‘தங்களுக்குப் பிறகே நான் ‘

This entry is part [part not set] of 14 in the series 20010318_Issue

பாரி பூபாலன்


ட்ரெண்டன் வரை செல்லும் இரயில் வண்டி, ஏழாவது பிளாட்பாரத்திலுருந்து 18:33 மணிக்குக் கிளம்பும் என்ற அறிவிப்பைக் கேட்டதும் பார்த்ததும், மணி 18:28 வரை காத்திருந்த பிரயாணிகள் அனைவரும் தடதடவென்று அந்த பிளாட்பாரத்தை நோக்கி ஓடலானார்கள். அவர்கள் அனைவரும் உனக்கு முந்தி எனக்கு முந்தி என்று ஓடியபடி இரயிலுக்குள் நுழைந்து இடம் பிடிக்க முற்பட்டதை பார்க்கையில் அவனுக்குள் ஒரே ஆச்சரியம். அப்படி ஓடும்பொழுதுதான் என்ன ஒரு வேகம் ? எதிரே யாராவது வருகிறார்களா என்று கூட பார்க்காமல், யாரையும் இடித்துச் செல்கிறோமா, மிதித்துச் செல்கிறோமா என்ற சிந்தனை இல்லாமல், இரயிலைப் பிடித்து, இடத்தைப் பிடிப்பதே குறிக்கோளாய்க் கொண்டிருந்தது அவர்களது ஓட்டம். அப்படி ஓடும்போதுதான் என்னென்ன சச்சரவுகள் ? அப்படி ஒருவரையொருவர் இடித்து மிதித்துச் செல்கையில்தான் என்னென்ன வசவுகள் பறிமாற்றம் அடைகின்றன ?

அவனுக்குள் ஒரே ஆச்சரியம், இந்த ஊரில் போய் இப்படியான காட்சிகளைக் காண்பதற்கு. பல்லாயிரம் மைல் தாண்டி தான் இந்த ஊரில் வேலை பார்க்கும் நிலையை எண்ணிப் பார்த்தான். அப்படி இங்கு வந்து வேலை பார்க்கும் நிலைக்கு காரணங்களாய் அவன் எண்ணிக் கொண்டிருந்த பலவற்றில், சிலவற்றை நினைவு கூர்ந்தான்.

‘ஹே! ஓடுங்கடாய்!… ‘ என்று ஓடிய மாணவர் கும்பலுடன், தானும் ஓடினான். பஸ் ஸ்டாப்பை விட்டு காத தூரம் தள்ளி நின்ற 23Cயைப் பிடிப்பதற்கு. ஆனால் போய்ப் பிடிப்பதற்குள் ஓடி வருபவர்களை விரோதியாய் எண்ணியபடி, நான்கைந்து பிரயாணிகளை இறக்கி விட்டபின் சர்ரென்று விறைந்தது. சிலர் சத்தம் போட்டும், சிலர் மனதுக்குள்ளும் அந்த டிரைவரைத் திட்டியபடி பஸ் ஸ்டாப்பிற்குத் திரும்பி நடந்தனர். ‘சே! என்ன வாழ்க்கை இது!… ‘ என்றெண்ணி விதம்பி ஒதுங்கி நிற்காமல், இதுதான் வாழ்க்கையின் நடைமுறை என்று எண்ணியபடி, அடுத்து வரும் பேருந்துக்குக் காத்திருந்து, கால் வைக்க இடம் கிடைத்த பேருந்தில் ஏறிக்கொண்டு பயணித்தான், அலுவலகம் செல்ல.

ஒவ்வொரு நாளும் இதே மாதிரியான கதைதான். தினசரி வீட்டை விட்டு கிளம்பி, பஸ் பிடித்து அலுவலகம் செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அளவுக்கு மீறிய கூட்டத்தினை ஏற்றி வரும் பஸ்ஸில் தானும் தொற்றி இடம் பிடித்தபடி, ஒருவரை ஒருவர் இடித்து நெருக்கியபடி, துவைத்து மடிப்பு கலையாமல் அணிந்த சட்டை அந்த கும்பலில் உள்புகுந்து வெளி வருவதற்குள் கசங்கி அழுக்கு படிந்தபடி, அடுத்தவன் காலை மிதித்து அவனிடம் திட்டு வாங்கியபடி, தன் காலை பக்கத்தில் நின்றவன் மிதித்ததால் ஏற்பட்ட வலியால் கோபம் கொண்டு அவனைத் திட்டுவதற்காகத் திரும்பி அவனைப் பார்த்ததும் அவனது முகத்தையும், உடம்பையும், தோரணையையும் வைத்து ‘இவனிடம் நமக்கெதற்கு வம்பு ‘ என பயந்து ஒதுங்கியபடி, அப்படி ஏற்படும் வலியில் பையில் மற்றவர் கை படுவது தெரியாமல் இருக்கும் பணத்தை அடிக்கடி பறிகொடுத்தபடி, எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒரு டிரைவருக்கும் போலீசுக்கும் ஏற்பட்ட பிரச்னையினால் இந்த பஸ் ஓடாது என்று இந்த டிரைவர் நிறுத்தியதால் இறங்கி லொங்கு லொங்கு என்று நடந்து ஓடியபடி, மீட்டருக்கு மேல் கொடுக்க பிடிக்காத்தால் ஆட்டோவில் ஏறுவதே இல்லாதபடி, மற்றும் ஏகப்பட்ட காரணங்களால் ஒவ்வொரு நாளும் அலுவலகம் செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும். சில நாட்களில் வீடு திரும்பும் போது அவன் ஐந்தாறு மைல் நடந்தே வருவதுண்டு.

