டாவின்சி கோட்டினை முன் வைத்து – 1

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்



டாவின்சி கோடு திரைப்படம் மீதான தடையைக் கண்டித்து பலர் எழுதியிருக்கின்றனர். பராசக்திக்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி இப்படி ஒரு தடை விதித்திருப்பது முறையா என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. கலைஞர் இதற்கு முன்பும் முதல்வராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் தமிழ் நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு தமிழ் நாட்டில் தடையே இருந்ததில்லையா என்ற கேள்வியை எழுப்பிவிட்டு இப்போது தடை விதித்திருப்பதைப் பற்றி எழுதுவதே பொருத்தமாக இருக்கும். 1947க்குப் பின் தமிழ் நாட்டில் எத்தனை முறை எந்தெந்த நூல்கள், திரைப்படங்கள், நாடகங்கள், மற்றும் கலைப்படைப்புகள் எந்தெந்த காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ளன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
(ஹிந்துவில் ஸ்ரீவத்ஸன் எழுதிய கட்டுரை சில விபரங்களைத் தருகிறது, ஆனால் 1947க்குப் பின் தமிழ் நாட்டில் நாடகங்கள், திரைப்படங்கள், திரையிடல்கள், நூல்கள் போன்றவை என்னென்ன காரணங்களுக்காக எப்போதெல்லாம் தடை செய்யப்பட்டன என்ற தகவல்களை திரட்டுவது அவசியம்). ஏனெனில் இந்த தடை முதன்முறையாக இப்போது அமுல் செய்யப்படவில்லை, இதுவே கடைசி முறையாக இருக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

தமிழக அரசு தடையை காலனிய ஆட்சி பயன்படுத்திய முறையைக் கொண்டு அமுல் செய்துள்ளது என்கிறது அவுட்லுக்கில் வெளியான கட்டுரை.(1) இந்த தடை குறித்து எழுதும் போது நானறிந்தவரை தமிழில் ஒரே ஒரு கிராமத்திலே படம் குறித்த வழக்கு குறித்து யாரும் எழுதவில்லை. இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இந்த தடைக்கும் அந்த படம் வெளியாவது குறித்த சர்ச்சைக்கும் சில பொதுவான அம்சங்கள் உள்ளன. கருத்து சுதந்திரம், திரைப்படங்களுக்கு தடை குறித்து உச்சநீதி மன்றம் இவ்வழக்கில் கூறியுள்ளவை மிக முக்கியமானவை. இத்தீர்ப்பு சர்வதேச அளவில்சுட்டிக் காட்டப்படுகிறது. இவ்வழக்கு (S. RANGARAJAN ETC v. P. JAGJIVAN RAM [1989] INSC 106; [1989] 2 SCR 204; [1989] 2 SCC 574 (30 March 1989) குறித்த விபரத்தினையும், தீர்ப்பினையும் இங்கு காணலாம்.(2)

“Freedom of expression which is legitimate and constitutionally protected cannot be held to ransom by an intolerant group of people. The fundamental freedom under Article 19 (1) (a) can be reasonably restricted only fo rhte purposes mentioned in Arficle 19 (2) and the restrictions must be justified on the anvil of necessity and not the quicksand of concveneience or expediency. Open criticism of government policicies and operation is not a ground for restricting expression. We must practice tolerance to the views of others. Intolerance is as much dangerous to democracy as to the person himself”.

இந்த தீர்ப்பு சர்ச்சைக்குரிய கருத்து என்ற காரணத்தினை காட்டி ஒரு திரைப்படத்தினை தடைசெய்யக் கூடாது என்று குறிப்பிட்டுகிறது. மேலும் ஒரு திரைப்படத்தினை திரையிட்டால் சட்டஒழுங்கு சீர்கெடும் அல்லது பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தினை காட்டி தடை செய்வதை நிராகரிக்கிறது.

2002ல் குஜராத்தில் ஏற்பட்ட மதக்கலவரம் குறித்த ஆவணப் படத்தினை மத்தியதணிக்கைக் குழு திரையிட அனுமதி மறுத்த போது, நீதிமன்றம் அந்த ஆணையை ரத்து செய்தது.அத்தீர்ப்பும் சில மிக முக்கியமான கருத்துக்களை சுட்டிக்காட்டுகிறது(3). மேற்கூறிய இரு தீர்ப்புகளும்இப்போதைய சூழலில் மிகவும் உன்னிப்பாக படிக்கப்பட வேண்டியவை. பானாவாக இருந்தாலும் சரி,டாவின்சி கோடாக இருந்தாலும் சரி மிரட்டல்கள் மூலம் திரையிடுவதை தடை செய்வது, அரசு தடை செய்வது ஆகியவை கண்டிக்கப்பட வேண்டியவையே.

நானறிந்த வரை தமிழ் நாட்டில் டாவின்சி கோடு தடை செய்யப்பட்டதை இந்திய கம்யுனிஸ்ட் கட்சிகள், தி.க, பா.ம.க, உட்பட எந்த கட்சியும் (பாஜக தவிர) கண்டிக்கவில்லை; இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மண்டல் அதாவது மார்க்ஸிஸ்ட்)பானா குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது, ஆனால் டாவின்சி கோட் திரைப்படம் தடைசெய்யப்பட்டது குறித்து எதுவும் கூறவில்லை. ஆர்.எஸ்.எஸ் என்ன நிலைப்பாடு எடுத்திருக்கும்என்பதை ஊகிப்பது கடினமல்ல.

