ஜோனதன் கிர்ஷ் எழுதிய ‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் ‘

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

டான் லாட்டின்


(The History of the War Between Monotheism and Polytheism

By Jonathan Kirsch

VIKING COMPASS; 336 PAGES; $25.95 )

ஒருதெய்வ வழிபாட்டுக்கும் பல தெய்வ வழிபாட்டுக்கும் இடையேயான போரின் வரலாறு

ஜோனதன் கிர்ச்

வைக்கிங் காம்பஸ், 336 பக்கங்கள், விலை $25.95

(பலதெய்வ வழிபாட்டுக்கும் ஒரு தெய்வ வழிபாட்டுக்கும் இடையேயான ரத்தக்களறியை ஒரு வரலாற்றாசிரியர் ஆராய்கிறார்.

டான் லாட்டின், சான்பிரான்ஸிஸ்கோ குரோனிகிள் எழுத்தாளர், ஞாயிறு மார்ச் 21, 2004 இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்விக்கிறார்.)

சான்பிரான்ஸிஸ்கோ குரொனிகிள் பத்திரிக்கையில் மதம் சார்ந்த விஷயங்களை எழுதுபவனாக நான் இருக்கின்றமையால், மெல் கிப்ஸனின் ‘பாஷன் ஆஃப் கிரைஸ்ட் ‘ படத்தை மூன்று நாட்களுக்குள் இரண்டுமுறை பார்க்கவேண்டி இருந்தது. இந்த வேலைக்கு நடுவே நான் ‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம்: ஒரு தெய்வ வழிபாட்டுக்கும் பல தெய்வ வழிபாட்டுக்கும் இடையேயான போரின் வரலாறு ‘God Against the Gods: The History of the War Between Monotheism and Polytheism. ‘ என்ற புத்தகத்தையும் படித்துக்கொண்டிருந்தேன்.

மெல் கிப்ஸனின் ரத்தக்களறியான திரைப்படத்துக்கும் ஜோனதன் கிர்ஷின் புதிய புத்தகத்துக்கும் இடையே சில ஒற்றுமைகள் இருக்கின்றன.

முதலாவது, இரண்டு படைப்புக்களையும் பார்ப்பவர்கள், எவ்வாறு முடியும் என்று கவலைப்படத் தேவையில்லை. நாம் எல்லோருக்கும் ஏசுவுக்கு என்ன நடந்தது என்று தெரியும் (அல்லது தெரியும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்). இன்றும், பல தெய்வ வழிப்பாட்டாளர்களுக்கும் ஒரு தெய்வ வழிப்பாட்டாளர்களான யூத-கிரிஸ்துவ-இஸ்லாமிய பாரம்பரியத்தினருக்கும் இடையேயான போரில் ஒரு தெய்வ வழிபாட்டாளர்களே வெற்றி பெற்றுவருகிறார்கள்.

மெல் கிப்ஸனின் ‘பாஷன் ‘ படத்தில் ஏசு ஏராளமான ரத்தத்தை, அவரது ஆரம்பக்கால சீடர்களும் சிந்தியதுபோலவே, சிந்துகிறார். ஆனால், கிர்ஷின் புத்தகம், கிரிஸ்துவத் தெய்வத்துக்கு எதிராக இருப்பதாகக் கருதப்பட்டவர்களின் ரத்தம் எவ்வளவு ஆறாக ஓடியிருக்கிறது என்பதையும், வெகு விரைவிலேயே எப்படி ஆரம்பகால ரத்தம் சிந்துதலுக்கு பதிலுக்குப் பதிலும் அதற்கு மேலும் பல தெய்வ வழிபாட்டாளர்களின் ரத்தம் சிந்தப்பட்டது என்பதையும் ஞாபகப்படுத்துகிறார்.

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கிரிஸ்து சிலுவையில் அறையப்பட்ட கொடூரம் தெரிந்திருக்கும். ஆனால் பலதெய்வ வழிபாட்டாளர்கள் (pagans) மீது நடத்தப்பட்ட கொடூரம் தெரிந்திருக்குமா ? அழகும் அறிவும் பொருந்திய ஹைய்பாத்தியாவின் கொடூரமான கொலையை எவ்வளவுபேர் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள் ?

வருடம் 415. ரோம சாம்ராஜ்யத்தின் அரசாங்க மதமாக கிரிஸ்துவ மதம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹைய்பாத்தியாவின் Hypatia வின் பாவங்கள் அவள் பலதெய்வ வழிபாட்டை ஆதரிப்பவளாக இருந்தது மட்டுமல்ல, அவள் கணிதம் வானவியல் தத்துவம் ஆகியவற்றில் உயர்ந்த ஞானம் கொண்டவளாக இருந்தது மட்டுமல்ல, அவள் பெண்ணாக இருந்ததும் கூட.

