தஞ்சை சாமிநாதன்
தஞ்சை ப்ரகாஷ் கடந்த 27ந் தேதி இயற்கை எய்தியது, நவீனத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு அதிர்ச்சி தரும் ஒன்று. தனிப்பட்ட முறையில் எனக்கு, தீவிர வாசகன் என்ற தளத்தைவிட தஞ்சையைச் சார்ந்த ஒரு நல்ல நண்பாின் இழப்பு ஈடு செய்யமுடியாதது.
1988-ம் ஆண்டு வாக்கில் தஞ்சை எல்லையம்மன் கோவில் தெருவில், திரு. ரவீந்திரன் நடத்தி வந்த பாரத் தட்டச்சுப் பயிலகத் தகவல் பலகையில் ஒரு வித்தியாசமான அழைப்பிதழ். ாசும்மா இலக்கியக் கும்பல்ா என்னும் பெயரைக் கண்டதுமே பலத்த அதிர்ச்சி அடைந்தேன். அந்த அமைப்பு நடத்தும் கூட்டத்தில் திரு. காதம்பாி வெங்கட்ராமன் ஒரு பிரபல ஆங்கில எழுத்தாளர் பற்றி பேசுவதாக அறிவிப்பு. புதுமைப்பித்தன், தி.ஜா, அழகிாிசாமி, சுந்தர ராமசாமி போன்றவர்களின் எழுத்துடன் தோழமை கொண்டிருந்த எனக்கு சும்மா இலக்கியக் கும்பலைக் கண்டே தீரவேண்டிய ஒரு மனநிலை. சுமார் 25 பேர் கூடிய கூட்டத்தில்தான் திரு. ப்ரகாஷ் அவர்களை ஒரு நவீன இலக்கிய வாதியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கைதட்டல்களுக்கும், விசில் சப்தங்களுக்கும் அப்பாற்பட்ட ஆத்மார்த்தமான அணுகுமுறையைக் கொண்டிருந்தார் அவர்.
பின் சும்மா இலக்கியக் கும்பல் சார்பிலும், ஒளி வட்டம் என்னும் இலக்கிய அமைப்பின் சார்பிலும், வேறு சில நண்பர்கள் நடத்திய தமிழ்த் தாய் இலக்கியப் பேரவை மற்றும் திரு. சுந்தர சுகன் நடத்திய சுகன் பைந்தமிழ்த் தடாகம் சார்பிலும் நடத்தப்பட்ட பல்வேறு இலக்கிய சந்திப்புகளிலும் பிரகாஷ் அவர்களின் கருத்துகளைக் கேட்டு மகிழும் வாய்ப்பு ஏற்பட்டாலும், அப்போது எனக்கிருந்த அரசியல், பண்பாட்டு நெருக்கடிகளின் காரணமாக அவருடனோ, அவரது இயக்கத்துடனோ நெருக்கமான நட்பு கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
குறிப்பாக, இந்தி இலக்கிய சிற்பி பிரேம் சந்த் அவர்களின் பணியைப் போற்றும் வகையில் தஞ்சை பெசண்ட் அரங்கத்தில் அவர் நடத்திய கூட்டம் தந்த வியப்பு இன்னும் என்னிடமிருந்து அகலவில்லை. தமிழ் பாசிசம் ஒரு சமூக, அரசியல் இயக்கமாக உருவெடுத்து நிலை பெற்ற தமிழகத்தில் ஒரு இந்தி இலக்கியவாதியைப் போற்றும் விதத்தில் நடத்தப் பட்ட நிகழ்ச்சியும், அதற்குக் கூடிய கூட்டமும் என் போன்ற பலராலும் கற்பனை செய்ய முடியாத ஒன்று.
இது போன்ற பல சாதனைகளைப் புாிந்தவர் தஞ்சை ப்ரகாஷ். அவற்றுள் நான் முக்கியமாகக் குறிப்பிட விரும்புவது அவர் 1994-95 ஆண்டுகளில் தஞ்சைப் பொிய கோவில் வளாகத்திலும், பின் ராஜ ராஜ சோழன் சிலை அருகிலும் வாரந்தோறும் நடத்திய கதை சொல்லிகள் மற்றும் கவிதை வாசிப்பு நிகழ்ச்சிகள். ஜெர்மனிய தமிழ் எழுத்தாளர் நா.கண்ணன் முதல் பள்ளிச் சிறுமியர் வரை பலரும் இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில்தான் எனக்கும் ப்ரகாஷ் அவர்களுக்குமான நட்பு இலக்கிய ஆர்வம் கடந்த ஒன்றாக உருப்பெற்றது.
