அசுரன்
“எப்பா… இது என்னதுப்பா..?”
“இது டோடோ மக்ளே!”.
“சொல்லுப்பா… இதுக்க பேரு என்னப்பா?”
“மக்கா… இதுக்க பேருதான் டோடோ”.
“நல்லாருக்குப்பா. பாவம்போல நிக்குவு பாத்தியா…”
“மக்ளே… நீ கொஞ்சம் கீழ எறங்கி நில்லு மக்கா. நான் இத எழுதிக்கிட்டு பிள்ளைய மடில இருத்துயேன்”.
0 0 0
எனது மடியிலிருந்தபடி கணினியில் இந்த அப்பாவிப் பறவையைப் பார்த்த எனது இரண்டரை வயது மகள் இலக்கியாவின் விசாரிப்புதான் இது.
அந்தப் பறவையின் வாழ்க்கையும்கூட அந்த இரு சொற்களுக்குள்ளேயே முடிந்துபோய்விட்டதுதான் சோகம்.
பழங்காலத்தில் மொரீசியஸ் தீவில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த இந்தப் பறவைகளுக்கு வில்லனானவர்களே மனிதர்கள்தான்.
1507 ஆண்டுவாக்கில் அங்கே முதலில் காலடி எடுத்து வைத்தார்கள் போர்ச்சுகீசிய கடலோடிகள். அதனையடுத்து அங்கே குடியேறினார்கள் டச்சுக்காரர்கள்.
பொதுவாக பறவைகளானாலும் சரி அல்லது விலங்குகளானாலும்சரி புதிய மனிதர்களைக் கண்டால் மிரட்சியுடன் பார்ப்பது அல்லது விலகி ஓடுவதுதான் வழக்கம். ஆனால் மொரீசியசில் இருந்த இந்த அப்பாவிப் பறவையோ பழக்கப்பட்ட கோழிக்குஞ்சு போல மனிதர்களையே சுற்றிசுற்றி வந்தது.
நாமாக இருந்திருந்தால் கொஞ்சம் இரைபோட்டு பழக்கப்படுத்தி கூடவே வைத்திருப்போம். ஆனால், அந்தத் தீவில் குடியேறியவர்களுக்கோ கொழுத்த புறா போன்று, சுமார் 20 கிலோ எடையுடன் இருந்த டோடோவைப் பார்த்ததும் நாவில் நீர் ஊறியிருக்கவேண்டும். தீக்கோழி போல விரைவாக ஓடும் என்று நம்பப்பபட்டபோதிலும்கூட அந்தப் பறவை இந்த புதிய ஆக்கிரமிப்பாளர்களான மனிதர்களைக் கண்டு ஓடவில்லை. அதுதான் அவற்றிற்கு வினையாயிற்று.
அந்த மனிதர்கள் அவற்றை வேட்டையாடித் தின்னத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாளும் கப்பலில் 50க்கும் மேற்பட்ட பெரிய பறவைகள் பிடித்துச் செல்லப்பட்டன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை டோடோக்களே.
இப்படி மனிதர்களின் பசிக்கு இரையானது மட்டுமின்றி, மனிதர்களால் அந்தத் தீவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நாய்கள், பூனைகள், எலிகள் போன்றவையும்கூட இவற்றை அழித்தன. தரையிலேயே இடப்படும் இந்தப் பறவைகளின் முட்டைகளும்கூட இவற்றுக்கும் கூடவே பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் உணவாயிற்று.
இன்று டோடோக்களைப் பற்றிய நினைவுகளும் புனைவுகளும் ஓவியங்களும்தான் மிச்சமாகிக்கிடக்கின்றன. இப்படித் தின்று தீர்க்கப்பட்ட அந்தப் பறவைகளின் வாழ்க்கை முறை பற்றிக்கூட நாம் தெளிவாக அறிய இயலாமற்போய்விட்டது.
1681 ஆம் ஆண்டு கடைசி டோடோவும் தன் உயிரை விட்டது.
விரைந்து அழிந்த உயிரினங்களின் பட்டியலில் டோடோக்களும் இடம்பெற்றுவிட்டன. மனிதர்களை சந்தித்த அடுத்த 100 ஆண்டுகளில் இந்தப் பறவை இனமே இல்லாது அழிந்துபோய்விட்டது என்பது எத்துணை பெரிய சோகம்.
இதனை.. எங்கோ சில மனிதர்களின் பசிக்கு எங்கோ சில பறவைகள் அழிக்கப்பட்டன என்பதான செய்திகளோடு ஒப்பிட இயலாது. இதுவொரு இனப்படுகொலை. அதோடு வெறுமனே ஒரு பறவை இனத்தின் மரணம் இது என்று மட்டுமே நாம் அஞ்சலிக் குறிப்பும் எழுதிவிட இயலாது. ஏனென்றால் ஒரு பறவையோ அல்லது வேறு எந்த உயிரினமோ அதனை நாம் தனியாக பிரித்தெடுக்க இயலாது. வாழும் சூழலின் ஒரு அங்கமே அது.
எடுத்துக்காட்டாக, டோடோவைப் பற்றியே பார்ப்போம்.
