மலர் மன்னன்
சென்னைக்கு வந்திருந்த சுவாமி விவேகானந்தர், மரினா கடற்கரை எதிரே கட்டிடக் கலைநயம் மிக்க ஒரு விசாலமான மாளிகையில் சில நாட்கள் தங்கியிருக்க நேர்ந்து, அதன் காரணமாகவே “விவேகானந்தர் இல்லம்’ என்று பெயர் பெற்றுவிட்ட கட்டிடம் தனது வரலாற்று முக்கியத்துவத்தை இழந்து, விரைவில் தனது சுவடே இல்லாமல்போய் விடக்கூடிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்கிற அதிர்ச்சியூட்டும் செய்தி வெளிப்பட்டுள்ள தருணத்தில், ஏறத் தாழ நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவமொன்று நினைவுக்கு வருகிறது.
கடந்த நூற்றாண்டுக்கும் முந்தைய நூற்றாண்டின் இறுதி வாக்கில், சுவாமி விவேகானந்தர் பரிவிராஜகராக, பாரத தேச தரிசனம் செய்யப் புறப்பட்டு, கன்னியா குமரி முனைக்கு வந்தபோது , குறுகலாய் அங்கிருந்து தொடங்கி, வடதிசை நோக்கி விரிந்து செல்லும் தமது தாயகத்தின் அற்புதத் தோற்றத்தினை மனக் கண்ணால் கண்டு, பரவச நிலையடைந்தார். ஒரு புதிய உத்வேகம் பெற்றவராய் நீரலைகளை நீந்திக் கடந்து, கடல் நடுவே நின்ற பெரும் பாறையொன்றின் மீதமர்ந்து தீவிர தியானத்தில் சுற்றுப்புறச் சூழலின் பிரக்ஞையின்றி மூழ்கிக் கிடந்தார். அந்த நெடிய தியானத்தின் பயனாக, வருங்காலத்தில் தம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கடமை இன்னதென்ற உள்ளொளி பிறந்தது. அவரது பிற்கால அருஞ் சாதனைகள் எல்லாவற்றுக்கும் அந்தக் குமரி முனைப் பாறை தியானமே ஊற்றுக் கண்ணாக அமைந்தது.
நினைவாலயம் தோன்றக் காரணம்
குமரி முனைப் பாறையின் முக்கியத்துவத்தை மறைத்து, பாரத கலாசாரத்திற்குப் பொருந்தாத வேறொன்றின் நினைவாக அதனை மாற்றும் முயற்சி நடந்தபோது, அந்தப் பாறையின் புனிதம் காப்பதில் ஈடுபாடு மிக்கவர்கள் விழித்துக் கொண்டனர். ஏதேனும் ஒரு மாற்று ஏற்பாட்டை மேற்கொண்டாலன்றி குமரி முனைப் பாறைக்கும், பாரதத்தின் மகத்தான சீர்திருத்தவாதி விவேகானந்தருக்கும் உள்ள பிணைப்பினைப் பாதுகாக்க இயலாது என உணர்ந்தனர். அதன் விளைவாக எழுந்ததுதான் குமரி முனையில் சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையின் மீது அவருக்கு நினைவாலயம் அமைக்கும் திட்டம்.
விவேகானந்தர் நூற்றாண்டையொட்டி குமரி முனையில் அவருக்கு நினைவாலயம் எழுப்புவதோடு, அவர் இடையறாது வலியுறுத்திய சமூக நலத் தொண்டை முறைப்படித் தொடரவும் திட்டமிடப்பட்டது. இப்படித்தான் அகில பாரத அளவில் சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழாக் குழுவும் விவேகானந்த கேந்திரம் என்ற தொண்டு நிறுவன அமைப்பும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளின் தொடக்கத்தில் தோற்றுவிக்கப்பட்டன. இவ்விரு பணிகளுக்கும் திட்டம் வகுத்துக் கொடுத்த குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர் அவர்கள், அவற்றைச் சீராக நிறைவேற்றும் பொறுப்பைச் செயலாற்றல் மிக்க ஏகநாத் ரானடே அவர்களிடம் ஒப்படைத்தார்.
குமரி முனைப் பாறையில் விவேகானந்தர் நினைவாலயம் நிறுவும் பணியில் ஏகநாத் ரானடே முனைந்தபோது, கன்னியாகுமரி மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க ஒரு தரப்பினர் அதைத் தடுக்கும் முயற்சியை முழு மூச்சுடன் மேற்கொண்டனர். அதன் காரணமாக ஏக நாத் ரானடே தமது முதல் கட்டப் பணியாக தமிழ் நாடு அரசின் அனுமதியைக் கோரியபோது அதற்கு அனுமதி அளிக்க அரசு மறுத்துவிட்டது.
