டாலியின் வழிந்தோடும் வெளிபோல்… (Holographic Universe)

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

இரா. நாகேஸ்வரன்


டாலியின் வழிந்தோடும் வெளிபோல்… (Holographic Universe)
——————————

நேர-இடப் புள்ளிகளில்,
குறைதூரக் காலங்களில்
நிறைவுறா நினைவுகளும்
நடந்தப் புள்ளிகளாய் அல்லாது
தத்திச் சென்றத் தடங்களாக!

தடங்களின் வரலாறு தனித்தனியானபோதும்,
தொக்கித் தெரிவனத்
தெளிவிலா இணைப்புகள் – ஆயினும்
நடந்துக் கடந்தனவல்ல அவை!

நினைவுகளும் நடப்புகளும்
நீரில் நனையாது
நன்னெருப்பில் பற்றாது
நினைக்க்வொண்ணாத் தூரத்தே
ஆவியாகிப் போகிறதோ?!

உண்டசோறு செரிக்காமல்,
உலகநிந்தனைகளோடு வரும்
உபதேச உபத்திரவங்களாயினும்;
‘நின் வாழ்வு நின் கையில்’
‘மண்- மன் வாழ்வும் நின் கையில்’- என
மனமாற்ற முழக்க்ங்களாயினும்;
யாளி நினைவேயாயினும்
யாழிழை அதிர்வேயாயினும்
யாதொன்றாயினும், யாதொருவராயினும்
ஆவியாகிப்போன நினைவுகளே!!

நிகழ்வுகளின் நினைவுகள்
முட்டிக்கொண்ட நிகழ்வுகள்
மணித்துளிக்குள், ஒரு புவிச்சுற்றே போல்!!
மருட்டும் பொழுதுகளைப் போல்- அவற்றுக்கும்
நிகழ்தகவுகளும் தகவலறிவதில்லை.

-இரா. நாகேஸ்வரன்.
eswar.quanta@gmail.com

Series Navigation

இரா. நாகேஸ்வரன்

இரா. நாகேஸ்வரன்