின் திறமை பாராட்டுக்குரியது. இக்காட்சியின் முத்தாய்ப்பாக நிகழும் இன்னொரு சம்பவம் கிட்டத்தட்ட ஒரு கவிதை அனுபவத்துக்கு நிகரானது. தண்ணீரில் பிரக்ஞையின்றிக் கிடக்கும் அதிகாரியின் சட்டைப்பையிலிருந்து ஒரு புகைப்படம் நழுவி தண்ணீரில் மிதக்கத் தொடங்குகிறது. சிறுவனுடைய தாயாரும் பிள்ளைகளும் இடம்பெற்றிருக்கும் படம் அது. தனிமை நேரத்தில் எடுத்துப் பார்த்து மனத்தை நிரப்பிக்கொள்ள உதவும் படம். அது மெல்லமெல்ல மிதந்துவந்து அதே தண்ணிரில் வேறொரு இடத்தில் படுத்துக் கிடக்கும் அவன் முகத்துக்கெதிரே வந்து மோதுகிறது. தண்ணீரில் நெளியும் அப்படத்தில் பதிந்திருக்கும் முகங்களைக் கண்டு அவன் கண்கள் ஒளிர்கின்றன. இதுதான் அக்காட்சியில் நடக்கும் சம்பவம். இச்சம்பவத்தோடு படத்தின் தொடக்கத்தில் நிகழ்ந்த வேறொரு சம்பவத்தையும் இணைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சிறுவன் நீண்ட காலத்துக்குப் பிறகு கிராமத்துக்குத் திரும்பிவரும் வேளையில் தாகத்தைத் தணித்துக்கொள்ள இதேபோல தண்ணீர் வழிந்தோடும் ஒரு வாய்க்காலில் நீரருந்தக் குனிகிறான். அக்கணத்தில் காலமெல்லாம் அவன் தன் சட்டைப்பையில் வைத்துப் பாதுகாத்து, அடிக்கடி எடுத்தப் பார்த்து மகிழ்ந்த ஒரு புகைப்படம் நழுவி தண்ணீரில் விழுந்துவிடுகிறது. அவனும் அவனுடைய தந்தையாரும் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் அது. தண்ணீரின் வேகத்தில் அப்படம் இழுபட்டு ஓடுகிறது. கண்மூடிக் கண்திறப்பதற்குள் வேகவேகமாக நகர்ந்து பூமிக்கடியே நீளும் தண்ணீர்வழிக்குள் சென்று மறைந்துவிடுகிறது. பையிலிருந்து நழுவிவிழும் படங்களின் இரண்டு காட்சிகளையும் இணைத்துப் பார்க்காமல் நம்மால் இருக்கமுடிவதில்லை. ஒரு படம் தந்தைக்குரிய இடம் குடும்பத்திலிருந்து அகன்றுவிட்டது என்று உணர்த்தும் படம். இன்னொரு படம் தந்தைமை உணர்வு நிரம்பிய ஒருவரால் அக்குடும்பம் நிரப்பப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் படம். மனத்தைத் தொடும் பின்னணி இசையோடு இக்காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.
படம் இக்காட்சியோடு முடிவடைந்துவிடுகிறது. அப்போதுதான் நான் முதலில் சொன்ன கேள்வி நெஞ்சில் அசையத் தொடங்கியது. பார்வையாளர்களின் ரசனைக்கு விருந்தாக அமைந்துவிட்ட இறுதிக் காட்சியின் மெளனம் இக்கேள்விக்கான பதிலை யோசிக்கும்படி து¡ண்டியது.
paavannan@hotmail.com
- மௌனத்தின் அலறல்
- துண்டு துண்டாக்கப்பட்ட நான்கு பட்சிகளின் உடல்கள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5, காட்சி:1) ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம்
- கணக்கதிகாரம் பேசும் சதுரங்க செய்திகள்
- உயிர்ப்புள்ள மனமும் மறதிப் பெருவெளியும்
- தாஜ் கவிதைகள்
- இட ஒதுக்கீடு, அரசியல் சட்டம், நீதி மன்றங்கள்: ஒரு கேள்வி பதில்
- பண்டைத் தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி- தூரம்
- கடிதம்
- வாணர்களும் விந்தியமலையும்
- வெங்கலராசன் வரலாற்றை முன்னிறுத்தி ஓர் ஆய்வு
- தந்தைமை என்னும் உணர்வு – “அப்பா”- ஈரானியத் திரைப்பட அனுபவம்
- கடித இலக்கியம் – 28
- காசும் கரியும் !
- National folklore support center
- இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் புதுமைகள்!
- கருமையம் நிகழ்ச்சி – தொடரும் முஸ்லிம்களின் அவலங்கள்
- அஞ்சலிக் கூட்டம் – ஏஜே என்னும் பேரறிவாளன்
- அலெக்ஸாண்டர் பாரத மண்ணில் தோல்வியை சந்தித்தான்
- பெண்கள் சந்திப்பு 2006
- மடியில் நெருப்பு – 9
- வைதீஸ்வரனின் கவிதைகள்
- உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்?
- இலை போட்டாச்சு !
- நேற்று ! இன்று ! நாளை !
- பதஞ்சலியின் சூத்திரங்கள் – 1
- அவலம்
- கீதாஞ்சலி (96) – எனது பிரிவுரை!
- சிந்தனையில் சிலநேரம்
- பெரியபுராணம் — 109 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- பேசும் செய்தி – 5 :: பாஸ்டன் பாலாஜி
- நாலந்தாவின் மரணம் : வரலாற்றின் கண்ணீர்த்துளிகளிலிருந்து..
- இரவில் கனவில் வானவில் – 8
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 8