டோடோ அழிந்ததால் இல்லாமற்போன மற்றொரு இனமும் உள்ளது. அது கல்வாரியா என்ற மரம். மனித மண்டையோட்டைப்போல கடினமான உறையுடைய விதைகளை உடையது என்பதால் அந்த மரத்திற்கு இப்பெயர். இந்த மரத்தின் பழங்களை டோடோ தின்றுவிட்டு கொட்டைகளைத் துப்புவது வழக்கம். டோடோக்களின் வயிற்றினுள் புகுந்து வந்த கல்வாரியா விதைகள் மட்டுமே முளைக்கும்திறன் பெற்றவையாக இருக்கும்; மற்ற விதைகள் முளைக்காது. டோடோக்களின் வயிற்றில் சுரந்த ஏதோவொரு சுரப்பு அந்த விதைகளை பக்குவப்படுத்தி, ஓடுகளை இளக்கி பின்னர் முளைக்கச்செய்திருக்கிறது.
டோடோக்கள் அழிந்துபோனதால் உடனடி இழப்பைச் சந்தித்தவை இந்த மரங்களே.
1970 களில் மொரீசியசில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த மரவகையில் வெறும் 13 மட்டுமே உயிருடன் இருப்பதும், டோடோக்கள் மறைந்த இந்த 300 ஆண்டுகளில் இந்த மரங்கள் புதிதாக முளைக்கவில்லை என்பதும் பதிவாகியிருக்கிறது. இது டோடோக்களுக்கும் இந்த மரத்திற்குமிடையேயான தொடர்பைக் காட்டுகிறது.
ஆக, சூழலில் உள்ள எந்தவொரு உயிரும் அழியும்போது ஏதோவொரு உயிரினம்தானே அழிகிறது என்ற பொறுப்பற்றதனத்துடன் நாம் விலகிப்போகமுடியாது; கூடாது. நமது வாழ்வும் எதோவோர்வகையில் அந்த உயிருடனும் பின்னிப்பிணைந்தே இருக்கிறது. அற்பமானவை என்று உலகில் எதுவுமே இல்லை.
அண்மையில் மொரீசியசில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் அத்தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் பெருமளவிலான டோடோக்கள் இறந்து, புதைந்திருக்கும் இடமொன்று கண்டறியப்பட்டுள்ளது. அதனை ஆய்வுசெய்த விஞ்ஞானிகள் பெரும் புயல் அல்லது சூறாவளி, கடற்கோள் போன்ற இயற்கைப் பேரிடரால் தொடர்ந்து பல நாட்கள் நீர் தேங்கியிருந்ததால் அல்லது கடல் மட்டம் உயர்ந்து நின்றதால் ஏற்பட்ட சூழலில் அந்த டோடோக்கள் மொத்தமாக இறந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக இத்தகைய இயற்கைப் பேரிடர்களும் மனித நாவின் சுவையரும்புகளும் ஒரு பறவை இனத்தையும் அதனோடிணைந்ததொரு மர வகையையும் அழித்துள்ளது. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன.
டோடோ என்ற பெயருக்கு அப்பாவித்தனம், வஞ்சகரை எளிதில் நம்பி ஏமாறுவது, விரைவில் அழிந்துபோவது என பல்வேறு வகைகளில் பொருத்தம் கொள்ளலாம். ‘டோடோ போல சாகாதே!’ என்பது இன்றும் ஆங்கிலத்தில் புழக்கத்திலிருக்கும் ஒரு வழக்குச்சொல்.
இந்த உலக வளத்தையெல்லாம் அள்ளித்தின்று தீர்த்துவிடும் கோரப் பசியோடு, மரபீனி மாற்ற விதைகளோடு, நவீன அறிவியல் வலைகளோடு இன்றும் வருகிறார்கள் பன்னாட்டு மான்சாண்டோ வகையறா வேட்டைக்காரர்கள். நாமும் டோடோக்களைப்போல அழியப்போகிறோமா?.
( இது தாய்மண்ணே வணக்கம் இதழில் வெளியான கட்டுரை )
(asuran98@rediffmail.com)
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:2)
- டோடோ: ஒரு இரங்கல் குறிப்பு
- முதுமை வயது எல்லோருக்கும் வரும்
- மீண்டும் அலைமோதும் அண்ணா நினைவுகள்
- அலன்டே & பினொச்சே – சிலி
- கீதாஞ்சலி (90) மரணம் கதவைத் தட்டும் போது!
- தி ஜ ர வுக்கு உரியன செய்யத் தவறினோம்: அவரது குடும்பத்தாருக்கேனும் உதவுவோம்
- சாம வேதமும் திராவிட வேதமும்
- ஓர் கலைஇலக்கியவாதியின் மத துவேஷம்
- கடித இலக்கியம் – 22
- தெள்ளிய மொழியில் தெய்வீகத் தேடல்கள்: தமிழ் உபநிஷத நூல்கள் குறித்து
- கல்வெட்டாய்வு: இந்திரப் பிரேத்து
- பட்டறை தயாரித்த பரமார்த்த குரு
- நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை
- ஆணிவேர் திரைப்படம் வெளியீடு
- கடிதம்
- சாலைகள் வளைந்து செல்கின்றன- பாரசீக வளைகுடாவிலிருந்து அரபிக்கடலுக்கு (மனைவிக்கு ஓர் கடிதம்)
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, சூடாகும் கடல்நீர், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-10 [கடைசிக் கட்டுரை]
- வஞ்சித்த செர்னோபில்
- என் கவிதை
- பெரியபுராணம் — 104 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (74 – 112)
- தன் விரல்களை துண்டித்த சூபி
- எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது..- கமலா சுரையா
- தெளகீது பிராமணர்களின் கூர் மழுங்கிய வாள்களும் வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகளும்
- ஜிகாத்தும் தலித் விடுதலையும், முயற்சித்தலும் மூடி மறைத்தலும்
- கையறு காலம்
- மடியில் நெருப்பு – 3
- இரவில் கனவில் வானவில் – 1