அலெக்ஸாண்டிரியா ஆர்ச் பிஷப் சிரில் இவளது தைரியம் கண்டு கோபப்பட்டார். அவர் இந்த கெட்ட பெண்ணை தண்டிக்கவென்று ஒரு மதவெறிக்கும்பலை அனுப்பினார். ஹைய்பாத்தியா தன் மாணவர்களைச் சந்திக்கச் சென்றுகொண்டிருக்கும்போது அவள் கடத்தப்பட்டு உடைகள் களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு உடைந்த மண்பாண்டங்களைக் கொண்டு கொல்லப்பட்டாள். அவளது உடல்பகுதிகள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டன. அவை பொதுமக்களுக்கு முன்னால் காட்சியாக வைக்கப்பட்டு அவை சுட்டுப் பொசுக்கப்பட்டன.

முதலாம் தியோடோசியஸ் என்ற முதல் ரோமானிய அரசன் கிரிஸ்துவ மதத்தை வெறித்தனத்தோடு தழுவியவர். ஆர்ச்பிஷப் சிரில் பலதெய்வ வழிபாட்டை ஆதரித்த அறிவுஜீவிகளைக் கொல்ல வழி வகுத்தவர். ஆரம்பகால பாகன்/கிரிஸ்துவ சண்டைகளை தெளிவான முறையில் எழுதியிருக்கும் கிர்sh அவர்கள் குறிப்பிடுவதுபோல, கான்ஸ்டன்டைன் வேண்டுமென்றால் கிரிஸ்துவ மதத்துக்கு அரசாங்க மதம் என்ற தகுதியை அளித்திருக்கலாம், ஆனால் அவர் தியோடோஸியஸ் மாதிரி கொடுங்கோலர் அல்லர்.

கான்ஸ்டண்டைன் அவர்கள் போர்க்களத்தில் (அக்டோபர் 28, 312 ல்) கிரிஸ்துவமதத்தைத் தழுவியது வேண்டுமென்றால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் அவர் பாகன் மதத்துக்கும் கிரிஸ்துவ மதத்துக்கும் இடையே நல்லுறவைப் பேணவே அதிகம் விரும்பினார். சாவதற்கு சற்று மணி நேரங்களுக்கு முன்னரே அவர் கிருஸ்துவ மதத்தில் ஞானஸ்நானம் செய்விக்கப் பட்டு, அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

313இல் கான்ஸ்டன்டைன் அவர்கள் மிலானில் வெளியிட்ட அறிக்கை எல்லா ரோம் குடிமக்களும் ‘கிரிஸ்துவ மதத்தையோ அல்லது வேறெந்த மதத்தையோ அவரவர் விரும்பியபடி பின்பற்ற வாய்ப்பு உண்டு ‘ என்று அறிவிக்கிறது.

கான்ஸ்டண்டைனின் வழி வந்தோர்களில் பேரரசர் ஜூலியன், தீவிரமான பலதெய்வ வழிபாட்டாளர். அவர் பழைய கிரேக்க – ரோம மதத்திற்கு தனது குறுகிய ஆட்சிக்காலத்தில் (360-363)புத்துணர்வு ஊட்ட முனைந்தார். ஆனால், ஸ்பெயினில் 346இல் பிறந்து 379ல் அரசராக ஆன தீவிரமான கிரிஸ்துவரான தியோடோஸியஸ் அவர்களால் இந்தப் புத்துயிர்ப்பு கொடூரமாக நசுக்கப்பட்டது.

380இல் அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘நம் அரசின் கருணையின் கீழ் இருக்கும் அனைவரும் புனித பீட்டரால் ரோமானியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட மதத்தையே பின்பற்ற வேண்டும். இந்தக் கட்டளையின் கீழ் எல்லாரும் தங்களை கத்தோலிக்க கிரிஸ்துவ மதத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களை நாம் புத்திசுவாதீனம் இல்லாதவர்களாகவும் பைத்தியக்காரர்களாகவும் அறிவிக்கிறோம். அவர்கள் முதலில் கடவுளின் பழிவாங்கும் கோபத்தால் துன்புறுத்தப்படுவார்கள், இரண்டாவதாக நாமே அவர்களை துன்புறுத்துவோம் ‘ என்று அறிவித்தார்.

‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் ‘ புத்தகம், ‘பாஷன் ஆஃப் கிரைஸ்ட் ‘ படத்தை ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுப் பின்னணியில் பார்க்கவைக்கிறது. பழங்கால ரோமாபுரியில் பலதெய்வ வழிபாட்டாளர்களும், ஒரு தெய்வ வழிபாட்டாளர்களும் ஒருவரை ஒருவர் கொடுமைப்படுத்தியதை சமமான நோக்கில் எழுதியிருக்கும் இந்தப்புத்தகம் இன்றைய உலகத்தில் மதசகிப்புத்தன்மை எவ்வளவு முக்கியம் என்பதை சரியான நேரத்தில் ஞாபகப்படுத்தும் புத்தகம்.