பாரதத்தின் கலாசாரம், தத்துவ நுட்பம், ஆன்மிக ஆழம், சமுதாய நலன் ஆகியவற்றில் சுவாமி விவேகானந்தரின் மாபெரும் பங்களிப்பை விவரித்து, குமரி முனைப் பாறையில் அவருக்கு நினைவாலயம் அமையும் பொருத்தத்தையும் எடுத்துக் கூறி, பாரத அரசுக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களின் சார்பில் ஒரு விண்ணப்பம் அளிக்கலாம் என ஆலோசனை கூறினார், கோல்வல்கர் அவர்கள்.
ஏகநாத் ரானடே உடனே விண்ணப்பம் ஒன்றைத் தயாரித்து தில்லிக்குச் சென்றார். அங்கு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறி நினைவாலயம் அமைக்க அனுமதி கோரும் விண்ணப்பத்தில் அவர்கள் கையொப்பமிட வேண்டினார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், அவர்களில் பலர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் உடனே கையொப்பமிட்டனர்.
மாநிலங்களவையில் அண்ணா
அந்தக் கால கட்டத்தில் அண்ணா அவர்கள் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்து, தமது பேச்சாற்றலாலும், பழகும் பண்பினாலும் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த உறுப்பினர்களையெல்லாம் தம் அபிமானிகளாக மாற்றிவிட்டிருந்தார். அச்சமயம் அண்ணாவோடுகூட மாநிலங்களவையில் உறுப்பினர்களாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்கத்து பூபேஷ் குப்தாவும், ஜனசங்கத்தின் உறுப்பினராக இருந்த , முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் அண்ணாவினால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரோடு ஆழ்ந்த நட்பு பாராட்டி வந்தார்கள். பூபேஷ் குப்தா, அடல் பிஹாரி வாஜ்பாய் என்கிற எதிரெதிர் துருவங்கள் தம்மைச் சுற்றிவரச் செய்திருந்தார், அண்ணா!
ஏகநாத் ரானடே விண்ணப்பத்தில் கையொப்பம் பெற வந்தபொழுது, அண்ணாவிடமும் கையொப்பம் பெறுமாறு பூபேஷ் குப்தா ஆலோசனை கூறினார். அண்ணாவின் திராவிட இயக்கப் பாரம்பரியம் பற்றி அறிந்திருந்த ரானடே, கையொப்பம் கேட்டு அவரிடம் செல்லத் தயங்கினார். அண்ணா விவரம் அறிந்தவர், கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் காண அவர் தவற மாட்டார். நம்பிக்கையுடன் செல்லுங்கள், அண்ணா நிச்சயமாக விண்ணப்பத்தில் கையொப்பமிடுவார் என்று ஊக்குவித்தார், பூபேஷ் குப்தா. வாஜ்பாயிடம் இது பற்றி ரானடே கருத்துக் கேட்டபோது, அவரும் அண்ணா கையொப்பமிடத் தயங்க மாட்டார் என்று
உறுதியளித்ததோடு, தாமே அண்ணாவிடம் அழைத்துச் சென்று அறிமுகமும் செய்வித்தார்.
ரானடே தாம் வந்த காரணத்தைத் தெரிவித்தபோது, அண்ணா அவர்கள் ஒரு கணம் கூடத் தாமதியாமல் விண்ணப்பத்தில் கையொப்பமிட்டார்கள். “விவேகானந்தர் ஒரு தலை சிறந்த சமூக சீர்திருத்தவாதி. நம் நாட்டின் கலாசாரப் பெருமையினை அகில உலகமும் அறியச் செய்தவர். வறியவர் மிகுந்த நமது நாட்டில் அவர்களின் நலனுக்காக வெளி நாட்டவர் பலரிடமிருந்தும் நிதியுதவி திரட்டிக் கொண்டு வந்து சேர்த்த முன்னோடி. தமிழர்கள்தான் அவரை முதலில் அடையாளம் கண்டு அவர் முதலடி எடுத்துவைக்கத் துணை நின்றார்கள். தமிழ் நாட்டில் அவர் தமது எதிர்காலப் பணிகளுக்கான ஊக்கம் பெறக் காரணமாக இருந்த குமரி முனைப் பாறையில் அவருக்கு நினைவாலயம் அமைப்பது மிகவும் பொருத்தம். விவேகானந்தருக்குத் தமிழகத்தில் நினைவாலயம் அமைவது தமிழர்களுக்கே பெருமை தரும் விஷயம்’ என்று சொன்ன அண்ணா அவர்கள், மக்களைவையிலும் மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்த தமது தம்பிமார்கள் அனைவரையும் விண்ணப்பத்தில் கையொப்பமிடச் செய்தார்கள். மேலும் , ” இதற்காக இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்’ என்று அண்ணா அவர்கள் கேட்டபோது, ரானடே மனம் நெகிழ்ந்து விட்டார். நூற்றாண்டு விழா வரவேற்புக் குழுவில் அண்ணாவும் ஓர் உறுப்பினராக இருந்து
கௌரவிக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
“”இன்று தமிழ் நாட்டின் சட்ட மன்றத்தில் அங்கீகாரம் பெற்ற எதிர்க் கட்சித் தலைவராக இருப்பதே எங்கள் கட்சியைச் சேர்ந்த இரா. நெடுஞ்செழியன்தான். அவரை உறுப்பினராகச் சேரச் சொல்கிறேன். அப்போது உங்கள் முயற்சிக்கு எங்கள் கட்சியின் அதிகாரப் பூர்வமான ஆதரவு இருப்பது தெளிவாகத் தெரியும்” என்று அண்ணா அவர்கள் சொல்லி, அவ்வாறே வரவேற்புக் குழுவில் நெடுஞ்செழியன் இடம் பெறச் செய்தார்கள். இப்படிப் பல முயற்சிகள் எடுத்த பிறகுதான் குமரி முனையில் விவேகானந்தர் நினைவாலயம் அமைவது சாத்தியமாயிற்று. இதில் அண்ணாவுக்கும் ஒரு பங்கு இருந்தது.