இது போன்ற விஷயங்களை மொண்ணையாக கருத்து சுதந்திரம் என்று விவாதிப்பதைத் தாண்டியசொல்லாடல் தமிழில் இல்லையோ என்று தோன்றுகிறது. அந்த கருத்து சுதந்திரம் என்பதன்தத்துவ, அரசியல் பரிமாணங்கள், மனித உரிமை பரிமாணங்கள் குறித்தெல்லாம் பேசாமல் மொண்ணையாக கருத்து சுதந்திரம், அரசு, தடை என்று பேசுவது பொருந்தாது. இத்தடையில்சிவில் சமூகத்தின் பங்கு என்ன, மத அடிப்படைவாதிகளின் பங்கு என்ன என்பதையும் பார்க்கவேண்டும். கிறித்துவ,இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் இதில் கை கோர்த்திருப்பதையும்,பாகிஸ்தானிலும் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளதையும் கவனிக்கவேண்டும். சிவில் சமூகத்தில் உள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சக்திகளுக்கும், அரசிற்கும்இடையே உள்ள தொடர்பை நாம் கவனிக்க வேண்டும். டென்மார்க் கேலிச்சித்திரங்கள் விவகாரத்தில் மத்திய அரசு எந்த நிலைபாடு எடுத்தது, இப்போது என்ன நிலைப்பாடு எடுத்துள்ளதுஎன்பதையும் ஆராய்ந்தால் சில ஒற்றுமைகள் புலப்படும்.

மத சார்பற்ற என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகள், இயக்கங்கள் கருத்து சுதந்திரம் என்று வரும்போது மதரீதியாக சிறுபான்மையினராக உள்ள சமூகங்களில் உள்ள சில சக்திகளுடன் கைகோர்த்துக் கொள்வது இது முதன் முறையல்ல. கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை.தஸ்லீம நஸ்றீனின் நாவலை தடை செய்தது மேற்கு வங்க அரசு, கூறப்பட்ட காரணத்தினை ஊகிப்பது கடினமல்ல. பின்னர் உயர் நீதி மன்றம் அத்தடையை நீக்கியது. சிவாஜி குறித்த ஒரு நூலையும், பின்னர் ஒரு மொழி பெயர்ப்பு நூலையும்தடை செய்த போது ஆளும் கட்சி, எதிர் கட்சி என்ற பேதம் என்றி காங்கிரஸ், பாஜக,சிவசேனா ஒரே நிலைப்பாட்டினை எடுத்தன. சில விஷயங்கள் பேசப்படக் கூடாதவை என்றமனோபாவத்தின் வெளிப்பாடே இது. இப்படி இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் சில விஷயங்கள்,சில நபர்கள் (இப்போது சில திட்டங்கள்) எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவை என்ற போக்கு பரவி வருகிறது. இந்த திரைப்படத்தின் மீதான தடை அதன் விளைவுதான்.

அடையாள அரசியல் என்பது முக்கியத்துவம் பெறும் போது சில அடையாளங்களும் அதன்மூலம் முன்பிருந்ததை விட அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த அடையாளங்களைவிமர்சிப்பது அல்லது கேள்விக்குட்படுத்தும் போது அது அந்த அடையாள அரசியலையேஎதிர்ப்பதாக அதை திசை திருப்புவது எளிதாகிறது. சிவாஜி , ஒரு மாவீரன் அல்லது மன்னன் என்ற புரிதலைத் தாண்டி மராட்டியம் அல்லது மராட்டியர் என்பதன் அடையாளமாக மாறும்போது அந்த அடையாளம் குறித்த மாற்றுப் பார்வைகள்/புரிதல்கள் சர்ச்சைக்குள்ளானாலும்,அதற்கும் அப்பாற்பட்டு அவற்றை தடை செய்ய வேண்டும், அதுவே அந்த இன உணர்வு அல்லதுஅடையாளத்திற்கு காட்டப்பட வேண்டிய மரியாதை என்றாகிவிடுகிறது.

எனவே இங்கு ஒருகுறுகிய கண்ணோட்டத்தில் வரலாறும், ஆளுமைகளும் முன்னிறுத்தப்படுகிறார்கள்.அது போன்ற சந்தரப்பங்களில் உண்மை, புனைவு, கற்பனை எதுவானால் என்ன, அது இந்த சட்டகத்திற்கு அப்பாற்பட்டு இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும், தடை செய்ய வேண்டும்என்ற எண்ணம் வலியுறுத்தப்படுகிறது. இங்கு பெருங்கதையாடல்கள் மோசம், அவற்றிற்கு மாறாக சிறு கதையாடல்கள், வெவ்வேறு இனக்குழுவினரின் கதையாடல்கள் முன்னிறுத்தப்படவேண்டும் என்ற வாதத்தின் பலவீனங்கள் தெளிவாகின்றன. கட்டமைக்கப்படும் எந்த அடையாளமும் விமர்சனமின்றி முன்னிறுத்தப்படும் போது அல்லது விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக கருதப்படும் போது , வெளியிலிருந்து/உள்ளிருந்து வரும் மாற்றுக் குரல்கள், கதையாடல்கள்அடையாளத்தினை, அதை முன்னிறுத்திச் செய்யப்படும் அரசியலை ஏற்கும் வரை அனுமதிக்கப்படும் என்றாகிறது.

தொடரும்

(1) http://www.outlookindia.com/scriptur11w2.asp?act=sign&url=/full.asp?fodname=20060612&fname=Punjab+DA+Vinci+%28F%29&sid=2
(2) http://www.austlii.edu.au/~andrew/CommonLII/INSC/1989/106.html
(3) http://www.sabrang.com/news/2004/03mar04.htm

http://ravisrinivas.blogspot.com
http://notesnowhere.blogspot.com

Series Navigation