ஏசு காலத்திய யூதர்களே ஏசுவின் கொலைக்குக் காரணம் என்றும், ரோமானியர்கள் காரணமல்ல என்றும் கிரிஸ்துவின் பாஷன் நாடகங்கள் (Passion Plays) பல நூற்றாண்டுகளாக திரும்பித்திரும்பி எதிரொலித்து உறுதி செய்யப்பட்டு வந்த கருத்துருவங்கள் இன்று கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. மெல் கிப்ஸனின் பாஷன் திரைப்படம், ரோமானியர்கள் சிலுவை ஏற்றுவது உண்மையில் எவ்வளவு கொடுமையானது என்பதனை (முந்தைய திரைப்படங்களைப் போலன்றி) காட்டுவதன் மூலம் ஓரளவுக்கு உண்மையை சொல்லியிருக்கிறது.

‘ஒரு மனிதன் சவுக்கால் அடித்துக் கிழிக்கபட்டு, அவனது எலும்புகள் குண்டாந்தடிகளால் நொறுக்கப்பட்டு அவனது கண்கள் கொக்கிகளால் தோண்டி எடுக்கப்படும் ‘ என்று கிர்ஷ் எழுதுகிறார். ‘அவன் தனது உடலின் தோல் பிய்ந்து ஏறத்தாழ உயிருடன் தோலுறிக்கப்படுவான். அல்லது இரும்பு சீப்புகளாலும் கடல் சிப்பிகளின் கூர்முனைகளாலும் அவனது தோல் சுரண்டப்படும் ‘ பாஸன் ஆஃப் கிரைஸ்ட் படத்தைப் பார்க்கும் அனைவரும் எவ்வாறு ரத்தக்களறியான கொடூரம் திரையில் வீசியெறியப்படுகிறது என்பதை கண்டிருக்கலாம். ஆனால், ‘கொடுமைக்கான பல கருவிகள் புனித விசாரணையின்போது மிகவும் ஆராய்ச்சி செய்யப்பட்டு மிகவும் கொடூரமாக மாற்றி புனித தேவாலயங்களில் உபயோகப்படுத்தப்பட்டன ‘ என்று கிர்ஷ் அவர்களே நமக்கு ஞாபகப்படுத்துகிறார். செப்டம்பர்11 2001க்குப் பிறகு, பயங்கரவாதச் செயல்களுக்குப் பின்னர். ‘ஒரு தெய்வ வழிபாட்டாளர்கள் தங்கள் பாரம்பரியத்தில் துல்லியமாக்கப்பட்ட பயங்கரவாத உபகரணங்களாலும், புனிதப்போராலும், போர்க்களத்தியாகத்தாலும், நம்மை அச்சுறுத்தும்போது, இன்று நம்மை ஒரு ஆபத்தான கட்டத்தில் பார்க்கிறோம். இந்த புதிய போர்க்களத்தில் யூதர்களும் கிரிஸ்துவர்களும் இஸ்லாமியரும் இருக்கிறார்கள் ‘ என்று எழுதுகிறார்.

பாகனிஸம் என்று அழைக்கப்படும் பலதெய்வ வழிபாடு, இயற்கையாகவே தனது ஏராளமான பெண்தெய்வங்கள் ஆண் தெய்வங்களாலும், அடிப்படைக் குணாம்சத்தினாலும் மற்ற மதங்களைப் பற்றி சகிப்புத்தன்மையுடனேயே பார்க்கிறது. ஒரு தெய்வ வழிபாடு அவ்வாறு பார்ப்பதில்லை.

அதே நேரத்தில் கிர்ச் அவர்கள் பாகன் எனப்படும் பல தெய்வ வழிபாட்டாளர்களை சிறந்தவர்கள் என்று சித்தரிக்கவில்லை. ஆனால், குறைந்தபட்சம் அவர் மற்றவர்கள் சொல்லாத மீதக்கதையையும் கூறுகிறார்.

‘பலதெய்வ வழிபாட்டாளர்கள் கன்னிமைத்தனத்தையும், திருமண பந்தத்தில் கட்டுப்பாடுடன் இருக்கவேண்டும் என்று பேசிக்கொண்டே ஏராளமான பாலுறவு லீலைகளில் ஈடுபட்ட்ட ஹிப்போக்கிரஸியானவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரே உண்மையான தெய்வத்தைக் கும்பிடுபவர்களைவிட அதிக ஹிப்போகிரஸியுடன் இருக்கவில்லை ‘ என்று கூறுகிறார்.

—-

Chronicle religion writer Don Lattin is the author of ‘Following Our Bliss: How the Spiritual Ideals of the Sixties Shape Our Lives Today ‘ and ‘Shopping for Faith: American Religion in the New Millennium. ‘

Series Navigation

டான் லாட்டின்

டான் லாட்டின்