முதல்வர் கருணாநிதியின் முந்தைய ஆதரவு
தற்சமயம் தமிழக முதலமைச்சராக உள்ள மு. கருணாநிதி அவர்கள் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல் முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்தபோது, குமரி முனையில் அமைந்த விவேகானந்தர் நினைவாலயத்தினுள் ஷிகாகோவில் நடைபெற்ற அனைத்து சமய மாநாட்டில் விவேகானந்தர் கலந்துகொள்ள வழிசெய்த தமிழரான ராமநாதபுரம் அரசரின் சிலையையும் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால் முதல்வர் கருணாநிதி , “இது விவேகானந்தருக்கான நினைவாலயம்; இங்கு வேறு எவர் சிலையும் இடம் பெறுவது பொருத்தமாக இருக்காது. ராமநாதபுரம் அரசரின் நினைவாக வேறிடத்தில் சிலை வைப்பதுதான் சரியாக இருக்கும்’ என்று மிகுந்த பொருட் செறிவுடன் கூறிவிட்டார்.
இந்தப் பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் நினைத்துப் பார்க்கும் எவருக்கும் இன்று விவேகானந்தர் தங்கிச் சென்று பெருமைப் படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க இல்லம் அவரது அருங்காட்சியகமாக உணர்வுபூர்வமான ஈடுபாடு உள்ள ராமகிருஷ்ண மடத்தாரின் பொறுப்பில் நிரந்தரமாக நீடிப்பதுதான் பொருத்தமேயன்றி வேறு பயன்பாட்டிற்கான புதிய கட்டிடமாக அது உருமாற்றம் பெற்றுவிடலாகாது என்றுதான் எண்ணத் தோன்றும்.
- கன்று
- புறநானூறு உ.வே.சா முதற்பதிப்பு உழைப்பும் ஆராய்ச்சியும்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூகோளத்தில் பேரளவு நீர் வெள்ளம் எப்படி உண்டானது ?(கட்டுரை: 26)
- சிகரத்தில் நிற்கும் ஆளுமை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 16 பெண்ணாய் ஏன் பிறக்க வேண்டும் ?
- தட்டிக் கேட்க ஆளில்லாதவர்கள்
- தாகூரின் கீதங்கள் – 27 புல்லாங்குழலை ஏன் கொடுத்தாய் ?
- திண்ணை
- சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு ஏப்ரல் 30 அன்று வெளியீடு
- தமிழில் உலகளாவிய தகுதித் தேர்வு – அவசியம்
- கடற்கரை
- மலேசிய-கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்தின் புதிய செயலவை(2008/09)
- உலகப் புத்தக நாள் (அ) நான் ஏன் புத்தகம் வாங்குவதை குறைத்துவிட்டேன்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- எனது (முழுமையற்ற) பதில் !
- திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள் குறித்து
- Tamilnadu Thiraippada Iyakkam
- தினமணி’, ‘திண்ணை’யில் வந்த கட்டுரை பற்றிய இருவரின் எழுத்துக்கள் பற்றி …!
- பாரதி தமிழ்ச் சங்கம் – புத்தாண்டு திருவிழா
- ம அருணாதேவி கவிதைகள்
- திருமண அழைப்பு
- வீடு வாடகைக்கு
- திருப்பலி:கருணாரட்ணம் அடிகளார்
- சு.மு.அகமது கவிதைகள்
- ஒன்பது கவிதைகள்
- நினைவுகளின் தடத்தில் – (8)
- தேசம் என்ன செய்யும்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்: 2
- “ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே” – குமரி முனை விவேகானந்தர் நினைவாலயம்: அண்ணா அளித்த ஆதரவு
- Last Kilo byte 12 : (தொலைபேசி} மெளனம் பேசியது
- புறநகர் காண்டா வாளிகளின் கதைகள்
- பந்தல்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 8
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 4 (சுருக்கப் பட்டது)