ஜெயமோகனுக்கு கலாச்சாரம் மற்றும் விஷயங்கள் பற்றிய கேள்விகள்

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue

மாலன்


அன்புள்ள ஜெயமோஹன்,

உங்கள் மின்னஞ்சல் முகவாி தொியாததாலும் நான் தெளிவு கொள்ள விரும்பும் சந்தேகங்கள் திண்ணையில் வெளி வந்த உங்கள் கடிதம் தொடர்பானதென்பதாலும், இந்தக் கடிதத்தை திண்ணையின் முன் முற்றத்திற்கு (போஷியோ) எழுதுகிறேன்:

நான் அறிந்து கொள்ள விரும்பும் விஷயங்கள்:

1. தமிழ்க் கலாசாரத்தின் மீதுதான் என் கடமை உள்ளது என்று குறிப்பிட்டிருகிறீர்கள்.

கலாசாரம் என்பது குறித்த உங்கள் கருத்தாக்கம் என்ன ? தமிழ்க் கலாசாரம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். கலாசாரம் என்பது மொழி/ இடம் சார்ந்தது என்று கருதுகிறீர்களா ? மொழிகளைக் கடந்த ஒரு பண்பு நிலை இருக்கக் கூடுமா ? இந்தியக் கலாசாரம் என்பதும் தமிழ்க் கலாசாரம் என்புதும் ஒன்று தானா ? ஒன்று இன்னொன்றின் விாிவா அல்லது கிளையா ?

2. மொழி இடம் சார்ந்து ஒரு கலாசாரம் இருக்க இயலும் எனில் diaspora வை எப்படி வகைப்படுத்துவீர்கள் ?

3.வாழ்வியலின் அடிக்கட்டுகளான, மனித உறவுகள், பாலுறவுகள், குடும்ப அமைப்பு, குடும்ப உறவுகள், திருமணம் இவை மொழி சார்ந்த கலாசாரத்தில் தீர்மானிக்கப்படுகிறதா ? பொருளியல் சார்ந்த பண்புகளால் நிச்சியக்கப்படுகிறதா ?

4. ஒரு எழுத்தாளன் என்ற முறையில் எல்லா அமைப்புகள் மீதும் ஐயுறுகிறேன் என்கிறீர்கள். இலக்கிய சிற்றிதழ்கள் என்பவை ஒரு அமைப்பாக கடந்த 33 ஆண்டுகளில் ( எழுத்துதான்

தமிழின் முதல் சிற்றிதழ் என்ற உங்கள் கருத்தின் அடிப்படையில்) மாற்றம் /வலு கண்டிருக்கின்றனவா ? அதன் மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்று உங்கள் செயல்கள் மூலம் புாிந்து கொள்ளுகிறேன். சிற்றிதழ் அமைப்பு முன் வைக்கிற ‘உண்மைகளும் ‘ அரை உண்மைகள்தான் எனக் கருதுகிறீர்களா ?

5.தமிழில் வாசகனுக்கும் சிற்றிதழ்களுக்கும் இடையே உள்ள உறவு எந்தக் கலாசாரத்தை பிரதிபலிக்கிறது ? அதற்கு அரசியல் கலாசாரத்தில் இணை உண்டா ?

அவதூறுகளைத் தவிர்த்து ஆக்க பூர்வமாக விவாதிக்கலாம், வாருங்கள். உங்களால் அது இயலும்.

அன்புடன்,

மாலன்

maalan@eth.net

malan @sunnt.com

Series Navigation

மாலன்

மாலன்