தஞ்சை ப்ரகாஷான் மிகப் பெரும் சாதனை என்று கருதப்பட வேண்டியது, தீவிரமான இலக்கிய தளத்தில் இயங்க விழைந்த இளைஞர்களையும், தமிழ் இலக்கியத்தை ஒரு பிரசார சாதனமாகப் பயன்படுத்த முயன்ற இளைஞர்களையும் ஒரே மேடையில் சந்திக்கும் பல வாய்ப்புகளை ஏற்படுத்தியது என்று சொல்லவேண்டும்.
கவிஞர் நட்சத்திரன், சுந்தர சுகன், புத்தகன், கணையாழி உதவி ஆசிாியர் யுகபாரதி ஆகியோர் இன்று தீவிரமான இலக்கியத் தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பதில் ப்ரகாஷான் பங்கு முக்கியமானது.
தனது இலக்கிய ஆர்வம் காரணமாக, தான் மேற்கொண்ட பல்வேறு வணிக முயற்சிகளிலும் ப்ரகாஷ் வெற்றி பெறமுடியவில்லை. இருந்த போதிலும், மனச் சோர்வு கொள்ளாமல் கடைசி வரை பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். அவர் நடத்திய சாளரம் பத்திாிகையில், இன்று சமஸ்கிருதப் பண்டிதராக மட்டுமே அறியப்படும் முது பெரும் தமிழ் எழுத்தாளர் சுவாமிநாத ஆத்ரேயர் போன்றோாின் மிகச் சிறந்த படைப்புகள் வெளியாகியுள்ளன. ப்ரகாஷ் 1994-95ல் வெளியிட்ட ாகுயுக்தம்ா மறுக்கப்பட்ட படைப்புகளுக்கான ஒரு இதழாகத் திகழ்ந்ததோடு ஆபாசம் மற்றும் கலையுணர்வின் வெளிப்பாட்டை நுணுக்கமாகப் பிாித்துக் காட்டும் ஒரு லட்சுமணக் கோடாகவும் திகழ்ந்தது.
வயது வித்தியாசம் பாராமல் பழகும் இயல்பு, மாற்று இலக்கியத் தளங்களில் இயங்குபவர்களை எள்ளி நகையாடாமல் மதிக்கும் பண்பு, இதயத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் ஆகியவை அவரது பிற சாதனைகள்.
நான் அவரைக் கடைசியாக இரு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் சந்தித்தபோது இலக்கிய ஆர்வத்துடன் ஆன்மீகம், இயற்கையுடன் இணைந்த வாழ்வு போன்றவற்றில் அவரது நாட்டம் மிகுந்திருந்தது. இருந்தும் தீவிர நாத்திகனான என்னுடன் எப்போதும் போல அன்புடன் பழகியதும், சில நாட்கள் என்னுடனேயே தங்கியிருந்ததும், தொட்டாற் சுருங்கிகள் பலரை அன்றாட வாழ்வில் சந்தித்து வரும் எனக்கு இன்னும் அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது. அப்போதே ப்ரகாஷ் வாரம் ஒருநாள் உண்ணாவிரத்தை மேற்கொண்டிருந்தார். விரைவிலேயே வாரம் ஒரு நாள் மவுன விரதத்தை மேற்கொள்ளப் போவதாகவும் கூறியிருந்தார்.
சில மாதங்களிலேயே பணி நிமித்தமாகவும், தமிழகத்தில் நிலவி வரும் பழமைவாத பண்பாட்டு நெருக்கடிகளிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்கவும் அமொிக்காவுக்கு வந்த நான், 57 வயதே ஆன ப்ரகாஷை இனி சந்திக்கவே முடியாது என்று அறிந்த போது ஏற்பட்ட அதிர்ச்சி, தஞ்சை ப்ரகாஷ் தமிழ் சமூகத்துக்கு அளித்து வந்த பல்வேறு அதிர்ச்சி வைத்தியங்களிலிருந்து மிகவும் வேறுபட்டது.
- நைவேத்தியம்
- யுக சந்தி
- சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்
- பொன் தூண்டில்
- தஞ்சை ப்ரகாஷ் – விழுதுகளைத் தேடிய ஆலமரம்
- தெளிவு
- குவாண்டம் கணினிகள்
- வாழ்வின் மகத்துவம்