அலுவலகத்தில் அன்றைய வேலையின் நடுவே மூழ்கியிருந்த சமயத்தில் மேனேஜரின் அழைப்புக் கேட்டு அவரிடம் சென்றால் அங்கு ஆச்சரியமான செய்தி அவனுக்கு. அடுத்த வாரம் அமெரிக்கா சென்றாக வேண்டுமாம் வேலை விஷயமாக. அவசர அவசரமாய் பயணத்திற்கு ஆவணம் செய்து, விசா வாங்கி, விமானத்தில் பயணித்து, விஸ்கான்சினில் வந்து இறங்கியதும் கண்ட காட்சிகளால் அவனுக்குள் பெருத்த மலைப்பு. பெட்டிகளை எடுத்துக் கொண்டு, சுங்கம் மற்றும் குடியேற்பு சோதனைகள் முடிந்து வெளியே வந்தபின் அழைக்க வந்த நண்பருடன் அவருடைய காரில் பயணித்த போது அவனுக்குள் ஒரு சுகம்.

மறுநாள்முதல், தினசரி அலுவலகம் செல்ல ஆரம்பித்தான் அங்கு. செய்யும் வேலை முறைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவன் அலுவலகம் செல்லும் முறை வித்தியாசமாக இருந்தது. அது அவனுக்கு மகிழ்வாக இருந்தது. தினசரி காரில் செல்வதும், அடுத்தவர் மேல் ஒட்டாமலும் உரசாமலும் மிகப் பாங்காய் செல்வதும், சமயத்தில் பஸ்ஸில் பயணிக்க நேரிடும்போது சக பயணிகளின் மரியாதையும், ‘தங்களுக்கு பிறகே நான் ‘ என்று கூறியபடி ஒதுங்கி வழி விட்டு காத்திருக்கும் செயலும் அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. சில நாட்களில் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக பஸ்ஸில் பயணித்து, விவரம் தெரியாமல் பஸ் டிரைவரிடம் வழி கேட்கும் போது, அவர்கள் கூறும் விவரங்களும், அதனைக் கூறும் முறைகளும், அவர்களது பொறுமையும், மரியாதையும் அவனுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தன.

வேறெந்த காரணமும் அவனுக்குத் தேவையாக இல்லை, வாய்ப்புக் கிடைக்கும் போது இங்கேயே ஒரு நிரந்தர வேலையில் அமர்ந்து கொள்ள. அடுத்தவனை இடிக்காமல் அலுவலகம் செல்லும் வசதியே போதுமாய் இருந்தது. அப்படிச் செல்வதனால், இந்த ஊர் மனிதர்கள் பெரும் மாந்தர்களாய்த் தோன்றியது அவனுக்கு. அறிமுகமே இல்லாமல் இருந்தாலும், பஸ்ஸில் சக பிரயாணிகள் கூறிக்கொள்ளும் வணக்கமும், மற்றவர்களுக்குப் பொறுமையாய் வழி விட்டபின் வந்தமரும் பெருந்தன்மையும் அவனை மிகவும் கவர்ந்த அம்சமாயின. ‘ஏன் நம்ம ஊர்க்காரர்கள் இப்படி இருப்பதில்லை. இந்த ஊர்க்காரர்கள் மட்டும் எப்படி சக பிரயாணிகளிடம் இவ்வளவு மரியாதையுடனும் பொறுமையுடனும் நடந்து கொள்கிறார்கள் ? ‘ என்று அவன் எண்ணிப் பார்த்ததுண்டு.

இப்போது தோன்றுகிறது அவனுக்கு, ‘மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியே! அவர்கள் என்ன நிறமானாலும் சரி, என்ன இனமானாலும் சரி. ‘ என்று. நான் அடுத்தவருக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்பதும், ‘தங்களுக்கு அப்புறம் நான் ‘ என்று மரியாதை கொடுப்பதும், அவருக்குப் பின் அங்கே எனக்கு நிச்சயமாக இடம் இருக்கிறது என்று தெரிந்த காரணத்தினால்தான். ஏறும் வண்டிகளில் தேவைக்கு அதிகமாக இருக்கைகள் உள்ளன என நிச்சயமாகத் தெரிந்ததனால்தான். அப்படி ஒரு நிச்சயம் இல்லையெனில் அது அடையாறாக இருந்தாலும் சரி, அலபாமாவாக இருந்தாலும் சரி, இடம்பிடிக்க அடிதடிதான்.

Series Navigation

பாரி பூபாலன்

பாரி பூபாலன்